Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Wednesday, May 02, 2007

எள்ளா உளுந்தா? எதைப் போடலாம்?

தாளிக்கிறதுக்கு ஏத்தது எள்ளா உளுந்தா? சாலமன் பாப்பையாவ விட்டா ரெண்டு மணிநேரம் பட்டிமன்றம் நடத்திடுவாரு. ரெண்டுமே தென்னிந்திய சமையல்ல சம அளவுல இருக்கு. ஆனா இலக்கியத்துல இருக்கா? தமிழ் இலக்கியத்துல எப்ப எள்ள போடணும் எப்போ உளுந்தப் போடணும்னு விதிகள் எதுனாச்சும் இருக்கா? இவ்விடயத்தில் யோகன் பாரீஸ் ஐயா அவர்களின் கம்பராமாயணப் பாடலொன்றினைக் குறித்த சந்தேகத்திற்கு தங்கத்தாரகை ஜெயஸ்ரீயின் பதில்...

***********************************
//கம்பராமாயணத்தில் ஒரு பாடல் -இராமரின் முடிசூட்டு விழாக்காண வந்த கூட்டம் நெரிச்சல் பற்றி ; கம்பர் வர்ணிக்கையில் "எள் போட்டால் எண்ணெய்" வருமென குறிப்பிட அபசகுனக் குறையென அஞ்சி...உழுந்து போட்டால் கீழே விழாது எனக் கூறியனாராம். தயவு செய்து அப்பாடலைத் தரவும்.//

யோகன் பாரிஸ் ஐயா, அந்தப் பாடல் இராமரின் முடி சூட்டு விழாவிற்கு வந்த கூட்டம் பற்றிய பாடல் அல்ல, திருமண விழாவிற்கு வந்த கூட்டம் பற்றியது.

(பால காண்டத்தில் எழுச்சிப் படலம் - 23ஆம் பாடல்)


இராம இலக்குவர்கள் விசுவாமித்திரருடன் மிதிலைக்குச் செல்கின்றனர். அங்கு இராமபிரான் சனகரின் மிகப்பெரிய சிவதனுசை 'எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்' என்று நாணேற்றி உடைத்து சீதையை மணக்கத் தகுதி பெறுகிறார். இந்த நற்செய்தியைத் தெரிவித்து, தசரத மன்னரை மணவிழாவிற்கு அழைக்க சனகர் அயோத்திக்கு ஓலை அனுப்புகிறார்.

ஓலை கிடைக்கப்பெற்ற தசரத மன்னர் பெருமகிழ்ச்சியடைந்து பரிவாரங்களுடன் மிதிலை செல்லத் தயாராகிறார். . தனது சிற்றரசர்களையும், சேனையையும், முதலில் செல்லப் பணிக்கிறார். சேனை திரண்டு, ஊழிக்காலத்தே ஒங்கரிக்கும் கடல்போல் ஆரவாரம் செய்து எழுந்தது. வாள்படையும், விற்படையும், யானைப்படையும், குதிரைப்படையும், பல்லக்குகளுமாகப் பெரும் கூட்டம் மிதிலையை நோக்கிச் சென்றது. தன் சேனை முழுவதும் புறப்படபின், தான் பின் செல்லக் காத்திருக்கிறார் மன்னர். இன்னும் சேனை முழுவதும் அயோத்தியைவிட்டு நீங்கியபாடில்லை.

தயரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

பொருள் :
துன்பத்திலும், துயரத்திலும் அழுந்திய மக்கள், அவற்றினின்று மீண்டு வர உதவும் ஊன்றுகோல் போன்ற தயரத மன்னன் இன்னும் புறப்படவில்லை (தன் சேனைக்குப் பின் செல்லக் காத்திருப்பதால்). மேலிருந்து உழுந்து போட்டால், உழுந்து மண்ணில் விழா வண்ணம் நெருக்கமாகத் திரண்டிருந்த சேனையின் கொழுந்து முதல் வரிசை) மிதிலையைச் சென்றடைந்துவிட்டது.
இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். மிதிலைக்கும் அயோத்திக்கும் இடைப்பட்ட பரப்பு முழுதும் தயரதன் சேனை மற்றும் மணவிழாக்காணச் சென்ற மக்கள் கூட்டத்தால் உழுந்து விழவும் இடமின்றி
நிறைந்திருக்கிறது. வானிலிருந்து பார்க்கும்போது ஒரு கொடி மிதிலை முதல் அயோத்தி வரை படர்ந்திருப்பது போன்ற தோற்றம் அளிக்கிறது. கொடியின் நுனி (சேனையின் கொழுந்து அல்லது கூட்டத்தின் முதல் வரிசை) மிதிலையில்
இருக்கிறது. கடைசி வரிசை அயோத்தியில் இருக்கிறது.

தசரத மன்னரின் படைப்பெருக்கம் சற்று மிகப்படுத்தி கூறப்பட்டுள்ளது.இது உயர்வு நவிற்சி அணி. ஒரு நிகழ்வையோ, பாத்திரத்தின் தன்மையையோ சிறப்பிக்கவேண்டியோ, அன்புமிகுதியாலோ மிகைப்படுத்திக்கூற புலவர்களுக்கு மட்டுமேயிள்ள சுதந்திரம். என் கண்மணி சக்கரவர்த்தித் திருமகன் கல்யாணத்துக்கு எவ்வளவு கூட்டம் வந்தது தெரியுமா என்று சொல்ல கம்பர் எடுத்துக்கொள்ளும் கூடுதல் உரிமை.

"உழுந்து இட இடம் இலை "

எப்போதும் நெருக்கமான கூட்டத்தைக் குறிக்க "எள் போட்டால் எள் விழாது" என்று சொல்வது வழக்கம். எள் அளவில் மிகச் சிறியது என்பதால் "எள்முனை அளவும் இல்லை" "எள்ளளவும் இல்லை" என்றெல்லாம் சொல்வது வழக்கு.
எள் பொதுவாக உயிர் நீத்தாருக்குச் செய்யும் சடங்குகளில் இடம் பெரும் பொருள். மங்கல காரியங்களில் இடம் பெறுவதில்லை. இது இராமனுடைய மணவிழா. "எள் விழ இடமில்லை" என்று பொதுவாக வழக்கில் உள்ள சொலவடையைச் சொல்வது கூட துர்நிமித்தம் (அபசகுனம்) ஆகிவிடுமோ என்பதால் "உழுந்து இட இடமில்லை" என்கிறார்.

அம்பால் சல்லடையாகத் துளைக்கப்பட்டு மாண்ட இராவணனைப் பார்த்து மண்டோதரி புலம்பும் பாடலைப் பார்ப்போம்.

"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறோ !
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி "

வெள்ளெருக்கை சடையிலணிந்த சிவபெருமான் உறையும் கயிலாயத்தையே அசைத்துத்தூக்கிய இந்த மேனியை எள் விழவும் இடமின்றி சல்லடையாய் இராமபாணங்கள் தைத்து, உயிரைக் குடித்தனவே! நீ சீதைமேல் கொண்ட தகாத காதல் எங்காவது ஒளிந்திருக்கிறதா என்று உன் உடலெல்லாம் துளைத்துத் துளைத்து தேடி வெளியேற்றியதோ அந்த இராமனின் அம்புகள் ?
இங்கே நிகழ்ந்ததோ மரணம் , எனவே "எள்ளிருக்கும் இடமின்றி".

----------------
விளக்கமளித்த ஜெயஸ்ரீக்கும் கேள்விகேட்ட யோகனுக்கும் விக்கிப்பசங்களின் நன்றி.