கேள்வி: சிரிப்பூட்டும் வாயு (Laughing Gas) என்ற வாயுவினை முகர்ந்தால் சிரிப்பு வரும் என்று சொல்லப்படுவது உண்மையா? உட்டாலக்கடியா?உண்மையென்றால், வருவது புன்முறுவலா? (smile) அல்லது வாய்விட்ட சிரிப்பா? (laugh)
சிமுலேஷன்
விக்கிக்கு வந்த கேள்வி இது எனினும், இந்தக்கேள்விக்கான நேரடி விடை மிக எளிமையானது என்பதால், இக்கேள்வியுடன் தொடர்புடைய வாகனப்புகையைப்பற்றியும் விரிவாகவே சொல்ல முனைகிறேன்.
எஞ்சின் புகைவிடுகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். முதலில் ஏன் அது புகைவிடுகிறது என்பதில் ஆரம்பிப்போம்.
எஞ்சின் என்பது எரிபொருளின் வேதீயல் சக்தியை வெப்பச்சக்தியாக்கி பிறகு இயங்குசக்தியாக்கும் சாதனம். (தமிழ்லே சொல்றதுன்னா, Engine is a Device which converts Fuels Chemical Energy to heat Energy and thence to Mechanical Energy:-)
எரிபொருள் என்பது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், டீஸல், கேசோலின் என்று அமெரிக்காவில் அழைக்கப்படும் பெட்ரோல், இயற்கை எரிவாயு (Compressed Natural Gas - CNG), திரவப்பெட்ரோலிய வாயு (Liquified Petroleum Gas -LPG), அல்லது ப்ரோபேன் போன்ற எதாக இருந்தாலும், எரிபொருளில் பிரதானமாக இருப்பது ஹைட்ரோ கார்பன்கள்தாம் - வேறு வேறு மூலக்கூறுகளாக. (Molecules), என்ன, ஒவ்வொரு எரிபொருளுக்கும் வேண்டத்தகாத ஆனால் தவிர்க்கமுடியாத சில கசண்டுகளும் கூடவே இருக்கும். டீஸலுக்கு சல்பர் (கந்தகம்), பெட்ரோலுக்கு ஈயம் (lead), வாயுக்களில் ஹைட்ரஜன் சல்பைடு. இவற்றின் விளைவுகளையும் பார்ப்போம்.
எரிபொருள் தானாக எரிய முடியாது, எஞ்சின் நெருப்பாக இருந்தாலும் காதல் நெருப்பாக இருந்தாலும் எந்த நெருப்புக்கும் முக்கியமான தேவை - ஆக்ஸிஜன். காற்றுமண்டலத்தில் ஆக்ஸிஜன் தனியாக இல்லை - பல்வேறு தனிமங்களுடன் கலந்தே இருக்கிறது - அதில் முக்கியமானது நைட்ரஜன்.
எனவே, எஞ்சினுக்குள் எரியும் பொருள்கள் இரண்டு - எரிபொருள் மற்றும் காற்று.
எரிபொருளில் உள்ள தனிமங்கள் - ஹைட்ரஜன்(H), கார்பன்(C) மற்றும் 1 - 3 சதம் வரை கசண்டு (சல்பர்(S) / ஈயம்(Pb) / ஹைட்ரஜன் சல்பைட்(H2S)
காற்றில் உள்ள தனிமங்கள் - நைட்ரஜன்(N), ஆக்சிஜன்(O) (மற்ற தனிமங்களை இப்போது கணக்கில் சேர்க்கத் தேவையில்லை - மிகக்குறைந்த அளவில்தான் அவை உள்ளன)
எனவே, எரியும்போது, கீழ்க்கண்ட மூலக்கூறுகள் உண்டாகின்றன, இவை வெப்பத்தை உண்டுசெய்து எஞ்சினை இயங்கச் செய்தபிறகு புகைபோக்கி வழியாக வெளியேறுகின்றன. இங்கே டீஸல் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்ற எளிய ப்ளாஷ் இருக்கிறது.
1. கார்பன், ஆக்ஸிஜனுடன் முழுமையாக எரிந்தால் - கார்பன் டையாக்ஸைடு (CO2)
2. பாதியளவு மட்டுமே எரிந்தால் - கார்பன் மோனாக்ஸைடு (CO)
3. முழுக்கவே எரியாமல் இருந்தால் - ஹைட்ரோ கார்பன் (HC)
4. தண்ணீர் (ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து) (H2O)
5. கந்தக அமிலம் - டீஸல் மற்றும் வாயு எஞ்சின்களில் கந்தகக் கசண்டு இருப்பதால். (H2SO4)
6. நைட்ரிக் அமிலம் (HNO3)
7. நைட்ரஸ் ஆக்ஸைடுகள் (பல விதங்களில் இணைய வாய்ப்பிருக்கிறது) (NO, N2O, NO2, NO3)
8. சல்பர் ஆக்ஸைடுகள் (SO, SO2, SO3)
9. பாதி எரிந்த எரிபொருள் (கார்பன் மோனாக்ஸைடு) (இரண்டாவது முறை கணக்குக்காட்ட ஏற்றவில்லை, கீழே படியுங்கள்) (CO)
இன்னும் நிறைய இருக்கிறது - ஆனால் போரடித்துவிட வாய்ப்பிருப்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
இந்த மூலக்கூறுகளை மூன்றுவகையாகப் பிரித்திருக்கிறேன் என்பதையும் கவனிக்கலாம். முதல்வகை - (1,2 &3) - எரிபொருள் செலவுடன் தொடர்புடையது. அதாவது, இந்த வாயுக்களின் அளவு அதிகரிக்குமானால் எரிபொருள் செலவு அதிகரிக்கும்.
இரண்டாம் வகை - (4, 5 &6) - துருப்பிடித்தல், பாசி போன்ற படிமங்களை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்து,எஞ்சினின் பாகங்களோடு வினை ஆற்றி, அவற்றின் வாழ்நாளைக் குறுக்கக்கூடிய அமில வகைகள் .
இந்த இரண்டு வகையும் அதிகரித்தால் செலவினங்கள் அதிகரிக்கும் - பணம் சார்ந்தவை.
ஆனால் பிரச்சினையே இந்த மூன்றாவது வகையோடுதான்.
கார்பன் மோனாக்ஸைடு ஒரு நிரந்தரமில்லாத வாயு (Unstable). அல்பாயுசில் மடிந்தவர்கள் ஆவியாவார்கள் என்பதுபோல, இது முழுக்க எரியாததால் எங்கே ஆக்சிஜன் என்று தேடிக்கொண்டு அலையும். காற்று மண்டலத்தில் இதற்கு ஜோடியாக இன்னொரு நிரந்தரமில்லாத ஆக்சிஜன் வகை இருக்கிறது - மூன்று மூலக்கூறுகளைக்கொண்ட O3 - ஓசோன்! இவருக்கு ஒரு ஆக்சிஜன் வந்தால் நிலைபெறுவார், அவருக்கு ஒரு ஆக்சிஜன் இழந்தால் நிலைபெறுவார். இருவரும் சந்திக்கும்போது - கண்கள் கலந்தன, கருத்தொருமித்தனர் - சரியான ஜோடி ஆகிவிடும்!
CO + O3 -> CO2 + O2
சரி, அதில் நமக்கென்ன பிரச்சினை? ஓசோன் வாயுவின் அளவு குறைவதும், அதனால் சூரியக்கதிர்கள் தங்குதடையின்றி பூமிக்குள் நுழைந்து நமக்குப் பிரச்சினைகள் ஏற்படுத்துவதுதான். மேலும், கார்பன் மோனாக்ஸைடை நேரடியாக சுவாசித்தால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை மட்டுப்படுத்தி இதயத்தின் செயல்பாட்டையும் தொந்தரவு செய்யும்.
நைட்ரஸ் ஆக்ஸைடுகள் வேறு வகை தொந்தரவு. நைட்ரஜனே ஒரு பெரிய போதை மருந்து! மனிதனின் நரம்பு மண்டலத்துடன் உறவாடி மயக்கத்தையும் மூளைச்செயல்பாடு பாதிப்பையும் உண்டு செய்யக்கூடியது. அதனால்தான் நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) சுவாசித்தால் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு வருகிறது, அது சிரிப்பூட்டும் வாயு (Laughing Gas) என்ற பெயரும் பெறுகிறது. சிரிப்பு வருவது உண்மைதான் சிமுலேஷன். வாய்விட்ட சிரிப்பேதான். இதை முன்னாளில் மயக்கமருந்தாகவும் பயன்படுத்திவந்தார்கள் என்பது உபரி தகவல்.(அப்பாடா அந்தக்கேள்விக்கு விடை வந்துவிட்டது)
இது தவிரவும், நைட்ரஸ் ஆக்ஸைடுகளால் அமிலமழை உண்டாகும் சாத்தியமும் உண்டு.
சல்பர் ஆக்ஸைடுகள் காற்றை மாசுபடுத்துவதிலும் அமில மழைக்கும் மேற்கண்ட இரண்டுக்கும் உறுதுணையாக இருக்கும்.
கார்பன் டையாக்ஸாடு (CO2) - ஒரு க்ரீன்ஹவுஸ் வாயு - உலக் வெப்பமயமாக்கலில் முக்கிய பங்கு இதற்கு.
ஆகக்கூடி, எந்த வாயுவுமே நல்லதில்லை! அதற்காக எல்லா எஞ்சின்களையும் அணைத்துவிடவா முடியும்?
எனவே, இவற்றைக்குறைக்க பலவழிகளில் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள், அரசாங்கங்களும் பல சட்டங்களைப்போட்டு மாசின் அளவைக் கட்டுக்குள் வைக்க முயன்று வருகிறது.
யூரோ -2, பாரத் - 2, ACERT போன்ற ஸ்டிக்கர்களை உங்கள் வண்டிகளில் பார்த்திருப்பீர்கள் - இவையெல்லாம் அரசாங்கங்களின் அளவு விதிமுறைகளே. அதாவது, எஞ்சின் வெளிப்படுத்தக்கூடிய உச்சபட்ச கார்பன் மோனாக்ஸடு அளவு இவ்வளவு, நைட்ரஸ் ஆக்ஸைடு இவ்வளவு, ஹைட்ரோ கார்பன்கள் இவ்வளவு என்னும் மதிப்பளவுகளுக்குள் குறிப்பிட்ட எஞ்சினின் அளவுகள் இருந்தால் இந்த சான்றிதழ் கொடுக்கப்படும். இந்த அளவுகள் வருடாவருடம் திருத்தப்படுகின்றன.
இந்த அளவுகளுக்குள் எஞ்சினை வடிவமைக்க பல முறைகள் கையாளப்படுகின்றன.
1. அதிக வெப்பத்தை உள்வாங்கக்கூடிய, எரிபொருளை முழுமையாக உள்ளேயே எரிக்கக்கூடிய பாக்ங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
2. சரியான நேரத்தில் சரியான அளவு எரிபொருளை எஞ்சினுக்குத் தர கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் உபயோகிக்கப்படுகின்றன (Analog Computing for controlling timing & quantity of Fuel Injection / Ignition)
3. புகைபோக்கியில் வரும் வாயுவின் நச்சுத்தன்மையைக் குறைக்க வேதிப்பொருள்கள் புகைபோக்கியின் ஒரு பாகத்திலேயே வைக்கப்படுகிறது (Catalytic Convertors)
எவ்வளவுதான் ஆராய்ச்சிகள் நடந்தாலும், இந்த நச்சுகளை குறைக்கத்தான் முடியுமே ஒழிய அழிக்க முடியாது! கருப்பாக புகைவிடும் வண்டி மட்டுமல்ல, புத்தம்புதிய, புகை கண்ணுக்கே தெரியாத வண்டியும் மாசு ஏற்படுத்தத்தான் செய்கிறது.மாசின் தாக்கத்தின் அளவு மாறுபடலாமே ஒழிய எஞ்சின் ஓடினாலே மாசு நிச்சயம்!
சரி, நாம் என்ன செய்யலாம்?
1. தரமான எரிபொருளை பயன்படுத்தலாம் - எரிபொருளில் உள்ள கலப்படங்கள் மாசின் அளவை 20% வரை அதிகரிக்கக்கூடியவை. (கம்பெனியின் நேரடி பங்க்குகளில் போடுங்கள், அப்படி ஒன்று அருகில் இல்லாத பட்சத்தில் ஆட்டோக்கள் அதிகம் உள்ள பங்கைத் தேர்ந்தெடுங்கள் - ஆட்டோக்காரர்கள் பலமுறை போட்டு அறிந்து ஆராய்ந்துதான் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கிறார்கள்)
2. சிக்னல், நிறுத்தங்களில் எக்காரணம் முன்னிட்டும் ஆக்ஸிலரேட் செய்யாதீர்கள் - வீண் விரயம் மட்டுமல்ல, மாசும் அதிகமாகும்.
3. க்ளட்சில் கால் (அல்லது கை)வைத்த வண்ணம் வண்டி ஓட்டாதீர்கள் - க்ளட்ச் மூலம் கொஞ்சம் எஞ்சின் சக்தி வீணாகிக்கொண்டே இருக்கும். எஞ்சின் அதிக எரிபொருள் குடித்து, அதை மாசாக ஆக்கி தொந்தரவும் செய்யும்.
4. டயரில் காற்றழுத்தத்தை மிகச்சரியாக வையுங்கள். அழுத்தம் குறைவாக இருந்தால், வண்டியை நகர்த்த எஞ்சினுக்கு அதிக சக்தியும் எரிபொருளும் தேவைப்படும். காற்றுக்குறைவான சைக்கிள் அழுத்தும்போது அதிக சக்தி தேவைப்படுகிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்கள்தானே?
5. ஆயில், பில்டர் போன்ற பராமரிப்பு பாகங்களை குறித்த நேரத்தில் மாற்றுங்கள் - தள்ளிப்போடுவதால் கொஞ்சம் பைசா மிச்சமாவது போல் தோன்றலாம் - ஆனால் எரிபொருள் செல்வும், எஞ்சின் ஓவர் ஹாலிங் செலவும், காற்றை மாசுபடுத்துவதும் நீங்கள் சேமிக்கும் காசைவிட மிகமிக அதிகம்.
6. இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் முக்கியமாக சைலன்ஸரை அடிக்கடி (வருடம் ஒருமுறையாவது) சுத்தம் செய்யுங்கள். சுத்தம் என்றால் காற்றை வைத்து ஊதி மட்டும் அல்ல - அதறகான வேதிப்பொருள்கலைக்கொண்டு தொழில்முறையான முழுமையான சுத்தம்!
7. அமெரிக்க கார்கள் பல கேடலிடிக் கன்வர்ட்டரோடு வருகின்றன. அவற்றுக்கும் பராமரிப்பு அவசியம்
அடிக்கடி உங்கள் வண்டியின் மாசளவை பரிசோதியுங்கள்! திடீரென அதிகரித்தால் மேலே சொன்ன ஏதோ ஒன்றைச் செய்யவில்லை என்று அர்த்தம்.
பொதுவாகவே இந்தியாவில் தற்போது வரும் கார்கள் புதிய டெக்னாலஜியோடு வருவதால் அவற்றால் ஆபத்து குறைவு. ஆனால் பெருமளவு சாலைகளில் இருக்கும் இருசக்கர வாகனங்களும், லாரி, ட்ரக் பஸ் போன்றவையும் பழைய டெக்னாலஜிக்களிலேயே இயங்குகின்றன. அவைதான் பெரிய ஆபத்து. இவற்றின் மாசு அளவு அடிக்கடி பரிசோதிக்கப்படுவதும் பழுதுபார்த்து அனுமதிக்கப்பட்ட அளவுகளிலும் வைப்பது நாட்டுக்கும், உங்கள் பணப்பைக்குமே கூட உதவி செய்யும்.
வேண்டாத வேளைகளில் வண்டியை எடுப்பதைத் தவிர்க்கலாம், தனிநபராகக் காரில் செல்லாமல் Car Pool அமைத்துச் செல்லலாம்! தேவையற்ற உபயோகத்தைத் தவிர்க்க அத்தனை முயற்சிகளும் செய்யலாம்!
நம்மால் மாசு அதிகரிப்பை நிறுத்த முடியாது - ஆனால் குறைக்க முயற்சி செய்யலாம்! இந்த வழிமுறைகளை உபயோகிப்பதன் முக்கியமான கூடுதல் பலன் - எரிபொருள் சிக்கனம்!
முயற்சி செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!
******************************
பி கு1: பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், புத்தகங்கள், தயாரிப்பாளர்களின் கேட்டலாகுகள், பத்திரிக்கைச் செய்திகள், விக்கிபீடியா குறிப்புகள் ஆகியவற்றின் விளைவே இப்பதிவு. எனவே, குறிப்பிட்டு ஒரு ஆதாரத்தைச் சொல்ல முடியாது. விக்கிபீடியாக்குறிப்புகள் மட்டும் தரமுடியும்.
பி கு 2: கட்டுரை நீளமாக இருப்பதாகக் கருதினால் குறைந்தபட்சம் கடைசியில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் மட்டுமாவது படித்துவிடுங்கள். போரடிக்கிறது என்றால் அந்தக்கருத்தையும் சொல்லிவிடுங்கள், திருத்திக்கொள்கிறேன்.
பி கு 3: சற்றுமுன் போட்டிக்கு அனுப்ப உத்தேசம்.
பி கு 4: தவறு ஏதேனும் இருந்தால் திருத்துங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
நல்ல பதிவு சுரேஷ். வெறும் நைட்ரஸ் ஆக்ஸைட் மட்டுமில்லாம இவ்வளவு மேலதிக தகவல்கள் தந்ததுக்கு நன்றி.
//வாய்விட்ட சிரிப்பேதான். இதை முன்னாளில் மயக்கமருந்தாகவும் பயன்படுத்திவந்தார்கள் என்பது உபரி தகவல்.//
சுரேஷ், இன்றும் பல்மருத்துவர்களால் சில நேரங்களிலாவது பயன்படுத்தப்படுகிறது என்றே நினைக்கிறேன்.
It causes euphoria with a capability to dull the sensation of pain, slight hallucinations and, in some cases, potential aphrodisiac effects.
அதாவது வாய்விட்ட சிரிப்பு என்றில்லாமால் வலிதெரியாத ஒரு இன்ப நிலை என்று சொல்லுதல் மேலும் பொருத்தம் எனத் தோன்றுகிறது.
நல்ல கட்டுரை.
நம்ம ஊர்ல மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒன்னு இருக்கே, அவங்க நம்ம பல்லவன் போன்ற பஸ்சை எல்லாம் பரிசோதனை செய்யவே மாட்டாங்களானு எனக்கு சென்னையில் வாகனம் ஒட்டும் போது பல தடவை தோனும், அதிலும் வெள்ளை(லைட்) கலர் சட்டை போட்டு போகும் போது ரொம்பவே தோணும்....
பதிவு நல்லாயிருக்கு! ஆனா எனக்கு கெமிஸ்ட்ரி கிலாஸ்ல உக்காந்த மாதிரி இருக்கு. அதனால லேசா தூக்கம் வந்துச்சி.
நல்ல தகவல் தந்தமைக்கி நன்றி பெனாத்தலாரே!
நம்ம பாடப் புத்தகங்களிலும் இந்தமாதிரி பாடங்களை எழுதினால் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். ரொம்பவும் aseptic style-ல் எழுதுவதை விட இது பயனுள்ளதாயிருக்கும். கல்வியாளர்கள் கொஞ்சம் மனசு வைக்கணும். எங்க நடக்கப் போகுது ..?
சுரேஷ்
வாகன வயதை நிர்ணயம் செய்து,அது முடிந்தவுடன் தூக்கில் போட்டு விடவேண்டும்.
இங்கு சிங்கையில் எல்லா வண்டிக்கும் 10 வருடம் தான்,அதற்கு மேலும் பண்ணமுடியும்,ஆனால் செலவு அதிகம் என்பதால் பல மரணமேடைக்கு போய்விடுகிறது.
இங்கு 99% வண்டி விடும் புகையை கண்ணால் பார்க்கமுடியாது.அப்படியே பார்த்தாலும் அது பக்கத்து நாட்டில் இருந்து வந்தது என்று சத்தியம் பண்ணலாம்.
நல்ல பதிவு. பல புதிய தகவல்கள்.
குறிப்பாக மாசுக்கட்டுப்பாட்டால் ozone படலத்தில் ஓட்டை விழுவது எப்படி என்பதற்கான விளக்கம்.
பல் மருத்துவத்தில் குறிப்பாக குழந்தைகளுக்கான பல் மருத்துவத்தில் Nitrous Oxide + Oxygen கலவை sedative ஆகப் பயன்படுகிறது. வெறும்
Nitrous Oxide ஐ தொடர்ச்சியாக உள்ளிழுப்பதால் மூளைக்கு oxygen பற்றாமல் brain damage ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால்தான் Oxygen உடன் சேர்த்தே அளிக்கப்படுகிறது.
உள்ளிழுக்கப்பட்டவுடன் சிறிது நேரத்துக்கும் மூளை உடல் மேல் தன் கட்டுப்பாட்டை இழக்கிறது (temporary loss of motor control).
ஒரு சில நிமிடங்களுக்கு பெருமகிழ்வுணர்வைத் (euphoria) தருவதால் போதை மருந்துகளைப்போல இதற்கு அடிமையானவர்களும் உண்டு.
தொடர்ந்த பயன்பாட்டினால் கை கால்கள் மரத்துப்போவதும் நரம்பு தொடர்பான நோய்களும் வர வாய்ப்பு உண்டு.
நன்றி கொத்தனார்.
பல் மருத்துவர்களால் இன்றும் உபயோகப்படுத்தப்படுகிறதா? எங்கேப்பா டாக்டர்! கொஞ்சம் வந்து க்ளாரிபை பண்ணுங்களேன்!
புன்சிரிப்பு / வாய்விட்ட சிரிப்பு என்று சொல்லமுடியாத போதைதான்! பொதுவாகவே போதை வஸ்துக்கள் உங்கள் உணர்வுகளை மிகைப்படுத்திக் காட்டும். சோகம் 10மடங்கு சோகமாகும், மகிழ்ச்சி 10 மடங்கு மகிழ்ச்சியாகும். எனவே எப்படிப்பட்ட சிரிப்பு என்பது எப்படிப்பட்ட உணர்வில் இருக்கிறார் சுவாசிக்கிறவர் என்பதைப் பொறுத்ததே.
டீப் சீ டைவிங் செல்பவர்கள், வெறும் காற்றைப்பையில் அடைத்துச் செல்வதால் காற்றில் உள்ள ஆக்ஸிஜன் தீர்ந்து நைட்ரஜனை சுவாசிக்க நேர்ந்தால் உடலில் கொப்புளங்கள் உண்டாகுமாம், பைத்தியமும் பிடிக்கலாமாம். தலைவர் அலிஸ்டர் மக்ளீன் சொன்னார் (Fear is the Key கதையில்)
அட இன்னா சார் நீங்க. மாசு கீசுன்னு பயமுறுத்தறீங்க. நான் சொல்ற வழிய கொஞ்சம் கேளுங்க. எங்கையாவது போகிறச்ச முன் பக்கமா ஒட்டின காரை, திரும்பி வரும்போது பின் பக்கமா ரிவர்சிலே ஓட்டினு வந்தீங்கனா மொதல்ல உட்ட பொகை எல்லாத்தையும் உறிஞ்சி எடுத்துக்கலாம்.
நல்ல பதிவு. பலவகை நிலைகளில் ஆக்சிஜனுடன் நைட்ரஜன் சேர்வதால் அமில மழை முதல் பலவகை நோய்களும் வரக்காரணாமிகின்றன. அதே சமயம் பலவித நைட்ரட் உப்புகளாக மாறும்போது தாவரங்களுக்கு நல்ல உரமாகவும் பயன்படுகின்றன.
அற்புதமான பதிவு!!
நிறைய தகவல்களுடன் தொய்வில்லாமல் எழுதி இருக்கிறீர்கள்!!
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)
சிமுலேஷன் கேள்விக்கு ஜெயஸ்ரீ தான் சரியான பதிலைக் கொடுத்திருக்கிறார். பதில் தெரியவில்லையென்றால் எங்கள் பேராசிரியர் செய்வதைப் போலவே உங்களுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டீர்கள் :)
இருந்தாலும் உங்கள் மாணவர்கள் மீது பொறாமைதான் வருகிறது, இத்தனை அழகாக விளக்கும் ஒரு ஆசிரியர் கிடைத்ததிற்கு :(
நன்றி நாகை சிவா.
பல்லவனின் வெளிப்படையான மாசு சட்டையைப் பதம் பார்த்தாலும், வெளிப்படை இல்லாத மாசும் (உங்கள் வண்டியிலிருந்து வருவது) ஆபத்துதான் :-)
அபி அப்பா,
தூக்கம் வந்துச்சா? அடடா! என் கிளாஸ்லே உக்கார்ந்து இருந்தீங்கன்னா விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி இருப்பேனே :-)
உண்மையாகவே, இந்த கெமிஸ்ட்ரி கொஞ்சம் ட்ரைதான். வகுப்பில் ரொம்ப கவனமாக பார்த்து ட்ரேக் மாற்றுவது, ஜோக் சொல்வது என மாற்றிவிடுவேன்.
நன்றி தருமி.
நானும் இப்படி நினைத்ததுண்டு. பாடப்புத்தகம் கடினமாக இருக்கவேண்டும் என்று நினைத்தே எழுதுகிறார்களோ என்று! நமக்கு வாய்த்தது!
ஒரு வாத்தியார் வாயால் இப்படி ஒரு பாராட்டு வாங்குவது -- நிஜமாகவே பெருமையாக இருக்கிறது :-)
வடுவூர் குமார்
நீங்கள் சொல்வது மெத்தச் சரி. இரக்கமே காட்டக்கூடாது. நம் ஊரில் ஆண்டிக் வண்டிகள் எல்லாம் ரெகுலர் சவாரி போகின்றன!
ஜெயஸ்ரீ,
நன்றி.
நைட்ரஸ் ஆக்ஸைட் பற்றிய மேலதிக விவரங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்காமலேயே நான் டாக்டர்களை அழைத்துவிட்டேன்.
அனானி,
சூப்பர் ஐடியாதான்.. ஆனால்
வண்டிதான் முன்னாலும் பின்னாலும் போகும். எஞ்சின் ஒரே பக்கம்தான் இயங்கும் :-(
கியர்பாக்ஸ்தான் வண்டியை இரு திசைகளிலும் இயங்க வைக்கிறது.
(சே இந்த விக்கியிலே காமடியான பின்னூட்டத்துக்குக் கூட சீரியஸா பதில் சொல்ற மூட்தான் வருது)
பத்மா அரவிந்த்,
நன்றி.
ஆமாம். அமில மழைக்கு காரணமான அதே நைட்ரைட்டுதான் நல்ல உரமாகவும் இருக்கிறது.. சூரியக்கதிர்களை பில்டர் செய்யும் அதே ஓசோன் தான் பல பொருட்களை ஆக்ஸிடைஸ் செய்து உருத்தெரியாமல் ஆக்குகிறது. எந்த ஒரு நன்மைக்குப் பின்னும் ஒரு தீமை (& Vice Versa) இருக்கிறது.
CVR,
நன்றி.
மணியன்,
தென்னை மரத்தில மாட்டைக்கட்டறது நான் வழக்கமா செய்றதுதான்னாலும், இந்தப்பதிவு முதல்லே மாசுக்கட்டுப்பாடு பத்தி எழுத முடிவெடுத்துவிட்டு, சிமுலேஷன் கேள்வி வாகாக இருக்கவே எடுத்தாண்டேன்.
பாராட்டுக்கு நன்றி.
நல்ல பதிவு பெனாத்தலார்...
ஆனா மணியன் சொன்னா மாதிரி கேள்விய விட்டு பெனாத்தினாலும் நல்லாவே பெனாத்திருக்கீங்க.. :))
சரி.. கொஸ்டினுக்கு வருவோம்...
//இன்றும்
பல்மருத்துவர்களால் சில நேரங்களிலாவது பயன்படுத்தப்படுகிறது என்றே நினைக்கிறேன்.//
உண்மைதான். நைட்ரஸ் ஆக்ஸைட் பல் மருத்துவத்தில் இன்னும் பயன்படுத்துறாங்க. குறிப்பா குழந்தைகளுக்கு... ஏன்னா இதுக்கு சைட் எபெக்ட்ஸ் கம்மி. சீக்கிரம் உடலிலிருந்து வெளியேற்றப்பட்டுவிடும். மைல்ட் எபெக்ட் தான். இப்படி நிறைய ப்ளஸ்கள் இருக்கு.
---------
நைட்ரஸ் ஆக்ஸைடு அப்புறம் பயன்படுத்துறது கார்கள்ல.. பதிவுக்கு சம்பந்தமாவும் வந்தாச்சா?
அப்புறம் பெனாத்தலார்,
//எங்கேப்பா டாக்டர்! கொஞ்சம் வந்து க்ளாரிபை பண்ணுங்களேன்!//
நான் உங்களுக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கங்க.
Patient-Doctor Confidentiality doesnt apply to Dentists.. Know Why? Coz they are not Doctors! They are Dentists!
இத இந்தியால சொன்னா பல்டாக்டர்லாம் அடிக்க வருவாங்க.. but thats the truth >:-}
தமிழ்ல அவங்களையும் மருத்துவர்கள்னு சொல்லி சமமா சேர்க்கறது நியாயமா? :))
விளக்கங்களுக்கு நன்றி பெனாத்தலாரே!
அப்புறம், "கேட்ட கேள்விகளுக்கு இத்தனி நாட்களுக்குள் பதில் சொல்லுவோம்" என்று எஸ்.எல்.ஏ ஏதும் கிடையாதா, விக்கிபசங்களா?
- சிமுலேஷன்
டாக்டர்!
அதான் மணியனுக்கே சொல்லி இருக்கேனே! பதிலுக்காகத் தான் கேள்வியத் தேடினேன் :-)
அப்பால, ஏன் டெண்டிஸ்டுங்க மேலே இந்த கொலைவெறி?
நன்றி சிமுலேஷன்.
நீங்க சொல்ற மாதிரி எஸ் எல் ஏ கொண்டுதான் வரணும் போல இருக்கு.
தாமதத்துக்கும் வருத்தத்துடன் சுரேஷ்.
டெண்டிஸ்ட்கள் யாரும் தமிழ் வலைப்பதிவுகள்ல இல்ல.. அப்புறமென்ன அடிச்சு ஆடவேண்டியதுதானே??
அதுவும் தவிர, நான் பார்த்தவரை பல்மருத்துவர்கள் பலர் ரெகுலர் மருத்துவ அட்வைஸும் செய்வதால் வரும் எரிச்சல்! (வயித்தெரிச்சல் இல்லப்பா!)
மிகவும் அருமை!!!
- கோவை தம்பி
mika mika thevaiyaana pathivu. appadiye KLICK HERE!
இது தொடர்பான என் பதிவு
Uncle, please check http://kuttiescorner.blogspot.com/2007/11/teach-to-educate-child_16.html
we request you to give this article as a PPT or Word document so that we could reach it to 3500 school/college students who do not access Internet.
Please check www.focpune.blogspot.com & www.vidyaposhak.org
ரொப நாளாக வாகனம் எப்படி இயங்குகிறது என்ற பெரிய சந்தேகம் இன்று தீர்ந்தது. விரவில் புது இரு சக்கர வாகனம் வாங்க நினைத்திருந்தேன்.ஆனால் இப்பொழுது வேண்டாம் என முடிவு எடுத்து விட்டேன்.இனி பொதுப் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துவேன்.நல்ல பயனுள்ள் தகவல்.
அருமையானதொரு செய்தி. ஒன்று கூடி முடிவெடுப்போம், இயன்ற அளவு வாகனப் பயன்பாட்டை குறைப்போம் என்று.
Post a Comment