Sunday, December 24, 2006

காட்டுக்குள்ளே படம் பிடிப்பது எப்படி?

நம்ம ஷ்யாம் இருக்காரே (ஆமா, இப்போ எல்லாம் ஆளைக் காணறதே இல்லை, என்ன ஆச்சு?) அவரு ஒரு கேள்வி கேட்டாரு.

Animal Planet channel ல ஒரு விலங்கோட life cycle காட்டுராங்களே...அதுக்கு அங்க அங்க கேமரே ஃபிக்ஸ் பண்ணி வெச்சுருப்பாங்களா இல்ல யாராவது அதுங்கள பாலோ பண்ணி வீடியோ எடுப்பாங்களா...இல்ல ஹைடெக்கா சேட்டிலைட்ல இருந்து எடுப்பாங்களா...
இதுக்கு நம்ம வழக்கம் போல கூகிளாண்டவரை வணங்கி வரம் வாங்காம இது பத்தி தெரிஞ்ச ஒருத்தரைக் கேட்கலாமேன்னு நினைச்சோம். உடனே நியாபகத்துக்கு வந்தது நம்ம இயற்கைநேசிதான். சரிதான், அவருக்கு இந்த படம் பிடித்த அனுபவம் எல்லாம் இருக்குமே, அதையும் கலந்து எழுதித்தாங்களேன்னு சொல்லியாச்சு. அவரும் உடனே எழுதித் தந்ததுதான் இந்த பதிவு. நன்றி நேசி.

இனி இயற்கைநேசி

இன்றைய தினத்தில் ஒரு காமிரா என்ற டப்பாவை வாங்கி விட்டால் யாவரும் ஒரு புகைப்பட நிபுணரானதாக நினைத்துக் கொண்டு, கேள்வி கேப்பார் இல்லாமல், படம் எடுக்கப் படும் நபரின் அனுமதியின்றியே ஏதோ கையில் ஒரு லைசன்ஸ் வாங்கிவிட்டதைப் போன்ற பிரமையுடன் நடந்து கொள்ள நினைக்கிறோம்.

அத்து மீறி, சில சமயங்களில் வன விலங்குகளின் பழக்க வழக்கம் பற்றி அறியாமலேயே, ஆபத்தான முறையில் மிக அருகமையில் நெருங்கி தன் உயிருக்கே கூட பங்கம் விளைவித்துக் கொண்ட நிகழ்ச்சிகளும் உண்டு.

அது அப்படியாக இருக்க, உண்மையிலேயே இந்த வனத்தினுள் உள்ள மிருகங்களைப் பற்றி அசையும் (moving) அசையா (still) படங்கள் எவ்வாறு எடுக்கப் படுகிறது, என்ற கேள்வி நம்மிடையே எழலாம். இயற்கை சார்ந்த புகைப்பட நிபுணர் ஆக வேண்டுமா, வேண்டியது எல்லாம் பொறுமை, அதீத பொறுமை, மேலும் பொறுமை.

ஏனெனில், ஒரு பத்து மணி நேர அமர்வில் கடைசி 5 நிமிடங்கள் உங்களுக்கு புகைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பு அமையலாம், அதுவும் அமைந்தாலும் அமையலாம். அப்படியெனில், நான் என்ன சொல்ல வருகிறேன், என்பது உங்கள் அனைவருக்கும் புலப்படுமென்று நினைக்கிறேன். அதற்கு ஒரு சிறு உதாரணம் கொண்டு பார்க்கலாம், சருகு மான் (Mouse Deer) என்ற ஒரு வகை மான் மழைக் காடுகளில் வசிக்கிறது, அது வீழ்ந்து கிடக்கும் அல்லது பட்டுப் போயோ, அல்லது உயிருடனோ நிற்கும் மரப் பொந்துகளில் வசிக்கிறது.

அவ்வளவு எளிதாக அதன் வசிப்பிடத்தை கண்டுபிடித்து விட முடியாது. சரி, ஓர் இடத்தில் அந்த மான் வசிப்பதை தெரிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம். எப்படி நல்ல வெளிச்சத்தில் ஒரு படமேனும் அந்த மானை எடுப்பது. அதில் நிறைய பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியது வரும். எப்படியெனில், மழைக்காடுகளில் ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்ந்த கிளைகளுடன் (canopy) சூரிய வெளிச்சமே நிலத்தில் படாத வண்ணம் அடைத்துக் கொண்டு நிற்கும்.

அப்படியே சிறிது வெளிச்சம் தரையில் விழப்போனாலும் அந்த மரங்களுக்கு இரண்டாவது நிலையில் நிற்கும் சிறு மரங்களும், பற்றி வளரும் செடி கொடிகளும் (Lianas, Rattans etc.,) இன்னும் வெளிச்சத்தை மறைத்து, பார்க்கப்படும் விலங்கிற்கும், பார்ப்பவருக்குமிடையே பெரும் இன்னல்களை விளைவிக்கும். இதனாலேயே, மழைக்காடுகளில் படம் எடுப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்ததைப் போன்றது.

இதனால் அதி நவீன தொழிற் நுட்பங்களை கொண்ட காமிராவாக இருந்தாலும் சரி, திறமையான புகைப் பட நிபுணராக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் படம் எடுப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது, இன்றும்.

இந்த சூழ்நிலையில் தான் யோசித்து, யோசித்து காசு இருக்கும் நாட்டில் முதல் முதலில் இது போன்ற ரகசிய வாழ்கை நடத்தும் பூனை இனங்களை (இதில் புனுகுப் பூனை, சிறு வகை காட்டுப் பூனைகள் மற்றும் மழைக்காடுகளிள் வசிக்கும் புலிகள், சிறுத்தைகள்) படம் மெடுப்பதற்கென காமிர பொறி (Camera Trap) வைத்து படமெடுப்பது என்ற அணுகுமுறையை கொணர்ந்தார்கள்.இதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியும் கொணரப் பட்டது. எப்படியா, இப்பொழுது நம்மூர் காடுகளில் ரொம்ப அரிதாகவே அறியப் பட்ட மீன் பிடிக்கிற பூனை (Fishing Cat) மற்றும் சிறுத்தைப் பூனை (Leopard Cat) இவங்க ரெண்டு பேரும் ரொம்ப அரிதான அரிது ஒரு முறையேனும் இதன் வாழ்விடத்தில் வைத்து காட்டிற்குள் பார்க்கிறது. ஏன்னா, ஒண்ணு இதுகள் அந்தி மயங்கி இரவு நேரங்களில் மட்டுமே தனது ஆட்டையை தொடங்குகிறது, இரண்டாவது ரொம்ப ரகசியமா நடந்து திரியற ஜீவராசிகள்.

அது அப்படியாக இருக்கும் பொழுது எப்படி இவைகளை படம் எடுக்கிறது. அங்குதான் வந்தது இந்த காமிர பொறி அணுகு முறை. நாங்களும் முயற்சித்துப் பார்த்தோம் ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்தது.

கொஞ்சம் எப்படி செய்தோம் என்று பார்த்து விட்டு, பிறகு பி.பி.சி மக்கள் எங்கள் பக்கமா சிங்கவால் குரங்குகளின் (Lion Tailed Macaque) வாழ்வைப் பற்றி படம் எடுக்க வந்தப்ப என்னன்ன சிக்கல்களை அவர்களும் நாங்களும் சந்தித்தோம் என்பதனையும் கூறி இப்படி கஷ்டப்பட்டு அசையும், அசையாப் படங்கள் எடுப்பதால் என்ன பயன் என்பதனையும் கூறுகிறேன்.

நாங்க வரகலியார் என்ற யானை முகாமருகில் இருக்கும் சோலை ஒன்றில், இந்த காமிர பொறியை பயன் படுத்திப் பார்த்தோம். முதலில் ஒரு வாரமா காட்டிற்குள் அழைந்து நீர் நிலை இருக்கிற மாதிரியும், பூனைகளின் புலுக்கை (scat droppings) தண்ணீரின் குறுக்கே ஓடும் வேர்களின் மீது ஏதாவது கிடக்கிறதா, அல்லது நிற்கும் இடத்தை சுற்றியும் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று துப்பறியும் வேலையை எல்லாம் நடத்தினோம்.

பிறகு சரியான இடமா பார்த்து, ஒரு காமிரவை தனிந்து வளைந்து வளர்ந்திருக்கிற ஒரு கொடியின் கிளையில் அந்த ஏரியாவை கவர் செய்து போல கட்டி வைத்தோம். இதற்கு முன்பே, அட நாங்கள் பயன் படுத்திய அணுகு முறையைத்தான் இங்கு சொல்லிக் கிட்டு இருக்கிறேன், சரியா. இந்த காத்து ஊதி தலையனை (Air Pillow) செய்வோமே, அத ஒண்ணு வாங்கி முனையை மட்டும் திறந்து அதுக்குள்ள சில சித்து வேலை ஒயரிங்க் வேலை எல்லாம் செஞ்சு காமிரவுடன் கொண்டு வந்து இணைத்து விட்டோம்.இப்ப அந்த பொறியின் அமைப்பை வெளியில் தெரியா வண்ணம் கொஞ்சம் சருகு மண்ணு எல்லாம் அது மேல போட்டு, ஓயரிங்க மண்ணுக்குள் வைத்து மறைச்சுட்டு, கொஞ்சம் கருவாட அங்கும் இங்குமா தூக்கிப் போட்டு நம்ம பொறிகிட்ட மட்டும் கொஞ்சம் ரெண்டு மூணு அதிகமாகவே.

இத்தனைக்கும் அதுக வாசம் பிடிக்கிறதில பலே ஆட்கள், அவனுங்க வந்திட்டு போற இடத்தில நாம வந்திட்டு போயிறுக்கிற சுவடு தெரிஞ்சா அந்த பக்கமே கொஞ்ச நாட்களுக்கு தலை வைச்சுப் படுக்க மாட்டாய்ங்க. அதனையும் பார்க்கணும், நல்ல குளிச்சுட்டு, செண்டு கிண்டு எல்லாம் போட்டுகிட்டு பொண்ணுகளை கவர்வது அப்படிங்கிற கணக்க போன ஒரு எறும்பு கூட கண்ணில தட்டுப் படாது.

சரி, நம்ம கதைக்குப் போவோம். காமிர தனியங்கி. அதுவா, எது அந்த ஓயரிங்கால் இணைக்கப்பட்ட தலையனை மீது ஏதாவது ஏறியோ அல்லது தொடப்பட்டாலோ காமிர உயிர் பெற்று படக்கென்று படத்தை எடுத்து விடும். ஆனா, பாருங்க நாங்க கொண்டு போய் கட்டி வைச்ச அன்னிக்கு நல்ல மழை. மறுநாள் திரும்பப் போய், வேற ஒண்ணை விட்டுட்டு வர வேண்டியதாப் போச்சு.அடிக்கடிப் போய் பார்க்காம ஒரு வாரம் கழிச்சு போயி எடுத்திட்டு வந்தோம். ரெண்டு மூணு நல்ல படம் கிடைச்சுருந்தது. கீரிப் பிள்ளைகள், அப்புறம் ஒரு பறவை இந்தியன் பிட்டா எனும் ஒன்று.

ஆனால், இந்த காமிர பொறியினால் சில அரிய புகைப்படங்களும் கிடைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மழைக்காடுகளில் வசிக்கும் புலிகளின் கணக்கெடுப்பிற்கும், தனிப்பட்ட முறையில் அவைகளின் உடம்பிலும், முகத்திலும் உள்ள புள்ளிகள் மற்றும் வரிகளின் அமைப்பைக் கொண்டு கண்டறிய முடிகிறது.

இப்பொழுது ரோடியே சமிக்கைகளை அனுப்பும் கருவிப் பட்டைகளை கழுத்தில் கட்டி அதன் வாழ்வியலைப் பற்றிய ஆராய்ச்சி நடத்து கிறார்கள். அது போல அதன் குறிப்பிட்ட வசிப்பிடம் அறியப் படும் பொழுது, முழு நீள அசையும் படம் எடுப்பது சாத்தியமாகி விடுகிறது. இருந்தாலும், மழைக்காடுகள் எப்பொழுதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்து வருகிறது.

அதற்கு ஒரு உதாரணம், நாங்கள் வால்பாறையில் இருந்த சமயத்தில் பி.பி.சியிலிருந்து ஒரு குறு நீள படம் சிங்கவால் குரங்குகளின் மேல் எடுத்தார்கள். அதற்கு ஆறு மாதத்திற்கு முன்பாகவே இடம் தேர்வு செய்யப் பட்டு, எளிதாக நல்ல முறையில் அதன் முழுச் சமுதாயமும் எவ்வாறு வாழ்கிறது என்பதற்கிணங்க, கொஞ்சம் சிறிய வனத்தில் மக்களுடன் பழக்கப் பட்டு போன ஒரு குரூப்பின் மீது படப்பிடிப்பை நடத்திவிட்டு, பிறகு அடர்ந்த அதன் உண்மையான வாழ்விடத்தை காமிக்கும் எண்ணத்தில் வால்பாறையில் அமைந்துள்ள அக்காமலை (Akkamalai) எனும் வனத்தினுள் படப்பிடிப்பு நடத்தப் பட்டது.

ஏனெனில், அக்காமலை காடுகளில் வாழும் அக் குரங்குகளை படம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதில் நிறைய நாட்கள், கொட்டும் மழையிலும், கடிக்கும் அட்டைகளுக்கு கிடையிலும் அழைந்து திரிந்தது ஓர் மறக்க முடியாத அனுபவமே.

முடிவாக, வன விலங்குகளைப் பற்றி படம் எடுப்பதில் நிறைய பொறுமையும், அதன் பழக்க வழக்கங்களைப் பற்றிய புரிந்துணர்வும், அதற்கெல்லாம் மேலாக அவைகளின் பிரத்தியோகத் தன்மைக்கும் மதிப்பளித்து இடைஞ்சல் கொடுக்காத விதத்தில் நடந்து கொண்டு புகைப்படம் எடுப்பது ஒரு சிறந்த நிபுணருக்கான அடையாளங்கள்.

படம் எடுக்கப்படும் விதம் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமாக தினந்தோரும் வளர முயற்சித்துக் கொண்டுதான் வருகிறார்கள். எனவே, விலங்குகள் வாழும் குகைகள், பொந்துகள் போன்ற இடங்களில் இன்று வளர்ந்துள்ள தொழிற் நுட்பத்தில் பாட்டரிகளின் உழைப்புத்தன்மை, மறைத்து வைக்கக் கூடிய அளவில் ஒரு பட்டாணி அளவே உள்ள காமிரக் கண்கள் என மிக வேகமாக வளர்ந்து போனதால், இது போன்ற ரகசிய வாழ்கை வாழும் மிருக ராசியாக இருந்தாலும் இன்று அதன் வாழ்வினை உற்று நோக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டியிருக்கிறது என்றே கூறலாம்.

7 comments:

said...

பதிவுக்கு நன்றிகள் பல இயற்கைநேசி.

நானெல்லாம் காட்டுக்குள்ளே போறதில்லை. வீட்டுக்குள்ளேயே இருக்கற தவளை, பூச்சியெல்லாம் பிடிக்கறதுக்குள்ளேயே தாவு தீந்துடுது.

//கேள்வி கேப்பார் இல்லாமல், படம் எடுக்கப் படும் நபரின் அனுமதியின்றியே ஏதோ கையில் ஒரு லைசன்ஸ் வாங்கிவிட்டதைப் போன்ற பிரமையுடன் நடந்து கொள்ள நினைக்கிறோம்.//
ஹூம்.. =((

said...

நிறைய சந்தேகங்கள்...

beautiful people என்று நினைக்கிறேன். wild life மட்டுமே அந்தப் படம் முழுவதும்.
பாம்பு ஒன்று..மணற்பாங்கான இடத்தில் வாழ்வது; அது தன் உடலை மண்ணுக்குள் மறைத்துக் கொண்டு வாலை மட்டும் ஒரு குச்சி போல் நிமிர்த்தி வைத்துக் கொள்ள, அதைக் குச்சி என்றே நினைத்து பூச்சி ஒன்று அதன் மேல் ஏற, நாம் பதைபதைப்போடு இருக்கும்போது படாரென்று பாம்பு மண்ணை விட்டு வெளியே வந்து பூச்சியை ஸ்வாகா பண்ணுனது...
எப்படி சரியாக அந்த இடத்தில் எத்தனை காலம் இது நடந்தேறக் காத்திருக்க முடியும். சொன்னால் கேட்கும் பழகிய விலங்குகளா என்ன?

தண்ணீருக்குள் நீந்தி விளையாடும் ஒரு மீன்; சடாரென பாய்ந்து வந்த பறவை ஒன்று அதைப் பிடித்து இலகில் கவ்விக் கொண்டு தண்ணீரை விட்டு வெளியே வந்து தன் கூட்டை நோக்கி வெகுதொலைவு பறந்து செல்ல அதை sequentialஆக முழுவதுமாக - ஆகாயத்தில் பறவை, தண்ணீருக்குள் மீன், தண்ணீருக்குள் மீன் வேட்டை, மீண்டும் நீண்ட தொலைவு கூட்டுக்குத் திரும்பும் பறவை - just unbelievable sequence - எப்படி இப்படியெல்லாம் .. ? எத்தனை காலக் காத்திருப்போ,எவ்வளவு நுண்ணீய எடிட்டிங்கோ, எவ்வளவு அதிர்ஷ்டமோ...என்னமோ போங்க..

said...

ரிமோட் கண்ட்ரோல் முறையில் வேலை செய்யும் காமிராக்கள் இல்லையா? மரங்களின் மேல் இவற்றைப் பொருத்திவிட்டு தூரத்தில் இருந்து இயக்கி படங்கள் எடுப்பதில் ஏதேனும் தடங்கல்கள் உள்ளனவா?

(நமக்கெல்லாம் கேள்வி கேக்கத்தான் தெரியும்!)

said...

அடேங்கப்பா..காமிராவ எங்க வெச்சான்னு அத்தனவாட்டி யோசிச்சிருப்பேன். இந்தாருக்கு சூக்குமம். சிலபல சமயங்கள்ள புலியோ சிங்கமோ மானையோ மாட்டையோ தொரத்தத் தொடங்குறதுல இருந்து அடிச்சு கழுத்தக் கடிச்சு புவ்வா சாப்பிடற வரைக்கும் எடுக்குராங்களே...அதெல்லாம் எவ்வளவு கஷ்டம்...அந்தப் பக்கம் ஓடுற சிங்கம்மா இந்தப் பக்கம் திரும்பீட்டாங்கன்னா....அப்பப்பா!

said...

பெரீய்யப்பா,
நானும் வியந்ததுண்டு. எப்படி டைமிங்காக மீனைப் பிடிப்பது, எலியை பாம்பு பாய்ந்து கவ்வுவது போன்ற தருணங்களில் எடுக்கிறார்கள் என்று? manipulated ஆக இருக்குமோ என்றுகூட எனக்கு சந்தேகமுண்டு.

இன்னொன்று, ஒரு எலி பாம்பு வாயில் மாட்டப்போகிறதென்று தெரிந்தாலோ அல்லது ஒரு மான்குட்டியை புலி அடிப்பதை தடுக்க முடியுமென்றாலோ தடுக்காமல் படம் பிடிக்கிறார்களே என்று சீவகாருண்யமும் அவ்வப்போது பொங்கும். :))

said...

ஓகை,
ரிமோட் கண்ட்ரோல் உண்டென்றுதான் நானும் நினைக்கிறேன். எத்தனை மணிநேரம் ஒருவர் காட்டிலே உட்கார்ந்து கொண்டு படம் பிடிப்பது. அதே சமயத்தில் unmanned காமிரா என்றால் ஆங்கிளெல்லாம் எப்படி பர்பெக்டாக இருக்குமென்றும் ஒரு சந்தேகம்.

இயற்கைநேசி வந்துதான் பதில்சொல்ல வேண்டும். ஆளைக்காணவில்லை. விடுமுறையில் சென்றுவிட்டாரோ என்னவோ.

said...

//ரிமோட் கண்ட்ரோல் உண்டென்றுதான் நானும் நினைக்கிறேன். எத்தனை மணிநேரம் ஒருவர் காட்டிலே உட்கார்ந்து கொண்டு படம் பிடிப்பது. அதே சமயத்தில் unmanned காமிரா என்றால் ஆங்கிளெல்லாம் எப்படி பர்பெக்டாக இருக்குமென்றும் ஒரு சந்தேகம்//

Infrared sensored கேமராக்கள் USல் உண்டு என நினைக்கிறேன். இதன் சென்சாரில் எதாவது விலங்கினம் கிராஸ் பண்ணும்போது தானாக படமெடுக்க ஆரப்பித்துவிடும்.

அதே போல் மைக்ரோ கேமராக்கள் உண்டு. இவை சிறு துளைகளின்( மரங்களின் பொந்துகளில்) வாழும் உயிரினங்களை படமெடுக்க பயன்படும். தண்ணீருக்குள் படமெடுக்க தனிவகை கேமராக்கள் உண்டு.