Sunday, December 24, 2006

காட்டுக்குள்ளே படம் பிடிப்பது எப்படி?

நம்ம ஷ்யாம் இருக்காரே (ஆமா, இப்போ எல்லாம் ஆளைக் காணறதே இல்லை, என்ன ஆச்சு?) அவரு ஒரு கேள்வி கேட்டாரு.

Animal Planet channel ல ஒரு விலங்கோட life cycle காட்டுராங்களே...அதுக்கு அங்க அங்க கேமரே ஃபிக்ஸ் பண்ணி வெச்சுருப்பாங்களா இல்ல யாராவது அதுங்கள பாலோ பண்ணி வீடியோ எடுப்பாங்களா...இல்ல ஹைடெக்கா சேட்டிலைட்ல இருந்து எடுப்பாங்களா...
இதுக்கு நம்ம வழக்கம் போல கூகிளாண்டவரை வணங்கி வரம் வாங்காம இது பத்தி தெரிஞ்ச ஒருத்தரைக் கேட்கலாமேன்னு நினைச்சோம். உடனே நியாபகத்துக்கு வந்தது நம்ம இயற்கைநேசிதான். சரிதான், அவருக்கு இந்த படம் பிடித்த அனுபவம் எல்லாம் இருக்குமே, அதையும் கலந்து எழுதித்தாங்களேன்னு சொல்லியாச்சு. அவரும் உடனே எழுதித் தந்ததுதான் இந்த பதிவு. நன்றி நேசி.

இனி இயற்கைநேசி

இன்றைய தினத்தில் ஒரு காமிரா என்ற டப்பாவை வாங்கி விட்டால் யாவரும் ஒரு புகைப்பட நிபுணரானதாக நினைத்துக் கொண்டு, கேள்வி கேப்பார் இல்லாமல், படம் எடுக்கப் படும் நபரின் அனுமதியின்றியே ஏதோ கையில் ஒரு லைசன்ஸ் வாங்கிவிட்டதைப் போன்ற பிரமையுடன் நடந்து கொள்ள நினைக்கிறோம்.

அத்து மீறி, சில சமயங்களில் வன விலங்குகளின் பழக்க வழக்கம் பற்றி அறியாமலேயே, ஆபத்தான முறையில் மிக அருகமையில் நெருங்கி தன் உயிருக்கே கூட பங்கம் விளைவித்துக் கொண்ட நிகழ்ச்சிகளும் உண்டு.

அது அப்படியாக இருக்க, உண்மையிலேயே இந்த வனத்தினுள் உள்ள மிருகங்களைப் பற்றி அசையும் (moving) அசையா (still) படங்கள் எவ்வாறு எடுக்கப் படுகிறது, என்ற கேள்வி நம்மிடையே எழலாம். இயற்கை சார்ந்த புகைப்பட நிபுணர் ஆக வேண்டுமா, வேண்டியது எல்லாம் பொறுமை, அதீத பொறுமை, மேலும் பொறுமை.

ஏனெனில், ஒரு பத்து மணி நேர அமர்வில் கடைசி 5 நிமிடங்கள் உங்களுக்கு புகைப்படம் எடுக்கக் கூடிய வாய்ப்பு அமையலாம், அதுவும் அமைந்தாலும் அமையலாம். அப்படியெனில், நான் என்ன சொல்ல வருகிறேன், என்பது உங்கள் அனைவருக்கும் புலப்படுமென்று நினைக்கிறேன். அதற்கு ஒரு சிறு உதாரணம் கொண்டு பார்க்கலாம், சருகு மான் (Mouse Deer) என்ற ஒரு வகை மான் மழைக் காடுகளில் வசிக்கிறது, அது வீழ்ந்து கிடக்கும் அல்லது பட்டுப் போயோ, அல்லது உயிருடனோ நிற்கும் மரப் பொந்துகளில் வசிக்கிறது.

அவ்வளவு எளிதாக அதன் வசிப்பிடத்தை கண்டுபிடித்து விட முடியாது. சரி, ஓர் இடத்தில் அந்த மான் வசிப்பதை தெரிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம். எப்படி நல்ல வெளிச்சத்தில் ஒரு படமேனும் அந்த மானை எடுப்பது. அதில் நிறைய பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியது வரும். எப்படியெனில், மழைக்காடுகளில் ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்ந்த கிளைகளுடன் (canopy) சூரிய வெளிச்சமே நிலத்தில் படாத வண்ணம் அடைத்துக் கொண்டு நிற்கும்.

அப்படியே சிறிது வெளிச்சம் தரையில் விழப்போனாலும் அந்த மரங்களுக்கு இரண்டாவது நிலையில் நிற்கும் சிறு மரங்களும், பற்றி வளரும் செடி கொடிகளும் (Lianas, Rattans etc.,) இன்னும் வெளிச்சத்தை மறைத்து, பார்க்கப்படும் விலங்கிற்கும், பார்ப்பவருக்குமிடையே பெரும் இன்னல்களை விளைவிக்கும். இதனாலேயே, மழைக்காடுகளில் படம் எடுப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்ததைப் போன்றது.

இதனால் அதி நவீன தொழிற் நுட்பங்களை கொண்ட காமிராவாக இருந்தாலும் சரி, திறமையான புகைப் பட நிபுணராக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் படம் எடுப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்து வருகிறது, இன்றும்.

இந்த சூழ்நிலையில் தான் யோசித்து, யோசித்து காசு இருக்கும் நாட்டில் முதல் முதலில் இது போன்ற ரகசிய வாழ்கை நடத்தும் பூனை இனங்களை (இதில் புனுகுப் பூனை, சிறு வகை காட்டுப் பூனைகள் மற்றும் மழைக்காடுகளிள் வசிக்கும் புலிகள், சிறுத்தைகள்) படம் மெடுப்பதற்கென காமிர பொறி (Camera Trap) வைத்து படமெடுப்பது என்ற அணுகுமுறையை கொணர்ந்தார்கள்.இதில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றியும் கொணரப் பட்டது. எப்படியா, இப்பொழுது நம்மூர் காடுகளில் ரொம்ப அரிதாகவே அறியப் பட்ட மீன் பிடிக்கிற பூனை (Fishing Cat) மற்றும் சிறுத்தைப் பூனை (Leopard Cat) இவங்க ரெண்டு பேரும் ரொம்ப அரிதான அரிது ஒரு முறையேனும் இதன் வாழ்விடத்தில் வைத்து காட்டிற்குள் பார்க்கிறது. ஏன்னா, ஒண்ணு இதுகள் அந்தி மயங்கி இரவு நேரங்களில் மட்டுமே தனது ஆட்டையை தொடங்குகிறது, இரண்டாவது ரொம்ப ரகசியமா நடந்து திரியற ஜீவராசிகள்.

அது அப்படியாக இருக்கும் பொழுது எப்படி இவைகளை படம் எடுக்கிறது. அங்குதான் வந்தது இந்த காமிர பொறி அணுகு முறை. நாங்களும் முயற்சித்துப் பார்த்தோம் ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்தது.

கொஞ்சம் எப்படி செய்தோம் என்று பார்த்து விட்டு, பிறகு பி.பி.சி மக்கள் எங்கள் பக்கமா சிங்கவால் குரங்குகளின் (Lion Tailed Macaque) வாழ்வைப் பற்றி படம் எடுக்க வந்தப்ப என்னன்ன சிக்கல்களை அவர்களும் நாங்களும் சந்தித்தோம் என்பதனையும் கூறி இப்படி கஷ்டப்பட்டு அசையும், அசையாப் படங்கள் எடுப்பதால் என்ன பயன் என்பதனையும் கூறுகிறேன்.

நாங்க வரகலியார் என்ற யானை முகாமருகில் இருக்கும் சோலை ஒன்றில், இந்த காமிர பொறியை பயன் படுத்திப் பார்த்தோம். முதலில் ஒரு வாரமா காட்டிற்குள் அழைந்து நீர் நிலை இருக்கிற மாதிரியும், பூனைகளின் புலுக்கை (scat droppings) தண்ணீரின் குறுக்கே ஓடும் வேர்களின் மீது ஏதாவது கிடக்கிறதா, அல்லது நிற்கும் இடத்தை சுற்றியும் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று துப்பறியும் வேலையை எல்லாம் நடத்தினோம்.

பிறகு சரியான இடமா பார்த்து, ஒரு காமிரவை தனிந்து வளைந்து வளர்ந்திருக்கிற ஒரு கொடியின் கிளையில் அந்த ஏரியாவை கவர் செய்து போல கட்டி வைத்தோம். இதற்கு முன்பே, அட நாங்கள் பயன் படுத்திய அணுகு முறையைத்தான் இங்கு சொல்லிக் கிட்டு இருக்கிறேன், சரியா. இந்த காத்து ஊதி தலையனை (Air Pillow) செய்வோமே, அத ஒண்ணு வாங்கி முனையை மட்டும் திறந்து அதுக்குள்ள சில சித்து வேலை ஒயரிங்க் வேலை எல்லாம் செஞ்சு காமிரவுடன் கொண்டு வந்து இணைத்து விட்டோம்.இப்ப அந்த பொறியின் அமைப்பை வெளியில் தெரியா வண்ணம் கொஞ்சம் சருகு மண்ணு எல்லாம் அது மேல போட்டு, ஓயரிங்க மண்ணுக்குள் வைத்து மறைச்சுட்டு, கொஞ்சம் கருவாட அங்கும் இங்குமா தூக்கிப் போட்டு நம்ம பொறிகிட்ட மட்டும் கொஞ்சம் ரெண்டு மூணு அதிகமாகவே.

இத்தனைக்கும் அதுக வாசம் பிடிக்கிறதில பலே ஆட்கள், அவனுங்க வந்திட்டு போற இடத்தில நாம வந்திட்டு போயிறுக்கிற சுவடு தெரிஞ்சா அந்த பக்கமே கொஞ்ச நாட்களுக்கு தலை வைச்சுப் படுக்க மாட்டாய்ங்க. அதனையும் பார்க்கணும், நல்ல குளிச்சுட்டு, செண்டு கிண்டு எல்லாம் போட்டுகிட்டு பொண்ணுகளை கவர்வது அப்படிங்கிற கணக்க போன ஒரு எறும்பு கூட கண்ணில தட்டுப் படாது.

சரி, நம்ம கதைக்குப் போவோம். காமிர தனியங்கி. அதுவா, எது அந்த ஓயரிங்கால் இணைக்கப்பட்ட தலையனை மீது ஏதாவது ஏறியோ அல்லது தொடப்பட்டாலோ காமிர உயிர் பெற்று படக்கென்று படத்தை எடுத்து விடும். ஆனா, பாருங்க நாங்க கொண்டு போய் கட்டி வைச்ச அன்னிக்கு நல்ல மழை. மறுநாள் திரும்பப் போய், வேற ஒண்ணை விட்டுட்டு வர வேண்டியதாப் போச்சு.அடிக்கடிப் போய் பார்க்காம ஒரு வாரம் கழிச்சு போயி எடுத்திட்டு வந்தோம். ரெண்டு மூணு நல்ல படம் கிடைச்சுருந்தது. கீரிப் பிள்ளைகள், அப்புறம் ஒரு பறவை இந்தியன் பிட்டா எனும் ஒன்று.

ஆனால், இந்த காமிர பொறியினால் சில அரிய புகைப்படங்களும் கிடைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மழைக்காடுகளில் வசிக்கும் புலிகளின் கணக்கெடுப்பிற்கும், தனிப்பட்ட முறையில் அவைகளின் உடம்பிலும், முகத்திலும் உள்ள புள்ளிகள் மற்றும் வரிகளின் அமைப்பைக் கொண்டு கண்டறிய முடிகிறது.

இப்பொழுது ரோடியே சமிக்கைகளை அனுப்பும் கருவிப் பட்டைகளை கழுத்தில் கட்டி அதன் வாழ்வியலைப் பற்றிய ஆராய்ச்சி நடத்து கிறார்கள். அது போல அதன் குறிப்பிட்ட வசிப்பிடம் அறியப் படும் பொழுது, முழு நீள அசையும் படம் எடுப்பது சாத்தியமாகி விடுகிறது. இருந்தாலும், மழைக்காடுகள் எப்பொழுதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்து வருகிறது.

அதற்கு ஒரு உதாரணம், நாங்கள் வால்பாறையில் இருந்த சமயத்தில் பி.பி.சியிலிருந்து ஒரு குறு நீள படம் சிங்கவால் குரங்குகளின் மேல் எடுத்தார்கள். அதற்கு ஆறு மாதத்திற்கு முன்பாகவே இடம் தேர்வு செய்யப் பட்டு, எளிதாக நல்ல முறையில் அதன் முழுச் சமுதாயமும் எவ்வாறு வாழ்கிறது என்பதற்கிணங்க, கொஞ்சம் சிறிய வனத்தில் மக்களுடன் பழக்கப் பட்டு போன ஒரு குரூப்பின் மீது படப்பிடிப்பை நடத்திவிட்டு, பிறகு அடர்ந்த அதன் உண்மையான வாழ்விடத்தை காமிக்கும் எண்ணத்தில் வால்பாறையில் அமைந்துள்ள அக்காமலை (Akkamalai) எனும் வனத்தினுள் படப்பிடிப்பு நடத்தப் பட்டது.

ஏனெனில், அக்காமலை காடுகளில் வாழும் அக் குரங்குகளை படம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதில் நிறைய நாட்கள், கொட்டும் மழையிலும், கடிக்கும் அட்டைகளுக்கு கிடையிலும் அழைந்து திரிந்தது ஓர் மறக்க முடியாத அனுபவமே.

முடிவாக, வன விலங்குகளைப் பற்றி படம் எடுப்பதில் நிறைய பொறுமையும், அதன் பழக்க வழக்கங்களைப் பற்றிய புரிந்துணர்வும், அதற்கெல்லாம் மேலாக அவைகளின் பிரத்தியோகத் தன்மைக்கும் மதிப்பளித்து இடைஞ்சல் கொடுக்காத விதத்தில் நடந்து கொண்டு புகைப்படம் எடுப்பது ஒரு சிறந்த நிபுணருக்கான அடையாளங்கள்.

படம் எடுக்கப்படும் விதம் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமாக தினந்தோரும் வளர முயற்சித்துக் கொண்டுதான் வருகிறார்கள். எனவே, விலங்குகள் வாழும் குகைகள், பொந்துகள் போன்ற இடங்களில் இன்று வளர்ந்துள்ள தொழிற் நுட்பத்தில் பாட்டரிகளின் உழைப்புத்தன்மை, மறைத்து வைக்கக் கூடிய அளவில் ஒரு பட்டாணி அளவே உள்ள காமிரக் கண்கள் என மிக வேகமாக வளர்ந்து போனதால், இது போன்ற ரகசிய வாழ்கை வாழும் மிருக ராசியாக இருந்தாலும் இன்று அதன் வாழ்வினை உற்று நோக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டியிருக்கிறது என்றே கூறலாம்.

Sunday, December 17, 2006

RTP என்றால் என்ன?

ஆஹா தமிழ்மணத்துல கர்நாடக சங்கீதம் பற்றி இவ்வளவு பேச்சு இருக்கே, நாம மட்டும் இதைப் பற்றி பேசாம இருக்கோமே அப்படின்னு கை அரிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல நம்ம வ.வா.ச. பசங்க நல்லத்தனமா ஒரு கேள்வியைக் கேட்டாங்க. இதுதான் சான்ஸ் அப்படின்னு சொல்லி போட்டாச்சு இந்த பதிவு. ஒரு பெரிய பதிவாப் போட்டு 50 பின்னூட்டம் வாங்கின அவங்க கேள்வி இதுதான் - இராகம் தானம் பல்லவி என்றால் என்ன? (பசங்களா, அது ராகம் தானம் பல்லவி, நீங்க கேட்ட மாதிரி ராகம் தாளம் பல்லவி இல்லை, புரியுதா?)

தெலுங்குல ரா அப்படின்னா ஆங்கிலத்தில் கம்.அதனால ராகம் அப்படின்னா வா வான்னு கூப்பிடறது, தானம் அப்படின்னா தேர்தலுக்கு முன்னாடி ஒரு வேண்டுதல் வெச்சு ஜெயிச்ச பின்னாடி அடுத்தவங்க காசுல இலவசமா பொருட்களை குடுக்கறது, பல்லவின்னா குரங்கு எல்லாம் வளர்த்தாங்களே அந்த அக்கா அப்படின்னு வெவகாரமா எழுத தயாரா இருந்த பெனாத்தலாரை 'அடங்குடா மவனே' அப்படின்னு அடக்கிட்டுத்தான் இந்த பதிவு வருது. என்னை வெச்சு அந்த சங்க பசங்க காமெடி எதாவது பண்ணினாங்க அப்புறம் அவரை ரிலீஸ் பண்ணிடுவேன். ஜாக்கிரதை. சரி, இனி மேட்டர்.

அறிமுகம்

இராகம், தானம், பல்லவி (கொஞ்சம் விஷயம் தெரிஞ்சா மாதிரி காட்டிக்கணமுன்னா RTP) என்பது கர்நாடக சங்கீதத்துல பாடுற பல முறைகளில் ஒண்ணு. பொதுவா கச்சேரிகளின் இரண்டாம் பாதியில் பாடப்படும் ஒரு விஷயம் இது. அந்த சமயத்தில்தான் பாடகரின் குரல் உச்சத்தில் இருக்கும். அத்தோடு ரசிகர்களோடு ஒரு நல்ல கனெக்ஷனும் இருக்கும். பல மணி நேரங்கள் கூட பாடக்கூடிய அளவு பாடகருக்கு சந்தர்ப்பம் தரக்கூடிய ஐட்டம் இது. இன்று பெரும்பாலும் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் வரை கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுகிறார்கள். பெயருக்கு ஏற்ப ராகம், தானம், பல்லவி என மூன்று பகுதிகளாகப் பாடப் படுகிறது.

ராகம்

கர்நாடக சங்கீதத்தில் ஒவ்வொரு பாடலும் ஒரு ராகத்தில் பாடப்படுவது தெரிந்ததே. ஒரு பாடலின் வரிகளைப் பாடுமுன் அந்த ராகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு, அதன் ஸ்வரங்களைக் கொண்டு அந்த ராகத்தின் கட்டமைப்பையும் அழகையும் வெளிக் கொணர்வதுதான் ராகம் பாடுவது எனப்படும். ஸ்வரங்களை விடுத்து ஆ,நா, என்றெல்லாமும் பாடப்படுவதும் உண்டு. ஒரு ராகத்தின் அழகை பாடகர் தன் பாணியில் பாடிக் காட்டும் பொழுது அவரின் கற்பனாசக்தி தெரிய வரும். எடுத்துக் கொண்ட ராகத்தை பல்வேறு வேகங்களில் பாடுவார்கள். பாடகர் ராகம் பாடி முடித்ததும் பக்கவாத்தியமான வயலினில் வயலின் வாசிப்பவர் அவரது கற்பனைப்படி ராக ஆலாபனை செய்வார். இது போன்று பாடகரும் வயலினிஸ்டும் பல முறை மாறி மாறி ராக ஆலாபனை செய்வார்கள். ராக ஆலாபனையின் பொழுது தாள வாத்தியங்களான மிருதங்கம், கஞ்சிரா போன்றவை உடன் இசைக்கப் படுவது இல்லை.

தானம்

ராகம் பாடிய பின் அடுத்த கட்டம் தானம் பாடிவது. தானத்தின் போதும் தாளக் கருவிகள் இசைக்கப் படுவதில்லை என்றாலும் முன்பு பாடிய ராகத்தின் தாள லயங்கள் நன்றாக வெளிவரும்படி பாடும் முறை இது. பொதுவாக 'அனந்தம்' என்ற சொல்லாடலை எடுத்துக் கொண்டு பாடுவார்கள். அந்தம் என்றால் முடிவு, அனந்தம் என்றால் முடிவில்லாமல் எனப் பொருள். அனந்தந்தந்தந்த என முடிவில்லாமல் ஒரு ராகத்தைப் பாட முடியும் என உணர்த்தவே இது. ராக ஆலாபனை போன்று பாடகர் பாடி முடித்த பின் வயலினிஸ்ட் இசைப்பார். பொதுவாக இடைப்பட்ட வேகத்தில் (வி.தெ.மா.கா. - மத்திம காலம்) தானம் பாடுவார்கள்.

பல்லவி

ராகம் தானம் பாடி முடித்தவுடன் வருவது பல்லவி. பல்லவியில்தான் புனையப்பட்ட வரிகளைப் (வி.தெ.மா.கா - சாஹித்யம்) பாடுவார்கள். இவ்வரிகள் பொதுவாக பல்லவி பாடுவதற்கென்றே இயற்றப் பட்ட வரிகளாக இருக்கும். பல்லவி என்பதே 'ப' - பதம் (பாடல்), ல - லயம் (தாளம்), வி - வின்யாசம் (வேறுபாடுகள்) என்பதன் ஆக்கம் என்றே கூறுவர். அதாவது தாளலயத்தோடு ஒரு பாடலை பல்வேறு விதங்களில் பாடுவது என்று பொருள். இப்படிப் பாடும் பொழுது எடுத்துக் கொண்ட ராகத்தில் மட்டுமல்லாது வேறு பல ராகங்களிலும் அதே வரிகளை ராகமாலிகையாகப் பாடுவார்கள். பல ராகங்களில் பாடுவது போல் பல தாளங்களிலும் பாடுவதுண்டு. இதை தாளமாலிகா என்பார்கள். இதன் முடிவில் தாள வாத்தியக்காரர்கள் அவர்களது திறமையைக் காண்பிக்கும் வண்ணம் அவர்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள். இதற்குத் தனியாவர்த்தனம் எனப் பெயர்.

மொத்தத்தில் ராகம், தானம், பல்லவி பாடுவது என்பது பாடகரின் ஞானத்தையும் அவரது கற்பனா சக்தியின் பிரதிபலிப்பாக விளங்குகிறது என்றால் மிகையாகாது. இது ஒரு அறிமுகம்தான். சிமுலேஷன், திரச போன்றோர் மேலதிக தகவல்கள் தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

சாம்பிளுக்கு ஜேசுதாஸ் அவர்கள் பாடிய, தோடி ராகத்தில் அமைந்த 'கலைவாணியே கருணை புரிவாயே' என்ற ராகம் தானம் பல்லவி.

Monday, December 11, 2006

யூனிகோடு தமிழுக்கு வேணுமா கோடு?

வெளியூருக்கு கலப்பை இல்லாமல் செல்லும் விவசாயிகளே! வெவ்வேறு இடங்களுக்கு ஒருங்குறி (Unicode) தமிழுக்கு மாற்றும் செயலிகளைத் தேடி அலையாதீர்.

சில பதிவுகளில் இரு பெட்டிகள் கீழே தமிழ் மேலே ஆங்கிலம் என்று பார்த்திருப்பீர்கள் - உங்கள் வலைத்தளத்திலேயே இதை நிறுவ முடியும், கீழ்க்காணும் எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள், மொழி மாற்றியை நிறுவுங்கள், இன்புற்று இருங்கள்.

விக்கிப்பசங்க தொல்லையின் பேரில் இந்தப்பதிவையும், தரவிரக்க கோப்பையும் தந்து உதவிய வசந்தனுக்கு எங்கள் நன்றி.


இனி - வசந்தன்

தமிழில் ஒருங்குறிக்கு மாற்றிப் பின்னூட்டமிடுவதற்கான வசதியை தமிழ்வலைப்பதிவர்கள் பலர் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே இவ்வசதியை தமிழ்வலைப்பதிவர்கள் பலர் பயன்படுத்திவருகிறார்கள். ஒன்றுக்கொன்று வித்தியாசமான பல பின்னூட்டச் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சில செயலிகள்

-குறைந்தபட்சம் இரண்டு செயலிகள் அனைவரின் பாவனைக்குமென்று பகிரங்கமாக வெளியிடப்பட்டன. சிலர் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
சுரதா அண்ணா இப்படியான பின்னூட்டச் செயலியொன்றின் மீயுரை நிரலை வெளியிட்டார்

. அதுபோல் தமிழ்வாணன் என்ற சக வலைப்பதிவரும் இப்படியொரு பின்னூட்டச் செயலியொன்றின் மீயுரை நிரலை வெளியிட்டார்.
இவர்கள் வெளியிட்ட செயலி திருப்தி தராமல்தான் நான் பாவிக்கும் செயலி வேண்டுமென்று கேட்கிறார்களா? அல்லது அப்படி வெளியிடப்பட்டதே தெரியாமல் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

வசந்தன் ஆகிய நான் பாவிக்கும் செயலி சுரதாவினாலும் கிருபா சங்கரினாலும் உருவாக்கப்பட்டது
___________

பின்னூட்டச் செயலியின் வரலாறு பற்றி யாராவது எழுதினால் சுவாரசியமாக இருக்கும். தமிழ்வலைப்பதிவுலகத்தின் வரலாற்றில் அதுவும் ஓரங்கமே.
இரண்டு வருடங்களின் முன் நான் வலைப்பதிய வந்தபோது பத்ரியின் வலைப்பதிவில் இப்படியான எழுத்துருமாற்றிப் பின்னூட்டப்பெட்டி இருந்தது. அதைப் பொருத்தும் ஆசையும் வந்துவிட்டது. அவ்வலைப்பதிவின் மீயுரையைப் பார்த்து அதில் பின்னூட்டப் பெட்டிக்குரியதென்று நான் கருதிய அனைத்தையும் படியெடுத்துக்கொண்டேன். பின் என் வலைப்பதிவின் வார்ப்புருவில் அதைச் செருகும் முயற்சியில் இடங்கள் மாற்றிமாற்றிச் செருகி ஒருவாறு சரியான இடத்திற்பொருத்திவிட்டேன். என் வலைப்பதிவில் அழகாக பின்னூட்டப்பெட்டி காட்சியளித்ததோடு பெட்டியில் எழுத்துருவையும் சரியாக மாற்றிக் காண்பித்தது. மிக்க மகிழ்ச்சி.


சோதனை முயற்சியாக பின்னூட்டமொன்றை இட்டுப் பார்த்தேன். அது என் பதவில் வரவில்லை. மீண்டும் இன்னொரு பின்னூட்டம். அதுவும் வரவில்லை. சீ... என்றானது. பிறகு ஒரு பொறிதட்ட, பத்ரியின் குறிப்பிட்ட பதிவுக்குச் (நான் மீயுரை களவெடுத்த பதிவு) சென்று பார்த்தால், சோதனைக்காக நான் என்பதிவில் இட்ட பின்னூட்டங்கள் அங்குச் சிரித்துக்கொண்டிருந்தன. குறிப்பிட்ட புளொக்கர் ஐடி, பதிவு எண் என்பவற்றோடு சேர்த்தே என்னால் மீயுரை பெறப்பட்டிருந்தது. நான் போய்க்கொண்டிருக்கும் வழி தவறென்று புரிந்தது.


இது வேலைக்காகாது என்று விளங்கிக்கொண்டேன். அப்போது நான் வலைப்பதிவுலகத்துக்குப் புதியவன். நாலைந்து பதிவுகள்தாம் இட்டிருந்தேன். இந்தப் பின்னூட்டப்பெட்டி உதவியைக் கேட்டால் தருவார்களா என்ற ஐயத்தில் பேசாமல் இருந்துவிட்டேன். வலைப்பதிவில் இவ்வளவுக்கு சகோதரத்துடன், நட்புடன் பழகுவார்கள் என்பதெல்லாம் அப்போது நான் யோசித்ததில்லை. இந்த உதவியைச் செய்ய முன்வந்தாலும் கட்டணம் அறவிடுவார்கள் என்றுகூட நினைத்திருந்தேன்.

பின் வலைப்பதிவுகளில் நடந்த சுவாரசிய உரையாடல்கள், கலாயத்தல்கள், அறுவைகள் என்பன பிடிபட்டபின் துணிச்சல் வந்தது. (பின்னூட்ட மட்டுறுத்தல் நடைமுறைக்கு வருமுன் பதிவுகளிலும் பின்னூட்டத் தொடரிலும் ஓர் உயிர்ப்போட்டம் இருந்தது உண்மை.)


பிறகு கிருபா சங்கரிடம் தனிமடல் போட்டு தேவையானதைப் பெற்றுக்கொண்டேன். நண்பர் ஒருவரின் உதவியோடு அமைப்பில் சின்ன மாற்றங்கள் செய்து பெட்டி தயாரித்து வலைப்பதிவில் இட்டேன்.

முன்பு எழுத்துரு மாற்றும் முறைக்கான இரு தெரிவுகளும் வெறுமையாகவே இருந்தன. அதிலொன்றையும் தெரிவு செய்யாமல் பின்னூட்டமிடுவோரின் பின்னூட்டங்கள் "Undefine" என்று மட்டும் வந்தன.பின் இதை நிவர்த்தி செய்யும் வகையில் பாமினி எழுத்துரு முறையை நியமத் தெரிவாக்கினேன்

இதுதான் என் வலைப்பதிவில் பின்னூட்டப்பெட்டி பிறந்தகதை. பிறகு சில பதிவாளர்கள் இவ்வசதிக்குரிய மீயுரையைப் பெற்றுத் தங்கள் வலைப்பதிவுகளில் நிறுவிக்கொண்டார்கள்.


இந்த வடிவம் மட்டுமன்றி வேறும் பல வடிவங்களில் பலர் பின்னூட்டப் பெட்டிகள் வைத்துள்ளார்கள் . மழை ஷ்ரேயா, சாத்தான்குளத்தான், கிருபா சங்கர் போன்றோர் வித்தியாசமான வடிவங்களை வைத்துள்ளார்கள்.
இந்தப் பின்னூட்ட எழுத்துருமாற்றிச் செயலிக்குரிய அனைத்து நன்றியும் சுரதாவையும் கிருபாசங்கரையுமே சாரும் .
______________________________________________________

சரி . இனி இப்பின்னூட்டப் பெட்டி செயற்படும் முறைபற்றிய சிறு விளக்கம்.
இது 'அனாமதேயப் பின்னூட்டங்களை அனுமதிக்கும்" வலைப்பதிவுகளில் மட்டும்தான் செயற்படும். புளொக்கர் கணக்குள்ளவர்கள் மட்டும் பின்னூட்டமிடும் வசதியைக் கொண்ட வலைப்பதிவுகளில் இச்செயலி செயற்படாது. செயலியில் இருபெட்டிகள் காணப்படும். அவற்றுக்கு மேல இரு தெரிவுப் பொத்தான்கள் காணப்படும். 'பாமினி' எழுத்துரு முறை நியமத் தெரிவாக்கப்பட்டிருக்கும். எழுதுபவர் விரும்பினால் ஆங்கில உச்சரிப்பு முறைக்கு மாற்றலாம்.


மேலுள்ள பெட்டியில் உங்கள் தெரிவுக்குரிய எழுத்துருவில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்.
ஆங்கிலமும் தமிழும் கலந்து ஒரேதடவையில் உங்களால் எழுத்துருவை மாற்றி எழுத முடியாது.


முதலில் தமிழில் அனைத்தையும் எழுதி முடித்தபின், கீழுள்ள பெட்டியில் (ஒருங்குறிக்கு மாற்றப்பட்ட எழுத்துக்கள் இருக்கும் பெட்டி) தேவையான இடத்தில் ஆங்கிலத்தில் நேரடியாகத் தட்டச்சலாம். அல்லது தமிழில் தட்டியதை ஒரு Notepad or Wordpad இல் ஒட்டிவிட்டு அக்கோப்பில் வைத்து தேவையான இடங்களில் அங்கிலத்தை எழுதி முழுமையாக்கலாம்.


நீங்கள் பின்னூட்டப்பெட்டியில் தட்டச்சி முடித்தபின் அதற்குக் கீழ் 'பெயர்' என்றிருக்கும் சிறிய பெட்டியில் உங்கள் பெயரை எழுதவும். இப்பெட்டியில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம். தமிழில் பெயரெழுத விருப்பமென்றால் பின்னூட்டதுடன் சேர்த்து உங்கள் பெயரையும் எழுதி ஒருங்குறிக்கு மாற்றியபின் தமிழிலுள்ள உங்கள் பெயரை வெட்டியெடுத்து பெயர்ப்பெட்டியில் ஒட்டலாம்.

இவையனைத்தும் முடிந்தபின் "கருத்தைப் பதிவு செய்யவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

அதை அழுத்தியதும் புளொக்கரின் பின்னூட்டமிடும் பக்கம் திறந்து அதில் பின்னூட்டப்பெட்டி வெறுமையாக இருக்கும். ஆனால் உங்கள் பின்னூட்டம் பதியப்பட்டுவிடும். மட்டுறுத்தல் செய்யப்பட்ட வலைப்பதிவாயின் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கும்.

இங்குத்தான் பலர் தேவையற்ற வேலையொன்றைப் பார்க்கிறார்கள்
. அதாவது தங்கள் பின்னூட்டம் பதியப்படவில்லையென்று நினைத்து மீண்டுமொருமுறை அதே பின்னூட்டத்தை புளொக்கரின் பின்னூட்டப் பெட்டியிலும் ஒட்டுவார்கள்.

என் வலைப்பதிவுக்கு இந்த வசதி பாவிப்போரிடமிருந்து பெரும்பாலும் இரண்டிரண்டு பின்னூட்டங்கள் வந்துகொண்டிருந்தன.
வடுவூர் குமாருக்கு இச்செயலியைக் கொடுத்தபோதும் அவருக்கும் இதே குழப்பம் இருந்தது எனக்குத் தெரியவந்தது.


ஆகவே மக்களே , இச்செயலி பாவிக்கும்போது ஒருமுறை நீங்கள் சரியாகப் பின்னூட்டமிட்டால் சரி. புளொக்கரின் பின்னூட்டப்பெட்டியில் இரண்டாம் முறையாகப் பின்னூட்டமிடத் தேவையில்லை.
_____________________________________________________

சரி . இனி மீயுரையைப் பொருத்துவதைப் பற்றிப் பார்ப்போம்.


மீயுரை முழுவதையும் படியெடுத்துக் கொள்ளுங்கள். அதற்குமுன் மீயுரையில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரிகின்றனவா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியாத பட்சத்தில் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.

உங்கள் வலைப்பதிவின் வார்ப்புருப் பக்கத்துக்குச் செல்லவும். அங்கு உங்கள் வார்ப்புருவுக்குரிய மீயுரைகளைக்(HTML) காணலாம். அதில் '< ! -- end . post -- >' என்ற வரியைத் தேடிக்கண்டுபியுங்கள். அவ்வரிக்குமேலே கோப்பிலுள்ள அனைத்து மீயுரைகளையும் படியெடுத்து ஒட்டிவிடுங்கள் அவ்வளவுதான் வேறொன்றும் செய்யத்தேவையில்லை.

பின் சேமித்து Publish செய்தால் சரி.

நான் சொல்லியுள்ள முறைப்படி செய்தால் பின்னூட்டங்களுக்கும் பதிவுக்கும் இடையில் பின்னூட்டப் பெட்டி தோன்றும்

உங்களுக்குப் பிடித்தபடி பின்னூட்டப்பெட்டியின் அமைவிடத்தை மாற்ற வேண்டுமாயின் மீயுரையை அதற்கேற்றபடி இடம்மாற்றி ஒட்ட வேண்டும். பொதுவாக பின்னூட்டங்களின் முடிவில் இச்செயலியிருந்தால் நன்று என நினைப்போருண்டு.

பெட்டிகளின் அளவுகளை மாற்றவேண்டியிருந்தாலும் நீங்களே முயற்சிக்கலாம். அதைவிட நிறங்கள், கோடுகள் என்று சில மாற்றங்களை உங்கள் விருப்பம்போல் முயன்று பார்க்கவும்.

*** இந்தச் செயலியை நிறுவ முன்பு நீங்கள் உங்கள் வார்ப்புருவுக்குரிய மீயுரையைப் படியெடுத்துச் சேமித்துவைத்துக் கொள்வது நன்று. ஏதாவது பிசகு வந்தால் சேமித்து வைத்ததை இட்டு பழையபடி கொண்டு வந்துவிடலாம். ***

இதற்குத் தேவையான மீயுரைத் துண்டை இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம்.