Sunday, September 02, 2007

யானைக்கும் கழுதைக்கும் கல்யாணம்!!

நண்பர் நாகு அவர்களின் கேள்வி இது - "அமெரிக்கக் கட்சிகளின் சின்னங்களான யானை, கழுதை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன?" அவரே இந்த சின்னங்கள் அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை என்பதையும் சொல்லிட்டாரு.

ரொம்ப சிம்பிளான பதில் என்னன்னா இந்தச் சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னங்கள் இல்லை! ஒரு தனிமனிதனின் கற்பனைதான் இப்படி ஒரு நாட்டின் இரு பெரும் கட்சியின் சின்னங்களாக இருக்கின்றன எனச் சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை, கிட்டத்தட்ட உண்மை!

ஏன் கிட்டத்தட்ட அப்படின்னு கேட்டீங்கன்னா, இவரு வந்து இந்த கழுதையைப் பிரபலப் படுத்தறதுக்கு முன்னாடி கொஞ்ச நாளைக்கு வேற ஒருத்தர் இந்த கழுதையை உபயோகப்படுத்திட்டாரு. அதனாலதான். சரி, இப்போ ஒண்ணொண்ணா பார்க்கலாம்.



ஜனநாயகக் கழுதை

1828ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் ஆண்ட்ரூ ஜாக்ஸன். இவரை எதிர்த்தவர்கள் இவரை Jackass (ஆண் கழுதை) என அழைக்க, இவரும் விடாமல் அதனைத் தன் அடையாளமாகவே ஆக்கிக்கொண்டு போஸ்டரில் போட்டுக் கொள்ளும் அளவுக்குப் போய் விட்டார். ஆனால் அது அவரின் தனிப்பட்ட அடையாளமாகவே இருந்ததே தவிர கட்சியின் அடையாளமாக ஆகவில்லை.

அந்த பெருமைக்கு உரியவர் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைபவரான தாமஸ் நாஸ்ட் என்பவர். 1870ஆம் ஆண்டு அவர் வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை கழுதையாக உருவகப் படுத்தி இருந்தார். அது படிப்பவர்களின் கவனத்தைக் கவர தொடர்ந்து அவர் ஜனநாயகக் கட்சியை கழுதையாகவே உருவகப்படுத்தத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் இதையே செய்ய, இது அக்கட்சியின் சின்னமாகிவிட்டது.



குடியரசு யானை
குடியரசு யானையைத் தந்தவர் ஜனநாயகக் கழுதையைத் தந்த அதே தாமஸ் நாஸ்ட் என்பதுதான் ஒரு ருசிகரத் தகவல். 1874ஆம் ஆண்டு அவர் வரைந்த "The Third Term Panic" என்ற இந்தக் கேலிச் சித்திரத்தில் அவர் முதன் முதலில் குடியரசுக் கட்சியை யானையாக உருவகப் படுத்தினார். சிங்கத் தோல் போர்த்திய கழுதையை (ஜனநாயகக் கட்சி) கண்டு மற்ற மிருகங்கள் பயந்து ஓடுவது போல் வரைந்திர சித்திரம் அது. அதில் குடியரசுக் கட்சியை யானையாகச் சித்தரித்திருந்தார். கழுதையைப் போலவே இந்த யானையும் மிகுந்த வரவேற்பைப் பெற மற்றவர்களும் குடியரசுக் கட்சியை யானையாகவே உருவகப் படுத்தத் தொடங்கினர்.

குடியரசுக் கட்சியினர், அதிகார பூர்வமாகவே யானையை அவர்களது கட்சிச் சின்னமாகத் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆனால் இதுவரை ஜனநாயகக் கட்சியினர் கழுதையை அப்படித் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் அது அவர்களுது சின்னமாகவே உபயோகப்படுத்தப் படுகிறது.

குடியரசுக் கட்சியினர் யானையை கண்ணியம் மிக்க, உறுதியுடைய, புத்திசாலி மிருகமாகக் கொண்டாட, ஜனநாயகக் கட்சியினரோ யானையை பழமை விரும்பி, பகட்டான, எளிதில் தவறு செய்யும் புத்தியற்ற மிருகமாகப் பார்க்கின்றனர். அதே சமயம் அவர்கள் கழுதையை சாதாரணமான, பணிவான, வீரமான, விரும்பத்தக்க மிருகமாகச் சொன்னாலும் குடியரசுக் கட்சியினர் அதை பிடிவாதமிக்க, மடத்தனமான மிருகம் என கேலி செய்கின்றனர்.

வெறும் சின்னத்தை வைத்துப் பார்த்தால் துளசி டீச்சர், பொன்ஸ் என வலையுலகப் பெண்கள் ஓட்டு எல்லாம் குடியரசுக் கட்சியினருக்குத்தான் போல தெரிகிறது!

சில சுட்டிகள்
சுட்டி 1
சுட்டி 2
சுட்டி 3

24 comments:

said...

துளசி டீச்சர், கழுதைக்குப் பதிலாகப் பூனை என இருந்தால் உங்கள் ஓட்டு யானைக்கா பூனைக்கா? :))

said...

இந்த யானை இப்படி அக்கிரமம் பண்ணி வேண்டாத இடத்துலே
போய் உக்காந்து( நின்னு)க்கிட்டு இருக்கேப்பா.

'புஷ்'பண்ணாலும் வேலைக்காகாது.

பேசாம பூனையை வச்சு ஒரு கட்சி ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்.

கோபால் சம்பளத்தில் (இன்னொரு) யானையை வச்சுக் காப்பாத்தறது கஷ்டம்:-)

said...

:)

இதுக்குமேல் எதும் சொல்லி...
:))

said...

ஓஹோ... நான் இது வரைக்கும் ஓட்டு போடறவங்கதான் கழுதை மாதிரின்னு நினச்சிட்டு இருந்தேன் (courtesy: Tuglak) :-))

//ஜனநாயகக் கழுதையைத் தந்தவரும் அதே தாமஸ் நாஸ்ட் என்பதுதான் ஒரு//

'குடியரசு யானையை தந்தவரும்' அப்படின்னு இருந்திருக்கனுமோ???

said...

நன்றி ஸ்ரீதர். தாங்கள் சுட்டிக்காட்டிய வரியை மாற்றிவிட்டேன்.

said...

//பேசாம பூனையை வச்சு ஒரு கட்சி ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்.

கோபால் சம்பளத்தில் (இன்னொரு) யானையை வச்சுக் காப்பாத்தறது கஷ்டம்:-)//

கட்சி ஆரம்பிச்சாச்சுன்னா அப்புறம் கோபால் சம்பளம் எல்லாம் எதுக்கு? ஒரு யானை என்ன? ஓராயிரம் யானை வெச்சு தீனி போட வசதி வந்துறாது! :))

said...

இ.கொ,
சுவாரசியமான தகவல்கள்.

இலங்கையில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமும் யானைதான்.

ஆனால் அவர்கள் இச் சின்னத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என எனக்குத் தெரியாது.சிலவேளைகளில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியையைப் பின்பற்றி இச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை.

said...

யானை கழுதை இரண்டுமே அமெரிக்காவின் நிலப்பரப்பில் வாழும் மிருகங்கள் இல்லை. :)

said...

என்ன சொல்ல வர்ரீங்க ..ரெண்டும் எதிரெதிரா முறைச்சிக்கிட்டு நிக்குது. நீங்க அதுக்கும் இதுக்கும் கல்யாணம் அப்டிங்கிறீங்க. ஏதோ அனுபவசாலி .. சொல்றீங்க..கேட்டுக்கறேன். :)

said...

//:)

இதுக்குமேல் எதும் சொல்லி...
:))//

கண்ணன், என்ன இது? சொல்லிட்டு சிரியுங்க. நாங்களும் சிரிப்போமில்ல!

said...

யானை ஆண்டால் என்ன கழுதை ஆண்டால் என்ன, நல்லது நடந்தால் சரி.

said...

நம்மூர்ல்ல பா.ம.க. வோட சின்னமும் யானையாத் தான் இருந்துச்சு இப்போ மாம்பழமா மாத்திட்டாங்க..,,

அப்புறம் தலீவர் என்னச் சொல்ல வர்றார்ன்னா அமெரிக்கா அரசியல்ல இறங்கணும்ன்னா ஒண்ணு நீங்க கயிதையா இருக்கணும் இல்லாங்காட்டி ஆனையா இருக்கணும் கண்டிப்பா மனுசனா மட்டும் இருக்கவே கூடாது... ரைட்டாப் புரிஞ்சிகிட்டேனா தலீவா...

said...

//ஓஹோ... நான் இது வரைக்கும் ஓட்டு போடறவங்கதான் கழுதை மாதிரின்னு நினச்சிட்டு இருந்தேன் (courtesy: Tuglak) :-)) //

கயித, இன்னா நீயி, ஓட்டு போட்டுக்கினு ஓட்டாண்டியாப் போறாம் பாரு அவனெல்லாம் வெறும் கயித. ஆனா தேர்தல்ல நின்னு கெலிச்சு வராம் பாரு அப்போ அவன் கழுதையார்! இப்ப பிரியுதா?

said...

//இ.கொ,
சுவாரசியமான தகவல்கள்.//

நன்றி வெற்றி.

//இலங்கையில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமும் யானைதான்.//

நம்ம ஊரிலும் ஒரு கட்சியின் முன்னாள் சின்னமாச்சே!

//ஆனால் அவர்கள் இச் சின்னத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என எனக்குத் தெரியாது.சிலவேளைகளில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியையைப் பின்பற்றி இச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை.//

இலங்கை நண்பர்கள் யாராவது பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

said...

//யானை கழுதை இரண்டுமே அமெரிக்காவின் நிலப்பரப்பில் வாழும் மிருகங்கள் இல்லை. :)//

ஆமாம் அரைபிளேடு. நீங்க சொன்னது சரிதான்.

கழுதையைப் பொறுத்த வரை கொலம்பஸ் அமெரிக்கா வரும் பொழுதே வந்து விட்டது. அதனால் இவர்கள் எல்லாம் படம் வரையத் தொடங்கும் பொழுதே கழுதைகள் அமெரிக்காவில் அரசியல் செய்து கொண்டு இருந்தது. :))

ஆனால் யானை எப்பொழுது அமெரிக்கா வந்ததென சரியாகத் தெரியவில்லை!

said...

//ரெண்டும் எதிரெதிரா முறைச்சிக்கிட்டு நிக்குது. நீங்க அதுக்கும் இதுக்கும் கல்யாணம் அப்டிங்கிறீங்க.//

சரியாத்தானே சொல்லி இருக்கேன்!! :))

said...

//யானை ஆண்டால் என்ன கழுதை ஆண்டால் என்ன, நல்லது நடந்தால் சரி.//

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போயி இப்போ யானை ஆண்டாலும் கழுதை ஆண்டாலும் என ஆகிவிட்டதா! பேஷ் பேஷ்!!

said...

//நம்மூர்ல்ல பா.ம.க. வோட சின்னமும் யானையாத் தான் இருந்துச்சு இப்போ மாம்பழமா மாத்திட்டாங்க..,,//

அதாவது பிள்ளையார் போயி ஞானப்பழம்!!

//அப்புறம் தலீவர் என்னச் சொல்ல வர்றார்ன்னா அமெரிக்கா அரசியல்ல இறங்கணும்ன்னா ஒண்ணு நீங்க கயிதையா இருக்கணும் இல்லாங்காட்டி ஆனையா இருக்கணும் கண்டிப்பா மனுசனா மட்டும் இருக்கவே கூடாது... ரைட்டாப் புரிஞ்சிகிட்டேனா தலீவா...//

நான் அமெரிக்க அரசியல் அப்படின்னு குறிப்பிட்டு சொன்னேனா? ;-)

said...

ஹும்.. இந்த ஊர்ல இப்படி பண்ணிருந்தாங்கண்ணா முதல்ல நார்வேஜியன் ஸ்னைப்பர வச்சு போட்டு தள்ளிருப்பாங்க.

said...

பழைய தகவலு. ஆனா நமக்குப் புதுசு. எடுத்துச் சொன்னதுக்கு நன்றி.

ஆமா புஸ்ஸு கழுதையா ஆனையா? அதச் சொல்லுங்க மொதல்ல. ஆனாலும் கழுதைய வெச்சுக்கிட்டும் தேர்தல்ல ஜெயிக்கவும் தெறமை வேணுந்தான்.

said...

இ.கொ.

தகவலுக்கு நன்றி. இந்த இரு சின்னங்களும் ஒரு கேலிசித்திரக்காரரின் கைவண்ணம் என்பது ஆச்சரியமான விஷயம். துக்ளக் கார்ட்டூன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நம் ஊரிலும் எல்லா கட்சிகளுக்கும் கழுதைச்சின்னம் வந்திருக்கும். நல்ல வேளை. யாரும் துக்ளக்கை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை :-)

said...

//ஹும்.. இந்த ஊர்ல இப்படி பண்ணிருந்தாங்கண்ணா முதல்ல நார்வேஜியன் ஸ்னைப்பர வச்சு போட்டு தள்ளிருப்பாங்க.//

உம்ம ஊர் பத்திரிகை சுதந்திரம் புல்லரிக்குதேய்யா. ('பத்திரிகை'யில் எழுதினா உயிர் கூட்டில் அடைபடாமல் 'சுதந்திரமா' திரியற நிலமை வரும். இல்லையா?)

நல்ல வேளை தாமஸ் நாஸ்ட் தப்பிச்சாரு.

said...

//பழைய தகவலு. ஆனா நமக்குப் புதுசு. எடுத்துச் சொன்னதுக்கு நன்றி.//

நன்றிக்கு நன்றி. (நன்றிக்கு நன்றிக்கு நன்றி எல்லாம் சொல்லப்பிடாது!)

//ஆமா புஸ்ஸு கழுதையா ஆனையா? அதச் சொல்லுங்க மொதல்ல.//
ஆனை.

//ஆனாலும் கழுதைய வெச்சுக்கிட்டும் தேர்தல்ல ஜெயிக்கவும் தெறமை வேணுந்தான்.//
அதான் எல்லாக் கழுதைங்களுக்கும் இருக்கே!!

said...

//தகவலுக்கு நன்றி. //

நன்றி நாகு.

//இந்த இரு சின்னங்களும் ஒரு கேலிசித்திரக்காரரின் கைவண்ணம் என்பது ஆச்சரியமான விஷயம். //

அதுவும் இரண்டுமே ஒரே ஆளின் கற்பனை. அதான் இன்னும் சூப்பர்.

//துக்ளக் கார்ட்டூன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நம் ஊரிலும் எல்லா கட்சிகளுக்கும் கழுதைச்சின்னம் வந்திருக்கும். நல்ல வௌை. யாரும் துக்ளக்கை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை :-)//
அவரின் படி வாக்காளர்கள்தான் கழுதை. அதை அரசியல்வாதிகள் சீரியஸாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.