Thursday, April 12, 2007

குறுங்கோள்கள் என்றால் என்ன?

பொடிசும் பெரிசுமாக இருக்கும் சூரியக்குடும்பத்தின் படத்தைப் பார்த்துவிட்டு பாலா கேட்ட கேள்வி "What is a Dwarf Planet?"

பள்ளிக்கூடத்தின் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள்(Planets) இயங்குகின்றன என்று படித்திருக்கிறோம். புதன், வெள்ளி, பூமி தொடங்கி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று ஒன்பதையும் வரிசைப்படுத்தி சரியாக எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும். இவை எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு ஒரு நீள்வட்டப்பாதையில் (elliptical orbits) இயங்குகின்றன. இப்படிச் சூரியனைச் சுற்றும் கோள்களுக்கும் கோள்கள் உண்டு. துணைக்கோள் அல்லது உபக்கிரகம் என்று அழைக்கப்படும் இவை கோள்களைச் சுற்றி இயங்குகின்றன. உதாரணமாக நிலா பூமியின் துணைக்கோள் (Satellite).

மார்ஸ்க்கும் ஜுபிட்டரும் இடைப்பட்ட சுற்றுப்புறம் கொஞ்சம் கலங்கலானது. அங்கே கோள்கள் துணைக்கோள்களுடன் கூடவே இன்னும் பல குப்பைக் கூளங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு ஒரு தட்டையான மேகக்கூட்டம் போல பல குஞ்சு குளுவான் சமாச்சாரங்களும் சூரினைச் சுற்றி கொண்டிருக்கும் இந்தப் பகுதிக்கு அஸ்ட்ராய்ட் பெல்ட் (Asteroid Belt) என்று பெயர். இதேபோல நெப்ட்யூனைத்தாண்டி ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதற்குக் கூய்ப்பர் பெல்ட் (Kuiper Belt) என்று பெயர். அதற்கு அப்பாலும் எண்ணற்ற சிறு வஸ்துகள் சூரியனை மையமாகக் கொண்டு சுழல்கின்றன, இந்த இடத்திற்கு ஸ்கேட்டர்ட் பெல்ட் (Scattered Belt) என்று பெயர். இங்கே இருக்கும் சமாச்சாரங்களெல்லாம் மிகவும் குளிர்வானவை (சூரியனுக்கு வெகு தொலைவில் இருப்பதால்). கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் (ஜனவரி 2005) கால்டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக் ப்ரௌன் என்பவர் ஹப்பிள் தொலைநோக்கியைக் கொண்டு (Xena) என்ற ஒரு சமாச்சாரமும் இந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதன் விட்டம் 2400 கி.மீ. அன்றைக்குப் பிடித்தது சனியன் - புளூட்டோவுக்கு.

ப்ரௌனின் குழு ஜெனா (Xena) என்று செல்லப்பெயரிட்ட இதற்கு பன்னாட்டு வானியல் குழுமத்தால் UB313 என்று அடையாளமிடப்பட்டது. புளூட்டோவின் விட்டம் 2306 கி.மீ; UB313 ன் விட்டம் அதைவிடக் கிட்டத்தட்ட நூறு கி.மி அதிகம். இந்த நிலையில் இதைப் பத்தாவது கோளாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தார்கள். இதற்குச் சில வருடங்களுக்கு முன்னதாகவே 975 கி.மி விட்டம் கொண்ட இன்னொரு சமாச்சாரம் (இதற்கு செரஸ் என்று பெயரிடப்பட்டது) அஸ்ட்ராய்ட் பெல்ட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. செரஸ் புளூட்டோவைவிட சின்னதாக இருந்ததால் புளூட்டோவின் கோள் அந்தஸ்திற்கு எந்தக் குந்தகமும் விளைந்துவிடவில்லை. ஆனால் ஜெனா அதைவிடப் பெரியதாக இருந்ததால் வந்தது தொந்தரவு. ஜெனாவைப் பத்தாவது கிரகமாக அறிவிப்பதா அல்லது புளோட்டோவைக் கழித்து கோள்கள் எட்டு என்று இரண்டு மார்க் கேள்வியின் விடையை மாற்றி எழுதிவிடலாமா என்று ஆராயப் பன்னாட்டு வானியல் கழகம் ஒரு அறிஞர் குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு அறிவியல் கோட்பாடுகளையும் தரவுகளையும் ஆராய்ந்து குறுங்கோள் என்பதற்குப் பின்வரும் நான்கு வரி வரையறையை விதித்தது;

  1. சூரியனைச் சுற்றி வரவேண்டும் (Should be in orbit around sun)
  2. அதற்குப் போதுமான பொருண்மை இருக்க வேண்டும். அப்படியான பட்சத்தின் அதன் சமநிலை சக்திகள் (உள்ளிழுக்கும் மற்றும் வெளியேறு விசைகளின் சமநிலை) கோள வடிவத்தைத் தரும் (Should be in hydrostatic equillibrium; hence assume spherical shape)
  3. அதைச் சுற்றி இருக்கும் சமாச்சாரங்களுக்கு எந்தத் தொந்தரவும் தரமால் அவற்றையும் அண்மையிலே இருக்க அனுமதிக்க வேண்டும் (should not have cleared its orbit)
  4. வேறெந்தக் கோளுக்கும் துணைக்கோளாக இருக்கக் கூடாது. (Is not a satellite for any other planet)

விதி நான்கின்படி நம் புவியின் சந்திரன், சனிக்கிரகத்தின் டைட்டன் இன்னபிற குறுங்கோள் தகுதியை இழந்துவிடுகின்றன. இவை ஒவ்வொன்றும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றாமல் ஒரு தனிக்கோளை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. (கவனிக்கவும், கோளுடன் சேர்ந்து சுற்றுவதால் இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆனால் இவற்றின் பாதை மையம் சூரியன் கிடையாது). ஒருவகையில் இந்த விதி 4 விதி 1ன் விளக்கம்தான். எதுக்கும் நாளைக்கு கோர்ட்டில் கேஸ் போட்டு ஈரங்கிக்கு நம்மைக் கூப்பிடப்போகிறார்களே என்ற பயத்தில் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லிவிட்டார்கள்.

விதி 2 - ஒரு பொருளுக்கு பொருண்மை அதிகரிக்க அதிகரிக்க அதன் சமநிலை விசைகள் திறம்படச் செயற்பட்டு அவற்றுக்குக் கோளவடிவத்தைத் தருகின்றன. உள்ளிழுக்கும் விசை அதிகமாக இருந்தால் பரப்பில் குழி விழும்; புறவிசை அதிகமாக இருந்தால் கரடுமுரடாகக் கற்கால மனிதனின் ஆயுதங்களைப் போன்ற தோற்றம்தான் கிடைக்கும். கோளம் அற்புதமான சமநிலை வடிவம்' இவ்வடிவில்தான் குறைந்தபட்ச புறப்பரப்பிற்கு அதிகபட்ச பொருண்மை சாத்தியமாகும். பூமி, சந்திரன், வியாழன், நெப்ட்யூன் போன்ற எல்லா பெருசுகளும் லட்டு வடிவம்தான். நாம் ஏற்கனவே சொன்னதுபோல நெப்ட்யூன் ஏரியா கொஞ்சம் தூசு துகள்கள் நிறைந்தது; இங்கே பல கற்கள் சுற்றிக்கொண்டிருக்கின்ற. இவற்றுக்குப் பொதுவில் அஸ்ட்ராய்ட்ய் (தமிழ்ல என்ன சொல்வது?) என்று பெயர். இவையெல்லாம் கோளம் தவிர்த்த பல வடிவங்களில் இருக்கும், இவற்றுள் அம்மிக்குழவி வடிவம் மிக அதிகமாகக் காணப்படும். விதி 2ன்படி இவையெல்லாம் குறுங்கோள்கள் அல்லன.

அருகில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமால் நல்லபிள்ளையாக இருக்க வேண்டும் என்ற விதி 3 மிக முக்கியமானது; இதுதான் கோள்களையும் குறுங்கோள்களையும் மாறுபடுத்துகிறது.. ஓரளவுக்குக் கொழுத்துப் போய்விட்டால் தொந்தரவு யாரையும் கிட்டவிடாமல் விலக்குவிசை செயல்படத் தொடங்கும். 'எங்க ஏரியா உள்ளவரதே' என்று பாடத்தொடங்கும். அப்பொழுது ஒன்றுடன் ஒன்று விலக்கிக் கொண்டு தனித்தனியே பேட்டைகளை உருவாக்கிக் கொள்ளும். இங்கேதான் புளூட்டோ உதைவாங்குகிறது. அஸ்ட்ராய்ட் பெல்ட்டில் கிடக்கும் நிறைய விஷயங்கள் புளுட்டோவிடம் அடிக்கடி நெருங்கி வருகின்றன. (வந்தால் மோதிக் கொண்டு உதைவாங்கி உடைந்துபோகும் அபாயமும் உண்டு). ஜெனாவுக்கு இதே பிரச்சினைதான்; ஒரு பேட்டையை வளைத்துப்போடும் திறமை இவை இரண்டுக்கும் கிடையாது.

ஆக, ஜெனாவைக் கோள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள், அத்துடன் கூட ஜெனா என்று செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்ட UB313 க்கு ஈரிஸ் என்று பெயர் விண்ணாய்வுக் கழகப் பெரியவர்களால் ஞானஸ்நானம் ஆகியது. ஆனால் தனக்கு இரண்டு கண்களும் போனால் மருமகளுக்கு ஒருகண்ணாவது போக வேண்டும் என்ற மாமியாரைப் போல, ஈரிஸ் புளூட்டோவையும் கோள்கள் பட்டியலில் இருந்து வெளியே தள்ளிவிட்டது. இப்பொழுது புளூட்டோ ஒரு குறுங்கோள்தான்.

{இப்படித் திடீரென ஒன்பதை எட்டாகக் குறைத்தால் குழந்தைகள் ஏங்கிப்போவார்கள் என்று சிலர் கவலைப்பட்டனர். (இவர்களில் யாரும் அறிவியல் தெரிந்தவர்கள் கிடையாது. குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது, அவர்கள் எல்லாவற்றையும் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக நான்கு வயது இருந்தபொழுது என் மகன் இந்தியாவில் இருந்து கொண்டுவந்த டிடிகே அட்லாஸ், புதிதாக வாங்கிய (பழைய) நேஷனல் ஜியாகரபி அட்லாஸ் இரண்டையும் வைத்துக்கொண்டு ஏன் கஷ்மீர் பக்கத்தில் இந்தியாவின் வரைபடம் மாறுபட்டிருக்கிறது என்று கேட்டான். ஒரு நிமிடம் இதை எப்படி புரியவைப்பது என்று ஆடிப்போய்விட்டேன். ஆனால் கொஞ்சம் இந்தியா, பாக்கிஸ்தான், கஷ்மீர், விவரத்தைச் சொன்னவுடன் "ம், சரி" என்று விளையாடப் போய்விட்டான். இப்பொழுது அவன் இன்னும் சில வருஷங்களுக்கு இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வரைபடங்கள் வந்துகொண்டுதானிருக்கும் என்பதை அறிந்துகொண்டுவிட்டான். இதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு அவனைப் பிடித்துவைத்து அதே கேள்வியைத் திரும்பக் கேட்டேன், அவன் கஷ்மீரில் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இருக்கும் உரிமைப் பிரச்சினையைத் திரும்பச் சொன்னான். அப்படி இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே, ஆனால் உலக அளவில் வரைபடம் என்று ஒன்றைத்தானே சொல்ல வேண்டும் என்றும் கேட்க, அப்பா, ப்ளே ஸ்டேஷனில் அண்ணா Vikram's PSP என்று எழுதுகிறான், கொஞ்ச நாளில் நான் அதை மாற்றி "Varun's PSP" என்று எழுதுகிறேன். நீயும் இதைப் பார்த்திருக்கிறாய், ஒரு பெயர்தான் போட வேண்டும் என்று எங்களை வற்புறுத்தவில்லை. அதே மாதிரிதான் இதுவும், சில விஷயங்கள் தீர்மானமாகத் தெரியாதபொழுது எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.}

குழந்தைகளை ஏங்கவிடுவதா இல்லை அறிவியல் கோட்பாடுகளுக்கு இணங்க கோள்களின் எண்ணிக்கையை மாற்றி எழுதுவதான் என்று வந்தால் அறிஞர்கள் பின்னதைத்தான் தெரிந்தெடுப்பார்கள் - தார்கள். ஜெனா என்று அழைக்கப்பட்ட ஈரிஸ்க்குக் கோள் அந்தஸ்து கிடைக்காமல் போனதில் அதைக் கண்டுபிடித்த மைக் ப்ரௌனுக்கு வருத்தம்தான். ஒரு கோளை அடையாளம் காட்டியவர் என்று வரலாற்றில் தனியிடம் பெறும் சாத்தியம் அவருக்கு இல்லாமல் போயிற்று, பத்தோடு பதினொன்றாக இன்னொரு குறுங்கோளை மாத்திரமே கண்டுபிடித்தார் என்றுதான் அறியப்படப் போகிறார். ஆனால் ப்ரௌனுக்கு இதில் எந்தவித வருத்தமும் இல்லை. "அறிவியல் எப்பொழுதுமே திறமாகத்தான் செயல்படுகிறது. தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மை நிலைக்கிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்" என்று சொல்லிவிட்டு தன் தொலைநோக்கியை வேறுபக்கம் திருப்பப் போய்விட்டார்.

ஆக இன்றைய புரிதலின்படி சூரியனைச் சுற்றி ஒன்பது எட்டு கோள்கள் இருக்கின்றன. மூன்று குறுங்கோள்கள் - செரஸ், புளூட்டோ, ஈரிஸ். நாளை நம் தொலைநோக்கிகள் இன்னும் சக்தி வாய்ந்தவையாக மாறும்பொழுது இவையும் மாறலாம்.

இது தொடர்பான என் தனிப்பட்ட கருத்துகளை என் பதிவில் பார்க்கவும்.

மேலதிக விபரங்களுக்கு:

Dwarf Planets in Wikipedia

8 comments:

said...

அருமையான விளக்கம் வெங்கட். நீங்கள் சொல்வது போல் குழந்தைகளுக்கு எந்த விதமான குழப்பமும் இல்லை. 9 கோள்கள் இருக்கும் ஒரு புத்தகத்தைப் பார்த்தால் என் மகன் அது குறுங்கோள் என்ற ஒரு விதம் வருவதற்கு முன் வந்த புத்தகம். அதனால் எனக்குக் குழப்பமில்லை என்கிறான்.

said...

இப்படி மாற்றப்பட்டதை விரும்பாத, ஆனால் முடிவெடுத்த கூட்டத்திற்குப் போகாத, சில அறிவியலாளர்கள் அடுத்த கூட்டத் தொடரில் இதை மாற்றி விடுவது என்று கருவிக் கொண்டு இருக்கிறார்கள்! ஆனால் இந்த விதிகளில் என்ன குறைபாடு காண்கிறார்கள் என்று தெளிவாகச் சொல்கிறார்கள் இல்லை. நல்ல விளக்கமான பதிவு.

வைசா

said...

நன்றி

said...

தமிழ்மண முகப்பில் வர ஒரு பின்னூட்டக் கயமை.

said...

ஆமாம், இப்படி வானவெளியில் இருக்கும் அதிசியங்களுக்கு எப்ப முடிவு இருக்கும்?
ஒருவேளை நம் அறிவுக்கு முடியாதோ?
பாமரனுக்கு புரியக்கூடிய சில நுணுக்கமான விபரங்களையும் சொல்லியுள்ளீர்கள்.
நன்றி

said...

அபூர்வமான தகவல்களை எளிதாகச் சொன்ன அட்டகாசமான பதிவு!

இதைத்தான் அன்னிக்கே வள்ளுவரும் சொல்லிட்டுப் "போய்விட்டார்".

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு. [336

said...

நண்பர் இரவி தனிமடலில் அனுப்பிய வாழ்த்து!
________________

நன்றி

நல்ல விளக்கமான பதிவு.

அபூர்வமான தகவல்களை எளிதாகச் சொன்ன அட்டகாசமான பதிவு!

said...

அடடே! எனக்குக் கூட புரிஞ்சு போச்சு!!
நன்றி