Wednesday, July 04, 2007

சர்வேஸனுக்கே டவுட்டா?

சர்வேஸனுக்கே டவுட்டா?

எது என்னவென்றாலும் ஒரு சர்வே போடும் சர்வேஸனுக்கு ஒரு சந்தேகம்!

சந்தேகம்னு சொல்றதைவிட ஒரு தாக்கம்னு சொல்லலாம்.

"ஒரு மருத்துவர் உயிருக்கே ஆபத்து!

'என்னைச் சாக விடாதீர்கள்;

என் ரத்தம் உருகி என்னையே அழிக்கிறது;

நான் யார்?

எனக்கு எப்படி இது நிகழ்ந்தது என எனக்குப் புரிகிறது.

நான் ஏன் தனியே இருக்க வேண்டும்?

ஒரு சின்ன அடி பட்டாலோ, அல்லது தும்மினாலோ, ஏன் இத்தனை பதட்டப் படுகிறார்கள்? '


இவர் செய்த பாவம் என்ன?

இதுக்கு எப்படி நாம உதவலாம்?"


இதுதான் அவரோட தாக்கம்.லப்-டப் தொடரின் ஏழாவது பதிவில் சொல்லியிருக்கும் காரணங்களே இதற்கு விடையாகும்.

கீமோதெரபி[Chemotherapy] மூலம் இந்த லுகீமியா[Leukemia] குணமாக வழியுண்டு என்றாலும், அதிலும் சில குறைபாடுகள் இருக்கின்றன.

மருந்து குணமாக்கும் அதே வேளையில், நோயின் தீவிரமும், மறுபக்கத்தில் இதை அதிகமாக்கிக் கொண்டிருக்கும் அபாயம் நிகழ்கிறது.

அதாவது, ஒரு பக்கத்தில் கீமோதெரபி இதனைச் சமன் செய்தாலும், நோயின் கடுமை [Severity of the disease] மறுபக்கம் மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இது எப்படி சாத்தியம்?

நோயைக் குணப்படுத்தவென அனுப்பப்படும் மருந்துகள், நோயுற்ற செல்களை மட்டுமல்லாது, பொதுவாக எல்லா செல்களையுமே தாக்குகிறது.
இதனால், ஏற்கெனவே இன்னமும் வலுவாக இருக்கும் அணுக்களும், புதிதாக உருவாகிய அணுக்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன.


இதற்கு என்ன வழி?

கொஞ்சம் கொஞ்சமாய் இந்தச் சிசு அழிய வேண்டியதுதானா?

ஆ! இருக்கும் அணுக்களை அழிப்பதுதான் இந்நோயின் குணமென்றால், அழிக்க முடியா வலுவுள்ள புது ரத்த அணுக்களை உருவாக்கும் வல்லமையுள்ள, ஒரு பொருளை எனக்குள் அனுப்புங்களேன் என அந்தக் குழந்தை அலறுவது ஒரு சிலருக்குக் கேட்டது.

அதன் விளைவுதான், இந்த போன் மார்ரோ பரிமாற்றம்[Bone Marrow Transplant].

இது என்னவெனப் பார்ப்போம்.

போன் மார்ரோ[Bone Marrow] என்பது ஒரு மிருதுவான, கொழுப்பு திசுக்களால் ஆன ஒரு பொருள்.

இது எலும்புக்குள் இருப்பது.

ரத்தத்தில் இருக்கும் சிவப்பு, வெள்ளை அணுக்கள், ப்ளேட்லெட்டுகள் [RBC's, WBC's, Platelets] முதலியன இங்கிருந்துதான் உருவாகின்றன.

ரத்த அணுக்களில் வரும் நோயால், இந்த எலும்பு மஜ்ஜையும் பாதிக்கப்படுகிறது.

இதற்கென, இதைச் சரி செய்யவென, வரும் மருந்துகளுக்கு, நல்லது எது, கெட்டது எனப் பிரித்துப் பார்க்கும் தன்மை இல்லாமல், கொஞ்ச நஞ்சமிருக்கும் நல்ல திசுக்களையும் அழிக்கும் அபாயம் நேர்வதால், இது போன்ற மருந்துகளுக்கும் ஒரு அளவில்தான் பயன் உண்டு.

இதற்கு மாற்றுதான் இந்த எலும்பு மஜ்ஜை பரிமாற்றம்[Bone Marrow Transplant]

இதை யார் கொடுக்க முடியும்?

நெருங்கிய உறவினர்[தாய், தந்தை, சகோதரன், சகோதரி,], அல்லது இந்த ரத்தத்திற்கு பொருந்தும் வேறு எவராயினும்!

பெறுபவருக்கு பலவகையிலும் ஆலோசனைகளும், அறிவுரைகளும் கிடைத்து விடும்.

தருபவர்க்குத்தான் குழப்பம்!

தரலாமா, கூடாதா?
தனக்கு இதனால் ஏதேனும் தொல்லை வருமோ?
பின்னால் இதனால் எதாவது கஷ்டம் இருக்குமோ?

இப்படி பல கேள்விகள்!

அவர்களுக்காக சில விளக்கங்கள்!

வலுவான, ஆரோக்கியமான உடல்நிலை இருக்கிறதா எனப் பரிசோதித்த பின்பே, ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இவரது ரத்தப்பிரிவு சோதனை செய்யப்பட்டு, இவர் தானம் அளிக்கத் தகுதியானவர்தானா எனப் பரிசோதனைகள் செய்தபின்னர், இவர் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

இடுப்பு எலும்புப் பகுதியில்[Hip bone] இருந்து இந்த எலும்பு மஜ்ஜை எடுக்கப் படுகிறது.

எல்லா எலும்புகளிலும் இந்த மஜ்ஜை இருந்தாலும், இடுப்பெலும்பில் அதிகமாக இருப்பதாலும், எடுப்பது எளிதென்பதாலும் இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சமீபகாலம் வரை, ஒரு அறுவைசிகிச்சை[surgery] மூலம்தான் இது எடுக்கப்பட்டு வந்தது.

தானமளிப்பவர்[Donor] மயக்கநிலைக்குச்[anaesthesia] சென்றாக வேண்டிய கட்டாயம்.

ஒரு சிலருக்கு சில மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டதாலும், மற்ற இடங்களில் இருக்கும் மார்ரோ எடுக்கப்படாமல் போவதாலும் மாற்றுவழிகள் முயற்சிக்கப்பட்டன.

இதன் விளைவாகக் கண்டறிந்தது என்னவென்றால், எலும்பு மஜ்ஜையில் இருக்கும் ஸ்டெம் ஸெல்கள்தான்[Stem cells] புதிய அணுக்கள் உருவாகத் தேவையானவை என்பதே.

இப்போது இந்த ஸ்டெம் ஸெல்களை இந்த மஜ்ஜையிலிருந்து பிரித்து, பொது ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்தால், மற்ற சாதாரண ரத்தப் பரிசோதனைகள் போல எளிதாக ரத்தத்தை எடுத்து,இதனைப் பிரிக்கலாமே!

அது மட்டுமின்றி, இப்போது இதன் மூலம், இடுப்பு எலும்பு மட்டுமல்லாது, எல்லா எலும்புகளில் இருந்தும் ஸ்டெம் ஸெல்கள் பெறும் வாய்ப்பும் அதிகமாகிறது.

குறிப்பிட்ட அளவு ரத்தத்தில் இருந்து இவ்வளவு ஸெல்கள் எடுக்கலாம் என்ற கணக்கும் தெரிவதால், தேவைக்குத் தகுந்த அளவில் மட்டுமே பெறவும் முடியும்.

எப்படி செய்கிறார்கள் இதை?

நியூபோஜென்[Neupogen] என்னும் ஒரு மருந்தை தினம் ஒருவேளை என்ற கணக்கில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஊசி மூலம் தானமளிப்பவருக்கு செலுத்துகிறார்கள்.

இது எலும்புமஜ்ஜைக்குள் ஊடுருவி, ஸ்டெம் ஸெல்களைப் பிரித்து, பொது ரத்த ஓட்டத்தில் அனுப்புகிறது.

தினசரி ரத்தப் பரிசோதனை மூலம் தேவையான அளவு ஸெல்கள் சேர்ந்து விட்டதா எனத் தெரிந்து, ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன், ரத்த தானம் செய்பவருக்கு நிகழ்வது போல், கையில் இருக்கும் நாளம் மூலம் ரத்தம் ஒரு கருவிக்குள்[machine] அனுப்பப்பட்டு, இந்த ஸெல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.


இதற்கு, ஏஃபெரேஸிஸ் [Apheresis] எனப் பெயர்.

மீதி ரத்தம், தானமளிப்பவருக்கே மற்றொரு கை நாளம் வழியே திரும்ப அனுப்பப் படுகிறது.


அவ்வளவுதான்!

ஒரு சிறு ஓய்வுக்குப் பின் வீடு திரும்பலாம்.

இவ்வளவு எளிதா இது?
இதில் பக்க விளைவுகள் [Side effects] ஒன்றுமே இல்லையா?


ரத்தம் பிரித்தெடுக்கும் போது வலியே இருக்காது........ ஊசிவலியைத் தவிர!

ஒரு சிலருக்கு, நியூபோஜென் மருந்து எலும்பிலிருந்து ஸெல்களைப் பிரித்தெடுக்கும் போது, சற்று எலும்பு வலி[Bone pain] இருக்கலாம்.

சிலருக்கு, அசதி, வாந்தி உணர்வு, லேசான ஜுரம், பசியின்மை, தூக்கமின்மை[fatigue, nausea, fever, Loss of appetite, insomnia] போன்றவை வரக்கூடும்.


பொதுவாக இது ஒரு பயத்தில் வருவதே.

உறவினரைத்தவிர, அந்நியருக்கும் இந்த தானம் அளிக்கலாம். தடையே இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதற்கென உங்கள் ஊரில் இருக்கும் இது சம்பந்தப்பட்ட அமைப்பில் [Bone Marrow Donor Program] உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்வதுதான்.

உங்களது ரத்தவகை போன்ற சோதனைகளைச் செய்து, தேவைப்படும் போது அழைப்பார்கள்.

விருப்பமிருந்தால், உடல்நலம் அப்போது சரியாக இருந்தால், தாராளமாகக் கொடுக்கலாம்.

ஒரு உயிரைக் காப்பாற்ற உங்கள் பங்கும் சேரும்.

முடிந்தால், சர்வேஸன் கூறிப்பிட்டிருக்கும் குழந்தைக்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள்!

உன் பார்வையே சரி இல்லை!

பதிவுலகம் சாராத நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி இது.

எனக்கு தூரத்தில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரிவதில்லை என்பதால் நான் அதற்குக் கண்ணாடி அணிகிறேன். ஆனால் கிட்டத்தில் இருப்பவைகளைப் பார்ப்பதற்கு கண்ணாடி தேவை இல்லை. இப்படி இருக்கையில் அருகில் இருக்கும் கண்ணாடியில் தொலைவில் இருக்கும் பொருட்களைக் காண்பதற்கு எதற்காக கண்ணாடி அணிய வேண்டி இருக்கிறது. அந்த கண்ணாடி அருகில்தானே இருக்கிறது?


வழக்கம் போல் இணையத்தை மேய்ந்து விட்டு அவருக்கு நான் தந்த பதில் இது. நீங்கள் அந்த கண்ணாடியை மட்டும் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் கண்களில் கண்ணாடி அணியத் தேவை இல்லை. ஆனால் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் தொலைதூர பொருள் ஒன்றின் பிம்பத்தைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு கண்ணாடி அணியத்தான் வேண்டும்.

அதற்குக் காரணம், நீங்கள் பார்க்கும் பிம்பம் அந்த கண்ணாடியின் மேற்புறத்தில் இல்லை. அந்த பிம்பமானது கண்ணாடியின் உட்புறத்தில் இருந்து பிரதிபலிக்கிறது. அந்த பிம்பம் கண்ணாடியின் உட்புறத்தில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்றால், அந்த பொருளுக்கும் கண்ணாடிக்கும் இருக்கும் தூரத்தின் அளவு உள்ளே இருக்கிறது. அதாவது அந்த பிம்பம் பிரதிபலிக்கும் வெளிச்சம் உங்கள் கண்களுக்கு வர பயணம் செய்ய வேண்டிய தூரம் உங்கள் கண்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் மட்டுமன்று. அது பயணம் செய்யும் மொத்த தூரம் அப்பொருளுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் + உங்கள் கண்ணுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம். அதாவது உங்கள் கண்ணில் இருந்து 1 மீட்டர் தொலைவில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் வழியாக 5 மீட்டர் தொலைவில் உள்ளதைப் பார்க்கவேண்டுமானால், உங்கள் கண்பார்வை 6 மீட்டர் வரை சுத்தமாக இருக்கவேண்டும்.இன்னும் சொல்லப் போனால் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பொழுது நீங்கள் பார்க்கும் தூரம் உங்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரத்தில் இரு மடங்கு. அதாவது உங்கள் முகத்துக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பம் கண்ணாடியில் வர ஏதுவாக) + உங்கள் கண்ணிற்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பத்தைப் பார்க்க).

அதனால்தான் தொலைவில் இருக்கும் பொருட்களின் பிம்பத்தை அருகில் இருக்கும் கண்ணாடியில் பார்க்கும் பொழுது கூட நீங்கள் கண்ணாடியை அணிந்து கொள்ளத் தேவைப் படுகிறது.

படம் இணையத்தில் சுட்டது.