Thursday, November 09, 2006

Rh Factor - Addendum

சென்ற பதிவில் பின்னூட்டங்கள் வாயிலாக நிறைய பேர் சந்தேகம் கேட்டிருந்தார்கள். அதனால் சுருக்கென்று ஒரு சினாப்ஸிஸ். கீதா அவர்களின் பதிவு நாளை வெளிவரும்.

-----------------

Rh D என்பது இரத்த அணுக்களின் வெளிப்புறத்தில் ஒட்டியிருக்கக்கூடிய ஒரு antigen (antigen என்றால் என்ன என்பது பின்னே வருகிறது). இது இருப்பவர்கள் Rh+ இல்லாதோர் Rh -. அவ்வளவுதான். நம்மில் பெரும்பாலனவர்கள் Rh பாஸிட்டிவ் தான். தமிழகத்தைப் பொறுத்தவரை ஐந்து சதவிகிதம் வரை Rh - பெண்கள் இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இப்போது மனைவி Rh - ஆகவும் கணவன் Rh + ஆகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கும் உண்டாகும் குழந்தை Rh+ ஆக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.மற்ற combinations பற்றி கவலைக் கொள்ளத்தேவையில்லை. சரி, அப்படி அம்மா Rh - ஆகவும் குழந்தை Rh+ ஆகவும் இருந்தால் என்ன ஆகும்?

நம் உடலின் நோயெதிர்ப்புத் திறனே இங்கு எதிரியாகப் போய்விடுகிறது. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகள், அவை சுரக்கின்ற பொருட்கள் என அனைத்திற்கும் ஒரு ஐடி கார்ட் போல ஒன்று இருக்கும். இரத்தத்தில் வெளியாட்களை கண்டு கொண்டு அவற்றிற்கு எதிராக அதிரடி ஸ்பெஷல் ஆர்மியைக்கொண்டு திரட்டி போர் செய்து அவற்றை அழிக்கும் வேலையைச் செய்வது வெள்ளை இரத்த அணுக்கள். இந்த வெளியாட்கள் நோய் கிருமிகளாய் இருக்கலாம் இல்லை மற்றவர்களிடமிருந்து பொருத்தப்பட்ட இருதயமாயிருக்கலாம். நம் உடலுக்கு வேறானது என்று கண்டுகொள்ளப்பட்ட எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது நம் நோயெதிர்ப்பு சக்தியின் வேலையாகும். எப்படி நம் உடல் சாராத பொருள் என்று வெள்ளைஅணுக்கள் கண்டுகொள்கின்றன?

இதற்கு முன்னரே சொல்லப்பட்ட ஐடி கார்ட் தான் பயன்படுகிறது. வெளி பொருட்கள் கொண்டுவரும் ஐடி கார்ட்கள் antigens என்று அழைக்கப்படுகின்றன. நம் உடல் சாராத antigen ஐடி கார்டி வைத்திருக்கும் அணுக்களைக் கண்டால் அபாயச் சங்கை ஊதி அவற்றுடன் போரிட antibodies எனப்படும் தனித்துவமான நமது நோயெதிர்ப்பு படையை வரவழைக்கும் வெள்ளை அணுக்கள்.

தாயுடைய இரத்தமும் உள்ளிருக்கும் குழந்தையின் இரத்தமும் வேறுவேறானாலும் இரண்டும் இரத்தமும் கலக்க வாய்ப்புகள் உண்டு. அப்படி பேறுகாலத்தின் போது கலக்கவில்லையெனினும், பிரசவத்தின் போது கலக்க வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி கலந்துவிட்டால் குழந்தையின் இரத்த அணுக்களில் உள்ள Rh + ஆண்டிஜனை வெளியாள் என அடையாளம் கண்டுகொண்டு அந்த ஐடி கார்டை உடைய அனைத்து திசுக்களையும் அழிக்க ஸ்பெஷல் போர்ஸான ஆண்டிபாடிஸை தாயின் உடல் தயார் செய்யும். Rh- Iso Immunization என்று இதற்கு பெயர். இதற்கு காலம் பிடிக்கும். அதனாலேயே பெரும்பாலும் முதல் பிரசவத்திற்கு Rh னால் ஆபத்தில்லை. ஆனால் இரண்டாவது குழந்தை பாதிக்கபட வாய்ப்புகள் அதிகம். முதல் குழந்தை முழுமையாக பிரசவிக்க வேண்டுமென்றில்லை. Miscarriage, Abortion, Ectopic Pregnancies, trauma, amniocentesis போன்றவையும் தாயின் இரத்தத்தில் ஆண்டிபாடீஸை சுரக்க வைக்கலாம். இதற்கு Rh-sensitization என்று பெயர்.

இந்த ஆண்டிபாடீஸ் குழந்தையின் இரத்த அணுக்களை அழிப்பதன் மூலம் anemia உண்டாகும். intra uterine death அதாவது கருவிலேயே குழந்தை இறக்கலாம். இல்லையென்றால் பிறக்கையிலே edema, severe jaundice (குழந்தை மஞ்சளாக இருப்பதற்கு காரணம்), liver/spleen enlargement, anemia வென symptoms உடன் பிறக்கலாம். எந்த அளவுக்கு வீரியத்துடன் இவை இருக்கும் என்பது திட்டவட்டமாக சொல்ல இயலாது. இரத்தமின்மை குழந்தையின் மரணத்தில் கொண்டு விடலாம். இந்நோய்க்கு Erythroblastosis Fetalis என்று பெயர்.

-----------------------------
எப்படி தடுப்பது?
அநேகமாக Rh பாஸிடிவா நெகடிவா என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். O+, O- என்று சொல்வதில் உள்ள +,- தான் Rh குறிப்பவை. அப்படியும் தெரியவில்லையென்றால் பிரசவமாகியிருப்பது தெரிந்தவுடன் செய்யப்படும் இரத்தப் பரிசோதனைகளில் Rh - என்ன என்பது உறுதிசெய்யப்படும். கருவுற்ற இருபத்தியெட்டாவது வாரத்தில் தாய்க்கு antibody test செய்யப்பட்டு அது நெகட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் Rh Immunoglobulin வாக்ஸின் தரப்படும்.

இதுதவிர பேறு காலத்தில் trauma அல்லது மேற்சொன்ன ஒன்றில் ஏதாவது நடந்து குழந்தையின் இரத்தம் தாயுடையதுடன் கலந்திருக்கலாம் என்று சந்தேகித்தால் அதுநடந்து 72 மணிநேரத்திற்குள் இந்த வாக்ஸின் தரவேண்டும்.

பிரசவத்திற்கு பின்பும் 72 மணி நேரத்திற்குள் தரவேண்டும்.

-------------------
எல்லாவற்றையும் மீறி Rh பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை என்ன?

உங்கள் மருத்துவர் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டால் amniocentesis செய்யச் சொல்வார். அதன் மூலம் குழந்தையின் நலம் பற்றி விரிவாகத் தெரியவரும். பாதிப்பு இருப்பது தெரிந்தால் exchange transfusion செய்யலாம். அதுவும் முடியாத பட்சத்தில் pre-term ஆக பிரசவிக்கவும் செய்யலாம்.

இந்நோயை பெரும்பாலும் தடுப்பதற்கான சிறப்பு சிகிச்சைகள் வந்துவிட்டன. பேறு காலத்தின் போது ரெகுலராக பரிசோதனைகள் செய்து, தகுந்த முறையில் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்தால் இதிலிருந்து மிக எளிதாக தப்பித்துக்கொள்ளலாம்.

41 comments:

இலவசக்கொத்தனார் said...

டாக்டர் இராமநாதன்,

மிக நேர்த்தியான சிறு குறிப்பு. சென்ற பதிவில் சந்தேகங்கள் கேட்டிருந்தவர்களுக்கு பதில் கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

கீதா அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை உங்கள் பொதுவான குறிப்புகளுடன் படிக்கும் பொழுது ஒரு முழுமையான புரிதல் கிடைக்கிறது.

மணமாகும் பொழுதே இந்த ரத்த வகை குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளுவதில் உள்ள நன்மைகள் ஏராளம். அனைவரும் இது பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

துளசி கோபால் said...

நல்ல விளக்கம்.

நன்றி டாக்டர்.

கடல்கணேசன் said...

ஓ.. மிகவும் அருமையான் பதிவு.. இதுபோன்ற பதிவுகள் பிரதியெடுத்து வைத்துக் கொள்ள்ப் பட வேண்டும்.. நான் செய்துவிட்டேன்..

படிக்கும் போதிருந்து இந்த ரத்தம் சம்பந்தமாக பல செய்திகள் கேள்விப் பட்டிருந்தாலும், எப்போதும் அது குறித்து தெளிவான அறிவு எனக்கு இருந்ததில்லை..

இந்தப் பதிவு எனக்கு விழிப்புணர்வு ஊட்ட்டியுள்ளது.. எல்லோரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.. நிறைய பேர் இதை படிக்க வேண்டும்..

எல்லோருக்கும் தகவல் அனுப்பி படிக்கச் செய்யுங்கள்..

டாக்டர். இராமனாதனுக்கும், கீதா மேடத்துக்கும், முக்கியமாக இலவச கொத்தனாருக்கும் எனது நன்றி

இலவசக்கொத்தனார் said...

//இதுபோன்ற பதிவுகள் பிரதியெடுத்து வைத்துக் கொள்ள்ப் பட வேண்டும்.. //

தமிழ்மணப் பட்டையிம் பி.டி.எப். கோப்பாக சேமிக்கும் வசதி இருக்கிறது. வேண்டுமென்பவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

//.. நிறைய பேர் இதை படிக்க வேண்டும்.. //

உங்கள் ரசிகர் பட்டாளத்துக்கு சொல்லி விடுங்கள் கணேசன். அதான் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறதே உங்கள் பின்னால்!

பாராட்டுக்களுக்கு மீண்டும் நன்றி.

Syam said...

ஏங்க இங்கயும் அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டா ஒத்துக்குவீங்களா :-)

Syam said...

நெருப்பு நரில சரியா தெரிய மாட்டேங்குது அதுக்கு என்ன பன்னனும்னு ஒரு போஸ்ட் போட்டீங்கனா நல்ல இருக்கும் :-)

இலவசக்கொத்தனார் said...

//ஏங்க இங்கயும் அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டா ஒத்துக்குவீங்களா :-)//

வந்ததுக்கு அடையாளமா கட்டாயம் அது ஒத்துக்கொள்ளப்படும். நிறையா சுவாரசியமான தகவல்கள் தர ரொம்பவே மெனக்கிடறோம் அதனால வந்தேன் போனேன்னு இருக்காம பதிவையும் படிக்கணும். அதான் எங்க ஆசை.

செய்வீங்கதானே ஷ்யாம்!

Syam said...

//உங்கள் ரசிகர் பட்டாளத்துக்கு சொல்லி விடுங்கள் கணேசன். அதான் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறதே உங்கள் பின்னால்!//

ஆமா ஆமா அண்ணன் ம் னு ஒரு வார்த்தை சொல்லட்டும்...பிரேஸில் போய் கூட இத எடுத்து சொல்ல நான் தயார் :-)

இலவசக்கொத்தனார் said...

//நெருப்பு நரில சரியா தெரிய மாட்டேங்குது அதுக்கு என்ன பன்னனும்னு ஒரு போஸ்ட் போட்டீங்கனா நல்ல இருக்கும் :-)//

நான் நெருப்புநரியில்தானே பார்க்கிறேன். எனக்கு சரியாகத் தெரிகிறதே. எழுத்துக்கள் உடைந்து வருகிறதா? என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

Syam said...

//செய்வீங்கதானே ஷ்யாம்! //

செஞ்சுட்டேங்க...ஆனா என்ன சொல்றதுனு தெரியல...அதுனால எனக்கு தெரிஞ்சவங்களுக்கு பார்வேர்டு பண்ணிட்டு...அட்டெண்டெண்ஸ் போட்டேன் :-)

இலவசக்கொத்தனார் said...

//ஆமா ஆமா அண்ணன் ம் னு ஒரு வார்த்தை சொல்லட்டும்...பிரேஸில் போய் கூட இத எடுத்து சொல்ல நான் தயார் :-)//

போயி அவருகிட்ட நைசா பேசி ஒரு ஆர்டர் வாங்கிட்டு கிளம்புங்க. ஆனா அங்க போயி இந்த வேலையை மட்டும்தான் பார்க்கணும்.

இலவசக்கொத்தனார் said...

//செஞ்சுட்டேங்க...ஆனா என்ன சொல்றதுனு தெரியல...அதுனால எனக்கு தெரிஞ்சவங்களுக்கு பார்வேர்டு பண்ணிட்டு...அட்டெண்டெண்ஸ் போட்டேன் :-)//

அது போதும். அட்டெண்டன்ஸ் மார்க்க்ட். இனி கட் அடிச்சிட்டு படத்துக்கு போகலாம்.

Syam said...

//எழுத்துக்கள் உடைந்து வருகிறதா? என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் பார்க்கலாம். //

ஆமாங்க எழுத்துக்கல் உடைந்து தான் வருது...அதுனால படிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு...இந்த பிளாக் மட்டும் இல்ல...எல்லோர் பிளாக்கும் தான்...அதுனால தான் நெருப்பு நரில ஏதாவது செட்டிங்ஸ் மாத்தனுமானு கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கனா உபயோகமா இருக்கும் :-)

இலவசக்கொத்தனார் said...

ஷ்யாம்,

பதிவுகளில் alignment justified ஆக செய்திருந்தால் நெருப்புநரியில் சரிவர தெரிவதில்லை. ஆனால் இந்த பதிவு left aligned ஆகத்தான் உள்ளது.

உங்கள் கணினியில் control panel -> regional and language settings -> languages tabல் instal files for complex script and right to left languages என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.

சில கணினிகளில் இது விண்டோஸ் சி.டியை கேட்கும். அதனை நிறுவினால் இந்த பதிவு சரிவர தெரிய வருமென நம்புகிறேன். முயன்று பாருங்கள்.

இல்லையென்றால் சொல்லுங்கள். இங்கு ஒரு கேள்வியாக எடுத்துக் கொண்டு யாரையாவது ஒரு பதிவு போடச் சொல்லலாம்.

Syam said...

கொத்ஸ்,

நான் விண்டோஸ் 2000 பயன்படுத்துகிறேன்..அதில் Regional Options தான் இருக்கு அதுல instal files for complex script and right to left languages... நான் எப்படியோ தில்லாலங்கடி வேலை பாத்து பதிவ படிச்சுடுவேன்னு வச்சுகுங்க...ஆனா இதுக்கு எந்த மாதிரி opererating sytstem க்கு எந்த மாதிரி செட்டிங்கஸ்னு ஒரு தனி பதிவு போட்டீங்கனா நிறைய பேருக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கறேன்..ஏன்ன எனக்கு தெரிஞ்சு நிறைய பேர் இதுனாலயே தமிழ் பதிவுகள் படிக்க விருப்பம் இருந்தாலும் படிக்க முடியாம இருக்காங்க..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

டாக்டர் இராமநாதன் ஜி,
அருமையா, விளக்கமா, என் போன்ற கற்பூர மூளைகளுக்குப் புரியும் வண்ணம் சொல்லி இருக்கீங்க! மிக்க நன்றி!

அது சரி, டாக்டர்;
//72 மணிநேரத்திற்குள் இந்த வாக்ஸின் தரவேண்டும்//

இந்த வாக்ஸின் availability என்னவோ?
எளிதில் கிடைக்கக் கூடியதா? முன்பே சொல்லி வாங்கி வைக்க வேண்டுமா?
ஏன் கேட்கிறேன் என்றால், பெரு நகரங்களில் ஒகே! கிராமம் மற்றும் சிற்றூர்களில் மருத்துவமனைகளிலும் கிடைக்கக் கூடிய drug தானா? இல்லை விலை அதிகமானதால், முன்பே சொல்லி தருவித்து வைப்பார்களா?

மீண்டும் "-" பற்றிய பதிவுக்கு ஒர் "+" குத்து! :-)

ரவி said...

நல்ல பதிவு, தரமான தகவல்கள்..நன்றி விக்கிக்களே...

இலவசக்கொத்தனார் said...

ஷ்யாம்,

இதுக்கு ஒரு தனி பதிவு போடலாம். கொஞ்சம் காத்திருங்க. அதுவரை இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகப்படுத்துங்க. ஒண்ணும் ஆவாது, கவலைப்படாதீங்க.

இல்லைன்னா இதை அப்படியே காப்பி பண்ணி ஒரு நோட் பேடில் பேஸ்ட் பண்ணிக்குங்க. அதுல எளிதா படிக்க முடியும்.

இலவசக்கொத்தனார் said...

//என் போன்ற கற்பூர மூளைகளுக்குப் புரியும் வண்ணம் சொல்லி இருக்கீங்க! மிக்க நன்றி!//

கே.ஆர்.எஸ். உங்களுக்கு கற்பூர மூளை இல்லைன்னா யாருக்கு இருக்கும்? என்னை மாதிரி கரி மூளைங்களுக்கே புரியுது. அப்புறம் என்ன!

//மீண்டும் "-" பற்றிய பதிவுக்கு ஒர் "+" குத்து! :-)//

உங்க குத்துக்கு மீண்டும் நன்றி.

உங்க கேள்விகளோட நானும் ஒரு இலவச இணைப்பு ஒண்ணு கேட்டுக்கறேன். டாக்டர் வந்து பதில் சொல்வாரு. அந்த வாக்ஸின், போலியோ வாக்ஸின் மாதிரி குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருக்கணுமா? இது எல்லா இடங்களிலும் கிடைக்குமாறு செய்யப் பட்டிருக்கா?

இலவசக்கொத்தனார் said...

//நல்ல பதிவு, தரமான தகவல்கள்..நன்றி விக்கிக்களே...//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரவி.

Sridhar Narayanan said...

இராமநாதன் அவர்களே,

மிக நன்றாக எளிமையாக புரிகின்ற மாதிரி கொடுத்திருக்கிறீர்கள். பள்ளியில் zoology வகுப்பை கட்டடித்த என் போன்றவர்களுக்குக் கூட சுவாரசியமாகத்தான் இருக்கின்றது. மிக்க நன்றி!

//தாயுடைய இரத்தமும் உள்ளிருக்கும் குழந்தையின் இரத்தமும் வேறுவேறானாலும் இரண்டும் இரத்தமும் கலக்க வாய்ப்புகள் உண்டு. அப்படி பேறுகாலத்தின் போது கலக்கவில்லையெனினும், பிரசவத்தின் போது கலக்க வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி கலந்துவிட்டால் குழந்தையின் இரத்த அணுக்களில் உள்ள Rh + ஆண்டிஜனை வெளியாள் என அடையாளம் கண்டுகொண்டு அந்த ஐடி கார்டை உடைய அனைத்து திசுக்களையும் அழிக்க ஸ்பெஷல் போர்ஸான ஆண்டிபாடிஸை தாயின் உடல் தயார் செய்யும். Rh- Iso Immunization என்று இதற்கு பெயர். இதற்கு காலம் பிடிக்கும்.//

இதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய long-shot... ஒருவேளை நரகாசுரனுக்கு RH+ve இருந்து, பூமாதேவிக்கு RH-ve இருந்து, Rh-ISO immunization கொஞ்சம் தாமதமாக வேலை செய்திருக்குமோ...

இப்படிப் பட்ட அதிகப் பிரசங்கித்தனத்துக்கெல்லாம் கோச்சுக்கப் படாது... சும்மா தமாஷ்!

மீண்டும் நன்றி.

வழக்கம் போல் என்றும் இளைஞர் இலவசனாருக்கு ஒரு ஓ....

ramachandranusha(உஷா) said...

ஒரு பிளாஷ் பேக், பத்தொன்பது வருடத்திற்கு முன்பு, நாங்கள் இருந்தது பவர் பிளாண்ட் என்பதால்
விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று கல்யாணம் செய்துக்கொண்டு வந்த மனைவிகளுக்கும் இரத்த பரிசோதனை செய்து பிளட் குரூப் பார்த்து வைத்துக் கொள்வார்கள்.
என்னுடையது ஏபி நெகட்டிவ் என்றார்கள். என் கணவருடையது பி பாசிடிவ். (எல்லாவிஷயத்திலும்
நாங்கள் எதிர் எதிர் என்பதை விஞ்ஞான பூர்வமாய் நிரூபித்தாகிவிட்டது. ஆனால் எதிர் எதிர் குணங்களே ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதும் விதி)

நானா என் கணவரோ அபொழுதுதான் ஆர்தர் ஹெய்லியின் பைனல் டயாகனிஸ் படித்திருந்தோம். அதில்
ரத்தம் மாற்றுதல் எல்லாம் வரும். அதை விட இன்னொரு பிரகஸ்பதி இப்படி கணவன், மனைவி
அமைந்தால் குழந்தை பிறக்காது என்று ஆசிர்வதித்துவிட்டு போனார்.
நான் ஓவென அழ, என் கணவரோ எனக்கு நான், உனக்கு நீ என்று வசனமெல்லாம் பேச, ஒரு
வருடத்திற்கு குழந்தை வேண்டாம் என்ற எங்கள் திட்டம், இந்த சோகத்தில் மறந்துப் போக அம்மாதமே
நான் உண்டானேன். அப்புறம் என்ன என் கணவர் கொலைவெறியுடன் சொன்ன ஆளை தேடிக்
கொண்டு இருந்தார். பல வருடங்களுக்கு அந்தாளுக்கு சாபம் போய் கொண்டு இருந்தது.

டவுன் ஷிப் ஆஸ்பிடலில் மருத்துவர், முதல் குழந்தைக்கு பிரச்சனை இல்லை, ஆனால் குழந்தை பிறந்ததும் ஊசிப் போட வேண்டும் அப்பொழுதுதான் இரண்டாவதற்கு எந்த பிரச்ச்னையும் இருக்காது என்றார்கள்.

அப்பொழுது பைக் வாங்கிய புதுசு. அஸ்ஸாமின் காடுகளில் புகுந்து வந்துக் கொண்டு இருந்தோம். சொல்ல பெரியவர்கள் யாரும் இல்லை, ஒரு வகையில் நல்லதுதானே, பிரக்னஸ்சி என்பது நோய்அல்லவே?

ஆனால் நாள் ஆக, ஆக அக்கம் பக்கம் இருப்பவர்கள், தங்கள் கணவனிடம் சொல்ல, பாவம்
நம்மாளு தினமும் நாலு பேரிடம் ஆபிசில் அறிவுரை வாங்கிக் கொள்ள வெறுத்துப் போய் ஊர் சுற்றுவது நின்றுப் போனது. இதன் காரணமாய் என்னவோ குழந்தை அழகாய் ஏறத்தாழ நான்குகிலோவிற்கு ஆரோக்கியமாய் பிறந்தது. பெண் பி நெகடிவ்.

நான்கு வருடம் கழித்து இரண்டாவது முறை கருத்தரித்தேன். இம்முறை பிரச்சனை இருக்கலாம் என்று அதிகம் ஸ்ரெயின் செய்துக் கொள்ளக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். பயணம் கூடவேகூடாது, ஆனால் சாதாரணமாய் வீட்டு வேலை செய்துக் கொண்டு இருந்தேன்.

ஆறாம் மாதம் முதல், பிளட் டெஸ்ட் மாதாமாதம் செய்துக் கொண்டு இருந்தார்கள். தொண்ணூத்தி
ஒன்றில் ஸ்கேன் அபூர்வம் என்பதால் அடையாற்றில் ஒரு இடத்தில் ஏழாவது மாதம் ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் குழந்தைக்கு பிரச்சனை இருக்கும் என்று டாக்டரம்மா சொல்லிவிட்டார்.

பிறந்த குழந்தையும் நல்ல ஆரோக்கியமாய், மூன்றரை கிலோ இருந்தது. மறு நாள் வந்துப்
பார்த்த என் தம்பி மஞ்சளாய் இருக்கு என்று அலற, டாக்டர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார். மகன் ஏபி பாசிடிவ்

ஒரு மாதத்திற்கு காலை வெய்யிலில் என் அப்பா பிள்ளையை தூக்கி சூரியனுக்கு காட்டிக் கொண்டு
இருப்பார். இப்பொழுது மருத்துவ உலகம் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதெல்லாம் பெரிய
பிரச்சனையே இல்லை. அதனால் யாரும் பயப்படாமல், சொந்தத்திற்குள் செய்துக் கொள்ளாமல், வெளியில் எந்த பிள்ட் குருப் இருந்தாலும் கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்பது என்
அட்வைஸ் :-)

பி.கு அந்தக் காலத்தில் சில பெண்களுக்கு குழந்தை பிறந்து பிறந்து இறந்துப் போகும். நாகதோஷம்
என்பார்கள். அதுதாங்க இது.
ஆனா நகரத்தில் இருக்கும் இவ்வசதிகள் நம் ஊர்களில்
கிராம அரசு மருத்துவ மனைகளில் உண்டா என்ற கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க

G.Ragavan said...

எனக்கொரு சந்தேகம். முந்தியெல்லாம் இரத்தத்தோட வகை தெரியாமத்தான இருந்துச்சு. அப்பயும் இந்தப் பிரச்சனை இருந்திருக்கனும்தானே. ஆனா அப்பக் காரணம் தெரியாட்டியும் இதே விளைவுகள் உலகம் முழுக்க இருந்திருக்கனுமே. பத்து சதவீதத்துக்கும் குறைவான பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதால இது பெரிசா வெளிய வரலையோ! blue babyன்னு பாடத்துல படிச்ச நெனவு இருக்கு. அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?

ஓகை said...

அருமையான சிறப்பான பயனுள்ள விளக்கம்.

இகொ&கோ கலக்குறீங்க போங்க!

rv said...

கொத்ஸ், அக்கா, கடல்கணேசன், சியாம்,கே. ஆர். எஸ், செந்தழல் ரவி, ஸ்ரீதர் வெங்கர், உஷா அக்கா, ஜிரா, ஓகை

அனைவருக்கும் நன்றி

Syam said...

//கொத்ஸ், அக்கா, கடல்கணேசன், சியாம்,கே. ஆர். எஸ், செந்தழல் ரவி, ஸ்ரீதர் வெங்கர், உஷா அக்கா, ஜிரா, ஓகை

அனைவருக்கும் நன்றி //

எதுக்குங்க தனியா நன்றி எல்லாம் சொல்லி...இந்த மாதிரி பயனுள்ல தகவல் தருவதற்க்கு நாங்க தான் நன்றி சொல்லனும் :-)

Syam said...

WIKI பிரதர்ஸ் & ஸிஸ்டர்ஸ் இன்னொரு கொஸ்டின் Animal Planet channel ல ஒரு விலங்கோட life cycle காட்டுராங்களே...அதுக்கு அங்க அங்க கேமரே ஃபிக்ஸ் பண்ணி வெச்சுருப்பாங்களா இல்ல யாராவது அதுங்கள பாலோ பண்ணி வீடியோ எடுப்பாங்களா...இல்ல ஹைடெக்கா சேட்டிலைட்ல இருந்து எடுப்பாங்களா...இதுவும் ஒரு ரெக்வெஸ்ட்....

கடல்கணேசன் said...

எனது பதிவில் இந்த படைப்புக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

Anonymous said...

இராமநாதன்,

பயனுள்ள தகவல். என் அண்ணா,அண்ணிக்கும் இதே பிரச்சினை வந்து, சரியான வழிகாட்டுதல் இன்றி,இரண்டாவது குழந்தை இறந்து பிறந்தது..

முதல் குழந்தைக்கு பார்த்த மருத்துவர் வேறு,இரண்டாவது குழந்தைக்கு பார்த்த மருத்துவர் வேறு. இருவரும் சரியாகச் சொல்லவில்லை, நாங்களும் சரியாக புரிந்து கொள்ளவில்லை..

பிறகு ஆனந்த விகடனில் இதைப் பற்றி வந்தபோதுதான் நான் படித்து அண்ணாவிடம் கூறினேன்..

ஏன் இதனைப் பற்றி எல்லாம் பாட திட்டத்தில் சேர்க்க மறுக்கிறார்கள்?


கேள்வி-:

ஏன் சொந்த்ததில் திருமணம் செய்தால்(
முக்கியமாக தாய்-மாமாவை மணக்கும்போது)பிறக்கும் குழந்தை
ஊனமாகவொ,இல்லை அறிவு குன்றியோ கானப்படுகிறது..

மதுமிதா said...

இ.கொ., இராமநாதா நல்லா இருங்க
நல்ல பதிவு

என் தம்பி(சித்தப்பா பையன்) மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அழகான ஆண்குழந்தை. இரண்டு நாட்களா
வதற்குள் குழந்தையின் உடல் நீலமாக மாறிக்கொண்டு வந்திருக்கிறது. உடன் சிகிச்சை எடுத்து சரியாகி விட்டது.

என் குழந்தை பிறந்ததிலிருந்து அழ
வில்லை என்று தம்பி மனைவி கூறிய தால் மருத்துவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

ஐ சி யு வில் வைத்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை ஒரு வாரத்திற்கு. தாய் மட்டும் போய் பார்த்து வரலாம்.

அதற்கு பிறகு அழுதால் அப்படியே உடல் விறைத்து விடும் குழந்தைக்கு முழுதாய் இருவருடங்கள் வரையில். பிறகு சரியானது. இது ஏன்?

இரண்டாவது குழந்தைக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

Geetha Sambasivam said...

"Blue Baby" என்பது பிறப்பிலேயே இருதயம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் குறிப்பிடுவது என நினைக்கிறேன். இது பற்றியும் திரு ராமநாதன் அவர்கள்தான் சொல்ல வேண்டும். மற்றபடி உஷாவுக்கு முதல் குழந்தையும் நெகட்டிவ் என்பதால் பிரச்னை வரவில்லை. இரண்டாவது குழந்தை "பாசிட்டிவ்" என்றாலும் முதல் பிரசவத்தில் அவருக்கு sensitization ஆகாததால் பாதிப்புக் குறைவாக இருந்திருக்கிறது. மற்றபடி என்னுடைய தாய் மாமாவிற்கு "ஓ நெகட்டிவ்" ரத்த வகைதான். மாமாவின் மனைவி பாசிட்டிவ் வகை என்பதால் குழந்தைகள் பாதிக்கப் படவில்லை. குழந்தைகளும் பாசிட்டிவ் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Anonymous said...

ஐயா கொத்தனாரே,

இன்னுமொரு நல்ல பதிவு.
மருத்துவர் இரமாநாதனுக்கு வாழ்த்துகள்.
மருத்துவம் தொடர்பான பிற கட்டுரைகளையும் விக்கி பசங்க மூலமாக வழங்க வேண்டுகோள்!

சந்தடி சாக்குல உஷாஜி ஒரு சிறுகதை எழுதியிருக்குறதை கவனிச்சீங்களா? :-)

சாத்தான்குளத்தான்.

பத்மா அர்விந்த் said...

இராமனாதன், எளிமையான பதிவு. எளிமைக்காக MHC யின் பங்கை விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

பத்மா அர்விந்த் said...

Blue baby is totay different, that happens due to less oxygen in blood. Either lung, or heart defects or some cyanide or any other incompatibility.

✪சிந்தாநதி said...

மிக நல்ல பதிவு.

எல்லாவிதமான விஷயங்களும் இங்கே அலசப்படுவதால், எனக்கு ரொம்ப நாளா இருக்கும் ஒரு அறிவியல் சந்தேகத்திற்கு இங்கே விளக்கம் கிடைக்குமா பார்ப்போம்..

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் கான்கிரீட் தரையில் இருந்த ஒரு சிறு துளை வழியாக எறும்புகள் வந்து போய்க் கொண்டு இருந்தன. அதனால் அதனுள் எறும்புப் புற்று இருக்கலாம் என்று தோன்றியது. சில தினங்களுக்குப் பிறகு திடீரென ஒரு நாள் அதற்குள்ளிருந்து லட்சக்கணக்கான சிறிய வெள்ளை நிற புழுக்கள் போல வெளிவரத் தொடங்கின.

தனித்தனிப் புழுக்களாக அல்ல. ஒன்றின் மேல் ஒன்றாக சேமியா (noodles) போல, (தனியாக ஒவ்வொன்றும் ஒரு செமீ நீளம்தான் இருக்கும்,) அரையடி அகலத்தில் இரண்டடி நீளத்துக்கு வெளியே பரவியது மொத்தமாக வெளியே ஒருமீட்டர் தூரம் சென்ற பின் திரும்பி U turn அடித்து திரும்பி மீண்டும் துளைக்குள் நுழைந்தது விட்டன.

சுமார் ஒரு வாரம் கழித்து அந்த இடத்திலிருந்து பத்தடி தள்ளி இன்னொரு துளையிலிருந்து வந்தது. அதேபோல U turn அடித்து திரும்பி விட்டன.

அவை ஒன்றின் மேல் ஒன்றாக சீராகப் பரவி இருந்தன. லட்சக்கணக்கான புழுக்கள் மொத்தமாக ஒரு ஜெல்போல சேமியா நிறத்தில் மெதுவாக வழுக்கிக்கொண்டு சென்றன.

இந்த வினோதமான உயிரினம் என்னவென்று பலரிடத்திலும் கேட்டுப் பார்த்தும் விபரம் அறிய முடியவில்லை. அதன்பிறகு இன்று வரை அப்படி ஒரு காட்சியை பார்க்க முடிய வில்லை. வேறு யாரும் பார்த்ததாக தகவல் இல்லை. பல புத்தகங்களில் தேடியும் இதுவரை விபரம் கிட்டவில்லை.

என் விளக்கங்களிலிருந்து அது என்ன என்பது குறித்த அறிவியல் தகவல் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல, அவசியமான பதிவு இராமநாதன்.

நன்றி!

-மதி

குமரன் (Kumaran) said...

மருத்துவரே. இப்பத் தான் மருத்துவரே உங்க செய்தொழிலுக்கு ஏற்ற மாதிரி பதிவு போட்டிருக்கீங்க. :-)

மிக்க நன்றி. எளிமையா சொல்லியிருக்கீங்க.

rv said...

அட ஸாரி மக்கள்ஸ்,
சில நாட்கள் வலைப்பக்கம் வரமுடியாத அவலநிலை. அதுக்குள்ள இங்க ஏகப்பட்ட கேள்வி கேட்டு பதில் வராம எல்லாரும் காஞ்சு போயிட்டாங்கன்னு நினைக்கிறேன்.

இதுவரை வந்த கேள்விகள கொத்ஸ் அழகா தொகுத்திருக்கார்.

1) I am not able to see tamil fonts properly in firefox. What can I do - Shyam

2a) இந்த வாக்ஸின் availability என்னவோ?
எளிதில் கிடைக்கக் கூடியதா? முன்பே சொல்லி வாங்கி வைக்க வேண்டுமா?
ஏன் கேட்கிறேன் என்றால், பெரு நகரங்களில் ஒகே! கிராமம் மற்றும் சிற்றூர்களில் மருத்துவமனைகளிலும் கிடைக்கக் கூடிய drug தானா? இல்லை விலை அதிகமானதால், முன்பே சொல்லி தருவித்து வைப்பார்களா? - KRS

2b)அந்த வாக்ஸின், போலியோ வாக்ஸின் மாதிரி குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருக்கணுமா? இது எல்லா இடங்களிலும் கிடைக்குமாறு செய்யப் பட்டிருக்கா? - naane!

3) blue babyன்னு பாடத்துல படிச்ச நெனவு இருக்கு. அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு? - gra

4) நல்லதொரு விளக்கமான பதிவு. இந்த RH -ve வகை ரத்தம் தாய்க்கு இல்லையென்றாலும், குழந்தை பிறந்தவுடன் மஞ்சளாக இருப்பது எதனால்? - sokkayi

5) WIKI பிரதர்ஸ் & ஸிஸ்டர்ஸ் இன்னொரு கொஸ்டின் Animal Planet channel ல ஒரு விலங்கோட life cycle காட்டுராங்களே...அதுக்கு அங்க அங்க கேமரே ஃபிக்ஸ் பண்ணி வெச்சுருப்பாங்களா இல்ல யாராவது அதுங்கள பாலோ பண்ணி வீடியோ எடுப்பாங்களா...இல்ல ஹைடெக்கா சேட்டிலைட்ல இருந்து எடுப்பாங்களா...இதுவும் ஒரு ரெக்வெஸ்ட்....- shyam

6) ஏன் சொந்த்ததில் திருமணம் செய்தால்(முக்கியமாக தாய்-மாமாவை மணக்கும்போது)பிறக்கும் குழந்தை
ஊனமாகவொ,இல்லை அறிவு குன்றியோ கானப்படுகிறது.. Mani Prakash

7) என் தம்பி(சித்தப்பா பையன்) மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அழகான ஆண்குழந்தை. இரண்டு நாட்களாவதற்குள் குழந்தையின் உடல் நீலமாக மாறிக்கொண்டு வந்திருக்கிறது. உடன் சிகிச்சை எடுத்து சரியாகி விட்டது.என் குழந்தை பிறந்ததிலிருந்து அழவில்லை என்று தம்பி மனைவி கூறிய தால் மருத்துவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
ஐ சி யு வில் வைத்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை ஒரு வாரத்திற்கு. தாய் மட்டும் போய் பார்த்து வரலாம்.அதற்கு பிறகு அழுதால் அப்படியே உடல் விறைத்து விடும் குழந்தைக்கு முழுதாய் இருவருடங்கள் வரையில். பிறகு சரியானது. இது ஏன்? - madhumita

---------------
இது என் துறை இல்லையென்பதால் நான் ஏனோ தானோவென்று பதிலளிப்பது நியாயமாக இருக்காது. கொஞ்சம் தெளிந்துவிட்டு இன்று இரவோ, நாளையோ எல்லா கேள்விகளுக்கும் எனக்குத் தெரிஞ்ச வரையில் பதில் சொல்றேன்.

நன்றி

Simulation said...

http://simulationpadaippugal.blogspot.com/2005/08/blog-post_21.html

- சிமுலேஷன்

இலவசக்கொத்தனார் said...

சிமுலேஷன்,

அங்க வந்து பாக்கறேன். நம்ம பதிவு பத்தி ஒண்ணுமே சொல்லலையே. அப்புறம் திரையிசை பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சு போல இருக்கே. அதையும் கொஞ்சம் பாருங்க சார்.

✪சிந்தாநதி said...

நம்ம கேள்விக்கு ஏதாவது பதில் இருக்குங்களா?

எறும்புகள் இப்படி புழுக்களா வர வாய்ப்புண்டா?