Wednesday, January 24, 2007

வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 2

போன பதிவில் அலகிடுதல் பத்திப் பார்த்தோம். இப்போ ஒரு வெண்பாவுக்குண்டான விதிகளைப் பத்திப் பார்க்கலாம்.

வெண்பா விதிகள்

  • இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம்.
  • ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும்.
  • எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும்.
  • கனிச்சீர் வரக்கூடாது. அதாவது போன பதிவில் சொன்ன மாதிரி எடுத்துக்காட்டுகளில் தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என்ற நான்கு வகைகளும் வரக்கூடாது.
  • கடைசி வரியின் (இதைத்தான் ஈற்றடின்னு சொல்லுவாங்க) கடைசி சீர் "நாள் , மலர் , காசு , பிறப்பு " என்பது போல வரவேண்டும்.

தளை தட்டுதல்

வெண்பா எழுதும் போது ஒரு சொல்லுக்கும் அதன் அடுத்து வரும் சொல்லுக்கும் எந்த விதமான உறவு இருக்கலாம் என்பதற்காக சில விதிமுறைகள் இருக்கு. இந்த விதிமுறைகளை மீறினா தளை தட்டுதல் என்பதைப் போன பதிவில் பார்த்தோம். தளை தட்டாம எழுத மூணு விதிகள்தான் இருக்கு.

  • காய் முன் நேர்
  • விளம் முன் நேர்
  • மா முன் நிரை

இங்க முன் அப்படின்னா followed byன்னு அர்த்தம். ஆக தேமா, புளிமா என வரும் சீர்களை அடுத்து வரும் நிரை கொண்டு தொடங்க வேண்டும். மற்ற சமயங்களில் எல்லாம் நேர் கொண்டு தொடங்க வேண்டும். இதுக்காகத்தான் ஒரு சீரில் ஒன்றுக்கு மேல் வார்த்தைகளோ அல்லது ஒரு வார்த்தையை ரெண்டு சீராக பிரித்தோ வருது. இந்த விதிகள் ஒரு அடியில் இருக்கும் சீர்களுக்கு மட்டுமில்லாம ஒரு அடியின் கடைசி சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் கூட ஒத்து வரா மாதிரி பாத்துக்கணும்.

அவ்வளவுதான் ரூல்ஸ். அவ்வளவு கஷ்டம் மாதிரித் தெரியலைதானே. இப்போ ஒரு திருக்குறளை எடுத்து அலகிட்டுப் பார்க்கலாம்.

(ஒரு குறிப்பு : குறள் என்பது இரண்டு அடியில் எழுதப்படும் வெண்பா. இதை நிறையா பேரு ஒண்ணே முக்கால் அடி அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க. ஆனா அது சரி கிடையாது. இது இரண்டு அடிதான். இரண்டாவது அடியின் நீளம் மூன்று சீர்கள். )

சரி விஷயத்துக்கு வருவோம். முதல் குறளையே எடுத்துக்கலாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


அலகிடுதல்

மேற் சொன்ன விதிகளின் படி இப்பொழுது அசைகளைப் பிரித்துப் பார்க்கலாம்.

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நேர்
புளிமா புளிமா புளிமாங்காய் தேமா

பக/வன் முதற்/றே உல/கு
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்
புளிமா புளிமா புளிமா

தளை விதிகள் எப்படிப் பொருந்துகிறது எனப் பார்க்கலாம்.

அகர முதல - மா முன் நிரை
முதல் எழுத்தெல்லாம் - மா முன் நிரை
எழுத்தெல்லாம் ஆதி - காய் முன் நேர்
ஆதி பகவன் - மா முன் நிரை
பகவன் முதற்றே - மா முன் நிரை
முதற்றே உலகு - மா முன் நிரை

விதிகளுடன் ஒரு ஒப்பீடு

  • இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம். - இரண்டு அடிகளில் இருக்கிறது
  • ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும். - முதலடியில் நான்கு சீர்கள், இரண்டாவது அடியில் மூன்று சீர்கள்
  • எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும். - மேலே கோடிட்ட படி பார்த்தீர்களானால் எல்லாச் சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டதாகவே இருக்கிறது.
  • கனிச்சீர் வரக்கூடாது. - கனிச்சீர்கள் இல்லை.
  • கடைசி வரியின் கடைசி சீர் " நாள் , மலர் , காசு , பிறப்பு " என்பது போல வரவேண்டும். - உலகு என முடியும் சீர் பிறப்பு என்பதை ஒத்து வருகிறது.

இப்படித்தாங்க வெண்பா எழுதணும். இதுக்கு மேல எதுகை, மோனை, ஓசை அப்படின்னு எல்லாமும் விஷயம் இருக்கு. முதலில் தளை தட்டாம எழுதப் பழகின ஒரு குழாம் வந்த உடனே, எதுகை மோனை பற்றிய பதிவு போடலாம்.

இப்போ எல்லாரும் தளை தட்டாம ஒரு வெண்பா எழுதுங்க பார்க்கலாம்.

17 comments:

said...

போன பதிவில் வாத்தியார் சொன்னது...

சிம்பிளான விதிமுறை. ஒத்த துருவங்கள் விலகும் (காய்ச்சீர் தவிர)

இன்னும் சுளுவா சொல்லவா ?

நேரசை வந்து வடதுருவம்னு வச்சிப்போம்

நிரையசை வந்து தென் துருவம் உள்ள காந்தம்னு வச்சிப்போம்.

இப்ப நேரசைல முடிந்த சீரைத் தொடர்ந்து நேரசையில் தொடங்க்கும் சீர் வராது ( காய்ச்சீர் மட்டும் விதிவிலக்கு . காய்ச்சீர் நேரசையில் தான் முடியும். அதைத் தொடர்ந்து நேரசை தான் துவக்கப் படவேண்டும் )

அதே போல் நிரையில் முடியும் சீரத் தொடர்ந்து நிரையில் தொடங்கும் சீர் வராது.

அவ்வளவு தாங்க வெண்பா..

jeeves

said...

அந்த காலத்தில் நான் வெண்பா வாத்தி வகுப்பில் சேர்ந்த பொழுது எழுதிய முதல் வெண்பா

சீரும் அசையும் கனியிடை காய்களும்
யாரும் தெரியா தரியா - மருளும்
புரியாப் புதிராய் இருக்கா தெனவே
சரியாய் எழுதினேன் போ.

எதுகை இருக்கு, மோனை இல்லை! உங்களுக்கு இந்த ரெண்டு பதிவும் படிச்ச பின்னாடி வெண்பா புரியாப் புதிராய் இருக்கதென நம்புகிறேன்!

said...

வாத்தியார் வாத்தியார்


நேரும் நிரையும் இணையும் துருவம்
சேரும் அவையென் றுரை

கரெக்டுங்களா ?

ஒத்தவை ஒட்டா தொதுங்கிடும் போதிலே
மத்தவை சேர்தல் சிறப்பு

கரக்டுங்களா ?

கனியிலா வெண்பாக்கள் நற்சுவை ஈய
இனியெதற்கு இங்கே கனி

கரக்டுங்களா

காய்சீ ரடுத்து தொடர்வது நேரென
வாய்திட்ட வெண்பா விதி


தப்பா இருந்தா சொல்லுங்க வாத்தியார்

said...

//
சீரும் அசையும் கனியிடை காய்களும்
யாரும் தெரியா தரியா - மருளும்
புரியாப் புதிராய் இருக்கா தெனவே
சரியாய் எழுதினேன் போ.


//


மருளும் = எதுகை புட்டுக்கிச்சி :D

சீரு மசையும் கனியிலாக் காய்களும்
யாரும் தெரியா தில்லையே - வாரும்
புரியாப் புதிராய் இருக்கா(து) எனவே
சரியாய் எழுதவெண் பா.


:D

said...

கொத்ஸ்,

அருமையான விளக்கத்துக்கு நன்றி!!

இப்ப ஓரளவு புரிஞ்சாலும் திரும்ப திரும்ப படிச்சாத்தான் மண்டையில நிக்கும்..படிக்கறேன் :)

said...

//வாத்தியார் வாத்தியார்//

நானா வாத்தி? நீரே வாத்தி!

//நேரும் நிரையும் இணையும் துருவம்
சேரும் அவையென் றுரை//

கரெக்டுங்களா ?//
இல்லீங்க. தளை தட்டுது. துருவம் முன் சேரும் வருங்களா? இப்படி மாத்தலாமா?

நேரும் நிரையும் இணையும் துருவங்கள்
சேரும் அவையென் றுரை

//ஒத்தவை ஒட்டா தொதுங்கிடும் போதிலே
மத்தவை சேர்தல் சிறப்பு //

//கனியிலா வெண்பாக்கள் நற்சுவை ஈய
இனியெதற்கு இங்கே கனி //

இதெல்லாம் ஓக்கே

//காய்ச்சீ ரடுத்துத் தொடர்வது நேரென
வாய்த்திட்ட வெண்பா விதி//

இதுல நீங்க விட்ட ஒற்றுக்களை நான் சேர்த்தாச்சு.

said...

//மருளும் = எதுகை புட்டுக்கிச்சி :D //

போன தடவை போட்டப்ப சரியா இருக்குன்னு சொன்னீங்க! :) சும்மா நம்ம ஜிரா போன பதிவுல போட்ட சாயலில் இருந்ததால எடுத்துப் போட்டேன். உண்மையில் இதுதான் நான் முதலில் எழுதிய வெண்பா. தளை தட்டலை சரி செய்ததுக்கு நன்றி!

said...

//அருமையான விளக்கத்துக்கு நன்றி!!//

கப்பி, நன்றிக்கு நன்றி!

//இப்ப ஓரளவு புரிஞ்சாலும் திரும்ப திரும்ப படிச்சாத்தான் மண்டையில நிக்கும்..படிக்கறேன் :)//

படியுங்க, அப்படியே எதாவது சந்தேகம் இருந்தாக் கேளுங்க. ரெண்டு வரி எழுதிப் பாருங்க. அப்போதான் வெண்பா எழுத வரும்!

said...

//மருளும் = எதுகை புட்டுக்கிச்சி :D //

போன தடவை போட்டப்ப சரியா இருக்குன்னு சொன்னீங்க! :)//


அப்பு... இதுல இரண்டாவது எழுத்தை மட்டும் பாத்துட்டு விட்டுடறோம்.. முதல் எழுத்து ஒத்த ஓசையுடன் வரணுமே.. அதான் எதுகை புட்டுக்கிச்சின்னு சொன்னேன் ;) நாமும் கத்துக்கறோமில்ல

said...

என்னய்யா கூட்டம் கம்மியா இருக்கு கொத்ஸு,
எல்லாரும் இன்னமும் என்ன மாதிரியே வெண்பாவ பாத்து மிரண்டு ஓடுறாங்களோ?

said...

வாங்க ராம்ஸ். போன பதிவுல ஆர்வமா வந்த மக்கள்ஸ் எல்லாரையும் கூட காணுமே! ரொம்ப சொதப்பிட்டேனோ? :(

said...

//போன பதிவுல ஆர்வமா வந்த மக்கள்ஸ் எல்லாரையும் கூட காணுமே! ரொம்ப சொதப்பிட்டேனோ? :(//

நீங்க சொதப்பல.. எங்களுக்குத் தான் ஒண்ணாங்கிளாஸ் ரொம்ப சுலபமா இருந்துச்சு.. இந்த ரெண்டாங்கிளாஸ் தான்.. :(

said...

விட்டுடுங்க ..
நான் ஆட்டைக்கு வரலைங்க..
அவ்வள்வு இல்லைங்க மண்டைக்குள்ள இதல்லாம் வாங்கி வச்சிக்கிறதுக்கு..

வர்ட்டா... :(

said...

நீங்க நல்லாத்தான் சொல்லித் தரீங்க.
இருந்தாலும்..
இலக்கணமில்லாமல் வாழ்க்கையே கூடாது என்று சொல்கிறோம்.
இலக்கணமில்லாமல் எப்படி
தமிழ் எழுத முடியும்.
ஏன் உங்கள் இருவரைப் போல எல்லோரும் இலக்கணம் கற்கவில்லை?வெண்பா எழுத மட்டுமே இது தெரிய வேண்டுமா.

இப்படி கேட்டுக் கொண்டே போனால்,
வெண்பா நீங்கள் எழுதுங்கள்,நாங்கள் படிக்கிறோம் என்று சொல்லலாம்.
உங்கள் விவாதம் அத்தனை மும்முரமாகப் போகிறது.:-)

said...

நன்றே நடந்துவந்த பெண்பாப் பாடம்
இன்றே கடைசியென்றொரு அறிவிப்பு மின்றி
நின்றே போனதேனோ அதைத் தாமதம்
இன்றி இன்றே உரை

பி.கு: அலகு, சீர், இலக்கணம் எல்லாம் பார்த்து எழுதலேங்கோ. வெறும் மனம் போன கிறுக்கல்தானுங்கோ. எதோ புலியைப் பார்த்து நானும் சூடு போட்டுக்கலாமென்று ... ஹி ஹி

said...

நன்றே நடந்துவந்த பெண்பாப் பாடம்
இன்றே கடைசியென்றொரு அறிவிப்பு மின்றி
நின்றே போனதேனோ அதைத் தாமதம்
இன்றி இன்றே உரை

பி.கு: அலகு, சீர், இலக்கணம் எல்லாம் பார்த்து எழுதலேங்கோ. வெறும் மனம் போன போக்கில் கிறுக்கல்தானுங்கோ. ஏதோ புலியைப் பார்த்து நானும் சூடு போட்டுக்கலாமென்று ... ஹி ஹி

said...

//(ஒரு குறிப்பு : குறள் என்பது இரண்டு அடியில் எழுதப்படும் வெண்பா. இதை நிறையா பேரு ஒண்ணே முக்கால் அடி அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க. ஆனா அது சரி கிடையாது. இது இரண்டு அடிதான். இரண்டாவது அடியின் நீளம் மூன்று சீர்கள். ) //


ஓரடி முக்கால் குறள்வெண் பாவே
ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா
மூவடி முக்கால் அளவியல் வெண்பா
பலவடி முக்கால் பஃறொடை வெண்பா
பஃறொடை மிக்கது கலிவெண் பாவே!

-தொல்காப்பியம்!


ஒண்ணே முக்கால் அடி என்பதும் சரிதானோ?