பொதுவா ஒரு பந்தில் அடிக்கக் கூடிய அதிகபட்ச ஓட்டங்கள் என்ன அப்படின்னு கேட்டா ஆறு ஓட்டங்கள் என்றுதான் நாம் சொல்லுவோம். ஆனா அவ்வளவுதான் அடிக்க முடியுமா? அதுக்கும் மேல் அடித்தது உண்டா என பார்ப்போமா?
போன வருடம் இங்கிலாந்தின் ஒரு ஆட்டத்தில் கெவின் பியட்டர்ஸன் ஒரு பந்தில் ஏழு ஓட்டங்கள் குடுத்த பெருமையைப் பெற்றாராம். ஒரு நோ பாலில் அப்பந்தினை எதிர்கொண்ட வீரர் ஆறு அடித்ததால் அப்பந்தில் ஏழு ஓட்டங்கள் எடுக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கும் மேல் அடிக்க முடியுமா?
அடிக்க முடியும் என்ன, அடித்து இருக்கிறார்கள். அதுவும் ஒரு முறை அல்ல மூன்று முறை. எவ்வளவு ஓட்டங்கள் தெரியுமா? எட்டு ஓட்டங்கள். எப்படி என்று பார்க்கலாமா?
1928-29ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடந்த டெஸ்ட்
பந்தயம் ஒன்றில் இங்கிலாந்து அணியினைச் சேர்ந்த பேட்ஸி ஹெண்ட்ரன் என்பவர் பந்தினை அடித்துவிட்டு நான்கு ஓட்டங்கள் ஓடியே எடுத்தார். அப்பொழுது அப்பந்தினைத் தடுத்த ஆஸ்திரேலிய வீரர் பந்தினை விக்கெட் நோக்கி எறிய அது நேராக மைதானத்தின் எதிர் பகுதி எல்லைக் கோட்டினை தாண்டிச் சென்றது. ஆக பேட்ஸி பெற்றது எட்டு ஓட்டங்கள். ஒரு கொசுறு செய்தி, இந்த டெஸ்ட் போட்டியில்தான் டான் பிராட்மேன் அறிமுகமானார். (படத்தில் வலப்புறத்தில் இருப்பவர்தான் பேட்ஸி.)இதன் பிறகு 1980 - 81ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் நியூஸிலாந்துக்கும்
நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே முறையில் நியூஸிலாந்தின் ஜான் ரைட் (நம்ம அணியின் பயிற்சியாளராக இருந்தாரே அவரேதான்) இதே முறையில் ஒரு பந்தில் எட்டு ஓட்டங்கள் பெற்றார். இவர் அடித்த பந்தினை பீல்டர்கள் எடுப்பதற்குள் நான்கு ஓட்டங்கள் ஓடி எடுத்து விட்டார். பீல்டர் எறிந்த பந்தினை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் ராட் மார்ஷ் அதனை விக்கெட் நோக்கி எறிய அது விக்கெட்டில் படாமல் எல்லைக் கோட்டினைத் தாண்டியதால் நான்கு ஓட்டங்கள் கூடுதலாகக் கிடைத்தது. இந்த இரு சம்பவங்களிலும் எட்டு ஆட்டங்கள் கொடுத்த அணியாக ஆஸ்திரேலியாவே இருந்தது ஆச்சரியம்தான் இல்லையா!இது நடந்த மூன்றாவது சம்பவம் 2004-05ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கும்
தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் பொழுது நடந்தது. மேற்கிந்திய தீவுகளின் ப்ரையன் லாரா பந்தை அடித்துவிட்டு மூன்று ரன்கள் ஓடி எடுத்தார். அப்பொழுது பந்தினைத் தடுத்த தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்கீப்பர் மார்க் பவுச்சர் அப்பந்தினை எறியும் பொழுது அது தரையில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டில் பட்டது. அதனால் ஐந்து அதிக ஓட்டங்கள் அளிக்கப்பட்டன. இப்படியாக ஒரே பந்தில் எட்டு ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. முன்பெல்லாம் இந்த ஐந்து ஓட்டங்கள் பேட்ஸ்மனின் எண்ணிக்கையில்தான் சேர்க்கப்பட்டன. ஆனால் இந்நிகழ்ச்சிக்கு முன் செய்யப்பட்டிருந்த விதிமுறை மாற்றத்தால் இது உபரி ஓட்டங்களாக கணக்கில் வைக்கப்பட்டது. இந்த விதிமுறை மாற்றத்தை ப்ரையன் லாரா சபித்து இருப்பார். காரணம் அந்த இன்னிங்க்ஸில் அவர் அவுட் ஆனது 196 ஆட்டங்களுக்கு!!கிரிக்கின்போ தளத்தில் வாராவாரம் இது போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் தரப்படுகின்றது. நம் கவனத்தை ஈர்க்கும் சில பதில்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கு வழங்கப்படும்.
