Thursday, November 30, 2006

உலகத்திலேயே பெரிய கொட்டை எது?

நம்ம ஓகை நடராஜன் இருக்காரே, அவரு வந்து எதையோ சொல்ல வரும் போது எதையோ கேட்டு நம்மளை இப்படி ஒரு நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டாரு. அவரு ஒரு பதிவில் பின்னூட்டமாய் சொன்னது இது

"இங்கே கேள்விகளைக் கேளுங்கள்" எனறு கொட்டை எழுத்துக்களில் (பனங்கொட்டை அளவில்) (ஒரு துணைக் கேள்வி - கொட்டைகளில் பெரிய கொட்டை எது?) போடுங்கள்."
இந்த துணைக்கேள்வி பார்க்க சுலபமா இருக்கே, இதுக்கு பதிலை சொல்லிடலாமேன்னு படிக்க ஆரம்பிச்சாத்தான் தெரியுது, மனுசன் நம்மளை எப்படி எசகு பிசகா மாட்டி விட்டு இருக்காருன்னு. முதலில் இந்த தலைப்பு. இதை வெச்சு நம்ம வ.வா.ச. பசங்க என்ன எல்லாம் கிண்டல் பண்ணப் போறாங்களோ. அதை விடுங்க.

முதலில் இந்த கொட்டை அப்படின்னா என்னான்னு பார்க்க போனா இரண்டு அர்த்தம் இருக்காம் - Nut மற்றும் Seed. அது மட்டுமில்லை "The term nut is sometimes used on seeds, but nuts and seeds are not the same thing. A nut is a seed, but not all seeds are nuts." இப்படி 'விசு'த்தனமா போகுது விஷயம். அதெல்லாம் ஆகாது. எங்க ஊரில் Nut, Seed எல்லாம் ஒண்ணுதான். அதுக்கு பேர்தான் கொட்டை அப்படின்னு ஒரு முடிவு எடுத்து, அதுக்கு அப்புறம்தான் நம்ம ஔவையார் சொன்னா மாதிரி 'பெரியது கேட்கின்' அப்படின்னு ஆரம்பிச்சோம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். செஷல்ஸ் நாட்டில் இரண்டே இரண்டு தீவுகளில் மட்டுமே வளரும் Coco de mer என்ற மரத்தின் கொட்டைதான் உலகிலேயே மிகப் பெரிய கொட்டையாம். இரட்டைத் தேங்காய் போல காட்சியளிக்கும் இது 50 செ.மி. சுற்றளவு வரை பருத்தும், 30 கிலோ எடை வரை வளரும். இதோ சில புகைப்படங்கள்.நன்றாக முற்றிய கொட்டைமரத்தில் இருக்கும் பொழுது

இந்த சிறு தீவுகளில் மட்டுமே இருக்கும் இவ்வகை மரங்கள் இப்பொழுது அழிவின் விளிம்பில் இருப்பதால் பாதுகாக்கப்படும் தாவரயினங்களின் பட்டியலில் உள்ளது. ஒரு விஷயம், Lodoicea callipyge என்ற இத்தாவரத்தின் விஞ்ஞான பெயரில் callipyge என்ற வார்த்தைக்கு பொருள் அழகான பின்பக்கம் என்பதாகும். மீண்டும் ஒரு முறை முதல் படத்தைப் பாருங்கள். :)

சரி, எல்லாவற்றிலும் பெரிதாக பார்த்துப் பழகிய அமெரிக்கர்கள் சும்மா இருப்பார்களோ? அவர்கள் பல விதமான கொட்டைகளின் பெருமையை பறைசாற்ற கட்டிய கான்க்ரீட் கொட்டைகளைப் பாருங்கள்.


வேர்க்கடலைக்காகPecan கொட்டைக்காக

இன்னும் விபரங்களுக்கு

சுட்டி 1
சுட்டி 2

சந்தேகம் தீர்ந்ததா ஓகையாரே! :-)

Tuesday, November 28, 2006

Selective coloring - எப்படி?

புகைப்படத்தில் தேவையான பகுதியை மட்டும் வண்ணத்திலும் தேவையற்ற பகுதிகளை கருப்பு-வெள்ளையாக மாற்றுவதன் மூலம் வண்ணப் பகுதிக்கு பார்வையாளரின் கவனைத்தை எளிதில் ஈர்க்க முடியும்.

இந்த படத்தில் முக்கிய பகுதி மஞ்சள் நிற சூரியக் காந்தி
பார்வையாளரின் கவனத்தை பூவின் மீது உடனடியாக விழ வைக்க பூவைத் தவிர மற்ற பகுதிகளை கறுப்பு வெள்ளைக்கு மாற்றி இருக்கும் படம் இது.இதை செய்வது மிக எளிது. இணையத்தில் இலவசமாய் கிடைக்கும் GIMP இல் செய்யும் முறை .


GIMP ல் படத்தை திறவுங்கள். ( File->open )

இதுப் போன்ற மூன்று சாளரங்கள் திறக்கப்படும். Layers திறக்கபடாவாவிட்டால் ( Ctrl+L) மூலம் அந்த பகுதியையும் திறக்கச் செய்யுங்கள்.
layers பகுதியில் Background என்ற பெயரோடு படத்தின் மூலம் இருக்கும். இந்த போன்று மற்றுமொரு லேயரை உருவாக்க , Duplicate Layer என்கிற இந்த பொத்தானை அமுக்கவும்

Background Copy என்ற பெயரில் ஒரு புதிய லேயர் உருவாகும். இந்த புதிய லேயர் தேர்ந்து எடுக்க அந்த பெயரின் மீது க்ளிக்கவும். தேர்ந்து எடுக்கப்பட்ட லேயர் நீல நிறத்துக்கு மாறும்இப்போது இந்த புதிய லேயரை கருப்பு வெள்ளைக்கு மாற்ற வேண்டும். இதை செய்ய Destaurate தேர்வு செய்யுங்கள். இது ( Layer-> colours -> Desaturate ) என்ற இடத்தில் இருக்கும்.

இப்போது நமக்கு தேவையான வண்ணப் பகுதியை மேலேயுள்ள கருப்பு வெள்ளைப் பகுதியில் இருந்து நீக்க வேண்டும். இதை செய்ய எளிய வழி, Eraser தேர்ந்து எடுக்கவும்.
இனி தேவையான பகுதிகளை அழிக்க வேண்டியதுத்தான் பாக்கி. அழிக்க அழிக்க கீழேயுள்ள படத்தின் முலத்தில் உள்ள வண்ணப்பகுதி வெளிப்பட ஆரம்பிக்கும்.

அவ்வளவுத்தான். ரெடி. இனிப் படம் காட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.

Monday, November 27, 2006

தியோடலைட் - ஏன் எதற்கு எப்படி?

தருமியின் இன்னொரு கேள்வி

ரோடு போடும்போது நம்ம ஊர்களில்ஒருத்தர் மூணு கால் இருக்கிற ஸ்டாண்டு ஒன்றில் ஒரு டெலஸ்கோப் (?) மாதிரி ஒண்ணு வச்சிருப்பார். தள்ளி இன்னொருத்தர் ஒரு ஸ்கேல் வச்சிக்கிட்டு நிற்பார். அவங்க என்ன பண்றாங்க? அத எப்படி பண்றாங்க??
அந்தக்கருவியின் பெயர் தியோடலைட். நில அளவைக்கும் உயரங்களை அளப்பதற்கும் கட்டுமான வேலைகளிலும் பலப்பல விதமாக உபயோகப்படும் கருவி. (என் தந்தை நில அளவைத் துறையில் இருந்ததால் இக்கருவி எனக்கு 7 -8 வயதிலேயே பரிச்சயமாகிவிட்டது).

முதலில் இக்கருவியின் கான்சப்டைப் பார்ப்போம்.

ஒரு கொடிக்கம்பம் இருக்கிறது, அதன் உயரத்தை அளக்க விரும்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? ஒரு பையனை இஞ்ச் டேப்புடன் மேலே அனுப்பி அளக்கச் சொல்லலாம். அல்லது கொடிக்கம்பத்தைக் கழட்டி, தரையில் வைத்து நீளத்தை அளக்கலாம் (சர்தார்ஜி ஜோக்கில் வருவது போல உயரம் வேறு, நீளம் வேறு எனக் குழப்பிக்கொள்ளாமல் இருந்தால் சரி). ஆனால் ஒரு லைட் ஹவுஸின் உயரத்தை? 100 மாடிக் கட்டடத்தின் உயரத்தை?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்க்கும்போது, அந்தக்கட்டடத்தின் அடிமட்டமும், உச்சியும் ஏற்படுத்தும் ஆங்கிள்கள் வேறுபடும் அல்லவா? இதை இன்னொரு பொதுப்புள்ளியில் இருந்து பார்க்கும்போது, அந்த ஆங்கிளை வைத்து, சைன் தீட்டா, காஸ் தீட்டா எல்லாம் போட்டு திரிகோணமிதி வைத்துக் கணக்குப் போட்டால் உயரம் தெரிந்துவிடும் - இல்லையா?


இந்த ஆங்கிளைத் துல்லியமாகக் கணக்கெடுக்கத்தான் தியோடலைட் பயன்படுகிறது. இது ஆதாரமாக ஒரு டெலஸ்கோப் போலத்தான். கிடைமட்டமாகவும், நெட்டுக்குத்தாகவும் அசைக்கவல்ல டெலெஸ்கோப். இதனுடன் இணைந்த பாகைமானிகள் (கிடைக்கு ஒன்று, நெட்டுக்கு ஒன்று) எவ்வளவு ஆங்கிள் அசைத்திருக்கிறோம் என்று காட்டும்.1. ஒரு ரெபரன்ஸ் புள்ளியை முதலில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்,

2. அளக்கவேண்டிய கட்டடத்தின் அடிமட்டத்தை டெலஸ்கோப்பில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்

3.அளக்கவேண்டிய கட்டடத்தின் உச்சியை டெலஸ்கோப்பில் பார்த்து ஆங்கிளைக் குறித்துக்கொள்ளவேண்டும்.

இதில், ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளியைக் கழித்தால், அடிமட்டமும், உச்சியும் ஏற்படுத்தும் ஆங்கிள் மாற்றம் தெரிந்துவிடும், உயரத்தைக் கண்டுபிடித்து விடலாம். சமதரையில் உள்ள நிலத்தை அளப்பதற்கும் இதே முறைதான். நிலத்தின் ஒரு எல்லை, மற்றொரு எல்லை, ரெபரன்ஸ் புள்ளி - கிடைத்தது ஆங்கிள்.

இப்போதெல்லாம் இதிலும் எலக்ட்ரானிக்ஸ் புகுந்துவிட்டது. கீழே இருப்பது நிக்கானின் லேட்டஸ்ட்.மூணு குச்சியைப் பற்றியும் கேட்டிருக்கிறார். ட்ரைபாட் என்பது எந்தச் சமமற்ற தளத்திலும் சீராக நிற்கக்கூடிய அமைப்பு. நாற்காலியில் ஒரு கால் சரியில்லை என்றால் ஆடும். முக்காலி ஆடாது. பெரும்பாலும் தியோடலைட் உபயோகப்படுத்தும் இடங்கள் சமச்சீரற்றவையாகத் தான் இருக்கும் என்பதால் முக்காலி.

Wednesday, November 22, 2006

பால் பேரிங் - ஏன் எதற்கு எப்படி?

தருமியின் கேள்வி: பால் பேரிங்குகளை எப்படித் தயாரிக்கிறார்கள்?

இந்தக்கேள்வியை ஒரு இயந்திரவியல் பொறியாளரிடம் கேட்டால் 3 மணிநேரம் பேசுவார், ஒரு ஆசிரியரிடம் கேட்டால் 5 மணிநேரம் பேசுவார். இரண்டும் கலந்த என்னிடம் கேட்டால்? முடிவே இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பேன்:-)

முதலில் பேரிங்குகள்:

எந்த இயந்திரத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் இயங்கும், இயங்காப் பொருள்கள் (moving & Stationary) கலந்தே இருக்கும். மின்விசிறியை எடுத்துக்கொள்ளுங்கள் - அதன் பிளேடுகளும், பிளேடுகளைத் தாங்கும் மோட்டாரும் சுற்றுகின்றன, ஆனால் உத்தரத்தில் மாட்டியிருக்கும் ட்யூப் சுற்றுவதில்லை.. அல்லவா?

இயங்குபொருளுக்கும், இயங்காப்பொருளுக்கும் இடையே உள்ள ஒப்பு இயக்கம் (Relative Motion), உராய்வையும்(Friction), தேய்மானத்தையும் (wear) அதிகப்படுத்தும். கடினமானது (high Hardness) தேயாது, கடினம் குறைவானது (low Hardness) தேயும். தேய்மானம் காரணமாக மாற்றவேண்டிவரும்போது, அதன் விலை பயமுறுத்தும். எனவே, தேவை ஒரு குறைந்த விலையில் மாற்றப்படக்கூடிய ஒரு தியாகி (sacrificial material).

Photobucket - Video and Image Hosting

நூற்றுக்கணக்கான வகையில் பேரிங்குகள் இருந்தாலும், அவற்றை இரண்டு பெரிய வகைகளில் பிரிக்கலாம். உராய்வு வகை (friction), உராயா வகை(anti friction).

உராய்வு வகை பேரிங்குகள், இயங்கும் பொருளோடோ, இயங்காப் பொருளோடோ கச்சிதமாக (tight fit)இணைக்கப்பட்டு, மற்றதுடன் உராயும், அதன் மூலம் ஏற்படும் தேய்மானத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு
கடினம் குறைவானதாக இருப்பதால், இது மட்டுமே தேயும். ஆயுள் முடிந்தவுடன் மாற்றப்படும். இவ்வகை பேரிங்குகள் உய்வு எண்ணெய் (Lubricating Oil)இல்லாமல் இயங்காது. எஞ்சின்களில் உள்ள பெரும்பாலான பேரிங்குகள், புஷ்ஷிங்குகள் இவ்வகையைச் சார்ந்தனவே. (எனவேதான் எஞ்சினில் எண்ணெய் இல்லாமல் போனால் உடனடியாக - 2-3 நிமிடங்களுக்குள் பெரிய பழுது ஏற்பட்டு விடுகிறது).

உராயா வகை, சுற்றும் பொருளுடனும், சுற்றாப்பொருள் இரண்டுடனும் கச்சிதமாகப் (tight fit)பொருத்தப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட பேரிங்குகளில் மூன்று முக்கிய பாகங்கள் - இயங்குபொருளுடன் ஒரு பகுதி,(Inner Race) இயங்காப்பொருளுடன் இன்னொன்று(outer Race), இரண்டுக்கும் இடையில் தேய்வதற்கென்றே உள்ள பந்துகள் (Balls / Rollers)) (அல்லது உருளைகள் - இதிலும் பலவகைகள் உண்டு). இயக்கத்தின் சக்தி எந்தத் திசையிலிருந்து பாதிக்கும் என்பதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட பலவகைகள் - பால் பேரிங், டேப்பர் ரோலர் பேரிங், த்ரஸ்ட் பேரிங்.. என்றெல்லாம் பல வகைகள். படம் பாருங்கள்.
\n \n
Photobucket - Video and Image Hosting

இப்போது, கேள்விக்கு வருவோம். பேரிங் எப்படித் தயாரிக்கப்படுகிறது? மூன்று பாகங்களும் தனித்தனியாக தயாரிக்கப்படுகிறது. வெளி உருளை(outer race), உள் உருளை(inner race) இரண்டும் பழைய காலத்தில் லேத், போரிங் மெஷின் போன்றவற்றில் தயாரிக்கப்பட்டன. இப்போதெல்லாம் இதற்கென தனிப்பட்ட ப்ரொக்ரெஸிவ் ப்ரோச்சிங் (progressive Broaching) இயந்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. நீளமான ஒரு கருவி, மூலப்பொருளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து ஒரே இழு..தேவையான ஷேப் வந்துவிடும். படம் பாருங்கள்.
Photobucket - Video and Image Hosting

பிறகு வெப்பம் ஏற்றி இறக்கி விளையாடி(Heat Treatment) தேவையான கடினப்பதத்தையும் (Hardness) மற்ற குணங்களையும் (ductility, malleability) கொண்டுவந்துவிடுவார்கள்.

பால் தயாரிப்பது மிகவும் சுலபம். இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, நீளக்கம்பியில் பாலுக்குத் தேவையான அளவு இரும்பை வெட்டி எடுக்கும் ஒரு இயந்திரம், அதை மேலே ஒரு அரைவட்ட டை(Die), கீழே ஒரு அரைவட்ட டை.. கரப்பான் பூச்சியை புத்தகத்தால் அடிப்பது போல ஒரே அடி.. பால் வந்து விழுந்துவிடும் (forging). இன்னொரு முறையில், உருக்கிய இரும்புக்குழம்பை சுற்றும் கலனிலிருந்து (centrifuge) சொட்டுச்சொட்டாக விடுவார்கள். சுற்றுவதாலும், வேகமாகக் குளிர்வதாலும் பந்து போல் ஆகிவிடுகிறது. (உலகம் கூட இப்படித்தான் உருண்டையானதாச் சொல்றாங்க.. நான் அதைப்பாத்ததில்லை, இதைப்பாத்திருக்கேன்:-)

இப்படி தனித்தனியா தயாரிக்கப்பட்ட பொருள்கள், இயந்திரத்தால் கோர்க்கப்பட்டு, மேலே கீழே தகடுகளை வைத்து ரிவெட் அடித்துவிட்டால் பால் பேரிங் தயார்.
Photobucket - Video and Image Hosting

பால் பேரிங்குகளின் அடையாளம் அதன் மேல் பொறிக்கப்பட்டுள்ள நான்கெழுத்து எண். இந்த எண், அதன் உள்வட்ட அளவு, வெளிவட்ட அளவு மற்றும் தடிமன் ஆகியவற்றைக் குறிப்பது. இந்தக் குறியீடு SKF எண் என்று சொல்லப்படுகிறது. வேறு பல நிறுவனங்களும் பேரிங் தயாரித்தாலும், SKF தான் உலகின் பெரிய பால்பேரிங் தயாரிப்பாளர் என்பதால் முதல் மரியாதை!

Saturday, November 18, 2006

மைக்ரோவேவில் தண்ணீர் சுட வைக்கலாமா?

பல விதமான கதைகள் நமக்கு மெயிலில் வருவதுண்டு. இக்கதைகள் பெரும்பாலும் உண்மையாக இருப்பதில்லை, வெறும் கட்டுகதைகளே. அது போன்று வந்த இந்த மெயிலைப் பாருங்கள்.

"சில நாட்களுக்கு முன் காப்பி போடுவதற்காக என் மகன் மைக்ரோவேவ் அவனில் தண்ணீர் சுட வைத்தான். சுட வைத்த நேரம் முடிந்த பின் அதனை எடுத்த பொழுது நீர் கொதிக்கவில்லையே என அவன் பார்க்கும் பொழுது , அந்த தண்ணீர் அப்படியே எரிமலை போல் பொங்கி அவன் முகத்தில் அடித்தது. அதில் அவனுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. நீங்களும் மைக்ரோவேவில் தண்ணீர் கொதிக்க வைக்கும் பொழுது ஜாக்கிரதையாய் இருக்கவும்."

இது உண்மைச் சம்பவமா, கட்டுக்கதையா எனத்தெரியவில்லை. ஆனால் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவம் நடக்கச் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா? அதைப் பற்றி தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு. வழக்கம் போல் ஒரு வரியில் பதில் சொல்ல வேண்டுமானால்,

இச்சம்பவம் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளது, ஆனால் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

இனி சற்று விபரமாகப் பார்க்கலாம். இது நடக்கக் காரணம் 'அதிசூடேற்றம்' (SuperHeating). அப்படின்னா ஒரு திரவம், அதன் கொதிக்கும் சூட்டை விட அதிகமாகச் சூடாக்கப்படுதல். இப்படி நடக்கும் பொழுது மிக விரைவில் அந்த திரவம் ஆவியாகி விடும். அது திடீரென வெளியேறும் பொழுது அந்த திரவம் வெடிப்பது போலத் தெரிகிறது. ஆனால் இப்படி நடக்க சூழ்நிலைகள் சரியாக அமைய வேண்டும். இந்தப் படத்தைப் பாருங்களேன்.இது எப்படி நடக்கிறது? நீரை சுட வைக்கும் பொழுது அதன் மாலிக்யூல்களின் கட்டமைப்பு (துடிகள் - தமிழ்) உடைந்து ஆவியாக மாறுகிறது. இப்படி ஒரே சமயத்தில் பல மாலிக்யூல்கள் இடையேயான கட்டமைப்பு உடைந்தால்தான் ஒரு சிறு குமிழி போல் ஆவி சேர்கிறது. இதில் மேலும் மேலும் ஆவி சேர்ந்து பெரிதாகி அது தண்ணீரின் மேல் மட்டத்திற்கு வந்து வெடித்து காற்றில் சேர்கிறது. இதுதான் சாதாரணமாக நீர் கொதிப்பதின் ரகசியம்.

ஆனால் சில சமயங்களில் அந்த முதல் ஆவிக்குமிழிகள் உண்டாகாமல் போவதுண்டு. அந்த சமயங்களில் நீர் கொதிநிலையையும் தாண்டி மேலும் சூடாவதுண்டு. அந்நிலையின் பெயர்தான் 'அதிசூடேற்றம்' (SuperHeating). அப்படி இருக்கும் பொழுது அந்த பாத்திரத்தை ஆட்டினாலோ அல்லது அதில் சர்க்கரை, காப்பித்தூள் என எதையாவது போட்டாலோ அது இந்த ஆவிக் குமிழிகள் உண்டாக ஏதுவாகிறது. இப்படி ஒரேடியாக இக்குமிழிகள் உண்டாகி மேலே வருவதால், அது ஒரு வெடிப்பு போல தோன்றுகிறது. இது மைக்ரோவேவில் உண்டாக சாத்தியங்கள் அதிகம். ஏனென்றால் இங்கு தண்ணீர் இருக்கும் பாத்திரம் சூடாகாமல் மைக்ரோவேவ் கதிர்கள் நேராக தண்ணீரைச் சூடாக்குவதினால் இது போல ஆகலாம்.

இப்படி ஆக வேண்டும் என்றால், தண்ணீர் கொதிக்க வைக்கப்படும் பாத்திரம் கண்ணாடிப் பாத்திரங்கள் போல் மிக வழவழப்போடு இருக்கவேண்டும். தண்ணீர் சாதாரணமாக கொதிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட அதிக நேரம் சுட வைக்கப் பட வேண்டும். பாத்திரத்தில் ஒரு சிறிய கீறல் இருந்தால் கூட இது போல் நடக்காது.

இது போல் நடக்காமலிருக்க
  • தண்ணீரை கொதிக்க வைக்கும் பொழுது அதற்குண்டான நேரத்தை விட அதிகம் வைக்க வேண்டாம்.
  • மைக்ரோவேவிலேயே ஒரு நிமிடம் விட்டு விட்டு, அதன் பின் எடுங்கள்.
  • வெளியே எடுத்த பின் அதில் காப்பி, சர்க்கரை போன்றவற்றை போடும் பொழுது முடிந்த அளவு விலகி நின்று கொள்ளுங்கள்.
  • ஒரு மரத்தாலான கலப்பான் (அதாங்க Stirrer) ஒன்றை தண்ணீரில் போட்டு அதன் பின் கொதிக்க வையுங்கள்.

கேள்வியை முன் வைத்த Sridhar Venkat அவர்களுக்கு நன்றி.

மேலும் விபரங்களுக்கு

சுட்டி 1
சுட்டி 2
சுட்டி 3

Disclaimer

"Wikipasanga" does not represent or endorse the accuracy or reliability of any of the information, content or advice contained on, distributed through, or linked, downloaded or accessed from any of the pages contained on this weblog, nor the quality of any products, information or other materials displayed, purchased, or obtained by you as a result of an advise or any other information or offer in or in connection with this blog.

You hereby acknowledge that any reliance upon any Materials/Content/Advice shall be at your sole risk.

"Wikipasanga" and its team members reserve the right, in its sole discretion and without any obligation, to make improvements to, or correct any error or omissions in any portion of its blog posts / content.

IN NO EVENT SHALL "Wikipasanga" BE LIABLE FOR ANY DIRECT, INDIRECT, INCIDENTAL, PUNITIVE, OR CONSEQUENTIAL DAMAGES OF ANY KIND WHATSOEVER WITH RESPECT TO THE BLOG, ITS POSTS, CONTENTS, DESCRIPTIONS, ADVICE CONTAINED THEREIN.

"Wikipasanga" encourages you to exercise discretion while browsing the weblog as it may direct you to sites containing information that some people may find offensive or inappropriate. "Wikipasanga" makes no representations concerning any endeavor to review the content of sites listed in its posts / comments section or any of the blog posts, and so "Wikipasanga" isn't responsible for the accuracy, copyright compliance, legality or decency of material contained in sites listed and in the blog / posts.

If you submit your question for a response, you understand and agree that your question and the Wikipasanga answer may be posted on this Weblog, though names and other obvious identifiers will be removed upon request.

GENERAL DISCLAIMER:
Advice / How-to Descriptions at wikipasanga is designed to help users find and understand general information on certain subject matters . This Advice Area contains the advice and comments of individuals who may or may not be trained in the specified Subjects and is designed in good will to provide useful advice in regard to such Subjects. "WIKIPASANGA" guarantees neither the accuracy nor completeness of advice contained in this blog. The advice and comment of any Expert do not constitute the advice or comment, nor do they necessarily reflect the views of all the members of "Wikipasanga". These posts are not intended to provide a basis for action in particular circumstances without consideration by a competent professional. If professional advice or other expert assistance is required, the services of a competent professional person should be sought. "Wikipasanga" weblog and its contributors expressly disclaim any and all responsibility for any liability, loss, or risk, personal or otherwise, which may be or is incurred as a consequence, directly or indirectly, of the use and application of any advice / posts or comment by any of its members in "wikipasanga.blogspot.com".


MEDICAL DISCLAIMER:
Certain sections of this BLOG deal with health and medical related issues. Please note that such Advice is not intended to create any physician-patient relationship or supplant any in-person medical consultation or examination. Always seek the advice of a trained health professional with any questions you may have regarding a medical condition and before seeking any treatment. Proper medical attention should always be sought for specific ailments. Never disregard professional medical advice or delay in seeking medical treatment due to information obtained on wikipasanga.blogspot.com. Any information displayed on this BLOG/CONTENT/EXTERNAL LINKS is not intended to diagnose, treat, or cure. This weblog is for information purposes only. The information on this blog is not intended to replace proper medical care.

"Wikipasanga" contains articles on many medical topics; however no warranty whatsoever is made that any of the articles are accurate. There is absolutely no assurance that any statement contained or cited in an article touching on medical matters is true, correct, precise, or up-to-date. Several such articles are written, in part or in whole, by nonprofessionals. Even if a statement made about medicine is accurate, it may not apply to you or your symptoms.

The medical information provided on "Wikipasanga" is, at best, of a general nature and cannot substitute for the advice of a medical professional (for instance, a qualified doctor/physician, nurse, pharmacist/chemist, and so on). "Wikipasanga" is not a replacement for a doctor.

None of the individual contributors of "Wikipasanga" nor anyone else connected to "Wikipasanga" can take any responsibility for the results or consequences of any attempt to use or adopt any of the information presented on this weblog.


Nothing on "Wikipasanga" blog should be construed as an attempt to offer or render a medical opinion or otherwise engage in the practice of medicine.

Wikipasanga reserves the right to modify this disclaimer from time to time, without express notifications to the visitors of this blog.

Thursday, November 16, 2006

கேள்வியின் நாயகனே!

நம்ம மக்கள்ஸ் கிட்ட கேள்வி கேட்கலாம் அப்படின்னு ஒரு வார்த்தைதான் சொன்னோம். கேள்வி கேட்க நம்ம மக்களுக்கு சொல்லிக் கொடுக்கணுமா? சும்மா தூள் கிளப்பிட்டாங்க. கேள்விங்களை மெயிலில் அனுப்புங்கன்னு சொன்னா, அத விட்டுட்டு பின்னூட்டமா போடறாங்க, பதிவா போடறாங்க. யாரு என்ன கேள்வி கேட்டாங்கன்னு ஒரே கன்பியூஷன். என்ன கேள்வி எல்லாம் வந்திருக்கு, எதுக்கு பதில் சொல்லியாச்சு, பதில் சொல்லாத கேள்விகளை எப்படி விக்கி பசங்களுக்குள் பாகம் பிரிப்பது என எங்களுக்கே பல கேள்விகள்!!

அது மட்டுமில்லாம, ஒரு கேள்வி ஏற்கனவே யாராவது கேட்டாச்சா இல்லையான்னு தெரியலை, அப்படின்னு வேற ஒரு கம்பிளைண்ட். சரி, இதுக்கெல்லாம் ஒரு வழி செய்யலாமுன்னுதான் இந்த பதிவு.

இதுதான் கேள்விகள் கேட்கும் பதிவு. அதாவது கேள்வி கேட்கறவங்க, இந்த் பதிவுக்கு வந்து கேள்வியை பின்னூட்டம் மூலமா கேட்கணும். நாங்களும் பதில் போட்ட உடனே, அந்த கேள்வி வந்த பின்னூட்டத்தை எடிட் செய்து, பதிலுக்கான உரலைச் சேர்த்திடுவோம்.

கேள்விகளைத் தனிப் பதிவாகக் கேட்டு பதிவு எண்ணிக்கையை ஏற்றிக் கொள்ளும் அன்பர்கள், இங்கு வந்து அந்த பதிவின் உரலையாவது பின்னூட்டமாய் இடுங்கள். அவ்வாறு செய்யும் பொழுது ஒரு பதிவில் முடிந்த மட்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள். எங்களுக்குள் பிரித்துக் கொள்ளவும், பதில் அளிக்கவும் அது எளிதாக இருக்கும்.

இந்த பதிவுக்கான சுட்டி விக்கி வலைத்தளத்தில் தனியாக தெரியும். அந்த சுட்டி மூலம் இங்கு வந்தால், இது வரை கேட்கப் பட்ட கேள்விகள், பதிலளிக்கப்பட்ட கேள்விகள், அதற்குண்டான உரல்கள் என எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கும்.

என்ன அன்பர்களே, இந்த ஆலோசனை சரிதானே? இனி என்ன? ஸ்டார்ட் தி மியூஜிக்!

Thursday, November 09, 2006

Rh Factor - Addendum

சென்ற பதிவில் பின்னூட்டங்கள் வாயிலாக நிறைய பேர் சந்தேகம் கேட்டிருந்தார்கள். அதனால் சுருக்கென்று ஒரு சினாப்ஸிஸ். கீதா அவர்களின் பதிவு நாளை வெளிவரும்.

-----------------

Rh D என்பது இரத்த அணுக்களின் வெளிப்புறத்தில் ஒட்டியிருக்கக்கூடிய ஒரு antigen (antigen என்றால் என்ன என்பது பின்னே வருகிறது). இது இருப்பவர்கள் Rh+ இல்லாதோர் Rh -. அவ்வளவுதான். நம்மில் பெரும்பாலனவர்கள் Rh பாஸிட்டிவ் தான். தமிழகத்தைப் பொறுத்தவரை ஐந்து சதவிகிதம் வரை Rh - பெண்கள் இருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இப்போது மனைவி Rh - ஆகவும் கணவன் Rh + ஆகவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கும் உண்டாகும் குழந்தை Rh+ ஆக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.மற்ற combinations பற்றி கவலைக் கொள்ளத்தேவையில்லை. சரி, அப்படி அம்மா Rh - ஆகவும் குழந்தை Rh+ ஆகவும் இருந்தால் என்ன ஆகும்?

நம் உடலின் நோயெதிர்ப்புத் திறனே இங்கு எதிரியாகப் போய்விடுகிறது. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகள், அவை சுரக்கின்ற பொருட்கள் என அனைத்திற்கும் ஒரு ஐடி கார்ட் போல ஒன்று இருக்கும். இரத்தத்தில் வெளியாட்களை கண்டு கொண்டு அவற்றிற்கு எதிராக அதிரடி ஸ்பெஷல் ஆர்மியைக்கொண்டு திரட்டி போர் செய்து அவற்றை அழிக்கும் வேலையைச் செய்வது வெள்ளை இரத்த அணுக்கள். இந்த வெளியாட்கள் நோய் கிருமிகளாய் இருக்கலாம் இல்லை மற்றவர்களிடமிருந்து பொருத்தப்பட்ட இருதயமாயிருக்கலாம். நம் உடலுக்கு வேறானது என்று கண்டுகொள்ளப்பட்ட எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது நம் நோயெதிர்ப்பு சக்தியின் வேலையாகும். எப்படி நம் உடல் சாராத பொருள் என்று வெள்ளைஅணுக்கள் கண்டுகொள்கின்றன?

இதற்கு முன்னரே சொல்லப்பட்ட ஐடி கார்ட் தான் பயன்படுகிறது. வெளி பொருட்கள் கொண்டுவரும் ஐடி கார்ட்கள் antigens என்று அழைக்கப்படுகின்றன. நம் உடல் சாராத antigen ஐடி கார்டி வைத்திருக்கும் அணுக்களைக் கண்டால் அபாயச் சங்கை ஊதி அவற்றுடன் போரிட antibodies எனப்படும் தனித்துவமான நமது நோயெதிர்ப்பு படையை வரவழைக்கும் வெள்ளை அணுக்கள்.

தாயுடைய இரத்தமும் உள்ளிருக்கும் குழந்தையின் இரத்தமும் வேறுவேறானாலும் இரண்டும் இரத்தமும் கலக்க வாய்ப்புகள் உண்டு. அப்படி பேறுகாலத்தின் போது கலக்கவில்லையெனினும், பிரசவத்தின் போது கலக்க வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி கலந்துவிட்டால் குழந்தையின் இரத்த அணுக்களில் உள்ள Rh + ஆண்டிஜனை வெளியாள் என அடையாளம் கண்டுகொண்டு அந்த ஐடி கார்டை உடைய அனைத்து திசுக்களையும் அழிக்க ஸ்பெஷல் போர்ஸான ஆண்டிபாடிஸை தாயின் உடல் தயார் செய்யும். Rh- Iso Immunization என்று இதற்கு பெயர். இதற்கு காலம் பிடிக்கும். அதனாலேயே பெரும்பாலும் முதல் பிரசவத்திற்கு Rh னால் ஆபத்தில்லை. ஆனால் இரண்டாவது குழந்தை பாதிக்கபட வாய்ப்புகள் அதிகம். முதல் குழந்தை முழுமையாக பிரசவிக்க வேண்டுமென்றில்லை. Miscarriage, Abortion, Ectopic Pregnancies, trauma, amniocentesis போன்றவையும் தாயின் இரத்தத்தில் ஆண்டிபாடீஸை சுரக்க வைக்கலாம். இதற்கு Rh-sensitization என்று பெயர்.

இந்த ஆண்டிபாடீஸ் குழந்தையின் இரத்த அணுக்களை அழிப்பதன் மூலம் anemia உண்டாகும். intra uterine death அதாவது கருவிலேயே குழந்தை இறக்கலாம். இல்லையென்றால் பிறக்கையிலே edema, severe jaundice (குழந்தை மஞ்சளாக இருப்பதற்கு காரணம்), liver/spleen enlargement, anemia வென symptoms உடன் பிறக்கலாம். எந்த அளவுக்கு வீரியத்துடன் இவை இருக்கும் என்பது திட்டவட்டமாக சொல்ல இயலாது. இரத்தமின்மை குழந்தையின் மரணத்தில் கொண்டு விடலாம். இந்நோய்க்கு Erythroblastosis Fetalis என்று பெயர்.

-----------------------------
எப்படி தடுப்பது?
அநேகமாக Rh பாஸிடிவா நெகடிவா என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். O+, O- என்று சொல்வதில் உள்ள +,- தான் Rh குறிப்பவை. அப்படியும் தெரியவில்லையென்றால் பிரசவமாகியிருப்பது தெரிந்தவுடன் செய்யப்படும் இரத்தப் பரிசோதனைகளில் Rh - என்ன என்பது உறுதிசெய்யப்படும். கருவுற்ற இருபத்தியெட்டாவது வாரத்தில் தாய்க்கு antibody test செய்யப்பட்டு அது நெகட்டிவ்வாக இருக்கும் பட்சத்தில் Rh Immunoglobulin வாக்ஸின் தரப்படும்.

இதுதவிர பேறு காலத்தில் trauma அல்லது மேற்சொன்ன ஒன்றில் ஏதாவது நடந்து குழந்தையின் இரத்தம் தாயுடையதுடன் கலந்திருக்கலாம் என்று சந்தேகித்தால் அதுநடந்து 72 மணிநேரத்திற்குள் இந்த வாக்ஸின் தரவேண்டும்.

பிரசவத்திற்கு பின்பும் 72 மணி நேரத்திற்குள் தரவேண்டும்.

-------------------
எல்லாவற்றையும் மீறி Rh பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை என்ன?

உங்கள் மருத்துவர் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டால் amniocentesis செய்யச் சொல்வார். அதன் மூலம் குழந்தையின் நலம் பற்றி விரிவாகத் தெரியவரும். பாதிப்பு இருப்பது தெரிந்தால் exchange transfusion செய்யலாம். அதுவும் முடியாத பட்சத்தில் pre-term ஆக பிரசவிக்கவும் செய்யலாம்.

இந்நோயை பெரும்பாலும் தடுப்பதற்கான சிறப்பு சிகிச்சைகள் வந்துவிட்டன. பேறு காலத்தின் போது ரெகுலராக பரிசோதனைகள் செய்து, தகுந்த முறையில் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்தால் இதிலிருந்து மிக எளிதாக தப்பித்துக்கொள்ளலாம்.

பெண்களே! நீங்க ப்ளஸ்ஸா? மைனஸா? -2

இந்த பதிவை எழுதியவர் கீதா சாம்பசிவம் அவர்கள். இந்த கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இதோ சுட்டி.


"குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்."

யாருக்குத் தான் ஆசை இருக்காது? எல்லாருக்கும் குழந்தை தானே வேணும்?

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் எல்லாரும் பார்க்கிறார்கள். சில இடங்களில் காதல் கல்யாணம் என்றால் கூட ஜாதகம் பார்க்கப் படுகிறது. முன்னேயோ அல்லது பின்னேயோ. பொதுவாகப் பத்துப் பொருத்தங்களும், அதில் 7 வரை இருந்தால் போதும் என்றும் சொல்வதுண்டு. இப்போது புதிதாக ரத்தப் பொருத்தம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது புதிது போல் தோன்றினாலும் காலம் காலமாக இருந்து வருவதுதான். இந்த ரத்தப் பொருத்தத்தைப் பற்றித் திருமூலர் கூடத் தன் திருமந்திரத்தில் எழுதி இருப்பதாய் "டாக்டர் ஜெயம் கண்ணன்" (கர்ப்ப ரட்சாம்பிகா மருத்துவமனை நடத்தி வருகிறார்.) என்ற பிரசித்தி பெற்ற மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B, O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது - உண்டு. இந்த + குறிப்பது Rh Positive. - குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருக்குமே பாசிட்டிவ் வகை ரத்தமாகவோ அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த விதப் பிரச்னையும் இல்லை. பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால் தான். ஆணுக்குப் பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும் இருந்தால் தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. இதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும் பிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக இருந்து விட்டால் கொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம் கஷ்டம் இருக்காது. ஓரளவு காப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை தான்.

சிலருக்கு முதல் குழந்தைக்கே பிரச்னை வருவதும் உண்டு.பெண் முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல் மூன்று மாதங்களுக்குள் சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும் அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக் காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும்.

ஏன் என்றால் முதல் பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள் தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை விருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை anti rhesus antibodies என்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு (Rh Negative ) sensitization என்று சொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக் குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh disease வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச் சோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல் வீங்கிக் காட்சி அளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே இறந்து போவது என்று எது வேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால் ஆரோக்கியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப் பிடிக்கும்.

ஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை பிறந்திருக்கும். இது எல்லாம் sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம். அபூர்வமாய்ச் சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization ஏற்படும். இந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது? தற்சமயம் அதை முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது. முதல் பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன் இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில் கஷ்டம் இருக்காது. முதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை வைப்பது போன்றவை நடக்கும். இரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை. முதல் பிரசவத்தில் இருந்தே அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும். அப்படி இல்லாமல் முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி முதல் 5 மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும், கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள்.

குழந்தைRh + தாய்Rh - என்றால் உடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின் மறு முறை சோதனை செய்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக் கொண்டு முன்னாலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள். இப்போதும் தாயின் உடல் நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்தவாறு மருத்துவம் செய்யப் படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும். இது எல்லாம் முதல் குழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக் குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும்.

ரத்தம் ஏற்றப்பட்டதால் கூட ஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால் கூட மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே 18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது. இதற்கு அப்புறம் 28-வது வாரம் மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம் குழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ உலகின் முன்னேற்றங்கள்.

DISCLAIMER:
நான் எழுதி இருப்பது எல்லாம் கூகிள் ஆண்டவர் தயவிலும், திருமதி சந்திரவதனா அவர்கள் தன்னுடைய வலைப்பதிவில் எழுதி இருப்பதையும் வைத்துத் தான். திருமதி ஜெயம் கண்ணன் சொல்லி இருப்பது புத்தகங்களில் படித்தும், தொலைக்காட்சியில் கேட்டும் இருக்கிறேன். தகுந்த ஆதாரம் தற்சமயம் தேடியும் கிடைக்கவில்லை. ஆதாரம் கிடைத்ததும் வெளி இடுகிறேன். பொதுவாக Rh Negative Group-காரர்கள் மற்றவர்களில் இருந்து வேறுபட்டு இருப்பார்கள் என்பதையும் கூகிளில் தேடல் போது படித்தேன். அது பற்றி நிச்சயமாய் எதுவும் தெரியவில்லை. ஆனால் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் ஒருவருக்கொருவர் மனதுக்குப் பிடித்து விட்டால் இந்தச் சின்னக் குறைக்காகப் பெண்ணை வேண்டாம் என்று சொல்ல வேண்டாம். முன்னாலேயே ரத்தவகையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறித்த காலத்தில் எடுத்துக் கொண்டு நல்ல ஆரோக்கியமான புத்திசாலிக் குழந்தைகளைப் பெற்று இந்தியாவை வளப்படுத்துங்கள்.

இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த விக்கி பசங்களுக்கு என் நன்றி. ஒருவேளை அவர்கள் எதிர்பார்த்த மாதிரி விரிவான தகவல் நான் தர முடியாமல் போய் இருக்கலாம். அது எல்லாம் ஒரு டாக்டர் சொல்வது தான் முறை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

விக்கின பசங்களுக்காக விக்காமல் கீதா சாம்பசிவம்.

Wednesday, November 08, 2006

பெண்களே! நீங்க ப்ளஸ்ஸா? மைனஸா? -1

இந்த பதிவை எழுதியவர் கீதா சாம்பசிவம் அவர்கள்.


மஹேசனுக்கே தெரியாத விஷயம்!மக்கட் பிறப்புத் தான். வேறே என்ன? அது மட்டும் மஹேசனுக்கே தெரியாதாமே! ஆச்சரியமா இல்லை? ஆனால் அப்படித்தான் ஒரு பழமொழி எங்க அம்மா சொல்லுவார்கள். "மழை வரவும், மக்கட்பிறப்பும் மஹேசனுக்கே தெரியாது" அப்படின்னு. இப்போ மழை நல்லா வெளுத்துக் கட்டுது. ஒவ்வொரு வருஷமும் ஓரளவு மழை வெளுத்துக் கட்டுது. எது தப்பினாலும் இது மட்டும் தப்பாது. காலா காலத்தில் வந்துடும். ஆனால் குழந்தை பிறப்பு. அது மட்டும் நம்ம பூர்வ ஜென்ம புண்ணியம். கல்யாணம் ஆனா உடனேயே எல்லாரும் கேட்கும் கேள்வி விசேஷம் ஏதும் உண்டாங்கறது தான்.

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,செல்வக்களஞ்சியமே"ன்னு கொஞ்சவோ அல்லது "சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?"னு கேட்டுக் கொஞ்சவும் எல்லாருக்கும் ஆசைதான். ஆனால் எல்லாருக்கும் அது நிறைவேறுதா? இல்லை.

சிலருக்கு நிறைவேறாமல் போகிறது. உடலில் குறைபாடுகள் இல்லாதவர்களுக்குக் கூடக் குழந்தை பிறப்பில் தாமதம் ஏற்படுகிறது. "டெஸ்ட் ட்யூப் பேபி" கூட முயன்றாலும் எல்லாருக்கும் சாத்தியம் ஆவது இல்லை. அதே மாதிரி வாடகைத் தாயும் இப்போ பிரபலம் ஆகி வருகிறது. அதிலேயும் எல்லாருக்கும் பலன் கிடைப்பது இல்லை. உண்மையில் பார்த்தால் இறைவன் விதித்தவருக்குத் தான் கொடுக்கிறான். அதில் மாற்றம் இல்லை இது வரை. கிடைக்கிறவங்களுக்கும் சரியான விதத்தில் குழந்தை பிறக்குதா?

அதுக்கும் சில பிரச்னைகள் இருக்கே? அதிலே ஒண்ணுதான் ரத்தப் பொருத்தம். அதைப் பத்தி மட்டும் ஓரளவுக்கு நாம் இப்போ பார்க்கப் போறோம்.

எனக்குப் படிக்கிற நாளிலேயே என்னோடது "ஓ" குரூப் ரத்தம்னுதெரியும். ஆனால் அப்போ அது Rh+ அல்லது - என்பது பற்றி எதுவும் தெரியாது. பின்னால் சில நிகழ்வுகள் மூலம் Rh- என்றால் குழந்தை பிறப்பில் பிரச்னை என்று தெரிய வந்தாலும் அது எல்லாம் சொந்தம் மூலம் கல்யாணம் ஆகிக் குழந்தை பெற்றுக் கொண்டவர்களாய்ப் போய் விட்டார்கள். ஆகவே இதில் பெரிய விஷயம் ஏதுவும் இல்லைனு யோசிச்சுப் பார்க்கவே இல்லை.

பின்னால் எனக்குக் கல்யாணம் ஆகி உடனே குழந்தை உண்டாகாதபோதும் இது பற்றிக் கவனம் செலுத்தவில்லை. அதுக்கு அப்புறம் குழந்தை உண்டாகிக் குழந்தை பிறந்து 3-ம் நாள் குழந்தை மஞ்சள் என்றால் அப்படி ஒரு மஞ்சளாக இருக்கவே எல்லாருக்கும் சந்தேகம் ஏன் இப்படி? என்று. ஆனால் என் கணவருக்கு அந்தச் சமயம் மஞ்சள் காமாலை நோய் இருந்த காரணத்தால் வீட்டில் இருந்த பெரியவர்கள் அதன் காரணமாய் இருக்கலாம் என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் டாக்டர் வந்து பார்த்து விட்டு நான் Rh-குரூப், அதன் விளைவுதான் என்று உறுதிப் படுத்தினார். ஆனால் அவர் வந்து பார்த்து உறுதிப் படுத்துவதற்குள் குழந்தை பிறந்து 4 நாளுக்கு மேல் ஆகி விட்டிருந்தது. ஆகவே எனக்கு அப்போது உடனே போட வேண்டிய ஊசி போடமுடியாத நிலை. குழந்தைக்கு மட்டும் மருத்துவம் செய்தார்கள். தினமும் காலை வெயிலில் குழந்தையைப் போட்டுக் கொண்டு என் அம்மா உட்காருவார்கள். நான் எங்கேயோ ரூமில் இருப்பேன். குழந்தையின்ஆகாரத்தில் இருந்து அது குளிப்பது வரை எல்லாம் கட்டுப் பாடு. கிட்டத் தட்ட 45 நாள் இம்மாதிரிக் குழந்தையை வளர்த்து விட்டு ஒரு மாதிரியாக நானும் புக்ககம் வந்து விட்டேன். அப்புறம் எல்லாம் மறந்தும் போச்சு.

அதுக்கு அப்புறம் சில வருடங்கள் கழித்து இரண்டாவது குழந்தை உண்டான சமயம் நாங்கள் ராஜஸ்தானில் இருந்த காரணத்தால் என் கணவர் முன்கூட்டியே என் பெற்றோரை வரவழைத்து என்னை அனுப்பி விட்டார். இஷ்டம் இல்லாமல்தான் போனேன் அப்போது, குழந்தை பிறந்த சமயம் விடிகாலை ஆதலால் அப்போது ஒண்ணும் தெரியவில்லை. அப்புறம் நல்ல சூரிய வெளிச்சம் வந்ததும் குழந்தையைப் பார்த்தால் ஒரே மஞ்சள் நிறம். துணி எல்லாம் மஞ்சள். உடனேயே எனக்குள் ட்யூப் லைட் எரிய நான் முதல் குழந்தைக்கும் வந்திருந்தது என்று சொன்னேன். நல்லவேளையாகக் குடும்ப டாக்டர் என்பதால் முதல் பிரசவமும் அதே ஆஸ்பத்திரி, அவங்களுக்கும் நினைவு இருந்தது. உடனேயே ரிஜிஸ்டரைப் பார்த்து விட்டு முன்னால் வந்த அதே குழந்தை நல சிறப்பு மருத்துவரை வரவழைத்தனர். அவர் பார்த்து விட்டு உடனேயே பழைய கதையும் தெரிந்ததும் இது Rh- விளைவுதான் என்று சொன்னார். உடனேயே முதல் பிரசவத்தில் ஊசி ஏன் போடவில்லை என்று கேட்டதற்குக் குழந்தை பிறந்து 72 மணி நேரத்துக்கு மேல் ஆனதால் போட்டாலும் பயன் இல்லை என்று போடவில்லை என்று சொன்னார்கள். மஞ்சள் காமாலையுடன் பெரிதுபட்ட கல்லீரலுடன் (enlarged liver) பிறந்த என் குழந்தை அந்த ஆஸ்பத்திரியிலேயே ஒரு காட்சிப் பொருள் ஆனான். இதன் காரணம் என்னோட 'O' Rh Negative வகை ரத்தம் தான். இது ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை என்றாலும் இதைத் தடுக்க நிறையத் தற்காப்பு நடவடிக்கைகள் இருக்கின்றன. அவை நாளை தொடரும்.

DISCLAIMER; மருத்துவம் பற்றிய பதிவு என்பதால் முதலில் என் கணவர் யோசித்தார். மருத்துவம் தெரியாமல் எழுதுவது சரியாய் வருமான்னு. ஆனால் நான் பொதுவாய் எழுதுவதாயும், மற்றபடி வேறு மருத்துவ சம்மந்தமான குறிப்புக்கள் எல்லாம் வராது என்றும் சொல்லி இருக்கிறேன். ஆகவே இந்த ரத்தக் குறைபாடு உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியத் தகவல்கள் மட்டுமே நாளை கொடுக்கப் படும்.

டாக்டர்கள் என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் சிபாரிசு செய்வார்கள், நாம் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற பொதுவான விஷயங்கள் மட்டும் இடம் பெறும்.

Friday, November 03, 2006

விமானம் ரிவர்ஸில் போகுமா?

நம்ம கடல் கணேசன் பதிவுல ஒரு அனானி கப்பலில் ரிவர்ஸ் கியர் உண்டான்னு கேட்டு இருந்தார். அப்படியே விமானங்களிலும் உண்டான்னு கேட்டுட்டு, இந்த கேள்வியை விக்கி பசங்க கிட்ட கேட்கலாமான்னு வேற கேட்டு இருந்தார். ரிவர்ஸ் கியர், Rivers கியர் இல்லை அப்படின்னு ஜோக் எல்லாம் கூட அடிச்சிருந்தார். இப்படி எல்லாம் அமர்க்களமா கேள்வி கேட்கற பார்ட்டிங்க பேரைச் சொன்னா தொடர்ந்து எழுதும் போது உங்களுக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும் இல்லையா? கணேசனும் அவரு கிட்ட கேட்கலாமுன்னு சொன்னாரே தவிர நம்ம கிட்ட கேள்வியை கேட்கவே இல்லை.சரி விடுங்க.

யாரு கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டியதை கடமையாய் கொண்டிருக்கும் நாங்கள் இப்படி ஒரு நல்ல கேள்வி வந்திருக்கும்போது பதில் சொல்லாம விடுவோமா? முதலில் ஒற்றை வரியில் பதில் சொல்லி விடலாம்.

விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் கிடையாது.

இப்பொழுது கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

விமானங்கள் முன்னே செல்ல தமது சொந்த சக்தியில் செல்ல முடியுமே தவிர பின்னால் செல்ல முடியாது. அதனால்தான் விமான நிலையங்களில் பயணிகளும் சரக்கும் ஏற்றப்பட்ட நிலையில் ஓடுதளத்திற்கு செல்ல tow trucks எனப்படும் ட்ராக்ட்டர்கள் தேவைப் படுகின்றன. இந்த ட்ராக்ட்டர்களினால் பின் தள்ளப் பட்டு மெதுவாக திரும்பி செல்ல வேண்டிய திசையை பார்த்து விமானங்கள் நின்ற பிறகு இந்த ட்ராக்ட்டர்களில் இருந்து விடுபட்டு, தனது உந்து சக்தியால் ஒடுகளத்தில் ஓடி, அதன் பின் மேலெழும்பி வானில் பறந்து செல்கின்றன.

இங்கு விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்ஜின்களைப் பற்றி கொஞ்சம் பேச வேண்டியதாய் இருக்கிறது. விமானத்தில் நிரப்பப்பட்டிருக்கும் எரிபொருள் எரிக்கப்பட்டு வாயுவாக மாற்றப்படுகிறது. இவ்வாயு மிகுந்த அழுத்தமான நிலையில் வைக்கப்படுகிறது. இவ்வாறு வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து ஒரு சிறிய துளை மூலம் இந்த வாயு வெளிப்படுத்தப்படும் பொழுது அவ்வழுத்தத்தினால் ஏற்படும் உந்து சக்தியால் இவ்வாயு வெளிப்படும் திசைக்கு எதிர் திசையில் விமானம் தள்ளப்படுகிறது. இச்சக்தியை ஆங்கிலத்தில் Thrust என அழைக்கிறார்கள். ஒரு பலூனை ஊதி அதன் வாயைக் கட்டாமல் விட்டால் எப்படி பறந்து செல்கிறதோ அது போன்றுதான்.

இப்பொழுது வேறு ஒரு எடுத்துக்காட்டு ஒன்றை பார்க்கலாம். நம் முகத்தின் நேராக உள்ளங்கையை குழிவாக வைத்துக் கொண்டு ஊதினால், அவ்வாறு வெளியேரும் காற்று, மீண்டும் நம் முகத்தை நோக்கியே வருகிறது அல்லவா? அதைப் போன்று விமானங்களில் ஒரு அமைப்பு இருக்கின்றது. அதனை Reverse Thrusters என அழைக்கிறார்கள். நம் கை காற்றை மீண்டும் நம் முகத்திற்கே திருப்புவது போல், இந்த அமைப்பு எஞ்சினிலிருந்து வெளியேறும் வாயுவை அது பொதுவாக வெளியேறும் திசைக்கு எதிர் திசைக்கு தள்ளிவிடுகிறது. அதனால் விமானம் முன்னே செல்வதற்குப் பதிலாக பின்னால் செல்ல ஏதுவாகிறது.

பொதுவாக விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் விரைவாக ஓடும் பொழுது இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்களை பாவித்து விமானத்தின் வேகத்தை வெகுவிரைவில் குறைப்பார்கள். ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கட்டும். இங்கு ரிவர்ஸ் த்ரஸ்டர்களை உபயோகிக்கும் போது ப்ரேக் பிடிப்பது போல் இஞ்சின் வேகத்தைக் குறைக்காமல், வேகத்தை அதிகப்படுத்ததான் செய்வார்கள். இதன் மூலம்தான் தரையிறங்கிய விமானத்தை அவ்வளவு விரைவாக ஓடுகளத்தில் ஓட ஆரம்பித்தாலும் மிகச் சிறிய தூரமே ஓடிய பின் நிறுத்த முடிகிறது. இவ்வசதி இல்லாவிட்டால், ஓடுகளங்களின் நீளம் இன்று இருப்பதை விட பல மடங்கு நீளமாவதாகத் தேவைப்படும். சரி இந்த ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் மூலம் விமானங்களை பின்னால் செல்ல வைக்க முடியாதா? ஏன் செய்வதில்லை?

இதற்கு இரு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம் பணம்! ஆமாம். விமானங்களின் இஞ்சின்களை இயக்கி அதன் மூலம் விமானத்தை பின் செல்ல வைப்பதை விட ஒரு ட்ராக்ட்டரின் மூலம் பின்னால் தள்ளுவதனால் செலவு குறைகிறது. விமான எரிபொருட்களின் விலையும், எஞ்சின்களின் தேய்மானமும் ட்ராக்ட்டரின் செலவை விட பலமடங்கு அதிகமாகிவிடும். எனவே டெக்னிக்கலாக விமானங்கள் தனது சொந்த உந்து விசையால் பின்னால் செல்ல முடிந்தால் கூட அது எங்கும் செய்யப்படுவதில்லை.

இரண்டாவது காரணம் என்ன? அதையும் பார்க்கலாம். விமானங்களில் பிரயாணிகளும் சரக்கும் ஏற்றப்படும் பொழுது விமானங்கள் விமானநிலையத்தைப் பார்த்தவாறு நிறுத்தப்படுகின்றன. இப்பொழுது ரிவர்ஸ் த்ரஸ்டர்கள் உபயோகிக்கப்பட்டால் இஞ்சினில் இருந்து வெளியேற்றப்படும் வாயுவானது அதிவேகத்தில் விமான நிலையத்தை நோக்கிதான் வரும். அதனால் விமான நிலைய கட்டடங்கள் பாதிப்படையும். அப்போது உடையும் கண்ணாடி ஜன்னல்களுக்கு யார் பதில் சொல்வது? அதனால்தான் ட்ராக்ட்டர்களை உபயோகிக்கிறார்கள்.

என்ன அனானி அவர்களே, பதில் புரிந்ததா?

Thursday, November 02, 2006

சுடோகு போடுவது எப்படி?

அதென்னய்யா சுடோகு என்பவர்களுக்குத்தான் இந்த பதிவு. சுடோகு தெரியாதா இவன் என்னமோ எழுத வந்துட்டான் என பேசும் வீம்பிகள் இத்தளத்தில் தினமும் வரும் இலவச புதிரை போட பாருங்களேன்.

சுடோகு ஒரு ஜப்பானிய புதிர் விளையாட்டு. ஆனால் இதன் மூலம் நம்ம பாரதம்தான் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சேதி. நமது முன்னேர்கள் குருகுலத்தில் கிளாசெல்லாம் கட்டடிக்காமல் சரியாக படித்து பல வித்தைகளை அறிந்து வைத்திருந்தனர். கணிதத்தில் அபார தேர்ச்சி பெற்றிருந்தனர். அப்பொழுது பலவிதமான மாயக்கட்டங்களை கண்டுபிடித்திருந்தனர். அதில் ஒருவகைதான் இந்த சுடோகு.

9x9 சதுரங்களைக் கொண்டது சுடோகு கட்டம். இதில் இட வல வரிசைகளை R1-R9 ஆக குறித்துக் கொள்வோம். மேல்-கீழ் வரிசைகளை C1-C9 ஆகவும், தடித்த கோடுகளால் காட்ட பெற்றிருக்கும் 3x3 உட்கட்டங்களை B1-B9 ஆகவும் குறித்துக் கொள்வோம்.விதிகள்
1. ஒவ்வொரு இட-வல வரிசையிலும் (R1-R9), ஒவ்வொரு மேல்-கீழ் வரிசையிலும் (C1-C9) 1-9 என்ற எண்களை தலா ஒரு முறையே வருமாறு கட்டங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
2. இவைகளில் மட்டுமல்லாது, ஒவ்வொரு உட்கட்டத்திலும் (B1-B9) இவ்வெண்கள் ஒரு முறைக்கு மேல் வரக்கூடாது.
3. தொடக்கத்தில் சில கட்டங்களில் எண்கள் நிரப்பப்பட்டிருக்கும்.
4. காலியாக இருக்கும் கட்டங்களை மேற்கூறிய விதிகளுக்கிணங்கி நிரப்ப வேண்டும். அவ்வளவுதான்.

ஒரு புதிர்


இந்த புதிரை எப்படி முடிப்பதென்று பார்ப்போம்.
உள்கட்டம் B4-ல் 1 இருக்கிறது. 2 எந்த கட்டத்தில் வரும்? R4-ல் ஏற்கனவே ஒரு 2 இருப்பதால் அங்கு இன்னுமொரு 2 வராது. எனவே மீதமிருக்கும் இரண்டு கட்டங்களில் எதாவது ஒன்றில்தான் வர வேண்டும். அதிலும் C2விலும் 2 இருப்பதால், வரக்கூடிய இடம் ஒன்றே ஒன்றுதான். அது C1,R5.


அடுத்து உள்கட்டம் B5-ல் பார்த்தீர்களானால் R4, R5 ஆகிய இரண்டு வரிசைகளிலும் 2 இருக்கிறது. எனவே C6,R6 என்ற கட்டத்தில்தான் 2 வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 4. வரிசை R5-ல் ஏற்கனவே 4 இருப்பதால், C4,R4 என்ற கட்டத்தில்தான் வரும்.


இப்பொழுது உள்கட்டம் B5-ல் அடுத்து வரவேண்டிய எண் 5. இது மீதி இருக்கும் கட்டமான C5,R5 என்ற கட்டத்தில்தான் வரும்.


இதைப்போன்று அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தால் விடை கீழ் காணும் படத்திலிருப்பது போல இருக்கும்.


இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்ததுதானே. மேலும் பல புதிர்களுக்கு மேற்கூறிய வலைத்தளத்திற்கு செல்லுங்கள். எடுத்துக்காட்டாக உபயோகித்த புதிர் இத்தளத்திலிருந்து எடுத்ததுதான். இன்னும் எத்தனையோ வலைப்பதிவுகளும் உண்டு.

சுடோகுவின் வரலாறு, இதன் வடிவமைப்பு பற்றிய செய்திகள், மேலும் பல தகவல்கள் வேண்டுமானால் பின்னூட்டமிடுங்கள், இன்னுமொரு பதிவு செய்கிறேன். நீங்கள் முயலும் புதிரில் அடுத்த அடி தெரியாமல் கஷ்டப்பட்டீர்களானால், எனக்கு தெரியப்படுத்துங்கள். சேர்ந்து முயலலாம்.

- இலவசக்கொத்தனார்