Sunday, January 21, 2007

வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 1

நம்ம வெண்பா வாத்தியார் ஜீவாவோட நானும் சேர்ந்து வெண்பாக்களுக்காக ஒரு வலைப்பூ நடத்தறது நிறையா பேருக்குத் தெரிஞ்சு இருக்கலாம். அதுல புது பதிவு போடும் பொழுது எல்லாம் அனேகம் பேர் கேட்கும் ஒரு கேள்வி "வெண்பா எழுதுவது எப்படி?" என்பதுதான். அதுக்காக அந்த வலைப்பூவிலேயே சில பதிவுகள் இருந்தாலும் எதாவது கேள்வி என்றால் விக்கி பசங்க பதிவில் வந்து தேட வேண்டும் என முயல்வோருக்காக இந்த தொடர். இனி நேராக விஷயத்துக்குப் போகலாம்.

அறிமுகம்

வெண்பா எழுத ஆசை. என்ன தெரியணும் அப்படின்னு கேட்டா, ஒண்ணும் பெருசா வேண்டாங்க. கொஞ்சமா தமிழ் தெரிஞ்சால் நலம். இதில வார்த்தைகளை எப்படி உபயோகப் படுத்தணும்ன்னு தெரியணும். அவ்வளவுதான். முதலில் அதிகம் உபயோகப்படுத்தற ஜார்கன்கள் என்ன, அதன் பொருள் என்னங்கறதைப் பார்ப்போம்.

அசை, சீர், தளை, அடி, எதுகை, மோனை. இதுதான் பேஸிக் லிஸ்ட். ஆரம்பத்தில் சீர் அப்படின்னா வார்த்தைன்னே வெச்சுப்போம். அசைன்னா ஆங்கிலத்தில் சிலபிள் (syllable)ன்னு சொல்லறா மாதிரி. ஒரு சீரானது பல அசைகள் கொண்டதாக வரும். பல சீர்கள் கொண்டது ஒரு அடி. அதாவது ஒரு வரி. எதுகை, மோனை அப்புறம் பார்க்கலாம்.

மீதி இருக்கறது தளை. தளை அப்படின்னா என்ன? கட்டுதல் அப்படின்னுதானே பொருள். நாம கூட அடிமைத் தளைகளை அறுத்து எறிய வேண்டும் அப்படின்னு இந்த வரலாற்று படங்களில் எல்லாம் வசனம் பேசி கேட்டு இருக்கோமே. வெண்பா இலக்கணத்திலும் அதே பொருள்தாங்க. ஆனா இங்க வார்த்தைகளைக் கட்டுதல் பற்றி பேசறோம். அதுதான் வித்தியாசம். வெண்பா எழுதும் போது ஒரு சொல்லுக்கும் அதன் அடுத்து வரும் சொல்லுக்கும் எந்த விதமான உறவு இருக்கலாம் என்பதற்காக சில விதிமுறைகள் இருக்கு. இந்த விதிமுறைகளை மீறினா தளை தட்டுதல் எனச் சொல்கிறோம். இந்த மாதிரி தளை தட்டுதா இல்லையான்னு பார்க்க ஒரு சீரை எடுத்து அதன் அசைகளாப் பிரிக்கத் தெரியணும். இதுதாங்க வெண்பாவில் முக்கியம். அது எப்படி செய்யறது. அதைத்தான் இப்போ சொல்ல போறேன்.

அலகிடுதல்

ஒரு சீரை எப்படி அசை பிரிக்கிறதுன்னு பார்த்தா (இதற்கு அலகிடுதல்ன்னு பெயர்) ரொம்ப ஈசி. ஒரு சீரை எடுத்து அதன் உடம்பில் சில கோடுகள் போட்டு அறுத்தோம்னா ஒவ்வொரு பகுதியும் ஒரு அசை. எப்படி இந்த கோட்டை போடணும்? எப்ப ஒரு மெய்யெழுத்து வந்தாலும் ஒரு கோடு, தனியா ஒரு நெடில் வந்தா ஒரு கோடு, ரெண்டு குறில் சேர்ந்து வந்தா ஒரு கோடு, ஒரு குறிலும் அதன் பின் நெடிலும் வந்தா ஒரு கோடு. இந்த கடைசி மூணு டைப்பிலும் நீங்கள் கோடு போடுமிடத்தில் ஒரு மெய்யெழுத்து வந்தால் அதைத்தாண்டி கோட்டை போடுங்கள். அவ்வளவுதான். இப்போ எடுத்துக்காட்டு.

மன்/னன் - மெய்யெழுத்து வந்தா ஒரு கோடு. ஆகவே மன் - ஒரு அசை, னன் ஒரு அசை.
மா/னம் - ஒரு நெடில் வந்தா ஒரு கோடு. மெய்யெழுத்து வந்தா ஒரு கோடு. ஆகவே மா - ஒரு அசை. னம் - ஒரு அசை.
மரு/து - ரெண்டு குறில் வந்தா ஒரு அசை. ஆகவே மரு - ஒரு அசை. மீதி இருக்கும் து - ஒரு அசை.
வரா/மல் - ஒரு குறிலும் அதன் பின் ஒரு நெடிலும் வந்தா ஒரு அசை. வரா - ஒரு அசை. மல் - ஒரு அசை.
மாற்/று - மெய்யெழுத்துடன் நெடில்.
மருந்/து - இரு குறிலுடன் மெய்.
பராத்/பரன் - குறிலுடன் நெடில். அதன்பின் மெய்.

பிறர்க்கு, யவர்க்கு என்றெல்லாம் வரும் இடங்களில் இந்த கோடானது அந்த இரண்டு மெய்யெழுத்துக்களுக்குப் பின் போடணும், இப்படி - பிறர்க்/கு, யவர்க்/கு

ஒரு சீரில் ரெண்டு அசை இருந்தா அது ஈரசைச்சீர். மூணு இருந்தா அது மூவசைச்சீர். and so on. அலகிடுதல் இவ்வளவுதாங்க. இதுக்கு பேர் வெச்சிருக்காங்க. அதையும் தெரிஞ்சுகிட்டா நல்லது. அசையில் மெய்யெழுத்துகளை சேர்க்காமல் ஒரு எழுத்து இருந்தா அது நேர். இரண்டு எழுத்து இருந்தா நிரை. இந்த பேருங்களே அப்படிதான் இருக்கு பாருங்க. இதுங்க வர காம்பினேஷனுங்களுக்கும் பேரு இருக்கு.

நேர் நேர் - தேமா
நிரை நேர் - புளிமா
நேர் நிரை - கூவிளம்
நிரை நிரை - கருவிளம்

நேர் நேர் நேர் - தேமாங்காய்
நேர் நேர் நிரை - தேமாங்கனி

நிரை நேர் நேர் - புளிமாங்காய்
நிரை நேர் நிரை - புளிமாங்கனி

நேர் நிரை நேர் - கூவிளங்காய்
நேர் நிரை நிரை - கூவிளங்கனி

நிரை நிரை நேர் - கருவிளங்காய்
நிரை நிரை நிரை - கருவிளங்கனி

இந்த பேருங்களும் அந்தந்த விதிகளுக்கு உட்பட்டே வருது பாருங்க. இப்போதைக்கு மூன்று அசைகளோட நிறுத்திக்கலாம். இப்போ இதை வச்சு என்ன வெண்பா விதிகள் இருக்குன்னு அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

அதுவரை ஆளுக்கு ஒரு திருக்குறளை எடுத்து அலகிட்டுப் பாருங்க பார்க்கலாம். அலகிட்டதைப் பின்னூட்டத்தில் போட்டா சரியாச் செய்யறீங்களான்னு பார்த்துச் சொல்ல வசதியா இருக்கும். எதாவது சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில் கேளுங்கள். அதன் பதில்களும் அவ்வப்பொழுது பதிவில் சேர்க்கப்படும்.

65 comments:

said...

ஒரு எடுத்துக்காட்டா நான் ஒரு குறளை அலகிட்டு காண்பிக்கறேன்.

வான்/நின் றுல/கம் வழங்/கி வரு/தலால்
நேர்நேர் நிரைநேர் நிரைநேர் நிரைநிரை
தேமா புளிமா புளிமா கருவிளம்

தான்/அமிழ்/தம் என்/றுண/ரற் பாற்/று.
நேர்நிரைநேர் நேர்நிரைநேர் நேர்நேர்
கூவிளங்காய் கூவிளங்காய் தேமா.

இப்படித்தாங்க அலகிடணும். புரியுதா?

said...

கொத்ஸ்,

அருமையான விளக்கம். இனிமே வெண்பா'வா வடிச்சிற வேண்டியதுதான்:)

said...

ராம்,

வெண்பான்னு சொன்னாலும் பயப்படாம தைரியமா உள்ள வந்துட்டீங்க. அப்படியே உங்களுக்குப் பிடிச்ச குறள் ஒண்ணை எடுத்து அலகிட்டுப் பார்க்கலாமே.

said...

நீங்க இதோட மூணாவது தடவையா பதிவா சொல்றீங்க. பலதடவை சாட்ல சொன்னீங்க. இன்னும் மண்டைல ஏறினபாடில்லை.

நான் கவிஜனாகவே முடியாதா கொத்ஸு? சொல்லு கொத்ஸு சொல்லு!

said...

ஓ காவடியாட்டம் போடற அலகு குத்திரவங்களை பார்த்து, அதனால தான் உடம்புல அங்கங்க குத்திக்கிட்டா அலகிடுதல்னு சொல்றாங்களா, தமாஷ் இருக்கட்டும் நல்லா துவக்கி இருக்கீங்க கொத்ஸ், வெறும் வெண்பாவோட நிறுத்திடமா, சுத்தமா தமிழ் இலக்கணம் கத்து கொடுத்துடுவோம் விக்கியிலே! என் மீசை தமிழ் ஐயாவை கண்ணு முன்னாடி கொண்டு வந்தீட்டீங்க!

said...

///...ஓ காவடியாட்டம் போடற அலகு குத்திரவங்களை பார்த்து,///ppp

அதே அதே சபாபதே


காவடி ஆடுறவங்களை பார்த்தா ஒரு தாளக்கட்டு இருக்குமுங்க .. அப்போ பாடற பாடல்கல் சிந்து வகைப் பாடல்கள். காவடிக்கென்றே பாடுவது காவடிச்சிந்து.


உதாரணத்துக்கு சில சிந்துவகைப் பா

வள்ளிக்குறவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும் உள்ளம் குழையுதடி கிளியே

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது

வில்லினையொத்த புருவம் வடித்தனை வேலவா வடிவேலவா

கண்ணை மூடிட்டு இந்த பாட்டுக்கான சந்தத்தோட ஒருத்தர் ஆடுறதை கற்பனை செய்தா புரியும் நான் சொல்றது.

ஆக சந்தத்துக்குட்பட்டு எழுதுவது தான் மரபு. இன்றைக்கு எத்தனை பேருக்கு வைரமுத்து எழுதிய புதுக்கவிதைகளில் குறைந்தது 10 பாடல்கள் மனப்பாடமாய் தெரியும் ?

ஆனால் பண்டைய கால பாடல்கள் இன்றைக்கும் நம்மிடம் கிடைக்கிறதென்றால் அதற்கு காரணம் சந்தம். அதைத்தான் தளைக்கு கட்டுப் படுத்தி எழுதுவது என்பது.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மைத் தூய


மரபு கவிதைகள் அப்படின்னாலே இளக்காரமா பாக்கக் கூடிய கூட்டத்துக்கு மத்தியிலே இந்த முயற்சி பாராட்ட வேண்டிய ஒன்று.

வேழம்

பிகு: வாத்தியார்ஸ். இங்க வந்து நான் குழப்பறேனா ? இப் எஸ் டெல் மி

said...

சிம்பிளான விதிமுறை. ஒத்த துருவங்கள் விலகும் (காய்ச்சீர் தவிர)

இன்னும் சுலுவா சொல்லவா ?

நேரசை வந்து வடதுருவம்னு வச்சிப்போம்

நிரையசை வந்து தென் துருவம் உள்ள காந்தம்னு வச்சிப்போம்.

இப்ப நேரசைல முடிந்த சீரைத் தொடர்ந்து நேரசையில் தொடங்க்கும் சீர் வராது ( காய்ச்சீர் மட்டும் விதிவிலக்கு . காய்ச்சீர் நேரசையில் தான் முடியும். அதைத் தொடர்ந்து நேரசை தான் துவக்கப் படவேண்டும் )

அதே போல் நிரையில் முடியும் சீரத் தொடர்ந்து நிரையில் தொடங்கும் சீர் வராது.

அவ்வளவு தாங்க வெண்பா..

jeeves

(வாத்தி, இன்னும் வெண்பா விதிகள் பத்திச் சொல்லலை. இது அடுத்த பதிவில் வர வேண்டிய பின்னூட்டம். அதைப் போட்ட உடனே, நானே இதை கட் பேஸ்ட் பண்ணி அங்க போட்டுடறேன். )

said...

வெண்பா வடித்தே தமிழ்ப்பா வளர்த்திட
பண்ணும் பனுவலும் பாவும் இயற்றிட
மண்ணும் விதிகளை ஈண்டு இவர்தர
யாண்டும் வளரும் தமிழ்.

said...

இகொ, பதிவு போட்டே விட்டீர்களா! ந்ன்கு தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். இதை படிப்பவர்கள் அவர்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

said...

// நான் கவிஜனாகவே முடியாதா கொத்ஸு? சொல்லு கொத்ஸு சொல்லு! //

ராமநாதன், தண்ணீரில் இறங்காமல் நீச்சல் வருமா? ஏதாவது எழுதி சரியாக இருக்கிறதா என்று கேளுங்கள். தானாக வரும் பாருங்கள். அலகிடப்பட்ட அந்த குறளைப் போலவே வேறொன்று செய்ய முயன்று பாருங்களேன். நான் ஒன்று செய்கிறேன்.

நீயின்றுன் இதயம் நயந்து வழங்கினால்
நானென்றும் வாழவைப்பேன் ஏற்று.

வெண்பாவின் இலக்கணம் என்பது ஓர் இசைக்கட்டு (மெட்டு) போன்றதுதான்.
அதில் இட்டு நிரப்புங்கள் இஷ்டம் போல!

said...

//நான் கவிஜனாகவே முடியாதா கொத்ஸு? சொல்லு கொத்ஸு சொல்லு!//

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் அப்படின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. அது மாதிரி தைரியமா இதுல இறங்குங்க. உங்களுக்கும் வெண்பா வரும் நான் உத்திரவாதம். ஆனா முதலில் நிறையா தப்பு வரும். மனம் தளராம முயற்சி பண்ணுனீங்கன்னா வெற்றி நிச்சயம்.

said...

வெ.க.நாதரே,

அலகு என்ற சொல்லுக்கு பல விதமான பொருள் உண்டு. அகராதியை நாடினால் இப்படிச் சொல்கிறது.

அலகு : 1. number, calculation; 2. measure, quantity; 3. standard of measurement; 4. cowries, small shells, as signs of number in reckoning; 5. berries of Mimusops elengi ; 6. grains of paddy; 7. ear of paddy or other grain; 8. weapon, arms; 9. pointedness; 10. blade of a weapon or instrument, head of an arrow; 11. bird's beak; 12. jaw; 13. mandibles; 14. rafter; 15. broom; 16. weaver's stay or staff to adjust a warp; 17. breadth, extension; 18. species of alternanthera -> pon2n2AgkANi ; 19. gnat; 20. a lakh of arecanuts; 21. male palmyra when tapped for juice so as to give a late yield 22. a unit of measurement in musical scale; 23. flaw (TLS)
24. harualli grass (TLS)

இதில் அளவு என்ற பொருளில் நாம் பார்க்கும் வெண்பா இலக்கணத்தில் உபயோகப்படும் இது அலகு குத்திக் கொள்வது என்பதில் கூரான ஆயுதம் என்ற பொருளில் வருமென்றே நினைக்கிறேன்.

said...

வேழம் நல்ல கருத்து சொல்லி இருக்கீங்க. காவடிச் சிந்து எல்லாம் பின்னாடி அட்வான்ஸ்ட் கோர்ஸில் யாராவது பெரியவங்கா சொல்லித் தருவாங்க. இப்போ எளிமையான வெண்பாதான்.

பொங்குகனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாட குழல் மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன் சிலை வண்டோட ... என சிறு வயதில் படித்தது இன்றும் நினைவில் நிற்பதற்கு அன்று போட்ட உரு மட்டும் காரணமில்லை. அதில் இருக்கும் ஓசை நயம்தான். அது மரபுக் கவிதைக்களுக்கே உரித்தானது.

இந்த சிறு முயற்சிக்கு உங்களை மாதிரி ஆர்வம் இருக்கறவங்க எல்லாம் வந்து ஆதரவு தரணும். அதுவே என் வேண்டுகோள்.

said...

சாத்வீகன் அருமையாகச் சொல்லி இருக்கீங்க. அதுவும் அருமையான வெண்பாவாகவே.

பனுவல் போன்று அதிகம் வழக்கில் இல்லாத சொற்களை பாவித்து அகராதியில் பொருளைப் பார்த்து தெரிந்து கொள்ளத் தூண்டிவிட்டீர்கள்.

நீங்களே வந்து ஒரு விளக்கமும் தந்தால் நன்றாக இருக்கும்.

said...

/இகொ, பதிவு போட்டே விட்டீர்களா! ந்ன்கு தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். இதை படிப்பவர்கள் அவர்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

நன்றி ஓகை.

said...

/வெண்பாவின் இலக்கணம் என்பது ஓர் இசைக்கட்டு (மெட்டு) போன்றதுதான்.
அதில் இட்டு நிரப்புங்கள் இஷ்டம் போல!//

நான் எப்பொழுதும் சொல்வது இது ஒரு குறுக்கெழுத்துப் புதிர் போலத்தான். இவ்வளவு விதிமுறைகளுக்கு உட்பட்டு நாம் சொல்ல வந்ததை சொல்லிவிட்டால் கிடைக்கும் ஆனந்தமே தனிதான். முயற்சித்துப் பாருங்களேன்.

said...

ஜீவ்ஸ் என்ற எனது வெண்பா வாத்தியே, உங்கள் பின்னூட்டம் ஒன்று உள்ளது. வேண்டுமென்றே நிறுத்தி வைத்துள்ளேன். அதில் நீங்கள் கூறி இருப்பது அடுத்த பதிவில் நான் போட வேண்டிய விதிமுறைகளைப் பற்றியது. இப்பொழுது வெளியிட்டால் குழப்பம் வருமோ என்றுதான் நிறுத்தியுள்ளேன். விரைவில் வெளியிடுகிறேன்.

said...

//நீயின்றுன் இதயம் நயந்து வழங்கினால்
நானென்றும் வாழவைப்பேன் ஏற்று.//

ஓகை, முதல் இரு சொற்களை எடுத்துக் கொண்டால் தளை தட்டுகிறது பாருங்கள்.

said...

என்ன இது பதிவு போட்டு 24 மணி நேரம் ஆச்சு, ஒருத்தருக்குக் கூடவா ஒரு குறளை கொண்டு வந்து அலகிடணமுன்னு தோணலை?!

நானும் விடறதா இல்லை. இன்னிக்கு இன்னும் ஒரு குறளை எடுத்து நானே அலகிடப் போறேன். மக்கள்ஸ், மரியாதையா வந்து முயற்சி பண்ணுங்க. எனக்கு இன்னும் எவ்வளவு குறள் இருக்குன்னு தெரியுமில்ல!

என்/பி லத/னை வெயில்/போ/லக் கா/யுமே
நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நேர் நேர் நிரை
தேமா புளிமா புளிமாங்காய் கூவிளம்

அன்/பி லத/னை அறம்.
நேர் நேர் நிரை நேர் நிரை
தேமா புளிமா நிரை.

said...

பெனாத்தலார் அனுப்பிய மடலிலிருந்து...

ரொம்பக் கஷ்டப்படறீங்க போல யாரும் அலகிடலைன்னு:-)

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் உலகு
நெரு| நல் உள|னொரு|வன் இன்|றில்|லை என்|னும்
நிரை நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
பெரு|மை உடைத்|திவ் உலகு
நிரை நேர் நிரை நேர் நிறைபு
புளிமா புளிமா சிறப்பு

said...

(1) கூவிளம் தேமாங்காய் கூவிளம்

(2) கூவிளம் கூவிளம் கூவிளம் கருவிளம்

(1) எப்/பொருள் யார்/யார்/வாய்க் கேட்/பினும்

(2)அப்/பொருள் மெய்ப்/பொருள் காண்/ப தறி/வு

சரியா?

said...

அழகு,
வந்து முயற்சி செய்தமைக்கு நன்றி. கிட்டத்தட்ட சரியா செஞ்சுட்டீங்க.

முதலில் குறளில் முதல் அடியில் நான்கு சீர்களும், இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் வரும்.


எப்/பொருள் யார்/யார்/வாய்க் கேட்/பினும் அப்/பொருள்

நேர்நிரை நேர்நேர்நேர் நேர்நிரை நேர்நிரை

கூவிளம் தேமாங்காய் கூவிளம் கூவிளம்

மெய்ப்/பொருள் காண்/ப தறி/வு.
நேர்நிரை நேர்நேர் நிரைநேர்
கூவிளம் தேமா கருவிளம்

நீங்க இந்த காண்ப என்ற சீரை மட்டும் தப்பா கூவிளம்ன்னு சொல்லிட்டீங்க. அது வந்து தேமாவா இருக்கணும். புரியுதா?

மீண்டும் முயற்சிக்கு நன்றி, இன்னொரு குறளை எடுத்து தப்பில்லாம போடுங்க!

said...

எனக்கும் இலக்கணத்துக்கும் கொஞ்ச தூரம்தான்.
அதுவும் தமிழ் வித்துவானைப் பார்த்தால், காலை வணக்கம் ஐயா
சொல்லக் கூட பயப்படும் அளவிற்கு இருப்பார்.

ஆனால் கொத்ஸ், உங்க பதிவைப் படித்ததும் மறுபடி வெண்பா பக்கம் போகலாமானு ஆசை வருகிறது.
முதியோர் கல்வியும் உண்டா?:-)

said...

"இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநேர் நிரைநேர்நேர்
புளிமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய்


மாசறு காட்சி யவர்க்கு."
நேர்நேர் நேர்நேர் நிரைநேர்
தேமா தேமா புளிமா

அய்யா,
உங்கள் பாடத்தைப் பார்க்காமல் 48 ஆண்டுகளுக்கு முன்பு எங்க தமிழாசிரியர் கந்தசாமிப் புலவர் சொல்லிக்கொடுத்ததை நினைவில் வைத்து எழுதியுள்ளேன்.

எங்கள் தமிழாசிரியருக்கு என் அஞ்சலிகள்.
ஆனால் நான் அவர் பெயருக்கு எவ்வளவு களங்கம் கற்பித்துள்ளேன் என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

அந்த 'யவர்க்கு'-அதில் ஒரு ஐயம். இரண்டு மெய்யையும் ஒன்றாகத்தானே கருத வேண்டும்?

பார்த்து மதிப்பெண்கள் போடுங்கள் - பெயரே இலவசம் ..!

said...

இ.கொ,
குறள் சொல்ல ரெடி.
ஆனால் அலகிடப் போனால் கொத்துகிறது.
காய்,கனி என்று பார்த்தால் பசி வேறு வந்திடும்.
அதனால் தமிழையா,
நான் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளுகிறேன்.
//
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்.//

முதலில் மழுங்கி இருக்கும் தமிழறிவைக் கூர் செய்கிறேன்.
பிறகு பார்க்கலாம்.
அற்புதமாக இருக்கிறது கொத்ஸ்.

said...

// -- //நீயின்றுன் இதயம் நயந்து வழங்கினால்
நானென்றும் வாழவைப்பேன் ஏற்று.//

ஓகை, முதல் இரு சொற்களை எடுத்துக் கொண்டால் தளை தட்டுகிறது பாருங்கள்.//

உண்மைதான். சரிபடுத்தியது:

நீயின் றிதயம் நயந்து வழங்கினால்
நானென்றும் வாழவைப்பேன் ஏற்று.

(ஓகை, புதிதாக வருபவர்கள் குழம்ப வேண்டாமென முதலிரண்டு சீர்களை புணர்ச்சி விதிகளின் படி மாற்றியுள்ளேன். தவறாக எண்ண மாட்டீர்கள் என்ற தைரியம்தான்.)

said...

//எனக்கும் இலக்கணத்துக்கும் கொஞ்ச தூரம்தான்.//

வல்லியம்மா, கொஞ்ச தூரம்தானே!! ரெண்டு எட்டு எடுத்து வையுங்க, இந்தப் பக்கம் வந்திட்டலாம்.

//அதுவும் தமிழ் வித்துவானைப் பார்த்தால், காலை வணக்கம் ஐயா
சொல்லக் கூட பயப்படும் அளவிற்கு இருப்பார்.//

என்னை பார்த்தா அப்படியாத் தெரியுது? :))

//ஆனால் கொத்ஸ், உங்க பதிவைப் படித்ததும் மறுபடி வெண்பா பக்கம் போகலாமானு ஆசை வருகிறது.//

வருதா! வருதா! நீங்களாவது வருதுன்னு சொன்னீங்களே. கட்டாயம் வாங்க. அதுக்கு என்னாலான உதவியைப் பண்ணறேன்.

//முதியோர் கல்வியும் உண்டா?:-)//

முதியோர் கல்வி, மிதியோர் கல்வி எல்லாமே உண்டு. மிதிப்போர், அடிப்போர் எல்லாம் வந்தா மட்டும் தல கைப்பு பக்கம் கை காமிச்சு விட்ட்டுட்டு ஒதிங்கிடுவேன்! :))

said...

தருமி,

உங்களை ஐயான்னு கூப்பிட்டா மட்டும் மூக்குக்கு மேல கோபம் வருது. ஆனா நீங்க கூப்பிட்டா சரியா? :)

வெண்பான்னு ஓடுவே ஓடுவேன்னு சொல்லிட்டு இப்போ தைரியமா களத்துல இறங்கிட்டீங்களே. வெரி குட்.

48 வருஷத்துக்கு முன்னாடி படிச்சது இப்போ இவ்வளவு ஞாபகத்துல இருக்கா!! அம்மாடி உங்க தமிழ் ஆசான் நல்லாத்தான் கத்து தந்திருக்காரு.(அப்பவும் உங்களுக்கு க்ரெடிட் குடுக்க மாட்டோமில்ல!)

நம்ம பதிவையும் ஒரு வாட்டி படிச்சு இருக்கலாமில்ல. சரி போகாட்டும்.

said...

தருமி, 48 வருஷம் முன்னாடி படிச்ச சிலபஸில் கேள்வி கேட்டாலும் நல்லாத்தான் பதில் சொல்லி இருக்கீங்க. ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் தப்பு.

"இருள்/நீங்/கி இன்/பம் பயக்/கும் மருள்/நீங்/கி
நிரைநேர்நேர் நேர்நேர் நிரைநேர் நிரைநேர்நேர்
புளிமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய்


மா/சறு காட்/சி யவர்க்/கு."
நேர்நிரை நேர்நேர் நிரைநேர்
கூவிளம் தேமா புளிமா

இரண்டாவது அடியில் மாசறு என்பதை தேமா எனச் சொல்லிவிட்டீர்கள், அது கூவிளமாக அல்லவா இருக்க வேண்டும்? புரிகிறதா?

//யவர்க்// - இரண்டு மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து வந்தாலும் அவைகளை ஒரு மெய்யைக் கையாள்வது போலவே கருதவேண்டும். தாங்கள் செய்தது சரிதான்.

இப்போ இன்னும் ஒண்ணு, நம்ம பதிவையும் படிச்சிட்டு அப்புறம் சரியா போடுங்க பார்க்கலாம். (யாருப்பா அங்க? "சூப்பர், வாத்தியாருக்கே வீட்டுப் பாடம் குடுத்த கொத்ஸ் வாழ்க"ன்னு கோஷம் போடறது?)

said...

//குறள் சொல்ல ரெடி.
ஆனால் அலகிடப் போனால் கொத்துகிறது.//

அலகுன்னு இருந்தா கொத்தத்தானே செய்யும். கொத்தனாருக்கிட்ட வந்துட்டீங்க இல்ல, இப்போ பாத்துக்கலாம்.

//காய்,கனி என்று பார்த்தால் பசி வேறு வந்திடும்.
அதனால் தமிழையா,
நான் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளுகிறேன்.//
அதெல்லாம் இருக்கட்டும். வயிராற சாப்பிட்டு வந்து ஒரு முயற்சி பண்ணலாமே. சும்மா பயப்படாம முதல் அடியை எடுத்து வையுங்க.

இப்போ உங்களுக்காக நீங்க குடுத்த குறளை நான் அலகிடுகிறேன். இதைப் பார்த்து நீங்களும் வேறொரு குறளை எடுத்துப் பாருங்களேன்.

உழு/துண்/டு வாழ்/வா/ரே வாழ்/வார்/மற் றெல்/லாம்
நிரைநேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா

தொழு/துண்/டு பின்/செல் பவர்.
நிரைநேர்நேர் நேர்நேர் நிரை
புளிமாங்காய் தேமா நிரை.

said...

தருமி,

//யவர்க்/கு்// - நீங்க அலகிட்ட விதம் சரிதான். ஒரு மெய்யெழுத்து வந்தாலும் சரி, ரெண்டு வந்தாலும் சரி. அதுக்கான ட்ரீட்மெண்ட் ஒண்ணுதான்.

said...

யா/தா/னும் [நேர்+நேர்+நேர்] நா/டா/மல் [நேர்+நேர்+நேர்] ஊ/ரா/மால் [நேர்+நேர்+நேர்] என்/னொரு/வன் [நேர்+நிரை+நேர்]

சாந்/துணை/யும் [நேர்+நிரை+நேர்] கல்/லா [நேர்+நேர்] தவா/று [நிரை+நேர்].

சரி???

said...

வாங்க அழகு. இப்போ சரியா இருக்கு! இப்போ அடுத்தது வெண்பா விதிகள் என்னென்னன்னு தெரிஞ்சுக்க ரெடியாகிட்டீங்கன்னு நினைக்கறேன். அதை அடுத்த பதிவா நாளைக்குப் போட்டுடலாமா? அது வரை இன்னும் கொஞ்சம் அலகிடப் ப்ராக்டீஸ் பண்ணிக்கோங்க.

ஒரு சின்ன வேண்டுகோள். நேர்நேர்நேர் அப்படின்னு நிறுத்தாம அதோட தேமாங்காய் அப்படின்னும் போட்டுக்குங்க. ஏன் சொல்லறேன்னா அதை வெச்சுதான் அந்த விதிகள் எழுதப்பட்டு இருக்கு.

நீங்க போட்ட குறள்

யா/தா/னும் [நேர்+நேர்+நேர்] (தேமாங்காய்) நா/டா/மல் [நேர்+நேர்+நேர்](தேமாங்காய்) ஊ/ரா/மால் [நேர்+நேர்+நேர்] (தேமாங்காய்)என்/னொரு/வன் [நேர்+நிரை+நேர்] (கூவிளங்காய்)

சாந்/துணை/யும் [நேர்+நிரை+நேர்](கூவிளங்காய்) கல்/லா [நேர்+நேர்](தேமா) தவா/று [நிரை+நேர்] (புளிமா).

ஓக்கேவா?

said...

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை!

இ.கொ.அவர்களே! இது
தேமா புளிமாங்காய் தேமா புளிமாங்காய்
தேமாங்காய் தேமா கருவிளம் - கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
கூமாங்காய் தேமா புளி/நிரை - சரிதானே?!

இதில் என் கேள்வி என்னவென்றால், ஈற்றடியில் வரும் "எல்லோர்க்கும்" என்பது "எல்லோருக்கும்" என்று வந்தால் நாலசைச் சீராகிவிடுமல்லவா? (தேமாந்தண்பூ?)

said...

மன்னிக்கவும், சென்ற பின்னூட்டத்தில்
'தேமாங்காய்' என்று எழுதுவதற்கு, தவறுதலாக 'கூமாங்காய்' என்று எழுதிவிட்டேன். (Slip of the finger!)

(என் தாய்மொழி தமிழாக இருந்தாலும் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் பள்ளியில் படித்ததில்லை!)

said...

வாங்க இப்னு, ஏற்கனவே வெண்பா எழுதறவங்க உங்களுக்கு நான் என்ன சொல்லித் தரது?

நீங்க சரியாத்தான் எழுதி அலகிட்டு இருக்கீங்க! ஈற்றடியில் தேமாங்காய் கூமாங்காயாகப் போன ரகசியம் என்னவோ! :))

எல்லோருக்கும் - இது நாலசைச்சீர்தாங்க.

ஔவைப்பாட்டியின் மூதுரை அளித்தமைக்கு நன்றி. அருமையான பொருள். நம்மால மழை பெய்யுதா, இல்லை நாம பாட்டி சொன்ன புல்லான்னு யோசிச்சி பார்க்கணும்.:)

said...

//மன்னிக்கவும், சென்ற பின்னூட்டத்தில்
'தேமாங்காய்' என்று எழுதுவதற்கு, தவறுதலாக 'கூமாங்காய்' என்று எழுதிவிட்டேன். (Slip of the finger!)//

நான் ரகசியத்தைக் கேட்குமுன் பதில் சொல்லிட்டீங்களே!

//(என் தாய்மொழி தமிழாக இருந்தாலும் 10ம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் பள்ளியில் படித்ததில்லை!)//

இப்போதான் வெண்பா எழுதற அளவுக்கு இருக்கீங்களே. அப்புறம் என்ன? நான் 10ஆவது வரைதான் தமிழ் படித்தேன். படிக்கும் காலத்தில் இது எல்லாம் வேப்பங்காய். இப்போதான் அருமை பெருமை தெரிஞ்சு திரும்ப படிக்க ஆரம்பிச்சு இருக்கேன். நம்ம இணையத்தின் மூலமா சொல்லிதர நண்பர்கள் நிறையா இருக்காங்க.

இந்த பதிவு எல்லாம் ஒரு சின்ன யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் மேட்டர்தான்! :)

said...

அசையும் தளையும் கூடிட வருமே
இசையாய் வெண்பா பிறப்பு

கொத்சு...இது சரியா இருக்கா?

அசையும் - அசை யும் - நிரை நேர் - புளிமா
தளையும் - தளை யும் - நிரை நேர் - புளிமா
கூடிட - கூ டிட - நேர் நிரை - கூவிளம்
வருமே - வரு மே - நிரை நேர் - புளிமா
இசையாய் - இசை யாய் - நிரை நேர் - புளிமா
வெண்பா - வெண் பா - நேர் நேர் - தேமா
பிறப்பு - பிறப் பு - நிரை நேர் - புளிமா

சரியாக அலகிட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். ஆனால் வெண்பா இலக்கணம் பொருந்தி வருகிறதா என்று நீர்தான் சொல்ல வேண்டும். இதில் மாமுன் நிரை, விளமுன் நிரை, மாமுன் நேர் ஆகிய மூன்றும் வந்திருக்கிறது.

said...

மாமுன் நேர் வரக்கூடாது என நினைக்கிறேன். சரியா?

said...

ராகவண்ணா, நீங்கள் வந்துட்டீங்களா! வெரி குட்!

அலகிட்டது சரி, கொஞ்சம் தளை தட்டல் இருக்கிறது. அதுக்கு இன்னும் ஒரு நாள் பொறுங்கள். நாளை வெண்பா விதிகள் பத்தி இரண்டாம் பாகம் வருது. :)

said...

இப்னு ஹம்துன். said...

மன்னிக்கவும், சென்ற பின்னூட்டத்தில்
'தேமாங்காய்' என்று எழுதுவதற்கு, தவறுதலாக 'கூமாங்காய்' என்று எழுதிவிட்டேன். (Slip of the finger!)

/////////

அதுவும் சரிதானே ?


ஏற்கனவே என் பதிவில் சொன்னது தான்

நேர் நேர் என்றால் தேமாவாகத் தான் இருக்கவேண்டும் என்றில்லை அது ஹேமாவாகவும் இருக்கலாம் பாமாவாகவும் இருக்கலாம் ;) வாய்ப்பாடு ஒரு ரெஃபரன்ஸ்க்கு தானே


அன்புடன்
ஜீவ்ஸ்

said...

அசையும் தளையும் கூடிட வருமே
இசையாய் வெண்பா பிறப்பு///



இராகவனே இரமணா இரகுநாதா!!!!

அசையும் தலையில் அழகாய்த் தெரியும்
இசையின் இனிமையே காண்!

said...

உண்மைதான் வாத்தியாரே, வாய்ப்பாடு ஒரு ரெபரன்ஸ்தான். இருந்தாலும் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இப்படி மாற்றினதுனால் ஒரு தமாஷ் பண்ணினேன். பதிவு வேற கொஞ்சம் சீரியஸா இருக்கா. அதான்.

மற்றபடி கூமுட்டையும் தேமாங்காயும் ஒன்றே. ஆனால் தேமாங்காய் விற்பது எளிதல்லவா! :))

said...

// இலவசக்கொத்தனார் said...
ராகவண்ணா, நீங்கள் வந்துட்டீங்களா! வெரி குட்!

அலகிட்டது சரி, கொஞ்சம் தளை தட்டல் இருக்கிறது. அதுக்கு இன்னும் ஒரு நாள் பொறுங்கள். நாளை வெண்பா விதிகள் பத்தி இரண்டாம் பாகம் வருது. :) //

அது சரி....நீங்க அடுத்த பதிவு போடுற வரைக்கும் காத்திருக்க முடியுமா?

அசையை மெதுவாய் அசைந்தே தருவது
கசையால் அடித்திடும் வகையே

இது உங்களுக்குத் தெரியாதா?

said...

// Jeeves said...
அசையும் தளையும் கூடிட வருமே
இசையாய் வெண்பா பிறப்பு///

இராகவனே இரமணா இரகுநாதா!!!!

அசையும் தலையில் அழகாய்த் தெரியும்
இசையின் இனிமையே காண்! //

அசையும் தளையும் அமைந்திடு முறையில்
இசைவாய் எழும்வெண் பா

இதையும் பகுத்தே இசைவெனச் சொல்வீர்
எதையும் விளக்கும் ஜீவ்ஸ்

said...

//அசையை மெதுவாய் அசைந்தே தருவது
கசையால் அடித்திடும் வகையே //

ஒரே ஒரு நாள் காத்திருக்கச் சொன்னா இப்படியா? நாளை காலை வரும் பதிவு படித்தீர்களானால் வெண்பா விதிகள் தெரியும் தளை தட்டல் வராது!

மதியிரவு போனால் விடியும், வெண்பா
விதியும் தெரியும் நம்பு!

said...

இ.கொ,
பதிவுக்கு மிக்க நன்றி.இப்போது தான் படித்தேன். சில விடயங்கள் புரியவில்லை. உங்களிடம் இது பற்றிக் கன[நிறைய] கேள்விகள் கேட்க வேண்டும். இப்போ கொஞ்சம் busy. பேந்து[அப்புறம்] வாறேன்.

பி.கு:- கன/கனக்க = நிரம்ப, நிறைய, ரொம்ப, அதிகம், அதிக பாரம் என பல பொருளில் வரும்.
எடுத்துக்காட்டுகள்:-
[1]என்ன கன[ரொம்ப] நாளாய்க் காணேல்லை
[2]திருவிழாவுக்கு கன[நிறைய/அதிகம்] சனம் வந்தது.
[3]தேத்தண்ணிக்கு[தேநீர்/சாயா] சீனி கனத்துப்[அதிகம்] போச்சு

said...

வெற்றி, வாங்க வாங்க. நீங்க பதிவு போடச் சொன்னதுனாலதான் இந்தப் பதிவே!

//பதிவுக்கு மிக்க நன்றி.இப்போது தான் படித்தேன். சில விடயங்கள் புரியவில்லை. உங்களிடம் இது பற்றிக் கன[நிறைய] கேள்விகள் கேட்க வேண்டும்.//

என்ன கேள்விகள் இருக்கோ கேளுங்க. எனக்கு தெரிஞ்சதுக்கு பதில் சொல்லறேன். மத்ததை சேர்ந்தே கத்துக்கலாம். இங்க பல ஜாம்பவான்கள் இருக்காங்க கத்துக் குடுக்க!

//பேந்து[அப்புறம்] வாறேன்.//
ஆறுதலா வாங்க, அவசரமோ இல்லை!

said...

//பி.கு:- கன/கனக்க = நிரம்ப, நிறைய, ரொம்ப, அதிகம், அதிக பாரம் என பல பொருளில் வரும்.//

இதைப் பற்றி எழுத ஆரம்பித்தால் ஒரு பதிவே எழுதலாம் போல இருக்கு. குமரன் /ஜிராவிடம் சொல்லிச் சொல் ஒரு சொல்லில் போடச் சொல்ல வேண்டியதுதான்.

இதுவும் தமிழ்நாட்டில் பாவிக்கப்படும் சொல்தான். இப்பொழுதும் 'இப்பதிவு கன ஜோராக இருக்கிறது' என்பது போல பாவிக்கப்படுகிறது. கன மழை, கன இருள் என்ற இடங்களில் எல்லாம் கூட 'மிகவும்' என்ற பொருள்தானே வருகிறது.

அகராதியைப் பார்த்தாலும்

கன (p. 220) [ kaṉa ] , VI. v. i. grow heavy, be heavy, பாரமாயிரு; 2. be thick, close, crowded, நெருங்கு; 3. be abundant, copious, அதிகரி; 4. be honourable, noble, பெருமையுறு.

தலை கனத்துக்கொண்டது, the head is grown heavy through cold.

வயிறு கனத்துக்கொண்டது, the stomach is heavy, through indigestion; 2. the belly is grown big with child.

கனக்கக் கொடுக்க, to give plentifully.

கனக்கச் சலிக்க, to be very sorry.

கனத்த ஆக்கினை, severe punishment.

கனத்தகுடி, an illustrious and noble family.

கனத்த சமுசாரம், a numerous family.

கனத்த நாள், a critical day in diseases, as the new moon or full moon.

கனத்தபயிர், thick crop.

said...

நமக்குத் தெரியாத விசயம் பேசிக்கிட்டிருக்கீங்கன்னு தான் மூணு நாளா இந்தப் பக்கம் தலை காட்டல. சரி இன்னிக்கு இதையும் ஒரு try விட்டுப் பார்ப்போம்னு...

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

அன்/பிலார் எல்/லாந் தமக்/குரி/யர் அன்/யுடை/யார்
நேர் நிரை, நேர் நேர், நிரை நிரை நேர், நேர் நிரை நேர்
கூவிளம் தேமா கருவிளங்காய் கூவிளங்காய்

என்/பும் உரி/யர் பிறர்/க்/கு(?)
நேர் நேர், நிரை நேர், நிரை நேர்(?)
தேமா புளிமா புளிமா(?)

திருக்குறள் நேர் அல்லது நிரையில் தான் முடியுமென்று நினைத்தேன்? அப்படியானால் "பிறர்க்கு" என்பதை என்ன செய்வது?

said...

வேழம்,

//மரபு கவிதைகள் அப்படின்னாலே இளக்காரமா பாக்கக் கூடிய கூட்டத்துக்கு மத்தியிலே இந்த முயற்சி பாராட்ட வேண்டிய ஒன்று.//

ஆகா அப்படியொரு கூட்டம் இருக்குதா? புதுக்கவிதை அப்படின்னாலே இளக்காரமா பார்க்கிற கூட்டத்தைப் பார்த்துப் பார்த்துப் பழகி (புளிச்சு?) போச்சா, அதான் நீங்க சொல்ற கூட்டத்தை கவனிச்சதேயில்லை :-D

said...

முதலில் அலகிட்டது தப்புன்னு நினைக்கிறேன்.. இதைப் பாருங்க (பிறர்க்கு தவிர)

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

கூவிளம் தேமா கருவிளங்காய் கூவிளங்காய்
தேமா புளிமா ...(?)

said...

சாரி, 3வது முயற்சி :(

அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

கூவிளம் தேமா கருவிளங்காய் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா

said...

//நமக்குத் தெரியாத விசயம் பேசிக்கிட்டிருக்கீங்கன்னு தான் மூணு நாளா இந்தப் பக்கம் தலை காட்டல. சரி இன்னிக்கு இதையும் ஒரு try விட்டுப் பார்ப்போம்னு...//

சேது, சரியான சமயத்துக்கு வந்து 50ஆவது பின்னூட்டத்தை போட்டுட்டீங்களே! வாழ்த்துக்கள்!

அலகிடுதல் சரியாத்தான் பண்ணி இருக்கீங்க. இதுக்கும் வாழ்த்துக்கள்!

//"பிறர்க்கு" என்பதை என்ன செய்வது?//

தருமிக்கு பதில் சொல்லி இருக்கேனே. இதை இப்படிப் பிரிக்கணும் - பிறர்க்/கு அதுனால இது புளிமா. சரி இதை பதிவை எடிட் பண்ணி சேர்த்துடறேன்.

said...

என்ன சேது இவ்வளவு டென்ஷன்?

//கூவிளம் தேமா கருவிளங்காய் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா//

முதலில் சொன்னதும் இதுதானே! சரியாத்தான் இருக்கு! :))

அடுத்த பாகத்தைப் படியுங்க. உங்களோட முதல் வெண்பாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!

said...

//திருக்குறள் நேர் அல்லது நிரையில் தான் முடியுமென்று நினைத்தேன்?//

சேது,

இதுக்கு பதில் அடுத்த பதிவில் இருக்கு. வெண்பா விதிகள்படி ஒரு வெண்பாவானது நாள், மலர், காசு, பிறப்பு என்ற வகையில் முடியும். இதுக்கு டெக்னிக்கல் பேருங்க இருக்கு. ஆனா இப்போதைக்கு இப்படிக் கத்துக்குங்க. அப்புறமா அந்த பேர் எல்லாம் தெரிஞ்சுக்கலாம்.

said...

ஹாஹா.. முதல் முறையே ஒழுங்கா எழுதி, அதைத் தப்புன்னு நினைச்சு ரெண்டாவதும் அதையே எழுதி, அதையும் தப்புன்னு நினைச்சு மூணாவதும் அதையே எழுதிவச்சிருக்கேன்னா பாருங்க வெண்பா என்னை எத்தனை டென்சனாக்கிடுச்சுன்னு! :-D அடுத்த பதிவைப் பார்த்தேன்.. என் புதுக்கவிதை ஒண்ணை வெண்பாவா மாற்ற முயற்சி பண்ணி, ரொம்ப தளை தட்டவும் அம்போன்னு விட்டுட்டேன். ஆனா அம்போன்னு விடுற ஆட்டமில்ல இது.. நிச்சயம் மீண்டு(ம்) வருவேன்!

said...

//ஹாஹா.. முதல் முறையே ஒழுங்கா எழுதி, அதைத் தப்புன்னு நினைச்சு ரெண்டாவதும் அதையே எழுதி, அதையும் தப்புன்னு நினைச்சு மூணாவதும் அதையே எழுதிவச்சிருக்கேன்னா பாருங்க வெண்பா என்னை எத்தனை டென்சனாக்கிடுச்சுன்னு! :-D//

:-D டென்சனாவாம எழுதுங்க! நல்லா வரும்!

//என் புதுக்கவிதை ஒண்ணை வெண்பாவா மாற்ற முயற்சி பண்ணி, ரொம்ப தளை தட்டவும் அம்போன்னு விட்டுட்டேன்.//

வேணுமுன்னா முதலில் ஒரு ரெண்டு வரியில் ரெண்டு மூணு எழுதுங்க. அப்புறமா கொஞ்சம் பெரிசா ட்ரை பண்ணலாமே!

said...

நான் படிச்சுட்டேன், கொஞ்ச நாள் கழிச்சு என்னோட வரப்புல வந்து பாருங்க காதல் பால் வடிய வடிய ஒரு வெண்பா வடிச்சு வெக்கிறேன்.

said...

இன்று தான் இந்தப் பதிவையும் அடுத்தப் பதிவையும் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதோ என் பங்கிற்கு ஒரு திருக்குறள் பாவினை அலகிட்டுப் பார்க்கிறேன்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து

சொல் லுக சொல் லைப் பிறி தோர் சொல் அச் சொல் லை
வெல் லுஞ் சொல் இன் மை யறிந் து.

நேர்நிரை நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்

நேர்நிரை நேர்நேர் நிரைநேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நேர்நேர் நேர்நேர் நிரைநேர்

கூவிளம் தேமா புளிமாங்காய் தேமாங்காய்
தேமாங்காய் தேமா சிறப்பு (புளிமா)

சரியாக இருக்கிறதா?

said...

டாபிகலா ஒரு சிறு முயற்சி. சரியா இருக்கான்னு சொல்லுங்க.

தண்ணீர் வரும்வழியை தானாக முன்வந்து
உண்ணீர் உவந்தான் சிறப்பு.

நேர்நேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர்
நேர்நேர் நிரைநேர் நிரைநேர்

தேமா கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய்
தேமா புளிமா புளிமா (சிறப்பு)

said...

கொதஸ்,
மிக்க நன்றி. ஒரு முறை வாசித்துவிட்டேன். மிகவும் எளிமையாக தமிழ் இலக்கணம் தெரியாதவர்களே புரிந்து கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. இருப்பினும் நீங்கள் குதிப்பிட்டுள்ள சில விதிமுறைகள் நேர்/நிரை போன்றன விளங்கவில்லை. இன்னும் இரு முறை வாசித்து விட்டு வருகிறேன்.

said...

கலக்கல், கொத்ஸ்! (இப்பயாவது பார்த்தேனே...!!)

புரிஞ்சதாலாம் கேக்ககூடாது. எளிமையாதான் சொல்லிருக்கீங்க..ஆனா இன்னும் இரண்டு தடவை 'படிச்சா'தான் ......

said...

கொத்தனாரே ! மேற்கண்ட பதிவுகளெல்லாம் 2007,2008 ஆம் ஆண்டு பதிந்ததாகக் காண்கிறேன். இப்போது நான் ஒரு குறளை அசை பிரித்து பதிவிட்டால் பதில் வருமா ?

said...

கொத்தனாரே ! மேற்கண்ட பதிவுகளெல்லாம் 2007,2008 ஆம் ஆண்டு பதிந்ததாகக் காண்கிறேன். இப்போது நான் ஒரு குறளை அசை பிரித்து பதிவிட்டால் பதில் வருமா ?