Thursday, October 26, 2006

பாஸ்தா செய்வது எப்படி?

இத்தாலிய உணவு வகைகள்னாலே பீட்ஸாவுக்குத் தான் மவுசு ஜாஸ்தி. பாஸ்தாவின் மேன்மை இன்னும் நம்மூரில் அவ்வளவா தெரியவில்லை. பாஸ்தா இருக்கு பாருங்க. அருமையான சமாச்சாரம் இது. தினமும் சாதமே சாப்பிட்டு போரடிச்சு போச்சுன்னா, நூடுல்ஸ் தின்னு அலுத்துப் போச்சுன்னா பாஸ்தா பகவான் இருக்கவே இருக்கார். இதை எனக்கு அறிமுகப்படுத்தியது அண்டோனியோ கார்லுச்சியோன்னு ஒரு செப் தான். பிபிசியில வருவார். என்னவோ எதோன்னு இருந்த என் பயத்தை போக்கி, பாஸ்தாவின் மேன்மையை உணர்த்தியவர். அப்புறம் இன்னொரு கடவுள் டீலியா ஸ்மித். இவங்க பிபிசி ப்ரைம்ல வருவாங்க.

பாஸ்தாவில நிறைய வகைகள் இருக்கு. ஸ்பாகெட்டி, மாக்கரோனி, பென்னி, ரென்னின்னு. எல்லாம் அடிப்படையில ஒரே மாவால ஆனதுன்னாலும், கலரிலும், வடிவங்களிலும் வித்தியாசங்கள் இருக்கும். சேமியா மாதிரிதான் என்றாலும் ஸ்பாகெட்டில கீரை, முட்டைன்னு பல வகைகள் இருக்கு. கொழுப்புச் சத்து குறைவானது பாஸ்தா என்பது டயட்டர்களின் கவனத்திற்கு. கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம். அதை இப்போதைக்கு விட்டுடுவோம்.

பாஸ்தா வரலாறுன்னு பாத்தீங்கன்னா இத்தாலிக்கு கிழக்கிலிருந்து திரும்பிய மார்க்கோ போலோ தான் அறிமுகம் செஞ்சார். ஆனா, நாலாவது நூற்றாண்டிலேயே பாஸ்தா மாதிரியான உணவுப் பண்டம் இருந்து வந்திருக்குன்னும் சொல்றாங்க. இத்தாலியில் வீடுகளில் அவர்களே ப்ரெஷ்ஷா மாவு பிசஞ்சு, பாஸ்தா செய்வதற்கேவென்று அச்சு இயந்திரங்கள் மூலமா அந்த மாவிற்கு வடிவங்கள் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் நமக்கு ஒத்துவராத விஷயம். ரெடிமேட் பாஸ்தாக்கள் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும். அதில இந்த மாக்கரோனி பாஸ்தா செய்யறது ரொம்ப சுலபம்.

சரி, இப்போ இந்தியனைஸ்ட் வெஜ் மாக்கரோனி வித் சீஸ் அண்ட் டொமேட்டோ சாஸ்

கேக்கவே ஏதோ exotic உணவோட பேர் மாதிரி இருக்குல்ல? இத நீங்களும் சமைக்கலாம். இருபது நிமிஷம் போதும். என்னென்ன தேவை?

1. மாக்கரொனி பாஸ்தா - 1 பாக்கெட் (பொதுவா 500 கிராம் இருக்கும்)
2. பீஸ்களா வெட்டி உறைய வைக்கப்பட்ட காய்கறிகள் (பீ.வெ.உ.வை.கா) - என்ன வேணா போட்டுக்கலாம் (பிராக்கோலி, காலிப்ளவர், காரட், கார்ன், பட்டாணி, மஷ்ரூம் இப்படி) இதுவும் 500 கிராம் இருந்தாப் போதும்
3. பூண்டு - இது ரொம்ப முக்கியம். நாலஞ்சு பல் தேவைப்படும். தோல உரித்துவிட்டு ஒரு மீடியம் சைஸ் பல்லை ரெண்டு அல்லது மூன்று பீஸ்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்
4. தக்காளி பேஸ்ட்
5. எண்ணெய், உப்பு
6. மசாலா - இந்தியனைஸ்டுன்னு சொல்லிருக்கோமே. பிஷ் மசாலா, சிக்கன் மசாலா என்று உங்களுக்கு தோணினது எதுவேணா
7. காரப்பொடி
8. சீஸ் - சிறிய துண்டு தனியாக வாங்கி ஸ்டிரிப்ஸாக வெட்டி வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் நான் செய்வது பிரெட்டிற்கு தடவ கிடைக்கும் சீஸ் ஸ்ப்ரெட். இதுதான் பெஸ்ட்.

அவ்வளவுதான். இனி ஆரம்பிக்கலாமா?

அடுப்பு பத்தவைக்கணும், பாத்திரத்தை வைக்கணுமெல்லாம் சொல்லப் போறதில்ல. அதனால, ஒரு பெரிய பாத்திரத்தில் பாஸ்தா பாக்கெட்டை மொத்தமாக கவுத்துடுங்க. கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி நல்லா மிக்ஸ் பண்ணிக்குங்க. இது எதுக்குன்னா பாஸ்தா ஒட்டிக்காம இருக்க. எவ்வளவு பாஸ்தா இருக்கோ அதுக்கு ரெண்டு மூன்று அளவு தாராளமா தண்ணீர் விடுங்க. அடுப்பு பத்தவெச்சாச்சா? குப்பத்தொட்டியில தூக்கிப்போட்டிருப்பீங்களே காலி பாஸ்தா பாக்கெட். அதை எடுத்து எத்தன நேரம் வேகவிடணும்கரத பாருங்க. அநேகமா 7-9 நிமிடங்கள் போதும். 10 நிமிஷத்திற்கு மேல் வேகவெச்சா சவசவன்னு ஆயிடும். அதனால அதுக்குமேல வேகவிடாம பாத்துக்கணும்.

இப்ப சாஸ். கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி அதில நாலு காஞ்ச மிளகா வேணுமுன்னா போட்டுக்கலாம். மிளகா தாளிச்சு முடிஞ்சோன்ன பீ.வெ.உ.வை.கா-களை போடுங்க. கொஞ்சம் ஜாக்கிரதை. காய்கறிகளை முன்னாடியே "thaw" செய்யணும்னு அவசியமில்லை. அதனால் கொஞ்சம் படபடவென்று வெடிக்கும். அதப் பாத்துட்டுகிட்டே ஒரு 5 நிமிஷம் இருங்க. நேத்திக்கு சாப்பிட்டு வெச்ச தட்டையெல்லாம் இந்த நேரத்திலே அலம்பலாம். அஞ்சு நிமிஷம் ஆச்சா? இருக்கற மசாலாவெல்லாம் வகைக்கொன்னுன்னு ஒரு சின்ன டீஸ்பூன் அளவு போட்டு காரப்பொடியும் உப்பும் வேனுங்கற அளவு சேத்துக்குங்க. உப்பு எப்பவுமே ஒரு டீஸ்பூன் அளவு கொஞ்சமா போட்டுட்டு சாப்பிடும் போது சேத்துக்கறது நல்லது. நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி வெச்சுருங்க.

இதுக்குள்ள பாஸ்தா வெச்சு குறிப்பிட்ட 7-9 நிமிடங்கள் ஆச்சுன்னா, அடுப்ப அணைச்சிடலாம். அடுப்ப ஆரத்தழுவச் சொல்லல. ஆப் பண்ணிடுங்கன்னு சொன்னேன். அப்படியே கொஞ்ச நேரத்திற்கு பாஸ்தா பத்தி மறந்துடுங்க.

சாஸுக்கு திரும்ப வருவோம். மசாலாவெல்லாம் நல்லா மிக்ஸ் ஆகி கமகமன்னு வாசனை வருதுன்னா, உடனே தக்காளி பேஸ்ட் போட்டு ஒரு அரை நிமிஷம் கிளறிட்டு எவ்வளவு சாஸ் வேணுமோ அவ்வளவு தண்ணி ஊத்திடுங்க. உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டீங்கன்னா சாஸ் திசைமாறிப்போயிடும். அதனால, சாஸுக்கு மட்டும் ஊத்துங்க. நிறைய சாஸ் பண்ணலாம்னு ரொம்பவும் கொட்டக்கூடாது. அப்புறம் ரசம் தான் மிஞ்சும். ரெண்டு மூணு கப் அளவு பொதுவா போதும். திரும்பி மூடி வெச்சுடுங்க. ஒரு கொதி வந்தவுடனே, நறுக்கிவெச்ச பூண்ட சேத்துடணும். அஞ்சு நிமிஷம் வெயிட். இதோ முடிவுக்கு வந்தாச்சு. சீஸ் ஸ்ப்ரெட் இருக்கே அத நல்லா மூணு நாலு ஸ்பூன் அளவு போடுங்க. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருந்தா சீஸ் அழகா உருகி மிக்ஸாகும். ரசமா இருந்தது கெட்டியா சாஸ் ஆகும். ஒரு கிளறு கிளறினா ரெண்டு நிமிஷத்தில இறக்கிடவேண்டியதுதான்.

சரி, இப்ப பாஸ்தான்னு ஒன்னு பண்ணோமே, நியாபகம் வருதா? அந்த பாத்திரத்திற்கு மூடி போட்டு, தண்ணிய மட்டும் கொட்டிடுங்க. கொஞ்சம் wet ஆக வெறும் பாஸ்தா மட்டும் இருக்கும்.

எப்படி சாப்பிடறது? ரெண்டுத்தையும் சாதம், குழம்பு மாதிரி சாப்பிடும் போது மிக்ஸ் பண்ணி சாப்பிடலாம். இல்லைன்னா சாம்பார்சாதம் மாதிரி சாஸ் பண்ணி முடிச்சோன்னவே ரெண்டத்தையும் ஒன்னா சேத்து premix பண்ணிடலாம். உங்களுக்கு எப்படியோ, அப்படி சாப்டுக்கலாம்.

40 comments:

said...

இன்னாபா இது ஒரே சாப்பாட்டு அய்ட்டமா இருக்கு. நாலு பேரும் சேர்ந்து ஓட்டல் ஆரம்பிக்க போறீங்களா?
என்ன உட்டுடிங்களே, நயமா? நாம்பாட்டுக்கு முனியாண்டி விலாஸ் அய்ட்டங்களே போடுவேனில்லே

said...

கால்கரி சிவா,
பந்திய முன்னாடி போட்டுட்டோம்னு வச்சுக்கங்க, அப்புறம் நம்ம மக்களுக்கு நிஷ்டை கைகூடிடும். நாங்க என்ன உளறினாலும் மைண்ட்ல ஏறாது. அதுனால ஒரு முன்னேற்பாடா பந்தியப் போட்டு அல்லாரையும் சாய்ச்சிடலாம்னுட்டு.

முனியாண்டி ஐட்டம்ஸ்தானே.. போடலாமே. கொத்தனார் வந்து கொத்தச் சொல்றேன். கேட்டுக்கங்க.

said...

பாஸ்தா செய்யுறதுல என்ன பெரிய பிஸ்தாவா நீங்க..?

..
பாஸ்தா இருக்கு பாருங்க. அருமையான சமாச்சாரம் இது.
..

நம்ம மேகீ நூடுல்ஸ் தான்...கொஞ்சம் குண்டா இருக்கும்...அதுக்குப் போயி இவ்வளவு பிள்டப்பா ? :D

நல்ல சமயல் குறிப்பு...Try பண்றேன்...

உங்களுக்கு வெளி நாட்டு சமயல்கள் பல சுவைத்து மகிழ்வது ஆசை என்றால்...குறிப்பாக ஆசிய சமையலுக்கு...

Wagamama சமயல் குறிப்புகளைத் தேடி வாங்கிக் கொள்ளுங்கள்...ஆசிய (இந்தியா இல்லாத) உணவு வகைகள் சமைக்க சிறந்த சமயல்...

இதிலிருந்து Teriyaki chicken fry சமைத்து ஜப்பானிய வம்சாவழிப்பெண்ணை மயக்கிவிட்டேன் என்ற ரகசியத்தை இங்கே உடைத்து விடுகிறேன்...!

எனக்கு இந்த காண்டினெண்டல் உணவுகள் அவ்வளவு பிரியம் இல்லை என்றாலும், பாஸ்டா, பீட்ஸா ஓகே...

said...

ஸ்பாகெட்டி, மாக்கரோனி, பீட்சா இது தான் நம்ம உணவு ஹைத்தியில் இருந்த ஆறு மாதங்களும், என்ன தான் சொல்லுங்க இந்த மேட்டரு எல்லாம் நம்ம ஊர் மேட்டர் முன்னாடி பிச்சை வாங்கனும்.

said...

கொஞ்சம் இதையும் படித்து(செய்து) பாருங்க...

http://thulasidhalam.blogspot.com/2005/04/blog-post_26.html

said...

//நாம்பாட்டுக்கு முனியாண்டி விலாஸ் அய்ட்டங்களே போடுவேனில்லே//

கால்கரியாரே, விட்டுடுவோமா? திங்கள் வரை வெயிட் பண்ணுங்க. விஷயம் என்னான்னு புரியும்!!!

said...

//Wagamama சமயல் குறிப்புகளைத் தேடி வாங்கிக் கொள்ளுங்கள்..//

அங்கயும் மாமாதான் சமையல் போல இருக்கு.:D

said...

//இந்த மேட்டரு எல்லாம் நம்ம ஊர் மேட்டர் முன்னாடி பிச்சை வாங்கனும்.//

உண்மைதான் புலி!

said...

//கொஞ்சம் இதையும் படித்து(செய்து) பாருங்க...//

வாங்க ஜெயஸ்ரீ. அதைப் படிச்சு பார்த்தாச்சு. இன்னும் செஞ்சு பார்க்கலை.

உங்களுக்கு இந்த பதிவில் வேலை இருக்கு. என்னான்னு திங்கள்கிழமை சொல்லறேன். :)

said...

என்னப்பா எதையாவது செஞ்சி தள்ளிக்கிட்டே இருக்கிங்க. நம்ம அண்ணாச்சி கடை வருமானத்தை பாத்துட்டு தனியா ஓட்டல் ஏதாவது ஆரம்பிக்க போறீங்களா என்ன?

said...

சொல்ல மறந்துட்டேனே. இதுவும் ராமநாதன் கிட்ட திருடினதுதான்.

said...

//அடுப்பு பத்தவெச்சாச்சா? குப்பத்தொட்டியில தூக்கிப்போட்டிருப்பீங்களே காலி பாஸ்தா பாக்கெட்//

ரொம்ப கரெக்டா சொன்னீங்க!...இத எத்தன வாட்டி பண்ணியிருப்போம்!

//நேத்திக்கு சாப்பிட்டு வெச்ச தட்டையெல்லாம் இந்த நேரத்திலே அலம்பலாம்.//

இதுவும் மிகவும் பொருந்தும்..
ரெசிப்பி சூப்பரப்பு...(சாப்பிட்டா தான் தெரியும்..)

said...

வாங்க சார்.

//.(சாப்பிட்டா தான் தெரியும்..)//

சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க.

said...

பாஸ்தாவை இத விட ஃபாஸ்டா சாப்பிட ஒரே வழி Olive Garden/Macaroni Grill போகறதுதான் :-)

said...

//பாஸ்தாவை இத விட ஃபாஸ்டா சாப்பிட ஒரே வழி Olive Garden/Macaroni Grill போகறதுதான் :-)//

வந்துட்டாரய்யா சொல்ல. அடுத்த தடவை அங்க போயி, சாப்பிடறதுக்கு முன்னாடி படம் எடுத்துப் போடுங்க. புரியுதா?

said...

எத படம் எடுக்கிறது ? பாஸ்தாவையா, இல்லை அதை ஃபாஸ்டா பரி(றி)மாறும் பாப்பாவையா ?

said...

//எத படம் எடுக்கிறது ? பாஸ்தாவையா, இல்லை அதை ஃபாஸ்டா பரி(றி)மாறும் பாப்பாவையா ?//

ரெண்டும்தான். பாஸ்தா பொது பார்வைக்கு. பாப்பா தனிப்பார்வைக்கு.

said...

வாங்க பாபிள், ஏன்னு கேட்கக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க. கேட்கலை.

சரி, அடுத்த முறை பாஸ்தா செய்யும் போது நீங்க சொன்னா மாதிரி ட்ரை பண்ணிட்டா போகுது.

said...

கொத்தனாரிடம் ஒரு பாஸ்தா ஐயம்!
இந்த பேசில் பேசில்-ன்னு சொல்லுறாங்களே; தமிழில் துளசியா? (நான் துளசிச் செடியைச் சொல்லுறேன்பா....); சில சமயம் அதையும் சாஸில் காண முடிகிறதே! வாசம் வேறு நல்லா வீசும். அதயும் எப்படி சாஸில் கலக்கறதுன்னு ஒரு கலக்கு கலக்கி விட்டிங்ன்னா, சனிக்கிழமை அதுவும் புண்ணியமாப் போகும் :-)

said...

கேட்கிற சந்தேகத்தில் கூட ஆன்மீக வாசனை வீசுதே. சும்மாவா சொல்லி இருக்காங்க ஷண்மதச் செம்மல் அப்படின்னு!

சரி விஷயத்துக்கு வருவோம். இந்த பேஸில் அப்படிங்கறது ஒரு வகை துளசிதான். இதோட டெக்னிக்கல் பேரு வந்து Ocimum basilicum. நம்ம பூஜைகளில் உபயோகிக்கும் துளசியின் பெயர் Ocimum tenuiflorum. அதனால் ரெண்டும் ஒண்ணு இல்லை ஆனா ஒரே குடும்பம்தான்.

இந்த பேஸில் வந்து சமையலில் பாவிப்பது வாசனைக்காகத்தான். அதனால அதிகம் உபயோகப்படுத்தக் கூடாது, அதிகம் வேகவோ வறுக்கவோ கூடாது.

நம்ம பாஸ்டாவின் சாஸ் நன்றாக கெட்டியான பின் அடுப்பை அணைப்பதற்கு முன் சிறிதளவு அதன் மேலே பாஸிலைத் தூவி ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விட வேண்டியதுதான்.

பாஸில் என்றால் கிரேக்க மொழியில் ராஜா என பொருளாம்.

சமையல் குறிப்பு முடிஞ்சு இப்போ உங்களுக்காக ஒரு சமயக் குறிப்பு

ஏசுவை சிலுவையில் இட்ட இடத்தில் துளசிச் செடிகள்தான் அதிகம் இருந்ததாம். இன்றும் கிரேக்க முறை கிருத்தவ வழிபாடுகளில் துளசி கலந்த நீரினை உபயோகிப்பார்களாம்.

said...

பாஸ்தா இங்கே(யும்) இருக்கு

துளசி ( செடி)யைப்பத்தின குறிப்புக்கு நன்றி:-))

said...

என்ன வஜ்ரா,
நொந்துப்போன நூடுல்ஸ போயி பாஸ்தாவோட கம்பேர் பண்றீங்களே? இது நியாயமா?

வாகா மாமி யாராச்சும் சமைச்சுக்கொடுக்கறதா இருந்தா சொல்லி ஏற்பாடு செய்யுங்க சீக்கிரம்.

said...

டீச்சர்,

அதான் உங்க பதிவுக்கு சுட்டி குடுத்து எங்க ரமத ஜெயஸ்ரீ ஒரு தடவை இலவச விளம்பரம் குடுத்துட்டாங்க இல்ல. அப்புறம் என்ன அதையே இன்னொரு வாட்டி குடுக்கலாட்டும்? :)

துளசி செடி பத்தி குட்டித் தகவல்கள்தான், டீச்சரைப் பத்தி தொடர் கதையே போட மாட்டோம். :)

said...

நாகை சிவா,
இந்திய உணவை ஏற்றிச் சொல்வதற்காக இத்தாலிய உணவை இறக்கிச் சொல்லும் உமது நயவஞ்சக குணத்தைக் கடுமையாக கண்டிக்கிறேன்.

said...

ஜெயஸ்ரீ,
இது ரொம்ப நாளைக்கு முன்னாடியே போட்ட பதிவு. அப்போவே அக்காவோட லின்க் கொடுத்திருந்தாங்க பின்னூட்டத்துல. அக்காவுடையதுல சிக்கன், நம்மளதுல அது இல்ல. அவ்ளோ தான் மேட்டர்.

said...

சந்தோஷ்,
அண்ணாச்சி கடையா? என்னது அது?

said...

தமிழ்ப்பிரியன்,
//ரெசிப்பி சூப்பரப்பு...(சாப்பிட்டா தான் தெரியும்..)
//
இதே கேள்விய சண்டே ஸ்பெஷல்னு கலர் கலரா செஞ்சு கொட்டுற ஐஸ்வர்யாவையும், விநோதினியையும் பார்த்துச் சொல்வீங்களா? நீங்க செய்யறதுலேயே நல்லா இருந்துச்சுங்கன்னு போன்ல வழியறதில்ல. அதப்போலதான்.

said...

அடடா..... நம்ம ஜெயஸ்ரீ, என் சார்பா ஆஜரானதைப் பார்க்கத் தவறிட்டேன்
மை லா(ர்)ட்.

நன்றி ஜெயஸ்ரீ. இப்படித்தான் 'விழிப்புணர்வோடு' இருக்கணும்.:-)))

said...

ஆனந்த்,
//பாஸ்தாவையா, இல்லை அதை ஃபாஸ்டா பரி(றி)மாறும் பாப்பாவையா ?
//
ஏற்கனவே புட் நெட்வர்க் எதுக்கு பாக்குறீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். இப்போ ரெஸ்டாரண்ட் போறதும் இதுக்குத்தானா?

said...

பாப்பிள்,
//தண்ணிய நல்லா உப்பு சேர்த்து கொதிக்க வச்சி அதுக்கப்புறம் தான் பாஸ்தாவ போடனும். //

என ரெசிபியில் குற்றமா? மணச்சுவையிலா? வாய்ச்சுவையிலா? என்ன குற்றம் கண்டீர்?

நிஜமாவே உப்பு முன்னாடிதான் போடணுமா? வெங்காயத்துக்குத்தான் அப்படிச் சொல்வாங்க. பாஸ்தாவுக்குமா?

said...

//இருக்கற மசாலாவெல்லாம் வகைக்கொன்னுன்னு ஒரு சின்ன டீஸ்பூன் அளவு போட்டு//

அட கடவுளே.. விக்கி *பசங்க*ன்னா சரியா இருக்கு!

//அடுப்ப அணைச்சிடலாம். அடுப்ப ஆரத்தழுவச் சொல்லல.//

சந்தேகமேயில்ல.. விக்கி *பசங்க* தான்! :)

said...

//சந்தேகமேயில்ல.. விக்கி *பசங்க* தான்! :)//

பின்ன என்னங்க சேதுக்கரசிக்கா. நாங்க விக்கி பசங்க தானே! :-D

இது எல்லாம் ஒரு ஆரம்ப அலட்டல்தான். அப்புறம் பாருங்க. நல்ல பசங்களாகிட்டோம்.

said...

இந்த அக்காவெல்லாம் வேணாம்.. அப்புறம் நான் அழுதுருவேன்..

said...

சரிங்கக்கா. ஐயோ, அக்கா இல்லை. ஆனா அக்கா இருக்கீங்களே. ஐயாம் தி கன்பியூஷன்.

விட்டுடுங்கோ. விக்கி பசங்கன்னு சொன்னதுனால எல்லாம் அக்கா /அண்ணாதான்.

said...

\"இதுக்குள்ள பாஸ்தா வெச்சு குறிப்பிட்ட 7-9 நிமிடங்கள் ஆச்சுன்னா, அடுப்ப அணைச்சிடலாம். அடுப்ப ஆரத்தழுவச் சொல்லல. ஆப் பண்ணிடுங்கன்னு சொன்னேன். \"

ரசித்தேன் இந்த வரிகளை, பாஸ்தா செய்ய கற்று கொடுத்த விக்கி பசங்களுக்கு நன்றி!!

said...

அப்புறம் என்ன? இன்னைக்கு டின்னர் பாஸ்தா தானே?

ஒரு ப்ளேட் பாஸ்தா பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்.... :)

said...

பாஸ்தா வேக்வைக்கும்போது ஒரு சொட்டு ஆலிவ் எண்ணை தண்ணீரில் விடவும். மேலும், பாஸ்தாவை வடிகட்டியவுடன் அதன்மேல் கொஞ்சமாக வெண்ணெய் சேர்த்தால் சுவை கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக, பாஸ்தா சாப்பிடும்போது, சைடில் மெர்லோ அல்லாது காபர்னே வகை சிவப்பு திராட்சை ரசம் இருந்தால் இன்னும் களைகட்டும் ;-D

said...

ஒரு சின்ன ரகசியம் சொல்றேன் கேட்டுக்கோங்க. இந்த பாஸ்தாவை நம்மூரு ஸ்டைல்லயும் செய்யலாம். பாஸ்தாவை வேக மட்டும் வெச்சுக்கோங்க. அதுல பூண்டுக் கொழம்பு ஊத்திக் கொழப்பிச் சாப்பிட்டால்...அடடா!

அதே போல தேங்காயத் துருவிக்கோங்க. கொஞ்சம் நெய்ய வாணலில காய வெச்சி...முந்திரி, திராட்சை, மிளகாய் வத்தல் கிள்ளிப் போட்டு வதக்கி...தேங்காத் துருவல் போட்டு வதக்கி...உப்புப் போட்டு பாஸ்தாவோட கலந்துக்கனும். அத்தோட எலுமிச்சங்காய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட்டா...அடடா!

said...

Flemingo,

உங்க குறிப்புகள் நல்லாத்தான் இருக்கு. அடுத்த முறை முயன்று பார்க்க வேண்டியதுதான்.

அதிலும் அந்த கடைசிக் குறிப்பு. பாஸ்தா இல்லை என்றாலும் அது மட்டுமாவது செய்து பார்க்க வேண்டும் போல இருக்கிறதே. :)

said...

வாங்க ஜிரா,

என்ன இது. ஒரு வித்தியாசத்துக்கு மற்ற நாட்டு உணவுகளைச் சாப்பிடப் பார்த்தா, பூண்டு குழம்பு, ஊறுகாய், சட்னி, சாம்பார் அப்படின்னு ராயர் கபே மெனு ஐட்டம் மாதிரி ஆக்கறீங்களே. இது பாஸ்தாவா அல்லது சேவை / இடியாப்பமான்னு ஒரு சந்தேகம் வரா மாதிரி பண்ணிட்டீங்களே. இது நியாயமா?

ஆனா படிச்ச பின்னாடி நாக்கு ஊறுது. பண்ணிப் பாத்துற வேண்டியதுதான். ;)