Sunday, February 25, 2007

விஸ்டாவா வேண்டாமா - 2

இதன் முதல் பாகம் இங்கே.

(எந்த நேரத்துல இதை எழுதத் தொடங்கினேனோ தெரியல, கழுத்தை அமுக்குற அளவுக்கு வீட்டுலயும் அலுவலகத்துலயும் ஒரே வேல. தாமத்துக்கு மன்னிச்சுங்குங்க).


நெறைய பேரு விண்டோஸ்-ல அவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ஸ மின்னஞ்சல் அனுப்பப் பயன்படுத்திக்கிட்டு இருக்கிறாங்க. விஸ்டால, அவுட்லுக் எக்ஸ்பிரஸ் கிடையாது, அதுக்குப் பதிலா விண்டோஸ் மெயில் என்று ஒரு சமாச்சாரம் வந்திருக்கு. இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ஸ விட மிகச் சாதாரணமாகத்தான் இருக்கிறது. (நான் எந்தக் காலத்துலயும் அ.எ. பயன்படுத்தியது கிடையாது, எனவே இதுல நான் சொல்றதுல தப்பு இருக்கலாம். ஆனா, இங்க என்னோட ப்ரெண்ட கேட்டுப்பாத்ததுல அவரும் அப்படித்தான் சொல்றார்). சும்மா பேருக்கு ஒரு மின்னஞ்சல் பொதின்னுதான் விண்டோஸ் மெயில சேத்துருக்காமாதிரி தெரியுது. இதுகூடவே மைக்ரோஸாப்ட் விண்டோஸ் லைவ் மெயில் டெக்ஸ்க்டாப் (Windows Live Mail Desktop) அப்புடின்னு தனியா ஒன்னை அறிமுகப்படுத்தியிருக்காங்க. (விஸ்டாவோட வராது, நீங்கதான் தனியா இறக்கிப் போட்டுக்கனும்). இது இன்னும் சோதனைலதான் இருக்கு. இந்த லைவ் டெக்ஸ்டாப் ஹாட்மெயில் கணக்கு, மத்த pop கணக்கு எல்லாத்தையும் ஒன்னா ஒரே இடத்துல படிக்க வசதி தரும். கொஞ்ச நாளுக்கப்புறம் ஹாட்மெயில முழுக்க நிறுத்திடப்போறோமுன்னு மைக்ரோஸாஃப்ட் சொன்னது, ஆனா அதுக்கு நெறையா எதிர்ப்பு இருந்ததால இப்ப தொடர்ந்து இருக்கும்னு சொல்லிருக்காங்க. ஆனா கூடுதல் வசதியெல்லாம் வேணும்னா லைவ் மெயில் டெக்ஸ்டாப்பை இறக்கிப் போட்டுத்தான் ஆகனும். அதுல RSS feed சேத்துப் படிக்க முடியும். அதுக்கூடவே ஃபோட்டோ மெயில்-னு ஒரு வசதியைப் பெருசா விளம்பரிக்கிறாங்க. உங்க கணினில இருக்கெற படத்தை இதுவழியா நேரடிய ஒரு நண்பருக்கு அனுப்பமுடியும் (இதுபத்தி பின்னாடி எழுதுறேன்). - முக்கியமான விசெயம், லைவ் மெயில்ல வர்ற மின்னஞ்சல் எல்லாம் மைக்ரோஸாஃப்டால நேரடியா வைரஸ் சோதனைக்கு உள்ளாகி, சுத்தப்படுத்திதான் வரும். இதுக்கெல்லாம் ஒரு விலை இருக்கு - லைவ் டெக்ஸ்டாப்ல வலதுப்பக்கம் முழுக்க வர்ற விளம்பரங்கள நீங்க சகிச்சுக்கனும்.

இந்த வைரஸ் களைந்த, செய்தியோடை சேர்ந்த டெஸ்க்டாப்ட் மெயில் கூகிள், யாகூ ரெண்டோட போட்டியையும் சமாளிக்க மைக்ரோஸ்ஃப்ட் கையாள்ற உத்தி. ஆனா, லைவ் மெயில்-ல இருக்கிற எல்லா வசதியையும் கூகிள் மெயில் வச்சுக்கிட்டு தண்டர்பேர்ட் மாதிரி ஒரு இலவச பொதியைச் சேர்த்து சமாளிச்சுக்கலாம். விளம்பரத்தைப் பாக்க வேண்டிய அவஸ்ய நஹி ஹை (அடுத்த ரூம்ல பசங்க Multiculture TV-ல மஹாபாரத் பாத்துக்கிட்டு இருக்காங்க). சொல்லப்போனா இந்த கூகிள் மெயில்-தண்டர்பேர்ட் பலவிசயத்துல மைக்ரோஸாஃப்ட் லைவ் மெயில தூக்கிச் சாப்புடும்.

இதுநாள் வரைக்கும் விண்டோஸ்-ல இல்லாம இருந்த நாட்காட்டி வசதி விஸ்டா-ல புதுசா வந்துருக்கு. ஆப்பிள் கணினில இந்த காலண்டர் வசதி ரொம்பப் பிரபலம். நான் சோதிச்சுப் பார்த்தவரைக்கும் இந்த நாட்காட்டி நல்லாத்தான் இருக்கு. இதுக்கு முக்கிய காரணம் மைக்ரோஸாஃப்ட் இதுல புதுசா எதுவும் செய்ய முயற்சிக்கல. காலண்டர் விஷயத்துல இப்ப இருக்கிற தரம் - ical என்ற வரையறை. விண்டோஸ் காலண்டர் இதை முழுசா ஏத்துக்கிட்டு இருக்கிறது மகிழ்ச்சியான விஷயம். அதாவது, இந்த காலண்டர்-ல இணையம் மூலமா கிடைக்கிற கூகிள் காலண்டர், யாகூ (இன்னும் எங்க ஆய்வகத்துல நான் நிறுவியிருக்கிற திறமூல Zimbra) போன்ற ஐ-கால் தரத்தைப் பயன்படுத்துற எல்லா பொதிகள்லேந்தும் நேரடியா படிக்க எழுத முடியும். இது கட்டாயம் ஒரு நல்ல வசதிதான்.

நான் MSN Messenger எல்லாம் பயன்படுத்துறது கெடையாது. இதுவும் இப்பொழுது விண்டோஸ் லைவ் மெஸெஞ்சர் என்று புது மொந்தையில் அடைக்கப்பட்ட பழைய கள்ளாகியிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு யாகூ பயன்படுத்திக்கிட்டு இருந்தேன், அப்புறம் கூகிள் மெஸேஞ்சர். எனவே இதைச் சோதித்துப் பார்க்கும் வழி கிடையாது.

இன்னொரு புது விஷயம் - விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) அப்படின்னு ஒரு புது விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்காங்க. இதைக் கொண்டு உங்க காமெராவுலேந்து போட்டோவை இறக்கிக்க முடியும். ஓரத்தை வெட்டுறது மாதிரி சின்னச் சின்ன திருத்த வேலைகளைச் செய்ய முடியும். போட்டோ தரத்துக்கு நேரடியா அச்சிட முடியும். அப்புறம் மேல சொன்ன விண்டோஸ் லைவ் மெயில் கொண்டு படத்தை நேரடியா உங்க நண்பருக்கு அஞ்சலிட முடியும். இப்ப மிகப் பிரபலமாக இருக்கிற டிஜிட்டல் காமெராக்களைக் கையாள மைக்ரோஸாஃப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் புது வசதி இது. ஆப்பிள் கணினிகளில் இருக்கும் iPhoto- என்ற Digital Photography Workflow பொதியை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. காமெராக்களிலிருந்து படங்களை இறக்குவதிலிருந்து, இவற்றை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொள்வது, சிறு திருத்தங்களைச் செய்துகொள்வது, ஒரு இணைய தளத்தில் பிறர் பார்க்க ஏற்றிவைப்பது, அச்சிடுவது அல்லது வேறு அச்சிடும் நிறுவனத்துக்கு அனுப்புவது என்று போட்டோ சம்பந்தமான அனைத்து விஷயங்களை ஒன்றாக கையாளும் வசதிகள் இதுபோன்ற Workflow பொதிகளுக்கு அவசியம்.

ஆனா இதுலயும் எதுவும் விசேஷமா இருக்கிறாமாதிரி தெரியல. நான் அறிமுகப்படுத்தின நாள்லேந்து கூகிள் பிகாஸாவைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது விண்டோஸ் போட்டோ காலாரியை விட மிகத் தரமான பொதி. பிகாஸா-வைக் கொண்டு நிறைய திருத்த வேலைகளைச் செய்ய முடியும். பிகாஸாவுல இருக்கிற ஒற்றை பட்டனைக் கொண்டு போட்டோக்களைத் துல்லியமாக மேம்படுத்த முடிகிறது. (பிகாஸா பற்றிய என்னுடைய விரிவான விமர்சனம் இங்கே: பகுதி-1, பகுதி-2). இதுமாதிரி முன்னேற்றங்கள் எதுவும் விஸ்டாவில் வரவில்லை. பிகாஸாவுக்கு அடுத்தபடியாக முற்றிலும் திறமூலமான BlueMarine என்ற பொதியைச் சொல்லலாம். ஜாவா-வினால் இயக்கப்படும் இந்தப் பொதி லினக்ஸ், ஆப்பிள், விண்டோஸ் போன்ற எல்லா இயக்குதளங்களிலும் இயங்கும். ஆனால் எனக்குப் பொதுவாக முற்றிலும் ஜாவா அடிப்படையினால் இயங்கும் பொதிகளைப் பிடிக்காது. எனவே முழுமனதுடன் ப்ளூமரைன் பொதியைப் பரிந்துரைக்க முடியவில்லை. ப்ளூமரைனின் முக்கிய விஷயம் நீங்கள் எங்கே படத்தை எடுத்தீர்கள் என்று GeoTagging செய்துகொள்ள முடியும். அத்துடன் கூடவே ஒரு காக்கையின் படத்தை எடுத்தால் அது எப்படியான காக்கை என்று குறிப்பையும் எழுதிக்கொள்ள முடியும்.

படத்துக்கு அடுத்தபடியா பாட்டு. விண்டோஸ் மீடியாவின் அடுத்த வடிவம் வந்திருக்கிறது. இது Digital Audio Workflow Software. அதாவது சிடிக்களிருந்து எம்பி3 (அல்லது wma) வடிவிற்குக் கணினிக்காக சுருக்கிக் கொள்வது, பாடல்களைப்பற்றிய தகவல்களை id3 tag குறிப்புகள் மூலம் எழுதிக் கொள்வது, பாடல்களுடன் சிடியின் மேலட்டைப் படங்களை இணைப்பது, ஆல்பங்களை வகைப்படுத்திக்கொள்வது, கையடக்க டிஜிட்டல் இயக்கிகளுக்கு இவற்றை மாற்றுவது, எம்பி3 பாடல்களை குறுவட்டில் பொறிப்பது, என்று பாடல்கள் சம்பந்தமான அணைத்து வேலைகளையும் கையாண்டாக வேண்டும். நான் அதிகம் விண்டோஸ் மீடியாவைப் பயன்படுத்துவதில்லை. நீண்ட நாட்களுக்கு WinAmp ஐப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது பல தரமான திறமூல சிறு பயன்பாடுகள் கிடைக்கின்றன. குறிப்பாக CDex ஐத்தான் இப்பொழுது நான் அதிகம் பயன்படுத்துகிறேன். மிகச் சிறிய பொதியான சிடிஎக்ஸ் மிகத் தரமான எம்பி3-க்களை உருவாக்குகிறது. விண்டோஸ் மீடியாவின் புதுவடிவத்தால் அதிகப் பயன்கள் ஏதுமில்லை. வடிவமைப்பில் மெதுவாக இது Apple iTunes ஐக் காப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் பாதகமான சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன. (இவற்றைப் பற்றி விரிவாக அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்).

இணையம் உலாவும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பற்றி நான் அதிகம் எழுதப்போவதில்லை. பழைய வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது இதில் கொஞ்சம் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் மோஸிலா ஃபயர்ஃபாக்ஸைவிட இது இன்னும் பாதுகாப்பற்றதாகத்தான் இருக்கிறது. மேலும், பொருத்திகள் (Plugins) வசதியுடன் ஃபயர்ஃபாக்ஸ் மிகமிக சக்திவாய்ந்ததாக உங்களுக்கேற்றபடி மேம்படுத்திக் கொள்ளமுடியும். எனவே இத்துடன் ஒப்பிடும்பொழுது ஐ.ஈ சோடைதான். இத்துடன் கூடவே ஸஃபாரி உலாவியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இத்துடன் இந்த பாகத்தை முடித்துக் கொள்ளலாம். இங்கே நான் சொல்லியிருக்கிற - Windows Mail, Windows Live Mail Desktop, Windows Calendar, Windows Photo Gallery, Windows Media Player எதிலுமே பூமியைப் புரட்டிப்போடுகின்ற சமாச்சாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இலவசமாகக் கிடைக்கும் பல பொதிகள் இவற்றைவிட மிக அற்புதமானவை). இவற்றின் மாற்றுகள் குறித்த ஒருபட்டியலைத் தருகிறேன்.

  • Windows Mail - Mozilla Thunderbird
  • Windows Live Messenger - Google Messenger, Yahoo! Messenger.
  • Windows Live Mail Desktop - GMail/Thunderbird Comination, or Yahoo!Mail/Thunderbird Combination
  • Windows Calendar - Mozilla Sunbird (standalone client) or Thunderbird Calendar Plugin
  • Windows Photo Gallery - Google Picassa, BlueMarine
  • Windows Media Player - WinAmp, iTunes and multitudes of Open Source programs
  • Internet Explorer - Mozilla Firefox (and its plugins), Safari

இப்படி எல்லா விஷயங்களிலும் விஸ்டாவின் அடிப்படை மேம்பாடுகள் ஏற்கனவே பிற (பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கும்) செயலிகளில் அற்புதமாகச் செயல்படுகின்றன. எனவே, என்னைப் பொருத்தவரை இவை எதுவுமே அதிகம் என்னைக் கவரவில்லை.

15 comments:

said...

பல நல்ல தகவல்கள்,
புதிய ஐ ஈ பிஷ்ஷிங் பிஷ்ஷிங் னு ரொம்ப நேரம் எடுத்துக்கறது இம்சையா இருக்கு ஏதாச்சும் புதுசா செஞ்சிருப்பானுங்கன்னு பாத்தா பயர்பாக்ஸ் பாத்து அப்படியே டிட்டோ காப்பி.

மத்ததெல்லாம் ட்ரை பண்ணனும்.

நல்ல பதிவு.

said...

Nalla pathivu. ini adikadi ungkal pathivukku vara vEndum.

said...

//என்னைப் பொருத்தவரை இவை எதுவுமே அதிகம் என்னைக் கவரவில்லை.//

இதுக்கு இவ்வளவு அறுக்கணுமா?

said...

விஸ்டாவில் இவ்வளவு மேட்டர் இருக்கா? நம்மை மாதிரி ஆப்பிள், லினக்ஸ் எல்லாம் தெரியாத முழு முழு விண்டோஸ் அடிமைகளுக்கு இதெல்லாம் தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்புதான். என்ன சொல்லறீங்க?

said...

தம்பி - ஃபயர்ஃபாக்ஸ் plugin எல்லாம் பயன்படுத்திகிட்டு இருக்கறதால, ஐ.ஈ சுவாரசியமே இல்லாம போயிடுச்சி.

அடடா! - நன்றி, நேரம் கெடைக்கிறப்ப நம்ம வூட்டுக்கு வாங்க.

எஸ்.கே - ஆமாங்க, எழுதியிருக்க வேண்டாம்தான் (நீங்களும் படிச்சிருக்க வேண்டாம்தான்). ஆனா ஜனங்க 450 டாலர் வரைக்கும் கொடுத்து வாங்கப் போறாங்களேன்னுதான் கொஞ்சம் வெபரமா எழுத வேண்டிருந்திச்சு. உங்க பொன்னான நேரத்த வீணடிக்க வைச்சதுக்கு மாப்பு கேட்டுக்கிறேன்.

said...

கொத்ஸ் - என்ன லினக்ஸ் தெரியாதுன்னு சொல்றீங்க! உபுண்டு லினக்ஸ் லைவ் சிடி-ன்னு கெடைக்கிது. மொதல்ல இறக்குங்க. உங்க பெட்டில எதையும் மாத்தாம அப்புடியே சி.டீலேந்து ஓட்டிப் பாக்க முடியும். புடிச்சா ஒரு பொத்தான அமுக்கி நெரந்தரமா போட்டுக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க, கட்டாயம் மயங்கிடுவீங்க.

said...

அட என்னங்க வெங்கட் நீங்க!

அந்த கடைசி வரியே ;நச்;சுன்னு இருந்துச்சு என்பதை அப்படிச் சொன்னேன்.

வெங்கயத்தை உரிக்கற மாரி உரிச்சு கடைசில ஒண்ணுமில்லேன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு அது!
அதான்.

நீஙக டென்ஷன் ஆகாதீங்க.
கொத்ஸ் எழுதினார்னு நெனைச்சு கொஞ்சம் உரிமையா சொல்லிட்டேன்.
நீங்களும் மன்னிச்சுக்கோங்க!
ரெண்டு பேரும் சீட்டி... ஓக்கேவா!
:))

said...

ரெண்டாவது நானெல்லாம் டெக் புலி இல்லீங்க!
அதனால கொஞ்சம் போர்[bore] அடிச்சது.
சரி, கொத்ஸுகிட்ட சொல்லலாம்னு சொல்லிட்டேன்.
வர்ட்டா!
ஒண்ணும் மன்ஸுல வெச்சுக்காதீங்க!
:))

said...

//விஸ்டாவா வேண்டாமா//
வேண்டாம் :)

firefox,thunderbird,picasa,gmail இவற்றிலுள்ள வசதிகளுடன் ஒப்பிடும்போது விஸ்டாவிலுள்ளதெல்லாம் தூசி.
இவற்றில் extensions,themes வசதி மட்டுமல்ல, இன்னும் பல திறந்த மூல மென்பொருட்களில் பல portable applications ஆகக் கிடைக்கின்றன.
(www.portableapps.com)
போகுமிடமெங்கும் browser ஐயும் email client ஐயும் கொண்டு செல்ல முடியுமெனில் இதைவிட வேறென்ன வேண்டும்?
இப்படியே பல மென்பொருட்கள் filezilla,gimp,7zip,sunbird,.. portable applications ஆக இறக்கிக்கொள்ள முடியும்

//இலவசக்கொத்தனார் said...

விஸ்டாவில் இவ்வளவு மேட்டர் இருக்கா?//
இவ்வளவு களவு பண்ணியிருக்காங்களா என்று கேளுங்கள்..

said...

எஸ்.கே.

நாந்தேன் அவசரப்பட்டுடேன் போலருக்கு. சும்மா லெஃப்ட்ல உட்ருங்க.

said...

பல நல்ல தகவல்கள். நன்றி.

பொறுத்தார் பூமி ஆள்வார் என்கிறெர்கள்.

Waiting to see your complete review - with all + & (-).

Your way of explaining features of Vista and thier counter parts in open source world is excellant.

Thanks again for through review.

D. Senthil

said...

வெங்கட். என்னிடம் எக்ஸ்பி ஹோம் உள்ளது. லேப்டாப் கூடவே அது வந்தது. உபுண்டுவை இன்ஸ்டால் செய்வதால் ஒன்றும் கான்ப்ளிக்ட் வராதே?

said...

அடடா

வராது. தைரியமாக செய்யுங்கள்.

said...

கொத்ஸ் - என்ன லினக்ஸ் தெரியாதுன்னு சொல்றீங்க! உபுண்டு லினக்ஸ் லைவ் சிடி-ன்னு கெடைக்கிது. மொதல்ல இறக்குங்க. உங்க பெட்டில எதையும் மாத்தாம அப்புடியே சி.டீலேந்து ஓட்டிப் பாக்க முடியும். புடிச்சா ஒரு பொத்தான அமுக்கி நெரந்தரமா போட்டுக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க, கட்டாயம் மயங்கிடுவீங்க//

உபுண்டு லிங்க் தாங்க சார்

said...

விஸ்டா பற்றி ஜோயல் இப்படி சொல்கிறார்
I've been using Vista on my home laptop since it shipped, and can say with some conviction that nobody should be using it as their primary operating system -- it simply has no redeeming merits to overcome the compatibility headaches it causes. Whenever anyone asks, my advice is to stay with Windows XP (and to purchase new systems with XP preinstalled).

உபுண்டு(www.ubuntu.com) கணிணியில் நிறுவாமல் குறுந்தட்டிலிருந்தே ஓட்டலாம். அல்லது பார்ட்டிஷன் பண்ணி நிறுவி ஓட்டலாம். அல்லது உங்கள் விண்டோஸில் vmware server மூலம் விண்டோஸின் உள்ளேயே நிறுவி ஓட்டலாம்(கொஞ்சம் வேகம் குறைவோ?)