Thursday, September 20, 2007

மழையும் மண்வாசனையும்

மழை பெய்யத் தொடங்கும் பொழுது வரும் மண்வாசனைக்குக் காரணம் என்ன? இதுதான் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி. நாம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு வாசனை அல்லவா மண்வாசம். நம்ம கவிஞர்கள் எல்லாம் ரொம்ப அனுபவிச்சு பாடல்கள் புனைந்த அந்த வாசனை எதனால் எழுகிறது எனப் பார்க்கத்தான் இந்தப் பதிவு.

மண்வாசனைக்கு முக்கியமான காரணம் ஒரு பாக்டீரியாதான். Actinomycetes என்ற வகையைச் சார்ந்த இந்த நுண்ணுயிரிகள் மண் ஈரப்பதமாக வளர்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் நிலமானது காய்ந்து போகும் பொழுது 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை வெளியிடுகின்றன. மழை பொழியும் பொழுது இந்த விதைகள் மழை நீரின் வேகத்தால் நிலத்தை விட்டு எழும்பி காற்றில் கலக்கின்றன. இந்த விதைகள் ஒரு விதமான மண் வாசம் அமையப் பெற்றிருக்கின்றன. இந்த வாசம் தரவல்ல ரசாயனத்தின் பெயர் Geosmins. அப்படி காற்றில் கலந்த இந்த ரசாயனங்களை நாம் சுவாசிக்க நம்மால் மண் வாசனையை உணர முடிகின்றது. இதன் காரணமாகத்தான் வெகு நாட்கள் கழித்து மழை பெய்யும் பொழுது இவ்வாசம் அதிகம் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்யும் பொழுது இவ்வாசனை அதிகம் இருப்பதில்லை. இவ்வகை பாக்டீரியாக்கள் உலகெங்கும் பரவி இருப்பதால் நம்மால் எங்கு மழை பெய்தாலும் இவ்வாசனையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்த பாக்டீரியாக்கள் தவிர வேறு மண் வாசத்திற்கு வேறு சில காரணிகளும் உள்ளன. பொதுவாகவே மழைநீர், அதுவும் முக்கியமாக நகர்ப்புறங்களில், அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட மழைநீர் மண்ணில் விழும் பொழுது மண்ணில் கலந்திருக்கும் ரசாயனங்களுடன் கலப்பதால் ஏற்படும் வேதி வினை காரணமாகவும் சில வகை வாசனை வெளிவருகின்றன. இது மண்ணில் இருக்கக்கூடும் கனிமங்கள், மேலே படர்ந்திருக்கும் வாகனப் புகை மூலமாக வந்த பெட்ரோலிய ரசாயனங்கள் என பலவற்றோடு சேரும் பொழுது ஒரு வித நொடி பரவுகிறது. இது முதலில் குறிப்பிட்ட மண் வாசனையை போலன்றி முகர்பவர்களுக்கு அவ்வளவு பிடித்தமாய் இருப்பதில்லை. இவ்வகை நெடியும் முதலில் பெய்யும் மழையின் பொழுதே வருகின்றது. ஏனென்றால் முதல் மழையிலேயே இந்த வேதிவினைகள் நிகழ்ந்து விடுவதால் தொடர்ந்து பெய்யும் மழையில் தொடர்ந்து வேதிவினைகள் நிகழ்வதும் இல்லை. அதனால் அந்நெடியும் எழுவதில்லை.

மூன்றாவதாக ஒரு காரணி சொல்லலாம் என்றால் அது மழை பெய்யும் இடத்தில் வளரும் தாவரங்கள்தான். இத்தாவரங்களில் இருந்து வெளியேறும் நறுமண எண்ணைகள் (பூக்களின் வழியாக, கிளைகள் உடைக்கப்படும் பொழுது என பல வகைகளில் இந்த தாவர எண்ணைகள் காற்றில் கலக்கப்படுகின்றன.) காற்றினில் கலந்து பின் அங்கு இருக்கும் பாறைகள் போன்றவற்றில் சேர்கின்றன. இப்பாறைகள் மீது மழைநீர் படும் பொழுது, இந்த எண்ணெய்கள் அத்தண்ணீரில் கலந்து அதன் மூலமும் இந்நறுமணங்கள் கமழ கூடிய வாய்ப்புகள் வருகின்றன. முதலில் கூறிய நுண்ணுயிரிகள் மூலம் வரும் மணம் போன்று இதுவும் இனிதான மணமாகவே இருக்கும்.

இவை மட்டும்தான் என இல்லாது இது போன்று வேறு காரணிகள் பல இருந்தாலும் பிரதானமாய் இவற்றைக் கூறலாம். இப்படி பல வாசங்களை கலவை இருப்பதால்தான் ஒவ்வொரு இடத்திலும் இந்த வாசனை வேறுபடுகிறது. ஆனால் இந்த காரணங்களினால்தான் காய்ந்த நிலத்தில் விழும் மழையினால் ஏற்படும் வாசம் அதிகமாக இருக்கிறது. மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த வாசத்தை உணர முடிகிறது அல்லவா?

Sunday, September 02, 2007

யானைக்கும் கழுதைக்கும் கல்யாணம்!!

நண்பர் நாகு அவர்களின் கேள்வி இது - "அமெரிக்கக் கட்சிகளின் சின்னங்களான யானை, கழுதை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன?" அவரே இந்த சின்னங்கள் அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை என்பதையும் சொல்லிட்டாரு.

ரொம்ப சிம்பிளான பதில் என்னன்னா இந்தச் சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னங்கள் இல்லை! ஒரு தனிமனிதனின் கற்பனைதான் இப்படி ஒரு நாட்டின் இரு பெரும் கட்சியின் சின்னங்களாக இருக்கின்றன எனச் சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை, கிட்டத்தட்ட உண்மை!

ஏன் கிட்டத்தட்ட அப்படின்னு கேட்டீங்கன்னா, இவரு வந்து இந்த கழுதையைப் பிரபலப் படுத்தறதுக்கு முன்னாடி கொஞ்ச நாளைக்கு வேற ஒருத்தர் இந்த கழுதையை உபயோகப்படுத்திட்டாரு. அதனாலதான். சரி, இப்போ ஒண்ணொண்ணா பார்க்கலாம்.



ஜனநாயகக் கழுதை

1828ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் ஆண்ட்ரூ ஜாக்ஸன். இவரை எதிர்த்தவர்கள் இவரை Jackass (ஆண் கழுதை) என அழைக்க, இவரும் விடாமல் அதனைத் தன் அடையாளமாகவே ஆக்கிக்கொண்டு போஸ்டரில் போட்டுக் கொள்ளும் அளவுக்குப் போய் விட்டார். ஆனால் அது அவரின் தனிப்பட்ட அடையாளமாகவே இருந்ததே தவிர கட்சியின் அடையாளமாக ஆகவில்லை.

அந்த பெருமைக்கு உரியவர் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைபவரான தாமஸ் நாஸ்ட் என்பவர். 1870ஆம் ஆண்டு அவர் வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை கழுதையாக உருவகப் படுத்தி இருந்தார். அது படிப்பவர்களின் கவனத்தைக் கவர தொடர்ந்து அவர் ஜனநாயகக் கட்சியை கழுதையாகவே உருவகப்படுத்தத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் இதையே செய்ய, இது அக்கட்சியின் சின்னமாகிவிட்டது.



குடியரசு யானை
குடியரசு யானையைத் தந்தவர் ஜனநாயகக் கழுதையைத் தந்த அதே தாமஸ் நாஸ்ட் என்பதுதான் ஒரு ருசிகரத் தகவல். 1874ஆம் ஆண்டு அவர் வரைந்த "The Third Term Panic" என்ற இந்தக் கேலிச் சித்திரத்தில் அவர் முதன் முதலில் குடியரசுக் கட்சியை யானையாக உருவகப் படுத்தினார். சிங்கத் தோல் போர்த்திய கழுதையை (ஜனநாயகக் கட்சி) கண்டு மற்ற மிருகங்கள் பயந்து ஓடுவது போல் வரைந்திர சித்திரம் அது. அதில் குடியரசுக் கட்சியை யானையாகச் சித்தரித்திருந்தார். கழுதையைப் போலவே இந்த யானையும் மிகுந்த வரவேற்பைப் பெற மற்றவர்களும் குடியரசுக் கட்சியை யானையாகவே உருவகப் படுத்தத் தொடங்கினர்.

குடியரசுக் கட்சியினர், அதிகார பூர்வமாகவே யானையை அவர்களது கட்சிச் சின்னமாகத் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆனால் இதுவரை ஜனநாயகக் கட்சியினர் கழுதையை அப்படித் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் அது அவர்களுது சின்னமாகவே உபயோகப்படுத்தப் படுகிறது.

குடியரசுக் கட்சியினர் யானையை கண்ணியம் மிக்க, உறுதியுடைய, புத்திசாலி மிருகமாகக் கொண்டாட, ஜனநாயகக் கட்சியினரோ யானையை பழமை விரும்பி, பகட்டான, எளிதில் தவறு செய்யும் புத்தியற்ற மிருகமாகப் பார்க்கின்றனர். அதே சமயம் அவர்கள் கழுதையை சாதாரணமான, பணிவான, வீரமான, விரும்பத்தக்க மிருகமாகச் சொன்னாலும் குடியரசுக் கட்சியினர் அதை பிடிவாதமிக்க, மடத்தனமான மிருகம் என கேலி செய்கின்றனர்.

வெறும் சின்னத்தை வைத்துப் பார்த்தால் துளசி டீச்சர், பொன்ஸ் என வலையுலகப் பெண்கள் ஓட்டு எல்லாம் குடியரசுக் கட்சியினருக்குத்தான் போல தெரிகிறது!

சில சுட்டிகள்
சுட்டி 1
சுட்டி 2
சுட்டி 3

Sunday, August 26, 2007

ஒலியின் வேகத்தை விட வேகம் - கான்கார்ட் விமானங்கள்

கான்கார்ட் விமானங்களின் சேவை ஏன் நிறுத்தப்பட்டன என்று அனானி ஒருவர் கேள்வி கேட்டு இருக்கிறார். தனிப்பட்ட முறையில் என்னால் போக முடியாமல் போயிற்றே என நான் வருத்தப்படும் ஒரு விஷயம் என்பதால் இக்கேள்விக்கு பதில் சொல்ல நான் ஆசைப்படுகிறேன்.

1969ஆம் ஆண்டு பறக்கத் தொடங்கிய கான்கார்ட் விமானங்கள் ஏன் பறக்காமல் சிறகொடிக்கப்பட்டன? காரணங்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் இருகிறதா? கொஞ்சம் கொசுவர்த்தி சுத்துவோம்.

பறக்கத் தொடங்கியதிலிருந்தே வேகமாய் பறக்க வேண்டும் என்ற ஆவல் மனிதரிடையே இருந்து வந்தது. அதுவும் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில், அதாவது மணிக்கு 1,225 கிலோமீட்டர் வேகத்தில் பறப்பது என்பது ஒரு மைல்கல்லாக இருந்தது. ராணுவ விமானங்கள் பல அவ்வேகத்தில் பறந்தாலும் பயணிகள் சேவையில் அவ்வேகத்தில் சென்ற விமானங்கள் இரண்டே இரண்டுதான் - ஒன்று கான்கார்ட். மற்றொன்று அதற்குப் போட்டியாக ரஷ்யா தயாரித்த டுப்பலோவ் 144. இதில் வெற்றிகரமாக இயங்கியது என்னவோ கான்கார்ட்தான்.

மிகுந்த பொருட்செலவில் தயார் செய்யப்பட்ட விமானங்கள்தான் கான்கார்ட். அவற்றின் வரலாற்றை மற்றொரு சமயம் பார்க்கலாம். மொத்தமே 20 விமானங்கள்தான் தயாரிக்கப்பட்டன. அதில் 6 விமானங்கள் ஆராய்ச்சிக்களுக்காகவும் மீதமுள்ள 14 விமானங்கள் பயணிகள் சேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் ஆளுக்குப் பாதி என தலா ஏழு விமானங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். உலகிலேயே இவ்விரண்டு நிறுவனங்கள்தான் கான்கார்ட் விமான சேவையை பயணிகளுக்கு அளித்தன. சரி விஷயத்திற்கு வருவோம்.

ஜூலை 25, 2000. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக விபத்தென்றால் என்னவென்று அறியாத கான்கார்ட் விமானங்களின் முதல் விபத்து. ஆனால் எப்படிப்பட்ட கோர விபத்து. விமானத்தில் இருந்த 100 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் அவர்களுடன் தரையில் இருந்த நால்வரும் மரணமடைந்த ஒரு பரிதாபமான நிகழ்வு. ஆனால் கான்கார்ட் என்ற சகாப்தத்தின் கடைசி அத்தியாயத்தின் ஆரம்பமாக இந்த விபத்து அமையும் என எத்தனை பேர் அன்று நினைத்தார்கள்?

இவ்விபத்து நிகழ்ந்ததால் அனைத்து கான்கார்ட் விமானங்களும் சோதனைக்குட்படுத்தப் படவேண்டும் என இச்சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். இவ்வளவுக்கும் இவ்விபத்தின் காரணம் வேறொரு விமானத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பகுதி ஒன்று ஓடுதளத்தில் விழுந்து, அவ்விமானத்தின் பின் சென்ற கான்கார்ட் விமானத்தின் சக்கரம் அதன் மேலேறியதால்தான் வெடித்தது எனக் கண்டறிந்தார்கள். எனினும் பல சோதனைகளுக்காக இவ்விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

பல சோதனைகள், சில மாற்றங்களுக்குப் பின் முதல் சோதனை ஓட்டம் (இது ஓட்டமா? சோதனை பறப்பு எனச் சொல்லலாமா?) நடந்தது ஜூலை 17 2001. வெற்றிகரமான ஓட்டம் என அறிவிக்கப்பட்ட பின், மேலும் சில சோதனைகளுக்குப் பின் பயணிகளுடன் பறக்கத் தொடங்கியது செப்டம்பர் 11, 2001. மற்றுமோர் மாபெரும் கொடுமை நடந்த தினம் அல்லவா அது? அந்த கோர சம்பவம் நடந்த பொழுது லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மாற்றியமைக்கப்பட்ட கான்கார்ட் விமானம். நடந்த செய்தி கேட்டு மீண்டும் லண்டனை நோக்கி திருப்பி விடப்பட்டது.

அந்நிகழ்வின் பின் மீண்டும் 2001 நவம்பர் மாதம் இவ்விமான சேவை தொடங்கினாலும் முதலில் நிகழ்ந்த விபத்தின் காரணமாகவும், செப்டம்பர் 11 நிகழ்வின் பின் விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததினாலும், உலக வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவினாலும், தொடர்ந்து உயர்ந்து வரும் சீரமைப்பு செலவினங்களாலும் கான்கார்ட் சேவையினை நிறுத்துக் கொள்வதாக ஏப்ரல் 10, 2003 அன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தார் அறிவித்தனர். அவ்வருடம் அக்டோபர் மாதமே இச்சேவை இறுதியாக நிறுத்தப்பட்டது.

இதுதாங்க கான்கார்ட் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்ட கதை. கான்கார்ட் விமானங்களைப் பற்றி சில குறிப்புகள்.

  • இவ்விமானங்கள் பறப்பது கிட்டத்தட்ட மணிக்கு 2200 கிலோமீட்டர்கள். அதாவது ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு!
  • லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் அத்தூரத்தை சுமார் மூன்றரை மணி நேரத்தில் கடந்து விடும். மற்ற விமானங்கள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
  • லண்டனுக்கும் நியூயார்க்கும் இடையேயான நேர வித்தியாசம் 5 மணிநேரம் ஆதலால்,லண்டனில் இருந்து கிளம்பிய நேரத்திற்கு முன்னமே நியூயார்க்கில் வந்து இறங்கி விடும். (அதாவது லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்குக் (அதாவது நியூயார்க் நேரம் காலை 7மணி) கிளம்பினால் நியூயார்க் நகரில் காலை 10:30 மணிக்கு வந்து சேர்ந்து விடும்.)
  • வேகத்திற்கான பல உலக சாதனைகளைப் படைத்த விமான ரகம் கான்கார்ட்
  • முதல் பயணிகள் விமானம் சென்றது நியூயார்க் நகருக்கு இல்லை. பஹ்ரைன் நகருக்கு லண்டனில் இருந்தும் பாரிஸில் இருந்து ரியோ டி ஜெனீரோவிற்கும் பறந்தது.
  • இந்தியாவின் மீது இவ்விமானங்கள் பறக்க இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது
  • இவ்விமானங்கள் பறக்கும் உயரம் 60,000 அடிகள். இவ்வளவு உயரத்தில் பறப்பதால் அவ்விமானங்களின் ஜன்னல் வழியாகப் பூமியைப் பார்க்கும் பொழுது அது தட்டையாக இல்லாமல் பந்து போல் வளைவாகத் தெரியும்.
  • மிகுந்த வேகத்தில் பறப்பதால் இவ்விமானங்களின் கட்டுப்பாட்டு அறையில் ஒரு சிறிய விரிசல் வரும். சூடு தணியும் பொழுது அவ்விரிசல் மறைந்து விடும். கான்கார்ட் விமானங்களின் கடைசி பயணத்தின் பொழுது அவ்விரிசலில் அவ்விமானத்தின் பைலட்டின் தொப்பி சொருகப்படும். அவ்விரிசல் மறையும் பொழுது அத்தொப்பி அவ்விமானத்தில் நிரந்தரமாக இணைக்கப்பட்டு விடும்.

மேலும் விபரங்களுக்குச் சில சுட்டிகள்

படங்களுக்கு நன்றி - விக்கிப்பீடியா