நண்பர் நாகு அவர்களின் கேள்வி இது - "அமெரிக்கக் கட்சிகளின் சின்னங்களான யானை, கழுதை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன?" அவரே இந்த சின்னங்கள் அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை என்பதையும் சொல்லிட்டாரு.
ரொம்ப சிம்பிளான பதில் என்னன்னா இந்தச் சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னங்கள் இல்லை! ஒரு தனிமனிதனின் கற்பனைதான் இப்படி ஒரு நாட்டின் இரு பெரும் கட்சியின் சின்னங்களாக இருக்கின்றன எனச் சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை, கிட்டத்தட்ட உண்மை!
ஏன் கிட்டத்தட்ட அப்படின்னு கேட்டீங்கன்னா, இவரு வந்து இந்த கழுதையைப் பிரபலப் படுத்தறதுக்கு முன்னாடி கொஞ்ச நாளைக்கு வேற ஒருத்தர் இந்த கழுதையை உபயோகப்படுத்திட்டாரு. அதனாலதான். சரி, இப்போ ஒண்ணொண்ணா பார்க்கலாம்.
ஜனநாயகக் கழுதை

1828ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக

போட்டியிட்டவர் ஆண்ட்ரூ ஜாக்ஸன். இவரை எதிர்த்தவர்கள் இவரை Jackass (ஆண் கழுதை) என அழைக்க, இவரும் விடாமல் அதனைத் தன் அடையாளமாகவே ஆக்கிக்கொண்டு போஸ்டரில் போட்டுக் கொள்ளும் அளவுக்குப் போய் விட்டார். ஆனால் அது அவரின் தனிப்பட்ட அடையாளமாகவே இருந்ததே தவிர கட்சியின் அடையாளமாக ஆகவில்லை.
அந்த பெருமைக்கு உரியவர் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைபவரான தாமஸ் நாஸ்ட் என்பவர். 1870ஆம் ஆண்டு அவர் வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை கழுதையாக உருவகப் படுத்தி இருந்தார். அது படிப்பவர்களின் கவனத்தைக் கவர தொடர்ந்து அவர் ஜனநாயகக் கட்சியை கழுதையாகவே உருவகப்படுத்தத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் இதையே செய்ய, இது அக்கட்சியின் சின்னமாகிவிட்டது.
குடியரசு யானை

குடியரசு யானையைத் தந்தவர் ஜனநாயகக் கழுதையைத் தந்த அதே தாமஸ் நாஸ்ட் என்பதுதான் ஒரு

ருசிகரத் தகவல். 1874ஆம் ஆண்டு அவர் வரைந்த "The Third Term Panic" என்ற இந்தக் கேலிச் சித்திரத்தில் அவர் முதன் முதலில் குடியரசுக் கட்சியை யானையாக உருவகப் படுத்தினார். சிங்கத் தோல் போர்த்திய கழுதையை (ஜனநாயகக் கட்சி) கண்டு மற்ற மிருகங்கள் பயந்து ஓடுவது போல் வரைந்திர சித்திரம் அது. அதில் குடியரசுக் கட்சியை யானையாகச் சித்தரித்திருந்தார். கழுதையைப் போலவே இந்த யானையும் மிகுந்த வரவேற்பைப் பெற மற்றவர்களும் குடியரசுக் கட்சியை யானையாகவே உருவகப் படுத்தத் தொடங்கினர்.
குடியரசுக் கட்சியினர், அதிகார பூர்வமாகவே யானையை அவர்களது கட்சிச் சின்னமாகத் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆனால் இதுவரை ஜனநாயகக் கட்சியினர் கழுதையை அப்படித் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் அது அவர்களுது சின்னமாகவே உபயோகப்படுத்தப் படுகிறது.
குடியரசுக் கட்சியினர் யானையை கண்ணியம் மிக்க, உறுதியுடைய, புத்திசாலி மிருகமாகக் கொண்டாட, ஜனநாயகக் கட்சியினரோ யானையை பழமை விரும்பி, பகட்டான, எளிதில் தவறு செய்யும் புத்தியற்ற மிருகமாகப் பார்க்கின்றனர். அதே சமயம் அவர்கள் கழுதையை சாதாரணமான, பணிவான, வீரமான, விரும்பத்தக்க மிருகமாகச் சொன்னாலும் குடியரசுக் கட்சியினர் அதை பிடிவாதமிக்க, மடத்தனமான மிருகம் என கேலி செய்கின்றனர்.
வெறும் சின்னத்தை வைத்துப் பார்த்தால் துளசி டீச்சர், பொன்ஸ் என வலையுலகப் பெண்கள் ஓட்டு எல்லாம் குடியரசுக் கட்சியினருக்குத்தான் போல தெரிகிறது!
சில சுட்டிகள்
சுட்டி 1சுட்டி 2சுட்டி 3