Wednesday, May 02, 2007

எள்ளா உளுந்தா? எதைப் போடலாம்?

தாளிக்கிறதுக்கு ஏத்தது எள்ளா உளுந்தா? சாலமன் பாப்பையாவ விட்டா ரெண்டு மணிநேரம் பட்டிமன்றம் நடத்திடுவாரு. ரெண்டுமே தென்னிந்திய சமையல்ல சம அளவுல இருக்கு. ஆனா இலக்கியத்துல இருக்கா? தமிழ் இலக்கியத்துல எப்ப எள்ள போடணும் எப்போ உளுந்தப் போடணும்னு விதிகள் எதுனாச்சும் இருக்கா? இவ்விடயத்தில் யோகன் பாரீஸ் ஐயா அவர்களின் கம்பராமாயணப் பாடலொன்றினைக் குறித்த சந்தேகத்திற்கு தங்கத்தாரகை ஜெயஸ்ரீயின் பதில்...

***********************************
//கம்பராமாயணத்தில் ஒரு பாடல் -இராமரின் முடிசூட்டு விழாக்காண வந்த கூட்டம் நெரிச்சல் பற்றி ; கம்பர் வர்ணிக்கையில் "எள் போட்டால் எண்ணெய்" வருமென குறிப்பிட அபசகுனக் குறையென அஞ்சி...உழுந்து போட்டால் கீழே விழாது எனக் கூறியனாராம். தயவு செய்து அப்பாடலைத் தரவும்.//

யோகன் பாரிஸ் ஐயா, அந்தப் பாடல் இராமரின் முடி சூட்டு விழாவிற்கு வந்த கூட்டம் பற்றிய பாடல் அல்ல, திருமண விழாவிற்கு வந்த கூட்டம் பற்றியது.

(பால காண்டத்தில் எழுச்சிப் படலம் - 23ஆம் பாடல்)


இராம இலக்குவர்கள் விசுவாமித்திரருடன் மிதிலைக்குச் செல்கின்றனர். அங்கு இராமபிரான் சனகரின் மிகப்பெரிய சிவதனுசை 'எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்' என்று நாணேற்றி உடைத்து சீதையை மணக்கத் தகுதி பெறுகிறார். இந்த நற்செய்தியைத் தெரிவித்து, தசரத மன்னரை மணவிழாவிற்கு அழைக்க சனகர் அயோத்திக்கு ஓலை அனுப்புகிறார்.

ஓலை கிடைக்கப்பெற்ற தசரத மன்னர் பெருமகிழ்ச்சியடைந்து பரிவாரங்களுடன் மிதிலை செல்லத் தயாராகிறார். . தனது சிற்றரசர்களையும், சேனையையும், முதலில் செல்லப் பணிக்கிறார். சேனை திரண்டு, ஊழிக்காலத்தே ஒங்கரிக்கும் கடல்போல் ஆரவாரம் செய்து எழுந்தது. வாள்படையும், விற்படையும், யானைப்படையும், குதிரைப்படையும், பல்லக்குகளுமாகப் பெரும் கூட்டம் மிதிலையை நோக்கிச் சென்றது. தன் சேனை முழுவதும் புறப்படபின், தான் பின் செல்லக் காத்திருக்கிறார் மன்னர். இன்னும் சேனை முழுவதும் அயோத்தியைவிட்டு நீங்கியபாடில்லை.

தயரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

பொருள் :
துன்பத்திலும், துயரத்திலும் அழுந்திய மக்கள், அவற்றினின்று மீண்டு வர உதவும் ஊன்றுகோல் போன்ற தயரத மன்னன் இன்னும் புறப்படவில்லை (தன் சேனைக்குப் பின் செல்லக் காத்திருப்பதால்). மேலிருந்து உழுந்து போட்டால், உழுந்து மண்ணில் விழா வண்ணம் நெருக்கமாகத் திரண்டிருந்த சேனையின் கொழுந்து முதல் வரிசை) மிதிலையைச் சென்றடைந்துவிட்டது.
இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். மிதிலைக்கும் அயோத்திக்கும் இடைப்பட்ட பரப்பு முழுதும் தயரதன் சேனை மற்றும் மணவிழாக்காணச் சென்ற மக்கள் கூட்டத்தால் உழுந்து விழவும் இடமின்றி
நிறைந்திருக்கிறது. வானிலிருந்து பார்க்கும்போது ஒரு கொடி மிதிலை முதல் அயோத்தி வரை படர்ந்திருப்பது போன்ற தோற்றம் அளிக்கிறது. கொடியின் நுனி (சேனையின் கொழுந்து அல்லது கூட்டத்தின் முதல் வரிசை) மிதிலையில்
இருக்கிறது. கடைசி வரிசை அயோத்தியில் இருக்கிறது.

தசரத மன்னரின் படைப்பெருக்கம் சற்று மிகப்படுத்தி கூறப்பட்டுள்ளது.இது உயர்வு நவிற்சி அணி. ஒரு நிகழ்வையோ, பாத்திரத்தின் தன்மையையோ சிறப்பிக்கவேண்டியோ, அன்புமிகுதியாலோ மிகைப்படுத்திக்கூற புலவர்களுக்கு மட்டுமேயிள்ள சுதந்திரம். என் கண்மணி சக்கரவர்த்தித் திருமகன் கல்யாணத்துக்கு எவ்வளவு கூட்டம் வந்தது தெரியுமா என்று சொல்ல கம்பர் எடுத்துக்கொள்ளும் கூடுதல் உரிமை.

"உழுந்து இட இடம் இலை "

எப்போதும் நெருக்கமான கூட்டத்தைக் குறிக்க "எள் போட்டால் எள் விழாது" என்று சொல்வது வழக்கம். எள் அளவில் மிகச் சிறியது என்பதால் "எள்முனை அளவும் இல்லை" "எள்ளளவும் இல்லை" என்றெல்லாம் சொல்வது வழக்கு.
எள் பொதுவாக உயிர் நீத்தாருக்குச் செய்யும் சடங்குகளில் இடம் பெரும் பொருள். மங்கல காரியங்களில் இடம் பெறுவதில்லை. இது இராமனுடைய மணவிழா. "எள் விழ இடமில்லை" என்று பொதுவாக வழக்கில் உள்ள சொலவடையைச் சொல்வது கூட துர்நிமித்தம் (அபசகுனம்) ஆகிவிடுமோ என்பதால் "உழுந்து இட இடமில்லை" என்கிறார்.

அம்பால் சல்லடையாகத் துளைக்கப்பட்டு மாண்ட இராவணனைப் பார்த்து மண்டோதரி புலம்பும் பாடலைப் பார்ப்போம்.

"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறோ !
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி "

வெள்ளெருக்கை சடையிலணிந்த சிவபெருமான் உறையும் கயிலாயத்தையே அசைத்துத்தூக்கிய இந்த மேனியை எள் விழவும் இடமின்றி சல்லடையாய் இராமபாணங்கள் தைத்து, உயிரைக் குடித்தனவே! நீ சீதைமேல் கொண்ட தகாத காதல் எங்காவது ஒளிந்திருக்கிறதா என்று உன் உடலெல்லாம் துளைத்துத் துளைத்து தேடி வெளியேற்றியதோ அந்த இராமனின் அம்புகள் ?
இங்கே நிகழ்ந்ததோ மரணம் , எனவே "எள்ளிருக்கும் இடமின்றி".

----------------
விளக்கமளித்த ஜெயஸ்ரீக்கும் கேள்விகேட்ட யோகனுக்கும் விக்கிப்பசங்களின் நன்றி.

34 comments:

said...

அருமையான கம்பராமாயணப்பாடல்கள் இரண்டைத் தந்து அவற்றை விளக்கியவருக்கும், கேள்வியைக் கேட்டவருக்கும், எடுத்து இட்டவருக்கும், குழுவிற்கும் நன்றிகள்.

ஒவ்வொரு சொல்லும் தித்தித்தது.

said...

'கடலை' போடலாம் !
:))

சத்தியமாக பதிவை படிக்கலை !
:)))

said...

உழுந்தா burnol போடலாம் அப்டின்றது மட்டும்தான் தெரியும்...

நானும் கோவி.க.வும் ஒண்ணு ...

( கோவி.க.,
யாரும் கற்பூர வாசனை அப்டின்னு சொல்ல மாட்டாங்கல்லா ..?)

said...

தருமி ஐயா, கண்ணன் அண்ணா இருவரின் பின்னூட்டங்களை சிரிப்பானுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆர்வம் இவர்களுக்கு இல்லை என்பதை நான் நம்பத் தயாராக இல்லை. தமிழ் என்று பல இடங்களில் பேசும் இவர்களே இந்த இடுகையைப் படித்துக் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றால் தமிழைப் படித்தால் என்ன பயன் என்று கேட்பவர்கள் ஆர்வம் கொள்வார்கள் என்று நம்ப முடியாது.

கடலை போடலாம், விழுந்தால் பர்னால் போடலாம் என்ற இரண்டும் முதல் பத்திக்கான கருத்து - அதுவும் நகைச்சுவை கருத்து - என்றே நம்ப விரும்புகிறேன்.

said...

கம்பன் கவிஞன். பழைய எழுத்தாளர்களையெல்லாம் புலவன் என்பார். எழுதிப் பாடுகின்றவரைப் பாணன் என்பார். ஆனால் கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறவர் இவர் ஒருவர்தான். சமகாலத்துப் பாண்டி நாட்டாரான புகழேந்தியும் புலவர்தான். ஓட்டக்கூத்தரும் புலவர்தான். கம்பராமாயணத்தின் மையக்கருத்தில் கருத்து மாறுபாடு இருக்கலாம். இல்லாமல் போகலாம். ஆனால் அது கம்பரின் கவிச்சுவையைப் பருகுவதை தடை செய்யாது.

ஜெயஸ்ரீ அவர்களின் விளக்கமும் மிக அருமை.

கல்யாண வீட்டில் உளுந்துதானே போட வேண்டும். வடைக்கு! அதான் போட்டிருக்கிறார்.

மண்டோதரியின் புலம்பல்...மிகவும் கவித்துவமான புலம்பல். திரும்பத்திரும்ப படித்துப் பாருங்கள். விளக்கமே தேவையில்லை. "கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்" என்ற சொல்லாடல் ஒன்றே போதும். கிட்டத்தட்ட கண்ணதாசன் பட்டுக்கோட்டை காலத்தைய சொற்கோர்ப்பு.

said...

குமரன்,
நிச்சயமாக சிரிப்பானுடன் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ எனக்குத் தெரிந்த ஒரு pun வைத்து எழுத நினைத்த ஆசை.அத்ற்கு கோவி.க. ஒரு வினையூக்கியாகி (catalyst)விட்டார் அவ்வளவே.ஆனால் இப்போது சொ.செ.சூ. வச்சிக்கிட்டதுமாதிரி ஆகிப்போச்சு :)

ஆனாலும் பின்னூட்டம் அப்படி எழுதினாலும் அதன் பின் வாசித்து விட்டேன் - ஆழமாக இல்லாவிட்டாலும்.

said...

mmmmmm I have a doubt for so many days. intha THANGA THARAKAI JEYASRI yarunga? Jeyasri Govindarajana? illai Jeyasri Suriyanarayanana? ore kuzhapama iruke? :P

said...

நான் ஜெயஸ்ரீக்கு அனுப்பிய மடலும் அதற்கு அவர்கள் தந்த பதிலும்.

//ஜெயஸ்ரீ,

ஒரு பாட்டு வாங்குனா ஒரு பாட்டு ப்ரீயா? :))//

அப்படியெல்லாம் இல்லை. கம்பர் காலத்தில "எள் போட்டால் எள்
விழாது" என்பது வழக்கத்தில் இல்லையோ ன்னு ஒரு சந்தேகம் வரலாமில்லையா, அதுக்காகத்தான்.


//ஒரு சந்தேகம் - உளுந்தா? உழுந்தா? //

கம்பராமாயணத்தில உழுந்து ன்னு தான் இருக்கு. உழுந்து, உளுந்து ரெண்டுமே சரிதான். பழைய பாடல்கள்ள உழுந்து ன்னு தான் இருக்கு.
இலங்கைத் தமிழிலும் உழுந்து தான்.


என்ன அவங்க சொல்லறது காதில் உழுந்துதா? ச்சீ உளுந்துதா? அட சட் - விழுந்துதா? :))

said...

இந்த உளுந்து, உழுந்து போல் இன்னொன்னும் இருக்கு கொத்ஸ். பவளம், பவழம்.

said...

குமரன்,

உங்க கிட்ட இந்த மதில், மதிள் விவகாரம் பத்திக் கூட கேட்டு இருக்கேனே மறந்து போச்சா? :))

said...

ரொம்ப அருமையான விளக்கம். ஜெயஸ்ரீக்கு நன்றி.

எள்ளு போட்டா அது கூட்டத்துலே நசுங்கி எண்ணெயாயிரும். கல்யாணத்துக்குப்
போட்டுருந்த நல்ல உடையெல்லாம் பாழாயிருமே(-:

உளு(ழு)ந்துன்னா பரவாயில்லை. மாவாயிரும். பவுடர் செலவு கம்மி:-)))))

said...

//உங்க கிட்ட இந்த மதில், மதிள் விவகாரம் பத்திக் கூட கேட்டு இருக்கேனே மறந்து போச்சா? :))
//

கொத்தனாரே...இன்னும் தூங்கலையா? இல்லை யார் யாரை என்னென்ன கேட்டோம் என்று பதிவர் மாநாட்டுக்குப் பின் கணக்கெடுத்துக் கொண்டு இருக்கீரா? :-)

நீங்க கேட்டது மரூஉ வகையச் சார்ந்தது...போலி மரூஉ என்று பெயர்!
அடிச்சொல்லில் அதிகம் வேறுபாடு இல்லாது, ஓரிரு எழுத்துக்களில் மட்டும் மாறு பட்டு வரும்.
பாருங்க...
சாம்பல்-சாம்பர்
பந்தல்-பந்தர்
மதில்-மதிள்
பவழம்-பவளம்
நஞ்சு-நச்சு

இலக்கணப் போலி என்றும் இதைச் சொல்லுவர்!
அது சரி, பதிவர் சந்திப்பு முடிந்து சரவண பவனில் நாம ஆர்டர் பண்ணியது போலியா, போளியா? :-)

said...

/// ஜி.ரா அவர்கள் சொல்லியது: கல்யாண வீட்டில் உளுந்துதானே போட வேண்டும். வடைக்கு! அதான் போட்டிருக்கிறார் //

ஆகா, விளக்கத்திற்கு ஒரு விளக்கம்
அருமை!

said...

கொத்ஸ். ஆழ்வார் பாசுரங்களிலும் துளசி அக்கா பதிவுகளிலும் 'மதிளை'ப் பார்க்கலாம். மற்ற இடங்களில் 'மதிலை'ப் பார்க்கலாம். :-) எது சரி? தெரியாது. துளசி அக்கா புழங்கறதாலேயே அது(வும்) சரின்னு சொல்லிடலாம்; ஆழ்வார் பாசுரங்களிலும் வருதே. அப்ப கட்டாயம் அது(வும்) சரின்னு சொல்லிடலாம் இல்லை? :-)

said...

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் .என்றும்...
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ் நாடு...என்றும்

பாரதியின் நினைவுக்கும் கூட, கம்பன் தான் சட்டென்று வருகிறான்.
அருமையான பதிவு
அருமையான சிந்தனை
பாராட்டுக்கள் ஜெயஸ்ரீ!

மங்கல வழக்கு என்பது தமிழர் காலந் தொட்டு இருந்து வந்துள்ளது.
இளங்கோவும் கண்ணகியின் திருமணத்தில்
காதலற் "பிரியாமல்"
கவவுக்கை "நெகிழாமல்"
தீது "அறுக"
என்று பெண்கள் ஏதோவொரு மனநிலையில் ஏத்தி விடுவதாகச் சொல்லி...பின்னால் வரப்போவதை முன்னாலேயே குறிப்பால் உணர்த்துவார்.

அவர் வழியொற்றி வந்த கம்பனும், எள்ளை விலக்கி, உழுந்தைச் சொல்வதன் நோக்கம் எவ்வளவு கூர்மையானது!
இன்றும் திருமண காலங்களில் கெட்டி மேளம் கொட்டி, மற்ற எந்தவொரு சத்தத்தையும் அடைத்து விடுகிறார்களே!

தமிழில், இலக்கியச் சுவையும், வாழ்வுச் சுவையும் இப்படிப் பின்னிப் பிணைவது எவ்வளவு அழகு!

said...

நன்றி குமரன்.

"பாவின் சுவைக்கடல் மொண்டெழுந்து கம்பன் பொழிந்த தீம்பாற்கடல்" அல்லவா?

said...

கோவி.கண்னன் ஐயா,

//'கடலை' போடலாம் !
:))//

:)

கல்யாணத்துக்குப் போறதே அதுக்குத்தானே )))

said...

தருமி ஐயா,

//உழுந்தா burnol போடலாம் அப்டின்றது மட்டும்தான் தெரியும்... //

))))

said...

நன்றி ராகவன்

//கல்யாண வீட்டில் உளுந்துதானே போட வேண்டும். வடைக்கு! அதான் போட்டிருக்கிறார் //

))

பின்ன கல்யாண விருந்தில எள்ளுருண்டையா போடுவாங்க ?

//மண்டோதரியின் புலம்பல்...மிகவும் கவித்துவமான புலம்பல்//

இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல். . இந்தப் பாடல் சொல்லும் மண்டோதரியின் உணர்வுகளைப் பொருள் சொல்லிப் புரியவைக்க முடியாது. நீங்கள்சொல்வதுபோல் மீண்டும் மீண்டும் மனதில் சொல்லிப் பார்த்தே உணரமுடியும்.

said...

கம்ப இராமாயனப் பாடல்களின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அருமையான விளக்கத்திற்கு ஜெயஸ்ரீக்கும் விக்கிபசங்களுக்கும் நன்றி.

சில பொருட்களையும் சம்பவங்களையும் மங்கல/அமங்கல நிகழ்ச்சிகளுடன் பிணைத்து மயங்குவது அறிவின் பாற்பட்டதன்றெனினும் பழக்கங்கள் தீங்கு விளைவிக்காதவரை கலாசார அடையாளங்களாகக் கொள்ளலாம்.

said...

ஓஹோ... இவ்வளவு விஷயம் இருக்கா.. இதில?

துளசி டீச்சர் / ஜிரா பின்னூட்டம் இன்னும் அருமையா இருக்கு.

ஆமாம் இதில எங்கேர்ந்து Olive Oil வந்தது?

Snap Judgement?

இரண்டு ஜெயஸ்ரீ இருக்காங்க போலிருக்கே? அவங்களா இவங்க? இல்ல இவங்க அவங்களா?

said...

ஜெயஸ்ரீ,
சிரிப்பானுக்கு நன்றி

said...

// I have a doubt for so many days. intha THANGA THARAKAI JEYASRI yarunga? Jeyasri Govindarajana? illai Jeyasri Suriyanarayanana? ore kuzhapama iruke? :P //

கீதாம்மா , ரெண்டாவதா சொன்னீங்களே, அதுதான் ))

said...

நன்றி துளசி.

//எள்ளு போட்டா அது கூட்டத்துலே நசுங்கி எண்ணெயாயிரும். கல்யாணத்துக்குப்
போட்டுருந்த நல்ல உடையெல்லாம் பாழாயிருமே(-:

உளு(ழு)ந்துன்னா பரவாயில்லை. மாவாயிரும். பவுடர் செலவு கம்மி:-) //

அட, அப்பவும் பாருங்க நமக்கு எதைப் பத்தி கவலை ன்னு :)

said...

நல்ல பதிவு ஜெயஸ்ரீ! சொல்நயமும் பொருள் நயமும் கமபனுக்குக் கைவந்த கலை! இடமறிந்து பேசவேண்டியதின் அவசியமும் இங்கு அறியப்படுகிறது.

said...

மண்டோதரியின் துயரத்திற்கு மருந்தேது.
அருமையான படல்களைக் கொடுத்துப்
பொருளும் தந்த்து உதவிய ஜெயஸ்ரீக்கு நன்றி.
எனக்கும் கீதா மாதிரி
ஒரே தலைக் குடச்சல்.
எப்படியோ ஜெயஸ்ரீனு பேரு வைக்க வேண்டியதுதான் பெண்குழந்தைகளுக்கு.:-0)
தமிழ் புலமை வளரும்.

said...

நன்றி ரவி.

மிகப்பொருத்தமாக சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு நிகழ்வைச் சொல்லியிருக்கிறீர்கள்.

//தமிழில், இலக்கியச் சுவையும், வாழ்வுச் சுவையும் இப்படிப் பின்னிப் பிணைவது எவ்வளவு அழகு!//

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றை இலக்கியங்களின் மூலமாகவே அறிய முடிகிறது. இலக்கியம் "காலக் கண்ணாடி" அல்லவா ?

said...

நன்றி மணியன்.

said...

snap judgemet( பாபா),

நன்றி.


//இரண்டு ஜெயஸ்ரீ இருக்காங்க போலிருக்கே? அவங்களா இவங்க? இல்ல இவங்க அவங்களா? //

நான் அவங்க (மரத்தடி ஜெயஸ்ரீ/ தாளிக்கும் ஓசை ) இல்லை :)
அவங்க ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், நான் ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்.

said...

நன்றி ஷைலஜா.

said...

ஸ்ரீதர் வெங்கட்,

நன்றி.

said...

வல்லியம்மா,

நன்றி.

தலைக் குடைச்சல் எதுக்கு? உங்க பதிவுல பின்னூட்டமெல்லாம் போட்டிருக்கேனே.

//எப்படியோ ஜெயஸ்ரீனு பேரு வைக்க வேண்டியதுதான் பெண்குழந்தைகளுக்கு.:-0)
தமிழ் புலமை வளரும்//

)))))))))))))))))

said...

ஜெயஸ்ரீ,
இரு அருமையான பாடல்களையும் மூலம் பொருளுடன் தந்ததற்கு மிக்க நன்றி!
"வெள்ளேருக்கம் சடைமுடியான்"... பாடல்; கண்ணதாசன் " நான் ரசித்த வர்ணனைகள்" எனும் புத்தகத்திலும் ;குறிப்பிட்டுள்ளார்.
நான் முதல் பாடல் பற்றி சுமார் 40 வருடத்தின் முன் இந்திய வானொலியில் "குன்றக்குடி அடிகளார்" ;பேசியதைக் கேட்ட போது மனதில் நின்ற விடயம்.
அதனால் காண்டம் சரியான நினைவில் நிற்கவில்லை.
மேலும்; இங்கே பகுத்தறிவு பற்றி ஆய்வதில் பலன் இல்லை. தமிழர் வாழ்வியலை நோக்க வேண்டும்.
என்ன? பகுத்தறிவிவு பேசினாலும்; நாம் "குங்குமம்" என்று தான் பெயர் வைப்போம்; விதவை என வைக்கமாட்டோம். அறிவாலயத்தை...சுடுகாடு ..என்றால் என்ன? நடந்துவிடும். உதயசூரியனை...அந்திச் சூரியன் என்றால் கூடாதா??
ஆனால் ...இங்கே நான் கடைமை புரியும் இடத்தில் ஒரு பெண் வழக்கறிஞர் பெயர் "மரி அன்ரனேற்"
இது பிரன்சுப் புரட்சியின் போது தலை வெட்டிக் கொல்லப்பட்ட அரசி; 14ம் லூயி மன்னர் மனைவி
பெயர்.
அப் பெண்ணிடம் தயங்கித் தயங்கி ;இந்தப் பெயரை உங்கள் பெற்றோர் எப்படித் தெரிவு செய்தார்கள்
எனக் கேட்ட போது; அவர் சொன்னது ,"பலர் இதைக் கேட்டுள்ளார்கள்...என்னினும் நான் சொல்லுகிறேன். என்ன ? குறைந்து விட்டேன்.
ஆனால் பகுத்தறிவு பேசும் எத்தனை பேர் வீட்டில்; பெண்ணுக்குக் கண்ணகி எனப் பெயர் வைத்தார்கள்.
ஆனால் மாதவியை மகிழ்வுடன் வைக்கிறார்கள்.சினிமா நடிகைகள் பெயரை வைக்கிறார்கள்.
இன்றைய பகுத்தறிவு " ஊருக்குபதேசம்"
பாடலை தேடித் தந்ததற்கும்; இது பற்றி அறியத்தந்த இலவசக் கொத்தனாருக்கும் மிக்க நன்றி!

said...

நல்ல விளக்கம் நானும் தெரிந்து கொண்டேன்