Thursday, March 01, 2007

விஸ்டாவா, வேண்டாமா - 3

இதுவரை மைக்ரோஸாஃப்ட் விஸ்டா-ல புதுசா என்ன இருக்கு (அல்லது புதுசுபோலத் தோணுவது என்ன) என்று பார்த்தோம். சுருக்கமாகச் சொல்லப்போனால் என்னைக் கவர்ந்து இழுக்கிறமாதிரி (வாவ்-ஃபாக்டர்) அப்படி ஒன்னுமே இல்லை என்கிறதுதான் உண்மை. இந்தப் பகுதில விஸ்டா-ல அபத்தமா என்ன இருக்குன்னு பாக்கலாம். இது கொஞ்சம் சீரியஸான விஷயம் அப்படிங்கறதால பேச்சு நடையை விட்டுவிட்டு என் வழக்கமான எழுத்து நடைக்கு மாறிக்கிறேன். நீண்ட விளக்கங்களைப் படிக்கப் பொறுமையில்லாதவர்கள் கடைசிப் பகுதிக்கு விரையவும்.

விஸ்டாவைப் பூட்டிக் கொள்வதால் வரப்போகிற சங்கடங்கள் என்ன என்று பார்க்கலாம். முதலாவதாக மைக்ரோஸாஃப்ட் வன்கலன் (hardware) உற்பத்தியாளர்களை நெருக்குகிறது. அதாவது விஸ்டாவிற்கு நம்பகமானது என்று மைக்ரோஸாஃப்ட் சான்றிதழ் அளிக்காத வன்கலன்கள் விஸ்டாவில் செயல்படாது அல்லது மிக மிகத் தரக்குறைவாகத்தான் செயல்படும். ஒரு சில வன்கலன் அட்டைகள் திறமூல இயக்கிகளைக் (Drivers) கொண்டவை (Open Source Drivers). இவை எதுவுமே விஸ்டாவில் செயல்படாது. விஸ்டா ஒவ்வொருமுறையும் வன்கலன் (உதாரணமாக ஒலி அட்டை) சங்கேதங்களைச் சோதிக்கும். அப்படியான சங்கேதங்கள் மூடிய சங்கேதங்களாக (வேறு வார்த்தையில் சொல்லப்போனால் விஸ்டாவால் மாத்திரமே படிக்கக்கூடியவையாக) இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விஸ்டா அதைச் செயலிழக்கச் செய்துவிடும். எனவே நீங்கள் 'விஸ்டாவிற்கு ஏற்றது' என்று சான்றளிக்கப்பட்ட வன்கலனை மாத்திரமே வாங்க முடியும்.

இன்றைய மேசைக்கணினியின் மாபெரும் புரட்சிக்குக் காரணம் இதன் வடிவமைப்பை ஒரு காலத்தில் ஐபிஎம் திறந்துவிட்டதுதான். டெல் நிறுவனத்திலிருந்து கணினி வாங்கினாலும் அதில் ஹெச்.பியின் விசையெலி வேலை செய்யும். இப்பொழுது விஸ்டாவின் மூலம் மைக்ரோஸாஃப்ட் கணினிகளை மூடிய உலகிற்கு அழைத்துச் சொல்கிறது.

அப்படியே சான்றளிக்கப்பட்ட வன்கலனை வாங்கினாலும் அது முழுமையாக வேலை செய்யாது. உதாரணமாக நீங்கள் அதியுயர்ந்த தரத்தில் கிடைக்கும் இன்றைய ஒலி வட்டுகளை வாங்கினாலும் அதன் ஒலியை சாதாரண ஒலிப்பான்களில்தான் கேட்க முடியும். இப்பொழுதுவரும் உயர் இரக ஒலியட்டைகளில் S/PDIF (Sony-Phillips Digital Interface Format) என்றொரு வசதி இருக்கும். ஆனால் விஸ்டா இந்த S/PDIF க்கு ஒலியை அனுப்பாது; சாதாரண ஒலிதான் வெளியே வரும். விஸ்டாவில் உள்ளடக்கப் பாதுகாப்பு (Content Security) என்பது மிக முக்கியமான விஷயம். அதாவது உயர்தர குறுந்தட்டின் ஒலியை நீங்கள் S/PDIF வழியாக வேறு நகல் எடுத்துவிடுவீர்கள் என்ற காரணத்தால் அதைக் கேட்கக்கூட விடாமல் விஸ்டா செயலிழக்கச் செய்யும். என்னிடம் இருக்கும் Creative Audigy platinum ஒலி அட்டையில் S/PDIF-க்கும் மேலாக ஒளியிழை (Optical Fiber) வசதியே இருக்கிறது. ஆனால் விஸ்டாவில் இது வேலை செய்யாது. ஒலிக்கு எப்படி S/PDIF-போ அதே போல ஒளிக்கு Component Video என்று சொல்லப்பட்டும் YPbPr என்ற உயர்தர ஒளிவடிவம் சாத்தியமில்லை.

இதேபோல நவீன BluRay, HD-DVD போன்றவை விஸ்டாவில் முழுத்தரத்தில் செயல்படாது. மைக்ரோஸாஃப்ட்காரர்களே என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Will the playback quality be reduced on some video output types?

Image quality constraints are only active when required by the policy associated with the content being played, and then only apply to that specific content -- not to any other content on the user's desktop. As a practical matter, image constraint will typically result in content being played at no worse than standard definition television resolution. In the case of HD optical media formats such as HD-DVD and Blu-Ray, the constraint requirement is 520K pixels per frame (i.e., roughly 960x540), which is still higher than the native resolution of content distributed in the DVD-Video format. We feel that this is still yields a great user experience, even when using a high definition screen.

என்னுடைய விழியம் (monitor) 1440x900 வரைத் துல்லியமாகக் காட்டக்கூடியது. இதில் 960x540-ல் தெரிந்தால் எரிச்சல்தான் வருகிறது. Native Resolution என்று சொல்வது ஜல்லியடி. ஒரு படத்தை பல்வேறு தர அளவுகளில் காட்டமுடியும். பயனருக்குத் தேவையானது அவர் காசு கொடுத்து வாங்கிய விழியத்தில் எவ்வளவு முடியுமோ அந்தத் துல்லியம். அதற்குப் பதிலாக நான் குறைத்துக் காட்டுகிறேன், அதிலேயே உனக்கு உன்னதமான அனுபவம் கிடைக்கும் என்பதை என்ன என்று சொல்வது - அகந்தை.

என்னைப் போன்ற கை அரிப்பெடுத்தவர்கள் கணினியின் பாகங்களை அடிக்கடி மாற்றி கொண்டிருப்பார்கள். மிக முக்கியமாக கணினி விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் அடிக்கடி அதன் நினைவுச் சில்லுகளையும், வரைகலை அட்டையையும், தாய் அட்டையையும் (Motherboard) மாற்றுவார்கள். தாய் அட்டையோ, ஆதார இதயமான நுண்செயலியையோ (CPU) மாற்றினால் விஸ்டா அதை வேறு கணினியாக அடையாளம் கண்டு செயலிழக்கச் செய்யும். இது அடிக்கடி மாற்றுபவர்களை மாத்திரம்தான் பாதிக்கும் என்றில்லை, கணினியின் தாய் அட்டை பழுதாகி மாற்றும் சாதாரணப் பயன்களையும் பாதிக்கும்.

இதைத் தவிர இன்னொரு விஷயம். இதுமாதிரியான உள்ளடக்கப் பாதுகாப்புகளுக்காக விஸ்டா தொடர்ச்சியாக உங்கள் கணினியின் நுண்செயலியைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். அதாவது, எந்த ஒரு ஒலி, ஒளி சமாச்சாரங்களை உங்கள் கணினியில் இயக்கினாலும் அதன்கூடவே “mfpmp.exe” (Media Foundation Protected Pipeline.exe) என்று ஒரு கண்காணிப்பு விஷயத்தையும் தானாகவே இயக்கும். என்னுடைய கணினியில் ஒரு எம்.பி 3 கோப்பை பாடவைத்தால், இது சில வேளைகளில் என் சில்லின் மொத்த சக்தியில் பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை எடுத்துக் கொள்கிறது. எனவே விஸ்டா கணினிகளை மெதுவாக இயங்க வைக்கிறது.
Will Windows Vista content protection features increase CPU resource consumption?

Yes. However, the use of additional CPU cycles is inevitable, as the PC provides consumers with additional functionality. Windows Vista’s content protection features were developed to carefully balance the need to provide robust protection from commercial content while still enabling great new experiences such as HD-DVD or Blu-Ray playback.
கடந்த இரண்டு மூன்று வருடங்களில் nVidia அல்லது ATI நிறுவனங்களிலிருந்து வரைகலை அட்டையை (Graphics Card) வாங்கியிருந்தவர்களுக்கு நான் சொல்லவரும் விஷயம் தெரியும். இந்த நிறுவனங்களின் எந்த அட்டையை வாங்கினாலும் அவற்றிலிருந்து ஒரே ஒரு இயக்கியை மாத்திரமே இறக்க வேண்டும். அந்த இயக்கி எல்லா அட்டைகளுக்கும் பொதுவானது. வேறு வார்த்தைகளில் சொன்னால் எ.டி.ஐ செய்யும் அனைத்து கிராஃபிக்ஸ் சில்லுகளுக்கும் ஒரு பொதுவான இயக்குமொழியை அது கையாளுகிறது. எனவே ஒரே வகையான இயக்கியே போதுமானது. விஸ்டாவில் இது செல்லுபடியாகாது, விஸ்டாவிற்கு ஒவ்வொரு அட்டைக்கும் வெவ்வேறு இயக்கியை நிறுவனம் வடிவமைக்க வேண்டும், அதைவிட அபத்தம் சராசரி பயனர் சரியான இயக்கியைப் பார்த்து நிறுவ வேண்டும். இது மிகவும் சிக்கலானது.

எக்ஸ்.பி வந்தபொழுது அதற்கான இயக்கி இல்லாவிட்டால் விண்டோஸ் 2000 இயக்கியை வைத்து ஓட்டமுடிந்தது. ஆனால் விஸ்டாவிற்கென வடிவமைக்கப்பட்ட பொதிகள் இல்லாவிட்டால் ஒரு ஒலியட்டையோ, வரைகலை அட்டையோ இயங்காது. பெரும்பாலான நிறுவனங்கள் புதிதாக வெளியிடும் அட்டைகளுக்குத்தான் விஸ்டா பொதி தரும், பழையனவற்றுக்கு விஸ்டா பொதிகளை எழுதப்போவதில்லை. எனவே பழைய அட்டைகள் விஸ்டாவில் ஒருக்காலத்திலும் வேலை செய்யப்போவதில்லை. (சில நிறுவனங்களுக்கு இதில் கொண்டாட்டம்தான்; புதிதாக வன்கலனை விற்கலாமே!).

ஆனால் விஸ்டாவிற்காக தங்களுடைய வன்கலனை வேலை செய்ய வைக்க, அதற்கு மைக்ரோஸாஃப்டின் ஆசிர்வாதத்தைப் பெற நிறுவனங்கள் நிறைய நேரமும் பணமும் செலவிட வேண்டியிருக்கிறது. எனவே பொதுவாக கணினிகள் மற்றும் கணினி பாகங்களின் விலையை இது அதிகரிக்கச் செய்யும்.

இவ்வளவு சிக்கல்களும் அபத்தங்களும் நிறைந்த உள்ளடக்கப் பாதுகாப்பினால் சராசரி பயனருக்கு ஒரு பைசா புண்ணியமில்லை. இது நகலெடுத்து வேறு ஒருவரிடம் பகிர்வதைத் தடுக்க மைக்ரோஸாஃப்ட் செய்யும் பிரம்மப் பிரயத்தனம். காரணம், ஹாலிவுட் தேவதைகளையும் கடவுள்களையும் திருப்திப்படுத்துதல். விஸ்டா இருக்கும் வரை ஒருவர் திரைப்படத்தை நகலெடுக்க முடியாது என்று அவர்களிடம் நிரூபித்துவிட்டால் விஸ்டாவில் மாத்திரமே இயங்கக்கூடிய திரைப்படத் தட்டுகளை வெளியிடுவார்கள். இதன்மூலம் மொத்த டிஜிட்டல் பொழுதுபோக்கு சந்தையையும் மைக்ரோஸாஃப்ட் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

அப்படியொன்று இது எளிதாக இருக்கப்போவதில்லை. அதிகார்வபூர்வமாக விஸ்டா வெளியான இரண்டாம் நாளே இதன் பாதுகாப்பு சங்கேதம் தகர்க்கப்பட்டுவிட்டது. (இதைப் பற்றிய என் வலைப்பதிவு இங்கே). மைக்ரோஸாஃப்ட் ஒரு ஒட்டு (patch) தயாரித்து இதை கொஞ்சம் நாட்களுக்கு அடைக்கலாம். ஆனால், இது ஒரு வேட்டை விளையாட்டுதான். மைக்ரோஸாஃப்ட் என்ற எலி ஓடிக்கொண்டிருக்க பறந்துகொண்டிருக்கும் வல்லூறுகளாப் பிளவர்கள் அதைக் கொத்திக் கொண்டிருக்கப் போகிறார்கள். இதில் இழப்பு பயனர்களுக்குத்தான் என்பது நிதர்சனம். இந்த நிதர்சனம் விரைவிலேயே ஹாலிவுட் கடவுள்களுக்கும் வெளிச்சமாகும். அப்பொழுது உள்ளடக்கப் பாதுகாப்பு என்பதில் இருக்கும் அபத்தத்தை உணர்ந்து அதைக் கைவிடுவார்கள். ஏற்கனவே இதற்கான சாத்தியங்கள் சோனியிலும் ஹெச்.எம்.வியிலும் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன.

* * *

இந்தப் பகுதியில் சொன்னவற்றையே சுருங்கச் சொல்ல;
  • Open Drivers எதும் விஸ்டாவில் வேலைசெய்யாது. இது நாளடைவில் கணினி வாங்குவதையும் அதன் பாகங்களைப் புதுப்பித்துக் கொள்வதையும் சிக்கலாக்கும்.
  • YPbPr, S/PDIF, Fiber Output போன்ற உயர்தர வெளியாக்கங்கள் விஸ்டாவினால் தடை செய்யப்படும். எனவே சாதாரணக கணினியை ஒரு பெரும் தட்டைத் திரை LCD வழியே பார்க்க முடியாது. அதில் கலங்கலான படங்கள்தான் கிடைக்கும்.
  • தாய்ப் பலகை பழுதுபட்டால் வேறு பொருத்தி உடனே கணினியை இயக்க முடியாது. விஸ்டாவைப் பொருத்தவரை அது வேறு கணினி எனவே புது விஸ்டா உரிமம் வாங்க வேண்டியிருக்கும்.
  • இது அடிக்கடி கணினியை மாற்றிக் கொண்டிருக்கும், மேம்படுத்திக் கொண்டிருக்கும் (குறிப்பாக கணினி விளையாட்டு ஆர்வலர்களுக்கு) பெரும் தடையாக இருக்கும்.
  • உள்ளடக்கப் பாதுகாப்பு விஷயத்திற்காக கணினியில் என்ன இசைக்கப்படுகிறது அல்லது என்ன படம் பார்க்கப்படுகிறது என்று தொடர்ச்சியாகக் கண்காணிப்பதால் விஸ்டா உங்கள் கணினியின் வேகத்தை 25% வரை குறைக்கும்.
  • தாங்கள் வெளியிடும் எல்லா அட்டைகளுக்குமான பொதுவான இயக்கிகளை வெளியிடுவது nVidia, ATI போன்ற நிறுவனங்களுக்கு சாத்தியமில்லாமல் போகும். எனவே சராசரி பயனரும் சரியான இயக்கியைத் தேடி அலைய வேண்டியிருக்கும்.
  • பழைய வன்கலன்களுக்கு விஸ்டா இயக்கிகள் கிடைக்கப் போவதில்லை. எனவே பழைய கணினிகளின் விஸ்டாவின் அற்புத 'வாவ்' சமாச்சாரங்கள் சாத்தியமில்லை.
  • வாவ் சமாச்சாரங்கள் இல்லை என்பதாலும் பாடல்கள் கேட்பதில் படம் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாலும் இவற்றுக்கு விஸ்டாவைத் தேடியலைவது அபத்தம். எனவே ஆறு மாதங்களுக்கு முன்னால கணினி வாங்கியிருந்தால் விஸ்டாவைத் தேடாதீர்கள்.
  • அப்படியே புதுக்கணினியாக இருந்தாலும் விஸ்டா-வால் வேகம் அதிகரிக்கப்போவதில்லை. ஆனால் பெரு நிறுவனங்களிலிருந்து (டெல், ஹெச்.பி,...) கணினி வாங்கினால் விஸ்டா உங்கள் தலையில் கட்டப்படும்.

பாதுகாப்பு கொஞ்சம் அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதன்கூடவே சிக்கல்களும், அபத்தங்களும், கட்டுப்பாடுகளும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில் சொன்னதுபோல எந்தவிதமான பயன்பாடுகளிலும் புதுமை ஏதுமில்லை. சொல்லப்போனால் இலவச நிரலிகளை வைத்துக் கொண்டு எக்ஸ்.பி, 2000 இவற்றையே மிக அற்புதமாகப் பயன்படுத்த முடியும்.

என்னைப் பொருத்தவரை விஸ்டாவைத் தேடி அலைவது வீண்வேலை. ஆனால் வாங்கும் கணினியுடன் விஸ்டா தலையில் கட்டப்படுவதைத் தடுக்க முடியாது. எனவே வாங்கிக் கொள்ளுங்கள். இந்தச் சிக்கல்கள் எல்லாம் வேண்டாமென்றால் உபுண்டு லினக்ஸ் பயன்படுத்துங்கள். பயன்படுத்த மிகவும் எளிதானது. விடுதலை, விடுதலை, விடுதலை.

* * *

தொடருக்குத் தேவையான கூடுதல் விஷயம்.

நான் சோதித்துப் பார்த்த கணினி நானாகக் கோர்த்தது. அதன் விபரம்.
  • ASUS M2N-E Motherboard
  • AMD 64 bit Dual Core processor 3400 GHz
  • 2 GB of Kingston DDR2 RAM
  • 256 MB PCI Express Video card - nVidia
  • 6 USB 2 ports, 1 FireWire Port
  • On-board Gigabit Ethernet
  • On-board Digital Sound
  • On-board SATA RAID controller, with 6 slots for Hard Disks
  • Seagate 320 GB SATA II Hard disk with 16 Mb Cache
  • Western Digital 500 GB SATA II Hard disk with 16 Mb Cache
  • Pioneer 24X Dual-layer DVD+/- RW
  • Logitech Wireless Mouse/Keyboard Duo
  • Viewsonic 19 inch Widescreen LCD
  • ULTRA Aluminum Case with Thermocouple temperature monitor
கணினியின் முதல் வட்டில் விண்டோஸ் எக்ஸ்.பி இருக்கிறது, இரண்டாவது வட்டில் விஸ்டா நிறுவப்பட்டிருக்கிறது. இதே கணினியின் முதல் கடினவட்டின் ஒரு பகுதியில் உபுண்டு லினக்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. முந்தைய இயக்குதளங்களைப் போல இல்லாமல் விஸ்டா ஒன்றுக்கு மேற்பட்ட இயக்குதளங்களை ஓட்டும் வசதியைத் தருகிறது. இரண்டாவது வட்டின் பெரும்பகுதி இந்த மூன்று இயக்குதளங்களுக்கும் பொதுவான தரவுப் பகுதி (Data Partition).

4 comments:

said...

ஹூம் இவ்வளவு சிக்கலான விஷயங்கள வச்சுகிட்டு புதுசா நானூறு டாலர் குடுத்து வாங்கச் சொல்றாங்களா?

எங்க ஊரு பொட்டிக்கடையில விண்டோஸ் 3.1 தொடங்கி விஸ்டா வரை மொத்த ஜாதகமே இருநூறு ரூபாய்க்கு டிவிடியில் கிடைக்கிறது. அதைவைத்து பொழுதுபோவதற்கு செகண்ட் OS ஆக பயன்படுத்தவாவது லாயக்காக இருக்குமா?

ஏனென்றால் முன்னால் இப்படி ஜிகினாக்களுடன் வந்த ME ஒரு தலைவலியாகவே இருந்தது.

said...

முன்னமே சொல்லிட்டேன். நான் ஒரு க.கை.நா. அதனால இந்த உபுண்டு பக்கம் எல்லாம் போகலை.

ஆனா அதே சமயம் கம்பியில்லா இணைப்பு, வெளிவந்தட்டு என கருவிகள் வாங்கப் பிடிக்கும்.

இப்பொழுது வரும் மடிக்கணினிகளில் விஸ்டா அன்றி எக்ஸ்.பி. உட்பட வேறு எந்த இயங்குதளமும் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லையே.

நீங்கள் சொல்வது பார்த்தால் விஸ்டா வாங்கினால் வேறு வன்பொருட்கள் வாங்கும் பொழுது அதிகமான பிரச்சனைகள் வரும் போல் தோன்றுகிறதே.

என்ன செய்ய? :((

said...

வழக்கமான "வெங்கட் முத்திரை"(Trademark Venkat?) :)

நான் இன்னும் விஸ்டாவில் முழுவதும் கை வைக்கவில்லை. RC1-ஐ VMWare-ல் நிறுவி சும்மா வேடிக்கைப் பார்த்த கையோடு தூக்கிவிட்டேன்.

Vista Upgrade Advisor என்னுடைய மேசைக் கணினி எலும்பும் தோலுமாக இருக்கிறது, கொஞ்சம் சதைப்படிப்புத் தேவை என்று சொல்லிவிட்டது.

மடிக் கணினியில் கோயில் மணி "ஓசை" கேட்பது கடினம் என்று சொல்லிவிட்டது.

Service Pack1 வரட்டும் யோசிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.

பல காலமாக லினக்ஸ் நிறுவ வேண்டும் என்று நினைத்து சோம்பேறித் தனத்தால் விட்டுவிட்டேன். சென்ற வாரம் openSUSE 10.2 இறக்கி நிறுவியதைப் பற்றி எழுதலாம் என்று யோசனை வந்திருக்கிறது. பார்க்கலாம்.

(விக்கிப் பசங்க கவனத்திற்கு: அப்படி நான் எழுதினால் ஆட்டத்துக்கு சேத்துக்குவீங்களா?)

விஸ்டாவா வேண்டாமா?

என் பதில்:
புதுசா கணினி வாங்கினா ஆமா (வேற வழியில்லங்றது வேற விஷயம்; அதாவது XP வாங்க முடியாது. லினக்ஸ் எல்லாம் வெங்கட் ஏரியா)

பழைய கணினின்னா செய்ய வேண்டியது.
1. Vista Upgrade Advisor என்ன சொல்லுது பாருங்க
2. Vista Home Premium-க்குஅது குடுக்குற மளிகைக் கடை ரசீது எவ்வளவு ஆவும்னு செட்டியார் கடைல கேட்டுக்குங்க
3.பட்ஜெட் ஒத்து வந்தா வாங்குங்க.

said...

வெங்கட்,

இங்கே DRM யுகத்தின் ஆபத்துக்கள் பற்றி அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
தற்போது bittorrent இன் உத்தியோகபூர்வ வலைத்தளம் DRM இனை ஆதரித்து ஆசீர்வதித்து புகழுரைக்கிறது.

DRM இற்கு பின்னாலுள்ள பல விசயங்களை ஆழமாக நீங்கள் எழுதி படிக்க்க் ஆசைப்படுகிறேன்.