Monday, October 30, 2006

சட்டை மடிப்பது எப்படி !

சுலபமாக இரண்டு செகண்டில் சட்டை மடிப்பது எப்படி !


ஞாயிறு போற்றுதும் ன்னு எங்கத் தாத்தா ரொம்ப நாளுக்கு முன்னாடியே சொல்லிட்டு போயிட்டார். நானும் தாத்தாச் சொல்லைத் தட்டாமல் ஞாயிறு ஆனா எந்த வேலையும் செய்யறது இல்லை. ஆனானப்பட்ட கடவுளே ஞாயிறு அன்னைக்கு ரெஸ்ட எடுத்தப்போது நாம் யாரு வேலை செய்ய.

ஆனாலும் பாருங்க, ஞாயிறுக்கிழமைதான் நமக்கு துணி துவைக்கும் நாள் ! வாஷரில் போட்டு ஒரு அரை மணி நேரம், அப்புறம் ட்ரையரில் போட்டு இன்னும் ஒரு முக்கா மணி நேரம். அப்புறம் அது எல்லாத்தையும் அயர்ன் பண்ணி, மடிச்சு வைக்க இன்னும் ஒரு மணி நேரம். இதுக்கே மூணு மணி நேரம் போச்சுதுண்ணா அப்புறம் எங்க ஞாயிறைப் போற்றுவது !

சமையலுக்கு அப்புறம் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணறது இந்த லாண்டிரிக்காத்தான். தமிழில்(?!!) எனக்கு பிடிக்காத வார்த்தை இந்த லாண்டரினு ஆயிப் போச்சு.


வலையில் அங்க இங்க மேய்ஞ்சப்போது, மிக எளிதாகதுணி மடிக்கும் இந்த வீடியோ மாட்டுச்சு. நிஜமாவே நல்ல டெக்னிக்த்தான். செய்துப் பாருங்களேன் எவ்வளவு சீக்கிரம் துணி மடிக்க முடியுது உங்களாலே என்று !


படத்தை கிளிக்கினால் படம் தெரியும் !


how to fold a shirt

இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிப்பது எப்படி? (30 Oct 06)

தேவ் அண்ணன் அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டு இந்த விக்கி வலைப்பூவுக்கு போணி செய்து வைத்திருக்கிறார். அவருக்கு விக்கிப்பசங்க சார்பா ஒரு ஓ!

இந்தியா கிரிக்கெட்லே ஜெயிக்கறது அவ்வளோ ஒண்ணும் கஷ்டம் கிடையாது சார். கொஞ்ச நேரம் என் மூளையைக் கசக்கி யோசிச்சதிலேயே பல மெத்தட்ஸ் கிடைச்சுது. அவை உங்கள் பார்வைக்கு. யாராவது இதை ICC, BCCI க்கு எடுத்துப் போயி சொன்னாலும் எனக்குப் பிரச்சினையில்லை. காப்பிரைட் அப்படின்னெல்லாம் எந்தப் பிரச்சினையும் பண்ணமாட்டேன்.

முறை ஒன்று: ஹர்ஷா போங்ளே முறை (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் கிடையாது)

நான் சின்னவயசிலே ஊர்லே புளியந்தோப்புலே கிரிக்கெட் ஆடினப்ப எங்க டீம் எல்லா டீமையும் வெற்றிவாகை சூடியதுக்கு முக்கியமான காரணம் எங்க பேட்டிங் பௌலிங் எல்லாம் கிடையாது. எங்கள் ஆஸ்தான ஸ்கோரர் ராஜா தான். நாங்கள் ஆடும்போது வந்த டாட் பாலெல்லாம் அவன் கைநடுக்கத்துலே(?!) 1 ஆகும். ரஜினி படத்தைப்பத்தியும் ஓணான் வாத்தியாரையும் பத்தி பேசிக்கிட்டே மூணு ஓவருக்கு முன்னே அடிச்ச 1 - 4 ஆகும். எப்படின்னே தெரியாம எல்லா மேட்சிலேயும் 20 - 30 ரன்னுலே ஜெயிச்சுடுவோம். அவனை எப்படியாவது லொக்கேட் பண்ணனும். இந்தியா டீமுக்கு ஸ்கோரர் ஆக்கணும்.

முறை இரண்டு: ஷோலே முறை

முறை ஒண்ணு கஷ்டம்னு நெனைச்சீங்கன்னா, ராம்கோபால் வர்மா மாதிரி ஷோலே ரீமேக் பண்ணிடலாம். எல்லாத்தையும் பண்ணாட்டாலும், அந்தக் காயினை மட்டுமாவது ரீமேக் பண்ணி டாஸுக்கு உபயோகப்படுத்தலாம். என்ன, டாஸிலே வின் பண்ணா மட்டும் போதாதுன்றதாலே, இந்த முறையைத் தனியா பயன்படுத்த முடியாது.

முறை மூன்று: Do or Dice முறை

தாயக்கட்டம் ஆடும்போது தாயம் போடாம முன்னேற முடியாது இல்லையா? அதே போல சிக்ஸர் அடிக்கறதுக்கு முன்னே எதிர் டீம் எவ்வளவு ரன் அடிச்சாலும் கணக்குலே சேராதுன்னு ஒரு அமெண்ட்மெண்ட் கொண்டு வந்துடலாம். இந்தியாக்கு அப்ளை ஆகாதுன்னு சொல்லவேண்டியதில்லை.

முறை நான்கு: விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

என்ன அநியாயம் சார் இது? 2 கோடி ஜனத்தொகை உள்ள ஆஸ்திரேலியாவிலிருந்து 11 பேர்தான் ஆடறாங்க, 110 கோடி உள்ள நம்ம நாட்டிலேயும் 11ஏ பேர்தானா? அவங்களுக்கு 11 பேர்னா நமக்கு 605 பேர், இல்ல நமக்கு11 பேர்னா அவங்களுக்கு 2 பேர் - இதான நியாயமா இருக்கும்? அதே போல பீல்டர், ஒவர் எல்லாத்துலேயும் வி.பி முறைய கொண்டுவந்தா எந்த டீம் நம்ம முன்னாலே நிக்க முடியும்?

முறை ஐந்து: ஜனநாயக முறை

அது என்ன சார்? மூணே முணு அம்பயராம், அதுவும் எதோ பேனலாம் அங்கே இருந்துதான் வருவாங்களாம்! இந்தியாலே நடக்குற அத்தனை மேட்ச்லேயும் எல்லா பார்டர் டெசிஷனும் மக்கள்கிட்டே கருத்துக் கணிப்பு நடத்தி அதன்படி நடந்தாத்தானே ஜனநாயகத்தைக் காப்பாத்த முடியும்? மெட்ராஸ்மாதிரி சில இடங்கள்லே இந்த முறைபேக்பயர் ஆனாலும், ஜம்ஷெட்புர், கல்கத்தாலே யோசிச்சுப்பாருங்க!

நீங்களும் முறைகளை யோசிச்சுச் சேருங்க!

பிற்சேர்க்கைகள்:

podakkudian முறை: என்னை கேட்டால் திமுக விடம் இந்திய அணியை ஒப்படைத்தால் வெற்றி நமதே
உபயம்: உள்ளாட்சி தேர்தல்

சின்னவன் முறை: அப்பிடியே நம்ம அஜீதை ( இது இந்திப் பட வில்லன் அஜீத்) விட்டு ஃபான்டிங்கோட பொண்டாடியையும், மெக்ராத்தின் பிள்ளைகளையும் கடத்த சொல்ல வேண்டியதுதான்.

இலவசக்கொத்தனார் முறை: பாக்கிஸ்தானோட கூட்டணி வெச்சுக்கலாம். ஜெயிச்சா கப்பை எடுத்துக்கிட்டு வந்திடலாம். தோத்தா 'பச்சை' துரோகம் அப்படின்னு கூப்பாடு போடலாம்.

மாயக்கூத்தன் கிருஷ்ணன் முறை: பேசாம நம்ம கைப்புள்ளய ஆட விடலாம்..நன்மைகள் சில

முதல் பால்ல அவுட் ஆனா 'அது போன பால்' அப்படின்னு சாமளிக்கலாம்..

'கிரிக்கெட் விரனுக்கு அழகு சிக்ஸரோ விக்கெட்டோ எடுப்பது அல்ல..எத்தனைதடவை அவுட்டானாலும் கீரிசையும்,டீமிலிருந்து போகமல் இருப்பதுதான்.' அப்படின்னு சவுன்டு விடலாம்.(இது தற்சமயம் உள்ள வீரர்களுக்கும் பொருந்தும்).அதையும் மீறி யாரவது கேட்டால்..
'இங்க பாருங்கப்பா..இவன் எத்தனை பெளன்ஸர் போட்டாலும் நம்ம டிராவிட் மாதிரி உடம்புலயும்,காலிலும் அடி வாங்கி ரொம்ப பொறுமையா இருக்கன்ப்பா' அப்படின்னு ஒருசிம்பத்தி கிரியேட் பண்ணாலாம்..

பெளலர் ஒடி வரும் போது நம்ம கைப்பு பேட்டோ பெளலர நோக்கி ஒடனும்..பெளலர் அதைப் பார்த்து அலறி ஓட நம்ம கைப்புக்கு ரன்னும் கிடைக்கும்,அவுட்டும் ஆகாமல் இருக்கலாம்.

கடைசியா ஒரே வழி கண்டிப்பா எப்பவும் ஜெயிக்கற வழி..பேசாம நம்ம ப ம க(பச்சோந்தி மக்கள் கட்சி) தலையை ஆட விடலாம்..கண்டிப்பா ஜெயிக்கிற கட்சிலதான் இருப்பாரு..

கைப்புள்ளைக்குத் தோனுன கொஞ்சம் கடுமையான, காட்டுத் தனமான ஐடியா - ஆட்டத்துல ஜெயிச்சிட்டு வந்தாத் தான் ராத்திரி சோறு கெடைக்கும்ன்னு ஒரு கண்டிஷன் போடலாம். தோத்துட்டு வந்தா காலையிலயும் மதியானமும் சாப்புட்டதுக்குக் காசைக் குடுக்கனும்னு ஒரு கண்டிஷன் போடனும்(காசு இல்லன்னா பாத்திரம் தேய்ச்சு குடுக்கனும், துணி தோய்ச்சு போடனும்).

Sunday, October 29, 2006

உனக்காக எல்லாம் உனக்காக....

... இந்த வலைப்பூவும் வரும் பதிவுகளும் உனக்காக!!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விபரங்கள் - கேள்வி பதிலாய்.

யார் இந்த விக்கிப்பசங்க?

சில சமயம் நாங்க (பக்கத்துலே Contributorsனு லிஸ்ட் இருக்கு பாருங்க), சில சமயம் நீங்க, எல்லா சமயமும் நாம்.

எதுக்காக இவங்க?

சமையல் பண்றதுலே ஆரம்பிச்சு, கோட் எழுதறது, பதிவு போடறது, பல் தேய்க்கறதுன்னு ஆளாளுக்கு ஆயிரம் சந்தேகங்கள். இதை யாருகிட்டே கேக்கறது, யாரு பதில் சொல்வாங்கன்னு தெரியாமலேயே தோல்வியை ஒப்புக்கொண்டு விடுகிறோம். சரி பதிவு எழுதாட்டா? அதனால ஒண்ணும் பிரச்சினையில்லைதான், நாடு நாசமாப் போயிடாதுதான். ஆனா பல் தேய்க்காட்டா? சுற்றுப்புற சூழல் பத்தி கவலைப்பட வேணாமா? அதனால தாராளமா எல்லாக் கேள்வியும் கேளுங்க!

எல்லாக்கேள்விக்கும் உங்களுக்கு விடை தெரியுமா?

எங்களுக்கு விடை தெரியாத கேள்வியே இந்த உலகத்திலே கிடையாதுங்க! என்ன, பல சமயம் விடை "தெரியாது"ன்னு இருக்கும். ஆனா, எப்படியாவது நாங்களோ, நீங்களோ தேடிக் கண்டுபிடிச்சு விளக்கிடுவோம்.

யார் பதிவு போடுவாங்க?

நீங்களும் போடலாம். கேள்விக்குத்தான் விடைன்னு இல்லாம, கேள்வியும் நானே, பதிலும் நானேன்னு ஒரு பதிவை உருவாக்கி எங்களுக்கு அனுப்பினீங்கன்னா அதை ஒரு முறை பார்த்துட்டு உங்க பேரோட பதிப்பிச்சிருவோம். பின்ன,ஆரஞ்சு ஜூஸ் குடிக்கறது எப்படின்னு ஆறுகோடித் தமிழர்களும் கொத்தனார்கிட்ட கேட்டாங்களா என்ன?

எப்படி கேள்வி கேக்கறது?

எப்படி வேணும்னாலும் கேக்கலாம். அதுக்காக ____ வலைப்பதிவருக்கு கிறுக்கு பிடித்தது எப்படி?ன்ற மாதிரி தனிநபர் சம்மந்தப்பட்ட கேள்வியக் கேட்டு எங்களைக் கஷ்டப்படுத்தாதீங்க. நகைச்சுவையான பதிலை வரவழைக்கற மாதிரி கேள்வியா இருந்தாலும் சரி, சீரியஸான பதிலை வரவழைக்கிற கேள்வியா இருந்தாலும் சரி - wikipaiyan AT gmail DOT com என்ற முகவரிக்கு தட்டி விடுங்க. உடனடியா கேள்விய போஸ்ட் பண்ணிடுவோம். விடை தெரிஞ்சவங்க, அல்லது கலாய்க்கிறதுன்னு முடிவு கட்டிட்டவங்க, போஸ்ட் ஆன கேள்விக்கு பதிவின் உரலைக் குறிப்பிட்டு பதில் போட்டிங்கன்னா அதையும் உடனடியா பதிஞ்சிடுவோம். (24 மணிநேரமும் எங்க ஆளுங்க வலையிலே உலாவிகிட்டு இருப்போமில்ல!)

பதில் யாரு சொல்லலாம்?

கேள்வி சம்மந்தப்பட்ட துறையாளர்களிடம் இருந்து, கூகுளாண்டவர் கிட்டே நேர்ந்துகிட்டு, எங்க கொஞ்ச அறிவைப் பயன்படுத்தி நாங்க பதிலை வாங்க முயற்சி செய்வோம். அதே நேரத்தில படிக்கறவங்களுக்கு இந்த விஷயத்திலே வெளிச்சத்தை தூக்கிப் போடமுடியும்னு நம்பிக்கை இருந்தா அவங்களும் எழுதலாம்.

பதில் சொல்றதுக்கு எதாச்சும் வரைமுறை இருக்குதுங்களா?

பெரிசா ஒண்ணும் கிடையாதுங்க. கலாய்க்கிற பதில்னா அதை ஒரு மூலையிலே குறிப்பிட்டுடுங்க.. அதைத் தனியா கட்டம் கட்டி போட்டுடுவோம். ஆனா சீரியஸான பதில்னா, எங்கே இருந்து பதில் வந்துதுன்னு ஒரு ஆதாரம், ஒரு சுட்டி, ஒரு நன்றி குறிப்பிட்டு வைக்கிறது உத்தமம். நன்றி கெட்டவங்கன்னு நம்மளை யாரும் நாக்கு மேலே பல்லைப்போட்டு சொல்லிடக்க்கூடாது பாருங்க.

"நமக்குத் தெரிஞ்ச விஷயம் மத்தவங்களுக்குத் தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்குத் தெரிஞ்சது நமக்குத் தெரியாம இருக்கலாம். அறிவு பகிர்வதால் கூடும்"அவ்வளவுதாங்க இந்த வலைப்பூவின் நோக்கம்.

எங்களுடைய வேலைன்னு பார்த்தா கேள்விகளை வாங்கறதும் பதில்களை வாங்கறதும் பதிப்பிக்கறதும் மட்டும்தான். இது ஒரு பொது வலைப்பூ.

இதன் வெற்றி, தோல்வி உங்க கையிலதான், சரி, உங்க கீ போர்ட்டில்தான் இருக்கு. மறந்திடாதீங்க.