Thursday, November 30, 2006

உலகத்திலேயே பெரிய கொட்டை எது?

நம்ம ஓகை நடராஜன் இருக்காரே, அவரு வந்து எதையோ சொல்ல வரும் போது எதையோ கேட்டு நம்மளை இப்படி ஒரு நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாரு. அவரு ஒரு பதிவில் பின்னூட்டமாய் சொன்னது இது

"இங்கே கேள்விகளைக் கேளுங்கள்" எனறு கொட்டை எழுத்துக்களில் (பனங்கொட்டை அளவில்) (ஒரு துணைக் கேள்வி - கொட்டைகளில் பெரிய கொட்டை எது?) போடுங்கள்."
இந்த துணைக்கேள்வி பார்க்க சுலபமா இருக்கே, இதுக்கு பதிலை சொல்லிடலாமேன்னு படிக்க ஆரம்பிச்சாத்தான் தெரியுது, மனுசன் நம்மளை எப்படி எசகு பிசகா மாட்டி விட்டு இருக்காருன்னு. முதலில் இந்த தலைப்பு. இதை வெச்சு நம்ம வ.வா.ச. பசங்க என்ன எல்லாம் கிண்டல் பண்ணப் போறாங்களோ. அதை விடுங்க.

முதலில் இந்த கொட்டை அப்படின்னா என்னான்னு பார்க்க போனா இரண்டு அர்த்தம் இருக்காம் - Nut மற்றும் Seed. அது மட்டுமில்லை "The term nut is sometimes used on seeds, but nuts and seeds are not the same thing. A nut is a seed, but not all seeds are nuts." இப்படி 'விசு'த்தனமா போகுது விஷயம். அதெல்லாம் ஆகாது. எங்க ஊரில் Nut, Seed எல்லாம் ஒண்ணுதான். அதுக்கு பேர்தான் கொட்டை அப்படின்னு ஒரு முடிவு எடுத்து, அதுக்கு அப்புறம்தான் நம்ம ஔவையார் சொன்னா மாதிரி 'பெரியது கேட்கின்' அப்படின்னு ஆரம்பிச்சோம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். செஷல்ஸ் நாட்டில் இரண்டே இரண்டு தீவுகளில் மட்டுமே வளரும் Coco de mer என்ற மரத்தின் கொட்டைதான் உலகிலேயே மிகப் பெரிய கொட்டையாம். இரட்டைத் தேங்காய் போல காட்சியளிக்கும் இது 50 செ.மி. சுற்றளவு வரை பருத்தும், 30 கிலோ எடை வரை வளரும். இதோ சில புகைப்படங்கள்.



நன்றாக முற்றிய கொட்டை



மரத்தில் இருக்கும் பொழுது

இந்த சிறு தீவுகளில் மட்டுமே இருக்கும் இவ்வகை மரங்கள் இப்பொழுது அழிவின் விளிம்பில் இருப்பதால் பாதுகாக்கப்படும் தாவரயினங்களின் பட்டியலில் உள்ளது. ஒரு விஷயம், Lodoicea callipyge என்ற இத்தாவரத்தின் விஞ்ஞான பெயரில் callipyge என்ற வார்த்தைக்கு பொருள் அழகான பின்பக்கம் என்பதாகும். மீண்டும் ஒரு முறை முதல் படத்தைப் பாருங்கள். :)

சரி, எல்லாவற்றிலும் பெரிதாக பார்த்துப் பழகிய அமெரிக்கர்கள் சும்மா இருப்பார்களோ? அவர்கள் பல விதமான கொட்டைகளின் பெருமையை பறைசாற்ற கட்டிய கான்க்ரீட் கொட்டைகளைப் பாருங்கள்.


வேர்க்கடலைக்காக



Pecan கொட்டைக்காக

இன்னும் விபரங்களுக்கு

சுட்டி 1
சுட்டி 2

சந்தேகம் தீர்ந்ததா ஓகையாரே! :-)

Tuesday, November 28, 2006

Selective coloring - எப்படி?

புகைப்படத்தில் தேவையான பகுதியை மட்டும் வண்ணத்திலும் தேவையற்ற பகுதிகளை கருப்பு-வெள்ளையாக மாற்றுவதன் மூலம் வண்ணப் பகுதிக்கு பார்வையாளரின் கவனைத்தை எளிதில் ஈர்க்க முடியும்.

இந்த படத்தில் முக்கிய பகுதி மஞ்சள் நிற சூரியக் காந்தி




பார்வையாளரின் கவனத்தை பூவின் மீது உடனடியாக விழ வைக்க பூவைத் தவிர மற்ற பகுதிகளை கறுப்பு வெள்ளைக்கு மாற்றி இருக்கும் படம் இது.



இதை செய்வது மிக எளிது. இணையத்தில் இலவசமாய் கிடைக்கும் GIMP இல் செய்யும் முறை .


GIMP ல் படத்தை திறவுங்கள். ( File->open )

இதுப் போன்ற மூன்று சாளரங்கள் திறக்கப்படும். Layers திறக்கபடாவாவிட்டால் ( Ctrl+L) மூலம் அந்த பகுதியையும் திறக்கச் செய்யுங்கள்.




layers பகுதியில் Background என்ற பெயரோடு படத்தின் மூலம் இருக்கும். இந்த போன்று மற்றுமொரு லேயரை உருவாக்க , Duplicate Layer என்கிற இந்த பொத்தானை அமுக்கவும்





Background Copy என்ற பெயரில் ஒரு புதிய லேயர் உருவாகும். இந்த புதிய லேயர் தேர்ந்து எடுக்க அந்த பெயரின் மீது க்ளிக்கவும். தேர்ந்து எடுக்கப்பட்ட லேயர் நீல நிறத்துக்கு மாறும்



இப்போது இந்த புதிய லேயரை கருப்பு வெள்ளைக்கு மாற்ற வேண்டும். இதை செய்ய Destaurate தேர்வு செய்யுங்கள். இது ( Layer-> colours -> Desaturate ) என்ற இடத்தில் இருக்கும்.





இப்போது நமக்கு தேவையான வண்ணப் பகுதியை மேலேயுள்ள கருப்பு வெள்ளைப் பகுதியில் இருந்து நீக்க வேண்டும். இதை செய்ய எளிய வழி, Eraser தேர்ந்து எடுக்கவும்.




இனி தேவையான பகுதிகளை அழிக்க வேண்டியதுத்தான் பாக்கி. அழிக்க அழிக்க கீழேயுள்ள படத்தின் முலத்தில் உள்ள வண்ணப்பகுதி வெளிப்பட ஆரம்பிக்கும்.





அவ்வளவுத்தான். ரெடி. இனிப் படம் காட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.

Monday, November 27, 2006

தியோடலைட் - ஏன் எதற்கு எப்படி?

தருமியின் இன்னொரு கேள்வி

ரோடு போடும்போது நம்ம ஊர்களில்ஒருத்தர் மூணு கால் இருக்கிற ஸ்டாண்டு ஒன்றில் ஒரு டெலஸ்கோப் (?) மாதிரி ஒண்ணு வச்சிருப்பார். தள்ளி இன்னொருத்தர் ஒரு ஸ்கேல் வச்சிக்கிட்டு நிற்பார். அவங்க என்ன பண்றாங்க? அத எப்படி பண்றாங்க??
அந்தக்கருவியின் பெயர் தியோடலைட். நில அளவைக்கும் உயரங்களை அளப்பதற்கும் கட்டுமான வேலைகளிலும் பலப்பல விதமாக உபயோகப்படும் கருவி. (என் தந்தை நில அளவைத் துறையில் இருந்ததால் இக்கருவி எனக்கு 7 -8 வயதிலேயே பரிச்சயமாகிவிட்டது).

முதலில் இக்கருவியின் கான்சப்டைப் பார்ப்போம்.

ஒரு கொடிக்கம்பம் இருக்கிறது, அதன் உயரத்தை அளக்க விரும்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? ஒரு பையனை இஞ்ச் டேப்புடன் மேலே அனுப்பி அளக்கச் சொல்லலாம். அல்லது கொடிக்கம்பத்தைக் கழட்டி, தரையில் வைத்து நீளத்தை அளக்கலாம் (சர்தார்ஜி ஜோக்கில் வருவது போல உயரம் வேறு, நீளம் வேறு எனக் குழப்பிக்கொள்ளாமல் இருந்தால் சரி). ஆனால் ஒரு லைட் ஹவுஸின் உயரத்தை? 100 மாடிக் கட்டடத்தின் உயரத்தை?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்க்கும்போது, அந்தக்கட்டடத்தின் அடிமட்டமும், உச்சியும் ஏற்படுத்தும் ஆங்கிள்கள் வேறுபடும் அல்லவா? இதை இன்னொரு பொதுப்புள்ளியில் இருந்து பார்க்கும்போது, அந்த ஆங்கிளை வைத்து, சைன் தீட்டா, காஸ் தீட்டா எல்லாம் போட்டு திரிகோணமிதி வைத்துக் கணக்குப் போட்டால் உயரம் தெரிந்துவிடும் - இல்லையா?


இந்த ஆங்கிளைத் துல்லியமாகக் கணக்கெடுக்கத்தான் தியோடலைட் பயன்படுகிறது. இது ஆதாரமாக ஒரு டெலஸ்கோப் போலத்தான். கிடைமட்டமாகவும், நெட்டுக்குத்தாகவும் அசைக்கவல்ல டெலெஸ்கோப். இதனுடன் இணைந்த பாகைமானிகள் (கிடைக்கு ஒன்று, நெட்டுக்கு ஒன்று) எவ்வளவு ஆங்கிள் அசைத்திருக்கிறோம் என்று காட்டும்.



1. ஒரு ரெபரன்ஸ் புள்ளியை முதலில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்,

2. அளக்கவேண்டிய கட்டடத்தின் அடிமட்டத்தை டெலஸ்கோப்பில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்

3.அளக்கவேண்டிய கட்டடத்தின் உச்சியை டெலஸ்கோப்பில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்.

இதில், ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளியைக் கழித்தால், அடிமட்டமும், உச்சியும் ஏற்படுத்தும் ஆங்கிள் மாற்றம் தெரிந்துவிடும், உயரத்தைக் கண்டுபிடித்து விடலாம். சமதரையில் உள்ள நிலத்தை அளப்பதற்கும் இதே முறைதான். நிலத்தின் ஒரு எல்லை, மற்றொரு எல்லை, ரெபரன்ஸ் புள்ளி - கிடைத்தது ஆங்கிள்.

இப்போதெல்லாம் இதிலும் எலக்ட்ரானிக்ஸ் புகுந்துவிட்டது. கீழே இருப்பது நிக்கானின் லேட்டஸ்ட்.



மூணு குச்சியைப் பற்றியும் கேட்டிருக்கிறார். ட்ரைபாட் என்பது எந்தச் சமமற்ற தளத்திலும் சீராக நிற்கக்கூடிய அமைப்பு. நாற்காலியில் ஒரு கால் சரியில்லை என்றால் ஆடும். முக்காலி ஆடாது. பெரும்பாலும் தியோடலைட் உபயோகப்படுத்தும் இடங்கள் சமச்சீரற்றவையாகத் தான் இருக்கும் என்பதால் முக்காலி.