Friday, March 23, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு. கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள். எந்த ஒரு மங்களகரமான நிகழ்விற்கும் இந்த கல்யாணி தான் துணை நிற்பது. ஆகையால் கல்யாணி ராகத்தினை இசைத்திட்டால், திருமண சம்பந்தங்கள் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! இந்த ராகத்தினால் உண்டாகும் பயன்களை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் நமக்கு தெரிவிக்கின்றன். பயம் என்பது எத்தனை ரூபமெடுத்தாலும், அது ஏழ்மையின் பயமானாலும் சரி, காதலின் பயமானாலும் சரி, இல்லை பெரிய சக்திகளின் பயமானாலும் சரி, அல்லது ஆரோக்கிய வாழ்வற்ற பயமானாலும் சரி, ஏன் மரணபயமானாலும் சரி, இந்த ராகத்தில் அமைந்த இசையை கேட்டால் அத்தனை பயங்களும் நம்மை விட்டு அகன்றோடிவிடும் என்ற பெரிய நம்பிக்கையுண்டு!

இந்த ராகத்தினை பற்றி பேசும் பொழுது இதற்குப்பின்னே நடந்த சில சம்பங்கள் உடனடியாக மனைதில் விளையும்! அதாவது தியாகராஜய்யர், தஞ்சை அரசனின் புகழ்பாட மறுத்து கடவுள் துதியாக 'நிதி சால சுகம்மா ரமணி சந்நிதி சேவ சுகம்மா' என்ற கீர்த்தனையை இந்த கல்யாணி ராகத்திலே பாடிய சரித்திரமுண்டு! இந்த ராகத்திலே எழும் பாவம் உணர்ச்சி பூர்வமாக பாடப்படும் அத்தனை பாடல்களும், கீர்த்தனைகளும் ஒரு அழகான சப்த வடிவத்தை கொடுக்கும்! அதற்கும் மேலே இந்த ராகம் ஒரு பரிபூரண இல்லை சம்பூரண ராகம். ஆக ஏழு ஸ்வரங்களும் கைகோர்த்து ஜதியாடும்! இந்த ராகம் ஆர்ப்பாட்டமாகவும் இசைந்து கொடுக்கும், அதே சமயத்தில் அமைதியாகவும் ஸ்வரம் பாடும்.

இந்த கல்யாணி ராகத்தினால் தேவி துதிபாடிய சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனையான, 'ஹிமத்ரிஸ்தே பகிமம்' என்பது அனைத்து சக்தியைய்ம் அன்னையிடமிருந்து பெற வழிகோணியதாம். அதே போல் இந்த ராகத்திலே, முத்து சாமி தீட்சதர் அவர்கள் படைத்த சொர்க்க ராக கீர்த்தனையான 'கமலாம்பாள் நவவர்ணம்' என்ற கீர்த்தனையை கொண்டு, கிரங்களின் இடமாற்றத்தால் உண்டாகும் துர்பாக்கியத்தை அகற்றி நல்வழிபிறக்க உதவ வழிசெய்யும் என்ற நம்பிக்கையுண்டு!

இப்படி பல குண நலன்களை கொண்ட இந்த ராகத்தால் அமைந்த சினிமா பாடல்கள் அநேகம். அதில் முக்கியமாக, காலத்தால் அழியாத பாடல்களை சொல்ல வேண்டுமென்றால் அம்பிகாபதி என்ற படத்தில் டிஎம்ஸ் பாடிய, 'சிந்தனை செய் மனமே' என்ற பாடலும், கேவி மகாதேவன் இசை அமைத்த "மன்னவன் வந்தானடி" என்ற திருவருட்செல்வர் படத்திலே வந்த பாடலையும் குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்ல இளையராஜா இந்த ராகத்திலே ஏகப்பட்ட பாடல்களை அள்ளி வழங்கி இருக்கிறார். இதை ஹிந்துஸ்தானி ராகத்தில் 'யமன்' என்றழைப்பார்கள், அதிலே அமைக்கப்பட்ட சில பழைய ஹிந்திபாடல்கள் மற்றும் பல பாடல்களை இந்த பாட்காஸ்ட்டில் கேளுங்கள்!

இதன் முதல் பாகமாக இந்த பாட்காஸ்ட்டை கேளுங்கள்!



The Healing Raagaas! - Kalyani (Part-1)

தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

Sunday, March 18, 2007

Mirror Mirror on the wall!!

Who is the fairest of them all அப்படின்னு எழுதினா என்னென்ன பிரச்சனை வருமோ தெரியலை. ஆனா அதைப் பத்தி ஒரு கேள்வி வந்தது நம்ம தருமி கிட்ட இருந்து. அது என்னன்னா
One way mirror-ன் அறிவியல் என்ன?
கார் கண்ணாடியில் ஒட்டப் படும் film-ம் அதே வேலையைச் செய்கிறதே, எப்படி?
இதைக் கேட்டுட்டு மனுசனுக்குப் பொறுமையே இல்லை. நம்ம கிட்ட விட்டு இருந்தா நல்ல பதிவா போட்டு இருப்போமில்ல. அதுக்குள்ள அவரே தேடிக் கண்டுபிடிச்சு பதிலையும் எழுதி அனுப்பிட்டாரு. (இந்த மாதிரி எல்லாரும் செஞ்சா எங்க வேலை எவ்வளவு ஈசின்னு பாருங்க!) பொதுவா வாத்தியார் கேள்வி கேட்டா மாணவர்கள்தான் பதில் சொல்லணும். அவங்க குடுத்த நேரத்தில் பதில் சொல்லாததால் வாத்தியாரே பதில் சொல்லிட்டாரு!! அதுக்கு மேல நாம என்னத்தைச் சொல்ல. அவர் பதிலை நீங்களே படிச்சுக்குங்க. சந்தேகம் எல்லாம் பின்னூட்டமா போடுங்க. தலைவர் வந்து பதில் சொல்லுவாரு. ஐயாம் தி எஸ்கேப்!

இனி தருமி.....

ஒளி ஊடுறுவதைத் தடுப்பதற்காகச் சாதாரண கண்ணாடியில் ரசம் பூசுறோம். ஒளி இப்போது ஊடுறுவ முடியாததால் கண்ணாடியில் விழும் ஒளி பிரதிபலிக்கும். அதனாலதான் அந்தக் கண்ணாடி முன்னால் இருக்கும் நம்ம அழகான மூஞ்சி திருப்பி நம்மையே பார்க்கிறது. இப்படி பூசப்படும் ரசம் கூட முழுமையாகப் பூசப்படுவதில்லை. அரைகுறையாகத்தான் பூசப்படுகிறது. அதற்குப் பதிலாக கண்ணாடியின் பின்புறம் ஒளி ஊடுறுவமுடியாத படி கறுப்பு அல்லது சிவப்பு பெயிண்ட் அடிச்சிடறாங்க. இப்படி பூசுற ரசத்தை இன்னும் கொஞ்சம் குறைவாகப் பூசி, அதோடு பின்னால் பூசும் பெயிண்டையும் அடிக்காமல் விட்டால் என்ன ஆகும்? ஒளி அரைகுறையா ஊடுறுவறது மாதிரி ஆயிடும்.

இந்த one way mirror அப்டிங்கிறது இதுதான். அதாவது ஒளி அரைகுறையாக ஊடுறுவமுடியும். ஒரு பக்கம் வெளிச்சம் அதிகமாவும் இன்னொரு பக்கம் வெளிச்சம் குறைவாகவும் இருக்கிறமாதிரி வைத்து நடுவில் இந்த மாதிரி கண்ணாடியை வைத்தால் வெளிச்சம் அதிகமா இருக்கிற சைடுல இருக்கிறவங்களுக்கு அவங்க மூஞ்சிதான் தெரியும். ஆனால் இருட்டா இருக்கிற அடுத்த பக்கம் இருக்கிறவங்களுக்கு வெளிச்சப் பகுதியில் இருக்கிறவங்களை நல்லா பார்க்க முடியும். நம்ம இங்கிலீசு சினிமாக்களில் அடிக்கடி இந்த சீன் வருமே அது மாதிரி.

அட! உங்களை இந்த மாதிரி ஒரு அறையில் போட்டு வச்சிட்டு அந்தப் பக்கம் இருந்து உங்களை யாரோ உளவு பார்க்கிறது மாதிரி ஒரு சந்தேகம் வந்திருச்சின்னு வச்சுக்கங்க, அது சரியான்னு எப்படி பார்க்கணும்னு தெரிஞ்சிக்கங்க. கையில் ஒரு flash light எடுத்துக்கங்க; டகார்னு உங்க ரூம் லைட்டை அணைச்சிட்டு, டக்குன்னு அந்தக் கண்ணாடியை ஒட்டி உங்க கையில் இருக்கிற லைட்டை கண்ணாடியை ஒட்டி அடிங்க. இப்ப உங்க பக்கம் இருட்டு; அந்தப் பக்கம் வெளிச்சம் ஆயிருமா.. அந்தப் பக்கம் இருக்கிறது உங்களுக்கு நல்லா தெரிஞ்சிரும்.

பி.கு.

உங்க கார்ல sun screen ஒட்டி கண்ணாடியையெல்லாம் கருப்பாக்கி வச்சிருந்தீங்கன்னா, பகல்ல உங்களுக்கு நல்லா வெளிய தெரியும். ராத்திரி ஆச்சுன்னா வெளிய ஒரு மண்ணும் தெரியாது. ஓட்டுனருக்காக முன் கதவில இருக்கிற ரெண்டு பக்கக் கண்ணாடியில் டிசைனா sun screen-யை வெட்டி விட்டுக்க வேண்டியதுதான்!

Sunday, March 11, 2007

தட்டு தட்டுன்னு தட்டணும் தட்டணும்!!!

நம்ம ஜெயசங்கர் இருக்காரு இல்லையா, என்னது அது யாரா?, அதாங்க நம்ம We the People ஜெயசங்கர். அவரு வந்து ஒரு கேள்வி கேட்டு இருக்காரு. நம்ம தினமும் யூஸ் செய்யும் இந்த கணிணி கீ போர்ட்ல ஏன் எல்லா எழுத்தும் கலச்சுப்போட்டிருக்காங்க? நேரா நம்ம கிட்ட வந்திருக்கலாமில்ல. அதை விட்டுட்டு அவரு நண்பர் அருள் கிட்ட போயி கேட்டு இருக்காரு. அவரும் முதலில் டைப் ரைட்டரை கண்டுபிடித்தவர், நம்ம மெதுவாக டைப் அடிக்கவேண்டும் என்பதற்காக தான் இப்படி கலைத்து போட்டதாகவும், காலப்போக்கில் அதை அப்படியே பின்பற்றுவதாகவும் சொல்லறாரு! இது உண்மையா அப்படின்னு நம்மளாண்ட வந்து கேட்டு இருக்காரு. இந்த கேள்விக்குப் பதில் சொல்லறதுக்கு முன்னாடி, இந்த விசைப்பலகையின் வரலாற்றைப் பத்தி கொஞ்சம் பார்க்கலாமா.

இந்த விசைப்பலகையை கண்டுபிடித்தவர் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் (Christopher Sholes) என்ற பத்திரிகையாளர். கண்டுபிடிச்சது இன்னைக்கு நேத்து இல்லை, 1860களில். சரியாச் சொல்லணுமுன்னா 1868. முதலில் இவரு எழுத்துக்களை எல்லாம் வரிசையாகத்தான் வெச்சிருந்தாராம். அப்புறம் எங்க டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் சுப்பராமன் சார் அவர் கனவில் வந்து இந்த மாதிரி இருந்தா நான் எப்படி asdfgf அப்படின்னு பசங்க விரலை எல்லாம் உடைக்க எனக் கேட்டு பயமுறுத்த அதனாலேயே இவர் இப்படி எழுத்துக்களை கலைத்துப் போட்டுவிட்டாராம். :)) இப்படி எல்லாம் ஸ்க்ரீன் ப்ளே வைக்க சான்ஸ் இல்லாமப் போச்சே. அவரு கலைத்துப் போட்டதுக்கு காரணம் வேறயாச்சே. அது என்னான்னு பார்க்கலாமா.

முதலில் இந்த எழுத்துகள் எல்லாமே ரெண்டு வரியில் வரிசையாத்தான் இருந்தது. அந்த காலத்தின் தொழில்நுட்பத்தில் அது ஒரு சின்ன ப்ராப்ளமாகிப் போச்சு. நம்ம எல்லாருமே டைப்ரைட்டரை பாத்து இருக்கோம். ஒரு எழுத்துக்கான பட்டனை அழுத்தினா அதற்குண்டான டைப்பார் (type bar) வந்து பேப்பரில் பட்டு அந்த எழுத்து பதிவாகுது. பக்கத்தில இருக்கற படத்தைப் பாருங்க. ஆனா அந்த விசைப்பலகையை கண்டுபிடிச்ச போது இப்ப உள்ள அளவு தொழில்நுட்பம் எல்லாம் இல்லாததுனால என்ன ஆச்சுன்னா இந்த டைப்பார்கள் வந்து அடுத்தடுத்து அடிக்கப்படும் பொழுது, ஒன்றோடு ஒன்று சிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதை எடுத்து விடறதே டைப் அடிக்கறவங்களுக்கு வேலையாப் போச்சு. அதுனால நம்ம கிறிஸ்டோபர் என்ன செஞ்சாருன்னா அடிக்கடி தட்டெழுத்தப் படுகின்ற எழுத்துக்களை எல்லாம் தள்ளித் தள்ளி வெச்சு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டு வந்தாரு.
சிலவங்க, இந்த டைப்பார்கள் சிக்காம இருக்கணும் என்பதற்காக தட்டெழுதுபவர்களின் வேகத்தைக் குறைப்பதற்காக இப்படி எழுத்துக்களை கலத்துப் போட்டதாக சிலர் சொன்னாலும், சிக்கிய டைப்பார்களை விடுப்பதில் செலவழிக்கும் நேரத்தை குறைத்து தட்டெழுதும் வேகத்தை அதிகப்படுத்துவதாகச் சொல்பவர்களும் உண்டு. ஆகவே இந்த விவாதம் நம்ம Coffee Toffee விளம்பரத்தில் சொல்ற மாதிரி The fight goes on!

ஆனால் பாருங்க, அந்த டைப்பார் தொழில் நுட்பம் எல்லாம் தாண்டி வந்த பின்னும் இந்த விசைப்பலகைதான் நிலைச்சு நிக்குது. எல்லாம் First Mover Advantageதான். இதைத்தாண்டி DVORAK, AZERTY என்றெல்லாம் வேறு விசைப்பலகைகள் வந்தாலும் உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாலே மாற்றம் காணாமல் இந்த QWERTY விசைப்பலகை நம்மோடு இருக்கிறது.

சில ருசிகரத் துணுக்குகள்
  • TYPEWRITER என்ற வார்த்தையை விசைப்பலகையின் முதல் வரியில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே தட்டச்சு செய்ய முடியும்.
  • முதலில் தட்டெழுதுவது பெண்கள் செய்யும் வேலை என்றிருந்தாலும் முதலில் உபயோகப்படுத்தியவர்கள் ஆண் ரயில்வே கிளார்க்குகள்தான்
  • தனது கண்டுபிடிப்பை கிறிஸ்டோபர் 1873ஆம் ஆண்டு ரெமிங்டன் நிறுவனத்தாருக்கு விற்றுவிட்டார்
  • முதல் விசைப்பலகைகளில் Uppercase (Capital) எழுத்துக்கள் மட்டுமே இருந்தது.
  • பின்னர் Lowercase எழுத்துக்கள் கொண்டு வருகையில் அதற்காக டைப்பாரை மாற்றும் பட்டனுக்கு Shift எனப் பெயர் வைத்தார்கள். இன்று அப்படி எதுவும் மாற்றப்படவில்லை என்றாலும் அந்த பெயரே நிலைத்து விட்டது. இதுவே இது வரை விசைப்பலகை டிசைனில் நடந்த ஒரே ஒரு பெரிய மாற்றம். கீழ படத்தில் இருப்பதுதான் ரெமிங்டன் 2 என்ற அந்த டைப்ரைட்டர்.
  • முதலில் வந்த டைப்ரைட்டர்கள் பெரிய வெற்றி அடையவில்லை. இந்த மாற்றத்திற்குப் பின்னரே வெற்றிப் பெற்றது.

இப்போ இவ்வளவு பெருமை இருக்கிற விசைப்பலகையைத் தட்டி எல்லாரும் கருத்து சொல்லுங்க பார்க்கலாம்!


சுட்டி 1
சுட்டி 2

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

தொடர்ந்து இந்த ராகங்கள் குணப்படுத்தும் விஷேஷத்தை பார்க்கும் பொழூது, இந்த தடவை எடுத்துக்கிட்ட ராகம் ஷண்முகப்ரியா! இந்த ஷண்முகப்ரியா ராகம் கேட்பவர்களையும் பாடுபவர்களையும் அறிவுபூர்வமாக இணைக்கக்கூடிய ராகம்! அது மட்டுமில்லாமல், மனதிலே ஒரு தையரியத்தை உண்டாக்கி, உடல் முழுக்க ஒரு புதுவித சக்தியை ஏற்படுத்தக்கூடிய ராகம.


இந்த ராகம் இசை அமைப்பாளர்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு, அதிலே நிறைய பாடல்களை இசை அமைப்பாளர்கள் போட்டு இருக்காங்க! அதிலே எனக்கு ரொம்ப புடிச்சது, மீண்டும், பாரதிராஜா படமான 'புதியவார்ப்புகள்' படத்திலே வரும் ஒரு பாட்டு, இந்த படம் இப்ப பார்த்தப்பக்கூட, நான அந்த காலத்திலே எப்படி சிலாகிச்சு ரசிச்சேன்னோ, அதே ரசனையோட இதை இப்ப பார்த்தேன். என்னுடய ரசிப்பு தன்மை இன்னும் இருக்கா, இல்ல அது ராஜாக்களோடமேஜிக்கான்னு தெரியல்லை, இருந்தாலும் அதை பத்தி அப்பறமா எழுதுறேன்!

அப்பறம் இந்த ராகம் மைத்தியலாஜிக்கலா பார்த்தீங்கங்கன்னா, சிவண்டிக்கு சொந்தமான ராகம், அதாவது அவருடய் நெற்றிகண்ணிலிருந்து பிறந்த ராகம்னு சொல்வாங்க!

இந்த ராகத்திலே அமந்த மற்றொரு பாடல் இடம் பெற்ற பாரதிராஜா படம் 'வேதம் புதிது'! அதில் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாட்டு. இந்த வேதம் புதிது படம் 87ல வந்தப்ப இதை ரொம்பவே கொண்டாடினாங்க, ஏன்னா, இதில வரும் ஷார்ப்பான வசங்கள், அதாவது பாலு உங்க பேரு அதுக்குப்பின்னாடி இருக்கும் தேவங்கிற பேற பத்து வருஷம் படிச்சு பட்டம் வாங்கினீங்களான்னு ஒரு சின்ன பிராமணப் பையன் கேட்கிற மாதிரி எல்லாம் வரும். அதாவது வழக்கமா வர்ற பாரதிராஜா படக்கதை ட்விஸ்ட் மாதிரி, தேவர் வீட்டு பையன் பிராமணப்பொண்ணை காதிலிக்கற மாதிரியும், அப்பறம் அவஙக இரண்டு பேரும் இறந்து போயி, அவன் காதலி தோப்பனாரும் செத்து போயி, அனாதையான பிராமணப்பையனை தேவர் எடுத்து வளர்த்து, இந்த சாதியங்கிறதை ஒழிக்கிற மாதிரி கதை போகும், அப்ப இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்திச்சு!


அது மாதிரி இந்த ராகத்திலே வந்த ஏகப்பட்ட பாடல்கள் இருக்கு, தெரிஞ்சுக்கணும்னா, கீழே பாட்காஸ்ட்டை கேளுங்க!



தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

இந்த பாட்காஸ்ட்டை கேட்கும் போதே, நான் எழுதின இரண்டு பழைய பதிவுகளை குறிப்பிட்டிருப்பேன். அதன் வீடியோ பதிவிற்கான சுட்டி!

ஷ்ணமுகப்ரியா ராகத்தில் வந்த பாடலின் ஒரு பதிவு!

அதே ராகத்தில் வந்த இன்னொரு பாடலின் பதிவு!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

Monday, March 05, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

இசை என்பதென்ன? இந்த கேள்விக்கான பதில் வெகுச்சுலபம்! அதாவது சிறு சிறு சப்தங்களின் தொகுப்பு, சீராக சம அளவில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மாறி மாறி வரும் சபத அலைகளே இசை என்பது. இப்படி விவரிப்பது சுலபம். இதை பற்றி இளையராஜா குறிப்பிடும் பொழுது, 'அனைத்து சப்தங்களுமே எனக்கு ஒரு சங்கீதம் தான்' எனறு சொல்லி இருந்தார். வேண்டுமென்றால் சில டம்ளர்களில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதுவும் வெவ்வோறு அளவுகளில், அதை ஒரு கரண்டியை கொண்டு அப்படியே லேசாக தட்டிச் செல்லுங்கள், ஒருவித திம் திம் என்ற ஓசை எழும்பும், அது கேட்பதிற்கு ஒரு திரில்லாக இருக்கும். இதன் கோட்பாட்டிலே அமைந்த ஒரு இசைக்கருவி தான் ஜலதரங்கம்!

அடுத்து தமிழில் இருக்கும் பழமொழியான 'சிறுதுளி பெரு வெள்ளம்' என்பதைப் போல, இசைக்கு அடிப்படையான சிறு துளியை நாம் இசை குறிப்பீடு, அதாவது ஆங்கிலத்தில் 'நோட்' (Note) என்பது.

இப்படி சிறு துளியாய் இருக்கும் இசைகுறிப்பீடுகள் அனைத்தும் ஒன்றொன்றாய் சேர்ந்து பலவாறு சபதங்களை சிறு சிறு இடைவெளியில் சீராக வெளிப்படும் பொழுது உண்டாவதே காதுக்கு இனிமையான கீதம்! அது தீட்சதர் கீர்த்தனை என்றாலும் சரி, பீத்தோவன் என்ற ஜெர்மனிய இசையமைப்பாளிரின் சிம்பொனியாக இருந்தாலும் சரி, இல்லை நமது இளையராஜாவின் ராகங்களானாலும் சரி, இல்லை ஏ ஆர் ரஹமானின் இன்னிசை அளப்பரையாக இருந்தாலும் சரி! ஏன் நம் ரோட்டிலே ஆடிப்பாடித்திரியும் இசை அமைக்கும் தெருப்பையன்களின் (Back street boys) எழுப்பும் இசைஒலியானாலும் சரி! இப்படி தொடர்ந்து வரும் அலை வரிசைகளில் எழும்பும் சப்த நாதங்களே இசையாகும்! இப்படி
தொடர் அலைவரிசையில் வராத சப்தங்களும் இசையாகுமா என நீங்கள் கேட்டால், அதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் சொல்லலாம், அதாவது பழங்காலம் தொற்று தொடர் அலை வரிசை குறியீட்டால் உண்டாக்கி எழுப்பும் சப்தமே சங்கீதம், ஆனால் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அப்படி தொடர் வரிசை அலை இல்லாமலும் சபதம் எழுப்பி சங்கீதம் உண்டு பண்ணலாம்! முதலில் தொடர் அலைவரிசையில் உருவாகும் சங்கீதம் பற்றி பார்ப்போம்!

நீங்கள் கீபோர்ட் என்ற கருவியிலே சப்தத்தை எழுப்பி இசை அமைக்க முயன்றிருந்தால் நீங்கள் சுலபமாக இந்த இசைக்குறியீட்டை புரிந்து கொள்ள முடியும்! உதாரணத்திற்கு இதோ அருகில் உள்ள கீ போர்ட் படத்தை பாருங்கள் இதில் உள்ள ஓவ்வொரு பொறியினை நீங்கள் அழுத்தும் பொழுது அதில் உருவாகும் சப்தம் ஒரு அலைவரிசைக்குள் இருக்கும். அதை நீங்கள் அழுத்தி கொண்டிருக்கும் நேரத்தை பொருத்து, அதில் எழும் சப்தங்களின் அளவே நான் மேலே கூறியது போல ஒரு துளி சப்தத்தை உருவாக்கும். அப்படி தொடர்ந்து அழுத்தப்படும் பல பொறிகளின் கால அளவில் உண்டாகும் சப்த அலையே நமக்கு சங்கீதமாக பிறக்கிறது! இப்படி, இது 48 பொறிகளை (keys) கொண்ட ஒரு கீபோர்டின் ஒரு பகுதி இது போன்ற 12 பொறிகளை கொண்டு நான்கு செட்டுகள் கொண்டது!


இந்த 12 பொறிகளை கொண்ட இந்த இசை குறிகளின் அளவை ஆங்கிலத்தில் octave என்று அழைப்பார்கள்! அதாவது கொஞ்சம் அகல சப்த அலைவரிகளின் விஸ்தார அளவு (bandwidth). அதாவது இந்த விஸ்தார அளவு என்பது சப்த அலைவரிசை தொகுப்புகளடங்கிய 12 இடைவெளிகளை கொண்டது, அந்த இடைவெளியானது, எந்த ஒரு இரண்டு அலைவரிசையின் மடக்கை (logarithm) விகிதாச்சாரமும் சமமாக இருக்கும்படி அமைந்திருக்கும், அந்த சப்த அலைவரிசைகள் பக்கத்து பக்கத்து இடைவெளில் அமைந்திருக்கும் பட்சத்தில்!

சரி கர்நாடக சங்கீதமும் மேற்கத்திய சங்கீதமும் இந்த அலைவரிசையின் அளவுகோல்களுக்குள் அமைந்து விடும் ஒற்றுமை உண்டா என்றால், ஆம் என்பதே பதில்! அதாவது கர்நாடக சங்கீதத்தின் குறியீடு அளவு விகிதாச்சார அடிப்படையில் அமைவது, உதராணமாக 'சரிகமபதிநி' என்பதில் 'ப' என்ற குறியீட்டின் அளவு மத்த அளவீட்டில் இரண்டுக்கு மூன்று (2:3) என்ற சதவீதத்தில் பிரிந்திருக்கக் கூடியது! ஆனால் மேற்கத்திய சங்கீதத்தின் குறியீடுகள் மடக்கு(logarithmic) விகிதாச்சார அடிப்படையில் பிரிந்திருக்கும் சிறு குறியீட்டின் அளவினை ஒத்து இருக்கக் கூடியது!

ஆக இந்த அடிப்படையில் பிரிக்கப்பட்ட சப்த அளவான octave கொண்டே உலகில் உள்ள அத்தனை சங்கீதங்களும் உருப்பெறுகிறது! இப்படி இந்த சப்த சங்கதிகள் இன்று நேற்று தோன்றியதல்ல, பழங்காலம் தொட்டே உருவாகி வந்த ஒன்று! சப்த அளவீடுகளான இந்த 12 குறியீட்டின் மூலம் எல்லா சங்கீதங்களும் அமைந்து விடும்! இந்த மேற்கத்திய மற்றும் கர்நாடக இசைக்குறியீடுகளுக்கு உண்டான ஒற்றுமை என்னவென்றால், கர்நாடக சங்கீதத்தில் வரும் அடிப்படை குறியீடு, இந்த ஐந்தாவது குறியான 'ப' வை குறிப்பது பஞ்சமம் என்று, அதே போல மேற்கத்திய இசையின் ஐந்தாவது அடிப்படை குறியீடு ஒத்திருப்பது. இதை நீங்கள் கீழ்கண்ட சங்கீத பொறிகளின் அட்டவனையில் காணலாம்!



இன்னொன்றையும் கவனியுங்கள், இந்த கர்நாடக குறிகள் மேற்கத்திய குறியீடுகளிலிருந்து வேறுவிதமாக உருவகப்படுத்தி உள்ளது. ஏனென்றால் நம் கர்நாடக் சங்கீதத்திற்கு ஏழு குறீடுகள் அடங்கிய கால இடைவெளியில் பிறக்கும் சப்த ஸ்வரங்கள் உண்டு, அதாவது அதை இசை அளவீடு (scale) என்று கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலே கொண்டு அமையும் மற்றொரு அளவீடு (scale) 'மேளகர்த்தா ராகம்' என்பது! இப்பொழுது இசை அளவீடு மற்றும் மேளகர்த்தா என்ன வென்று பார்ப்போம்!

மேளகர்த்தா என்பது ஏழு இசை குறிகளை கொண்ட ஸ்வரங்களில் அமைந்த அடிப்படை ராகம். இதை தாய் ராகம் என்பார்கள். இதை 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெங்கடேஸ்வர தீட்சதர் வரிசைப்படுத்தி 72 மேளகர்த்தாக்களை உருவாக்கினார் அதை 'சதுரந்தி ப்ரக்ஸிக்கா' என அழைப்பதுண்டு! அதாவது ஒவ்வொரு மேளகர்த்தாவுக்கும் அடிப்படை இசைக்குறியீடு 'ச' வும் வேண்டும் 'ப' வும் வேண்டும், 'ச' வும் 'ப' வும் ஒரே ஒரு வகை உண்டு! மேலே உள்ள அட்டவனையை பாருங்கள், ஆனால் 'ரி', 'க', 'ம', 'த', 'நி' இவை எல்லாம் அதிலிருந்த சற்று உருமாறி, சப்த அலைவரிசையை கூட்டி குறைத்து மூன்று மற்றொரு அடிப்படை சப்த குறிகளை உருவாக்கி வைத்திருக்கிறது! பிறகு இந்த 'ம' இரண்டு வெவ்வேறு வகைகளாக பிரிந்து இருக்கிறது. ஆக ஏழு குறிகளின் அளவீட்டில் ஒரு 'ச', ஒரு 'ப' மீதம் நான்கு குறியீட்டில் மூன்று வகைகள் என நீங்கள் பெருக்கினால் 4x3x3=36 வகைகள் பிறக்கிறது!

பிறகு 'ம' வில் இரண்டு வகை இருப்பதால் இது 36x2=72 ஆக, மொத்தம் 72 அடிப்படை ராகங்கள் பிறக்க வழி ஏற்படுத்தி கொண்டுள்ளது இந்த 'மேளகர்த்தா' என்பது. இப்படி அமைந்த அடிப்படை தாய் ராகங்களின் கலவையிலே நீங்கள் ஆயிரக்கணக்கான ராகங்கள் பிறக்க வழி செய்யலாம். அப்படி பிறக்கும் ராகங்கள் குழந்தை ராகங்களாகும், அதை 'ஜன்ய ராகம்' என்பார்கள்! ஆக இப்படி தான் அத்தனை பாட்டுகளும் இப்படி ஏதேனும் ஒரு அடிப்படை ராகத்திலே அமைந்து பிறக்கின்றன!

மேற்கத்திய இசையிலே இருக்கும் இசை குறியீடுகள் போல் ஒவ்வொரு ராகத்திலிருக்கும் இந்த இசை அளவுகள் ஏறு முகமாகவும், இறங்குமுகமாகவும் பாடுவதை தான் ஆரோகணம் (ascending order), அவரோகணம் (descending order) என்று குறிப்பிடுவார்கள்

இப்படி இசை அளிவீடுகளின் சூட்சமத்தில் அமைந்த அற்புதத்தை தான் நமது கண்ணதாசன் 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்' என்று எளிமையாக எழுதி பாமரனுக்கும் புரியவைத்தார்! நம் கர்நாடக சங்கீதத்தில், இந்த வெறும் கணக்கீட்டால் அமையும் குறீடுகளால் (Musical structure) மட்டும் ராகங்கள் உருவாவதில்லை, அதை உணர்ச்சியுடன் பாடுவதால் கிடைக்கும் 'பாவமும்' அதை தொடரும் இந்த இசைக்குறி அளவீடுமே ராகத்தை உருவாக்குகின்றன! ஆகையால் தான் பாலசுப்ரமணியம் பாடிய சங்கராபரண பாடலை நாம் பாவமின்றி பாடினால் அது சங்கராபரணமாவதில்லை! அப்படி பாவத்துடன் இசை குறிகளின் அலங்கார ஆலாபனையும் சேர்வதை 'கமகம்' என்பார்கள், அப்படி சேர்ந்தால் தான் அதன் அதன் ராகங்களின் வெளிப்பாடு உங்களுக்கு கிடைக்கும்!

ஆக இப்படி அமைக்கப்பட்டு வெளி வந்த ராகங்களில் ஒன்று தான் 'ரதிப்பதிப்ரியா' என்ற ஒரு ராகம். இந்த ராகம் மேலே சொன்ன மேளகர்த்தா வரிசையில் வரும் 22ம் ராகம், இதில் பிறந்த குழந்தை, அதாவது 'ஜன்ய ராகம்' கரகரப்ரியா. இதற்கு உண்டான ஆரோகண வரிசை 'ச ரி2 க2 ப நி2 ச', அவரோகண வரிசை 'ச, நி2 ப க2 ரி2 ச' என்பது!

இந்த ராகம் சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு தேவையான மனோபலம், சக்தியையும், ஊக்கத்தையும் தருகிறது. திருமணமாகி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்த ராகத்தில் அமைந்த பாடலை கேட்டு உங்கள் வாழ்க்கையை நகர்த்துங்கள், அப்பொழுது தெரியும் தாம்பத்தியம் எவ்வளவு இன்பகரமானது என்று! அதே போல் இது உங்களிடம் உள்ள ஏழ்மையை விரட்டிவிடும். இதன் சுவரங்களின் பிரயோகம் தரும் அதிர்வுகள் உங்கள் உள்ளத்தில் அசுத்தமான நினைவுகளால் உண்டாகும் கசப்பான உணர்வுகளை அகற்றிவிடும்! இது ஒரு அபூர்வ ராகம் இதில் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே!

'ஜகஜனனி சுகுவானி கல்யானி' என்ற தண்டபாணி தேசிகர் எழுதியப் பாடல் இந்த ராகத்தில் மிகவும் பிரசித்தாமான ஒன்று! அது போல் எந்த ராகம் எடுத்தாலும் அதுக்கு உதாரணமாய் பாடி வைத்த பலப்பாடல்கள், நமது பழைய தமிழ் சூப்பர் ஸ்டார் எம் கே டி தியாகராஜ பாகவதருடயது. அப்படி அவர் பாடிய ஒரு பாடல் 'சிவகவி' என்ற படத்திலே வந்த 'மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாழ்வாய்' என்றப் பாடல். கீழே உள்ள பாட்காஸ்ட்டை கேட்க தவறாதீர்கள்! அதே போல் நம் இளையராஜா இசை அமைத்த 'சிந்து பைரவி'யில் வந்த 'ஆனந்த நடனமாடினாள்' என்ற பாடலும் இந்த ராகத்தில் அமைந்த ஒன்று!

உங்களுக்கு தெரிந்த இந்த ராகத்தில் அமைந்த மற்ற பாடல்களை நீங்கள் உங்கள் பின்னோட்டத்தில் குறிப்பிடலாமே! இதோ, இப்பொழுது பாட்காஸ்ட்டை கேளுங்கள்!



தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

Thursday, March 01, 2007

விஸ்டாவா, வேண்டாமா - 3

இதுவரை மைக்ரோஸாஃப்ட் விஸ்டா-ல புதுசா என்ன இருக்கு (அல்லது புதுசுபோலத் தோணுவது என்ன) என்று பார்த்தோம். சுருக்கமாகச் சொல்லப்போனால் என்னைக் கவர்ந்து இழுக்கிறமாதிரி (வாவ்-ஃபாக்டர்) அப்படி ஒன்னுமே இல்லை என்கிறதுதான் உண்மை. இந்தப் பகுதில விஸ்டா-ல அபத்தமா என்ன இருக்குன்னு பாக்கலாம். இது கொஞ்சம் சீரியஸான விஷயம் அப்படிங்கறதால பேச்சு நடையை விட்டுவிட்டு என் வழக்கமான எழுத்து நடைக்கு மாறிக்கிறேன். நீண்ட விளக்கங்களைப் படிக்கப் பொறுமையில்லாதவர்கள் கடைசிப் பகுதிக்கு விரையவும்.

விஸ்டாவைப் பூட்டிக் கொள்வதால் வரப்போகிற சங்கடங்கள் என்ன என்று பார்க்கலாம். முதலாவதாக மைக்ரோஸாஃப்ட் வன்கலன் (hardware) உற்பத்தியாளர்களை நெருக்குகிறது. அதாவது விஸ்டாவிற்கு நம்பகமானது என்று மைக்ரோஸாஃப்ட் சான்றிதழ் அளிக்காத வன்கலன்கள் விஸ்டாவில் செயல்படாது அல்லது மிக மிகத் தரக்குறைவாகத்தான் செயல்படும். ஒரு சில வன்கலன் அட்டைகள் திறமூல இயக்கிகளைக் (Drivers) கொண்டவை (Open Source Drivers). இவை எதுவுமே விஸ்டாவில் செயல்படாது. விஸ்டா ஒவ்வொருமுறையும் வன்கலன் (உதாரணமாக ஒலி அட்டை) சங்கேதங்களைச் சோதிக்கும். அப்படியான சங்கேதங்கள் மூடிய சங்கேதங்களாக (வேறு வார்த்தையில் சொல்லப்போனால் விஸ்டாவால் மாத்திரமே படிக்கக்கூடியவையாக) இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விஸ்டா அதைச் செயலிழக்கச் செய்துவிடும். எனவே நீங்கள் 'விஸ்டாவிற்கு ஏற்றது' என்று சான்றளிக்கப்பட்ட வன்கலனை மாத்திரமே வாங்க முடியும்.

இன்றைய மேசைக்கணினியின் மாபெரும் புரட்சிக்குக் காரணம் இதன் வடிவமைப்பை ஒரு காலத்தில் ஐபிஎம் திறந்துவிட்டதுதான். டெல் நிறுவனத்திலிருந்து கணினி வாங்கினாலும் அதில் ஹெச்.பியின் விசையெலி வேலை செய்யும். இப்பொழுது விஸ்டாவின் மூலம் மைக்ரோஸாஃப்ட் கணினிகளை மூடிய உலகிற்கு அழைத்துச் சொல்கிறது.

அப்படியே சான்றளிக்கப்பட்ட வன்கலனை வாங்கினாலும் அது முழுமையாக வேலை செய்யாது. உதாரணமாக நீங்கள் அதியுயர்ந்த தரத்தில் கிடைக்கும் இன்றைய ஒலி வட்டுகளை வாங்கினாலும் அதன் ஒலியை சாதாரண ஒலிப்பான்களில்தான் கேட்க முடியும். இப்பொழுதுவரும் உயர் இரக ஒலியட்டைகளில் S/PDIF (Sony-Phillips Digital Interface Format) என்றொரு வசதி இருக்கும். ஆனால் விஸ்டா இந்த S/PDIF க்கு ஒலியை அனுப்பாது; சாதாரண ஒலிதான் வெளியே வரும். விஸ்டாவில் உள்ளடக்கப் பாதுகாப்பு (Content Security) என்பது மிக முக்கியமான விஷயம். அதாவது உயர்தர குறுந்தட்டின் ஒலியை நீங்கள் S/PDIF வழியாக வேறு நகல் எடுத்துவிடுவீர்கள் என்ற காரணத்தால் அதைக் கேட்கக்கூட விடாமல் விஸ்டா செயலிழக்கச் செய்யும். என்னிடம் இருக்கும் Creative Audigy platinum ஒலி அட்டையில் S/PDIF-க்கும் மேலாக ஒளியிழை (Optical Fiber) வசதியே இருக்கிறது. ஆனால் விஸ்டாவில் இது வேலை செய்யாது. ஒலிக்கு எப்படி S/PDIF-போ அதே போல ஒளிக்கு Component Video என்று சொல்லப்பட்டும் YPbPr என்ற உயர்தர ஒளிவடிவம் சாத்தியமில்லை.

இதேபோல நவீன BluRay, HD-DVD போன்றவை விஸ்டாவில் முழுத்தரத்தில் செயல்படாது. மைக்ரோஸாஃப்ட்காரர்களே என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Will the playback quality be reduced on some video output types?

Image quality constraints are only active when required by the policy associated with the content being played, and then only apply to that specific content -- not to any other content on the user's desktop. As a practical matter, image constraint will typically result in content being played at no worse than standard definition television resolution. In the case of HD optical media formats such as HD-DVD and Blu-Ray, the constraint requirement is 520K pixels per frame (i.e., roughly 960x540), which is still higher than the native resolution of content distributed in the DVD-Video format. We feel that this is still yields a great user experience, even when using a high definition screen.

என்னுடைய விழியம் (monitor) 1440x900 வரைத் துல்லியமாகக் காட்டக்கூடியது. இதில் 960x540-ல் தெரிந்தால் எரிச்சல்தான் வருகிறது. Native Resolution என்று சொல்வது ஜல்லியடி. ஒரு படத்தை பல்வேறு தர அளவுகளில் காட்டமுடியும். பயனருக்குத் தேவையானது அவர் காசு கொடுத்து வாங்கிய விழியத்தில் எவ்வளவு முடியுமோ அந்தத் துல்லியம். அதற்குப் பதிலாக நான் குறைத்துக் காட்டுகிறேன், அதிலேயே உனக்கு உன்னதமான அனுபவம் கிடைக்கும் என்பதை என்ன என்று சொல்வது - அகந்தை.

என்னைப் போன்ற கை அரிப்பெடுத்தவர்கள் கணினியின் பாகங்களை அடிக்கடி மாற்றி கொண்டிருப்பார்கள். மிக முக்கியமாக கணினி விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் அடிக்கடி அதன் நினைவுச் சில்லுகளையும், வரைகலை அட்டையையும், தாய் அட்டையையும் (Motherboard) மாற்றுவார்கள். தாய் அட்டையோ, ஆதார இதயமான நுண்செயலியையோ (CPU) மாற்றினால் விஸ்டா அதை வேறு கணினியாக அடையாளம் கண்டு செயலிழக்கச் செய்யும். இது அடிக்கடி மாற்றுபவர்களை மாத்திரம்தான் பாதிக்கும் என்றில்லை, கணினியின் தாய் அட்டை பழுதாகி மாற்றும் சாதாரணப் பயன்களையும் பாதிக்கும்.

இதைத் தவிர இன்னொரு விஷயம். இதுமாதிரியான உள்ளடக்கப் பாதுகாப்புகளுக்காக விஸ்டா தொடர்ச்சியாக உங்கள் கணினியின் நுண்செயலியைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். அதாவது, எந்த ஒரு ஒலி, ஒளி சமாச்சாரங்களை உங்கள் கணினியில் இயக்கினாலும் அதன்கூடவே “mfpmp.exe” (Media Foundation Protected Pipeline.exe) என்று ஒரு கண்காணிப்பு விஷயத்தையும் தானாகவே இயக்கும். என்னுடைய கணினியில் ஒரு எம்.பி 3 கோப்பை பாடவைத்தால், இது சில வேளைகளில் என் சில்லின் மொத்த சக்தியில் பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை எடுத்துக் கொள்கிறது. எனவே விஸ்டா கணினிகளை மெதுவாக இயங்க வைக்கிறது.
Will Windows Vista content protection features increase CPU resource consumption?

Yes. However, the use of additional CPU cycles is inevitable, as the PC provides consumers with additional functionality. Windows Vista’s content protection features were developed to carefully balance the need to provide robust protection from commercial content while still enabling great new experiences such as HD-DVD or Blu-Ray playback.
கடந்த இரண்டு மூன்று வருடங்களில் nVidia அல்லது ATI நிறுவனங்களிலிருந்து வரைகலை அட்டையை (Graphics Card) வாங்கியிருந்தவர்களுக்கு நான் சொல்லவரும் விஷயம் தெரியும். இந்த நிறுவனங்களின் எந்த அட்டையை வாங்கினாலும் அவற்றிலிருந்து ஒரே ஒரு இயக்கியை மாத்திரமே இறக்க வேண்டும். அந்த இயக்கி எல்லா அட்டைகளுக்கும் பொதுவானது. வேறு வார்த்தைகளில் சொன்னால் எ.டி.ஐ செய்யும் அனைத்து கிராஃபிக்ஸ் சில்லுகளுக்கும் ஒரு பொதுவான இயக்குமொழியை அது கையாளுகிறது. எனவே ஒரே வகையான இயக்கியே போதுமானது. விஸ்டாவில் இது செல்லுபடியாகாது, விஸ்டாவிற்கு ஒவ்வொரு அட்டைக்கும் வெவ்வேறு இயக்கியை நிறுவனம் வடிவமைக்க வேண்டும், அதைவிட அபத்தம் சராசரி பயனர் சரியான இயக்கியைப் பார்த்து நிறுவ வேண்டும். இது மிகவும் சிக்கலானது.

எக்ஸ்.பி வந்தபொழுது அதற்கான இயக்கி இல்லாவிட்டால் விண்டோஸ் 2000 இயக்கியை வைத்து ஓட்டமுடிந்தது. ஆனால் விஸ்டாவிற்கென வடிவமைக்கப்பட்ட பொதிகள் இல்லாவிட்டால் ஒரு ஒலியட்டையோ, வரைகலை அட்டையோ இயங்காது. பெரும்பாலான நிறுவனங்கள் புதிதாக வெளியிடும் அட்டைகளுக்குத்தான் விஸ்டா பொதி தரும், பழையனவற்றுக்கு விஸ்டா பொதிகளை எழுதப்போவதில்லை. எனவே பழைய அட்டைகள் விஸ்டாவில் ஒருக்காலத்திலும் வேலை செய்யப்போவதில்லை. (சில நிறுவனங்களுக்கு இதில் கொண்டாட்டம்தான்; புதிதாக வன்கலனை விற்கலாமே!).

ஆனால் விஸ்டாவிற்காக தங்களுடைய வன்கலனை வேலை செய்ய வைக்க, அதற்கு மைக்ரோஸாஃப்டின் ஆசிர்வாதத்தைப் பெற நிறுவனங்கள் நிறைய நேரமும் பணமும் செலவிட வேண்டியிருக்கிறது. எனவே பொதுவாக கணினிகள் மற்றும் கணினி பாகங்களின் விலையை இது அதிகரிக்கச் செய்யும்.

இவ்வளவு சிக்கல்களும் அபத்தங்களும் நிறைந்த உள்ளடக்கப் பாதுகாப்பினால் சராசரி பயனருக்கு ஒரு பைசா புண்ணியமில்லை. இது நகலெடுத்து வேறு ஒருவரிடம் பகிர்வதைத் தடுக்க மைக்ரோஸாஃப்ட் செய்யும் பிரம்மப் பிரயத்தனம். காரணம், ஹாலிவுட் தேவதைகளையும் கடவுள்களையும் திருப்திப்படுத்துதல். விஸ்டா இருக்கும் வரை ஒருவர் திரைப்படத்தை நகலெடுக்க முடியாது என்று அவர்களிடம் நிரூபித்துவிட்டால் விஸ்டாவில் மாத்திரமே இயங்கக்கூடிய திரைப்படத் தட்டுகளை வெளியிடுவார்கள். இதன்மூலம் மொத்த டிஜிட்டல் பொழுதுபோக்கு சந்தையையும் மைக்ரோஸாஃப்ட் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

அப்படியொன்று இது எளிதாக இருக்கப்போவதில்லை. அதிகார்வபூர்வமாக விஸ்டா வெளியான இரண்டாம் நாளே இதன் பாதுகாப்பு சங்கேதம் தகர்க்கப்பட்டுவிட்டது. (இதைப் பற்றிய என் வலைப்பதிவு இங்கே). மைக்ரோஸாஃப்ட் ஒரு ஒட்டு (patch) தயாரித்து இதை கொஞ்சம் நாட்களுக்கு அடைக்கலாம். ஆனால், இது ஒரு வேட்டை விளையாட்டுதான். மைக்ரோஸாஃப்ட் என்ற எலி ஓடிக்கொண்டிருக்க பறந்துகொண்டிருக்கும் வல்லூறுகளாப் பிளவர்கள் அதைக் கொத்திக் கொண்டிருக்கப் போகிறார்கள். இதில் இழப்பு பயனர்களுக்குத்தான் என்பது நிதர்சனம். இந்த நிதர்சனம் விரைவிலேயே ஹாலிவுட் கடவுள்களுக்கும் வெளிச்சமாகும். அப்பொழுது உள்ளடக்கப் பாதுகாப்பு என்பதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்து அதைக் கைவிடுவார்கள். ஏற்கனவே இதற்கான சாத்தியங்கள் சோனியிலும் ஹெச்.எம்.வியிலும் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.

* * *

இந்தப் பகுதியில் சொன்னவற்றையே சுருங்கச் சொல்ல;
  • Open Drivers எதும் விஸ்டாவில் வேலைசெய்யாது. இது நாளடைவில் கணினி வாங்குவதையும் அதன் பாகங்களைப் புதுப்பித்துக் கொள்வதையும் சிக்கலாக்கும்.
  • YPbPr, S/PDIF, Fiber Output போன்ற உயர்தர வெளியாக்கங்கள் விஸ்டாவினால் தடை செய்யப்படும். எனவே சாதாரணக கணினியை ஒரு பெரும் தட்டைத் திரை LCD வழியே பார்க்க முடியாது. அதில் கலங்கலான படங்கள்தான் கிடைக்கும்.
  • தாய்ப் பலகை பழுதுபட்டால் வேறு பொருத்தி உடனே கணினியை இயக்க முடியாது. விஸ்டாவைப் பொருத்தவரை அது வேறு கணினி எனவே புது விஸ்டா உரிமம் வாங்க வேண்டியிருக்கும்.
  • இது அடிக்கடி கணினியை மாற்றிக் கொண்டிருக்கும், மேம்படுத்திக் கொண்டிருக்கும் (குறிப்பாக கணினி விளையாட்டு ஆர்வலர்களுக்கு) பெரும் தடையாக இருக்கும்.
  • உள்ளடக்கப் பாதுகாப்பு விஷயத்திற்காக கணினியில் என்ன இசைக்கப்படுகிறது அல்லது என்ன படம் பார்க்கப்படுகிறது என்று தொடர்ச்சியாகக் கண்காணிப்பதால் விஸ்டா உங்கள் கணினியின் வேகத்தை 25% வரை குறைக்கும்.
  • தாங்கள் வெளியிடும் எல்லா அட்டைகளுக்குமான பொதுவான இயக்கிகளை வெளியிடுவது nVidia, ATI போன்ற நிறுவனங்களுக்கு சாத்தியமில்லாமல் போகும். எனவே சராசரி பயனரும் சரியான இயக்கியைத் தேடி அலைய வேண்டியிருக்கும்.
  • பழைய வன்கலன்களுக்கு விஸ்டா இயக்கிகள் கிடைக்கப் போவதில்லை. எனவே பழைய கணினிகளின் விஸ்டாவின் அற்புத 'வாவ்' சமாச்சாரங்கள் சாத்தியமில்லை.
  • வாவ் சமாச்சாரங்கள் இல்லை என்பதாலும் பாடல்கள் கேட்பதில் படம் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாலும் இவற்றுக்கு விஸ்டாவைத் தேடியலைவது அபத்தம். எனவே ஆறு மாதங்களுக்கு முன்னால கணினி வாங்கியிருந்தால் விஸ்டாவைத் தேடாதீர்கள்.
  • அப்படியே புதுக்கணினியாக இருந்தாலும் விஸ்டா-வால் வேகம் அதிகரிக்கப்போவதில்லை. ஆனால் பெரு நிறுவனங்களிலிருந்து (டெல், ஹெச்.பி,...) கணினி வாங்கினால் விஸ்டா உங்கள் தலையில் கட்டப்படும்.

பாதுகாப்பு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதன்கூடவே சிக்கல்களும், அபத்தங்களும், கட்டுப்பாடுகளும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் சொன்னதுபோல எந்தவிதமான பயன்பாடுகளிலும் புதுமை ஏதுமில்லை. சொல்லப்போனால் இலவச நிரலிகளை வைத்துக் கொண்டு எக்ஸ்.பி, 2000 இவற்றையே மிக அற்புதமாகப் பயன்படுத்த முடியும்.

என்னைப் பொருத்தவரை விஸ்டாவைத் தேடி அலைவது வீண்வேலை. ஆனால் வாங்கும் கணினியுடன் விஸ்டா தலையில் கட்டப்படுவதைத் தடுக்க முடியாது. எனவே வாங்கிக் கொள்ளுங்கள். இந்தச் சிக்கல்கள் எல்லாம் வேண்டாமென்றால் உபுண்டு லினக்ஸ் பயன்படுத்துங்கள். பயன்படுத்த மிகவும் எளிதானது. விடுதலை, விடுதலை, விடுதலை.

* * *

தொடருக்குத் தேவையான கூடுதல் விஷயம்.

நான் சோதித்துப் பார்த்த கணினி நானாகக் கோர்த்தது. அதன் விபரம்.
  • ASUS M2N-E Motherboard
  • AMD 64 bit Dual Core processor 3400 GHz
  • 2 GB of Kingston DDR2 RAM
  • 256 MB PCI Express Video card - nVidia
  • 6 USB 2 ports, 1 FireWire Port
  • On-board Gigabit Ethernet
  • On-board Digital Sound
  • On-board SATA RAID controller, with 6 slots for Hard Disks
  • Seagate 320 GB SATA II Hard disk with 16 Mb Cache
  • Western Digital 500 GB SATA II Hard disk with 16 Mb Cache
  • Pioneer 24X Dual-layer DVD+/- RW
  • Logitech Wireless Mouse/Keyboard Duo
  • Viewsonic 19 inch Widescreen LCD
  • ULTRA Aluminum Case with Thermocouple temperature monitor
கணினியின் முதல் வட்டில் விண்டோஸ் எக்ஸ்.பி இருக்கிறது, இரண்டாவது வட்டில் விஸ்டா நிறுவப்பட்டிருக்கிறது. இதே கணினியின் முதல் கடினவட்டின் ஒரு பகுதியில் உபுண்டு லினக்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. முந்தைய இயக்குதளங்களைப் போல இல்லாமல் விஸ்டா ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குதளங்களை ஓட்டும் வசதியைத் தருகிறது. இரண்டாவது வட்டின் பெரும்பகுதி இந்த மூன்று இயக்குதளங்களுக்கும் பொதுவான தரவுப் பகுதி (Data Partition).