Friday, March 23, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

கல்யாணி ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு. கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள். எந்த ஒரு மங்களகரமான நிகழ்விற்கும் இந்த கல்யாணி தான் துணை நிற்பது. ஆகையால் கல்யாணி ராகத்தினை இசைத்திட்டால், திருமண சம்பந்தங்கள் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! இந்த ராகத்தினால் உண்டாகும் பயன்களை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எல்லாம் நமக்கு தெரிவிக்கின்றன். பயம் என்பது எத்தனை ரூபமெடுத்தாலும், அது ஏழ்மையின் பயமானாலும் சரி, காதலின் பயமானாலும் சரி, இல்லை பெரிய சக்திகளின் பயமானாலும் சரி, அல்லது ஆரோக்கிய வாழ்வற்ற பயமானாலும் சரி, ஏன் மரணபயமானாலும் சரி, இந்த ராகத்தில் அமைந்த இசையை கேட்டால் அத்தனை பயங்களும் நம்மை விட்டு அகன்றோடிவிடும் என்ற பெரிய நம்பிக்கையுண்டு!

இந்த ராகத்தினை பற்றி பேசும் பொழுது இதற்குப்பின்னே நடந்த சில சம்பங்கள் உடனடியாக மனைதில் விளையும்! அதாவது தியாகராஜய்யர், தஞ்சை அரசனின் புகழ்பாட மறுத்து கடவுள் துதியாக 'நிதி சால சுகம்மா ரமணி சந்நிதி சேவ சுகம்மா' என்ற கீர்த்தனையை இந்த கல்யாணி ராகத்திலே பாடிய சரித்திரமுண்டு! இந்த ராகத்திலே எழும் பாவம் உணர்ச்சி பூர்வமாக பாடப்படும் அத்தனை பாடல்களும், கீர்த்தனைகளும் ஒரு அழகான சப்த வடிவத்தை கொடுக்கும்! அதற்கும் மேலே இந்த ராகம் ஒரு பரிபூரண இல்லை சம்பூரண ராகம். ஆக ஏழு ஸ்வரங்களும் கைகோர்த்து ஜதியாடும்! இந்த ராகம் ஆர்ப்பாட்டமாகவும் இசைந்து கொடுக்கும், அதே சமயத்தில் அமைதியாகவும் ஸ்வரம் பாடும்.

இந்த கல்யாணி ராகத்தினால் தேவி துதிபாடிய சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனையான, 'ஹிமத்ரிஸ்தே பகிமம்' என்பது அனைத்து சக்தியைய்ம் அன்னையிடமிருந்து பெற வழிகோணியதாம். அதே போல் இந்த ராகத்திலே, முத்து சாமி தீட்சதர் அவர்கள் படைத்த சொர்க்க ராக கீர்த்தனையான 'கமலாம்பாள் நவவர்ணம்' என்ற கீர்த்தனையை கொண்டு, கிரங்களின் இடமாற்றத்தால் உண்டாகும் துர்பாக்கியத்தை அகற்றி நல்வழிபிறக்க உதவ வழிசெய்யும் என்ற நம்பிக்கையுண்டு!

இப்படி பல குண நலன்களை கொண்ட இந்த ராகத்தால் அமைந்த சினிமா பாடல்கள் அநேகம். அதில் முக்கியமாக, காலத்தால் அழியாத பாடல்களை சொல்ல வேண்டுமென்றால் அம்பிகாபதி என்ற படத்தில் டிஎம்ஸ் பாடிய, 'சிந்தனை செய் மனமே' என்ற பாடலும், கேவி மகாதேவன் இசை அமைத்த "மன்னவன் வந்தானடி" என்ற திருவருட்செல்வர் படத்திலே வந்த பாடலையும் குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்ல இளையராஜா இந்த ராகத்திலே ஏகப்பட்ட பாடல்களை அள்ளி வழங்கி இருக்கிறார். இதை ஹிந்துஸ்தானி ராகத்தில் 'யமன்' என்றழைப்பார்கள், அதிலே அமைக்கப்பட்ட சில பழைய ஹிந்திபாடல்கள் மற்றும் பல பாடல்களை இந்த பாட்காஸ்ட்டில் கேளுங்கள்!

இதன் முதல் பாகமாக இந்த பாட்காஸ்ட்டை கேளுங்கள்!



The Healing Raagaas! - Kalyani (Part-1)

தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

Sunday, March 18, 2007

Mirror Mirror on the wall!!

Who is the fairest of them all அப்படின்னு எழுதினா என்னென்ன பிரச்சனை வருமோ தெரியலை. ஆனா அதைப் பத்தி ஒரு கேள்வி வந்தது நம்ம தருமி கிட்ட இருந்து. அது என்னன்னா
One way mirror-ன் அறிவியல் என்ன?
கார் கண்ணாடியில் ஒட்டப் படும் film-ம் அதே வேலையைச் செய்கிறதே, எப்படி?
இதைக் கேட்டுட்டு மனுசனுக்குப் பொறுமையே இல்லை. நம்ம கிட்ட விட்டு இருந்தா நல்ல பதிவா போட்டு இருப்போமில்ல. அதுக்குள்ள அவரே தேடிக் கண்டுபிடிச்சு பதிலையும் எழுதி அனுப்பிட்டாரு. (இந்த மாதிரி எல்லாரும் செஞ்சா எங்க வேலை எவ்வளவு ஈசின்னு பாருங்க!) பொதுவா வாத்தியார் கேள்வி கேட்டா மாணவர்கள்தான் பதில் சொல்லணும். அவங்க குடுத்த நேரத்தில் பதில் சொல்லாததால் வாத்தியாரே பதில் சொல்லிட்டாரு!! அதுக்கு மேல நாம என்னத்தைச் சொல்ல. அவர் பதிலை நீங்களே படிச்சுக்குங்க. சந்தேகம் எல்லாம் பின்னூட்டமா போடுங்க. தலைவர் வந்து பதில் சொல்லுவாரு. ஐயாம் தி எஸ்கேப்!

இனி தருமி.....

ஒளி ஊடுறுவதைத் தடுப்பதற்காகச் சாதாரண கண்ணாடியில் ரசம் பூசுறோம். ஒளி இப்போது ஊடுறுவ முடியாததால் கண்ணாடியில் விழும் ஒளி பிரதிபலிக்கும். அதனாலதான் அந்தக் கண்ணாடி முன்னால் இருக்கும் நம்ம அழகான மூஞ்சி திருப்பி நம்மையே பார்க்கிறது. இப்படி பூசப்படும் ரசம் கூட முழுமையாகப் பூசப்படுவதில்லை. அரைகுறையாகத்தான் பூசப்படுகிறது. அதற்குப் பதிலாக கண்ணாடியின் பின்புறம் ஒளி ஊடுறுவமுடியாத படி கறுப்பு அல்லது சிவப்பு பெயிண்ட் அடிச்சிடறாங்க. இப்படி பூசுற ரசத்தை இன்னும் கொஞ்சம் குறைவாகப் பூசி, அதோடு பின்னால் பூசும் பெயிண்டையும் அடிக்காமல் விட்டால் என்ன ஆகும்? ஒளி அரைகுறையா ஊடுறுவறது மாதிரி ஆயிடும்.

இந்த one way mirror அப்டிங்கிறது இதுதான். அதாவது ஒளி அரைகுறையாக ஊடுறுவமுடியும். ஒரு பக்கம் வெளிச்சம் அதிகமாவும் இன்னொரு பக்கம் வெளிச்சம் குறைவாகவும் இருக்கிறமாதிரி வைத்து நடுவில் இந்த மாதிரி கண்ணாடியை வைத்தால் வெளிச்சம் அதிகமா இருக்கிற சைடுல இருக்கிறவங்களுக்கு அவங்க மூஞ்சிதான் தெரியும். ஆனால் இருட்டா இருக்கிற அடுத்த பக்கம் இருக்கிறவங்களுக்கு வெளிச்சப் பகுதியில் இருக்கிறவங்களை நல்லா பார்க்க முடியும். நம்ம இங்கிலீசு சினிமாக்களில் அடிக்கடி இந்த சீன் வருமே அது மாதிரி.

அட! உங்களை இந்த மாதிரி ஒரு அறையில் போட்டு வச்சிட்டு அந்தப் பக்கம் இருந்து உங்களை யாரோ உளவு பார்க்கிறது மாதிரி ஒரு சந்தேகம் வந்திருச்சின்னு வச்சுக்கங்க, அது சரியான்னு எப்படி பார்க்கணும்னு தெரிஞ்சிக்கங்க. கையில் ஒரு flash light எடுத்துக்கங்க; டகார்னு உங்க ரூம் லைட்டை அணைச்சிட்டு, டக்குன்னு அந்தக் கண்ணாடியை ஒட்டி உங்க கையில் இருக்கிற லைட்டை கண்ணாடியை ஒட்டி அடிங்க. இப்ப உங்க பக்கம் இருட்டு; அந்தப் பக்கம் வெளிச்சம் ஆயிருமா.. அந்தப் பக்கம் இருக்கிறது உங்களுக்கு நல்லா தெரிஞ்சிரும்.

பி.கு.

உங்க கார்ல sun screen ஒட்டி கண்ணாடியையெல்லாம் கருப்பாக்கி வச்சிருந்தீங்கன்னா, பகல்ல உங்களுக்கு நல்லா வெளிய தெரியும். ராத்திரி ஆச்சுன்னா வெளிய ஒரு மண்ணும் தெரியாது. ஓட்டுனருக்காக முன் கதவில இருக்கிற ரெண்டு பக்கக் கண்ணாடியில் டிசைனா sun screen-யை வெட்டி விட்டுக்க வேண்டியதுதான்!

Sunday, March 11, 2007

தட்டு தட்டுன்னு தட்டணும் தட்டணும்!!!

நம்ம ஜெயசங்கர் இருக்காரு இல்லையா, என்னது அது யாரா?, அதாங்க நம்ம We the People ஜெயசங்கர். அவரு வந்து ஒரு கேள்வி கேட்டு இருக்காரு. நம்ம தினமும் யூஸ் செய்யும் இந்த கணிணி கீ போர்ட்ல ஏன் எல்லா எழுத்தும் கலச்சுப்போட்டிருக்காங்க? நேரா நம்ம கிட்ட வந்திருக்கலாமில்ல. அதை விட்டுட்டு அவரு நண்பர் அருள் கிட்ட போயி கேட்டு இருக்காரு. அவரும் முதலில் டைப் ரைட்டரை கண்டுபிடித்தவர், நம்ம மெதுவாக டைப் அடிக்கவேண்டும் என்பதற்காக தான் இப்படி கலைத்து போட்டதாகவும், காலப்போக்கில் அதை அப்படியே பின்பற்றுவதாகவும் சொல்லறாரு! இது உண்மையா அப்படின்னு நம்மளாண்ட வந்து கேட்டு இருக்காரு. இந்த கேள்விக்குப் பதில் சொல்லறதுக்கு முன்னாடி, இந்த விசைப்பலகையின் வரலாற்றைப் பத்தி கொஞ்சம் பார்க்கலாமா.

இந்த விசைப்பலகையை கண்டுபிடித்தவர் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் (Christopher Sholes) என்ற பத்திரிகையாளர். கண்டுபிடிச்சது இன்னைக்கு நேத்து இல்லை, 1860களில். சரியாச் சொல்லணுமுன்னா 1868. முதலில் இவரு எழுத்துக்களை எல்லாம் வரிசையாகத்தான் வெச்சிருந்தாராம். அப்புறம் எங்க டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் சுப்பராமன் சார் அவர் கனவில் வந்து இந்த மாதிரி இருந்தா நான் எப்படி asdfgf அப்படின்னு பசங்க விரலை எல்லாம் உடைக்க எனக் கேட்டு பயமுறுத்த அதனாலேயே இவர் இப்படி எழுத்துக்களை கலைத்துப் போட்டுவிட்டாராம். :)) இப்படி எல்லாம் ஸ்க்ரீன் ப்ளே வைக்க சான்ஸ் இல்லாமப் போச்சே. அவரு கலைத்துப் போட்டதுக்கு காரணம் வேறயாச்சே. அது என்னான்னு பார்க்கலாமா.

முதலில் இந்த எழுத்துகள் எல்லாமே ரெண்டு வரியில் வரிசையாத்தான் இருந்தது. அந்த காலத்தின் தொழில்நுட்பத்தில் அது ஒரு சின்ன ப்ராப்ளமாகிப் போச்சு. நம்ம எல்லாருமே டைப்ரைட்டரை பாத்து இருக்கோம். ஒரு எழுத்துக்கான பட்டனை அழுத்தினா அதற்குண்டான டைப்பார் (type bar) வந்து பேப்பரில் பட்டு அந்த எழுத்து பதிவாகுது. பக்கத்தில இருக்கற படத்தைப் பாருங்க. ஆனா அந்த விசைப்பலகையை கண்டுபிடிச்ச போது இப்ப உள்ள அளவு தொழில்நுட்பம் எல்லாம் இல்லாததுனால என்ன ஆச்சுன்னா இந்த டைப்பார்கள் வந்து அடுத்தடுத்து அடிக்கப்படும் பொழுது, ஒன்றோடு ஒன்று சிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதை எடுத்து விடறதே டைப் அடிக்கறவங்களுக்கு வேலையாப் போச்சு. அதுனால நம்ம கிறிஸ்டோபர் என்ன செஞ்சாருன்னா அடிக்கடி தட்டெழுத்தப் படுகின்ற எழுத்துக்களை எல்லாம் தள்ளித் தள்ளி வெச்சு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டு வந்தாரு.
சிலவங்க, இந்த டைப்பார்கள் சிக்காம இருக்கணும் என்பதற்காக தட்டெழுதுபவர்களின் வேகத்தைக் குறைப்பதற்காக இப்படி எழுத்துக்களை கலத்துப் போட்டதாக சிலர் சொன்னாலும், சிக்கிய டைப்பார்களை விடுப்பதில் செலவழிக்கும் நேரத்தை குறைத்து தட்டெழுதும் வேகத்தை அதிகப்படுத்துவதாகச் சொல்பவர்களும் உண்டு. ஆகவே இந்த விவாதம் நம்ம Coffee Toffee விளம்பரத்தில் சொல்ற மாதிரி The fight goes on!

ஆனால் பாருங்க, அந்த டைப்பார் தொழில் நுட்பம் எல்லாம் தாண்டி வந்த பின்னும் இந்த விசைப்பலகைதான் நிலைச்சு நிக்குது. எல்லாம் First Mover Advantageதான். இதைத்தாண்டி DVORAK, AZERTY என்றெல்லாம் வேறு விசைப்பலகைகள் வந்தாலும் உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாலே மாற்றம் காணாமல் இந்த QWERTY விசைப்பலகை நம்மோடு இருக்கிறது.

சில ருசிகரத் துணுக்குகள்
  • TYPEWRITER என்ற வார்த்தையை விசைப்பலகையின் முதல் வரியில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே தட்டச்சு செய்ய முடியும்.
  • முதலில் தட்டெழுதுவது பெண்கள் செய்யும் வேலை என்றிருந்தாலும் முதலில் உபயோகப்படுத்தியவர்கள் ஆண் ரயில்வே கிளார்க்குகள்தான்
  • தனது கண்டுபிடிப்பை கிறிஸ்டோபர் 1873ஆம் ஆண்டு ரெமிங்டன் நிறுவனத்தாருக்கு விற்றுவிட்டார்
  • முதல் விசைப்பலகைகளில் Uppercase (Capital) எழுத்துக்கள் மட்டுமே இருந்தது.
  • பின்னர் Lowercase எழுத்துக்கள் கொண்டு வருகையில் அதற்காக டைப்பாரை மாற்றும் பட்டனுக்கு Shift எனப் பெயர் வைத்தார்கள். இன்று அப்படி எதுவும் மாற்றப்படவில்லை என்றாலும் அந்த பெயரே நிலைத்து விட்டது. இதுவே இது வரை விசைப்பலகை டிசைனில் நடந்த ஒரே ஒரு பெரிய மாற்றம். கீழ படத்தில் இருப்பதுதான் ரெமிங்டன் 2 என்ற அந்த டைப்ரைட்டர்.
  • முதலில் வந்த டைப்ரைட்டர்கள் பெரிய வெற்றி அடையவில்லை. இந்த மாற்றத்திற்குப் பின்னரே வெற்றிப் பெற்றது.

இப்போ இவ்வளவு பெருமை இருக்கிற விசைப்பலகையைத் தட்டி எல்லாரும் கருத்து சொல்லுங்க பார்க்கலாம்!


சுட்டி 1
சுட்டி 2