Showing posts with label Mirror. Show all posts
Showing posts with label Mirror. Show all posts

Wednesday, July 04, 2007

உன் பார்வையே சரி இல்லை!

பதிவுலகம் சாராத நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி இது.

எனக்கு தூரத்தில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரிவதில்லை என்பதால் நான் அதற்குக் கண்ணாடி அணிகிறேன். ஆனால் கிட்டத்தில் இருப்பவைகளைப் பார்ப்பதற்கு கண்ணாடி தேவை இல்லை. இப்படி இருக்கையில் அருகில் இருக்கும் கண்ணாடியில் தொலைவில் இருக்கும் பொருட்களைக் காண்பதற்கு எதற்காக கண்ணாடி அணிய வேண்டி இருக்கிறது. அந்த கண்ணாடி அருகில்தானே இருக்கிறது?


வழக்கம் போல் இணையத்தை மேய்ந்து விட்டு அவருக்கு நான் தந்த பதில் இது. நீங்கள் அந்த கண்ணாடியை மட்டும் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் கண்களில் கண்ணாடி அணியத் தேவை இல்லை. ஆனால் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் தொலைதூர பொருள் ஒன்றின் பிம்பத்தைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு கண்ணாடி அணியத்தான் வேண்டும்.

அதற்குக் காரணம், நீங்கள் பார்க்கும் பிம்பம் அந்த கண்ணாடியின் மேற்புறத்தில் இல்லை. அந்த பிம்பமானது கண்ணாடியின் உட்புறத்தில் இருந்து பிரதிபலிக்கிறது. அந்த பிம்பம் கண்ணாடியின் உட்புறத்தில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்றால், அந்த பொருளுக்கும் கண்ணாடிக்கும் இருக்கும் தூரத்தின் அளவு உள்ளே இருக்கிறது. அதாவது அந்த பிம்பம் பிரதிபலிக்கும் வெளிச்சம் உங்கள் கண்களுக்கு வர பயணம் செய்ய வேண்டிய தூரம் உங்கள் கண்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் மட்டுமன்று. அது பயணம் செய்யும் மொத்த தூரம் அப்பொருளுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் + உங்கள் கண்ணுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம். அதாவது உங்கள் கண்ணில் இருந்து 1 மீட்டர் தொலைவில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் வழியாக 5 மீட்டர் தொலைவில் உள்ளதைப் பார்க்கவேண்டுமானால், உங்கள் கண்பார்வை 6 மீட்டர் வரை சுத்தமாக இருக்கவேண்டும்.



இன்னும் சொல்லப் போனால் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பொழுது நீங்கள் பார்க்கும் தூரம் உங்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரத்தில் இரு மடங்கு. அதாவது உங்கள் முகத்துக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பம் கண்ணாடியில் வர ஏதுவாக) + உங்கள் கண்ணிற்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பத்தைப் பார்க்க).

அதனால்தான் தொலைவில் இருக்கும் பொருட்களின் பிம்பத்தை அருகில் இருக்கும் கண்ணாடியில் பார்க்கும் பொழுது கூட நீங்கள் கண்ணாடியை அணிந்து கொள்ளத் தேவைப் படுகிறது.

படம் இணையத்தில் சுட்டது.

Sunday, March 18, 2007

Mirror Mirror on the wall!!

Who is the fairest of them all அப்படின்னு எழுதினா என்னென்ன பிரச்சனை வருமோ தெரியலை. ஆனா அதைப் பத்தி ஒரு கேள்வி வந்தது நம்ம தருமி கிட்ட இருந்து. அது என்னன்னா
One way mirror-ன் அறிவியல் என்ன?
கார் கண்ணாடியில் ஒட்டப் படும் film-ம் அதே வேலையைச் செய்கிறதே, எப்படி?
இதைக் கேட்டுட்டு மனுசனுக்குப் பொறுமையே இல்லை. நம்ம கிட்ட விட்டு இருந்தா நல்ல பதிவா போட்டு இருப்போமில்ல. அதுக்குள்ள அவரே தேடிக் கண்டுபிடிச்சு பதிலையும் எழுதி அனுப்பிட்டாரு. (இந்த மாதிரி எல்லாரும் செஞ்சா எங்க வேலை எவ்வளவு ஈசின்னு பாருங்க!) பொதுவா வாத்தியார் கேள்வி கேட்டா மாணவர்கள்தான் பதில் சொல்லணும். அவங்க குடுத்த நேரத்தில் பதில் சொல்லாததால் வாத்தியாரே பதில் சொல்லிட்டாரு!! அதுக்கு மேல நாம என்னத்தைச் சொல்ல. அவர் பதிலை நீங்களே படிச்சுக்குங்க. சந்தேகம் எல்லாம் பின்னூட்டமா போடுங்க. தலைவர் வந்து பதில் சொல்லுவாரு. ஐயாம் தி எஸ்கேப்!

இனி தருமி.....

ஒளி ஊடுறுவதைத் தடுப்பதற்காகச் சாதாரண கண்ணாடியில் ரசம் பூசுறோம். ஒளி இப்போது ஊடுறுவ முடியாததால் கண்ணாடியில் விழும் ஒளி பிரதிபலிக்கும். அதனாலதான் அந்தக் கண்ணாடி முன்னால் இருக்கும் நம்ம அழகான மூஞ்சி திருப்பி நம்மையே பார்க்கிறது. இப்படி பூசப்படும் ரசம் கூட முழுமையாகப் பூசப்படுவதில்லை. அரைகுறையாகத்தான் பூசப்படுகிறது. அதற்குப் பதிலாக கண்ணாடியின் பின்புறம் ஒளி ஊடுறுவமுடியாத படி கறுப்பு அல்லது சிவப்பு பெயிண்ட் அடிச்சிடறாங்க. இப்படி பூசுற ரசத்தை இன்னும் கொஞ்சம் குறைவாகப் பூசி, அதோடு பின்னால் பூசும் பெயிண்டையும் அடிக்காமல் விட்டால் என்ன ஆகும்? ஒளி அரைகுறையா ஊடுறுவறது மாதிரி ஆயிடும்.

இந்த one way mirror அப்டிங்கிறது இதுதான். அதாவது ஒளி அரைகுறையாக ஊடுறுவமுடியும். ஒரு பக்கம் வெளிச்சம் அதிகமாவும் இன்னொரு பக்கம் வெளிச்சம் குறைவாகவும் இருக்கிறமாதிரி வைத்து நடுவில் இந்த மாதிரி கண்ணாடியை வைத்தால் வெளிச்சம் அதிகமா இருக்கிற சைடுல இருக்கிறவங்களுக்கு அவங்க மூஞ்சிதான் தெரியும். ஆனால் இருட்டா இருக்கிற அடுத்த பக்கம் இருக்கிறவங்களுக்கு வெளிச்சப் பகுதியில் இருக்கிறவங்களை நல்லா பார்க்க முடியும். நம்ம இங்கிலீசு சினிமாக்களில் அடிக்கடி இந்த சீன் வருமே அது மாதிரி.

அட! உங்களை இந்த மாதிரி ஒரு அறையில் போட்டு வச்சிட்டு அந்தப் பக்கம் இருந்து உங்களை யாரோ உளவு பார்க்கிறது மாதிரி ஒரு சந்தேகம் வந்திருச்சின்னு வச்சுக்கங்க, அது சரியான்னு எப்படி பார்க்கணும்னு தெரிஞ்சிக்கங்க. கையில் ஒரு flash light எடுத்துக்கங்க; டகார்னு உங்க ரூம் லைட்டை அணைச்சிட்டு, டக்குன்னு அந்தக் கண்ணாடியை ஒட்டி உங்க கையில் இருக்கிற லைட்டை கண்ணாடியை ஒட்டி அடிங்க. இப்ப உங்க பக்கம் இருட்டு; அந்தப் பக்கம் வெளிச்சம் ஆயிருமா.. அந்தப் பக்கம் இருக்கிறது உங்களுக்கு நல்லா தெரிஞ்சிரும்.

பி.கு.

உங்க கார்ல sun screen ஒட்டி கண்ணாடியையெல்லாம் கருப்பாக்கி வச்சிருந்தீங்கன்னா, பகல்ல உங்களுக்கு நல்லா வெளிய தெரியும். ராத்திரி ஆச்சுன்னா வெளிய ஒரு மண்ணும் தெரியாது. ஓட்டுனருக்காக முன் கதவில இருக்கிற ரெண்டு பக்கக் கண்ணாடியில் டிசைனா sun screen-யை வெட்டி விட்டுக்க வேண்டியதுதான்!