ப்ளாஷில் கலக்குவது எப்படி? அவ்வப்போது நான் செய்யும் ப்ளாஷ் பதிவுகளின் பின்னூட்டங்களில் சந்திக்கும் கேள்வி இது.
நான் நிச்சயமாக தொழில்ரீதியிலான ப்ளாஷ் தயாரிப்பவன் அல்ல. அப்படிப்பட்டவர்கள் யாரும் தங்கள் பதிவுகளில் ப்ளாஷ் ஏனோ உபயோகிப்பதில்லை!
இயந்திரங்களின் இயக்கத்தையும், ஹைட்ராலிக் ஓட்டத்தையும் அசையாப்படம் மூலம் 2 மணிநேரங்கள் சொல்வதைவிட, ஒரு அசையும் படம் 5 நிமிடங்களில் தெளிவாக விளக்கிவிடுகிறது என்பதை அனுபவபூர்வமாகக் கண்டதால், இந்த மென்பொருளை நண்பரின் நண்பரின் நண்பர் மூலம் அடைந்தேன், தட்டித்தடவி உதவிப்பக்கங்கள் மூலமும், உதாரணங்கள் மூலமும் கற்றுக்கொண்டேன்.
இம்மென்பொருளை இங்கே (30 நாள் இலவசம்) அல்லது இணையத்தில் தேடி தரவிறக்கிக்கொள்ளலாம். இலவசமாக எங்கும் கிடைக்கவில்லை :-(.
Interaction என்பது சில பதிவுகளின் வீச்சையே மாற்றிவிடும். ஒரே சம்பவம் பற்றி அதிமுகவும் திமுகவும் வேறு வேறு கருத்துக்கள் வைத்திருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை, அக்கட்சிகளின் தலைவர்களும் அடிமட்டப்பேச்சாளர்களும் பேசும் தொனி வித்தியாசப்படும் என்பதை வைத்து காமடி செய்தது நான் தான் முதலில் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. ஆனால், எந்தக்கட்சி என்பதையும், பேச்சாளர் நிலையையும் பயனர் தேர்ந்தெடுப்பதுபோல் வைத்தால் பழைய கள் புது மொந்தையில் புதுமை காட்டுகிறது அல்லவா?
இந்த வீடியோத் துண்டில் எளிமையான ஒரு ப்ளாஷ்-ஐ எப்படித் தயாரிப்பது என்று விளக்கியிருக்கிறேன்.
அதை SWF கோப்பாக மாற்றுவதற்கான குறிப்புகள் இங்கே.
மேலதிக ஜிகினா வேலைகள், வலைப்பதிவில் ஏற்றுவது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாமா?