Monday, December 11, 2006

யூனிகோடு தமிழுக்கு வேணுமா கோடு?

வெளியூருக்கு கலப்பை இல்லாமல் செல்லும் விவசாயிகளே! வெவ்வேறு இடங்களுக்கு ஒருங்குறி (Unicode) தமிழுக்கு மாற்றும் செயலிகளைத் தேடி அலையாதீர்.

சில பதிவுகளில் இரு பெட்டிகள் கீழே தமிழ் மேலே ஆங்கிலம் என்று பார்த்திருப்பீர்கள் - உங்கள் வலைத்தளத்திலேயே இதை நிறுவ முடியும், கீழ்க்காணும் எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள், மொழி மாற்றியை நிறுவுங்கள், இன்புற்று இருங்கள்.

விக்கிப்பசங்க தொல்லையின் பேரில் இந்தப்பதிவையும், தரவிரக்க கோப்பையும் தந்து உதவிய வசந்தனுக்கு எங்கள் நன்றி.


இனி - வசந்தன்

தமிழில் ஒருங்குறிக்கு மாற்றிப் பின்னூட்டமிடுவதற்கான வசதியை தமிழ்வலைப்பதிவர்கள் பலர் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே இவ்வசதியை தமிழ்வலைப்பதிவர்கள் பலர் பயன்படுத்திவருகிறார்கள். ஒன்றுக்கொன்று வித்தியாசமான பல பின்னூட்டச் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

சில செயலிகள்

-குறைந்தபட்சம் இரண்டு செயலிகள் அனைவரின் பாவனைக்குமென்று பகிரங்கமாக வெளியிடப்பட்டன. சிலர் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
சுரதா அண்ணா இப்படியான பின்னூட்டச் செயலியொன்றின் மீயுரை நிரலை வெளியிட்டார்

. அதுபோல் தமிழ்வாணன் என்ற சக வலைப்பதிவரும் இப்படியொரு பின்னூட்டச் செயலியொன்றின் மீயுரை நிரலை வெளியிட்டார்.
இவர்கள் வெளியிட்ட செயலி திருப்தி தராமல்தான் நான் பாவிக்கும் செயலி வேண்டுமென்று கேட்கிறார்களா? அல்லது அப்படி வெளியிடப்பட்டதே தெரியாமல் இருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

வசந்தன் ஆகிய நான் பாவிக்கும் செயலி சுரதாவினாலும் கிருபா சங்கரினாலும் உருவாக்கப்பட்டது
___________

பின்னூட்டச் செயலியின் வரலாறு பற்றி யாராவது எழுதினால் சுவாரசியமாக இருக்கும். தமிழ்வலைப்பதிவுலகத்தின் வரலாற்றில் அதுவும் ஓரங்கமே.
இரண்டு வருடங்களின் முன் நான் வலைப்பதிய வந்தபோது பத்ரியின் வலைப்பதிவில் இப்படியான எழுத்துருமாற்றிப் பின்னூட்டப்பெட்டி இருந்தது. அதைப் பொருத்தும் ஆசையும் வந்துவிட்டது. அவ்வலைப்பதிவின் மீயுரையைப் பார்த்து அதில் பின்னூட்டப் பெட்டிக்குரியதென்று நான் கருதிய அனைத்தையும் படியெடுத்துக்கொண்டேன். பின் என் வலைப்பதிவின் வார்ப்புருவில் அதைச் செருகும் முயற்சியில் இடங்கள் மாற்றிமாற்றிச் செருகி ஒருவாறு சரியான இடத்திற்பொருத்திவிட்டேன். என் வலைப்பதிவில் அழகாக பின்னூட்டப்பெட்டி காட்சியளித்ததோடு பெட்டியில் எழுத்துருவையும் சரியாக மாற்றிக் காண்பித்தது. மிக்க மகிழ்ச்சி.


சோதனை முயற்சியாக பின்னூட்டமொன்றை இட்டுப் பார்த்தேன். அது என் பதவில் வரவில்லை. மீண்டும் இன்னொரு பின்னூட்டம். அதுவும் வரவில்லை. சீ... என்றானது. பிறகு ஒரு பொறிதட்ட, பத்ரியின் குறிப்பிட்ட பதிவுக்குச் (நான் மீயுரை களவெடுத்த பதிவு) சென்று பார்த்தால், சோதனைக்காக நான் என்பதிவில் இட்ட பின்னூட்டங்கள் அங்குச் சிரித்துக்கொண்டிருந்தன. குறிப்பிட்ட புளொக்கர் ஐடி, பதிவு எண் என்பவற்றோடு சேர்த்தே என்னால் மீயுரை பெறப்பட்டிருந்தது. நான் போய்க்கொண்டிருக்கும் வழி தவறென்று புரிந்தது.


இது வேலைக்காகாது என்று விளங்கிக்கொண்டேன். அப்போது நான் வலைப்பதிவுலகத்துக்குப் புதியவன். நாலைந்து பதிவுகள்தாம் இட்டிருந்தேன். இந்தப் பின்னூட்டப்பெட்டி உதவியைக் கேட்டால் தருவார்களா என்ற ஐயத்தில் பேசாமல் இருந்துவிட்டேன். வலைப்பதிவில் இவ்வளவுக்கு சகோதரத்துடன், நட்புடன் பழகுவார்கள் என்பதெல்லாம் அப்போது நான் யோசித்ததில்லை. இந்த உதவியைச் செய்ய முன்வந்தாலும் கட்டணம் அறவிடுவார்கள் என்றுகூட நினைத்திருந்தேன்.

பின் வலைப்பதிவுகளில் நடந்த சுவாரசிய உரையாடல்கள், கலாயத்தல்கள், அறுவைகள் என்பன பிடிபட்டபின் துணிச்சல் வந்தது. (பின்னூட்ட மட்டுறுத்தல் நடைமுறைக்கு வருமுன் பதிவுகளிலும் பின்னூட்டத் தொடரிலும் ஓர் உயிர்ப்போட்டம் இருந்தது உண்மை.)


பிறகு கிருபா சங்கரிடம் தனிமடல் போட்டு தேவையானதைப் பெற்றுக்கொண்டேன். நண்பர் ஒருவரின் உதவியோடு அமைப்பில் சின்ன மாற்றங்கள் செய்து பெட்டி தயாரித்து வலைப்பதிவில் இட்டேன்.

முன்பு எழுத்துரு மாற்றும் முறைக்கான இரு தெரிவுகளும் வெறுமையாகவே இருந்தன. அதிலொன்றையும் தெரிவு செய்யாமல் பின்னூட்டமிடுவோரின் பின்னூட்டங்கள் "Undefine" என்று மட்டும் வந்தன.பின் இதை நிவர்த்தி செய்யும் வகையில் பாமினி எழுத்துரு முறையை நியமத் தெரிவாக்கினேன்

இதுதான் என் வலைப்பதிவில் பின்னூட்டப்பெட்டி பிறந்தகதை. பிறகு சில பதிவாளர்கள் இவ்வசதிக்குரிய மீயுரையைப் பெற்றுத் தங்கள் வலைப்பதிவுகளில் நிறுவிக்கொண்டார்கள்.


இந்த வடிவம் மட்டுமன்றி வேறும் பல வடிவங்களில் பலர் பின்னூட்டப் பெட்டிகள் வைத்துள்ளார்கள் . மழை ஷ்ரேயா, சாத்தான்குளத்தான், கிருபா சங்கர் போன்றோர் வித்தியாசமான வடிவங்களை வைத்துள்ளார்கள்.
இந்தப் பின்னூட்ட எழுத்துருமாற்றிச் செயலிக்குரிய அனைத்து நன்றியும் சுரதாவையும் கிருபாசங்கரையுமே சாரும் .
______________________________________________________

சரி . இனி இப்பின்னூட்டப் பெட்டி செயற்படும் முறைபற்றிய சிறு விளக்கம்.
இது 'அனாமதேயப் பின்னூட்டங்களை அனுமதிக்கும்" வலைப்பதிவுகளில் மட்டும்தான் செயற்படும். புளொக்கர் கணக்குள்ளவர்கள் மட்டும் பின்னூட்டமிடும் வசதியைக் கொண்ட வலைப்பதிவுகளில் இச்செயலி செயற்படாது. செயலியில் இருபெட்டிகள் காணப்படும். அவற்றுக்கு மேல இரு தெரிவுப் பொத்தான்கள் காணப்படும். 'பாமினி' எழுத்துரு முறை நியமத் தெரிவாக்கப்பட்டிருக்கும். எழுதுபவர் விரும்பினால் ஆங்கில உச்சரிப்பு முறைக்கு மாற்றலாம்.


மேலுள்ள பெட்டியில் உங்கள் தெரிவுக்குரிய எழுத்துருவில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்.
ஆங்கிலமும் தமிழும் கலந்து ஒரேதடவையில் உங்களால் எழுத்துருவை மாற்றி எழுத முடியாது.


முதலில் தமிழில் அனைத்தையும் எழுதி முடித்தபின், கீழுள்ள பெட்டியில் (ஒருங்குறிக்கு மாற்றப்பட்ட எழுத்துக்கள் இருக்கும் பெட்டி) தேவையான இடத்தில் ஆங்கிலத்தில் நேரடியாகத் தட்டச்சலாம். அல்லது தமிழில் தட்டியதை ஒரு Notepad or Wordpad இல் ஒட்டிவிட்டு அக்கோப்பில் வைத்து தேவையான இடங்களில் அங்கிலத்தை எழுதி முழுமையாக்கலாம்.


நீங்கள் பின்னூட்டப்பெட்டியில் தட்டச்சி முடித்தபின் அதற்குக் கீழ் 'பெயர்' என்றிருக்கும் சிறிய பெட்டியில் உங்கள் பெயரை எழுதவும். இப்பெட்டியில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம். தமிழில் பெயரெழுத விருப்பமென்றால் பின்னூட்டதுடன் சேர்த்து உங்கள் பெயரையும் எழுதி ஒருங்குறிக்கு மாற்றியபின் தமிழிலுள்ள உங்கள் பெயரை வெட்டியெடுத்து பெயர்ப்பெட்டியில் ஒட்டலாம்.

இவையனைத்தும் முடிந்தபின் "கருத்தைப் பதிவு செய்யவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

அதை அழுத்தியதும் புளொக்கரின் பின்னூட்டமிடும் பக்கம் திறந்து அதில் பின்னூட்டப்பெட்டி வெறுமையாக இருக்கும். ஆனால் உங்கள் பின்னூட்டம் பதியப்பட்டுவிடும். மட்டுறுத்தல் செய்யப்பட்ட வலைப்பதிவாயின் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கும்.

இங்குத்தான் பலர் தேவையற்ற வேலையொன்றைப் பார்க்கிறார்கள்
. அதாவது தங்கள் பின்னூட்டம் பதியப்படவில்லையென்று நினைத்து மீண்டுமொருமுறை அதே பின்னூட்டத்தை புளொக்கரின் பின்னூட்டப் பெட்டியிலும் ஒட்டுவார்கள்.

என் வலைப்பதிவுக்கு இந்த வசதி பாவிப்போரிடமிருந்து பெரும்பாலும் இரண்டிரண்டு பின்னூட்டங்கள் வந்துகொண்டிருந்தன.
வடுவூர் குமாருக்கு இச்செயலியைக் கொடுத்தபோதும் அவருக்கும் இதே குழப்பம் இருந்தது எனக்குத் தெரியவந்தது.


ஆகவே மக்களே , இச்செயலி பாவிக்கும்போது ஒருமுறை நீங்கள் சரியாகப் பின்னூட்டமிட்டால் சரி. புளொக்கரின் பின்னூட்டப்பெட்டியில் இரண்டாம் முறையாகப் பின்னூட்டமிடத் தேவையில்லை.
_____________________________________________________

சரி . இனி மீயுரையைப் பொருத்துவதைப் பற்றிப் பார்ப்போம்.


மீயுரை முழுவதையும் படியெடுத்துக் கொள்ளுங்கள். அதற்குமுன் மீயுரையில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரிகின்றனவா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியாத பட்சத்தில் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம்.

உங்கள் வலைப்பதிவின் வார்ப்புருப் பக்கத்துக்குச் செல்லவும். அங்கு உங்கள் வார்ப்புருவுக்குரிய மீயுரைகளைக்(HTML) காணலாம். அதில் '< ! -- end . post -- >' என்ற வரியைத் தேடிக்கண்டுபியுங்கள். அவ்வரிக்குமேலே கோப்பிலுள்ள அனைத்து மீயுரைகளையும் படியெடுத்து ஒட்டிவிடுங்கள் அவ்வளவுதான் வேறொன்றும் செய்யத்தேவையில்லை.

பின் சேமித்து Publish செய்தால் சரி.

நான் சொல்லியுள்ள முறைப்படி செய்தால் பின்னூட்டங்களுக்கும் பதிவுக்கும் இடையில் பின்னூட்டப் பெட்டி தோன்றும்

உங்களுக்குப் பிடித்தபடி பின்னூட்டப்பெட்டியின் அமைவிடத்தை மாற்ற வேண்டுமாயின் மீயுரையை அதற்கேற்றபடி இடம்மாற்றி ஒட்ட வேண்டும். பொதுவாக பின்னூட்டங்களின் முடிவில் இச்செயலியிருந்தால் நன்று என நினைப்போருண்டு.

பெட்டிகளின் அளவுகளை மாற்றவேண்டியிருந்தாலும் நீங்களே முயற்சிக்கலாம். அதைவிட நிறங்கள், கோடுகள் என்று சில மாற்றங்களை உங்கள் விருப்பம்போல் முயன்று பார்க்கவும்.

*** இந்தச் செயலியை நிறுவ முன்பு நீங்கள் உங்கள் வார்ப்புருவுக்குரிய மீயுரையைப் படியெடுத்துச் சேமித்துவைத்துக் கொள்வது நன்று. ஏதாவது பிசகு வந்தால் சேமித்து வைத்ததை இட்டு பழையபடி கொண்டு வந்துவிடலாம். ***

இதற்குத் தேவையான மீயுரைத் துண்டை இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம்.

11 comments:

said...

இதோடு இந்த inline commentம் முயற்சித்துப்பாருங்கள்

http://singpolyma-tech.blogspot.com/2006/01/new-inline-comments-form.html

http://singpolyma-tech.blogspot.com/2006/01/new-inline-comments-form.html

said...

சரியவரப் பதியப்படவில்லை போலுள்ளது.
சரிபார்க்கவும்.

said...

பதிவினைத் தந்த வசந்தன் அவர்களுக்கு நன்றி.

said...

நாடோடி, நன்றி. பதிவுக்குள்ளேயே இந்த உரல்களை கொண்டு வந்து விடுகிறோம்.

வசந்தன்.. அதை ஏன் கேட்கறீங்க.. ரொம்ப சொதப்பல் எங்க ஊரு பிளாக்கர். இதிலே end post என்று இருந்த டேக்கை பிளாக்கர் சீரியஸாக எடுத்து கடித்துத் துப்பி விட்டது. மீண்டும் சரி செய்ய முயன்றால் டயலப் தொந்தரவு. டென்ஷன்:-(

மீண்டும் ஒருமுறை நன்றி.

கொத்தனார், உங்களுக்கு எதுவும் சொல்றதா இல்லை:-)

said...

பெனாத்தலாரே, இப்போ சரியா இருக்கு. நானும் சரி செய்யப் பார்த்தேன். ஆனா நம்ம கணினி அறிவுக்கு ஒண்ணும் செய்ய முடியலையே.

எனக்கு எதுவும் பதில் சொல்ல வேண்டாம். :)

said...

வசந்தன், உங்களுக்கு ஒரு கேள்வி. உங்கள் பக்கத்தில் சென்று இந்த மொழிமாற்றி மூலம் பின்னூட்டம் இடும் பொழுது நான் என் பிளாக்கர் அக்கவுண்ட் மூலம் பின்னூட்டமிட என்ன செய்வது?

வெறும் பெயர் மட்டும்தான் போட முடிகிறது. அதுவே முதல் பின்னூட்டம் போட்ட பின் அது பிளாக்கரின் பின்னூட்ட பக்கம் செல்லும் பொழுது அங்கு பிளாக்கர் கணக்கின் மூலம் போட முடிகிறதே.

இந்த வசதியை முதல் பக்கத்தில் கொண்டு வர முடியுமா?

said...

அத்துடன் இந்த வலைத்தளத்தையும் பார்க்கவும்.
மேலும் www.baraha.com என்ற ஒரு சாஃப்ட்வேரையும் இறக்கிக்கொள்ளலாம்.

said...

இலவச கொத்தனார்.
இது நான் உருவாக்கிய செயலியன்று.
அந்தளவுக்கு எனக்கு ஆழ்ந்த அறிவுமில்லை. நீங்கள் கேட்ட கேள்வி யாராவது துறைசார்ந்தவர்களுக்குரியது.

Blogger கணக்கினூடு பின்னூட்டமிட வேண்டுமென்றால், முன்பக்கத்தில் பின்னூட்டப்பெட்டியில் தட்டச்சி ஒருங்குறிக்கு மாற்றப்பட்ட முழுப்பின்னூட்டத்தையும் படியெடுத்து (Copy) வைத்துக்கொண்டு, Post a Comment என்ற blogger இன் நியம இணைப்பினை அழுத்தி பின்னூட்டப் பக்கத்துக்குச் சென்று அங்கு ஒட்டி உங்கள் கணக்கின் மூலம் பின்னூட்டம் இடலாம்.
(விளக்கம் சரியா?) இவ்வளவுதான் உங்கள் கேள்வி மட்டில் எனக்குப் புரிந்ததும், விடை தெரிந்ததும்.

;-)

said...

மாண்புமிகு மக்களே !

பிடித்திருந்தால் இதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நான் பயன்படுத்தும் என்னுடைய மறு-வடிவமைப்பு. முடிந்தால் அதில் சில மாற்றங்களும் செய்யலாம்.

கர்சரை பின்னுக்கு கொண்டுவருவது கடினம். மற்றபடி வெகு எளிதானது.

said...

நாம் கேட்டுக்கொண்டதுக்கிணங்க மதி அவர்கள் எழுதி இருக்கும் பதிவு இதோ

said...

இதை கொஞ்ச நாள் உபயோகித்தேன்,நன்றாகத்தான் இருந்தது.செந்தமிழில் பின்னூட்டம் வர எடுத்துவிட்டேன்.
இப்போது புரிந்தது ஏன் 2 மெசேஸ் வருகிறது என்று.
ஏன் அந்த பெட்டியில் நாம் அடிக்கும் எழுத்துக்கள் தானாகவே கமென்ட் பாக்ஸ்க்கு போகுமாறு இணைப்பு கொடுக்க முடியாதா?
அந்த அளவுக்கு மண்டைக்குள் இல்லாததால் தினறுகிறேன்.
ஏதோ ஒரு வலைப்பூவில் இப்படி நடந்து பார்த்திருக்கேன்.