Monday, April 23, 2007

குட்டிப் பாப்பாக்களும் ப்ளாஷ் போட்டாக்களும்

குட்டி குழந்தைகளை ஃப்ளாஷ் போட்டு புகைப்படம் எடுத்தால் குழந்தையின் கண்பார்வை பாதிக்கப்படுமா? நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. அதுவும் முதன்முறை பெற்றோருக்கு.

நான் குழந்தை நல மருத்துவரோ, இல்லை கண் பார்வை மருத்துவரோ இல்லை. நான் தேடிப் பார்த்தவரை, நிறைய மருத்துவர்களை விசாரித்த வரையில், ஃப்ளாஷ் போட்டு படம் எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும். அதனால் தைரியமாக ஃப்ளாஷ் உபயோகிக்கலாம்.

ஆனால் ஏன் ஃப்ளாஷ் உபயோகிக்க வேண்டாம் என்பதற்கு சில காரணங்கள்

 • நேரடியான ஃப்ளாஷில் எடுக்கப்படங்கள் அழகு ரீதியாக நன்றாக இருக்காது, இயற்கை வெளிச்சத்தில் எடுப்பதே நல்லது.
 • குழந்தைக்கு ஃப்ளாஷ் வெளிச்சம் எரிச்சலை ஏற்படுத்தும். அப்புறம் போஸ் குடுக்காமல் அழ ஆரம்பித்து விடக்கூடும்.
 • குழந்தைகள் பெரியவர்களைப் போல அடிக்கடி கண் சிமிட்டுவதில்லை. ஃப்ளாஷ் வெளிச்சம் வெறுப்பபேற்றக்கூடும்.
 • சிகப்பு கண்.

குறைந்த வெளிச்சத்தில் ஃப்ளாஷ் உபயோகித்தால், கண்கள் சிகப்பாய் படத்தில் தோன்றும். ( இது ஏன் என்று வேற விக்கிப் பதிவு போட்டு விடலாம் ! ). இப்ப வரும் நிறைய புது கேமராக்களில் இதை தவிர்க்க ஃப்ளாஷ் குறைந்த நேர இடைவெளியில் இரண்டு முறை அடிக்கும். ஏற்கனவே சொன்ன மாதிரி பாப்பாக்களின் விழித்திரைகள் பெரியவர்களைப் போல அடிக்கடி மூடித் திறப்பதில்லை. அதனால் பாப்பாக்களை ஃப்ளாஷ் படம் எடுத்தால் சிகப்பு கண் வர வாய்ப்புக்கள் அதிகம்.

முடிந்தவரை ஃப்ளாஷ் போட்டு படம் எடுப்பதை தவிருங்கள். அப்படியும் முடியாமல் போனால், ஃப்ளஷின் மீது மெல்லிய துணி, டிஸ்யூ பேப்பர் போட்டு நேரடி வெளிச்சத்தை தவிருங்கள்.

இந்தப் பதிவு எழுதியது ஆனந்த் அவர்கள். புகைப்படக் கலை பற்றி பல பதிவுகளை தன் வலைப்பதிவில் எழுதியுள்ளார். இவர் எழுதும் புகைப்பட குறிப்புகள் மேலும் பல விக்கியில் வரும்.

Sunday, April 15, 2007

Global Warming - ஒரு பாமரனின் பார்வையில்

Global Warming, அதாவது புவி வெட்பநிலை அதிகரிப்பு என்பது இப்போ எல்லாராலும் பேசப்படும் ஒரு விஷயமா இருக்கு. இது பத்தி முழுசா சொல்ல ஒரு பெரிய தொடரே வேணும். இந்தப் பதிவு ஒரு அறிமுகம் மட்டுமே. இந்த விஷயத்துக்குள்ள போறதுக்கு முன்னாடி, ஒரு சின்ன புவியியல் வகுப்பு.


சூரியனைச் சுத்தி இவ்வளவு கோள்கள் இருக்கும் பொழுது நம்ம பூமியில் எப்படி உயிரினங்கள் தழைத்து செழிக்க முடிந்ததுன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா? அதுக்கு முக்கியமான காரணம் நம்ம உலகின் தட்பவெட்ப நிலைதான். இந்த மாதிரி தட்ப வெட்பநிலை இருப்பதால்தான் நம்ம பூமியில் இருக்கும் தண்ணீர் எல்லாம் ஆவியாகப் போகாமல் நம் வாழ்வுக்கு வசதியாய் இருக்கிறது. நீரின்றி அமையாது இவ்வுலகு அப்படின்னு எல்லாரும் படிச்சு இருக்கிறதுனால இதுக்கு மேலச் சொல்லத் தேவையில்லை. அதே சமயம் ரொம்ப குளிராப் போயி நம்மால இங்க இருக்கவே முடியாமப் போகாம ஒரு மிதமான தட்பவெட்பநிலை இருக்கு.

இப்படி இருக்கக் காரணம் என்னன்னு யோசிச்சா அதுக்கு முக்கியமான காரணம் நம்மை சுற்றி இருக்கும் இந்த காற்றுவெளிதான். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன் டையாக்ஸைட் எனப் பல வாயுக்குள் எல்லாம் கலந்து செய்த கலவை இந்த காற்றுவெளி.இதுல கரியமில வாயு மற்றும் சில வாயுக்கள் சேர்ந்து என்ன செய்யறாங்கன்னா, சூரியக் கதிர்களால் நம் பூமி சூடாகுது இல்லையா, அந்த சூடு மொத்தமும் அப்படியே போய்விடாமல் இருக்க உதவுகின்றன.

இயற்கையாக ஏற்படும் மாற்றங்களினால் காற்றுவெளியில் இந்த வாயுக்களின் சதவிகிதம் மாறுகிறது. அதனால் நம் புவியின் தட்பவெட்ப நிலையும் மாறுகின்றது. பல முறை நீண்ட உறைபனிக்காலமும் (Ice Age) அதன் பின் உண்டாகும் மாற்றங்கள் எல்லாம் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். இது போன்ற சுழற்சி இயற்கையாக ஏற்படுவதுதான். ஆனால் இப்பொழுது மனிதன் அதிக அளவில் எரிபொருட்களை எரிப்பதாலும், காடுவெளிகளை அழிப்பதாலும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷனர் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் நவீன இரசாயனங்களாலும் காற்றில் நாம் முன் சொன்ன வாயுக்களின் சதவிகிதம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் இன்று பூமியில் சராசரி வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத்தான் புவிவெட்பநிலை அதிகரிப்பு எனச் சொல்கின்றனர். இதனால் இன்று என்ன நடக்கிறது எனப் பார்க்கலாமா?

 • கடந்த நூறு ஆண்டுகளில் நம்ம பூமியின் சராசரி வெப்பம் உயர்ந்திருக்கும் அளவு 0.74 ± 0.18 °C (1.3 ± 0.32 °F). கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமியில் 0.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்து வருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் வளி ஆய்வுக் குழு தலைவர் ஜேம்ஸ் ஹான்சென் தெரிவித்துள்ளார்.
 • கேட்டகிரி 4 அல்லது 5 எனத் தரப்படுத்தப்பட்ட சூறாவளிகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காகி இருக்கிறது.
 • கடந்த பத்தாண்டுகளில் க்ரீன்லாந்தில் உருகிய பனிப்பாறைகளின் அளவு இரு மடங்காகிவிட்டது.
 • இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டம் 4 முதல் 8 இஞ்சு வரை உயர்ந்திருக்கிறது
 • உலகின் பல பகுதிகளில் மழையளவு சராசரிக்கு அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்யத் தொடங்கி இருக்கிறது.
 • மலைப்பகுதிகளில் வராத மலேரியா போன்ற நோய்கள் தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 7000 அடிக்கு மேல் பரவத் துவங்கி இருக்கிறது.
 • கிட்டத்தட்ட 300 விதமான செடிவகைகளும் பறவை மிருகங்களும் வெட்பம் தாங்காமல் துருவப் பகுதி நோக்கி நகரத் தொடங்கி விட்டன. (20 ஆம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டிலும் 1700 தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி உயிரினங்கள் சராசரியாக 6.5 கிலோ மீட்டர் துருவ முனைகளை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாக நேச்சர் என்ற பத்திரிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.)
என்ன படிக்கும் பொழுது அப்படி ஒன்றும் கலவரப்படும் விஷயம் மாதிரி தெரியலையே, இதுக்கா இம்புட்டு பில்டப் அப்படின்னு தோணுதா? இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போச்சுன்னா என்ன ஆகும் அப்படின்னு பார்க்கலாமா?

 • 1990 முதல் 2100 வரை சராசரி வெப்பம் 1.1 முதல் 6.4 °C வரை (2.0 முதல் 11.5 °F வரை) உயரலாம். (இப்பவே 100 டிகிரி அடிக்கும் வெய்யிலோட இதையும் கூட்டிக்கிட்டு பாருங்க.)
 • துருவப் பனிப் பாறைகள் தொடர்ந்து உருகுவதால், கடல் மட்டம் 20 அடி முதல் 35 அடி வரை உயரலாம். (மெரீனா பீச்சை நினைச்சுப் பாருங்க. அதைவிடுங்க, இப்பவே கடல்மட்டத்துக்குக் கீழ இருக்கும் ஹாலந்து நாட்டின் நிலை?)
 • 2050ஆம் ஆண்டிற்குள் ஆர்டிக் கடலில் பனிப்பாறைகளே இல்லாமல் போகும்.
 • உலகில் வெப்ப அலைகள் (Heat Waves) மிக அதிகமாகவும் வீரியத்தோடும் இருக்கும்.
 • வறட்சியும் காட்டுத்தீக்களும் மிகவும் அதிகமாகும்.
 • அடுத்த 25 ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாற்றங்களால் வருடத்துக்கு 3,00,000 பேர்கள் வரை மாண்டு போகலாம்.
 • பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரின வகைகள் இவ்வுலகில் இருந்து மறைந்தே போய்விடும்.
இவையெல்லாம் அடுத்த 100 ஆண்டுகளுக்குள் நிகழும். ஆனால் மனித நடவடிக்கைகளால் உண்டான வெப்பநிலை அதிகரிப்பின் விளைவுகள் அதற்குப் பின் பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தொடருமாம். இப்போ கேட்கவே பயமா இருக்கா? இதுதாங்க புவி வெட்பநிலை அதிகரிப்பு.

ஆனா எந்த விஷயத்துக்கும் மாற்றுக் கருத்து இருப்பது போல இதுக்கும் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் ஆட்கள் இருக்காங்க. அவங்க என்ன சொல்லறாங்கன்னா

 • புவி வெட்ப அதிகரிப்பு என்பது ஒரு இயற்கை நிகழ்வு. பூமியில் இது போன்ற நிகழ்வு முன்பு பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இதனை நம்மால் தடுக்க முடியாது என்று ஒரு வாதம்.
 • கரியமில வாயு போன்றவை அதிகரிப்பது இயற்கை நிகழ்வு. எரிமலைகள், உயிரினங்கள், மரம் செடிகள் என அனைத்துமே கரிமல வாயுவை வெளியிடுகின்றன. எரிபொருட்களை எரிப்பதால் உண்டாகும் கரிமல வாயுவின் அளவு மிகவும் கம்மிதான் எனவும் சொல்கிறார்கள்.
 • இந்த வாயுக்களை விட வெப்பத்தை அதிகமாக்குவது நீராவிதான். இதனை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது என்பது மற்றொரு வாதம்.
 • கடந்த நூற்றாண்டில் வெப்பம் அதிகமானாலும் கடந்த 10 - 15 வருடங்களாக வெப்பநிலை ஏறவில்லை, குறைகிறது என வேறு ஒரு கருத்து.

இப்படி இரு புறமும் கருத்துகள் வெளியிடுவதும் அதற்கு மறுப்புகள் வருவதுமாக இருக்கிறது. இது சம்பந்தமாக உங்களுக்கு மேல் விபரங்கள் தேவை என இருந்தால் கீழ்க்கண்ட இந்த சுட்டிகளைப் பாருங்கள்.

 1. விக்கிப்பீடியாவில் Global Warming
 2. அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் துணையுடன் எடுக்கப்பட்ட An Inconvenient Truth என்ற படத்தின் வலைத்தளம்
 3. புவி வெட்பநிலை அதிகரிப்பு பற்றிய ஒரு அருமையான வலைத்தளம்
 4. புவி வெட்ப நிலை அதிகரிப்பு பற்றிய மாற்றுக்கருத்து தளம் 1
 5. புவி வெட்ப நிலை அதிகரிப்பு பற்றிய மாற்றுக்கருத்து தளம் 2
 6. மாற்றுக் கருத்து தவறென்று சொல்லும் ஒரு வலைத்தளம்
கடைசியாக ஒன்று. நம் நடவடிக்கையால் சிறிதளவேனும் இந்த புவி வெட்ப அதிகரிப்பை குறைக்க வழி வகைகள் இருக்கும் பொழுது அதனைச் செய்ய வேண்டியது நம் கடமை அல்லவா? அந்த வழிவகைகளைப் பற்றி நம் சக வலைப்பதிவர் இராதா ஸ்ரீராம் அவர்கள் எழுதி இருக்கும் பதிவு இது. இவற்றைச் செய்து நம் பூமியைக் காக்கும் முயற்சியில் நம் சிறுதுளியைச் செய்வோமே.

Thursday, April 12, 2007

குறுங்கோள்கள் என்றால் என்ன?

பொடிசும் பெரிசுமாக இருக்கும் சூரியக்குடும்பத்தின் படத்தைப் பார்த்துவிட்டு பாலா கேட்ட கேள்வி "What is a Dwarf Planet?"

பள்ளிக்கூடத்தின் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள்(Planets) இயங்குகின்றன என்று படித்திருக்கிறோம். புதன், வெள்ளி, பூமி தொடங்கி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று ஒன்பதையும் வரிசைப்படுத்தி சரியாக எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும். இவை எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு ஒரு நீள்வட்டப்பாதையில் (elliptical orbits) இயங்குகின்றன. இப்படிச் சூரியனைச் சுற்றும் கோள்களுக்கும் கோள்கள் உண்டு. துணைக்கோள் அல்லது உபக்கிரகம் என்று அழைக்கப்படும் இவை கோள்களைச் சுற்றி இயங்குகின்றன. உதாரணமாக நிலா பூமியின் துணைக்கோள் (Satellite).

மார்ஸ்க்கும் ஜுபிட்டரும் இடைப்பட்ட சுற்றுப்புறம் கொஞ்சம் கலங்கலானது. அங்கே கோள்கள் துணைக்கோள்களுடன் கூடவே இன்னும் பல குப்பைக் கூளங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு ஒரு தட்டையான மேகக்கூட்டம் போல பல குஞ்சு குளுவான் சமாச்சாரங்களும் சூரினைச் சுற்றி கொண்டிருக்கும் இந்தப் பகுதிக்கு அஸ்ட்ராய்ட் பெல்ட் (Asteroid Belt) என்று பெயர். இதேபோல நெப்ட்யூனைத்தாண்டி ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதற்குக் கூய்ப்பர் பெல்ட் (Kuiper Belt) என்று பெயர். அதற்கு அப்பாலும் எண்ணற்ற சிறு வஸ்துகள் சூரியனை மையமாகக் கொண்டு சுழல்கின்றன, இந்த இடத்திற்கு ஸ்கேட்டர்ட் பெல்ட் (Scattered Belt) என்று பெயர். இங்கே இருக்கும் சமாச்சாரங்களெல்லாம் மிகவும் குளிர்வானவை (சூரியனுக்கு வெகு தொலைவில் இருப்பதால்). கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் (ஜனவரி 2005) கால்டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக் ப்ரௌன் என்பவர் ஹப்பிள் தொலைநோக்கியைக் கொண்டு (Xena) என்ற ஒரு சமாச்சாரமும் இந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதன் விட்டம் 2400 கி.மீ. அன்றைக்குப் பிடித்தது சனியன் - புளூட்டோவுக்கு.

ப்ரௌனின் குழு ஜெனா (Xena) என்று செல்லப்பெயரிட்ட இதற்கு பன்னாட்டு வானியல் குழுமத்தால் UB313 என்று அடையாளமிடப்பட்டது. புளூட்டோவின் விட்டம் 2306 கி.மீ; UB313 ன் விட்டம் அதைவிடக் கிட்டத்தட்ட நூறு கி.மி அதிகம். இந்த நிலையில் இதைப் பத்தாவது கோளாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தார்கள். இதற்குச் சில வருடங்களுக்கு முன்னதாகவே 975 கி.மி விட்டம் கொண்ட இன்னொரு சமாச்சாரம் (இதற்கு செரஸ் என்று பெயரிடப்பட்டது) அஸ்ட்ராய்ட் பெல்ட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. செரஸ் புளூட்டோவைவிட சின்னதாக இருந்ததால் புளூட்டோவின் கோள் அந்தஸ்திற்கு எந்தக் குந்தகமும் விளைந்துவிடவில்லை. ஆனால் ஜெனா அதைவிடப் பெரியதாக இருந்ததால் வந்தது தொந்தரவு. ஜெனாவைப் பத்தாவது கிரகமாக அறிவிப்பதா அல்லது புளோட்டோவைக் கழித்து கோள்கள் எட்டு என்று இரண்டு மார்க் கேள்வியின் விடையை மாற்றி எழுதிவிடலாமா என்று ஆராயப் பன்னாட்டு வானியல் கழகம் ஒரு அறிஞர் குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு அறிவியல் கோட்பாடுகளையும் தரவுகளையும் ஆராய்ந்து குறுங்கோள் என்பதற்குப் பின்வரும் நான்கு வரி வரையறையை விதித்தது;

 1. சூரியனைச் சுற்றி வரவேண்டும் (Should be in orbit around sun)
 2. அதற்குப் போதுமான பொருண்மை இருக்க வேண்டும். அப்படியான பட்சத்தின் அதன் சமநிலை சக்திகள் (உள்ளிழுக்கும் மற்றும் வெளியேறு விசைகளின் சமநிலை) கோள வடிவத்தைத் தரும் (Should be in hydrostatic equillibrium; hence assume spherical shape)
 3. அதைச் சுற்றி இருக்கும் சமாச்சாரங்களுக்கு எந்தத் தொந்தரவும் தரமால் அவற்றையும் அண்மையிலே இருக்க அனுமதிக்க வேண்டும் (should not have cleared its orbit)
 4. வேறெந்தக் கோளுக்கும் துணைக்கோளாக இருக்கக் கூடாது. (Is not a satellite for any other planet)

விதி நான்கின்படி நம் புவியின் சந்திரன், சனிக்கிரகத்தின் டைட்டன் இன்னபிற குறுங்கோள் தகுதியை இழந்துவிடுகின்றன. இவை ஒவ்வொன்றும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றாமல் ஒரு தனிக்கோளை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. (கவனிக்கவும், கோளுடன் சேர்ந்து சுற்றுவதால் இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆனால் இவற்றின் பாதை மையம் சூரியன் கிடையாது). ஒருவகையில் இந்த விதி 4 விதி 1ன் விளக்கம்தான். எதுக்கும் நாளைக்கு கோர்ட்டில் கேஸ் போட்டு ஈரங்கிக்கு நம்மைக் கூப்பிடப்போகிறார்களே என்ற பயத்தில் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லிவிட்டார்கள்.

விதி 2 - ஒரு பொருளுக்கு பொருண்மை அதிகரிக்க அதிகரிக்க அதன் சமநிலை விசைகள் திறம்படச் செயற்பட்டு அவற்றுக்குக் கோளவடிவத்தைத் தருகின்றன. உள்ளிழுக்கும் விசை அதிகமாக இருந்தால் பரப்பில் குழி விழும்; புறவிசை அதிகமாக இருந்தால் கரடுமுரடாகக் கற்கால மனிதனின் ஆயுதங்களைப் போன்ற தோற்றம்தான் கிடைக்கும். கோளம் அற்புதமான சமநிலை வடிவம்' இவ்வடிவில்தான் குறைந்தபட்ச புறப்பரப்பிற்கு அதிகபட்ச பொருண்மை சாத்தியமாகும். பூமி, சந்திரன், வியாழன், நெப்ட்யூன் போன்ற எல்லா பெருசுகளும் லட்டு வடிவம்தான். நாம் ஏற்கனவே சொன்னதுபோல நெப்ட்யூன் ஏரியா கொஞ்சம் தூசு துகள்கள் நிறைந்தது; இங்கே பல கற்கள் சுற்றிக்கொண்டிருக்கின்ற. இவற்றுக்குப் பொதுவில் அஸ்ட்ராய்ட்ய் (தமிழ்ல என்ன சொல்வது?) என்று பெயர். இவையெல்லாம் கோளம் தவிர்த்த பல வடிவங்களில் இருக்கும், இவற்றுள் அம்மிக்குழவி வடிவம் மிக அதிகமாகக் காணப்படும். விதி 2ன்படி இவையெல்லாம் குறுங்கோள்கள் அல்லன.

அருகில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமால் நல்லபிள்ளையாக இருக்க வேண்டும் என்ற விதி 3 மிக முக்கியமானது; இதுதான் கோள்களையும் குறுங்கோள்களையும் மாறுபடுத்துகிறது.. ஓரளவுக்குக் கொழுத்துப் போய்விட்டால் தொந்தரவு யாரையும் கிட்டவிடாமல் விலக்குவிசை செயல்படத் தொடங்கும். 'எங்க ஏரியா உள்ளவரதே' என்று பாடத்தொடங்கும். அப்பொழுது ஒன்றுடன் ஒன்று விலக்கிக் கொண்டு தனித்தனியே பேட்டைகளை உருவாக்கிக் கொள்ளும். இங்கேதான் புளூட்டோ உதைவாங்குகிறது. அஸ்ட்ராய்ட் பெல்ட்டில் கிடக்கும் நிறைய விஷயங்கள் புளுட்டோவிடம் அடிக்கடி நெருங்கி வருகின்றன. (வந்தால் மோதிக் கொண்டு உதைவாங்கி உடைந்துபோகும் அபாயமும் உண்டு). ஜெனாவுக்கு இதே பிரச்சினைதான்; ஒரு பேட்டையை வளைத்துப்போடும் திறமை இவை இரண்டுக்கும் கிடையாது.

ஆக, ஜெனாவைக் கோள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள், அத்துடன் கூட ஜெனா என்று செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்ட UB313 க்கு ஈரிஸ் என்று பெயர் விண்ணாய்வுக் கழகப் பெரியவர்களால் ஞானஸ்நானம் ஆகியது. ஆனால் தனக்கு இரண்டு கண்களும் போனால் மருமகளுக்கு ஒருகண்ணாவது போக வேண்டும் என்ற மாமியாரைப் போல, ஈரிஸ் புளூட்டோவையும் கோள்கள் பட்டியலில் இருந்து வெளியே தள்ளிவிட்டது. இப்பொழுது புளூட்டோ ஒரு குறுங்கோள்தான்.

{இப்படித் திடீரென ஒன்பதை எட்டாகக் குறைத்தால் குழந்தைகள் ஏங்கிப்போவார்கள் என்று சிலர் கவலைப்பட்டனர். (இவர்களில் யாரும் அறிவியல் தெரிந்தவர்கள் கிடையாது. குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது, அவர்கள் எல்லாவற்றையும் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக நான்கு வயது இருந்தபொழுது என் மகன் இந்தியாவில் இருந்து கொண்டுவந்த டிடிகே அட்லாஸ், புதிதாக வாங்கிய (பழைய) நேஷனல் ஜியாகரபி அட்லாஸ் இரண்டையும் வைத்துக்கொண்டு ஏன் கஷ்மீர் பக்கத்தில் இந்தியாவின் வரைபடம் மாறுபட்டிருக்கிறது என்று கேட்டான். ஒரு நிமிடம் இதை எப்படி புரியவைப்பது என்று ஆடிப்போய்விட்டேன். ஆனால் கொஞ்சம் இந்தியா, பாக்கிஸ்தான், கஷ்மீர், விவரத்தைச் சொன்னவுடன் "ம், சரி" என்று விளையாடப் போய்விட்டான். இப்பொழுது அவன் இன்னும் சில வருஷங்களுக்கு இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வரைபடங்கள் வந்துகொண்டுதானிருக்கும் என்பதை அறிந்துகொண்டுவிட்டான். இதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு அவனைப் பிடித்துவைத்து அதே கேள்வியைத் திரும்பக் கேட்டேன், அவன் கஷ்மீரில் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இருக்கும் உரிமைப் பிரச்சினையைத் திரும்பச் சொன்னான். அப்படி இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே, ஆனால் உலக அளவில் வரைபடம் என்று ஒன்றைத்தானே சொல்ல வேண்டும் என்றும் கேட்க, அப்பா, ப்ளே ஸ்டேஷனில் அண்ணா Vikram's PSP என்று எழுதுகிறான், கொஞ்ச நாளில் நான் அதை மாற்றி "Varun's PSP" என்று எழுதுகிறேன். நீயும் இதைப் பார்த்திருக்கிறாய், ஒரு பெயர்தான் போட வேண்டும் என்று எங்களை வற்புறுத்தவில்லை. அதே மாதிரிதான் இதுவும், சில விஷயங்கள் தீர்மானமாகத் தெரியாதபொழுது எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.}

குழந்தைகளை ஏங்கவிடுவதா இல்லை அறிவியல் கோட்பாடுகளுக்கு இணங்க கோள்களின் எண்ணிக்கையை மாற்றி எழுதுவதான் என்று வந்தால் அறிஞர்கள் பின்னதைத்தான் தெரிந்தெடுப்பார்கள் - தார்கள். ஜெனா என்று அழைக்கப்பட்ட ஈரிஸ்க்குக் கோள் அந்தஸ்து கிடைக்காமல் போனதில் அதைக் கண்டுபிடித்த மைக் ப்ரௌனுக்கு வருத்தம்தான். ஒரு கோளை அடையாளம் காட்டியவர் என்று வரலாற்றில் தனியிடம் பெறும் சாத்தியம் அவருக்கு இல்லாமல் போயிற்று, பத்தோடு பதினொன்றாக இன்னொரு குறுங்கோளை மாத்திரமே கண்டுபிடித்தார் என்றுதான் அறியப்படப் போகிறார். ஆனால் ப்ரௌனுக்கு இதில் எந்தவித வருத்தமும் இல்லை. "அறிவியல் எப்பொழுதுமே திறமாகத்தான் செயல்படுகிறது. தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மை நிலைக்கிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்" என்று சொல்லிவிட்டு தன் தொலைநோக்கியை வேறுபக்கம் திருப்பப் போய்விட்டார்.

ஆக இன்றைய புரிதலின்படி சூரியனைச் சுற்றி ஒன்பது எட்டு கோள்கள் இருக்கின்றன. மூன்று குறுங்கோள்கள் - செரஸ், புளூட்டோ, ஈரிஸ். நாளை நம் தொலைநோக்கிகள் இன்னும் சக்தி வாய்ந்தவையாக மாறும்பொழுது இவையும் மாறலாம்.

இது தொடர்பான என் தனிப்பட்ட கருத்துகளை என் பதிவில் பார்க்கவும்.

மேலதிக விபரங்களுக்கு:

Dwarf Planets in Wikipedia

Tuesday, April 03, 2007

Fits, Seizures and Epilepsy

இதப் பத்தி இராதா ஸ்ரீராம் கேட்டிருந்தாங்க. இதெல்லாம் ஒரே வியாதியின் பல்வேறு பெயர்களான்னு. அத முதல்ல க்ளியர் பண்ணிடுவோம்.

1. Seizure is a convulsion or transient [temporary] abnormal event resulting from paroxysmal [non predictable, sudden] discharge of cortical neurones.

2. Epilepsy is the continuing tendency to have such seizures, even if a long interval separates these attacks.

சரியா? Now, Fits is the colloquial term for seizures.

தமிழ்ல காக்காவலிப்புன்னு பொதுவா சொல்வாங்க. எனக்கு அதத்தவிர தமிழ்ல வேற வார்த்தை தெரியாததால வலிப்புனு பொதுவா seizuresஐயும், வலிப்புநோய்னு Epilepsyஐயும், சில சமயங்கள்ல டெக்னிக்கலா ஆங்கிலத்துலயும் சொல்லிடறேன்.

ஸ்டாடிஸ்டிக்ஸ் படி உலகத்துல இருநூறு பேருல ஒருத்தருக்கு வாழ்க்கையில ஒருதடவையாவது இந்த வலிப்புநோய் வரலாம். இந்தியாவ பொருத்தவரைக்கும் epidemiological ஆய்வுகள் வேறுபடுகின்றன. ஆனால் ஆயிரத்தில் 6 ஆண்களுக்கும், 5 பெண்களுக்கும் இந்தியாவில் வலிப்பு வருகின்றது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. active வலிப்புநோய் இருப்பவர்கள் சதவிகிதம் 0.5%. அதாவது, இரண்டாயிரத்தில் ஒருவருக்கு. incidence: தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் ஐம்பத்திஐந்து லட்சம் பேருக்கு நோய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் சுமார் நாற்பதுலட்சம் நோயாளிகள் கிராமப்புறங்களில் இருப்பவர்கள். (கிராமம் நகரம் பிரச்சனைக்கு அப்புறம் வருவோம்) ஒவ்வொரு வருடமும் சுமார் ஐந்துலட்சம் புதிய வலிப்புநோயாளிகள் உண்டாகின்றனர். இதன்மூலம் பரவலான நோய்/உபாதை என்று தெளிவாகும்.

ஏன் வருது என்பது சிக்கலான நியுராலஜிக்கல் கேள்வி. எளிமையாச் சொல்லணும்னா நம் மூளையின் திசுக்களில் abnormal electric activity - Large groups of neurones fire uninhibitedly, hypersynchronously and repetitively: Resulting in 'characteristic' Spike Wave EEG.

ஏன் இந்த மாதிரி வழமைக்கு மாறான எலெக்ட்ரிக் மாற்றங்கள்னா காரணங்களா

1) மரபணுவின் மூலம் அதிக ரிஸ்க் இருக்கலாம். சுமார் 30% நோயாளிகளுக்கு ஏற்கனவே நோயுற்ற நெருங்கிய குடும்பத்தினர் இருப்பார்கள்.

2) Trauma, Hypoxia (தேவையான அளவைவிட ஆக்ஸிஜன் அளவு குறைவாய்கிடைக்கும் நிலை) மற்றும் சிலவகை நரம்பியல் அறுவை சிகிச்சைகள்.

3) ஜுரம்: ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தைகளில் கவனிக்கவேண்டிய விஷயம் இந்த ஜுரம். சாதாரண காய்ச்சல் என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இவை வலிப்புநோயாய் மாறாவிட்டாலும் இந்த febrile convulsionsக்கு வராமல் தடுப்பது அவசியம்.

4) மூளையில் ஏற்படும் கட்டிகள் (புற்றுநோய்/மற்றவை)

5) மூளையின் இரத்தஓட்டம் தடைபடும் போது வரலாம். மூளையில் வயதாவதால் ஏற்படும் ரசாயன/கூறு (structural) மாற்றங்கள், உதாரணம்: Alzheimer's Disease. இதனாலேயே வயதானவர்களுக்கு வலிப்புநோய் பெரும்பாலும் வருகிறது.

6) மது/மருந்துகள் மற்றும் சிலவகை போதை வஸ்துகள்

7) Encephalitis, Tuberculosis போன்றவற்றினாலும் வரலாம். இதைத்தவிர முட்டை மற்றும் இறைச்சி உணவு வகைகள் சரியாக சமைக்காமல் அதனால் பரவும் Tapeworm போன்றவற்றாலும் வரலாம்.

8) அதிக ரிஸ்க் குரூப்பில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான strobe lightகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்னும் சிலநேரங்களில் தூக்கமின்மை கூட வலிப்பு உண்டாக காரணங்களாக இருக்கலாம்.

வலிப்பு (seizures) சில உட்பிரிவுகள்: ரொம்ப விரிவாக இவற்றை விரிவாகச் சொல்வது வாசகர்களுக்கு அவசியமற்றது என்று நினைக்கிறேன். (அவ்ளோதான் தெரியும்னு யார்பா சவுண்ட் கொடுக்குறது? :))

1. Generalized
மூளையின் இருபாகங்களிலும் மின் மாற்றங்கள் ஏற்படுவதால் உடலின் இலது மற்றும் வலது பாகங்களிலும் abnormal movements. நோயாளிக்கு நினைவு தப்பிவிடும். வயதில் சிறியவர்களையே இந்த வகை வலிப்பு தாக்கும் பெரும்பாலும்.
a) Tonic Clonic Seizures
வலிப்பு என்பதின் டெபனிஷன் பலருக்கு இதுதான். Tonic நிலையின் போது உடம்பு rigid ஆகி நோயாளிகள் கிழே விழுவர் (இதன்மூலம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்). Stiffening of Limbs (increased tonus of muscles => tonic part of the name). மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் incontinence ஏற்படலாம். நாக்கை கடித்துக்கொள்வார்கள். அதிகபட்சமாக ஒருநிமிடம் நீடிக்கலாம் இந்நிலை.

அடுத்த Clonic நிலையில் repeated rhythmic jerking movements of muscles மற்றும் வாயில் நுரை தள்ளுதல் நிகழும். இது சில நொடிகளிலிருந்து சில நிமிடங்கள் நீடிக்கலாம்.

பொதுவாகவே வலிப்பு என்பது self limiting. அதாவது தானாகவே அடங்கிவிடும். அடங்கியபின்னர் நோயாளி தூக்ககலக்கதிலேயோ, குழப்பநிலையிலோ கோமாவிலோ பலமணிநேரங்கள் நீடிக்கலாம். அதன்பின்னர் நோயாளி இயல்புநிலைக்கு திரும்பிவிடுவர். இதற்கு absence seizure "Post ictal state" என்று பெயர்.

b) "Absence[Petit mal] attacks or seizures" என்பது தசைகளின் திமிரில்[tone] அதிக பாதிப்பில்லாமல், ஒரு சில நொடிகள் மட்டுமே,[10-30 sec] கண்துடித்தல், கை, கால்கள் துடித்தல் போன்றவற்றுடன் நிகழ்ந்து, அந்த நொடிகளில் மட்டும் நினைவு தப்புவதும் நடக்கும் ஒரு வகை வலிப்பு நோய்.
தான் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, இது கழிந்ததும் மீண்டும் தொடங்க ஆரம்பிப்பார். (Thanks to Dr. VSK)

இதைத்தவிர இப்பிரிவினுள் myoclonic (வெறும் தசைகளில் jerk movements), tonic (jerking இல்லாமல் வெறும் rigid ஆவது மட்டும்) மற்றும் atonic வகைகளும் உண்டு.

2. Partial Seizures
இவை பெரும்பாலும் முதியவர்களுக்கு வருவது. அதனாலேயே இதன்பின்னால் வேறு ஏதும் underlying நோய் இருக்கிறதா என்று follow up செய்யவேண்டியது அவசியமாகிறது.

இவ்வகை வலிப்பின் hallmark ஒருமாதிரியான விநோதமான feeling. அது பொதுவாக வயிற்றுப்பிரட்டல், தலைசுற்றல் போன்றவாகவும் இருக்கலாம். இல்லை சிலசமயங்களில் hallucinations எனப்படும் imaginary auditory (கேட்பதில்), olfactory (விநோதமான மணங்கள்) and visual imaginations such as flashing lights அல்லது deja vu (புதிய இடம் பழகியதாக தோன்றுவது) ஆகவும் இருக்கலாம். இந்த பீலிங் வலிப்பு வருவதற்குமுன் அறிகுறியாக ஓரிரு நாட்கள் முன்னர்கூட வரலாம். திடீரென mood மாற்றங்களும் இதில் அடக்கம். ஆங்கிலத்தில் "Aura" என்பார்கள். ஒரு vague ஆன term இது. focal ஆக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் பாதிக்கபடுவதால் ஏற்படும் ரசாயன/கூறு மாற்றங்களால் வருவது இந்த அவ்ரா. இந்த அவ்ரா என்பது வலிப்பு அல்ல. ஆனால் வலிப்பு வருவதற்கான அறிகுறி.

இதில் Jacksonian மற்றும் Temporal Lobe seizures என சில உட்பிரிவுகள் உண்டு. நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது இந்த அவுரா மற்றும் மூளையின் எந்தப்பகுதி பாதிக்கபடுகிறதோ அந்த பகுதியின் corresponding function அபரிமிதமாகவோ குறைந்தோ காணப்படலாம்.

இப்போது ஒருவருக்கு வலிப்பு தாக்கினால் வலிப்பை பார்த்தவுடன் ஒருமாதிரி கண்டுகொள்வீர்கள் அல்லவா?

சரி தெருவில் போகிறோம். ஒருவருக்கு வலிப்பு தாக்குகிறது. என்ன செய்யலாம்?

principle ஒன்றுமே செய்யாமலிருப்பது நலம். நினைவில் கொள்ளுங்கள் வலிப்புகள் பெரும்பாலும் தானாகவே சில நிமிடங்களில் அடங்கிவிடும். அதற்குள் செய்யவேண்டியது

1. முடிந்தால் நோயாளியின் airways ப்ளாக் ஆகாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பல்செட் உள்ளவரென்றால் அதை கழட்டவேண்டும். அடுத்தது சுற்றி கூட்டம் போட்டு வேடிக்கை போடுவர்களை தள்ளி நிற்க சொல்லிவிட்டு காற்றோட்டமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும்.

2. சிலநிமிடங்களுக்குள் தானாகவே வலிப்பு அடங்கிவிடும். அதற்குள் முடிந்தால் நோயாளியை இடதுபக்கத்தில் படுக்குமாறு திருப்புங்கள். நோயாளி ஜெர்க் ஆகாமல் இருக்க சப்போர்ட் கொடுப்பது, கைகால்களை இழுத்துப்பிடிப்பது, கட்டிப்போடுவது போன்றவை மிக மிக ஆபத்தானது.

அப்புறம் முக்கியமாக சாவி கொடுப்பது, இரும்பு மற்றும் உலோகப்பொருட்களை கையில் திணிப்பது என்று வழக்கம்போல் தமிழ்சினிமா சொல்லிக்கொடுக்கும் மருத்துவத்தை சற்றே கஷ்டப்பட்டு மறந்துவிடுங்கள்.

இந்தியாவில் பல பொதுமக்கள் அதீத ஆர்வத்தால் உதவியென்ற பெயரால் உபத்திரவம் செய்வர். மந்திரம் சொல்வது : அதுவேனால் சொல்லிக்கொள்ளட்டும். மற்றபடி தாயத்துகட்டுவது, டாலர் கட்டுவது, அரனாக்கொடிகட்டுவது என பல தவறான எம்ர்ஜென்ஸி டெக்னிக்ஸ் வழக்கத்தில் உண்டு. இதனால் எல்லாம் ஒரு எள்ளளவு பயன்கூட இருப்பதாக நிருபிக்கபடவில்லை. சொல்லப்போனால் வலிப்பின் போது ஏற்படும் repeated jerking அசைவுகளால் நோயாளிக்கு நிரந்தரமான வேறு ஏதாவது படுகாயங்களை எவ்விதமான hard/sharp/blunt பொருட்களும் ஏற்படுத்த வாய்ப்பு நிறைய உண்டு.

வலிப்பு 95% தானாகவே சிலநிமிடங்களில் நின்றுவிடும். எனினும் உடனே மருத்துவ உதவியை நாடவேண்டியது அவசியம். இருபது நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடருமானால் நிரந்தரமான வேறு பாதிப்புகள் ஏற்படலாம். தொடர்ச்சியாக மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடி மருத்துவ உதவி அத்தியாவசியமாகிறது. அதற்குண்டான first aidகள் emergency paramedicசோ, மருத்துவமனையோ மட்டுமே செய்யமுடியும்.

மேலும் ஒரு வலிப்பிற்கு பின் முழுமையான நினைவுக்கு திரும்பாமல் நோயாளிக்கு மீண்டும் ஒரு வலிப்பு அட்டாக் வருமானால் அதன் பெயர் Status Epilepticus. இது ஒரு Life threatening medical emergency. வீட்டில் எவருக்கேனும் ஏற்பட்டால் உடனடியாக Intravenous ஆக 10மில்லிகிராம் Diazepam கொடுக்கலாம். இரத்தத்தில் ஏற்றமுடியவில்லையெனில் ஆசனவாய் வழியே செலுத்தக்கூடிய விதத்தில் கிடைக்கும் அதே Diazepam மற்றும் Paraldehyde பயன்படுத்தலாம். சாதாரணர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நோய் உள்ளவர்கள் வீட்டிலிருப்பவர்களுக்கு உங்கள் மருத்துவர்கள் கண்டிப்பாக சொல்லிக்கொடுத்திருப்பார்கள். அதனால் இதற்குள் அதிகம் நாம் போகத்தேவையில்லை. ஆனால் சிகிச்சை முறைகள் நீண்ட நாட்களுக்கு பின்பற்றபடவேண்டியவை. நம்மூரில் இருக்கும் பழக்கம், ஜுரம் குறைஞ்சால் மாத்திரையை நிறுத்து என்று எடுத்தேன் கவிழ்த்தேன் மனோபாவம் இந்நோயிலும், மற்ற பல நோய்களைப் போலவே மிகவும் ஆபத்தில் கொண்டுவிடலாம்.

தனியாக, வலிப்புநோயினால் பெண்களுக்கு தொல்லை அதிகம். குழந்தை பெறுவதில் மற்றும் அதன்சார்ந்தவை என கூடுதல் சிரமங்கள். சமூக காரணிகளால் திருமணமும் தடைபட வாய்ப்புண்டு. முற்சொன்னவற்றிற்கு குடும்ப மருத்துவர்களை அணுகுவதே சிறந்தது. இக்கால மருத்துவத்தில் வலிப்பு நோயாளிகள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். பிள்ளைச்செல்வங்களை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சையை முறையாய் பின்பற்றினால் இயல்பு வாழ்க்கை வாழலாம்.

சமூக பிரச்சனைகள்: வலிப்புநோய் உள்ளவர்களுக்கு வண்டிவாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதில் தொடங்கி ஆயுள் காப்பீடு செய்ய, ஏன் வேலைவாய்ப்புகளில் கூட சிக்கல்கள் உண்டு. தற்போதைய மருத்துவத்தின்படி ஓட்டுநர் உரிமம் ஒருவருடமாக வலிப்பு இல்லாதவருக்கு வழங்கப்படலாம். ஆனாலும் குளியலறை தாளிட்டுக்கொள்வது, தனியாக நீச்சலடிப்பது மற்றும் இதர ஆபத்தான வேலைசூழல்களை தவிர்க்கவேண்டும் என்று நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவற்றிற்கு பெரும்பாலும் சமூகத்தில் நிலவும் தவறான இந்நோய் குறித்த பயமே காரணம். இது மனநோயல்ல. Epilepsy is not a mental disorder; Its a Neurological Disorder. அதாவது வயிற்றிலுள்ள அமிலசுரப்பிகள் அதிகம் வேலைசெய்தால் அல்சர் வருவதைப் போல மூளையின் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம். இந்நோயாளிகளை அணுகும்போது நாம் அதை நினைவில் கொள்ளவேண்டும். அதே நிலையிலே அணுகவேண்டியதன் அவசியத்தை நம் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரப்பவேண்டியது நம் கடமை.

ஒரே ஒரு அதிர்ச்சிதரும் புள்ளிவிவரத்துடன் முடிக்கவிரும்புகிறேன். நம் இந்தியாவில் நம்மில் மூன்றில் ஒருவர் இந்த வலிப்புநோய் என்பது ஒரு மனநோய் என்றோ/பேய் பிசாசுகளால் ஏற்படும் சூனியம் என்பது மாதிரியான தவறான கருத்துகளை கொண்டுள்ளோம். மேலும் முன்னாடி சொன்னா மாதிரி கிராமங்களில் இன்னும் அதிகமாக, இத்தகைய மூடப்பழக்கவழக்கங்களால், தவறான புரிந்துகொள்ளல்களால் சுமார் 75% வரை நோயாளிகள் மருத்துவ உதவியை முற்றிலுமாக நாடுவதில்லை. நாட்டுவைத்தியம், பில்லி சூனியம் என்று அவசியமான மருத்துவசிகிச்சையை தள்ளிப்போடுகின்றனர். இந்நிலை மாறவேண்டும். மாறப்போவது இந்நோய் குறித்த விழிப்புணர்ச்சியை நமக்கு தெரிந்தவர்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே முடியும்.

மேலதிக விவரங்களுக்கு:
Epidemiology in India

Epilepsy in India

National Institute of Neurological Disorders and Stroke