Sunday, April 15, 2007

Global Warming - ஒரு பாமரனின் பார்வையில்

Global Warming, அதாவது புவி வெட்பநிலை அதிகரிப்பு என்பது இப்போ எல்லாராலும் பேசப்படும் ஒரு விஷயமா இருக்கு. இது பத்தி முழுசா சொல்ல ஒரு பெரிய தொடரே வேணும். இந்தப் பதிவு ஒரு அறிமுகம் மட்டுமே. இந்த விஷயத்துக்குள்ள போறதுக்கு முன்னாடி, ஒரு சின்ன புவியியல் வகுப்பு.


சூரியனைச் சுத்தி இவ்வளவு கோள்கள் இருக்கும் பொழுது நம்ம பூமியில் எப்படி உயிரினங்கள் தழைத்து செழிக்க முடிந்ததுன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா? அதுக்கு முக்கியமான காரணம் நம்ம உலகின் தட்பவெட்ப நிலைதான். இந்த மாதிரி தட்ப வெட்பநிலை இருப்பதால்தான் நம்ம பூமியில் இருக்கும் தண்ணீர் எல்லாம் ஆவியாகப் போகாமல் நம் வாழ்வுக்கு வசதியாய் இருக்கிறது. நீரின்றி அமையாது இவ்வுலகு அப்படின்னு எல்லாரும் படிச்சு இருக்கிறதுனால இதுக்கு மேலச் சொல்லத் தேவையில்லை. அதே சமயம் ரொம்ப குளிராப் போயி நம்மால இங்க இருக்கவே முடியாமப் போகாம ஒரு மிதமான தட்பவெட்பநிலை இருக்கு.

இப்படி இருக்கக் காரணம் என்னன்னு யோசிச்சா அதுக்கு முக்கியமான காரணம் நம்மை சுற்றி இருக்கும் இந்த காற்றுவெளிதான். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன் டையாக்ஸைட் எனப் பல வாயுக்குள் எல்லாம் கலந்து செய்த கலவை இந்த காற்றுவெளி.இதுல கரியமில வாயு மற்றும் சில வாயுக்கள் சேர்ந்து என்ன செய்யறாங்கன்னா, சூரியக் கதிர்களால் நம் பூமி சூடாகுது இல்லையா, அந்த சூடு மொத்தமும் அப்படியே போய்விடாமல் இருக்க உதவுகின்றன.

இயற்கையாக ஏற்படும் மாற்றங்களினால் காற்றுவெளியில் இந்த வாயுக்களின் சதவிகிதம் மாறுகிறது. அதனால் நம் புவியின் தட்பவெட்ப நிலையும் மாறுகின்றது. பல முறை நீண்ட உறைபனிக்காலமும் (Ice Age) அதன் பின் உண்டாகும் மாற்றங்கள் எல்லாம் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். இது போன்ற சுழற்சி இயற்கையாக ஏற்படுவதுதான். ஆனால் இப்பொழுது மனிதன் அதிக அளவில் எரிபொருட்களை எரிப்பதாலும், காடுவெளிகளை அழிப்பதாலும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷனர் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் நவீன இரசாயனங்களாலும் காற்றில் நாம் முன் சொன்ன வாயுக்களின் சதவிகிதம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் இன்று பூமியில் சராசரி வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத்தான் புவிவெட்பநிலை அதிகரிப்பு எனச் சொல்கின்றனர். இதனால் இன்று என்ன நடக்கிறது எனப் பார்க்கலாமா?

  • கடந்த நூறு ஆண்டுகளில் நம்ம பூமியின் சராசரி வெப்பம் உயர்ந்திருக்கும் அளவு 0.74 ± 0.18 °C (1.3 ± 0.32 °F). கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமியில் 0.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்து வருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் வளி ஆய்வுக் குழு தலைவர் ஜேம்ஸ் ஹான்சென் தெரிவித்துள்ளார்.
  • கேட்டகிரி 4 அல்லது 5 எனத் தரப்படுத்தப்பட்ட சூறாவளிகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காகி இருக்கிறது.
  • கடந்த பத்தாண்டுகளில் க்ரீன்லாந்தில் உருகிய பனிப்பாறைகளின் அளவு இரு மடங்காகிவிட்டது.
  • இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டம் 4 முதல் 8 இஞ்சு வரை உயர்ந்திருக்கிறது
  • உலகின் பல பகுதிகளில் மழையளவு சராசரிக்கு அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்யத் தொடங்கி இருக்கிறது.
  • மலைப்பகுதிகளில் வராத மலேரியா போன்ற நோய்கள் தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 7000 அடிக்கு மேல் பரவத் துவங்கி இருக்கிறது.
  • கிட்டத்தட்ட 300 விதமான செடிவகைகளும் பறவை மிருகங்களும் வெட்பம் தாங்காமல் துருவப் பகுதி நோக்கி நகரத் தொடங்கி விட்டன. (20 ஆம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டிலும் 1700 தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி உயிரினங்கள் சராசரியாக 6.5 கிலோ மீட்டர் துருவ முனைகளை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாக நேச்சர் என்ற பத்திரிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.)
என்ன படிக்கும் பொழுது அப்படி ஒன்றும் கலவரப்படும் விஷயம் மாதிரி தெரியலையே, இதுக்கா இம்புட்டு பில்டப் அப்படின்னு தோணுதா? இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போச்சுன்னா என்ன ஆகும் அப்படின்னு பார்க்கலாமா?

  • 1990 முதல் 2100 வரை சராசரி வெப்பம் 1.1 முதல் 6.4 °C வரை (2.0 முதல் 11.5 °F வரை) உயரலாம். (இப்பவே 100 டிகிரி அடிக்கும் வெய்யிலோட இதையும் கூட்டிக்கிட்டு பாருங்க.)
  • துருவப் பனிப் பாறைகள் தொடர்ந்து உருகுவதால், கடல் மட்டம் 20 அடி முதல் 35 அடி வரை உயரலாம். (மெரீனா பீச்சை நினைச்சுப் பாருங்க. அதைவிடுங்க, இப்பவே கடல்மட்டத்துக்குக் கீழ இருக்கும் ஹாலந்து நாட்டின் நிலை?)
  • 2050ஆம் ஆண்டிற்குள் ஆர்டிக் கடலில் பனிப்பாறைகளே இல்லாமல் போகும்.
  • உலகில் வெப்ப அலைகள் (Heat Waves) மிக அதிகமாகவும் வீரியத்தோடும் இருக்கும்.
  • வறட்சியும் காட்டுத்தீக்களும் மிகவும் அதிகமாகும்.
  • அடுத்த 25 ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாற்றங்களால் வருடத்துக்கு 3,00,000 பேர்கள் வரை மாண்டு போகலாம்.
  • பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரின வகைகள் இவ்வுலகில் இருந்து மறைந்தே போய்விடும்.
இவையெல்லாம் அடுத்த 100 ஆண்டுகளுக்குள் நிகழும். ஆனால் மனித நடவடிக்கைகளால் உண்டான வெப்பநிலை அதிகரிப்பின் விளைவுகள் அதற்குப் பின் பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தொடருமாம். இப்போ கேட்கவே பயமா இருக்கா? இதுதாங்க புவி வெட்பநிலை அதிகரிப்பு.

ஆனா எந்த விஷயத்துக்கும் மாற்றுக் கருத்து இருப்பது போல இதுக்கும் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் ஆட்கள் இருக்காங்க. அவங்க என்ன சொல்லறாங்கன்னா

  • புவி வெட்ப அதிகரிப்பு என்பது ஒரு இயற்கை நிகழ்வு. பூமியில் இது போன்ற நிகழ்வு முன்பு பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இதனை நம்மால் தடுக்க முடியாது என்று ஒரு வாதம்.
  • கரியமில வாயு போன்றவை அதிகரிப்பது இயற்கை நிகழ்வு. எரிமலைகள், உயிரினங்கள், மரம் செடிகள் என அனைத்துமே கரிமல வாயுவை வெளியிடுகின்றன. எரிபொருட்களை எரிப்பதால் உண்டாகும் கரிமல வாயுவின் அளவு மிகவும் கம்மிதான் எனவும் சொல்கிறார்கள்.
  • இந்த வாயுக்களை விட வெப்பத்தை அதிகமாக்குவது நீராவிதான். இதனை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது என்பது மற்றொரு வாதம்.
  • கடந்த நூற்றாண்டில் வெப்பம் அதிகமானாலும் கடந்த 10 - 15 வருடங்களாக வெப்பநிலை ஏறவில்லை, குறைகிறது என வேறு ஒரு கருத்து.

இப்படி இரு புறமும் கருத்துகள் வெளியிடுவதும் அதற்கு மறுப்புகள் வருவதுமாக இருக்கிறது. இது சம்பந்தமாக உங்களுக்கு மேல் விபரங்கள் தேவை என இருந்தால் கீழ்க்கண்ட இந்த சுட்டிகளைப் பாருங்கள்.

  1. விக்கிப்பீடியாவில் Global Warming
  2. அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் துணையுடன் எடுக்கப்பட்ட An Inconvenient Truth என்ற படத்தின் வலைத்தளம்
  3. புவி வெட்பநிலை அதிகரிப்பு பற்றிய ஒரு அருமையான வலைத்தளம்
  4. புவி வெட்ப நிலை அதிகரிப்பு பற்றிய மாற்றுக்கருத்து தளம் 1
  5. புவி வெட்ப நிலை அதிகரிப்பு பற்றிய மாற்றுக்கருத்து தளம் 2
  6. மாற்றுக் கருத்து தவறென்று சொல்லும் ஒரு வலைத்தளம்
கடைசியாக ஒன்று. நம் நடவடிக்கையால் சிறிதளவேனும் இந்த புவி வெட்ப அதிகரிப்பை குறைக்க வழி வகைகள் இருக்கும் பொழுது அதனைச் செய்ய வேண்டியது நம் கடமை அல்லவா? அந்த வழிவகைகளைப் பற்றி நம் சக வலைப்பதிவர் இராதா ஸ்ரீராம் அவர்கள் எழுதி இருக்கும் பதிவு இது. இவற்றைச் செய்து நம் பூமியைக் காக்கும் முயற்சியில் நம் சிறுதுளியைச் செய்வோமே.

20 comments:

said...

முதலாண்டு கொண்டாட்டங்களை புவி வெட்பநிலை அதிகரிப்பு பற்றிய விழிப்புணர்வு வாரம் எனக் கொண்டாடும் வ.வா.சங்கத்திற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

பதிவு கொஞ்சம் பெரிதாகிப் போய் விட்டதற்கு மன்னிக்கவும். இன்னும் எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன. தந்திருக்கும் சுட்டிகளில் சென்று பார்த்தால் மேலதிக விபரங்கள் கிடைக்கும்.

said...

பயனுள்ள பதிவொன்றை சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்திற்கென சமர்ப்பித்த கொத்தனார் அவர்களுக்கு மிக்க நன்றி!

said...

சூப்பர் பதிவு தான். ஆனால் இன்னும் 2 தடவை படிச்சாதான் என் மரமண்டைக்கு புரியும், படிச்சுட்டு வாரேன்!

said...

சங்கத்தின் ஆண்டு விழா முன்னிட்டு இதுப் போன்ற ஒரு நல்லப் பதிவை எல்லோரும் புரிந்துக் கொள்ளும் படி எழுதி அளித்த விக்கிப் பசங்க குழுவிற்கும், கொத்ஸ்க்கும் வ.வா.சங்கத்தின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

said...

நான் சொன்னா கேட்கவாபோது
இந்த "Global Warming "


இதெல்லாம் மனிதனால் சரி செய்ய கூடியதல்ல

இந்த பிரபஞ்சம் தானாகவே தனக்கு வேண்டியதை சரி செய்யும்..!!!!



(மின்னலு என்ன செல்லுறாங்கனு புரிஞ்சுதான் எழுதிரியா..)

"Global Warming - ஒரு பாமரனின் பார்வையில்"

said...

சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

இது தொடர்பாக Michael Crichton (authoer of Jurassic Park)ஒரு அருமையான கதை - State of Fear - எழுதியிருக்கிறார். நிறைய தகவல்கள். ஆணித்தரமான வாதங்கள். படிக்க வேண்டிய புத்தகம். மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்.

said...

கொத்ஸ்,

அட்டகாசமான பதிவு......

சங்கத்து அறிவிப்புக்காக இராபகலாக உழைத்து இந்த பதிவை இட்டு நம் சங்கத்துக்காக அதை சமர்பணம் செய்தப்படியால் உங்கள் கையில் இருக்கும் காலியான சோடாவுக்கு பதிலாக ஜில் ஜில் ஜிகர்தண்டா விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்பதை சங்கத்து சிங்கங்களின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்... :)

said...

மெசெஸ்டருக்கு கூட கண்விழித்து படித்திராத புரோட்டா பாவலர், நட்புகளின் வார்த்தைக்கு மதிப்பு கழித்து இரவு பகல் பாராது கடும் முயற்சினை மேற்க்கொண்டு இப்பதிவினை பதிவு இட்டு இருக்கும் எம் தலைவர் இ.கொ. வை வாழ்த்து வயது இல்லாமல் சங்கத்து சிங்கங்கள் அனைவரும் வணங்கி மகிழ்கின்றோம்.

said...

//நம் நடவடிக்கையால் சிறிதளவேனும் இந்த புவி வெட்ப அதிகரிப்பை குறைக்க வழி வகைகள் இருக்கும் பொழுது அதனைச் செய்ய வேண்டியது நம் கடமை அல்லவா? //

கண்டிப்பாக, முடிந்தவற்றை செய்வோம். முடியாதவற்றை செய்ய முயல்வோம்.

said...

//இது தொடர்பாக Michael Crichton (authoer of Jurassic Park)ஒரு அருமையான கதை - State of Fear - எழுதியிருக்கிறார். நிறைய தகவல்கள். ஆணித்தரமான வாதங்கள்//

ரிப்பீட்டே...

said...

கொடுத்துள்ள சுட்டி அவ்வளவையும் படிக்க இப்ப நேரம் இல்லை,(இரவு 10.11),ஒரு காரியம் பண்ணுகிறேன்,3 மணி நேரம் மட்டும் ஓட வேண்டிய AC ஐ 2 மணி நேரத்துக்கு குறைத்துக்கொள்கிறேன்.
ஏதோ என்னால் முடிந்தது.
குட் நைட்.

said...

நல்ல பதிவு.

புவியியல் வகுப்பு?

ஹூம்........ இப்படி ஆளாளுக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்கய்யா:-)))))

said...

பயனுள்ள பதிவு. நாம எல்லாரும் நிறைய மரம் வளக்கணூம். ப்ளாஸ்டிக் உபயோகிக்கறதைக்குறைச்சிக்கணும். இயற்கையோட இணைந்து வாழக்கத்துக்கணும்

said...

சங்கத்தின் ஒரு வருட கொண்டாட்டத்திற்காக...அருமையான பதிவு எழுதி என்ன மாதிரி பாமரனுக்குகூட Global Warming பத்தி புரியர மாதிரி சொன்ன கொத்ஸ் அவர்களுக்கு நன்றி சொல்லி....நம்ம தல செலவுல மாளவிகா டான்ஸ் ஏற்பாடு பண்ணப்படும்னு அறிவிச்சுக்கறேன் :-)

said...

சிறுதுளி பெருவெள்ளம் நம்மால முடிஞ்சத கண்டிப்பா செய்வோம்...இந்த ஒரு மாசமா காலைல சீக்கிரம் எழுந்து ஷட்டில்ல போயிடுறேன்...இத கண்டினியூ பண்ணனும்னு இந்த கட்டுறை மூலமா மண்டைல அடிச்ச மாதிரி சொன்னீங்க...

said...

ரொம்ப நல்லா வந்திருக்கு கொத்ஸ்!!பயனுள்ல பதிவு !
மக்களிடையே இத பத்தின விழிப்பு கண்டிப்பா வரணும்!! எல்லோருமா சேந்து கொஞ்சமேனும் முயற்சி செஞ்சோம்னா புவி வெட்பநிலையை தள்ளியாவது போடலாம்!!

said...

கணினி தேவை முடிந்ததும் off செய்வது,
தண்ணீர் சிக்கனமாய் செலவு செய்தல்.

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் செஞ்சாலே பெரிய மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்குமாம்.

100 வருஷத்துக்கப்பறம் பாதிப்பு வரும் என்பது போய், இப்போ, 30 வருஷத்துலயே பெரிய பாதிப்பு வரப்ப்போகுதுன்னு சொல்றாங்க (சுனாமி, காட்ரினா). நம்ம வாழ்நாள்ளயே வரப் போகுது. உஷாரா இருந்தா நல்லது.

said...

நன்றியும் வாழ்த்தும் சொன்ன சங்க நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

said...

மின்னல்,

உங்களை மாதிரி ஆளுங்க சொல்லும் மாற்றுக் கருத்துக்களையும் நான் முன் வெச்சு இருக்கேன் பாருங்க.

இது இயற்கையான நிகழ்வு, இதில் நம் பங்கு மிகக் குறைவு அப்படின்னு நினைக்க நீங்க மட்டும் இல்லை. இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க.

எது சரி, எது தவறு அப்படின்னு நமக்கு சரியா தெரியலையே!!

said...

கலவரப்படுத்தக்கூடிய விஷயம் தான்.

பயனுள்ள பதிவு! நன்றி!!

AlGore எழுதின புத்தகம் படிக்க நல்லாதான் இருக்கு!