Thursday, May 24, 2007

வாகன மாசுக்கட்டுப்பாடு - நாம் என்ன செய்ய முடியும்? (24 May 07)

கேள்வி: சிரிப்பூட்டும் வாயு (Laughing Gas) என்ற வாயுவினை முகர்ந்தால் சிரிப்பு வரும் என்று சொல்லப்படுவது உண்மையா? உட்டாலக்கடியா?உண்மையென்றால், வருவது புன்முறுவலா? (smile) அல்லது வாய்விட்ட சிரிப்பா? (laugh)

சிமுலேஷன்

விக்கிக்கு வந்த கேள்வி இது எனினும், இந்தக்கேள்விக்கான நேரடி விடை மிக எளிமையானது என்பதால், இக்கேள்வியுடன் தொடர்புடைய வாகனப்புகையைப்பற்றியும் விரிவாகவே சொல்ல முனைகிறேன்.

எஞ்சின் புகைவிடுகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். முதலில் ஏன் அது புகைவிடுகிறது என்பதில் ஆரம்பிப்போம்.

எஞ்சின் என்பது எரிபொருளின் வேதீயல் சக்தியை வெப்பச்சக்தியாக்கி பிறகு இயங்குசக்தியாக்கும் சாதனம். (தமிழ்லே சொல்றதுன்னா, Engine is a Device which converts Fuels Chemical Energy to heat Energy and thence to Mechanical Energy:-)

எரிபொருள் என்பது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், டீஸல், கேசோலின் என்று அமெரிக்காவில் அழைக்கப்படும் பெட்ரோல், இயற்கை எரிவாயு (Compressed Natural Gas - CNG), திரவப்பெட்ரோலிய வாயு (Liquified Petroleum Gas -LPG), அல்லது ப்ரோபேன் போன்ற எதாக இருந்தாலும், எரிபொருளில் பிரதானமாக இருப்பது ஹைட்ரோ கார்பன்கள்தாம் - வேறு வேறு மூலக்கூறுகளாக. (Molecules), என்ன, ஒவ்வொரு எரிபொருளுக்கும் வேண்டத்தகாத ஆனால் தவிர்க்கமுடியாத சில கசண்டுகளும் கூடவே இருக்கும். டீஸலுக்கு சல்பர் (கந்தகம்), பெட்ரோலுக்கு ஈயம் (lead), வாயுக்களில் ஹைட்ரஜன் சல்பைடு. இவற்றின் விளைவுகளையும் பார்ப்போம்.

எரிபொருள் தானாக எரிய முடியாது, எஞ்சின் நெருப்பாக இருந்தாலும் காதல் நெருப்பாக இருந்தாலும் எந்த நெருப்புக்கும் முக்கியமான தேவை - ஆக்ஸிஜன். காற்றுமண்டலத்தில் ஆக்ஸிஜன் தனியாக இல்லை - பல்வேறு தனிமங்களுடன் கலந்தே இருக்கிறது - அதில் முக்கியமானது நைட்ரஜன்.

எனவே, எஞ்சினுக்குள் எரியும் பொருள்கள் இரண்டு - எரிபொருள் மற்றும் காற்று.

எரிபொருளில் உள்ள தனிமங்கள் - ஹைட்ரஜன்(H), கார்பன்(C) மற்றும் 1 - 3 சதம் வரை கசண்டு (சல்பர்(S) / ஈயம்(Pb) / ஹைட்ரஜன் சல்பைட்(H2S)

காற்றில் உள்ள தனிமங்கள் - நைட்ரஜன்(N), ஆக்சிஜன்(O) (மற்ற தனிமங்களை இப்போது கணக்கில் சேர்க்கத் தேவையில்லை - மிகக்குறைந்த அளவில்தான் அவை உள்ளன)

எனவே, எரியும்போது, கீழ்க்கண்ட மூலக்கூறுகள் உண்டாகின்றன, இவை வெப்பத்தை உண்டுசெய்து எஞ்சினை இயங்கச் செய்தபிறகு புகைபோக்கி வழியாக வெளியேறுகின்றன. இங்கே டீஸல் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்ற எளிய ப்ளாஷ் இருக்கிறது.

1. கார்பன், ஆக்ஸிஜனுடன் முழுமையாக எரிந்தால் - கார்பன் டையாக்ஸைடு (CO2)
2. பாதியளவு மட்டுமே எரிந்தால் - கார்பன் மோனாக்ஸைடு (CO)
3. முழுக்கவே எரியாமல் இருந்தால் - ஹைட்ரோ கார்பன் (HC)

4. தண்ணீர் (ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து) (H2O)
5. கந்தக அமிலம் - டீஸல் மற்றும் வாயு எஞ்சின்களில் கந்தகக் கசண்டு இருப்பதால். (H2SO4)
6. நைட்ரிக் அமிலம் (HNO3)

7. நைட்ரஸ் ஆக்ஸைடுகள் (பல விதங்களில் இணைய வாய்ப்பிருக்கிறது) (NO, N2O, NO2, NO3)
8. சல்பர் ஆக்ஸைடுகள் (SO, SO2, SO3)
9. பாதி எரிந்த எரிபொருள் (கார்பன் மோனாக்ஸைடு) (இரண்டாவது முறை கணக்குக்காட்ட ஏற்றவில்லை, கீழே படியுங்கள்) (CO)

இன்னும் நிறைய இருக்கிறது - ஆனால் போரடித்துவிட வாய்ப்பிருப்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இந்த மூலக்கூறுகளை மூன்றுவகையாகப் பிரித்திருக்கிறேன் என்பதையும் கவனிக்கலாம். முதல்வகை - (1,2 &3) - எரிபொருள் செலவுடன் தொடர்புடையது. அதாவது, இந்த வாயுக்களின் அளவு அதிகரிக்குமானால் எரிபொருள் செலவு அதிகரிக்கும்.

இரண்டாம் வகை - (4, 5 &6) - துருப்பிடித்தல், பாசி போன்ற படிமங்களை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்து,எஞ்சினின் பாகங்களோடு வினை ஆற்றி, அவற்றின் வாழ்நாளைக் குறுக்கக்கூடிய அமில வகைகள் .

இந்த இரண்டு வகையும் அதிகரித்தால் செலவினங்கள் அதிகரிக்கும் - பணம் சார்ந்தவை.

ஆனால் பிரச்சினையே இந்த மூன்றாவது வகையோடுதான்.

கார்பன் மோனாக்ஸைடு ஒரு நிரந்தரமில்லாத வாயு (Unstable). அல்பாயுசில் மடிந்தவர்கள் ஆவியாவார்கள் என்பதுபோல, இது முழுக்க எரியாததால் எங்கே ஆக்சிஜன் என்று தேடிக்கொண்டு அலையும். காற்று மண்டலத்தில் இதற்கு ஜோடியாக இன்னொரு நிரந்தரமில்லாத ஆக்சிஜன் வகை இருக்கிறது - மூன்று மூலக்கூறுகளைக்கொண்ட O3 - ஓசோன்! இவருக்கு ஒரு ஆக்சிஜன் வந்தால் நிலைபெறுவார், அவருக்கு ஒரு ஆக்சிஜன் இழந்தால் நிலைபெறுவார். இருவரும் சந்திக்கும்போது - கண்கள் கலந்தன, கருத்தொருமித்தனர் - சரியான ஜோடி ஆகிவிடும்!

CO + O3 -> CO2 + O2

சரி, அதில் நமக்கென்ன பிரச்சினை? ஓசோன் வாயுவின் அளவு குறைவதும், அதனால் சூரியக்கதிர்கள் தங்குதடையின்றி பூமிக்குள் நுழைந்து நமக்குப் பிரச்சினைகள் ஏற்படுத்துவதுதான். மேலும், கார்பன் மோனாக்ஸைடை நேரடியாக சுவாசித்தால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை மட்டுப்படுத்தி இதயத்தின் செயல்பாட்டையும் தொந்தரவு செய்யும்.

நைட்ரஸ் ஆக்ஸைடுகள் வேறு வகை தொந்தரவு. நைட்ரஜனே ஒரு பெரிய போதை மருந்து! மனிதனின் நரம்பு மண்டலத்துடன் உறவாடி மயக்கத்தையும் மூளைச்செயல்பாடு பாதிப்பையும் உண்டு செய்யக்கூடியது. அதனால்தான் நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) சுவாசித்தால் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு வருகிறது, அது சிரிப்பூட்டும் வாயு (Laughing Gas) என்ற பெயரும் பெறுகிறது. சிரிப்பு வருவது உண்மைதான் சிமுலேஷன். வாய்விட்ட சிரிப்பேதான். இதை முன்னாளில் மயக்கமருந்தாகவும் பயன்படுத்திவந்தார்கள் என்பது உபரி தகவல்.(அப்பாடா அந்தக்கேள்விக்கு விடை வந்துவிட்டது)

இது தவிரவும், நைட்ரஸ் ஆக்ஸைடுகளால் அமிலமழை உண்டாகும் சாத்தியமும் உண்டு.

சல்பர் ஆக்ஸைடுகள் காற்றை மாசுபடுத்துவதிலும் அமில மழைக்கும் மேற்கண்ட இரண்டுக்கும் உறுதுணையாக இருக்கும்.

கார்பன் டையாக்ஸாடு (CO2) - ஒரு க்ரீன்ஹவுஸ் வாயு - உலக் வெப்பமயமாக்கலில் முக்கிய பங்கு இதற்கு.

ஆகக்கூடி, எந்த வாயுவுமே நல்லதில்லை! அதற்காக எல்லா எஞ்சின்களையும் அணைத்துவிடவா முடியும்?

எனவே, இவற்றைக்குறைக்க பலவழிகளில் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள், அரசாங்கங்களும் பல சட்டங்களைப்போட்டு மாசின் அளவைக் கட்டுக்குள் வைக்க முயன்று வருகிறது.

யூரோ -2, பாரத் - 2, ACERT போன்ற ஸ்டிக்கர்களை உங்கள் வண்டிகளில் பார்த்திருப்பீர்கள் - இவையெல்லாம் அரசாங்கங்களின் அளவு விதிமுறைகளே. அதாவது, எஞ்சின் வெளிப்படுத்தக்கூடிய உச்சபட்ச கார்பன் மோனாக்ஸடு அளவு இவ்வளவு, நைட்ரஸ் ஆக்ஸைடு இவ்வளவு, ஹைட்ரோ கார்பன்கள் இவ்வளவு என்னும் மதிப்பளவுகளுக்குள் குறிப்பிட்ட எஞ்சினின் அளவுகள் இருந்தால் இந்த சான்றிதழ் கொடுக்கப்படும். இந்த அளவுகள் வருடாவருடம் திருத்தப்படுகின்றன.

இந்த அளவுகளுக்குள் எஞ்சினை வடிவமைக்க பல முறைகள் கையாளப்படுகின்றன.

1. அதிக வெப்பத்தை உள்வாங்கக்கூடிய, எரிபொருளை முழுமையாக உள்ளேயே எரிக்கக்கூடிய பாக்ங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
2. சரியான நேரத்தில் சரியான அளவு எரிபொருளை எஞ்சினுக்குத் தர கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் உபயோகிக்கப்படுகின்றன (Analog Computing for controlling timing & quantity of Fuel Injection / Ignition)

3. புகைபோக்கியில் வரும் வாயுவின் நச்சுத்தன்மையைக் குறைக்க வேதிப்பொருள்கள் புகைபோக்கியின் ஒரு பாகத்திலேயே வைக்கப்படுகிறது (Catalytic Convertors)

எவ்வளவுதான் ஆராய்ச்சிகள் நடந்தாலும், இந்த நச்சுகளை குறைக்கத்தான் முடியுமே ஒழிய அழிக்க முடியாது! கருப்பாக புகைவிடும் வண்டி மட்டுமல்ல, புத்தம்புதிய, புகை கண்ணுக்கே தெரியாத வண்டியும் மாசு ஏற்படுத்தத்தான் செய்கிறது.மாசின் தாக்கத்தின் அளவு மாறுபடலாமே ஒழிய எஞ்சின் ஓடினாலே மாசு நிச்சயம்!

சரி, நாம் என்ன செய்யலாம்?

1. தரமான எரிபொருளை பயன்படுத்தலாம் - எரிபொருளில் உள்ள கலப்படங்கள் மாசின் அளவை 20% வரை அதிகரிக்கக்கூடியவை. (கம்பெனியின் நேரடி பங்க்குகளில் போடுங்கள், அப்படி ஒன்று அருகில் இல்லாத பட்சத்தில் ஆட்டோக்கள் அதிகம் உள்ள பங்கைத் தேர்ந்தெடுங்கள் - ஆட்டோக்காரர்கள் பலமுறை போட்டு அறிந்து ஆராய்ந்துதான் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கிறார்கள்)

2. சிக்னல், நிறுத்தங்களில் எக்காரணம் முன்னிட்டும் ஆக்ஸிலரேட் செய்யாதீர்கள் - வீண் விரயம் மட்டுமல்ல, மாசும் அதிகமாகும்.

3. க்ளட்சில் கால் (அல்லது கை)வைத்த வண்ணம் வண்டி ஓட்டாதீர்கள் - க்ளட்ச் மூலம் கொஞ்சம் எஞ்சின் சக்தி வீணாகிக்கொண்டே இருக்கும். எஞ்சின் அதிக எரிபொருள் குடித்து, அதை மாசாக ஆக்கி தொந்தரவும் செய்யும்.

4. டயரில் காற்றழுத்தத்தை மிகச்சரியாக வையுங்கள். அழுத்தம் குறைவாக இருந்தால், வண்டியை நகர்த்த எஞ்சினுக்கு அதிக சக்தியும் எரிபொருளும் தேவைப்படும். காற்றுக்குறைவான சைக்கிள் அழுத்தும்போது அதிக சக்தி தேவைப்படுகிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்கள்தானே?

5. ஆயில், பில்டர் போன்ற பராமரிப்பு பாகங்களை குறித்த நேரத்தில் மாற்றுங்கள் - தள்ளிப்போடுவதால் கொஞ்சம் பைசா மிச்சமாவது போல் தோன்றலாம் - ஆனால் எரிபொருள் செல்வும், எஞ்சின் ஓவர் ஹாலிங் செலவும், காற்றை மாசுபடுத்துவதும் நீங்கள் சேமிக்கும் காசைவிட மிகமிக அதிகம்.

6. இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் முக்கியமாக சைலன்ஸரை அடிக்கடி (வருடம் ஒருமுறையாவது) சுத்தம் செய்யுங்கள். சுத்தம் என்றால் காற்றை வைத்து ஊதி மட்டும் அல்ல - அதறகான வேதிப்பொருள்கலைக்கொண்டு தொழில்முறையான முழுமையான சுத்தம்!

7. அமெரிக்க கார்கள் பல கேடலிடிக் கன்வர்ட்டரோடு வருகின்றன. அவற்றுக்கும் பராமரிப்பு அவசியம்


அடிக்கடி உங்கள் வண்டியின் மாசளவை பரிசோதியுங்கள்! திடீரென அதிகரித்தால் மேலே சொன்ன ஏதோ ஒன்றைச் செய்யவில்லை என்று அர்த்தம்.

பொதுவாகவே இந்தியாவில் தற்போது வரும் கார்கள் புதிய டெக்னாலஜியோடு வருவதால் அவற்றால் ஆபத்து குறைவு. ஆனால் பெருமளவு சாலைகளில் இருக்கும் இருசக்கர வாகனங்களும், லாரி, ட்ரக் பஸ் போன்றவையும் பழைய டெக்னாலஜிக்களிலேயே இயங்குகின்றன. அவைதான் பெரிய ஆபத்து. இவற்றின் மாசு அளவு அடிக்கடி பரிசோதிக்கப்படுவதும் பழுதுபார்த்து அனுமதிக்கப்பட்ட அளவுகளிலும் வைப்பது நாட்டுக்கும், உங்கள் பணப்பைக்குமே கூட உதவி செய்யும்.

வேண்டாத வேளைகளில் வண்டியை எடுப்பதைத் தவிர்க்கலாம், தனிநபராகக் காரில் செல்லாமல் Car Pool அமைத்துச் செல்லலாம்! தேவையற்ற உபயோகத்தைத் தவிர்க்க அத்தனை முயற்சிகளும் செய்யலாம்!

நம்மால் மாசு அதிகரிப்பை நிறுத்த முடியாது - ஆனால் குறைக்க முயற்சி செய்யலாம்! இந்த வழிமுறைகளை உபயோகிப்பதன் முக்கியமான கூடுதல் பலன் - எரிபொருள் சிக்கனம்!
முயற்சி செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!

******************************

பி கு1: பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், புத்தகங்கள், தயாரிப்பாளர்களின் கேட்டலாகுகள், பத்திரிக்கைச் செய்திகள், விக்கிபீடியா குறிப்புகள் ஆகியவற்றின் விளைவே இப்பதிவு. எனவே, குறிப்பிட்டு ஒரு ஆதாரத்தைச் சொல்ல முடியாது. விக்கிபீடியாக்குறிப்புகள் மட்டும் தரமுடியும்.

பி கு 2: கட்டுரை நீளமாக இருப்பதாகக் கருதினால் குறைந்தபட்சம் கடைசியில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் மட்டுமாவது படித்துவிடுங்கள். போரடிக்கிறது என்றால் அந்தக்கருத்தையும் சொல்லிவிடுங்கள், திருத்திக்கொள்கிறேன்.

பி கு 3: சற்றுமுன் போட்டிக்கு அனுப்ப உத்தேசம்.

பி கு 4: தவறு ஏதேனும் இருந்தால் திருத்துங்கள்.

Wednesday, May 02, 2007

எள்ளா உளுந்தா? எதைப் போடலாம்?

தாளிக்கிறதுக்கு ஏத்தது எள்ளா உளுந்தா? சாலமன் பாப்பையாவ விட்டா ரெண்டு மணிநேரம் பட்டிமன்றம் நடத்திடுவாரு. ரெண்டுமே தென்னிந்திய சமையல்ல சம அளவுல இருக்கு. ஆனா இலக்கியத்துல இருக்கா? தமிழ் இலக்கியத்துல எப்ப எள்ள போடணும் எப்போ உளுந்தப் போடணும்னு விதிகள் எதுனாச்சும் இருக்கா? இவ்விடயத்தில் யோகன் பாரீஸ் ஐயா அவர்களின் கம்பராமாயணப் பாடலொன்றினைக் குறித்த சந்தேகத்திற்கு தங்கத்தாரகை ஜெயஸ்ரீயின் பதில்...

***********************************
//கம்பராமாயணத்தில் ஒரு பாடல் -இராமரின் முடிசூட்டு விழாக்காண வந்த கூட்டம் நெரிச்சல் பற்றி ; கம்பர் வர்ணிக்கையில் "எள் போட்டால் எண்ணெய்" வருமென குறிப்பிட அபசகுனக் குறையென அஞ்சி...உழுந்து போட்டால் கீழே விழாது எனக் கூறியனாராம். தயவு செய்து அப்பாடலைத் தரவும்.//

யோகன் பாரிஸ் ஐயா, அந்தப் பாடல் இராமரின் முடி சூட்டு விழாவிற்கு வந்த கூட்டம் பற்றிய பாடல் அல்ல, திருமண விழாவிற்கு வந்த கூட்டம் பற்றியது.

(பால காண்டத்தில் எழுச்சிப் படலம் - 23ஆம் பாடல்)


இராம இலக்குவர்கள் விசுவாமித்திரருடன் மிதிலைக்குச் செல்கின்றனர். அங்கு இராமபிரான் சனகரின் மிகப்பெரிய சிவதனுசை 'எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்' என்று நாணேற்றி உடைத்து சீதையை மணக்கத் தகுதி பெறுகிறார். இந்த நற்செய்தியைத் தெரிவித்து, தசரத மன்னரை மணவிழாவிற்கு அழைக்க சனகர் அயோத்திக்கு ஓலை அனுப்புகிறார்.

ஓலை கிடைக்கப்பெற்ற தசரத மன்னர் பெருமகிழ்ச்சியடைந்து பரிவாரங்களுடன் மிதிலை செல்லத் தயாராகிறார். . தனது சிற்றரசர்களையும், சேனையையும், முதலில் செல்லப் பணிக்கிறார். சேனை திரண்டு, ஊழிக்காலத்தே ஒங்கரிக்கும் கடல்போல் ஆரவாரம் செய்து எழுந்தது. வாள்படையும், விற்படையும், யானைப்படையும், குதிரைப்படையும், பல்லக்குகளுமாகப் பெரும் கூட்டம் மிதிலையை நோக்கிச் சென்றது. தன் சேனை முழுவதும் புறப்படபின், தான் பின் செல்லக் காத்திருக்கிறார் மன்னர். இன்னும் சேனை முழுவதும் அயோத்தியைவிட்டு நீங்கியபாடில்லை.

தயரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?

"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"

பொருள் :
துன்பத்திலும், துயரத்திலும் அழுந்திய மக்கள், அவற்றினின்று மீண்டு வர உதவும் ஊன்றுகோல் போன்ற தயரத மன்னன் இன்னும் புறப்படவில்லை (தன் சேனைக்குப் பின் செல்லக் காத்திருப்பதால்). மேலிருந்து உழுந்து போட்டால், உழுந்து மண்ணில் விழா வண்ணம் நெருக்கமாகத் திரண்டிருந்த சேனையின் கொழுந்து முதல் வரிசை) மிதிலையைச் சென்றடைந்துவிட்டது.
இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். மிதிலைக்கும் அயோத்திக்கும் இடைப்பட்ட பரப்பு முழுதும் தயரதன் சேனை மற்றும் மணவிழாக்காணச் சென்ற மக்கள் கூட்டத்தால் உழுந்து விழவும் இடமின்றி
நிறைந்திருக்கிறது. வானிலிருந்து பார்க்கும்போது ஒரு கொடி மிதிலை முதல் அயோத்தி வரை படர்ந்திருப்பது போன்ற தோற்றம் அளிக்கிறது. கொடியின் நுனி (சேனையின் கொழுந்து அல்லது கூட்டத்தின் முதல் வரிசை) மிதிலையில்
இருக்கிறது. கடைசி வரிசை அயோத்தியில் இருக்கிறது.

தசரத மன்னரின் படைப்பெருக்கம் சற்று மிகப்படுத்தி கூறப்பட்டுள்ளது.இது உயர்வு நவிற்சி அணி. ஒரு நிகழ்வையோ, பாத்திரத்தின் தன்மையையோ சிறப்பிக்கவேண்டியோ, அன்புமிகுதியாலோ மிகைப்படுத்திக்கூற புலவர்களுக்கு மட்டுமேயிள்ள சுதந்திரம். என் கண்மணி சக்கரவர்த்தித் திருமகன் கல்யாணத்துக்கு எவ்வளவு கூட்டம் வந்தது தெரியுமா என்று சொல்ல கம்பர் எடுத்துக்கொள்ளும் கூடுதல் உரிமை.

"உழுந்து இட இடம் இலை "

எப்போதும் நெருக்கமான கூட்டத்தைக் குறிக்க "எள் போட்டால் எள் விழாது" என்று சொல்வது வழக்கம். எள் அளவில் மிகச் சிறியது என்பதால் "எள்முனை அளவும் இல்லை" "எள்ளளவும் இல்லை" என்றெல்லாம் சொல்வது வழக்கு.
எள் பொதுவாக உயிர் நீத்தாருக்குச் செய்யும் சடங்குகளில் இடம் பெரும் பொருள். மங்கல காரியங்களில் இடம் பெறுவதில்லை. இது இராமனுடைய மணவிழா. "எள் விழ இடமில்லை" என்று பொதுவாக வழக்கில் உள்ள சொலவடையைச் சொல்வது கூட துர்நிமித்தம் (அபசகுனம்) ஆகிவிடுமோ என்பதால் "உழுந்து இட இடமில்லை" என்கிறார்.

அம்பால் சல்லடையாகத் துளைக்கப்பட்டு மாண்ட இராவணனைப் பார்த்து மண்டோதரி புலம்பும் பாடலைப் பார்ப்போம்.

"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறோ !
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி "

வெள்ளெருக்கை சடையிலணிந்த சிவபெருமான் உறையும் கயிலாயத்தையே அசைத்துத்தூக்கிய இந்த மேனியை எள் விழவும் இடமின்றி சல்லடையாய் இராமபாணங்கள் தைத்து, உயிரைக் குடித்தனவே! நீ சீதைமேல் கொண்ட தகாத காதல் எங்காவது ஒளிந்திருக்கிறதா என்று உன் உடலெல்லாம் துளைத்துத் துளைத்து தேடி வெளியேற்றியதோ அந்த இராமனின் அம்புகள் ?
இங்கே நிகழ்ந்ததோ மரணம் , எனவே "எள்ளிருக்கும் இடமின்றி".

----------------
விளக்கமளித்த ஜெயஸ்ரீக்கும் கேள்விகேட்ட யோகனுக்கும் விக்கிப்பசங்களின் நன்றி.