வெண்பா விதிகள்
- இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம்.
- ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும்.
- எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும்.
- கனிச்சீர் வரக்கூடாது. அதாவது போன பதிவில் சொன்ன மாதிரி எடுத்துக்காட்டுகளில் தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என்ற நான்கு வகைகளும் வரக்கூடாது.
- கடைசி வரியின் (இதைத்தான் ஈற்றடின்னு சொல்லுவாங்க) கடைசி சீர் "நாள் , மலர் , காசு , பிறப்பு " என்பது போல வரவேண்டும்.
தளை தட்டுதல்
வெண்பா எழுதும் போது ஒரு சொல்லுக்கும் அதன் அடுத்து வரும் சொல்லுக்கும் எந்த விதமான உறவு இருக்கலாம் என்பதற்காக சில விதிமுறைகள் இருக்கு. இந்த விதிமுறைகளை மீறினா தளை தட்டுதல் என்பதைப் போன பதிவில் பார்த்தோம். தளை தட்டாம எழுத மூணு விதிகள்தான் இருக்கு.
- காய் முன் நேர்
- விளம் முன் நேர்
- மா முன் நிரை
இங்க முன் அப்படின்னா followed byன்னு அர்த்தம். ஆக தேமா, புளிமா என வரும் சீர்களை அடுத்து வரும் நிரை கொண்டு தொடங்க வேண்டும். மற்ற சமயங்களில் எல்லாம் நேர் கொண்டு தொடங்க வேண்டும். இதுக்காகத்தான் ஒரு சீரில் ஒன்றுக்கு மேல் வார்த்தைகளோ அல்லது ஒரு வார்த்தையை ரெண்டு சீராக பிரித்தோ வருது. இந்த விதிகள் ஒரு அடியில் இருக்கும் சீர்களுக்கு மட்டுமில்லாம ஒரு அடியின் கடைசி சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் கூட ஒத்து வரா மாதிரி பாத்துக்கணும்.
அவ்வளவுதான் ரூல்ஸ். அவ்வளவு கஷ்டம் மாதிரித் தெரியலைதானே. இப்போ ஒரு திருக்குறளை எடுத்து அலகிட்டுப் பார்க்கலாம்.
(ஒரு குறிப்பு : குறள் என்பது இரண்டு அடியில் எழுதப்படும் வெண்பா. இதை நிறையா பேரு ஒண்ணே முக்கால் அடி அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க. ஆனா அது சரி கிடையாது. இது இரண்டு அடிதான். இரண்டாவது அடியின் நீளம் மூன்று சீர்கள். )
சரி விஷயத்துக்கு வருவோம். முதல் குறளையே எடுத்துக்கலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அலகிடுதல்
மேற் சொன்ன விதிகளின் படி இப்பொழுது அசைகளைப் பிரித்துப் பார்க்கலாம்.
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நேர்
புளிமா புளிமா புளிமாங்காய் தேமா
பக/வன் முதற்/றே உல/கு
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்
புளிமா புளிமா புளிமா
தளை விதிகள் எப்படிப் பொருந்துகிறது எனப் பார்க்கலாம்.
அகர முதல - மா முன் நிரை
முதல் எழுத்தெல்லாம் - மா முன் நிரை
எழுத்தெல்லாம் ஆதி - காய் முன் நேர்
ஆதி பகவன் - மா முன் நிரை
பகவன் முதற்றே - மா முன் நிரை
முதற்றே உலகு - மா முன் நிரை
விதிகளுடன் ஒரு ஒப்பீடு
- இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம். - இரண்டு அடிகளில் இருக்கிறது
- ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும். - முதலடியில் நான்கு சீர்கள், இரண்டாவது அடியில் மூன்று சீர்கள்
- எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும். - மேலே கோடிட்ட படி பார்த்தீர்களானால் எல்லாச் சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டதாகவே இருக்கிறது.
- கனிச்சீர் வரக்கூடாது. - கனிச்சீர்கள் இல்லை.
- கடைசி வரியின் கடைசி சீர் " நாள் , மலர் , காசு , பிறப்பு " என்பது போல வரவேண்டும். - உலகு என முடியும் சீர் பிறப்பு என்பதை ஒத்து வருகிறது.
இப்படித்தாங்க வெண்பா எழுதணும். இதுக்கு மேல எதுகை, மோனை, ஓசை அப்படின்னு எல்லாமும் விஷயம் இருக்கு. முதலில் தளை தட்டாம எழுதப் பழகின ஒரு குழாம் வந்த உடனே, எதுகை மோனை பற்றிய பதிவு போடலாம்.
இப்போ எல்லாரும் தளை தட்டாம ஒரு வெண்பா எழுதுங்க பார்க்கலாம்.