Monday, February 19, 2007

ருசியான பிரியாணி செய்வது எப்படி?

காஷ்மீரி பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, காகாக்கடை பிரியாணி, ஆம்பூர் பிரியாணி வரிசையில் இப்பப் புதுசா 'நியூஸி பிரியாணி 'வந்துருக்கு.

வெஜிடேரியன்களும், நான்வெஜிடேரியன்களும் எல்லாரும் இப்படி வந்து கூட்டமா நில்லுங்க.

முதலில் எது?

மொதல்லே நான்வெஜ் சமைச்சுறலாம். ரொம்ப சத்தம் அந்தப் பக்கத்துலே இருந்து வருது. சிக்கனா மட்டனா? எதுவேண்டும் சொல் மனமே..........


ரெண்டு விதத்துக்கும் கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம்தான் இருக்கு. அதைச் சமைக்கும்போது பார்க்கலாம்.

இப்பெல்லாம் யாரும் பிரியாணிக்குன்னு மசாலா எல்லாம் வூட்டுலெ தயாரிக்கறதை விட்டுட்டாங்க. ரெடிமேட் பொடிகளா நாட்டுலெ குவிஞ்சு கிடக்கு. எனக்குத் தெரிஞ்சவரையில் 'மங்கள் மசாலா' நல்லாவே இருக்கு( வேற வழி? அது மட்டும்தான் இங்கே எனக்குக் கிடைக்குது) அதையும் வாங்கி வச்சுக்குங்க.

இந்த ரெஸிபி கொஞ்சம் 'ரிச்'சாத்தான் இருக்கும். ஆனா ருசி வேணுமுன்னா போடறதைப் போட்டுத்தானே ஆகணும். தினம்தினமா பிரியாணி சாப்புடப் போறோம்? அதனாலே காம்பரமைஸ் பேச்சு இல்லவே இல்லை.


தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் அல்லது மட்டன் - அரைக் கிலோ கொஞ்சம் பெரிய துண்டங்களா நறுக்கிக் கழுவி வச்சுக்குங்க)
  2. பாசுமதி அரிசி - அரைக்கிலோ
  3. பிரியாணி மசாலா - மூணு/நாலு தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
  5. உப்பு - ஒண்ணரைத்தேக்கரண்டி
  6. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாம்
  7. சம அளவில் சேர்த்து அரைச்ச பச்சை மசாலா- மூணு தேக்கரண்டி.( மசாலா பாக்கி ஆச்சுன்னா ஃப்ரீஸ் பண்ணி வச்சுக்கலாம்)
  8. வெங்காயம் பொடியாக அரிஞ்சது - 3 ( பெரிய சைஸ் வெங்காயமா இருந்தா 2 போதும்)
  9. 'துள்ஸீஸ்' கரம் மசாலா - 1 தேக்கரண்டி ( செய்முறை கடைசியில் இருக்கு)
  10. தக்காளிப் பழம் - 4 ( நறுக்கி வச்சுக்கணும்)
  11. கொத்துமல்லித்தழை - அரைக்கட்டு ( 'கால்கட்டு'க்கூடப் போதும்)
  12. புதினாத்தழை - கொஞ்சம்
  13. முந்திரிப்பருப்பு - கால் கப்
  14. உலர்ந்த திராட்சை( கிஸ்மிஸ்) கால் கப்
  15. நெய் - 200 கிராம்.

செய்முறையில் ரெண்டு வழி இருக்கு. சுலபமாச் செய்யறது, கஷ்டப்பட்டுச் செய்யறதுன்னு. எதுவேணும்? ரெண்டையும் சொல்லிடவா?


சுலபமுறை:


அடுப்பைப் பத்தவச்சுக்குங்க:-)

ஒரு பெரிய வாணலியில் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும், அதுலே முந்திரி, திராட்சையை பொரிச்சு எடுத்து வச்சுக்கணும்.

இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துச் சூடானதும் அரைச்சு வச்ச க்ரீன் மசாலாப் போட்டு ஒரு நிமிஷம் வதக்கணும்.அதுலேயே நறுக்கிவச்ச வெங்காயம் சேர்த்து இன்னும் வதக்கணும்.

அப்புறம் இன்னும் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும் மஞ்சப்பொடியைப் போட்டு ஒரு கிளறு கிளறிட்டு அதுலே சிக்கன்/ மட்டனைப் போட்டு நல்லா பிரட்டுங்க. அதோட நிறம் லேசா மாறணும். இப்ப அடுத்துச் சேர்க்கவேண்டியது பிரியாணி மசாலா. அடிப்புடிக்காமக் கிளறணும். உப்பையும் இப்ப சேர்த்துறலாம். ஆச்சா......... என்ன பாத்திரத்துலெ பிடிக்குதா? தக்காளியைச் சேருங்க.

சிக்கனா இருந்தா ஒரு டம்ப்ளர் தண்ணீரைச் சேர்த்து அப்படியே அரைத்தீயில் வேகவிடுங்க. மட்டனா இருந்தா தக்காளி சேர்த்ததும் கிளறிட்டு அதையெல்லாம் ஒரு பாத்திரத்துக்கு மாத்திட்டு ப்ரெஷர் குக்கரில் வைக்கலாம்.( குக்கர்ன்னா கால் தம்ப்ளர் தண்ணீர் போதும். ஸ்டீம் வந்த பிறகு அடுப்பை 'ஸிம்' செஞ்சுட்டுச் சரியா 15 நிமிஷம்.


அரிசியை கழுவி( மூணு தடவை. அதான் இந்தியக் குடும்ப வழக்கமாம்) மைக்ரோவேவ் ரைஸ் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊத்தணும். அரிசி அரைக்கிலோன்னா அநேகமா ரெண்டரை கப் வரும். மூணரைக்கப் தண்ணி சேர்த்தாப் போதும். 100% பவர்லே 7 நிமிஷம், 50% பவர்லே 8 நிமிஷம் வைக்கணும். 1000 W மைக்ரோவேவ்க்கு இந்தக் கணக்கு. பவர் இன்னும் அதிகமுள்ள அல்லது குறைவுள்ள மைக்ரோவேவ்ன்னா அதுக்குத் தகுந்தமாதிரி குறைச்சோ, கூட்டியோ வச்சுக்கணும்.


அடுத்த கட்டம் மிக்ஸிங். சிக்கனா இருந்தா இந்நேரம் வெந்திருக்கணும். தண்ணியெல்லாம் சுண்டி நல்ல க்ரேவிப் பதத்தில் இருக்கும் அதே வாணலியில் இப்பச் சேர்க்க வேண்டியது நம்ம 'துள்ஸீஸ்' கரம் மசாலா.

ஒரு கிளறுக்குப்பின் அடுத்து மைக்ரோவேவில் வெந்து தயாரா இருக்கும் சோறு. நல்லாக் கிளறுங்க. ஆனா சாதத்தை நசுக்கிக் கூழாக்காம லேசாப் புரட்டிப்புரட்டி விடணும். வெள்ளைச்சோறு கண்ணுலெ படக்கூடாது. இப்பத் தூவவேண்டியது
ஏற்கெனவே வறுத்துவச்ச முந்திரி & திராட்சை. பாக்கி இருக்கும் நெய்யை அப்படியே பரவலா பிரியாணிமேலே ஊத்திவிடுங்க. கொத்தமல்லி & புதினாவைக் கழுவிப் பொடிப்பொடியா அரிஞ்சு தூவலோ தூவல். ஒரு அஞ்சு நிமிஷம் அடுப்புமேலேயே இருக்கட்டும். தீச்சுவாலை இப்ப 'ஸிம்'லெ இருக்கணும்.

தக்காளி வெங்காயம் எல்லாம் அரிஞ்சு தயிர்லெ போட்டுக் கலக்கி கொஞ்சமா உப்புப்போட்டு ஒரு பச்சடி செஞ்சுக்கலாம். இல்லையா வெள்ளரிக்காய் துருவி, தண்ணீரை ஒட்டப் பிழிஞ்சுட்டு கெட்டித்தயிரில் கலக்குன ரைத்தா.
எல்லாம் இது போதும் சைட் டிஷ். ( வெள்ளரிக்காய் தண்ணீரை ஃப்ரிஜ்லே வச்சுக்கிட்டு ரெண்டு நாளைக்கு முகத்தில் தடவிக்கலாம்.எல்லாம் ஒரு அழகுக் குறிப்புதான். வேணாமா? சரி. அதைக் குடிச்சுருங்க)


வெஜ் பிரியாணி:

இதுலேயும் ரெண்டு வகை. ஈஸி & கஷ்டம்.

ஈஸியைப் பார்க்கலாமா?

மேலே சொன்னதுலே அந்த ச்சிக்கன்/மட்டனுக்குப் பதிலா மிக்ஸட் வெஜிடபுள் ( காரட், பீன்ஸ், பட்டாணி & கார்ன்) பாக்கெட் அரைக்கிலோ போட்டுக்கலாம். பிரியாணி மசாலா ரெண்டு தேக்கரண்டியே போதும். உப்பும் கொஞ்சம்
குறைச்சுக்குங்க. காய்கறிகள் சீக்கிரம் வெந்துரும். அதனாலே பக்கத்துலே இருந்து கவனிச்சுச் செய்யுங்க. அடுப்புலே வச்சுட்டுத் 'தமிழ்மணம் ' படிக்கப்போக வேணாம்:-)

இப்போ கஷ்டங்கள்:

நான் வெஜ்ஜுன்னா அதுவும் மட்டன்னா கொழுப்பு ஏதும் இல்லாம நல்ல ட்ரிம் பண்ண இறைச்சியா எடுத்துக்குங்க. அப்படியும் சந்தேகமா இருந்தா வெறும் இறைச்சியைக் குக்கரில் வச்சு வெந்தபிறகு, அதில் உள்ள சூப்பை மட்டும்
தனியா ஒரு கிண்ணத்தில் ஊத்தி ஆறவச்சு ஒரு பத்து நிமிஷம் ஃப்ரீஸரில் வச்சுட்டு எடுத்தா, கொழுப்பெல்லாம் இறுகி பாறையா மேலே நிக்கும். அதை மட்டும் எடுத்து குப்பையில் போட்டுரலாம். அதே தண்ணீரை மீண்டும் இறைச்சியில் சேர்த்துக்கலாம்.

அப்புறம் அரிசியை மைக்ரோவேவ் அவனில் வைக்காம கொஞ்சம் நெய் ஒரு வாணலியில் ஊத்தி, கழுவித் தண்ணீர் வடிச்ச அரிசியைப் போட்டு கொஞ்ச நேரம் தீஞ்சுறாமல் வறுத்துட்டு அதுலெயே ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னரைப்பங்குத்
த்ண்ணீர் சேர்த்து அடுப்புலேயே வச்சு தண்ணீர் வற்றும்வரை வேகவச்சு எடுக்கலாம். தண்ணீருக்குப் பதிலா இறைச்சி வெந்தபிறகு கிடைச்ச தண்ணீரையும் பயன் படுத்தலாம்.


வெஜ்ஜுன்னா என்ன கஷ்டமாம்?

இருக்கே......... எல்லாக் காய்களையும் ,அதாங்க அதே காரட், பீன்ஸ், காலி ஃப்ளவர்ன்னு தனித்தனியா வாங்கிச் சின்னதா ஒரே அளவுலே வெட்டி வச்சுக்கணும். பச்சைப் பட்டாணியை வெட்ட வேணாம்:-) உரிச்சு எடுத்துக்கிட்டாப் போதும். எல்லாமே இங்கிலீஷ் காய்களாத்தான் இருக்கணும். தமிழை மட்டும் சேர்த்துறாதீங்க. அது சரிப்படாது.

குடமிளகாய் சீஸனா இருந்தா சின்னத் துண்டுகளா வெட்டி, ஒரு ஸ்பூன் நெய்யிலே வதக்கிட்டு, கடைசியில் மல்லி இலை தூவும்போது இதையும் தூவி அலங்கரிக்கலாம். இப்பதான் எல்லாக் கலர்லேயும் குடமிளகாய் கிடைக்குதே.
சிகப்பு, மஞ்சள், பச்சைன்னு கலந்து போட்டா அட்லீஸ்ட் பார்க்கறதுக்காவது அழகா இருக்கும்:-)

இதோ நீங்கள் ஆவலுடன் காத்திருந்த உலகப்புகழ்(??!!) 'துளசீஸ் மசாலா'வின் செய்முறை:



மசாலா தயாரிக்க :

  1. கிராம்பு 30 கிராம்
  2. பட்டை 30 கிராம்
  3. ஏலக்காய் 30 கிராம்
  4. மிளகு 10 கிராம்
  5. சோம்பு 100 கிராம்
இது எல்லாத்தையும் ஒரு வாணலிலே லேசா வறுக்கணும். அடுப்பை மெலிசா எரிய விடுங்க. எண்ணெய் வேணாம். சும்மா 'ட்ரை'யா, இளஞ்சூடா வறுத்து, ஆறியவுடனே, 'மிக்ஸி ட்ரை ஜார்'லே போட்டு அரைச்சு வச்சிரணும்.
காத்துப் போவாத டப்பாலே வச்சிருங்க. அவ்வளவுதாங்க! ஜமாய்ங்க!

Saturday, February 10, 2007

விஸ்டா-வா வேண்டாமா - 1

செந்தில்குமார் புச்சா லாப்டாப் வாங்கப்போறாராம். (கொடுத்துவச்சவரு). அதுல விஸ்டா இருந்தே ஆகனுமா? விஸ்டா புதுசு, கொஞ்சம் நாள் கழிச்சு அதுக்கு மாறிக்கலாமா? இப்படி அவருக்கு ஏகப்பட்ட விஸ்டேகங்கள்.

இதுக்குப் பதில் சொல்ல நான் சரியானா ஆளா இல்லியான்னு தெரியல. நான் தீவிர லினகஸ்வாதி-ங்கறது எல்லாருக்கும் தெரியும் (ஒரு காலத்துல லினக்ஸ் தீவிரவாதியாக்கூட இருந்தவன், இப்ப வேலை, பொண்டாட்டி புள்ளன்னு ஆனப்புறம் கொஞ்சம் அடங்கியிருக்கேன்). நான் மைக்ரோஸாஃப்ட் பத்தி என்ன சொன்னாலும் சந்தேகத்தோடத்தான் பாப்பாங்க (இது அந்த பாப்பா இல்லீங்கோ). அப்புடித்தான் பாக்கனும்னு நானே சொல்லிக்கிறேன்.

* * *

மைக்ரோஸாஃப்ட் ரெண்டு வாரத்துக்கு முன்னால விண்டோஸ் விஸ்டா-ன்னு ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை (இதுக்குத் தமிழ்ல இயக்குதளம்னு பேரு) அறிமுகப்படுத்தியது. இது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மைக்ரோஸாஃப்ட் வெளியிடும் புதிய இ.த. மைக்ரோஸாஃப்ட் வரலாறைப் பார்த்தா;

  • Windows 3.0 - 1990
  • Windows 3.1 - 1992 (Windows for Work Groups)
  • Windows 95 -1995
  • Windows 98 -1998
  • Windows ME - 2000
  • Windows XP - 2001

(இந்த வெளயாட்டுக்கு Windows NT, Windows 2000 எல்லாம் சேத்துக்கல. அதெல்லாம் ஆபீசுகாரங்களுக்கு. வூட்ல பிரயோசனப்பட்றதுக்குன்னு அவிங்க வுட்டது மேல இருக்கற அஞ்சும்தான்). இப்புடி ரெண்டு வருஷத்துக்கு ஒரு தபா புதுசா இ.த விக்கறது மைக்ரோஸாஃப்ட் பழக்கம். ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ புதுசா ஒன்ன வாங்கவைக்கறது அவுங்களோட வெயாபாரத் தந்திரம். இந்ததடவ அந்தமாரி செய்ய முடியல. (அப்புடித்தான் திட்டம் போட்டாங்க, ஆனா விஸ்டா தயாராகறத்துல நெறைய லேட்டாயிடிச்சி). அதெல்லாம் பத்தி நமக்குக் கவலை இல்லை. நம்ம கேள்வி, அது நமக்கு சரிப்படுமா, இப்பவே வாங்கியாவனுமா இல்ல இன்னும் கொஞ்சம்நாள் கழிச்சு வாங்கலாமா? ( இல்ல வாங்காமயே இருக்கலாமா-ன்னும் ஒரு கேள்வி உண்டு).

மொதல்ல இந்த விஸ்டா-வுல புதுசா என்ன இருக்குங்கறதப் பாக்கலாம்? கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னால கொஞ்ச நாளைக்கு மைக்ரோஸாஃப்ட் விஸ்டா-வை இலவசமா சோதனைக்குன்னு கொடுத்தாங்க. ஒருக்காலத்துல எங்க ஆபிஸ்-ல ஒரு கைப்பிடியளவுக்கு மைக்ரோஸாஃப்ட் ஆபீஸ் பொதிக்கு லைஸன்ஸ எம்பேருல வாங்கியிருந்ததால எனக்கு மைக்ரோஸாஃப்ட்லேந்து இதை சோதிச்சுப்பாக்க ஒரு கடுதாசி வந்தது. ஏதோ, பில் கேட்ஸே கேக்குறாறே-ன்னு சரின்னு சொன்னேன். (இன்னாபா, கொஞ்சம் உட்டா நம்மகிட்டய டகிள் வுட்றியே-ங்கிறியா, சும்மா தெரியாமயா வாத்தியார் சொன்னாரு "ப்ளாக் எல்லாம் படிக்காதே, அதெல்லாம் ஈகோ ட்ரிப்புன்னு"). அப்ப ஒரு ஐஞ்சாறுதடவ அத ஓட்டிப்பாத்தேன். அதுக்கப்புறமா இன்னிக்குத்தான் என்னோட ஒரு பொட்டில போட்டுருக்கேன். இன்னும் முழுக்க நோண்டியாகல.


விஸ்டா-ல ரொம்பப் பெருசா எல்லாரும் சொல்றது அதோட புது 3-டி ஏரோ விண்டோ அமைப்புதான். பில் கேட்ஸ் அண்ணாத்தே இதத்தான் எல்லா எடத்துலயும் "Wow Factor" அப்படீன்னு மார்தட்டியிருக்கார். இப்ப விண்டோஸ்-ல எல்லாம் பரப்பிவச்சாமாதிரி ஒவ்வோரு விண்டோவையும் பக்கதுல பக்கத்துலதான் வைக்க முடியும். (அதுனால ரெண்டு இல்லாட்டி மூனு விண்டோவைத் தொறந்தா மேசை ரொம்பிடும்). ஏரோ-ல ஒன்னுமேல ஒன்னா அடுக்கி வைக்கலாம். அப்புறம் தெறந்து மூட்றப்ப சும்மா பொசுக்குன்னு கீழ இருக்கற பட்டில போய் ஒக்காந்துக்காம டீல்வுட்டு வால் அறுந்த பட்டம் காத்துல ஆடுமே அதமாதிரி கொஞ்ச நேரம் ஃபிலீம் காட்டிட்டுத்தான் மறைஞ்சு போகும். இப்புடி 'வாவ் ஃபாக்டர்' நெறையவே இருக்கு.

பிலீம் காட்ற சமாச்சாரத்துக்கு அடுத்தபடியா மைக்ரோஸாப்ட் ரொம்ப பீத்திக்கிறது அதோட பாதுகாப்பு தீவிரமாயிருக்குன்னுதான். விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பாக் -2 போட்டவங்களுக்கு அதுல Security Centre -ன்னு ஒன்னு இருக்கறது தெரிஞ்சிருக்கும். அதுல (தீயரண்), வைரஸ் ஒழிப்பு சமாச்சாரம், விண்டோஸ் அப்டேட்டிங்க் (இற்றைப்படுத்தல்) இந்த மூனும் சேந்தத்துதான் செக்யூரிட்டி செண்டர். விஸ்டா-ல இந்த மூனையும் இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்காங்க. சொல்லப்போனா வைரஸ் ஒழிப்பு சமாச்சாரம் எக்ஸ்பி செக்யூரிட்டி செண்டர்ல கெடையாது. உங்க பெட்டில அது (நார்ட்டன் ஆண்டி வைரஸ், மெக்காஃபி) இருக்கா இல்லயான்னுதான் சொல்லும். விஸ்டாவுலயும் அதேதான். இப்ப மைக்ரோஸாஃப்ட் LiveOne அப்படீன்னு ஒரு வைரஸ் ஒழிப்பு பொதியை விக்குது. இந்த செக்யூரிட்டி செண்டர் அது இல்லைன்னா கத்தும். அதாவது பாதுகாப்பு இல்லைன்னா அதுவா பாதுகாப்பு தராது, ஆனா இல்லைங்கறத உங்களுக்குச் சத்தம்போட்டுச் சொல்லும். இன்னும் கொஞ்சம் காசு கொடுத்து லைவ் ஒன் வாங்குன்னு விளம்பரிக்கும்.

தீயரண்-ல கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. முன்ன இருந்ததவுட நெறய விஷயத்தைச் சரியா, தனித்தனியா, கட்டுப்படுத்த முடியும். முக்கியமான விஷயம் விஸ்டா உங்கள அடிக்கடி பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) தரச்சொல்லி படுத்தும். உதாரணமாக நீங்க மொதலாளி (Admin) ஆக உள்ளே போயிருந்தாலும் புச்சா எதுனாச்சும் ஸாஃப்ட்வேர் சேர்க்கனும்னா அப்பப்ப க.சொ சொல்லிக்கிட்டே இருக்கனும். இது கொஞ்சம் பாதுகாப்பை அதிகரிக்கும். நெறைய கெட்ட சமாச்சாரம் (malware) எல்லாம் அட்மின் வேலைல இருக்கும்போதுதான் காரியத்தைச் செய்யும். (அதுக்கு எல்லா பவரும் வேணும்). ஆனா எதாவது முக்கியமா செய்யனும்னா பாஸ்வேர்டை திரும்ப அடிக்கனும்னு இருந்திச்சின்னா கெட்டசமாச்சாரத்துக்கு ஒன்னும் செல்லுபடியாவாதுதான. (இது எத்தனை நாளைக்கு ஒழுங்கா வேலைசெய்யும்னு தெரியல. கெ.ச கமுக்கமா குந்திகினு இருந்து நீங்க பாஸ்வேர்ட் அடிக்கறச்ச அதைப் படிச்சு வச்சுகிட்டு அப்பால அதைவச்சுகிட்டு தான் வேலையைக் காட்டறது சாத்தியம்தான்). இந்தமாரி அடிக்கடி பாஸ்வேர்ட் கேக்கறது லினக்ஸ்/யுனிக்ஸ் ஒலகத்துல ரொம்பநாளா இருக்கற பாதுகாப்பு. (sudo command). ஒன்னும் புச்சு இல்ல. இருந்தாலும் சுருக்கமா சொல்லனும்னா, விஸ்டா-ல கொஞ்சம் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்க. ஆனா, இதுல ஒன்னும் அப்படிப் புதுசா எதுவும் இருக்கிற மாதிரி தெரியல.

ரொம்ப நீளமா போய்ட்டதால, கொஞ்சம் ப்ரேக் உட்டு அப்புறம் எளுதுறேன்.

(இதே ரீதில போன நான் இந்த நீளத்துக்கு இன்னும் மூனு நாளு நாளுக்கு எளுதுவேன்னு தோணுது. இப்படி நீட்டி முழக்கி வெலாவரியா எளுதனுமா, பத்துவரிகளுக்கு மிகாமல் பதிலிறுக்கவுமான்னு சொல்லிப்புடுங்க, அடுத்த தபா எளுதறச்சே பெரயோசனமா இருக்கும்).

Thursday, February 01, 2007

புதையுண்ட எரிபொருள் பற்றி தெரிஞ்சிக்கலாமா?

பூமிக்குள்ள புதைஞ்சு கிடக்கும் எரி பொருள் கனிமங்கள், அதாவது ஆங்கிலத்தில அதை 'fossil fuel'ன்னு சொல்வாங்க! அதை பத்தி என்னா விவரமுன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்க தான் இந்த பதிவு!இந்த எரிபொருள்கள் கண்டுபிடிச்ச பின்ன தான் மனிதனோட வாழ்க்கையே மேம்பட்டுச்சு, எப்படின்னு கேட்கிறீங்களா, அதாவது என் எஸ் கலைவானர் அந்த காலத்திலே 'பட்டனை தட்டிவிட்டா இரண்டு இட்லி தட்டுல வந்திடணும்'னு படிச்ச பாட்டெல்லாம் எதுக்கு? நாம் இல்லானேலும் பரவாயில்லை நமக்கு பின்னாடி வரும் மனித குலம் வசதிகளோட அத்தனையும் அனுபவிச்சு வாழணும்னு அப்பவே எழுதி சொல்லி வச்ச ஞானத்துக்கு மூலமா இருந்தது இந்த எரி பொருள்கள் தான் சொன்ன உங்களுக்கு ஆச்சிரியமா இருக்கும்!

அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியிலே நீராவிக்கு பெரும் பங்கு இருந்தது, ஏன்னா அப்ப இந்த புதையுண்ட எரி பொருள்'ங்கிர சமாச்சாரம் அவ்வளவா கண்டுபிடிக்கல்ல. அதாவது அப்ப மனிதனிடம் இருந்த சக்திகள் விட அதிகமான சக்திகளை கொண்ட குதிரைகளை மனிதன் வழிப்பயணத்துக்கு பயன்படுத்தினான், அதுக்கு முன்னே 'நடராஜா சர்வீஸ்' தான். அப்படி தன்னை சுத்தியுள்ளவைகளிலிருந்து எவ்வளவு தனக்கு உபயோகமா பெறமுடியுமோ அத்தனையும் பெற்றான். ஆனா அப்ப சக்திசாலி மிருகங்கள் அவனுக்கு துணையா இருந்தது! அப்பறம் இயந்திர சக்திகளை பயன் படுத்த ஆரம்பிச்சப்ப நீராவி பெறும் துணையா இருந்தது! அப்பதான் மிருகங்கள் கிட்ட இருந்து கிடைக்கும் சக்தி இயந்திரங்களிலிருந்து பெற்றாலும் அவனுக்கு ஏற்கனவே பழகிய குதிரைகளின் சக்தி அளவு தெரிஞ்சதாலே, இயந்திர சக்திகளுக்கும் அவன் குதிரையின் சக்தி அளவை கொண்டே கணக்கிட்டான். அப்படி கணக்கிட்ட பழக்கம் இன்னைக்கும் நம்மகிட்ட இருந்து போகல்லை, ஆமா சின்னதா எலெக்ட்ரிக் மோட்டார் அளவா இருந்தாலும், இல்லை பெரிய காரோட சக்தியையும் இன்னைக்கும் அந்த குதிரை சக்தியாலே தான் அளவிடுகிறோம். ஆமா கால் எச்பி, இல்லை அரை எச்பி, ஒரு எச்பி, நூறு எச்பின்னு இப்பையும் கணக்கு சொல்லிக்கிட்டு இருக்கோம்! 'எச் பி' ங்கிறது ஆங்கிலத்திலே 'Horse Power' (HP) அதாவது ஒரு குதிரை சக்தி, எவ்வளவு வேகமா மணிக்கு இத்தனை மைல் ஓடும் பொழுது உண்டாகும் வேகம், அதன் அளவீடு! இதை புரிஞ்சிக்கனும்னா உங்களுக்கு கொஞ்சம் பொளதீகம் தெரிஞ்சிருக்கனும்! என்ன தான் இந்த விஞ்ஞான கோட்பாடுகளை கொண்டு வெவ்வேற அளவீடுகள் அதற்கப்பறம் வந்தாலும், இன்னும் குதிரை சக்தியை நம்ம விட்டபாடு இல்லை!


இந்த புதையுண்ட எரிபொருள், அதாவது, 'fossil ங்கிறது என்னான்னா, பூமிக்கடியிலே கிடைக்கும் நீரகக்கரியினை(Hydrocarbon) குறிப்பிடுவதே , அதாவது முக்கியமா நிலக்கரி (Coal), கச்சா எண்ணைய்(fuel oil) மற்றும் இயல்பு வாயு(Natural Gas) என அழைக்கப்படும் இந்த பூமியில் புதையுண்ட வளமங்களை தான் குறிப்புடுவது!இந்த வளமங்கள் பூமிக்கடியில் எப்படி தோன்றிச்சினா பல வருடங்களுக்கு முன்னால் செத்து மடிந்த பிராணிகள், அழிந்த காடுகள், மரங்கள் அனைத்தும் பூமியின் கீழே மட்கி மருகி இந்த கனிம வளங்களா இருக்குது! அது பூமியின் சில இடங்கள்ல சுலபமா சில அடிகளுக்குள்ள தோண்டுனாலே கிடைச்சிடும், சில இடங்கள்ல ரொம்ப ஆழமா தோண்டி எடுக்க வேண்டிருக்கும்! அப்படி சுலபமா சில அடிகள் தோண்டினாலே கிடைப்பது நமது வளைகுடா நாடுகள் பகுதியிலே, ஆனா சில ஆழ்கடல் குள்ளே தோண்டி எடுத்தால் தான் உண்டு! நம்ம நாட்டை பொறுத்தவரைக்கும் அப்படி நமது கரையை ஒட்டி இருக்கும் பம்பாய் பகுதிகளிலிருந்து கச்சா எண்ணைய் எடுக்கப்படுது! அந்த எண்ணை கிணறுகள் இருக்கும் பகுதிக்கு பேரு 'Bombay High'ன்னு! இதை ஏன் 'Bombay High'ன்னு சொல்றாங்கன்னா, மேற்கில்ல இருக்கும் அரபிக்கடலின் பகுதி பம்பாய் கடற்கரையிலேருந்து அப்படியே சரிவா ஒரு 25 கிமீ தூரத்துக்கு கடல் ஆழம் போய்கிட்டிருக்கும் அப்படி 25, 30 கிமீ தூரத்திற்கப்பறம் தான் ஆழ்கடல், அதாவது 175 மீ ஆழம் கொண்ட பகுதிகள் தான் அவை, அங்க தோண்டி எடுக்கப்பட்ட கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைய் நம் நாட்டின் தேவையை ஒரு 30 சதவீதம் தான் பூர்த்தி பண்ணுது, மீதி இன்னும் சில இடங்கள்லயும் அப்பறம் வெளி நாட்டிலேருந்தும் இறக்குமதி செய்றாங்க!

இப்படி தோண்டி எடுக்கப்படும் கனிமங்கள்ல முக்கியமா உங்களுக்கு நிலக்கரியை பத்தி தெரிஞ்சிருக்கும், அதை எரிச்சு, பெரிய நீர் உலைகள்ல கொதிக்க வைச்சு, அதிலிருந்து உண்டாகும் நீராவியின் சக்தி கொண்டு பெரிய ராட்சத சக்கரங்களை சுழற்றி அதோட இணைக்கப்பட்ட மின் உறபத்தி இயந்திரத்தை இயக்கி மின்சாரம் தயாரிக்கிறாங்க! ஆக நம்ம ஊட்டுக்கு, வெயில்ல சுத்திட்டு உஸ் புஸ்னு வீடு திரும்புனோன்ன வந்த வுடனே பட்டனை தட்டி மின்விசிறியை சுழல வைக்க தேவையான மின்சாரத்தை இப்படி தான் தயாரிக்கிறாங்க! இது நிலக்கரியால் இயங்கும் மின் நிலையங்கள், சில மின் நிலையங்கள் பூமியிலிருந்து எடுக்கபட்ட எண்ணையிலிருந்து சுத்திரிகப்பட்ட எரி எண்ணையை கொண்டு எரிச்சு அதே நீர் உலை, நீராவி, சுழலும் இயந்திரம் அப்படின்னு இன்னுரு வகையிலே மின்சாரம் தயாரிக்கிறது, அப்பறம் நான் மேலே சொன்ன இயல்பு வாயுக்கள்ல இருக்கும் எரிக்கும் சக்தியாலே சுழலும் இயந்திரத்தை சுத்த வச்சு மின்சாரம் தயாரிக்கிறது. ஆக இப்படி இந்த புதையுண்ட பொருளை கொண்டு தயாரிக்கும் மின்சாரமொரு வகைன்னா, அணுவை பிளந்து அதில் வரும் சக்தியிலே நீராவி உண்டு பண்ணி மின்சாரம் தயாரிக்கிறது இன்னொரு வகை! ஆக முதோ வகையில உண்டாகிற மின்சாரம் இந்த 'fossil fuel' கொண்டு உற்பத்தி பண்றது, அடுத்த வகை நான் சொன்ன அணு சக்தி மட்டுமில்லாம, காற்றாடி, சூரியஒளி, கடல் அலை அப்படின்னு மற்ற சக்திகளிலிருந்து உருவாக்கும் மின்சாராம், அதை ஆங்கிலத்திலே 'Non fossil fuel based' ன்னோ, இல்லை 'non Conventional energy resources'ன்னோ சொல்லுவாங்க!

ஆக இப்படி தோண்டி எடுக்கப்பட்ட எரிபொருள் கனிமங்களைத்தான், நம்முடய சக்தியின் தேவைகளுக்கு உபயோகபடுத்துகிறோம். அந்த சக்தி பல ரூபங்கள்ல நமக்கு உதவுது, அதிலே ஒன்னு தான் வாகன ஊர்திகளுக்கு தேவையான் ஒன்னு! நான் சொன்ன மாதிரி முதல்ல நிலக்கரியில நீராவியை கொதிக்க வச்சு நீராவி இயந்திரத்திலே ஓடின வண்டிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இப்ப எண்ணெய்னு சொல்லக்கூடிய டீசல் எரிபொருளை கொண்டு இப்ப ஓடுது! அப்படி கிடைக்கும் கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய், நாஃப்தா, அப்படின்னு எல்லா சுத்திகரிகப்பட்ட எண்ணெய்கள் பல விதமா உபயோகப்படுது, இதிலேருந்து தான் அப்புறம் பெட்ரோகெமிக்கல்ஸ்லருந்து பல மூலப்பொருட்களை எடுத்து, நம் வாழ்க்கையிலே அன்றாடம் உபயோகிக்கிற ப்ளாஸ்டிக் சாமான்கள், பாலியெஸ்டர் சட்டை துணிமணிகள்னு நிறைய பொருட்கள் உற்பத்தி ஆகிறது! ஆக இதுக்கு எல்லாம் மூலம் நான் சொன்ன அந்த புதையுண்ட எரி பொருள் தான், சரி அது எப்படி தோண்றிச்சுன்னு பார்த்துட்டு, அப்பறமா இந்த சக்தி யின் பல அவதாரங்களை பிறகு தொடர் பதிவுகளா எழுதலாம்!

நான் சொன்ன இந்த புதையுண்ட எரி பொருள்கள் தோன்றினது பல ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னே. அதாவது உலகம் துவங்கின காலகட்டங்களை பல நிலைகளா பிரிக்கிறாங்க, அதை பத்தியும் அப்பறமா இந்த விக்கி பசங்க கிட்ட கத்துக்கங்க! அதன் காலகட்டங்கள், அதாவது 'Time sacle' ல ஒன்னு தான் 'Paleozoic Era'(இதை தமிழ்ல எப்படி சொல்றதுன்னு விக்கியாச்சு, தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!) அதாவது பூமி தோன்றின பிறகு ஒரு 38 கோடி யிலருந்து 26 கோடி வருஷங்களுக்கு இடைப்பட்ட காலங்கள்ல முளைச்ச மரஞ்செடிகள் மடிஞ்சி,(அப்போதைய காடுகள் படம் கொஞ்சம பாருங்க!) மக்கி கீழே விழுந்து, அப்ப சதுப்பு நிலங்களா இருந்தது பூமியின் முக்காவாசி பகுதி, அப்படி இருந்த பகுதிகள்ல வளர்ந்த சின்ன சின்ன தாவரங்கள் மடிஞ்சி மக்கி போயி ஒரு ஸ்பாஞ்சு மாதிரி மிதந்து, அதுக்கு மேலே பலநூறு ஆண்டுகளா, மண்ணு, களிமண்ணு, அப்பறம் கனிமபொருட்களால இருகி போயி கடைசியிலே பூமிக்கு அடியிலே போயி மேலே விழுந்த பாறை, மணல்,களிமண், கனிமம் அப்படின்னு இந்த பொருட்களின் அழுத்ததாலே அந்த ஸ்பாஞ்சு மாதிரி இருந்த அந்த மக்கின பொருள்ல இருந்து நீர் மேலே எடுத்துவரப்பட்டு அது அப்படியே இருகி நிலக்கரி பாறையாகவோ, இல்லை எண்ணை படிமங்களாகவோ உண்டாகி போச்சு, அதே மாதிரி இந்த எண்ணைய் தோன்றினதுக்கும் முக்காவாசி ஒரு கடல் தாவரத்தை சொல்றாங்க! அதுக்கு பேரு ஆங்கிலத்திலே 'Diatoms'னு ( தமிழ் பேரு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்!)அதாவது இந்த தாவரம் பார்க்க நம்ம விந்தணுக்கள் போல இருக்கும், இதுவும் பல கோடி வருடங்களுக்கு முன்னே முளைச்ச ஒரு தாவரம், அதனுடய சிறப்பு என்னான்னா,கடலுக்குள்ள முளைச்ச இருந்த இந்த தாவரம் நீர் விழும் சூரிய கதிர்கள்ல இருந்து சக்தியை எல்லாம் சேமிச்சு வச்சுக்கிச்சாம். அப்பறம் அது செத்து மடிஞ்சி கடலின் கீழ்மட்டத்திலே விழுந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மண்ணு, கல்லு, பாறைன்னு அதுமேல விழுந்து அப்படியே அடியிலே போய் அதுக்குள்ள இருந்த நீரை வெளியேத்திட்டு அது சேமிச்சு வச்ச சக்தியை உள்ளுக்குள்ளே வச்சிருந்து அப்பறம் அந்த எண்ணைய் படிமங்கள் ('sedimentation')ஆகி போய்டுச்சுன்னு சொல்றாங்க, அப்பறம் பூமியின் சுழற்சியிலே ஏற்பட்ட அழுத்தத்தாலே, அப்ப தண்ணியா இருந்த பகுதி நிலப்பரப்பாவும், நிலப்பரப்பா இருந்த பகுதி நீர் பரப்பாவும் ஆயிடுச்சு, அப்படி தான் இப்ப நிலத்தை தோண்டுனா எண்ணெய் கிடைக்குதுன்னு சொல்றாங்க! ஆக இந்த மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் ஒரு காலத்திலே கடல் பகுதி, இப்ப பாலைவனமா இருக்கு! அது மாதிரி வட அமெரிக்காவின் வடக்கு பகுதியா இருக்கும் இந்த ஆல்பர்ட்டா என்ற மகாணம் ஒரு காலத்திலே கடலுக்கு அடியிலே இருந்த ஒன்னு (அது தான் இங்க ஏகப்பட்ட எண்ணைய் மணல் வளம் இருக்கு, அந்த கதை அப்பறமா சொல்றேன்!)!

இப்ப புரிஞ்சிச்சா இந்த புதையுண்ட எரி பொருள் தோண்றின சங்கதி, ஆக இது கிடைக்கதேன்னு, கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா கொண்டு போக போகுதுன்னு நம்ம பாட்டுக்கு எடுத்து இரைச்சு உபயோக படுத்திக்கிட்டிருக்கோம், அதனாலே சொகுசா நம்ம வாழ்க்கை இப்ப போய்கிட்டிருக்கு, அப்படி வாழும் வாழ்க்கையால, அதாவது இந்த எரி பொருளை எரிச்சு சக்தியை நம்ம பிரயோகபடுத்திறதாலே வரும் விளைவா இந்த பூமியின் வெப்பம் அதிகமாச்சுன்னு கத்திக்கிட்டு, அதுக்கு மாத்து வழி என்னான்னு இப்ப யோசிச்சுக்கிட்டு இருக்கோம். ஆக இது தான் அந்த புதையுண்ட எரி பொருள் கதை, மேற்கொண்டு மற்ற (ஆதி பரா)சக்திகளை பற்றி அப்பறமா தெரிஞ்சிக்கலாம், இப்ப இவ்வளவு தான் பாடம்!