Wednesday, July 04, 2007

சர்வேஸனுக்கே டவுட்டா?

சர்வேஸனுக்கே டவுட்டா?

எது என்னவென்றாலும் ஒரு சர்வே போடும் சர்வேஸனுக்கு ஒரு சந்தேகம்!

சந்தேகம்னு சொல்றதைவிட ஒரு தாக்கம்னு சொல்லலாம்.

"ஒரு மருத்துவர் உயிருக்கே ஆபத்து!

'என்னைச் சாக விடாதீர்கள்;

என் ரத்தம் உருகி என்னையே அழிக்கிறது;

நான் யார்?

எனக்கு எப்படி இது நிகழ்ந்தது என எனக்குப் புரிகிறது.

நான் ஏன் தனியே இருக்க வேண்டும்?

ஒரு சின்ன அடி பட்டாலோ, அல்லது தும்மினாலோ, ஏன் இத்தனை பதட்டப் படுகிறார்கள்? '


இவர் செய்த பாவம் என்ன?

இதுக்கு எப்படி நாம உதவலாம்?"


இதுதான் அவரோட தாக்கம்.



லப்-டப் தொடரின் ஏழாவது பதிவில் சொல்லியிருக்கும் காரணங்களே இதற்கு விடையாகும்.

கீமோதெரபி[Chemotherapy] மூலம் இந்த லுகீமியா[Leukemia] குணமாக வழியுண்டு என்றாலும், அதிலும் சில குறைபாடுகள் இருக்கின்றன.

மருந்து குணமாக்கும் அதே வேளையில், நோயின் தீவிரமும், மறுபக்கத்தில் இதை அதிகமாக்கிக் கொண்டிருக்கும் அபாயம் நிகழ்கிறது.

அதாவது, ஒரு பக்கத்தில் கீமோதெரபி இதனைச் சமன் செய்தாலும், நோயின் கடுமை [Severity of the disease] மறுபக்கம் மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இது எப்படி சாத்தியம்?

நோயைக் குணப்படுத்தவென அனுப்பப்படும் மருந்துகள், நோயுற்ற செல்களை மட்டுமல்லாது, பொதுவாக எல்லா செல்களையுமே தாக்குகிறது.
இதனால், ஏற்கெனவே இன்னமும் வலுவாக இருக்கும் அணுக்களும், புதிதாக உருவாகிய அணுக்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன.


இதற்கு என்ன வழி?

கொஞ்சம் கொஞ்சமாய் இந்தச் சிசு அழிய வேண்டியதுதானா?

ஆ! இருக்கும் அணுக்களை அழிப்பதுதான் இந்நோயின் குணமென்றால், அழிக்க முடியா வலுவுள்ள புது ரத்த அணுக்களை உருவாக்கும் வல்லமையுள்ள, ஒரு பொருளை எனக்குள் அனுப்புங்களேன் என அந்தக் குழந்தை அலறுவது ஒரு சிலருக்குக் கேட்டது.

அதன் விளைவுதான், இந்த போன் மார்ரோ பரிமாற்றம்[Bone Marrow Transplant].

இது என்னவெனப் பார்ப்போம்.

போன் மார்ரோ[Bone Marrow] என்பது ஒரு மிருதுவான, கொழுப்பு திசுக்களால் ஆன ஒரு பொருள்.

இது எலும்புக்குள் இருப்பது.

ரத்தத்தில் இருக்கும் சிவப்பு, வெள்ளை அணுக்கள், ப்ளேட்லெட்டுகள் [RBC's, WBC's, Platelets] முதலியன இங்கிருந்துதான் உருவாகின்றன.

ரத்த அணுக்களில் வரும் நோயால், இந்த எலும்பு மஜ்ஜையும் பாதிக்கப்படுகிறது.

இதற்கென, இதைச் சரி செய்யவென, வரும் மருந்துகளுக்கு, நல்லது எது, கெட்டது எனப் பிரித்துப் பார்க்கும் தன்மை இல்லாமல், கொஞ்ச நஞ்சமிருக்கும் நல்ல திசுக்களையும் அழிக்கும் அபாயம் நேர்வதால், இது போன்ற மருந்துகளுக்கும் ஒரு அளவில்தான் பயன் உண்டு.

இதற்கு மாற்றுதான் இந்த எலும்பு மஜ்ஜை பரிமாற்றம்[Bone Marrow Transplant]

இதை யார் கொடுக்க முடியும்?

நெருங்கிய உறவினர்[தாய், தந்தை, சகோதரன், சகோதரி,], அல்லது இந்த ரத்தத்திற்கு பொருந்தும் வேறு எவராயினும்!

பெறுபவருக்கு பலவகையிலும் ஆலோசனைகளும், அறிவுரைகளும் கிடைத்து விடும்.

தருபவர்க்குத்தான் குழப்பம்!

தரலாமா, கூடாதா?
தனக்கு இதனால் ஏதேனும் தொல்லை வருமோ?
பின்னால் இதனால் எதாவது கஷ்டம் இருக்குமோ?

இப்படி பல கேள்விகள்!

அவர்களுக்காக சில விளக்கங்கள்!

வலுவான, ஆரோக்கியமான உடல்நிலை இருக்கிறதா எனப் பரிசோதித்த பின்பே, ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இவரது ரத்தப்பிரிவு சோதனை செய்யப்பட்டு, இவர் தானம் அளிக்கத் தகுதியானவர்தானா எனப் பரிசோதனைகள் செய்தபின்னர், இவர் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

இடுப்பு எலும்புப் பகுதியில்[Hip bone] இருந்து இந்த எலும்பு மஜ்ஜை எடுக்கப் படுகிறது.

எல்லா எலும்புகளிலும் இந்த மஜ்ஜை இருந்தாலும், இடுப்பெலும்பில் அதிகமாக இருப்பதாலும், எடுப்பது எளிதென்பதாலும் இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சமீபகாலம் வரை, ஒரு அறுவைசிகிச்சை[surgery] மூலம்தான் இது எடுக்கப்பட்டு வந்தது.

தானமளிப்பவர்[Donor] மயக்கநிலைக்குச்[anaesthesia] சென்றாக வேண்டிய கட்டாயம்.

ஒரு சிலருக்கு சில மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டதாலும், மற்ற இடங்களில் இருக்கும் மார்ரோ எடுக்கப்படாமல் போவதாலும் மாற்றுவழிகள் முயற்சிக்கப்பட்டன.

இதன் விளைவாகக் கண்டறிந்தது என்னவென்றால், எலும்பு மஜ்ஜையில் இருக்கும் ஸ்டெம் ஸெல்கள்தான்[Stem cells] புதிய அணுக்கள் உருவாகத் தேவையானவை என்பதே.

இப்போது இந்த ஸ்டெம் ஸெல்களை இந்த மஜ்ஜையிலிருந்து பிரித்து, பொது ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்தால், மற்ற சாதாரண ரத்தப் பரிசோதனைகள் போல எளிதாக ரத்தத்தை எடுத்து,இதனைப் பிரிக்கலாமே!

அது மட்டுமின்றி, இப்போது இதன் மூலம், இடுப்பு எலும்பு மட்டுமல்லாது, எல்லா எலும்புகளில் இருந்தும் ஸ்டெம் ஸெல்கள் பெறும் வாய்ப்பும் அதிகமாகிறது.

குறிப்பிட்ட அளவு ரத்தத்தில் இருந்து இவ்வளவு ஸெல்கள் எடுக்கலாம் என்ற கணக்கும் தெரிவதால், தேவைக்குத் தகுந்த அளவில் மட்டுமே பெறவும் முடியும்.

எப்படி செய்கிறார்கள் இதை?

நியூபோஜென்[Neupogen] என்னும் ஒரு மருந்தை தினம் ஒருவேளை என்ற கணக்கில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஊசி மூலம் தானமளிப்பவருக்கு செலுத்துகிறார்கள்.

இது எலும்புமஜ்ஜைக்குள் ஊடுருவி, ஸ்டெம் ஸெல்களைப் பிரித்து, பொது ரத்த ஓட்டத்தில் அனுப்புகிறது.

தினசரி ரத்தப் பரிசோதனை மூலம் தேவையான அளவு ஸெல்கள் சேர்ந்து விட்டதா எனத் தெரிந்து, ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன், ரத்த தானம் செய்பவருக்கு நிகழ்வது போல், கையில் இருக்கும் நாளம் மூலம் ரத்தம் ஒரு கருவிக்குள்[machine] அனுப்பப்பட்டு, இந்த ஸெல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.


இதற்கு, ஏஃபெரேஸிஸ் [Apheresis] எனப் பெயர்.

மீதி ரத்தம், தானமளிப்பவருக்கே மற்றொரு கை நாளம் வழியே திரும்ப அனுப்பப் படுகிறது.


அவ்வளவுதான்!

ஒரு சிறு ஓய்வுக்குப் பின் வீடு திரும்பலாம்.

இவ்வளவு எளிதா இது?
இதில் பக்க விளைவுகள் [Side effects] ஒன்றுமே இல்லையா?


ரத்தம் பிரித்தெடுக்கும் போது வலியே இருக்காது........ ஊசிவலியைத் தவிர!

ஒரு சிலருக்கு, நியூபோஜென் மருந்து எலும்பிலிருந்து ஸெல்களைப் பிரித்தெடுக்கும் போது, சற்று எலும்பு வலி[Bone pain] இருக்கலாம்.

சிலருக்கு, அசதி, வாந்தி உணர்வு, லேசான ஜுரம், பசியின்மை, தூக்கமின்மை[fatigue, nausea, fever, Loss of appetite, insomnia] போன்றவை வரக்கூடும்.


பொதுவாக இது ஒரு பயத்தில் வருவதே.

உறவினரைத்தவிர, அந்நியருக்கும் இந்த தானம் அளிக்கலாம். தடையே இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதற்கென உங்கள் ஊரில் இருக்கும் இது சம்பந்தப்பட்ட அமைப்பில் [Bone Marrow Donor Program] உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்வதுதான்.

உங்களது ரத்தவகை போன்ற சோதனைகளைச் செய்து, தேவைப்படும் போது அழைப்பார்கள்.

விருப்பமிருந்தால், உடல்நலம் அப்போது சரியாக இருந்தால், தாராளமாகக் கொடுக்கலாம்.

ஒரு உயிரைக் காப்பாற்ற உங்கள் பங்கும் சேரும்.

முடிந்தால், சர்வேஸன் கூறிப்பிட்டிருக்கும் குழந்தைக்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள்!

33 comments:

பத்மா அர்விந்த் said...

I think we still need HLA compatibility or treatment with Cyclosporin before the transplant with Bone Marrow. For patients with Fanconi anemia they do this. Hence research is on to see if chord blood can be used in this case.

G.Ragavan said...

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலும் வேலைக்கு வந்த புதிதிலும் இரத்தம் கொடுத்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி அல்ல. ஆனால் ஏதாவது மையம் வைக்கும் பொழுது. அதிலும் என்னுடையது O-ve. ஆனால் இப்பொழுது கொடுப்பதில்லை. சொரியாசிஸ் உள்ளவர்கள் இரத்தம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆகையால் விரும்பினால் தானம் கொடுக்க முடியாது.

ILA (a) இளா said...

நல்ல பதிவு. ரெண்டு தடவை படிச்சதுக்கு அப்புறம்தான் நம்ம மண்டைக்கு ஏறிச்சு. நல்ல ஆராய்ச்சி.

நாகை சிவா said...

படிக்கவே அசரருது..... அதை செய்யும் போது எப்படி இருக்கும். உண்மையிலே நீங்கள் எல்லாம் ஒரு வகையில் கடவுள் தான் ---நீங்கள் எல்லாம் எஸ்.கே....

VSK said...

I think I too have said that only after careful consideration and blood tests, one can be chosen to donate.
And, that includes HLA compatibility also.

VSK said...

சொரியாசிஸுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, ஜி.ரா.

இந்தவகையில் முயன்று பாருங்கள், விருப்பமிருப்பின்.

VSK said...

நன்றி இளா அவர்களே!

VSK said...

கொடையளிக்கும் எல்லாருமே கடவுள்கள்தான் நண்பரே!

உன்னால்தானே வாழ்கிறேன்!

:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இருக்கும் அணுக்களை அழிப்பதுதான் இந்நோயின் குணமென்றால், அழிக்க முடியா வலுவுள்ள புது ரத்த அணுக்களை உருவாக்கும் வல்லமையுள்ள, ஒரு பொருளை எனக்குள் அனுப்புங்களேன் என அந்தக் குழந்தை அலறுவது ஒரு சிலருக்குக் கேட்டது//

மிக அருமையாகப் புரிய வைத்துள்ளீர்கள் SK. டாக்டர்-பேராசிரியர் என்ற இரண்டு நிலையில் இருந்தும் சொல்லி உள்ளீர்கள்!

ரத்த தானம் தன் இவ்வளவு நாள் செய்துள்ளேன். Bone Marrow எனப்து சற்று அச்சுறுத்தும் பெயர் போல் இருந்தது. ஆனால் இனி இல்லை, SK!

Cord Blood கூட இப்போதெல்லாம் Bone Marrowவிற்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்களாமே?

வடுவூர் குமார் said...

நீங்கள் சொல்லுவது,இரத்தம் கொடுக்கும் போது "platelets" மட்டும் எடுக்கக்கூடிய முறை மாதிரி உள்ளது.அதற்கான பெயர் Apheresis தானே?.
சிங்கையில் இந்த போன் மேரோ ரொம்ப பிரசத்தி பெற்றது.

இலவசக்கொத்தனார் said...

ரவி சொன்ன மாதிரி இந்த போன் மேரோ என்றால் கொஞ்சம் ரென்சனாகத்தான் இருந்தது. இனி தைரியமாகக் கொடுக்கலாம்.

இந்த ஊரில் நம்ம ரத்தமே வேண்டாம் என்கிறார்களே. இது மட்டும் ஓக்கே என்பார்களா? (அதாவது இந்தியா போய் வந்து ஒரு வருடமாவது ஆகி இருக்க வேண்டுமாம். நாமதான் வருடம் ஒரு முறையாவது போய் விட்டு வருகிறோமே. அப்புறம் எங்க தர!)

VSK said...

ரத்த, ஸ்டெம் ஸெல் தான வள்ளல் ரவிக்கு ஒரு ஓ!

கார்ட் ப்ளட் கதை வேறங்க.

அதி இங்க சொன்னா, விக்கி பசங்க கோபிச்சுப்பாங்க!

தனியா ஒரு பதிவு அதைப் பத்தி போட்டுறலாம்!

VSK said...

ஆம், இல்லை திரு. குமார்.

ரத்தத்திலிருந்து பிரிப்பதற்கு பொதுப் பெயரே Apheresis.

பத்மா அர்விந்த் said...

கொத்தனார்
அப்படி சொல்கிறார்களா என்ன? பொதுவாக RWJபோன்ற இடங்களில் பெயர் கொடுத்தல் வருடா வருடம் அழைப்பார்கள். சில பரிசுப்பொருட்களும் தருவார்கள். இப்படி கேட்பது தவறு (சட்டப்படி) தேவையான சோதனைகள் செய்வார்கள் (AIDS< Hepatatis போன்றவற்றிற்காக. மற்றபடி யார் வேண்டுமானாலும் இரத்ததானம் செய்யலாமே.

நன்றி எஸ்கே

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் பத்மா. இந்தியாவில் வருடத்திற்கு மூன்று முறை வரை இரத்த தானம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இங்க வந்த பின் அறவே செய்ய முடியவில்லை. நியூயார்க்கில் இரு முறை செய்ய முற்பட்ட பொழுது ஒரு பெரிய வினாத்தாள் கொடுத்து விபரங்கள் தரச் சொன்னார்கள். அதில் தூரதேச பயணம் என்ற கேள்வியும் ஒன்று. அதில் இந்தியா சென்றது பற்றிச் சொல்லி இருந்தேன். அதன் காரணமாக வேண்டாம் எனச் சொல்லி விட்டார்கள். ஒரு வருடகாலம் செல்லாதிருந்தால் வரச் சொல்லி இருக்கிறார்கள். வேலை காரணமாகவும் இந்தியா செல்வதால் அது முடியாமலேயே போகிறது. :(

VSK said...

கொத்ஸ் சொல்வது சரியே, பத்மா!

ஒரு சில நாடுகளுக்குச் சென்று வந்தால், ஒரு ஆண்டுக்கு ரத்தம் கொடுக்க முடியாது என்பது உண்மை.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகள் இதில் இருக்கின்றன.

ரத்தத்தில் ஒரு சில கிருமிகள் கலந்திருக்கும் அபாயம் இருப்பதால் இந்த ஏற்பாடு.

ஆனால், ஸ்டெம் செல் தானத்திற்கு இது இல்லை எனவே எண்ணுகிறேன்..

இலவசக்கொத்தனார் said...

அப்படி இருக்கையில் நீங்கள் சொல்வது போல் இப்பொழுது Bone Marrowவை ரத்தத்தில் இருந்து எடுப்பதால், நான் கொடுக்க முடியுமா?

VSK said...

உங்கள் ரத்தம் உங்களுக்கே திரும்புவதால் அதில் பிரச்சினை இல்லை.
பிரித்தெடுக்கப்படுவது செல்கள் மட்டுமே ... அதுவும் ஸ்டெம் செல் மட்டுமே.

SurveySan said...

அருமையான விளக்கங்கள் VSK.

மிக்க நன்றி.

இந்த 1-year ப்ரச்சனையால் (கொத்ஸ்) நானும் இரத்த தானம் கொடுக்க முடிவதில்லை.

Bone-Marrowக்கு பெயர் பதிந்தாச்சு. இங்கயும் 1-year தொல்ல வராதுன்னு நெனைக்கறேன்.

ஆனாலும், ஒரு சின்ன பயம் இருக்கத் தான் செய்யுது - 4 நாள் ஊசி, 4 நாள் இரத்த பரிசோதனை, மயக்கம்.

ஹ்ம். ஒரு உயிர் வாழ உதவணும்னா, இது எல்லாம் ஒரு பெரிய மேட்டரா நெனைக்கப் ப்டாது.

மிக்க நன்றி!

VSK said...

பதிவை மீண்டும் படிங்க கொத்ஸ்!
போன் மார்ரோ பிரிக்கப்படுவதில்லை.

அங்கிருந்து வந்து இப்போது பொது ரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஸ்டெம் செல்களை மட்டுமே எடுக்கிறோம்.

:))

MSATHIA said...

அருமையான விளக்கமும் சந்தேகத்திற்கு விடைகளும் கொடுத்திருக்கிறீர்கள் VSK.
நன்றி.

இலவசக்கொத்தனார் said...

மாப்பு சாமி மாப்பு. போன் மேரோவில் இருந்து வரும் ஸ்டெம் செல் அப்படின்னு எழுதி இருக்கணும். அந்த 'காசு மேல காசு வந்து' படத்துல எம் எஸ் வி சொல்லுற மாதிரி "தப்பு பண்ணிட்டேன் முருகா தப்பு பண்ணிட்டேன்".

இதுதான் சாக்குன்னு என்னாலதான் யாரும் டெனோட் பண்ண வரலைன்னு ஒரு கதை கட்டி விட்டுடாதீங்க சாமி!

Geetha Sambasivam said...

அந்தக் குழந்தைக்காகப் பிரார்த்திக்கிறேன். தக்கசமயத்தில் நல்ல கருத்துள்ளபதிவு. உண்மையில் தினம் தினம் டாக்டர்கள் தினம்தான். ஏன் ஜூலை 2-ம் தேதி மட்டும் தனியா வைக்கணும்னு தோணுது!

சேதுக்கரசி said...

நல்ல பதிவு. bone marrow (எலும்பு மஜ்ஜை) sampling drive-க்குச் செல்ல முடிந்தால் சிறப்பு. அல்லது www.marrow.org தளத்தில் பதிவு செய்தால் அவர்கள் அனுப்பும் cheek swap kit நம் சாம்பிளை அவர்களுக்கு அனுப்ப உதவும். இயன்றவர் அனைவரும் செய்யவேண்டிய ஒன்று.

சேதுக்கரசி said...

நல்ல பதிவு. bone marrow (எலும்பு மஜ்ஜை) sampling drive-க்குச் செல்ல முடிந்தால் சிறப்பு. அல்லது www.marrow.org தளத்தில் பதிவு செய்தால் அவர்கள் அனுப்பும் cheek swap kit நம் சாம்பிளை அவர்களுக்கு அனுப்ப உதவும். இயன்றவர் அனைவரும் செய்யவேண்டிய ஒன்று.

பத்மா அர்விந்த் said...

நான் இரத்ததானம் செய்ய முடியாது. ஆனால் பிளெட்லெட் தரும்போது எதுவும் கேட்கபதில்லை. எப்படியும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறதா, எய்ட்ஸ் இருக்கிறதா என்று பார்த்துதானே பயன் படுத்துகிறார்கள். எனக்கு தெரியாத உண்மை. நன்றி எஸ்கே. அடுத்தமுறை practice standard group இல் விசாரித்து பார்க்கிறேன்

VSK said...

சரியான சமயத்தில் இப்பதிவை எழுத என்னைத் தூண்டியதற்கு உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும், சர்வேசன்!

இதை இங்கு பதியச் சொன்ன கொத்ஸுக்கும் நன்றி.
படம் நல்லா இருந்தாலும் மாயாஜால்ல ரிலீஸ் பண்னினா கூட்டம் ஜாஸ்தியா வரும்தானே!
:))

VSK said...

மனசாரப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி, "சத்தியா" அவர்களே!

VSK said...

//என்னாலதான் யாரும் டெனோட் பண்ண வரலைன்னு ஒரு கதை கட்டி விட்டுடாதீங்க சாமி!//

பெரிய லைன் நின்னதா சர்வேசன் சொல்லிட்டாரு.

நீங்க தப்பிச்சீங்க, கொத்ஸ்!

:))

VSK said...

தலைவீஈஈஈஈ!

அது குழந்தை இல்லை!
29 வயசு டாக்டராம்!

ஆண்டவன் படைப்பில் அல்லாரும் குழந்தைகள்தான்னு சொல்ல வர்றீங்க இல்லை!

:))

VSK said...

ரொம்ப நாளாச்சுங்க உங்களைப் பார்த்து, சேதுக்கரசி!

சீக் ஸ்வாப் கிட்[Chek swab kit] ஒரு நல்ல ஆரம்பம்.
எல்லாரும் செய்யலாம்.

அதைப் பற்றிய தகவல் தந்ததுக்கு நன்றி.

VSK said...

அதுக்குக் காரணம் உங்களுக்கே தெரியுமே பத்மா!

சிவப்பணுக்களில் தான் இந்த மலேரியா, ஃபைலேரியா போன்ற நோய்க்கான கிருமிகள் வாசம் செய்கின்றன.

ப்ளேட்லெட்டுகளில் முடியாது..... ஏனெனில் அவட் அழிக்கும் குணம் கொண்டவை.

அங்கு பிராணவாயுவும் கிடையாது.

சிவப்பணுக்களில் இவை உண்டு.
அப்படியே ரத்தத்தில் இருக்கும் சத்துப் பொருளகளையும் ஜாலியா சாப்பிட்டுக் கொண்டு வளரலாம்.

அதனால்தான் ரத்ததானத்தில் இந்தக் கெடுபிடிகள்!

நாகு (Nagu) said...

என் நண்பனுக்காக (http://www.helprajesh.com) சில bonemarrow donor drive செய்து கொண்டிருக்கிறோம். இதைப் படிக்கும் அனைவரும் பதிந்து கொண்டு தெரிந்தவர்களையும் பதிய வையுங்கள்.