Monday, March 05, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

இசை என்பதென்ன? இந்த கேள்விக்கான பதில் வெகுச்சுலபம்! அதாவது சிறு சிறு சப்தங்களின் தொகுப்பு, சீராக சம அளவில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மாறி மாறி வரும் சபத அலைகளே இசை என்பது. இப்படி விவரிப்பது சுலபம். இதை பற்றி இளையராஜா குறிப்பிடும் பொழுது, 'அனைத்து சப்தங்களுமே எனக்கு ஒரு சங்கீதம் தான்' எனறு சொல்லி இருந்தார். வேண்டுமென்றால் சில டம்ளர்களில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதுவும் வெவ்வோறு அளவுகளில், அதை ஒரு கரண்டியை கொண்டு அப்படியே லேசாக தட்டிச் செல்லுங்கள், ஒருவித திம் திம் என்ற ஓசை எழும்பும், அது கேட்பதிற்கு ஒரு திரில்லாக இருக்கும். இதன் கோட்பாட்டிலே அமைந்த ஒரு இசைக்கருவி தான் ஜலதரங்கம்!

அடுத்து தமிழில் இருக்கும் பழமொழியான 'சிறுதுளி பெரு வெள்ளம்' என்பதைப் போல, இசைக்கு அடிப்படையான சிறு துளியை நாம் இசை குறிப்பீடு, அதாவது ஆங்கிலத்தில் 'நோட்' (Note) என்பது.

இப்படி சிறு துளியாய் இருக்கும் இசைகுறிப்பீடுகள் அனைத்தும் ஒன்றொன்றாய் சேர்ந்து பலவாறு சபதங்களை சிறு சிறு இடைவெளியில் சீராக வெளிப்படும் பொழுது உண்டாவதே காதுக்கு இனிமையான கீதம்! அது தீட்சதர் கீர்த்தனை என்றாலும் சரி, பீத்தோவன் என்ற ஜெர்மனிய இசையமைப்பாளிரின் சிம்பொனியாக இருந்தாலும் சரி, இல்லை நமது இளையராஜாவின் ராகங்களானாலும் சரி, இல்லை ஏ ஆர் ரஹமானின் இன்னிசை அளப்பரையாக இருந்தாலும் சரி! ஏன் நம் ரோட்டிலே ஆடிப்பாடித்திரியும் இசை அமைக்கும் தெருப்பையன்களின் (Back street boys) எழுப்பும் இசைஒலியானாலும் சரி! இப்படி தொடர்ந்து வரும் அலை வரிசைகளில் எழும்பும் சப்த நாதங்களே இசையாகும்! இப்படி
தொடர் அலைவரிசையில் வராத சப்தங்களும் இசையாகுமா என நீங்கள் கேட்டால், அதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் சொல்லலாம், அதாவது பழங்காலம் தொற்று தொடர் அலை வரிசை குறியீட்டால் உண்டாக்கி எழுப்பும் சப்தமே சங்கீதம், ஆனால் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் அப்படி தொடர் வரிசை அலை இல்லாமலும் சபதம் எழுப்பி சங்கீதம் உண்டு பண்ணலாம்! முதலில் தொடர் அலைவரிசையில் உருவாகும் சங்கீதம் பற்றி பார்ப்போம்!

நீங்கள் கீபோர்ட் என்ற கருவியிலே சப்தத்தை எழுப்பி இசை அமைக்க முயன்றிருந்தால் நீங்கள் சுலபமாக இந்த இசைக்குறியீட்டை புரிந்து கொள்ள முடியும்! உதாரணத்திற்கு இதோ அருகில் உள்ள கீ போர்ட் படத்தை பாருங்கள் இதில் உள்ள ஓவ்வொரு பொறியினை நீங்கள் அழுத்தும் பொழுது அதில் உருவாகும் சப்தம் ஒரு அலைவரிசைக்குள் இருக்கும். அதை நீங்கள் அழுத்தி கொண்டிருக்கும் நேரத்தை பொருத்து, அதில் எழும் சப்தங்களின் அளவே நான் மேலே கூறியது போல ஒரு துளி சப்தத்தை உருவாக்கும். அப்படி தொடர்ந்து அழுத்தப்படும் பல பொறிகளின் கால அளவில் உண்டாகும் சப்த அலையே நமக்கு சங்கீதமாக பிறக்கிறது! இப்படி, இது 48 பொறிகளை (keys) கொண்ட ஒரு கீபோர்டின் ஒரு பகுதி இது போன்ற 12 பொறிகளை கொண்டு நான்கு செட்டுகள் கொண்டது!


இந்த 12 பொறிகளை கொண்ட இந்த இசை குறிகளின் அளவை ஆங்கிலத்தில் octave என்று அழைப்பார்கள்! அதாவது கொஞ்சம் அகல சப்த அலைவரிகளின் விஸ்தார அளவு (bandwidth). அதாவது இந்த விஸ்தார அளவு என்பது சப்த அலைவரிசை தொகுப்புகளடங்கிய 12 இடைவெளிகளை கொண்டது, அந்த இடைவெளியானது, எந்த ஒரு இரண்டு அலைவரிசையின் மடக்கை (logarithm) விகிதாச்சாரமும் சமமாக இருக்கும்படி அமைந்திருக்கும், அந்த சப்த அலைவரிசைகள் பக்கத்து பக்கத்து இடைவெளில் அமைந்திருக்கும் பட்சத்தில்!

சரி கர்நாடக சங்கீதமும் மேற்கத்திய சங்கீதமும் இந்த அலைவரிசையின் அளவுகோல்களுக்குள் அமைந்து விடும் ஒற்றுமை உண்டா என்றால், ஆம் என்பதே பதில்! அதாவது கர்நாடக சங்கீதத்தின் குறியீடு அளவு விகிதாச்சார அடிப்படையில் அமைவது, உதராணமாக 'சரிகமபதிநி' என்பதில் 'ப' என்ற குறியீட்டின் அளவு மத்த அளவீட்டில் இரண்டுக்கு மூன்று (2:3) என்ற சதவீதத்தில் பிரிந்திருக்கக் கூடியது! ஆனால் மேற்கத்திய சங்கீதத்தின் குறியீடுகள் மடக்கு(logarithmic) விகிதாச்சார அடிப்படையில் பிரிந்திருக்கும் சிறு குறியீட்டின் அளவினை ஒத்து இருக்கக் கூடியது!

ஆக இந்த அடிப்படையில் பிரிக்கப்பட்ட சப்த அளவான octave கொண்டே உலகில் உள்ள அத்தனை சங்கீதங்களும் உருப்பெறுகிறது! இப்படி இந்த சப்த சங்கதிகள் இன்று நேற்று தோன்றியதல்ல, பழங்காலம் தொட்டே உருவாகி வந்த ஒன்று! சப்த அளவீடுகளான இந்த 12 குறியீட்டின் மூலம் எல்லா சங்கீதங்களும் அமைந்து விடும்! இந்த மேற்கத்திய மற்றும் கர்நாடக இசைக்குறியீடுகளுக்கு உண்டான ஒற்றுமை என்னவென்றால், கர்நாடக சங்கீதத்தில் வரும் அடிப்படை குறியீடு, இந்த ஐந்தாவது குறியான 'ப' வை குறிப்பது பஞ்சமம் என்று, அதே போல மேற்கத்திய இசையின் ஐந்தாவது அடிப்படை குறியீடு ஒத்திருப்பது. இதை நீங்கள் கீழ்கண்ட சங்கீத பொறிகளின் அட்டவனையில் காணலாம்!



இன்னொன்றையும் கவனியுங்கள், இந்த கர்நாடக குறிகள் மேற்கத்திய குறியீடுகளிலிருந்து வேறுவிதமாக உருவகப்படுத்தி உள்ளது. ஏனென்றால் நம் கர்நாடக் சங்கீதத்திற்கு ஏழு குறீடுகள் அடங்கிய கால இடைவெளியில் பிறக்கும் சப்த ஸ்வரங்கள் உண்டு, அதாவது அதை இசை அளவீடு (scale) என்று கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலே கொண்டு அமையும் மற்றொரு அளவீடு (scale) 'மேளகர்த்தா ராகம்' என்பது! இப்பொழுது இசை அளவீடு மற்றும் மேளகர்த்தா என்ன வென்று பார்ப்போம்!

மேளகர்த்தா என்பது ஏழு இசை குறிகளை கொண்ட ஸ்வரங்களில் அமைந்த அடிப்படை ராகம். இதை தாய் ராகம் என்பார்கள். இதை 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெங்கடேஸ்வர தீட்சதர் வரிசைப்படுத்தி 72 மேளகர்த்தாக்களை உருவாக்கினார் அதை 'சதுரந்தி ப்ரக்ஸிக்கா' என அழைப்பதுண்டு! அதாவது ஒவ்வொரு மேளகர்த்தாவுக்கும் அடிப்படை இசைக்குறியீடு 'ச' வும் வேண்டும் 'ப' வும் வேண்டும், 'ச' வும் 'ப' வும் ஒரே ஒரு வகை உண்டு! மேலே உள்ள அட்டவனையை பாருங்கள், ஆனால் 'ரி', 'க', 'ம', 'த', 'நி' இவை எல்லாம் அதிலிருந்த சற்று உருமாறி, சப்த அலைவரிசையை கூட்டி குறைத்து மூன்று மற்றொரு அடிப்படை சப்த குறிகளை உருவாக்கி வைத்திருக்கிறது! பிறகு இந்த 'ம' இரண்டு வெவ்வேறு வகைகளாக பிரிந்து இருக்கிறது. ஆக ஏழு குறிகளின் அளவீட்டில் ஒரு 'ச', ஒரு 'ப' மீதம் நான்கு குறியீட்டில் மூன்று வகைகள் என நீங்கள் பெருக்கினால் 4x3x3=36 வகைகள் பிறக்கிறது!

பிறகு 'ம' வில் இரண்டு வகை இருப்பதால் இது 36x2=72 ஆக, மொத்தம் 72 அடிப்படை ராகங்கள் பிறக்க வழி ஏற்படுத்தி கொண்டுள்ளது இந்த 'மேளகர்த்தா' என்பது. இப்படி அமைந்த அடிப்படை தாய் ராகங்களின் கலவையிலே நீங்கள் ஆயிரக்கணக்கான ராகங்கள் பிறக்க வழி செய்யலாம். அப்படி பிறக்கும் ராகங்கள் குழந்தை ராகங்களாகும், அதை 'ஜன்ய ராகம்' என்பார்கள்! ஆக இப்படி தான் அத்தனை பாட்டுகளும் இப்படி ஏதேனும் ஒரு அடிப்படை ராகத்திலே அமைந்து பிறக்கின்றன!

மேற்கத்திய இசையிலே இருக்கும் இசை குறியீடுகள் போல் ஒவ்வொரு ராகத்திலிருக்கும் இந்த இசை அளவுகள் ஏறு முகமாகவும், இறங்குமுகமாகவும் பாடுவதை தான் ஆரோகணம் (ascending order), அவரோகணம் (descending order) என்று குறிப்பிடுவார்கள்

இப்படி இசை அளிவீடுகளின் சூட்சமத்தில் அமைந்த அற்புதத்தை தான் நமது கண்ணதாசன் 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்' என்று எளிமையாக எழுதி பாமரனுக்கும் புரியவைத்தார்! நம் கர்நாடக சங்கீதத்தில், இந்த வெறும் கணக்கீட்டால் அமையும் குறீடுகளால் (Musical structure) மட்டும் ராகங்கள் உருவாவதில்லை, அதை உணர்ச்சியுடன் பாடுவதால் கிடைக்கும் 'பாவமும்' அதை தொடரும் இந்த இசைக்குறி அளவீடுமே ராகத்தை உருவாக்குகின்றன! ஆகையால் தான் பாலசுப்ரமணியம் பாடிய சங்கராபரண பாடலை நாம் பாவமின்றி பாடினால் அது சங்கராபரணமாவதில்லை! அப்படி பாவத்துடன் இசை குறிகளின் அலங்கார ஆலாபனையும் சேர்வதை 'கமகம்' என்பார்கள், அப்படி சேர்ந்தால் தான் அதன் அதன் ராகங்களின் வெளிப்பாடு உங்களுக்கு கிடைக்கும்!

ஆக இப்படி அமைக்கப்பட்டு வெளி வந்த ராகங்களில் ஒன்று தான் 'ரதிப்பதிப்ரியா' என்ற ஒரு ராகம். இந்த ராகம் மேலே சொன்ன மேளகர்த்தா வரிசையில் வரும் 22ம் ராகம், இதில் பிறந்த குழந்தை, அதாவது 'ஜன்ய ராகம்' கரகரப்ரியா. இதற்கு உண்டான ஆரோகண வரிசை 'ச ரி2 க2 ப நி2 ச', அவரோகண வரிசை 'ச, நி2 ப க2 ரி2 ச' என்பது!

இந்த ராகம் சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கு தேவையான மனோபலம், சக்தியையும், ஊக்கத்தையும் தருகிறது. திருமணமாகி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இந்த ராகத்தில் அமைந்த பாடலை கேட்டு உங்கள் வாழ்க்கையை நகர்த்துங்கள், அப்பொழுது தெரியும் தாம்பத்தியம் எவ்வளவு இன்பகரமானது என்று! அதே போல் இது உங்களிடம் உள்ள ஏழ்மையை விரட்டிவிடும். இதன் சுவரங்களின் பிரயோகம் தரும் அதிர்வுகள் உங்கள் உள்ளத்தில் அசுத்தமான நினைவுகளால் உண்டாகும் கசப்பான உணர்வுகளை அகற்றிவிடும்! இது ஒரு அபூர்வ ராகம் இதில் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே!

'ஜகஜனனி சுகுவானி கல்யானி' என்ற தண்டபாணி தேசிகர் எழுதியப் பாடல் இந்த ராகத்தில் மிகவும் பிரசித்தாமான ஒன்று! அது போல் எந்த ராகம் எடுத்தாலும் அதுக்கு உதாரணமாய் பாடி வைத்த பலப்பாடல்கள், நமது பழைய தமிழ் சூப்பர் ஸ்டார் எம் கே டி தியாகராஜ பாகவதருடயது. அப்படி அவர் பாடிய ஒரு பாடல் 'சிவகவி' என்ற படத்திலே வந்த 'மனம் கனிந்தே ஜீவதானம் தந்தாழ்வாய்' என்றப் பாடல். கீழே உள்ள பாட்காஸ்ட்டை கேட்க தவறாதீர்கள்! அதே போல் நம் இளையராஜா இசை அமைத்த 'சிந்து பைரவி'யில் வந்த 'ஆனந்த நடனமாடினாள்' என்ற பாடலும் இந்த ராகத்தில் அமைந்த ஒன்று!

உங்களுக்கு தெரிந்த இந்த ராகத்தில் அமைந்த மற்ற பாடல்களை நீங்கள் உங்கள் பின்னோட்டத்தில் குறிப்பிடலாமே! இதோ, இப்பொழுது பாட்காஸ்ட்டை கேளுங்கள்!



தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

2 comments:

said...

it was nice to read your comparison of notes between western and indian classical music. am currently torturing myself to learn piano,have had music training upto geetham of sorts many yrs ago and absolutely never followed it up.. however for me vocal seemed easier and transferring from my head to hands seems to eb a huge problem. but it was interesting note that 'c sharp' is sa

said...

முன்பே கேட்டுட்டேன்.. (உள்ளேன் ஐயா! :))