Monday, January 29, 2007

வயித்தெரிச்சல் ஏனில்லை?

'சிறுகுடல பெருங்குடல் சாப்பிடுதுடா'ன்னு பசி வரும் நேரம் நாம் சொல்லக் கேட்டிருப்போம், சொல்லியுமிருப்போம். பல்வகை உணவுகளை செரித்துவிடும் தன்மை கொன்ட வயிறு தன்னைத் தானே செரித்துக்கொள்வதில்லை ஏன்? ஓகையின் கேள்விக்கான பதில் இங்கே.

இக்கேள்விக்கு மருத்துவமே திட்டவட்டமாக இன்னும் பதில் சொன்னபாடில்லை. கிட்டத்தட்ட இதுவாகத்தான் இருக்குமென்று ஒரு பதில் இருக்கிறது. அதை சொல்லிவிடுகிறேன். ஏகப்பட்ட புதுப்பெயர்கள் வருவதனால் குழப்பமாய் இருப்பதுபோல் தோன்றலாம். உண்மையில் மிகவும் எளிமையான லாஜிக் தான்.

நம் வயிறு ஒரு டிரான்ஸிட் பாயிண்ட் மாதிரி. உணவுக்குழாயிலிருந்து வரும் உணவை செரிப்பது மட்டுமில்லாமல் அதை மேலும் propel செய்துவிடுவதும் வயிற்றின் வேலைதான். நம் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் hydrochloric acid. மிகவும் வீரியமான அமிலம் இது. pH சுமார் 0.8. இவ்வமிலம் தினந்தோறும் நம் வயிற்றினுள் சுரக்கப்பட்டு செரிக்கப்படுவது ஆச்சரியமான விஷயம் தானே. சூட்சுமம் வயிற்றின் அமைப்பில் உள்ளது.

க்ராஸ் செக்ஷனில் மூன்று முக்கியமான லேயர்கள் இருக்கின்றது வயிற்றில்.
1. serosa - வெளிப்புறத்தில் இருப்பது

2. muscular - உள்ளே இருக்கும் உணவை சிறுகுடலுக்கு தள்ள உதவுவது இந்த லேயரின் contraction தான்

3. mucosa - இதுதான் உட்புறமாய் இருக்கும் கடைசி லேயர். மிகவும் முக்கியமானதும்கூட.

இதில் இரண்டு விதமான சுரப்பிகள் இருக்கின்றன.

1. oxyntic
2. pyloric

இதில் ஆக்ஸிண்டிக் சுரப்பிகள் சுரப்பது
1) ஹைட்ரோக்ளோரிக் அமிலம்
2) பெப்ஸினோஜன் என்ற வஸ்து - புரதங்களின் செரிமானத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது இதன் பை ப்ராடக்டான பெப்ஸின்
3) intrinsic factor - வைட்டமின் B12 absorptionஉக்கு மிகவும் அவசியமானது
4) கொஞ்சமாய் ம்யூகஸ் (mucus)

பைலோரிக் சுரப்பிகள் சுரப்பது
1) காஸ்ட்ரின் (Gastrin)
2) mucus

இந்த இரண்டு சுரப்பிகளைத் தவிர வயிற்றின் உட்புறம் முழுவதும் ஏகப்பட்டதுக்கு இடைவெளியே இல்லாமல் இருப்பது surface mucosal cells. தண்ணீரிலும் அமிலத்திலும் கரையாத கெட்டியான mucus எனும் வஸ்துவை சுரக்கின்றன. தமிழில் எனக்குத்தெரியவில்லை, viscous என்று சொல்வார்களே. அந்த பதத்தில், கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டர் கனத்திற்கு இந்த ம்யூகஸ் இருக்கும். இந்த ம்யூகஸில் இருக்கும் முக்கியமான பொருள் bicarbonate. இது அல்கலி alkali ஆகும்.

அல்கலியும் அமிலமும் சேர்ந்தால் என்னாகும் என்று நான் சொல்லவேண்டியதில்லையே? இந்த அல்கலியின் உதவியால்தான் இத்தனை அமிலமிருந்தும் நம் வயிறின் உட்பகுதி செரிக்கப்படாமல் இருக்கின்றது.

மேலும் அதிகமாக சுரக்கவைக்கவோ அல்லது தேவைக்கதிகமாக சுரக்காமல் இருக்கவோ positive மற்றும் negative feedback mechanism இருக்கின்றன. மேற்சொன்ன gastrin மட்டுமல்லாமல் இன்னும் acetylcholine, histamine போன்றவையும் பயன்படுகின்றன.

இந்த ம்யூகஸ் பாதுகாப்பு ஒன்றும் அசைக்கமுடியாத கோட்டையில்லை. சிலருக்கு இயற்கையிலேயோ அல்லது வாழ்க்கைமுறைக்கு தகுந்தவாறோ அமிலச்சுரப்பிகள் அபரிதமாக வேலை செய்யலாம் இல்லையெறால் இந்த ம்யூகஸ் லேயரின் தயாரிப்பிலோ sustenanceஇலோ குறைபாடு இருக்கலாம். இன்னும் அபூர்வமாக பாக்டீரியாக்களால் பாதிப்பு ஏற்படலாம். அப்படி இருந்தால் அது அல்சரில் கொண்டுபோய் விடும். அல்சர் என்பது நம் அமிலமே நம் வயிற்றை செரிப்பதுபோன்றதுதான்.

இதுதான் மேட்டர்
நன்றி: Howstuffworks.com,
படத்திற்கு இத்தளம்
எழுதியது: சிறில் அலெக்ஸ்; கொஞ்சமாய் திருத்தியது இராமநாதன்

Wednesday, January 24, 2007

வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 2

போன பதிவில் அலகிடுதல் பத்திப் பார்த்தோம். இப்போ ஒரு வெண்பாவுக்குண்டான விதிகளைப் பத்திப் பார்க்கலாம்.

வெண்பா விதிகள்

 • இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம்.
 • ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும்.
 • எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும்.
 • கனிச்சீர் வரக்கூடாது. அதாவது போன பதிவில் சொன்ன மாதிரி எடுத்துக்காட்டுகளில் தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என்ற நான்கு வகைகளும் வரக்கூடாது.
 • கடைசி வரியின் (இதைத்தான் ஈற்றடின்னு சொல்லுவாங்க) கடைசி சீர் "நாள் , மலர் , காசு , பிறப்பு " என்பது போல வரவேண்டும்.

தளை தட்டுதல்

வெண்பா எழுதும் போது ஒரு சொல்லுக்கும் அதன் அடுத்து வரும் சொல்லுக்கும் எந்த விதமான உறவு இருக்கலாம் என்பதற்காக சில விதிமுறைகள் இருக்கு. இந்த விதிமுறைகளை மீறினா தளை தட்டுதல் என்பதைப் போன பதிவில் பார்த்தோம். தளை தட்டாம எழுத மூணு விதிகள்தான் இருக்கு.

 • காய் முன் நேர்
 • விளம் முன் நேர்
 • மா முன் நிரை

இங்க முன் அப்படின்னா followed byன்னு அர்த்தம். ஆக தேமா, புளிமா என வரும் சீர்களை அடுத்து வரும் நிரை கொண்டு தொடங்க வேண்டும். மற்ற சமயங்களில் எல்லாம் நேர் கொண்டு தொடங்க வேண்டும். இதுக்காகத்தான் ஒரு சீரில் ஒன்றுக்கு மேல் வார்த்தைகளோ அல்லது ஒரு வார்த்தையை ரெண்டு சீராக பிரித்தோ வருது. இந்த விதிகள் ஒரு அடியில் இருக்கும் சீர்களுக்கு மட்டுமில்லாம ஒரு அடியின் கடைசி சீருக்கும் அடுத்த அடியின் முதல் சீருக்கும் கூட ஒத்து வரா மாதிரி பாத்துக்கணும்.

அவ்வளவுதான் ரூல்ஸ். அவ்வளவு கஷ்டம் மாதிரித் தெரியலைதானே. இப்போ ஒரு திருக்குறளை எடுத்து அலகிட்டுப் பார்க்கலாம்.

(ஒரு குறிப்பு : குறள் என்பது இரண்டு அடியில் எழுதப்படும் வெண்பா. இதை நிறையா பேரு ஒண்ணே முக்கால் அடி அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க. ஆனா அது சரி கிடையாது. இது இரண்டு அடிதான். இரண்டாவது அடியின் நீளம் மூன்று சீர்கள். )

சரி விஷயத்துக்கு வருவோம். முதல் குறளையே எடுத்துக்கலாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


அலகிடுதல்

மேற் சொன்ன விதிகளின் படி இப்பொழுது அசைகளைப் பிரித்துப் பார்க்கலாம்.

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்/நேர் நேர்/நேர்
புளிமா புளிமா புளிமாங்காய் தேமா

பக/வன் முதற்/றே உல/கு
நிரை/நேர் நிரை/நேர் நிரை/நேர்
புளிமா புளிமா புளிமா

தளை விதிகள் எப்படிப் பொருந்துகிறது எனப் பார்க்கலாம்.

அகர முதல - மா முன் நிரை
முதல் எழுத்தெல்லாம் - மா முன் நிரை
எழுத்தெல்லாம் ஆதி - காய் முன் நேர்
ஆதி பகவன் - மா முன் நிரை
பகவன் முதற்றே - மா முன் நிரை
முதற்றே உலகு - மா முன் நிரை

விதிகளுடன் ஒரு ஒப்பீடு

 • இரண்டிலிருந்து 12 அடிகள் வரை இருக்கலாம். - இரண்டு அடிகளில் இருக்கிறது
 • ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும், கடைசி அடியில் மூன்று சீர்களும் வர வேண்டும். - முதலடியில் நான்கு சீர்கள், இரண்டாவது அடியில் மூன்று சீர்கள்
 • எல்லா சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டு இருக்க வேண்டும். - மேலே கோடிட்ட படி பார்த்தீர்களானால் எல்லாச் சீர்களும் இரண்டு அல்லது மூன்று அசைகள் கொண்டதாகவே இருக்கிறது.
 • கனிச்சீர் வரக்கூடாது. - கனிச்சீர்கள் இல்லை.
 • கடைசி வரியின் கடைசி சீர் " நாள் , மலர் , காசு , பிறப்பு " என்பது போல வரவேண்டும். - உலகு என முடியும் சீர் பிறப்பு என்பதை ஒத்து வருகிறது.

இப்படித்தாங்க வெண்பா எழுதணும். இதுக்கு மேல எதுகை, மோனை, ஓசை அப்படின்னு எல்லாமும் விஷயம் இருக்கு. முதலில் தளை தட்டாம எழுதப் பழகின ஒரு குழாம் வந்த உடனே, எதுகை மோனை பற்றிய பதிவு போடலாம்.

இப்போ எல்லாரும் தளை தட்டாம ஒரு வெண்பா எழுதுங்க பார்க்கலாம்.

Sunday, January 21, 2007

வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 1

நம்ம வெண்பா வாத்தியார் ஜீவாவோட நானும் சேர்ந்து வெண்பாக்களுக்காக ஒரு வலைப்பூ நடத்தறது நிறையா பேருக்குத் தெரிஞ்சு இருக்கலாம். அதுல புது பதிவு போடும் பொழுது எல்லாம் அனேகம் பேர் கேட்கும் ஒரு கேள்வி "வெண்பா எழுதுவது எப்படி?" என்பதுதான். அதுக்காக அந்த வலைப்பூவிலேயே சில பதிவுகள் இருந்தாலும் எதாவது கேள்வி என்றால் விக்கி பசங்க பதிவில் வந்து தேட வேண்டும் என முயல்வோருக்காக இந்த தொடர். இனி நேராக விஷயத்துக்குப் போகலாம்.

அறிமுகம்

வெண்பா எழுத ஆசை. என்ன தெரியணும் அப்படின்னு கேட்டா, ஒண்ணும் பெருசா வேண்டாங்க. கொஞ்சமா தமிழ் தெரிஞ்சால் நலம். இதில வார்த்தைகளை எப்படி உபயோகப் படுத்தணும்ன்னு தெரியணும். அவ்வளவுதான். முதலில் அதிகம் உபயோகப்படுத்தற ஜார்கன்கள் என்ன, அதன் பொருள் என்னங்கறதைப் பார்ப்போம்.

அசை, சீர், தளை, அடி, எதுகை, மோனை. இதுதான் பேஸிக் லிஸ்ட். ஆரம்பத்தில் சீர் அப்படின்னா வார்த்தைன்னே வெச்சுப்போம். அசைன்னா ஆங்கிலத்தில் சிலபிள் (syllable)ன்னு சொல்லறா மாதிரி. ஒரு சீரானது பல அசைகள் கொண்டதாக வரும். பல சீர்கள் கொண்டது ஒரு அடி. அதாவது ஒரு வரி. எதுகை, மோனை அப்புறம் பார்க்கலாம்.

மீதி இருக்கறது தளை. தளை அப்படின்னா என்ன? கட்டுதல் அப்படின்னுதானே பொருள். நாம கூட அடிமைத் தளைகளை அறுத்து எறிய வேண்டும் அப்படின்னு இந்த வரலாற்று படங்களில் எல்லாம் வசனம் பேசி கேட்டு இருக்கோமே. வெண்பா இலக்கணத்திலும் அதே பொருள்தாங்க. ஆனா இங்க வார்த்தைகளைக் கட்டுதல் பற்றி பேசறோம். அதுதான் வித்தியாசம். வெண்பா எழுதும் போது ஒரு சொல்லுக்கும் அதன் அடுத்து வரும் சொல்லுக்கும் எந்த விதமான உறவு இருக்கலாம் என்பதற்காக சில விதிமுறைகள் இருக்கு. இந்த விதிமுறைகளை மீறினா தளை தட்டுதல் எனச் சொல்கிறோம். இந்த மாதிரி தளை தட்டுதா இல்லையான்னு பார்க்க ஒரு சீரை எடுத்து அதன் அசைகளாப் பிரிக்கத் தெரியணும். இதுதாங்க வெண்பாவில் முக்கியம். அது எப்படி செய்யறது. அதைத்தான் இப்போ சொல்ல போறேன்.

அலகிடுதல்

ஒரு சீரை எப்படி அசை பிரிக்கிறதுன்னு பார்த்தா (இதற்கு அலகிடுதல்ன்னு பெயர்) ரொம்ப ஈசி. ஒரு சீரை எடுத்து அதன் உடம்பில் சில கோடுகள் போட்டு அறுத்தோம்னா ஒவ்வொரு பகுதியும் ஒரு அசை. எப்படி இந்த கோட்டை போடணும்? எப்ப ஒரு மெய்யெழுத்து வந்தாலும் ஒரு கோடு, தனியா ஒரு நெடில் வந்தா ஒரு கோடு, ரெண்டு குறில் சேர்ந்து வந்தா ஒரு கோடு, ஒரு குறிலும் அதன் பின் நெடிலும் வந்தா ஒரு கோடு. இந்த கடைசி மூணு டைப்பிலும் நீங்கள் கோடு போடுமிடத்தில் ஒரு மெய்யெழுத்து வந்தால் அதைத்தாண்டி கோட்டை போடுங்கள். அவ்வளவுதான். இப்போ எடுத்துக்காட்டு.

மன்/னன் - மெய்யெழுத்து வந்தா ஒரு கோடு. ஆகவே மன் - ஒரு அசை, னன் ஒரு அசை.
மா/னம் - ஒரு நெடில் வந்தா ஒரு கோடு. மெய்யெழுத்து வந்தா ஒரு கோடு. ஆகவே மா - ஒரு அசை. னம் - ஒரு அசை.
மரு/து - ரெண்டு குறில் வந்தா ஒரு அசை. ஆகவே மரு - ஒரு அசை. மீதி இருக்கும் து - ஒரு அசை.
வரா/மல் - ஒரு குறிலும் அதன் பின் ஒரு நெடிலும் வந்தா ஒரு அசை. வரா - ஒரு அசை. மல் - ஒரு அசை.
மாற்/று - மெய்யெழுத்துடன் நெடில்.
மருந்/து - இரு குறிலுடன் மெய்.
பராத்/பரன் - குறிலுடன் நெடில். அதன்பின் மெய்.

பிறர்க்கு, யவர்க்கு என்றெல்லாம் வரும் இடங்களில் இந்த கோடானது அந்த இரண்டு மெய்யெழுத்துக்களுக்குப் பின் போடணும், இப்படி - பிறர்க்/கு, யவர்க்/கு

ஒரு சீரில் ரெண்டு அசை இருந்தா அது ஈரசைச்சீர். மூணு இருந்தா அது மூவசைச்சீர். and so on. அலகிடுதல் இவ்வளவுதாங்க. இதுக்கு பேர் வெச்சிருக்காங்க. அதையும் தெரிஞ்சுகிட்டா நல்லது. அசையில் மெய்யெழுத்துகளை சேர்க்காமல் ஒரு எழுத்து இருந்தா அது நேர். இரண்டு எழுத்து இருந்தா நிரை. இந்த பேருங்களே அப்படிதான் இருக்கு பாருங்க. இதுங்க வர காம்பினேஷனுங்களுக்கும் பேரு இருக்கு.

நேர் நேர் - தேமா
நிரை நேர் - புளிமா
நேர் நிரை - கூவிளம்
நிரை நிரை - கருவிளம்

நேர் நேர் நேர் - தேமாங்காய்
நேர் நேர் நிரை - தேமாங்கனி

நிரை நேர் நேர் - புளிமாங்காய்
நிரை நேர் நிரை - புளிமாங்கனி

நேர் நிரை நேர் - கூவிளங்காய்
நேர் நிரை நிரை - கூவிளங்கனி

நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நிரை நிரை நிரை - கருவிளங்கனி

இந்த பேருங்களும் அந்தந்த விதிகளுக்கு உட்பட்டே வருது பாருங்க. இப்போதைக்கு மூன்று அசைகளோட நிறுத்திக்கலாம். இப்போ இதை வச்சு என்ன வெண்பா விதிகள் இருக்குன்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

அதுவரை ஆளுக்கு ஒரு திருக்குறளை எடுத்து அலகிட்டுப் பாருங்க பார்க்கலாம். அலகிட்டதைப் பின்னூட்டத்தில் போட்டா சரியாச் செய்யறீங்களான்னு பார்த்துச் சொல்ல வசதியா இருக்கும். எதாவது சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில் கேளுங்கள். அதன் பதில்களும் அவ்வப்பொழுது பதிவில் சேர்க்கப்படும்.

Wednesday, January 03, 2007

ரோடு ரோலர் ஏன் பெரிசா இருக்கு? (03 Jan 2006)

நாமக்கல் சிபியின் கேள்வி:

ரோடு ரோலர்கள் இன்னும் அளவில் பெரியதாகவே இருப்பது ஏன்?

அதன் வடிவமைப்பை மாற்றியமைக்க யாரும் முன்வரவில்லையா? முயற்சி செய்யவில்லையா? அல்லது தொழில்நுட்ப காரணங்களா?
பதில்:

ரோடு ரோலர்கள் (அல்லது காம்பாக்டர்கள்) பல வகைகளிலும் அளவுகளிலும் இருக்கின்றன. எல்லாச் சாலைகளும் ஒன்று போலவா இருக்கிறது? (மழைக்காலச் சென்னையைப் பார்த்துவிட்டு ஆமாம் என்று சொல்லாதீர்கள்:-))

ஒரு பெரிய சாலை (தங்க நாற்கரம் போல, ஆட்டோபான் போல) போடுவதன் தொழில்நுட்பமும், கிராமத்துச் சந்தை சீரமைப்பதற்கான தொழில்நுட்பமும் சாலைப்பொறியியலின் வெவ்வேறு எல்லைகளில் இருந்தாலும், ஆதாரமான செயல்பாடுகள் ஒன்றேதான்.

முதலில் சாலையின் தரையை சமனப்படுத்துதல் - இதற்கு புல்டோஸர் போன்ற எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புல்டோஸர்

பிறகு தரையின் கடினத்தன்மையை அதிகப்படுத்தவேண்டும். இதற்கு காம்பாக்டர்கள் உபயோகப்படும். உருளை போன்ற சக்கரங்கள் இல்லாமல் பல்சக்கரம் போல இருப்பதைக் கவனியுங்கள் - இது தரையின்மேல் அழுத்தத்தை அதிகப்படுத்தி, பலமாக்கும்.

காம்பாக்டர்

இயற்கையாகவே நிலம் கடினமானதாக இல்லையென்றால், ஜல்லிக்கற்கள் கொண்டு கடினப்படுத்தப்படும்.

பின்னர் சாலையின் மேம்போக்காக உள்ள கற்கள் சுத்தப்படுத்தப்பட்டு சாலை சீராக்கப்படும் - மோட்டார் கிரேடர்கள் உதவியோடு.

மோட்டார் கிரேடர்

பிறகு தார் - ஆஸ்பால்ட், கான்கிரீட் கலவை சாலையில் கொட்டப்படும் - பேவர்கள் உதவியோடு.

பேவர்

பிறகுதான் ரோலர்கள் கொண்டு சாலை சமனப்படுத்தப்படும்.

ரோடு ரோலர்

ரோலர்களின் வரலாறு பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பாய்ந்தாலும், கையால் இழுக்கப்பட்ட உருளைகள், குதிரைகளால் இழுக்கப்பட்ட உருளைகள் என்ற பரிணாம வளர்ச்சிகளை ஒதுக்கினால் ஸ்டீம் எஞ்சினால் ஓட்டப்பட்ட முதல் ரோலர் இப்படித்தான் இருந்தது.

ஆதி காலம்

காலப்போக்கில் மருவி..

முன்னேற்றம் 1

இப்படி ஆகி

முன்னேற்றம் 2

இப்படியும் ஆகி

முன்னேற்றம் 3

இருக்கிறது.

ரோடு ரோலரின் அளவு, சாலையின் அளவைப்பொறுத்ததே அல்லவா? கிரிக்கெட் பிட்சை சமனப்படுத்தவே ஒரு ஆள் இழுக்கும் அளவிலிருந்து பத்து ஆள் இழுக்கும் அளவு வரை வேறுபடுகிறது.

வெளிப்புறத் தோற்றத்தில், உருளைகளின் அளவு காரணமாக பெரிதும் மாற்றம் இல்லாவிட்டாலும், இயங்கும் விதத்தில் - பவர் ஸ்டியரிங்குகள், எலக்ட்ரோ-ஹைட்ராலிக் இயக்கங்கள், கம்ப்யூட்டரால் கண்காணிக்கப்படும் எஞ்சின், கியர்பாக்ஸுகள் என்று உள்ளே பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. நாளை, GPS உடன் இணைந்து ஆளில்லாமல் இயங்கவைக்கத் தேவையான அளவு தொழில்நுட்பம் இன்றே தயார்நிலையில் இருக்கின்றது.

எதோ, இதிலும் ஆராய்ச்சி, முன்னேற்றம் என்று கேடர்பில்லர், பிட்டெல்லி, போமாக், கேஸ், டெரக்ஸ் போன்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகிறதோ, சுரேஷ் போன்றவர்கள் அந்த முன்னேற்றங்களை வகுப்பில் எடுத்து இயம்புவதன் மூலம் அவர்கள் வீட்டிலும் அடுப்பு எரிகிறது!

படங்கள் உதவி - விக்கிபீடியா.

பி கு: சாலைத் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் பதிவர்கள் மேலதிகத் தகவல்களைச் சொன்னால் மகிழ்வோம்