Wednesday, February 28, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

இசை என்பது எல்லாத்தையும் தீர்த்துவைக்கும் ஒரு நிவாரணி! எப்பவாது மனசு சஞ்சலத்தோட இருக்கிறப்பவும், இல்லை மகிழ்ச்சியிலே குதுகுலிக்கிறப்பவும், அந்த வேளைகளில் கிடைக்கும் இசை, பாடல்களை கேட்டுப்பாருங்க, அதைவிட ஒரு பெரிய ஆறுதல் எதுவும் இருக்க முடியாது. அது மாதிரி எத்தனை காலமானாலும் பழைய பாடல்களை கேட்கும் பொழுது அந்த பாடல்கள் புதுசா வந்த காலகட்டத்திலே நமக்கு நடந்த பல நிகழ்ச்சிகள் நம் மனசிலே அசை போடும்! ஆகா நாம் வாழ்ந்த அந்த காலங்கள் பொற்காலங்கள்னு தோணும். என்னதான் பழைய போட்டாக்களை நாம் பார்த்து நினைவு கூர்ந்தாலும், நம்மலுடய பிம்பங்களே பிரதிபலித்தாலும், அவ்வளவா நினைவுகளை அசைபோட முடியாது.

ஆனா பாடல்கள், அந்த காலத்திலே காற்றிலே கீதமா வந்த பாடல்கள், அதை கேட்டு அப்போழுது நடந்த சம்பங்களை நினைச்சு சுலபமா கோர்வையாக்கி நினைவு கொள்ள முடியும்! அப்படி இருக்கும் இந்த இசைக்கும் அதனுடன் கூடிய ராகங்களுக்கு நோய் தீர்க்கும் குணம் உண்டுன்னு நான் படிச்சப்ப, அது ஆச்சிரியமில்லை, உண்மைன்னு தான் தோணுச்சு! அதுக்காக ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு இன்னன்ன ராகங்கள் இன்னன்ன நோய்களை குணப்படுத்தும்னு போட்டிருந்தாங்க, சரி அதை பத்தி ஆராய்ச்சி பண்ணி பதிவு கம் பாட்காஸ்ட் போடலாமேங்கிற எண்ணத்திலே வந்த முயற்சி தான் இது!

அதுக்காக கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கிட்டு, ராகங்களின் தொடர்புடைய பாடல்களை தேடி கண்டுபிடிச்சு, அதையும் அந்த பாடல்களின் பின்னனி, அப்பறம் எனக்கு நினைவுக்கு வந்த சம்பங்களை வச்சு இதை ஒரு அழகான பாட்காஸ் போடுவோமேன்னு தான்!

முதல்ல நான் எடுத்துக்கிற ராகம் 'பிலஹரி' என்ற ராகம். இந்த ராகத்துக்கும் காதலுக்கும் தொடர்புண்டுன்னு சொல்றாங்க! அதாவது 'நாஜீவதாரா' என்ற தியாகராஜ் கீர்த்தனை ரொம்பவும் பிரசித்து பெற்ற ஒன்று, இந்த ராகத்திலே அமைந்த ஒன்னு! அதாவது அந்த அந்த காலத்திலே வயித்து வலியால துடிச்சவனுக்கு மருந்தா இந்த ராகத்திலே பாடி குணப்படுத்தினதா சொல்றாங்க! ஆக இந்த 'பிலஹரி' ராகத்திலே பாடி கடவுளை கூப்பிட்டு 'ஏ கோபாலா, கருணைகாட்டு, வயத்து வலிதீர்த்து, என்றும் உன் புகழ் பாட அருள் பாலிப்பாயா'ன்னு பாடி இந்த ராகத்திலே குணப்படுத்துவாங்களாம்!

அப்படி பட்ட இந்த ராகத்திலே வந்த சில சினிமா பாடல்களை நம்ம எல்லாம் இனகொள்ள வேண்டுமென்ற முயற்சியில் இதோ! கொஞ்சும் சலங்கையிலே வரும் 'ஒருமையுடன் நினது திருமலரடி' என்ற பாடல் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய பாடல் அப்பொழுது பிரசித்து பெற்ற ஒன்று, அதற்கு பின் கல்யாணப்பரிசு திரைப்படத்தில் வந்த 'உன்னை கண்டு நான் ஆட என்னை கண்டு நீ ஆட' என்ற பாடல் சுகமாகவும் சோகமாவும் ஒலித்த ஒன்று! A M ராஜா இசையிலே ஸ்ரீதர் இயக்கத்திலே வந்தப்படம்! இந்த படத்திலே தங்கவேலு காமடியும் ரொம்பவும் பாப்புலர்! பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்த அகத்தியர் படத்திலே வரும் 'தலைவா தவப்புதல்வா வருகவே' என்ற பாடல், பிறகு இந்த ராகத்திலே நம்ம இளையராஜா 'உன்னால் முடியும் தம்பி என்ற படத்திலே இசை அமைச்ச 'நீ ஒன்று தானா என் சங்கதீம்' என்ற பாடல்!

இது மட்டுமில்லாது ஹிந்தியில் வந்த ஆராதனா என்ற படத்தில் வரும் 'கோரா காஹஸ்' என்ற மற்றொரு அருமையான பாடல்!

இதோ இதனுடய தொகுப்பாக இந்த பாட்காஸ்ட்டை கேட்டு மகிழுங்கள்! இனி இது ஒவ்வொரு பாட்காஸ்ட்டா தொடர்ந்து வரும்! கேட்பதற்கு எப்படி இருந்ததுன்னும், மேற்கோண்டு என்னென்ன முன்னேற்றங்களை செஞ்சா நல்லா இருக்கும்னு உங்க பின்னோட்டங்களை போடுங்க!


தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

Sunday, February 25, 2007

விஸ்டாவா வேண்டாமா - 2

இதன் முதல் பாகம் இங்கே.

(எந்த நேரத்துல இதை எழுதத் தொடங்கினேனோ தெரியல, கழுத்தை அமுக்குற அளவுக்கு வீட்டுலயும் அலுவலகத்துலயும் ஒரே வேல. தாமத்துக்கு மன்னிச்சுங்குங்க).


நெறைய பேரு விண்டோஸ்-ல அவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ஸ மின்னஞ்சல் அனுப்பப் பயன்படுத்திக்கிட்டு இருக்கிறாங்க. விஸ்டால, அவுட்லுக் எக்ஸ்பிரஸ் கிடையாது, அதுக்குப் பதிலா விண்டோஸ் மெயில் என்று ஒரு சமாச்சாரம் வந்திருக்கு. இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ஸ விட மிகச் சாதாரணமாகத்தான் இருக்கிறது. (நான் எந்தக் காலத்துலயும் அ.எ. பயன்படுத்தியது கிடையாது, எனவே இதுல நான் சொல்றதுல தப்பு இருக்கலாம். ஆனா, இங்க என்னோட ப்ரெண்ட கேட்டுப்பாத்ததுல அவரும் அப்படித்தான் சொல்றார்). சும்மா பேருக்கு ஒரு மின்னஞ்சல் பொதின்னுதான் விண்டோஸ் மெயில சேத்துருக்காமாதிரி தெரியுது. இதுகூடவே மைக்ரோஸாப்ட் விண்டோஸ் லைவ் மெயில் டெக்ஸ்க்டாப் (Windows Live Mail Desktop) அப்புடின்னு தனியா ஒன்னை அறிமுகப்படுத்தியிருக்காங்க. (விஸ்டாவோட வராது, நீங்கதான் தனியா இறக்கிப் போட்டுக்கனும்). இது இன்னும் சோதனைலதான் இருக்கு. இந்த லைவ் டெக்ஸ்டாப் ஹாட்மெயில் கணக்கு, மத்த pop கணக்கு எல்லாத்தையும் ஒன்னா ஒரே இடத்துல படிக்க வசதி தரும். கொஞ்ச நாளுக்கப்புறம் ஹாட்மெயில முழுக்க நிறுத்திடப்போறோமுன்னு மைக்ரோஸாஃப்ட் சொன்னது, ஆனா அதுக்கு நெறையா எதிர்ப்பு இருந்ததால இப்ப தொடர்ந்து இருக்கும்னு சொல்லிருக்காங்க. ஆனா கூடுதல் வசதியெல்லாம் வேணும்னா லைவ் மெயில் டெக்ஸ்டாப்பை இறக்கிப் போட்டுத்தான் ஆகனும். அதுல RSS feed சேத்துப் படிக்க முடியும். அதுக்கூடவே ஃபோட்டோ மெயில்-னு ஒரு வசதியைப் பெருசா விளம்பரிக்கிறாங்க. உங்க கணினில இருக்கெற படத்தை இதுவழியா நேரடிய ஒரு நண்பருக்கு அனுப்பமுடியும் (இதுபத்தி பின்னாடி எழுதுறேன்). - முக்கியமான விசெயம், லைவ் மெயில்ல வர்ற மின்னஞ்சல் எல்லாம் மைக்ரோஸாஃப்டால நேரடியா வைரஸ் சோதனைக்கு உள்ளாகி, சுத்தப்படுத்திதான் வரும். இதுக்கெல்லாம் ஒரு விலை இருக்கு - லைவ் டெக்ஸ்டாப்ல வலதுப்பக்கம் முழுக்க வர்ற விளம்பரங்கள நீங்க சகிச்சுக்கனும்.

இந்த வைரஸ் களைந்த, செய்தியோடை சேர்ந்த டெஸ்க்டாப்ட் மெயில் கூகிள், யாகூ ரெண்டோட போட்டியையும் சமாளிக்க மைக்ரோஸ்ஃப்ட் கையாள்ற உத்தி. ஆனா, லைவ் மெயில்-ல இருக்கிற எல்லா வசதியையும் கூகிள் மெயில் வச்சுக்கிட்டு தண்டர்பேர்ட் மாதிரி ஒரு இலவச பொதியைச் சேர்த்து சமாளிச்சுக்கலாம். விளம்பரத்தைப் பாக்க வேண்டிய அவஸ்ய நஹி ஹை (அடுத்த ரூம்ல பசங்க Multiculture TV-ல மஹாபாரத் பாத்துக்கிட்டு இருக்காங்க). சொல்லப்போனா இந்த கூகிள் மெயில்-தண்டர்பேர்ட் பலவிசயத்துல மைக்ரோஸாஃப்ட் லைவ் மெயில தூக்கிச் சாப்புடும்.

இதுநாள் வரைக்கும் விண்டோஸ்-ல இல்லாம இருந்த நாட்காட்டி வசதி விஸ்டா-ல புதுசா வந்துருக்கு. ஆப்பிள் கணினில இந்த காலண்டர் வசதி ரொம்பப் பிரபலம். நான் சோதிச்சுப் பார்த்தவரைக்கும் இந்த நாட்காட்டி நல்லாத்தான் இருக்கு. இதுக்கு முக்கிய காரணம் மைக்ரோஸாஃப்ட் இதுல புதுசா எதுவும் செய்ய முயற்சிக்கல. காலண்டர் விஷயத்துல இப்ப இருக்கிற தரம் - ical என்ற வரையறை. விண்டோஸ் காலண்டர் இதை முழுசா ஏத்துக்கிட்டு இருக்கிறது மகிழ்ச்சியான விஷயம். அதாவது, இந்த காலண்டர்-ல இணையம் மூலமா கிடைக்கிற கூகிள் காலண்டர், யாகூ (இன்னும் எங்க ஆய்வகத்துல நான் நிறுவியிருக்கிற திறமூல Zimbra) போன்ற ஐ-கால் தரத்தைப் பயன்படுத்துற எல்லா பொதிகள்லேந்தும் நேரடியா படிக்க எழுத முடியும். இது கட்டாயம் ஒரு நல்ல வசதிதான்.

நான் MSN Messenger எல்லாம் பயன்படுத்துறது கெடையாது. இதுவும் இப்பொழுது விண்டோஸ் லைவ் மெஸெஞ்சர் என்று புது மொந்தையில் அடைக்கப்பட்ட பழைய கள்ளாகியிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு யாகூ பயன்படுத்திக்கிட்டு இருந்தேன், அப்புறம் கூகிள் மெஸேஞ்சர். எனவே இதைச் சோதித்துப் பார்க்கும் வழி கிடையாது.

இன்னொரு புது விஷயம் - விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery) அப்படின்னு ஒரு புது விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்காங்க. இதைக் கொண்டு உங்க காமெராவுலேந்து போட்டோவை இறக்கிக்க முடியும். ஓரத்தை வெட்டுறது மாதிரி சின்னச் சின்ன திருத்த வேலைகளைச் செய்ய முடியும். போட்டோ தரத்துக்கு நேரடியா அச்சிட முடியும். அப்புறம் மேல சொன்ன விண்டோஸ் லைவ் மெயில் கொண்டு படத்தை நேரடியா உங்க நண்பருக்கு அஞ்சலிட முடியும். இப்ப மிகப் பிரபலமாக இருக்கிற டிஜிட்டல் காமெராக்களைக் கையாள மைக்ரோஸாஃப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் புது வசதி இது. ஆப்பிள் கணினிகளில் இருக்கும் iPhoto- என்ற Digital Photography Workflow பொதியை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. காமெராக்களிலிருந்து படங்களை இறக்குவதிலிருந்து, இவற்றை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொள்வது, சிறு திருத்தங்களைச் செய்துகொள்வது, ஒரு இணைய தளத்தில் பிறர் பார்க்க ஏற்றிவைப்பது, அச்சிடுவது அல்லது வேறு அச்சிடும் நிறுவனத்துக்கு அனுப்புவது என்று போட்டோ சம்பந்தமான அனைத்து விஷயங்களை ஒன்றாக கையாளும் வசதிகள் இதுபோன்ற Workflow பொதிகளுக்கு அவசியம்.

ஆனா இதுலயும் எதுவும் விசேஷமா இருக்கிறாமாதிரி தெரியல. நான் அறிமுகப்படுத்தின நாள்லேந்து கூகிள் பிகாஸாவைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இது விண்டோஸ் போட்டோ காலாரியை விட மிகத் தரமான பொதி. பிகாஸா-வைக் கொண்டு நிறைய திருத்த வேலைகளைச் செய்ய முடியும். பிகாஸாவுல இருக்கிற ஒற்றை பட்டனைக் கொண்டு போட்டோக்களைத் துல்லியமாக மேம்படுத்த முடிகிறது. (பிகாஸா பற்றிய என்னுடைய விரிவான விமர்சனம் இங்கே: பகுதி-1, பகுதி-2). இதுமாதிரி முன்னேற்றங்கள் எதுவும் விஸ்டாவில் வரவில்லை. பிகாஸாவுக்கு அடுத்தபடியாக முற்றிலும் திறமூலமான BlueMarine என்ற பொதியைச் சொல்லலாம். ஜாவா-வினால் இயக்கப்படும் இந்தப் பொதி லினக்ஸ், ஆப்பிள், விண்டோஸ் போன்ற எல்லா இயக்குதளங்களிலும் இயங்கும். ஆனால் எனக்குப் பொதுவாக முற்றிலும் ஜாவா அடிப்படையினால் இயங்கும் பொதிகளைப் பிடிக்காது. எனவே முழுமனதுடன் ப்ளூமரைன் பொதியைப் பரிந்துரைக்க முடியவில்லை. ப்ளூமரைனின் முக்கிய விஷயம் நீங்கள் எங்கே படத்தை எடுத்தீர்கள் என்று GeoTagging செய்துகொள்ள முடியும். அத்துடன் கூடவே ஒரு காக்கையின் படத்தை எடுத்தால் அது எப்படியான காக்கை என்று குறிப்பையும் எழுதிக்கொள்ள முடியும்.

படத்துக்கு அடுத்தபடியா பாட்டு. விண்டோஸ் மீடியாவின் அடுத்த வடிவம் வந்திருக்கிறது. இது Digital Audio Workflow Software. அதாவது சிடிக்களிருந்து எம்பி3 (அல்லது wma) வடிவிற்குக் கணினிக்காக சுருக்கிக் கொள்வது, பாடல்களைப்பற்றிய தகவல்களை id3 tag குறிப்புகள் மூலம் எழுதிக் கொள்வது, பாடல்களுடன் சிடியின் மேலட்டைப் படங்களை இணைப்பது, ஆல்பங்களை வகைப்படுத்திக்கொள்வது, கையடக்க டிஜிட்டல் இயக்கிகளுக்கு இவற்றை மாற்றுவது, எம்பி3 பாடல்களை குறுவட்டில் பொறிப்பது, என்று பாடல்கள் சம்பந்தமான அணைத்து வேலைகளையும் கையாண்டாக வேண்டும். நான் அதிகம் விண்டோஸ் மீடியாவைப் பயன்படுத்துவதில்லை. நீண்ட நாட்களுக்கு WinAmp ஐப் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இப்பொழுது பல தரமான திறமூல சிறு பயன்பாடுகள் கிடைக்கின்றன. குறிப்பாக CDex ஐத்தான் இப்பொழுது நான் அதிகம் பயன்படுத்துகிறேன். மிகச் சிறிய பொதியான சிடிஎக்ஸ் மிகத் தரமான எம்பி3-க்களை உருவாக்குகிறது. விண்டோஸ் மீடியாவின் புதுவடிவத்தால் அதிகப் பயன்கள் ஏதுமில்லை. வடிவமைப்பில் மெதுவாக இது Apple iTunes ஐக் காப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் பாதகமான சமாச்சாரங்கள் நிறைய இருக்கின்றன. (இவற்றைப் பற்றி விரிவாக அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்).

இணையம் உலாவும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பற்றி நான் அதிகம் எழுதப்போவதில்லை. பழைய வடிவங்களைக் காட்டிலும் இப்பொழுது இதில் கொஞ்சம் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் மோஸிலா ஃபயர்ஃபாக்ஸைவிட இது இன்னும் பாதுகாப்பற்றதாகத்தான் இருக்கிறது. மேலும், பொருத்திகள் (Plugins) வசதியுடன் ஃபயர்ஃபாக்ஸ் மிகமிக சக்திவாய்ந்ததாக உங்களுக்கேற்றபடி மேம்படுத்திக் கொள்ளமுடியும். எனவே இத்துடன் ஒப்பிடும்பொழுது ஐ.ஈ சோடைதான். இத்துடன் கூடவே ஸஃபாரி உலாவியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இத்துடன் இந்த பாகத்தை முடித்துக் கொள்ளலாம். இங்கே நான் சொல்லியிருக்கிற - Windows Mail, Windows Live Mail Desktop, Windows Calendar, Windows Photo Gallery, Windows Media Player எதிலுமே பூமியைப் புரட்டிப்போடுகின்ற சமாச்சாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இலவசமாகக் கிடைக்கும் பல பொதிகள் இவற்றைவிட மிக அற்புதமானவை). இவற்றின் மாற்றுகள் குறித்த ஒருபட்டியலைத் தருகிறேன்.

 • Windows Mail - Mozilla Thunderbird
 • Windows Live Messenger - Google Messenger, Yahoo! Messenger.
 • Windows Live Mail Desktop - GMail/Thunderbird Comination, or Yahoo!Mail/Thunderbird Combination
 • Windows Calendar - Mozilla Sunbird (standalone client) or Thunderbird Calendar Plugin
 • Windows Photo Gallery - Google Picassa, BlueMarine
 • Windows Media Player - WinAmp, iTunes and multitudes of Open Source programs
 • Internet Explorer - Mozilla Firefox (and its plugins), Safari

இப்படி எல்லா விஷயங்களிலும் விஸ்டாவின் அடிப்படை மேம்பாடுகள் ஏற்கனவே பிற (பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கும்) செயலிகளில் அற்புதமாகச் செயல்படுகின்றன. எனவே, என்னைப் பொருத்தவரை இவை எதுவுமே அதிகம் என்னைக் கவரவில்லை.

Wednesday, February 21, 2007

29. இடமா வலமா?

ரொம்ப நாளாகவே இந்தக்குழப்பம் எனக்கு உண்டு. இந்தியா உட்பட பல முன்னாள் ஆங்கில காலனிகளில் (ஆங்கிலவாசனையே அற்ற தாய்லாந்தும் இடதுதான்) வாகனங்கள் இடதுபுறம் செல்கின்றன. அதுபோலவே நடைபாதைகள், எஸ்கலேட்டர்கள் போன்றவற்றிலும் இடதுபுறம் செல்ல வலியுறுத்தப்படுகிறது. இதுவே ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வலதுபுறம் செல்லவேண்டும். ஏன் இந்த குழப்பம்? ஒரே சிஸ்டம் ஏனில்லை என்ற கேள்விக்கு விடைதேட முற்பட்டபோது சில சுவையான தகவல்கள் கண்ணில் பட்டன.

ரோமன் செய்ததை நானும் செய்வேன்!
பண்டைய ரோமானியர்களின் சாலையில் வாகனங்கள் இடதுபுறம் தான் சென்றன என்று ஒரு ரோமானிய குவாரிக்கு செல்லும் சாலையில் இருந்த தடங்களிலிருந்து கண்டுபிடித்துள்ளார்கள். அதற்குப்பின்னர் பிரிட்டனில் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அதாவது Middle Ages இல் குதிரையில் செல்வதோ நடப்பதோ சாலையின் இடதுபுறத்தில் தான். இதற்கு மிகவும் ப்ராக்டிக்கலான காரணம் ஒன்று சொல்கிறார்கள். நம்மைப்போலவே அப்போதும் பெரும்பாலனவர்கள் வலதுகை பழக்கத்தை உடையவர்களே. கத்தி பிடிக்கும் கை வலதுகை. மிகவும் ஆபத்தான, சட்டம் ஒழுங்கற்ற காலமாயிருந்த மிடில் ஏஜஸில் நாம் சாலையில் செல்கையில் எதிரில் வருபவர் எதிரியாக இருந்து திடிரென தாக்கினால், சட்டென்று தற்காப்புக்காக இடுப்பிலிருக்கும் கத்தியை வலதுகையால் தானே உருவ முடியும் அல்லவா? கேட்பதற்கு சற்று காமெடியாக இருந்தாலும் இது உண்மையாக இருக்கலாமென்றே எனக்குத்தோன்றுகிறது.

சட்டம் ஒரு இருட்டறை:
1300ல் முதன்முதலில் போப்பாண்டவர் சாலையில் இடதுபுறமாகத்தான் செல்லவேண்டுமென்று டிக்ரி ஒன்று அறிவித்ததாக சொல்லப்படுகின்றது. எப்படியோ 1756 ஆம் ஆண்டில் தான் அதிகாரப்பூர்வமாக லண்டன் பாலத்தின் மேலுள்ள சாலையின் இடதுபுறம் தான் செல்லவேண்டுமென்று சட்டம் பிறப்பித்தது. இச்சட்டமே பிரிட்டன் முழுவதற்குமாய் மாறி (General Highways Act 1773 & Highways Bill 1835) பின்னர் அதன் காலனிகளுக்கும் பரவி இன்று உலகம் முழுவதும் சுமார் 2.5 பில்லியன் மக்கள் இடதுபுறம் தான் சாலைகளில் செல்கின்றனர்.

என் வழி தனி வழி:
வலதுபக்கம் 3.5 பில்லியன் செல்கின்றனரே? அதற்கும் ஒரு விந்தையான காரணம் இருக்கிறது. 1700-கள் அமெரிக்காவில் பண்ணைகளிலிருந்து வந்த சோளம், கோதுமை போன்றவற்றை பிரம்மாண்டமான wagon களில் ஏற்றி போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த பெரிய வண்டிகளை ஆறேழு குதிரைகள் இழுத்தன. ஓட்டுநருக்கென்று தனியே கேபின் இல்லாததால் அவர் இடது ஓரமாக இருந்த குதிரையில் ஏறிக்கொண்டார். ஏன்? அப்போதுதானே வலதுகையக் கொண்டு சாட்டையால் குதிரைகளை வாகாக விரட்ட முடியும்? அதனால் அமெரிக்கா வலதுபுறம் செல்ல ஆரம்பித்தது. பிரான்சில் குடிமக்கள் வலதுபுறத்திலும், nobles இடது புறத்திலும் சென்றனர். ஆனால் எதிலுமே புரட்சி என்று சொல்லிவந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர் வழி ஏற்பார்களா? பிரஞ்சுக்காரர்களும் 1794-புதிய சட்டத்தின் மூலம் வலதுபுறம் செல்ல ஆரம்பித்தனர்.

ஏன் இந்தக் குதிரையை சாட்டையால் விளாசும் பிரச்சனை பிரிட்டனில் இல்லையா என்றால், அங்கே ஒட்டுநருக்கென்று நடுநாயகமாக ஒரு தனி இருக்கை இருந்தது. அதனால் அவருக்கு வலதுபுறம் செல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை.

இப்போது வலது புறம் செல்லும் நாடுகளுக்கே மறுபடி வருவோம். 1792-ல் பென்சில்வேனியா மாகாணம் சில குறிப்பிட்ட சாலைகளில் வலதுபுறம் செல்லவேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது. இதுதான் முதல் படி. அதன் பின்னர், 1804-ல், நியு யார்க் மாகாணத்தில் எல்லா சாலைகளிலும் எல்லா வாகனங்களும் வலதுபுறமே செல்லவேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமெரிக்க மாகாணங்களும் வலதுபுறத்தையே பின்பற்றின. வலதுபுறம் செல்லவேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டதேயொழிய ஓட்டுநர்கள் இன்னும் பழைய ஸ்டைலில், சாலையோர குழிகளில் விழுந்துவிடாமல் இருக்க, வலது பக்கமே அமர்ந்திருந்தனர்.

இப்போது ஐரோப்பா. ஆஸ்திரியா-ஹங்கேரி, ரஷ்யா, டென்மார்க், போர்ச்சுகல் என நெப்போலியனின் கீழ்சிக்காத நாடுகள் அனைத்தும் இடதுபுறமே பயன்படுத்தின. டென்மார்க் மட்டும் 1793-ல் மாறியது. ஆங்கிலேயர் கைப்பற்றிய ஆப்பிர்க்கா (எகிப்தைத் தவிர), ஆஸ்திரேலியா, இந்தியத் துணைக்கண்டம் ஆகியவற்றில் அதன் வழியே பின்பற்றப்படுகிறது. இப்படியே தொடர்ந்து சுமார் நூறு வருடங்களுக்கு status quo.

1900-களில் கார்களின் புழக்கம் அதிகரித்தபோது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள் வலதுபுறத்தில் சென்றாலும், ஓட்டுநர் வலதுபக்கமே அமர்வது (அதாவது இடதுபுற config) போன்றே வடிவமைக்கப்பட்டன. 1915-ல் போர்ட் வெளியிட்ட மாடல் - T ய்ல் தான் முதன் முதலில் வலதுபுறம் சாலையில் செல்லும் கார்களுக்கு இடதுபக்கம் ஸ்டியரிங் அமைக்கப்பட்டது. அதையே அனைத்து கார் தயாரிப்பாள்ர்களும் பின்பற்றவும் தொடங்கினர். ரஷ்யா புரட்சி வெடித்த சமயத்தில் நாட்டளவில் இடதுக்கு சென்று சாலையில் வலதுபுறத்துக்கு மாறியது! போர்ச்சுகலும் 1920-ல் மாறியது. இப்படி அனைவரும் வலதுக்கு மாற ஜப்பான் 1924-ல் இடதுபக்கம் தான் செல்லவேண்டும் என்ரு சட்டம் இயற்றியது.

நான் ஒரு தடவ சொன்னா:

1938-ல் ஹிட்லர் ஆஸ்திரியாவை கைப்பற்றி ஒரே இரவில் அனைவரும் சாலையின் இடதிலிருந்து வலதுக்கு மாறவேண்டுமென்று உத்தரவு போட்டான். இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளம். வியன்னாவே ஸ்தம்பித்துப்போனது இந்த முன்னறிவிப்பற்ற உத்தரவால்.

மாத்துங்கடா தீர்ப்ப:
1940களில் சீனாவும் கொரியாவும் வலதுக்கு மாறின. 1960களில் பாகிஸ்தானில் வலதுக்கு மாறவேண்டும் என்ற குரல் வலுப்பட்டது. ஆனால் இரவில் சாலைகளில் ஓட்டுநர்கள் தூங்குகையில் ஒட்டகங்கள் தாமாகவே இடதுபுறமே செல்லப்பழக்க படுத்தப்பட்டிருந்தன. அவற்றிற்கு புதிதாக வலதுபுறம் செல்ல பழக்கப்படுத்துவது மிகவும் கடினமான காரியம் என்பதால் ஐடியாவே கைவிடப்பட்டது.

கடைசியாக இடதிலிருந்து வலதிற்கு ஓடிய நாடு ஸ்வீடன் 1960களில் அவர்கள் நாட்டில் தயாரான வோல்வோக்களும், சாப்களும் வலதுபுற configurationஇல் இருந்ததாலேயே இந்த மாற்றம். அதோடு கூட அத்தனை சிறிய நாட்டை சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் வலதுக்கு மாறிவிட்ட நிலையிலும், நீண்டு வளைந்த சாலைகளில் எந்த நாட்டில் இருக்கிறோம் என்றே தெரியாமல் பல இடங்கள் இருக்கையில் பயணிகளின் குழப்பத்தை தீர்க்கவும் வலதுக்கு மாறியது.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன?
ஸ்வீடன் இடதிலிருந்து வலதுக்கு மாறியபின் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது என்ற சொல்வதுண்டு. அதில் உண்மையும் உண்டு. காரணம் இத்தனை நாள் இடதிலேயே ஓட்டி வந்தவர்கள் திடீரென வலதுக்கு மாறச்சொன்னதால் மிகுந்த எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். அதனால் விபத்துகள் குறைந்திருக்கலாம்.

ocular dominance என்ற ஒன்றைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அதாவது நம் கைகளில் வலதுகைப்பழக்கம் இருப்பது போல் கண்களில் வலதுகண் பழக்கம். இதனால் இடதுபுறத்தில் ஓட்டுபவர்களுக்கு வலதுகண்ணே பிரதானம் என்பதால் அது ஒரு ப்ளஸ்ஸாக இருக்கலாம்.

வலதுபுறத்துக்கு ஆதரவாக: ஒரு குதிரையையோ கட்டியிழுத்துக்கொண்டோ அல்லது ஒரு ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டோ செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். எந்த சைடிலிருந்து செல்வீர்கள்? இயற்கையாகவே நாம் தள்ளப்படும் பொருளுக்கு இடப்பக்கமாக இருந்தபடி தானே தள்ளூவோம்?

இடதுக்கு ஆதரவாய் இதைவிட ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. எந்தவித thoughtsஉக்கும் நேரம் இல்லாத எமர்ஜென்சி நிகழ்வின் போது instinctive ஆக மனிதன், எதிர்வரும் ஆபத்தை தவிர்க்க, சட்டென்று இடதுபுறமே திரும்புவான். இடதுபுறம் சாலையில் செல்லும் வாகனங்களில் அத்தகைய ஆபத்து நிகழும்போது ஒட்டுநர் விபத்தை தவிர்க்க இடதுபுறத்தில் சாலைக்கு வெளியே வண்டியை திருப்பி head on collisionஐ தவிர்ப்பான். வலதுபுறத்தில் ஓட்டுபவர்களோ எதிரெதிர் மோதிக்கொள்வார்கள். ஆகவே சாலையில் இடதுபுறத்தில் செல்வதே கொஞ்சம் அதிகப்படியாக பாதுகாப்பானது எனலாம்.


இப்போதைய நிலவரம்

எங்கே செல்லும் இந்தப்பாதை?
நம் ஊரில் எந்தப்பக்கம் போனால் பாதுகாப்பு என்று யாராவது சொன்னால் தேவலை!

இடதுபுறம் செல்வதுதான் பெட்டர் என்னைப்பொருத்தவரை. ஏன்னா, அட் லீஸ்ட் ரவுண்டானாவை சுற்றி வருகையில் பிரதக்ஷ்ணமாவாவது வரலாமே! அப்பிரதக்ஷ்ணமாக வருகிற பாவம் வேறு எதற்கு?? :))


C&Pக்கு உதவிய தளங்கள்
1. http://en.wikipedia.org/wiki/Driving_on_the_left_or_right

2. http://www.fhwa.dot.gov/infrastructure/right.htm

3. http://www.i18nguy.com/driver-side.html

Monday, February 19, 2007

ருசியான பிரியாணி செய்வது எப்படி?

காஷ்மீரி பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, காகாக்கடை பிரியாணி, ஆம்பூர் பிரியாணி வரிசையில் இப்பப் புதுசா 'நியூஸி பிரியாணி 'வந்துருக்கு.

வெஜிடேரியன்களும், நான்வெஜிடேரியன்களும் எல்லாரும் இப்படி வந்து கூட்டமா நில்லுங்க.

முதலில் எது?

மொதல்லே நான்வெஜ் சமைச்சுறலாம். ரொம்ப சத்தம் அந்தப் பக்கத்துலே இருந்து வருது. சிக்கனா மட்டனா? எதுவேண்டும் சொல் மனமே..........


ரெண்டு விதத்துக்கும் கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம்தான் இருக்கு. அதைச் சமைக்கும்போது பார்க்கலாம்.

இப்பெல்லாம் யாரும் பிரியாணிக்குன்னு மசாலா எல்லாம் வூட்டுலெ தயாரிக்கறதை விட்டுட்டாங்க. ரெடிமேட் பொடிகளா நாட்டுலெ குவிஞ்சு கிடக்கு. எனக்குத் தெரிஞ்சவரையில் 'மங்கள் மசாலா' நல்லாவே இருக்கு( வேற வழி? அது மட்டும்தான் இங்கே எனக்குக் கிடைக்குது) அதையும் வாங்கி வச்சுக்குங்க.

இந்த ரெஸிபி கொஞ்சம் 'ரிச்'சாத்தான் இருக்கும். ஆனா ருசி வேணுமுன்னா போடறதைப் போட்டுத்தானே ஆகணும். தினம்தினமா பிரியாணி சாப்புடப் போறோம்? அதனாலே காம்பரமைஸ் பேச்சு இல்லவே இல்லை.


தேவையான பொருட்கள்:

 1. சிக்கன் அல்லது மட்டன் - அரைக் கிலோ கொஞ்சம் பெரிய துண்டங்களா நறுக்கிக் கழுவி வச்சுக்குங்க)
 2. பாசுமதி அரிசி - அரைக்கிலோ
 3. பிரியாணி மசாலா - மூணு/நாலு தேக்கரண்டி
 4. மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
 5. உப்பு - ஒண்ணரைத்தேக்கரண்டி
 6. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எல்லாம்
 7. சம அளவில் சேர்த்து அரைச்ச பச்சை மசாலா- மூணு தேக்கரண்டி.( மசாலா பாக்கி ஆச்சுன்னா ஃப்ரீஸ் பண்ணி வச்சுக்கலாம்)
 8. வெங்காயம் பொடியாக அரிஞ்சது - 3 ( பெரிய சைஸ் வெங்காயமா இருந்தா 2 போதும்)
 9. 'துள்ஸீஸ்' கரம் மசாலா - 1 தேக்கரண்டி ( செய்முறை கடைசியில் இருக்கு)
 10. தக்காளிப் பழம் - 4 ( நறுக்கி வச்சுக்கணும்)
 11. கொத்துமல்லித்தழை - அரைக்கட்டு ( 'கால்கட்டு'க்கூடப் போதும்)
 12. புதினாத்தழை - கொஞ்சம்
 13. முந்திரிப்பருப்பு - கால் கப்
 14. உலர்ந்த திராட்சை( கிஸ்மிஸ்) கால் கப்
 15. நெய் - 200 கிராம்.

செய்முறையில் ரெண்டு வழி இருக்கு. சுலபமாச் செய்யறது, கஷ்டப்பட்டுச் செய்யறதுன்னு. எதுவேணும்? ரெண்டையும் சொல்லிடவா?


சுலபமுறை:


அடுப்பைப் பத்தவச்சுக்குங்க:-)

ஒரு பெரிய வாணலியில் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும், அதுலே முந்திரி, திராட்சையை பொரிச்சு எடுத்து வச்சுக்கணும்.

இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துச் சூடானதும் அரைச்சு வச்ச க்ரீன் மசாலாப் போட்டு ஒரு நிமிஷம் வதக்கணும்.அதுலேயே நறுக்கிவச்ச வெங்காயம் சேர்த்து இன்னும் வதக்கணும்.

அப்புறம் இன்னும் கொஞ்சம் நெய்யை ஊத்திச் சூடானதும் மஞ்சப்பொடியைப் போட்டு ஒரு கிளறு கிளறிட்டு அதுலே சிக்கன்/ மட்டனைப் போட்டு நல்லா பிரட்டுங்க. அதோட நிறம் லேசா மாறணும். இப்ப அடுத்துச் சேர்க்கவேண்டியது பிரியாணி மசாலா. அடிப்புடிக்காமக் கிளறணும். உப்பையும் இப்ப சேர்த்துறலாம். ஆச்சா......... என்ன பாத்திரத்துலெ பிடிக்குதா? தக்காளியைச் சேருங்க.

சிக்கனா இருந்தா ஒரு டம்ப்ளர் தண்ணீரைச் சேர்த்து அப்படியே அரைத்தீயில் வேகவிடுங்க. மட்டனா இருந்தா தக்காளி சேர்த்ததும் கிளறிட்டு அதையெல்லாம் ஒரு பாத்திரத்துக்கு மாத்திட்டு ப்ரெஷர் குக்கரில் வைக்கலாம்.( குக்கர்ன்னா கால் தம்ப்ளர் தண்ணீர் போதும். ஸ்டீம் வந்த பிறகு அடுப்பை 'ஸிம்' செஞ்சுட்டுச் சரியா 15 நிமிஷம்.


அரிசியை கழுவி( மூணு தடவை. அதான் இந்தியக் குடும்ப வழக்கமாம்) மைக்ரோவேவ் ரைஸ் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊத்தணும். அரிசி அரைக்கிலோன்னா அநேகமா ரெண்டரை கப் வரும். மூணரைக்கப் தண்ணி சேர்த்தாப் போதும். 100% பவர்லே 7 நிமிஷம், 50% பவர்லே 8 நிமிஷம் வைக்கணும். 1000 W மைக்ரோவேவ்க்கு இந்தக் கணக்கு. பவர் இன்னும் அதிகமுள்ள அல்லது குறைவுள்ள மைக்ரோவேவ்ன்னா அதுக்குத் தகுந்தமாதிரி குறைச்சோ, கூட்டியோ வச்சுக்கணும்.


அடுத்த கட்டம் மிக்ஸிங். சிக்கனா இருந்தா இந்நேரம் வெந்திருக்கணும். தண்ணியெல்லாம் சுண்டி நல்ல க்ரேவிப் பதத்தில் இருக்கும் அதே வாணலியில் இப்பச் சேர்க்க வேண்டியது நம்ம 'துள்ஸீஸ்' கரம் மசாலா.

ஒரு கிளறுக்குப்பின் அடுத்து மைக்ரோவேவில் வெந்து தயாரா இருக்கும் சோறு. நல்லாக் கிளறுங்க. ஆனா சாதத்தை நசுக்கிக் கூழாக்காம லேசாப் புரட்டிப்புரட்டி விடணும். வெள்ளைச்சோறு கண்ணுலெ படக்கூடாது. இப்பத் தூவவேண்டியது
ஏற்கெனவே வறுத்துவச்ச முந்திரி & திராட்சை. பாக்கி இருக்கும் நெய்யை அப்படியே பரவலா பிரியாணிமேலே ஊத்திவிடுங்க. கொத்தமல்லி & புதினாவைக் கழுவிப் பொடிப்பொடியா அரிஞ்சு தூவலோ தூவல். ஒரு அஞ்சு நிமிஷம் அடுப்புமேலேயே இருக்கட்டும். தீச்சுவாலை இப்ப 'ஸிம்'லெ இருக்கணும்.

தக்காளி வெங்காயம் எல்லாம் அரிஞ்சு தயிர்லெ போட்டுக் கலக்கி கொஞ்சமா உப்புப்போட்டு ஒரு பச்சடி செஞ்சுக்கலாம். இல்லையா வெள்ளரிக்காய் துருவி, தண்ணீரை ஒட்டப் பிழிஞ்சுட்டு கெட்டித்தயிரில் கலக்குன ரைத்தா.
எல்லாம் இது போதும் சைட் டிஷ். ( வெள்ளரிக்காய் தண்ணீரை ஃப்ரிஜ்லே வச்சுக்கிட்டு ரெண்டு நாளைக்கு முகத்தில் தடவிக்கலாம்.எல்லாம் ஒரு அழகுக் குறிப்புதான். வேணாமா? சரி. அதைக் குடிச்சுருங்க)


வெஜ் பிரியாணி:

இதுலேயும் ரெண்டு வகை. ஈஸி & கஷ்டம்.

ஈஸியைப் பார்க்கலாமா?

மேலே சொன்னதுலே அந்த ச்சிக்கன்/மட்டனுக்குப் பதிலா மிக்ஸட் வெஜிடபுள் ( காரட், பீன்ஸ், பட்டாணி & கார்ன்) பாக்கெட் அரைக்கிலோ போட்டுக்கலாம். பிரியாணி மசாலா ரெண்டு தேக்கரண்டியே போதும். உப்பும் கொஞ்சம்
குறைச்சுக்குங்க. காய்கறிகள் சீக்கிரம் வெந்துரும். அதனாலே பக்கத்துலே இருந்து கவனிச்சுச் செய்யுங்க. அடுப்புலே வச்சுட்டுத் 'தமிழ்மணம் ' படிக்கப்போக வேணாம்:-)

இப்போ கஷ்டங்கள்:

நான் வெஜ்ஜுன்னா அதுவும் மட்டன்னா கொழுப்பு ஏதும் இல்லாம நல்ல ட்ரிம் பண்ண இறைச்சியா எடுத்துக்குங்க. அப்படியும் சந்தேகமா இருந்தா வெறும் இறைச்சியைக் குக்கரில் வச்சு வெந்தபிறகு, அதில் உள்ள சூப்பை மட்டும்
தனியா ஒரு கிண்ணத்தில் ஊத்தி ஆறவச்சு ஒரு பத்து நிமிஷம் ஃப்ரீஸரில் வச்சுட்டு எடுத்தா, கொழுப்பெல்லாம் இறுகி பாறையா மேலே நிக்கும். அதை மட்டும் எடுத்து குப்பையில் போட்டுரலாம். அதே தண்ணீரை மீண்டும் இறைச்சியில் சேர்த்துக்கலாம்.

அப்புறம் அரிசியை மைக்ரோவேவ் அவனில் வைக்காம கொஞ்சம் நெய் ஒரு வாணலியில் ஊத்தி, கழுவித் தண்ணீர் வடிச்ச அரிசியைப் போட்டு கொஞ்ச நேரம் தீஞ்சுறாமல் வறுத்துட்டு அதுலெயே ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னரைப்பங்குத்
த்ண்ணீர் சேர்த்து அடுப்புலேயே வச்சு தண்ணீர் வற்றும்வரை வேகவச்சு எடுக்கலாம். தண்ணீருக்குப் பதிலா இறைச்சி வெந்தபிறகு கிடைச்ச தண்ணீரையும் பயன் படுத்தலாம்.


வெஜ்ஜுன்னா என்ன கஷ்டமாம்?

இருக்கே......... எல்லாக் காய்களையும் ,அதாங்க அதே காரட், பீன்ஸ், காலி ஃப்ளவர்ன்னு தனித்தனியா வாங்கிச் சின்னதா ஒரே அளவுலே வெட்டி வச்சுக்கணும். பச்சைப் பட்டாணியை வெட்ட வேணாம்:-) உரிச்சு எடுத்துக்கிட்டாப் போதும். எல்லாமே இங்கிலீஷ் காய்களாத்தான் இருக்கணும். தமிழை மட்டும் சேர்த்துறாதீங்க. அது சரிப்படாது.

குடமிளகாய் சீஸனா இருந்தா சின்னத் துண்டுகளா வெட்டி, ஒரு ஸ்பூன் நெய்யிலே வதக்கிட்டு, கடைசியில் மல்லி இலை தூவும்போது இதையும் தூவி அலங்கரிக்கலாம். இப்பதான் எல்லாக் கலர்லேயும் குடமிளகாய் கிடைக்குதே.
சிகப்பு, மஞ்சள், பச்சைன்னு கலந்து போட்டா அட்லீஸ்ட் பார்க்கறதுக்காவது அழகா இருக்கும்:-)

இதோ நீங்கள் ஆவலுடன் காத்திருந்த உலகப்புகழ்(??!!) 'துளசீஸ் மசாலா'வின் செய்முறை:



மசாலா தயாரிக்க :

 1. கிராம்பு 30 கிராம்
 2. பட்டை 30 கிராம்
 3. ஏலக்காய் 30 கிராம்
 4. மிளகு 10 கிராம்
 5. சோம்பு 100 கிராம்
இது எல்லாத்தையும் ஒரு வாணலிலே லேசா வறுக்கணும். அடுப்பை மெலிசா எரிய விடுங்க. எண்ணெய் வேணாம். சும்மா 'ட்ரை'யா, இளஞ்சூடா வறுத்து, ஆறியவுடனே, 'மிக்ஸி ட்ரை ஜார்'லே போட்டு அரைச்சு வச்சிரணும்.
காத்துப் போவாத டப்பாலே வச்சிருங்க. அவ்வளவுதாங்க! ஜமாய்ங்க!

Saturday, February 10, 2007

விஸ்டா-வா வேண்டாமா - 1

செந்தில்குமார் புச்சா லாப்டாப் வாங்கப்போறாராம். (கொடுத்துவச்சவரு). அதுல விஸ்டா இருந்தே ஆகனுமா? விஸ்டா புதுசு, கொஞ்சம் நாள் கழிச்சு அதுக்கு மாறிக்கலாமா? இப்படி அவருக்கு ஏகப்பட்ட விஸ்டேகங்கள்.

இதுக்குப் பதில் சொல்ல நான் சரியானா ஆளா இல்லியான்னு தெரியல. நான் தீவிர லினகஸ்வாதி-ங்கறது எல்லாருக்கும் தெரியும் (ஒரு காலத்துல லினக்ஸ் தீவிரவாதியாக்கூட இருந்தவன், இப்ப வேலை, பொண்டாட்டி புள்ளன்னு ஆனப்புறம் கொஞ்சம் அடங்கியிருக்கேன்). நான் மைக்ரோஸாஃப்ட் பத்தி என்ன சொன்னாலும் சந்தேகத்தோடத்தான் பாப்பாங்க (இது அந்த பாப்பா இல்லீங்கோ). அப்புடித்தான் பாக்கனும்னு நானே சொல்லிக்கிறேன்.

* * *

மைக்ரோஸாஃப்ட் ரெண்டு வாரத்துக்கு முன்னால விண்டோஸ் விஸ்டா-ன்னு ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை (இதுக்குத் தமிழ்ல இயக்குதளம்னு பேரு) அறிமுகப்படுத்தியது. இது கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து மைக்ரோஸாஃப்ட் வெளியிடும் புதிய இ.த. மைக்ரோஸாஃப்ட் வரலாறைப் பார்த்தா;

 • Windows 3.0 - 1990
 • Windows 3.1 - 1992 (Windows for Work Groups)
 • Windows 95 -1995
 • Windows 98 -1998
 • Windows ME - 2000
 • Windows XP - 2001

(இந்த வெளயாட்டுக்கு Windows NT, Windows 2000 எல்லாம் சேத்துக்கல. அதெல்லாம் ஆபீசுகாரங்களுக்கு. வூட்ல பிரயோசனப்பட்றதுக்குன்னு அவிங்க வுட்டது மேல இருக்கற அஞ்சும்தான்). இப்புடி ரெண்டு வருஷத்துக்கு ஒரு தபா புதுசா இ.த விக்கறது மைக்ரோஸாஃப்ட் பழக்கம். ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவ புதுசா ஒன்ன வாங்கவைக்கறது அவுங்களோட வெயாபாரத் தந்திரம். இந்ததடவ அந்தமாரி செய்ய முடியல. (அப்புடித்தான் திட்டம் போட்டாங்க, ஆனா விஸ்டா தயாராகறத்துல நெறைய லேட்டாயிடிச்சி). அதெல்லாம் பத்தி நமக்குக் கவலை இல்லை. நம்ம கேள்வி, அது நமக்கு சரிப்படுமா, இப்பவே வாங்கியாவனுமா இல்ல இன்னும் கொஞ்சம்நாள் கழிச்சு வாங்கலாமா? ( இல்ல வாங்காமயே இருக்கலாமா-ன்னும் ஒரு கேள்வி உண்டு).

மொதல்ல இந்த விஸ்டா-வுல புதுசா என்ன இருக்குங்கறதப் பாக்கலாம்? கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு முன்னால கொஞ்ச நாளைக்கு மைக்ரோஸாஃப்ட் விஸ்டா-வை இலவசமா சோதனைக்குன்னு கொடுத்தாங்க. ஒருக்காலத்துல எங்க ஆபிஸ்-ல ஒரு கைப்பிடியளவுக்கு மைக்ரோஸாஃப்ட் ஆபீஸ் பொதிக்கு லைஸன்ஸ எம்பேருல வாங்கியிருந்ததால எனக்கு மைக்ரோஸாஃப்ட்லேந்து இதை சோதிச்சுப்பாக்க ஒரு கடுதாசி வந்தது. ஏதோ, பில் கேட்ஸே கேக்குறாறே-ன்னு சரின்னு சொன்னேன். (இன்னாபா, கொஞ்சம் உட்டா நம்மகிட்டய டகிள் வுட்றியே-ங்கிறியா, சும்மா தெரியாமயா வாத்தியார் சொன்னாரு "ப்ளாக் எல்லாம் படிக்காதே, அதெல்லாம் ஈகோ ட்ரிப்புன்னு"). அப்ப ஒரு ஐஞ்சாறுதடவ அத ஓட்டிப்பாத்தேன். அதுக்கப்புறமா இன்னிக்குத்தான் என்னோட ஒரு பொட்டில போட்டுருக்கேன். இன்னும் முழுக்க நோண்டியாகல.


விஸ்டா-ல ரொம்பப் பெருசா எல்லாரும் சொல்றது அதோட புது 3-டி ஏரோ விண்டோ அமைப்புதான். பில் கேட்ஸ் அண்ணாத்தே இதத்தான் எல்லா எடத்துலயும் "Wow Factor" அப்படீன்னு மார்தட்டியிருக்கார். இப்ப விண்டோஸ்-ல எல்லாம் பரப்பிவச்சாமாதிரி ஒவ்வோரு விண்டோவையும் பக்கதுல பக்கத்துலதான் வைக்க முடியும். (அதுனால ரெண்டு இல்லாட்டி மூனு விண்டோவைத் தொறந்தா மேசை ரொம்பிடும்). ஏரோ-ல ஒன்னுமேல ஒன்னா அடுக்கி வைக்கலாம். அப்புறம் தெறந்து மூட்றப்ப சும்மா பொசுக்குன்னு கீழ இருக்கற பட்டில போய் ஒக்காந்துக்காம டீல்வுட்டு வால் அறுந்த பட்டம் காத்துல ஆடுமே அதமாதிரி கொஞ்ச நேரம் ஃபிலீம் காட்டிட்டுத்தான் மறைஞ்சு போகும். இப்புடி 'வாவ் ஃபாக்டர்' நெறையவே இருக்கு.

பிலீம் காட்ற சமாச்சாரத்துக்கு அடுத்தபடியா மைக்ரோஸாப்ட் ரொம்ப பீத்திக்கிறது அதோட பாதுகாப்பு தீவிரமாயிருக்குன்னுதான். விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பாக் -2 போட்டவங்களுக்கு அதுல Security Centre -ன்னு ஒன்னு இருக்கறது தெரிஞ்சிருக்கும். அதுல (தீயரண்), வைரஸ் ஒழிப்பு சமாச்சாரம், விண்டோஸ் அப்டேட்டிங்க் (இற்றைப்படுத்தல்) இந்த மூனும் சேந்தத்துதான் செக்யூரிட்டி செண்டர். விஸ்டா-ல இந்த மூனையும் இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சிருக்காங்க. சொல்லப்போனா வைரஸ் ஒழிப்பு சமாச்சாரம் எக்ஸ்பி செக்யூரிட்டி செண்டர்ல கெடையாது. உங்க பெட்டில அது (நார்ட்டன் ஆண்டி வைரஸ், மெக்காஃபி) இருக்கா இல்லயான்னுதான் சொல்லும். விஸ்டாவுலயும் அதேதான். இப்ப மைக்ரோஸாஃப்ட் LiveOne அப்படீன்னு ஒரு வைரஸ் ஒழிப்பு பொதியை விக்குது. இந்த செக்யூரிட்டி செண்டர் அது இல்லைன்னா கத்தும். அதாவது பாதுகாப்பு இல்லைன்னா அதுவா பாதுகாப்பு தராது, ஆனா இல்லைங்கறத உங்களுக்குச் சத்தம்போட்டுச் சொல்லும். இன்னும் கொஞ்சம் காசு கொடுத்து லைவ் ஒன் வாங்குன்னு விளம்பரிக்கும்.

தீயரண்-ல கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. முன்ன இருந்ததவுட நெறய விஷயத்தைச் சரியா, தனித்தனியா, கட்டுப்படுத்த முடியும். முக்கியமான விஷயம் விஸ்டா உங்கள அடிக்கடி பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) தரச்சொல்லி படுத்தும். உதாரணமாக நீங்க மொதலாளி (Admin) ஆக உள்ளே போயிருந்தாலும் புச்சா எதுனாச்சும் ஸாஃப்ட்வேர் சேர்க்கனும்னா அப்பப்ப க.சொ சொல்லிக்கிட்டே இருக்கனும். இது கொஞ்சம் பாதுகாப்பை அதிகரிக்கும். நெறைய கெட்ட சமாச்சாரம் (malware) எல்லாம் அட்மின் வேலைல இருக்கும்போதுதான் காரியத்தைச் செய்யும். (அதுக்கு எல்லா பவரும் வேணும்). ஆனா எதாவது முக்கியமா செய்யனும்னா பாஸ்வேர்டை திரும்ப அடிக்கனும்னு இருந்திச்சின்னா கெட்டசமாச்சாரத்துக்கு ஒன்னும் செல்லுபடியாவாதுதான. (இது எத்தனை நாளைக்கு ஒழுங்கா வேலைசெய்யும்னு தெரியல. கெ.ச கமுக்கமா குந்திகினு இருந்து நீங்க பாஸ்வேர்ட் அடிக்கறச்ச அதைப் படிச்சு வச்சுகிட்டு அப்பால அதைவச்சுகிட்டு தான் வேலையைக் காட்டறது சாத்தியம்தான்). இந்தமாரி அடிக்கடி பாஸ்வேர்ட் கேக்கறது லினக்ஸ்/யுனிக்ஸ் ஒலகத்துல ரொம்பநாளா இருக்கற பாதுகாப்பு. (sudo command). ஒன்னும் புச்சு இல்ல. இருந்தாலும் சுருக்கமா சொல்லனும்னா, விஸ்டா-ல கொஞ்சம் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்க. ஆனா, இதுல ஒன்னும் அப்படிப் புதுசா எதுவும் இருக்கிற மாதிரி தெரியல.

ரொம்ப நீளமா போய்ட்டதால, கொஞ்சம் ப்ரேக் உட்டு அப்புறம் எளுதுறேன்.

(இதே ரீதில போன நான் இந்த நீளத்துக்கு இன்னும் மூனு நாளு நாளுக்கு எளுதுவேன்னு தோணுது. இப்படி நீட்டி முழக்கி வெலாவரியா எளுதனுமா, பத்துவரிகளுக்கு மிகாமல் பதிலிறுக்கவுமான்னு சொல்லிப்புடுங்க, அடுத்த தபா எளுதறச்சே பெரயோசனமா இருக்கும்).

Thursday, February 01, 2007

புதையுண்ட எரிபொருள் பற்றி தெரிஞ்சிக்கலாமா?

பூமிக்குள்ள புதைஞ்சு கிடக்கும் எரி பொருள் கனிமங்கள், அதாவது ஆங்கிலத்தில அதை 'fossil fuel'ன்னு சொல்வாங்க! அதை பத்தி என்னா விவரமுன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்க தான் இந்த பதிவு!இந்த எரிபொருள்கள் கண்டுபிடிச்ச பின்ன தான் மனிதனோட வாழ்க்கையே மேம்பட்டுச்சு, எப்படின்னு கேட்கிறீங்களா, அதாவது என் எஸ் கலைவானர் அந்த காலத்திலே 'பட்டனை தட்டிவிட்டா இரண்டு இட்லி தட்டுல வந்திடணும்'னு படிச்ச பாட்டெல்லாம் எதுக்கு? நாம் இல்லானேலும் பரவாயில்லை நமக்கு பின்னாடி வரும் மனித குலம் வசதிகளோட அத்தனையும் அனுபவிச்சு வாழணும்னு அப்பவே எழுதி சொல்லி வச்ச ஞானத்துக்கு மூலமா இருந்தது இந்த எரி பொருள்கள் தான் சொன்ன உங்களுக்கு ஆச்சிரியமா இருக்கும்!

அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியிலே நீராவிக்கு பெரும் பங்கு இருந்தது, ஏன்னா அப்ப இந்த புதையுண்ட எரி பொருள்'ங்கிர சமாச்சாரம் அவ்வளவா கண்டுபிடிக்கல்ல. அதாவது அப்ப மனிதனிடம் இருந்த சக்திகள் விட அதிகமான சக்திகளை கொண்ட குதிரைகளை மனிதன் வழிப்பயணத்துக்கு பயன்படுத்தினான், அதுக்கு முன்னே 'நடராஜா சர்வீஸ்' தான். அப்படி தன்னை சுத்தியுள்ளவைகளிலிருந்து எவ்வளவு தனக்கு உபயோகமா பெறமுடியுமோ அத்தனையும் பெற்றான். ஆனா அப்ப சக்திசாலி மிருகங்கள் அவனுக்கு துணையா இருந்தது! அப்பறம் இயந்திர சக்திகளை பயன் படுத்த ஆரம்பிச்சப்ப நீராவி பெறும் துணையா இருந்தது! அப்பதான் மிருகங்கள் கிட்ட இருந்து கிடைக்கும் சக்தி இயந்திரங்களிலிருந்து பெற்றாலும் அவனுக்கு ஏற்கனவே பழகிய குதிரைகளின் சக்தி அளவு தெரிஞ்சதாலே, இயந்திர சக்திகளுக்கும் அவன் குதிரையின் சக்தி அளவை கொண்டே கணக்கிட்டான். அப்படி கணக்கிட்ட பழக்கம் இன்னைக்கும் நம்மகிட்ட இருந்து போகல்லை, ஆமா சின்னதா எலெக்ட்ரிக் மோட்டார் அளவா இருந்தாலும், இல்லை பெரிய காரோட சக்தியையும் இன்னைக்கும் அந்த குதிரை சக்தியாலே தான் அளவிடுகிறோம். ஆமா கால் எச்பி, இல்லை அரை எச்பி, ஒரு எச்பி, நூறு எச்பின்னு இப்பையும் கணக்கு சொல்லிக்கிட்டு இருக்கோம்! 'எச் பி' ங்கிறது ஆங்கிலத்திலே 'Horse Power' (HP) அதாவது ஒரு குதிரை சக்தி, எவ்வளவு வேகமா மணிக்கு இத்தனை மைல் ஓடும் பொழுது உண்டாகும் வேகம், அதன் அளவீடு! இதை புரிஞ்சிக்கனும்னா உங்களுக்கு கொஞ்சம் பொளதீகம் தெரிஞ்சிருக்கனும்! என்ன தான் இந்த விஞ்ஞான கோட்பாடுகளை கொண்டு வெவ்வேற அளவீடுகள் அதற்கப்பறம் வந்தாலும், இன்னும் குதிரை சக்தியை நம்ம விட்டபாடு இல்லை!


இந்த புதையுண்ட எரிபொருள், அதாவது, 'fossil ங்கிறது என்னான்னா, பூமிக்கடியிலே கிடைக்கும் நீரகக்கரியினை(Hydrocarbon) குறிப்பிடுவதே , அதாவது முக்கியமா நிலக்கரி (Coal), கச்சா எண்ணைய்(fuel oil) மற்றும் இயல்பு வாயு(Natural Gas) என அழைக்கப்படும் இந்த பூமியில் புதையுண்ட வளமங்களை தான் குறிப்புடுவது!இந்த வளமங்கள் பூமிக்கடியில் எப்படி தோன்றிச்சினா பல வருடங்களுக்கு முன்னால் செத்து மடிந்த பிராணிகள், அழிந்த காடுகள், மரங்கள் அனைத்தும் பூமியின் கீழே மட்கி மருகி இந்த கனிம வளங்களா இருக்குது! அது பூமியின் சில இடங்கள்ல சுலபமா சில அடிகளுக்குள்ள தோண்டுனாலே கிடைச்சிடும், சில இடங்கள்ல ரொம்ப ஆழமா தோண்டி எடுக்க வேண்டிருக்கும்! அப்படி சுலபமா சில அடிகள் தோண்டினாலே கிடைப்பது நமது வளைகுடா நாடுகள் பகுதியிலே, ஆனா சில ஆழ்கடல் குள்ளே தோண்டி எடுத்தால் தான் உண்டு! நம்ம நாட்டை பொறுத்தவரைக்கும் அப்படி நமது கரையை ஒட்டி இருக்கும் பம்பாய் பகுதிகளிலிருந்து கச்சா எண்ணைய் எடுக்கப்படுது! அந்த எண்ணை கிணறுகள் இருக்கும் பகுதிக்கு பேரு 'Bombay High'ன்னு! இதை ஏன் 'Bombay High'ன்னு சொல்றாங்கன்னா, மேற்கில்ல இருக்கும் அரபிக்கடலின் பகுதி பம்பாய் கடற்கரையிலேருந்து அப்படியே சரிவா ஒரு 25 கிமீ தூரத்துக்கு கடல் ஆழம் போய்கிட்டிருக்கும் அப்படி 25, 30 கிமீ தூரத்திற்கப்பறம் தான் ஆழ்கடல், அதாவது 175 மீ ஆழம் கொண்ட பகுதிகள் தான் அவை, அங்க தோண்டி எடுக்கப்பட்ட கிணறுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைய் நம் நாட்டின் தேவையை ஒரு 30 சதவீதம் தான் பூர்த்தி பண்ணுது, மீதி இன்னும் சில இடங்கள்லயும் அப்பறம் வெளி நாட்டிலேருந்தும் இறக்குமதி செய்றாங்க!

இப்படி தோண்டி எடுக்கப்படும் கனிமங்கள்ல முக்கியமா உங்களுக்கு நிலக்கரியை பத்தி தெரிஞ்சிருக்கும், அதை எரிச்சு, பெரிய நீர் உலைகள்ல கொதிக்க வைச்சு, அதிலிருந்து உண்டாகும் நீராவியின் சக்தி கொண்டு பெரிய ராட்சத சக்கரங்களை சுழற்றி அதோட இணைக்கப்பட்ட மின் உறபத்தி இயந்திரத்தை இயக்கி மின்சாரம் தயாரிக்கிறாங்க! ஆக நம்ம ஊட்டுக்கு, வெயில்ல சுத்திட்டு உஸ் புஸ்னு வீடு திரும்புனோன்ன வந்த வுடனே பட்டனை தட்டி மின்விசிறியை சுழல வைக்க தேவையான மின்சாரத்தை இப்படி தான் தயாரிக்கிறாங்க! இது நிலக்கரியால் இயங்கும் மின் நிலையங்கள், சில மின் நிலையங்கள் பூமியிலிருந்து எடுக்கபட்ட எண்ணையிலிருந்து சுத்திரிகப்பட்ட எரி எண்ணையை கொண்டு எரிச்சு அதே நீர் உலை, நீராவி, சுழலும் இயந்திரம் அப்படின்னு இன்னுரு வகையிலே மின்சாரம் தயாரிக்கிறது, அப்பறம் நான் மேலே சொன்ன இயல்பு வாயுக்கள்ல இருக்கும் எரிக்கும் சக்தியாலே சுழலும் இயந்திரத்தை சுத்த வச்சு மின்சாரம் தயாரிக்கிறது. ஆக இப்படி இந்த புதையுண்ட பொருளை கொண்டு தயாரிக்கும் மின்சாரமொரு வகைன்னா, அணுவை பிளந்து அதில் வரும் சக்தியிலே நீராவி உண்டு பண்ணி மின்சாரம் தயாரிக்கிறது இன்னொரு வகை! ஆக முதோ வகையில உண்டாகிற மின்சாரம் இந்த 'fossil fuel' கொண்டு உற்பத்தி பண்றது, அடுத்த வகை நான் சொன்ன அணு சக்தி மட்டுமில்லாம, காற்றாடி, சூரியஒளி, கடல் அலை அப்படின்னு மற்ற சக்திகளிலிருந்து உருவாக்கும் மின்சாராம், அதை ஆங்கிலத்திலே 'Non fossil fuel based' ன்னோ, இல்லை 'non Conventional energy resources'ன்னோ சொல்லுவாங்க!

ஆக இப்படி தோண்டி எடுக்கப்பட்ட எரிபொருள் கனிமங்களைத்தான், நம்முடய சக்தியின் தேவைகளுக்கு உபயோகபடுத்துகிறோம். அந்த சக்தி பல ரூபங்கள்ல நமக்கு உதவுது, அதிலே ஒன்னு தான் வாகன ஊர்திகளுக்கு தேவையான் ஒன்னு! நான் சொன்ன மாதிரி முதல்ல நிலக்கரியில நீராவியை கொதிக்க வச்சு நீராவி இயந்திரத்திலே ஓடின வண்டிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இப்ப எண்ணெய்னு சொல்லக்கூடிய டீசல் எரிபொருளை கொண்டு இப்ப ஓடுது! அப்படி கிடைக்கும் கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப்பட்டு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய், நாஃப்தா, அப்படின்னு எல்லா சுத்திகரிகப்பட்ட எண்ணெய்கள் பல விதமா உபயோகப்படுது, இதிலேருந்து தான் அப்புறம் பெட்ரோகெமிக்கல்ஸ்லருந்து பல மூலப்பொருட்களை எடுத்து, நம் வாழ்க்கையிலே அன்றாடம் உபயோகிக்கிற ப்ளாஸ்டிக் சாமான்கள், பாலியெஸ்டர் சட்டை துணிமணிகள்னு நிறைய பொருட்கள் உற்பத்தி ஆகிறது! ஆக இதுக்கு எல்லாம் மூலம் நான் சொன்ன அந்த புதையுண்ட எரி பொருள் தான், சரி அது எப்படி தோண்றிச்சுன்னு பார்த்துட்டு, அப்பறமா இந்த சக்தி யின் பல அவதாரங்களை பிறகு தொடர் பதிவுகளா எழுதலாம்!

நான் சொன்ன இந்த புதையுண்ட எரி பொருள்கள் தோன்றினது பல ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னே. அதாவது உலகம் துவங்கின காலகட்டங்களை பல நிலைகளா பிரிக்கிறாங்க, அதை பத்தியும் அப்பறமா இந்த விக்கி பசங்க கிட்ட கத்துக்கங்க! அதன் காலகட்டங்கள், அதாவது 'Time sacle' ல ஒன்னு தான் 'Paleozoic Era'(இதை தமிழ்ல எப்படி சொல்றதுன்னு விக்கியாச்சு, தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்!) அதாவது பூமி தோன்றின பிறகு ஒரு 38 கோடி யிலருந்து 26 கோடி வருஷங்களுக்கு இடைப்பட்ட காலங்கள்ல முளைச்ச மரஞ்செடிகள் மடிஞ்சி,(அப்போதைய காடுகள் படம் கொஞ்சம பாருங்க!) மக்கி கீழே விழுந்து, அப்ப சதுப்பு நிலங்களா இருந்தது பூமியின் முக்காவாசி பகுதி, அப்படி இருந்த பகுதிகள்ல வளர்ந்த சின்ன சின்ன தாவரங்கள் மடிஞ்சி மக்கி போயி ஒரு ஸ்பாஞ்சு மாதிரி மிதந்து, அதுக்கு மேலே பலநூறு ஆண்டுகளா, மண்ணு, களிமண்ணு, அப்பறம் கனிமபொருட்களால இருகி போயி கடைசியிலே பூமிக்கு அடியிலே போயி மேலே விழுந்த பாறை, மணல்,களிமண், கனிமம் அப்படின்னு இந்த பொருட்களின் அழுத்ததாலே அந்த ஸ்பாஞ்சு மாதிரி இருந்த அந்த மக்கின பொருள்ல இருந்து நீர் மேலே எடுத்துவரப்பட்டு அது அப்படியே இருகி நிலக்கரி பாறையாகவோ, இல்லை எண்ணை படிமங்களாகவோ உண்டாகி போச்சு, அதே மாதிரி இந்த எண்ணைய் தோன்றினதுக்கும் முக்காவாசி ஒரு கடல் தாவரத்தை சொல்றாங்க! அதுக்கு பேரு ஆங்கிலத்திலே 'Diatoms'னு ( தமிழ் பேரு தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்!)அதாவது இந்த தாவரம் பார்க்க நம்ம விந்தணுக்கள் போல இருக்கும், இதுவும் பல கோடி வருடங்களுக்கு முன்னே முளைச்ச ஒரு தாவரம், அதனுடய சிறப்பு என்னான்னா,கடலுக்குள்ள முளைச்ச இருந்த இந்த தாவரம் நீர் விழும் சூரிய கதிர்கள்ல இருந்து சக்தியை எல்லாம் சேமிச்சு வச்சுக்கிச்சாம். அப்பறம் அது செத்து மடிஞ்சி கடலின் கீழ்மட்டத்திலே விழுந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா மண்ணு, கல்லு, பாறைன்னு அதுமேல விழுந்து அப்படியே அடியிலே போய் அதுக்குள்ள இருந்த நீரை வெளியேத்திட்டு அது சேமிச்சு வச்ச சக்தியை உள்ளுக்குள்ளே வச்சிருந்து அப்பறம் அந்த எண்ணைய் படிமங்கள் ('sedimentation')ஆகி போய்டுச்சுன்னு சொல்றாங்க, அப்பறம் பூமியின் சுழற்சியிலே ஏற்பட்ட அழுத்தத்தாலே, அப்ப தண்ணியா இருந்த பகுதி நிலப்பரப்பாவும், நிலப்பரப்பா இருந்த பகுதி நீர் பரப்பாவும் ஆயிடுச்சு, அப்படி தான் இப்ப நிலத்தை தோண்டுனா எண்ணெய் கிடைக்குதுன்னு சொல்றாங்க! ஆக இந்த மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் ஒரு காலத்திலே கடல் பகுதி, இப்ப பாலைவனமா இருக்கு! அது மாதிரி வட அமெரிக்காவின் வடக்கு பகுதியா இருக்கும் இந்த ஆல்பர்ட்டா என்ற மகாணம் ஒரு காலத்திலே கடலுக்கு அடியிலே இருந்த ஒன்னு (அது தான் இங்க ஏகப்பட்ட எண்ணைய் மணல் வளம் இருக்கு, அந்த கதை அப்பறமா சொல்றேன்!)!

இப்ப புரிஞ்சிச்சா இந்த புதையுண்ட எரி பொருள் தோண்றின சங்கதி, ஆக இது கிடைக்கதேன்னு, கிணத்து தண்ணியை ஆத்து வெள்ளமா கொண்டு போக போகுதுன்னு நம்ம பாட்டுக்கு எடுத்து இரைச்சு உபயோக படுத்திக்கிட்டிருக்கோம், அதனாலே சொகுசா நம்ம வாழ்க்கை இப்ப போய்கிட்டிருக்கு, அப்படி வாழும் வாழ்க்கையால, அதாவது இந்த எரி பொருளை எரிச்சு சக்தியை நம்ம பிரயோகபடுத்திறதாலே வரும் விளைவா இந்த பூமியின் வெப்பம் அதிகமாச்சுன்னு கத்திக்கிட்டு, அதுக்கு மாத்து வழி என்னான்னு இப்ப யோசிச்சுக்கிட்டு இருக்கோம். ஆக இது தான் அந்த புதையுண்ட எரி பொருள் கதை, மேற்கொண்டு மற்ற (ஆதி பரா)சக்திகளை பற்றி அப்பறமா தெரிஞ்சிக்கலாம், இப்ப இவ்வளவு தான் பாடம்!