Monday, October 15, 2007
55. இந்திய பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களின் கவனத்திற்கு...
----------------------------------------------------------------
பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் (வெளிநாட்டிலல்ல,உள்ளூரில்தான்) என்ன செய்யவேண்டும்.. காவல்துறையினர் எப்படிக் கண்டுபிடித்துத் தருவார்கள்? சற்று விளக்கமாகப் பதிலளிக்க முடியுமா? என்று நண்பர் அபுல் கேட்டிருந்தார்.
கேட்டு ரொம்ப நாள் ஆயிற்று ஆனாலும், இதற்கான பதில் இதோ.
தொலைந்து போனால், அதே பாஸ்போர்டையே கண்டுபிடித்துத் தரமாட்டார்கள். புதிய பாஸ்போர்ட் தான் கொடுக்கப்படும்.
-------------
இந்தியாவில் தொலைத்துவிட்டால் என்ன செய்வது:
stolen or lost passports
1. முதலில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். கொடுத்ததன் பயனாய் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கை (FIR) அவசியம் தேவை.
2. அ) இந்த முதல் தகவல் அறிக்கையின் மூன்று நகல்கள்
ஆ) அன்னெக்ஷர் B
இ) கடவுச்சீட்டு தொலைந்து போக காரணம், இடம், நேரம் போன்றவற்றை விவரிக்கும் கடிதம்
ஈ) தொலைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதிய கடவுச்சீட்டு வழங்குமாறு கடவுச்சீட்டு அலுவலருக்கு வேண்டுகோள் கடிதம்.
உ) தொலைந்து போன கடவுச்சீட்டின் நகல்
இவற்றுடன் தொலைந்த/பழுதடைந்த கடவுச்சீட்டிற்கு மாற்றாய் புதியது வழங்கக்கோரும் விண்ணப்ப படிவத்தையும் (Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport) முழுமையாக பூர்த்தி செய்து பாஸ்போர்ட் ஆபீஸில் சமர்பிக்க வேண்டும். பழைய பாஸ்போர்டின் நகல்கள் இருந்தால் மாற்று வழங்குவது சற்று விரைவாக நடக்கும். அதோடு இதே விண்ணப்பத்தில் முகவரி மாற்றம், திருமணம், குழந்தைகள் மற்றும் இன்னபிற விவரங்களில் மாற்றங்கள் இருந்தால் அதையும் குறிப்பிடலாம். அதோடு ECNR பழைய பாஸ்போர்டில் கொடுக்கப்பட்டிருந்தால், அதையும் அதற்குண்டான பகுதியில் குறிப்பிடவேண்டும். ECNR உக்கு தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டவற்றோடு, புதிய கடவுச்சீட்டு வேண்டும்போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்களையும் சமீபத்திய புகைப்படங்களையும் இணைக்க வேண்டும்.
இவற்றோடு மாற்றுக் கடவுச்சீட்டிற்கான கட்டணத்தையும் (தற்போது ரூ. 2500) செலுத்த வேண்டும்.
மேற்சொன்னவற்றை பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் இருந்தால் நேரடியாகவோ, மாவட்ட தலைநகரங்களில் இருக்கும் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களிலோ, விரைவுத்தபால் நிலையங்களிலோ சமர்ப்பிக்கலாம்.
தத்கால் முறையில் அவசரமாக மாற்றுக் கடவுச்சீட்டு தேவைப்பட்டால் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மட்டுமே நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். (இது முந்தைய விதி. தற்போது மாறியிருப்பதாக சொல்கிறார்கள். இதை confirm செய்ய வேண்டும்)தத்கால் முறையில் விண்ணப்பம் செய்வதற்கு அவசரத் தேவைக்கான எவ்விதமான சான்றும் சமர்பிக்கத் தேவையில்லை.
-------------------------
வெளிநாட்டில் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
மாதிரிக்காக இங்கே செல்லவும்.
-------------------------
சேதமடைந்த (damaged) கடவுச்சீட்டுகளுக்கு காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை (obviously! :)). தற்போதைய கடவுச்சீட்டின் நகலுடன் அசலும் சமர்ப்பிக்க படவேண்டும். அதோடு Duplicate Passport in lieu of lost, damaged or stolen passport படிவத்தை பூர்த்தி செய்து புதிய கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
-------------------------
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்.
Monday, October 08, 2007
மின்னலும் இடியும் சத்தமும்
மின்னலைப் பார்த்ததிலிருந்து இடி சத்தம் கேட்கும்வரை இருக்கும் இடைவெளியை வைத்து எவ்வளவு தூரத்தில் இடி விழுந்தது என்று தோராயமாகக் கணிக்கிறார்கள் - ஐந்த(சரியாக நினைவில்லை) எண்ணினால் ஒரு மைல் தள்ளி, 10 எண்ணினால் இரண்டு மைல் தள்ளி.
ஒளி/ஒலி வேக வித்தியாசத்தினால் - சரியான விளக்கம்(சரியான எண்ணிக்கை) தரவும்.
பதில்: மின்னல் மனிதகுலத்துக்கு பலகாலமாகவே ஆச்சரியம் தந்து வந்த ஒரு சமாச்சாரம். மேகத்தில் இருக்கும் ஐஸ் கட்டிகளில் உள்ள ஸ்டேட்டிக் மின்சாரம் ஒன்றோடு ஒன்று உராய்வதால் மின்னல் உருவாகிறது என்று சுலபமாகச் சொல்லிவிட்டாலும், எங்கே, எப்போது உருவாகின்றது என்பதை வைத்து 15 வகை மின்னல்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள் இங்கே!
தோராயமாக 40 ஆம்பியர் மின்னோட்டத்துடனும், 500 மெகாஜூல் சக்தியுடனும் இருந்தாலும், சமயங்களில் 120 ஆம்பியர் வரை செல்லக்கூடியது. காட்டெருமை மாதிரி - எப்ப பாயும் எப்ப மேயும்னு சொல்ல முடியாது. மரக்கட்டிடம் எரியும் என்று பார்த்தால் பெரிய சேதம் எதுவும் இல்லாமல் விட்டுவிட்டும் போகும், இரும்புக்கத்தியை உருக்கி வழிந்தோடவும் விடும். 28000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வருமாம்.
மின்னலின் சத்தம்தான் இடி என்றாலும், இடிச்சத்தம் மின்னலைப்பார்த்தவுடன் வருவதில்லை. காரணம் மிகச்சுலபமானது. ஒலி செல்லும் வேகத்துக்கும் ஒளி செல்லும் வேகத்துக்கும் உள்ள வித்தியாசம்தான். ஒளியின் வேகம் ஏறத்தாழ ஒரு விநாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர்கள்! ஒலியோ 21டிகிரி வெப்பத்தில் காற்றில்லாதபோது ஒரு செகண்டுக்கு 344 மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தை எட்டும். காற்றிருந்தாலோ, தடைகள் இருந்தாலோ, வெப்பம் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தாலோ இந்த வேகம் மாறுபடும்.
எனவே, மின்னலின் ஒளிக்கும் ஒலிக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து எவ்வளவு தூரத்தில் விழுந்தது என்று கண்டுபிடிப்பது அவ்வளவு துல்லியமான முறை அல்ல.
இருந்தாலும் ஒரு தோராயத்துக்கு, வித்தியாசத்தை வைத்து தூரம் கண்டுபிடிக்க முடியும்.
கிழே உள்ள ப்ளாஷைப் பாருங்கள். இதில் ஒளி ஒலி வித்தியாசத்தை வைத்து எவ்வள்வு தூரத்துக்கு எத்தனை செகண்டு வித்தியாசம் வரும் என்பதை அறியலாம். (330 மீட்டர் விநாடிக்கு என்ற ஒலிவேகம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது).
Monday, October 01, 2007
ஒரு பந்தில் எத்தனை ரன்?
பொதுவா ஒரு பந்தில் அடிக்கக் கூடிய அதிகபட்ச ஓட்டங்கள் என்ன அப்படின்னு கேட்டா ஆறு ஓட்டங்கள் என்றுதான் நாம் சொல்லுவோம். ஆனா அவ்வளவுதான் அடிக்க முடியுமா? அதுக்கும் மேல் அடித்தது உண்டா என பார்ப்போமா?
போன வருடம் இங்கிலாந்தின் ஒரு ஆட்டத்தில் கெவின் பியட்டர்ஸன் ஒரு பந்தில் ஏழு ஓட்டங்கள் குடுத்த பெருமையைப் பெற்றாராம். ஒரு நோ பாலில் அப்பந்தினை எதிர்கொண்ட வீரர் ஆறு அடித்ததால் அப்பந்தில் ஏழு ஓட்டங்கள் எடுக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கும் மேல் அடிக்க முடியுமா?
அடிக்க முடியும் என்ன, அடித்து இருக்கிறார்கள். அதுவும் ஒரு முறை அல்ல மூன்று முறை. எவ்வளவு ஓட்டங்கள் தெரியுமா? எட்டு ஓட்டங்கள். எப்படி என்று பார்க்கலாமா?
1928-29ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடந்த டெஸ்ட்

இதன் பிறகு 1980 - 81ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கும் நியூஸிலாந்துக்கும்

இது நடந்த மூன்றாவது சம்பவம் 2004-05ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கும்

கிரிக்கின்போ தளத்தில் வாராவாரம் இது போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் தரப்படுகின்றது. நம் கவனத்தை ஈர்க்கும் சில பதில்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கு வழங்கப்படும்.
Thursday, September 20, 2007
மழையும் மண்வாசனையும்

இந்த பாக்டீரியாக்கள் தவிர வேறு மண் வாசத்திற்கு வேறு சில காரணிகளும் உள்ளன. பொதுவாகவே மழைநீர், அதுவும் முக்கியமாக நகர்ப்புறங்களில், அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட மழைநீர் மண்ணில் விழும் பொழுது மண்ணில் கலந்திருக்கும் ரசாயனங்களுடன் கலப்பதால் ஏற்படும் வேதி வினை காரணமாகவும் சில வகை வாசனை வெளிவருகின்றன. இது மண்ணில் இருக்கக்கூடும் கனிமங்கள், மேலே படர்ந்திருக்கும் வாகனப் புகை மூலமாக வந்த பெட்ரோலிய ரசாயனங்கள் என பலவற்றோடு சேரும் பொழுது ஒரு வித நொடி பரவுகிறது. இது முதலில் குறிப்பிட்ட மண் வாசனையை போலன்றி முகர்பவர்களுக்கு அவ்வளவு பிடித்தமாய் இருப்பதில்லை. இவ்வகை நெடியும் முதலில் பெய்யும் மழையின் பொழுதே வருகின்றது. ஏனென்றால் முதல் மழையிலேயே இந்த வேதிவினைகள் நிகழ்ந்து விடுவதால் தொடர்ந்து பெய்யும் மழையில் தொடர்ந்து வேதிவினைகள் நிகழ்வதும் இல்லை. அதனால் அந்நெடியும் எழுவதில்லை.

இவை மட்டும்தான் என இல்லாது இது போன்று வேறு காரணிகள் பல இருந்தாலும் பிரதானமாய் இவற்றைக் கூறலாம். இப்படி பல வாசங்களை கலவை இருப்பதால்தான் ஒவ்வொரு இடத்திலும் இந்த வாசனை வேறுபடுகிறது. ஆனால் இந்த காரணங்களினால்தான் காய்ந்த நிலத்தில் விழும் மழையினால் ஏற்படும் வாசம் அதிகமாக இருக்கிறது. மண்வாசனை என நினைக்கும் பொழுதே நம்மால் அந்த வாசத்தை உணர முடிகிறது அல்லவா?
Sunday, September 02, 2007
யானைக்கும் கழுதைக்கும் கல்யாணம்!!
ரொம்ப சிம்பிளான பதில் என்னன்னா இந்தச் சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னங்கள் இல்லை! ஒரு தனிமனிதனின் கற்பனைதான் இப்படி ஒரு நாட்டின் இரு பெரும் கட்சியின் சின்னங்களாக இருக்கின்றன எனச் சொன்னால் நம்புவீர்களா? அதுதான் உண்மை, கிட்டத்தட்ட உண்மை!
ஏன் கிட்டத்தட்ட அப்படின்னு கேட்டீங்கன்னா, இவரு வந்து இந்த கழுதையைப் பிரபலப் படுத்தறதுக்கு முன்னாடி கொஞ்ச நாளைக்கு வேற ஒருத்தர் இந்த கழுதையை உபயோகப்படுத்திட்டாரு. அதனாலதான். சரி, இப்போ ஒண்ணொண்ணா பார்க்கலாம்.

1828ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக

அந்த பெருமைக்கு உரியவர் அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைபவரான தாமஸ் நாஸ்ட் என்பவர். 1870ஆம் ஆண்டு அவர் வரைந்த ஒரு கேலிச்சித்திரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களை கழுதையாக உருவகப் படுத்தி இருந்தார். அது படிப்பவர்களின் கவனத்தைக் கவர தொடர்ந்து அவர் ஜனநாயகக் கட்சியை கழுதையாகவே உருவகப்படுத்தத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் இதையே செய்ய, இது அக்கட்சியின் சின்னமாகிவிட்டது.


குடியரசுக் கட்சியினர், அதிகார பூர்வமாகவே யானையை அவர்களது கட்சிச் சின்னமாகத் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆனால் இதுவரை ஜனநாயகக் கட்சியினர் கழுதையை அப்படித் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் அது அவர்களுது சின்னமாகவே உபயோகப்படுத்தப் படுகிறது.
குடியரசுக் கட்சியினர் யானையை கண்ணியம் மிக்க, உறுதியுடைய, புத்திசாலி மிருகமாகக் கொண்டாட, ஜனநாயகக் கட்சியினரோ யானையை பழமை விரும்பி, பகட்டான, எளிதில் தவறு செய்யும் புத்தியற்ற மிருகமாகப் பார்க்கின்றனர். அதே சமயம் அவர்கள் கழுதையை சாதாரணமான, பணிவான, வீரமான, விரும்பத்தக்க மிருகமாகச் சொன்னாலும் குடியரசுக் கட்சியினர் அதை பிடிவாதமிக்க, மடத்தனமான மிருகம் என கேலி செய்கின்றனர்.
வெறும் சின்னத்தை வைத்துப் பார்த்தால் துளசி டீச்சர், பொன்ஸ் என வலையுலகப் பெண்கள் ஓட்டு எல்லாம் குடியரசுக் கட்சியினருக்குத்தான் போல தெரிகிறது!
சில சுட்டிகள்
சுட்டி 1
சுட்டி 2
சுட்டி 3
Sunday, August 26, 2007
ஒலியின் வேகத்தை விட வேகம் - கான்கார்ட் விமானங்கள்

பறக்கத் தொடங்கியதிலிருந்தே வேகமாய் பறக்க


ஜூலை 25, 2000. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக விபத்தென்றால்

இவ்விபத்து நிகழ்ந்ததால் அனைத்து கான்கார்ட் விமானங்களும் சோதனைக்குட்படுத்தப் படவேண்டும் என இச்சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். இவ்வளவுக்கும் இவ்விபத்தின் காரணம் வேறொரு விமானத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பகுதி ஒன்று ஓடுதளத்தில் விழுந்து, அவ்விமானத்தின் பின் சென்ற கான்கார்ட் விமானத்தின் சக்கரம் அதன் மேலேறியதால்தான் வெடித்தது எனக் கண்டறிந்தார்கள். எனினும் பல சோதனைகளுக்காக இவ்விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
பல சோதனைகள், சில மாற்றங்களுக்குப் பின் முதல் சோதனை ஓட்டம் (இது ஓட்டமா? சோதனை பறப்பு எனச் சொல்லலாமா?) நடந்தது ஜூலை 17 2001. வெற்றிகரமான ஓட்டம் என அறிவிக்கப்பட்ட பின், மேலும் சில சோதனைகளுக்குப் பின் பயணிகளுடன் பறக்கத் தொடங்கியது செப்டம்பர் 11, 2001. மற்றுமோர் மாபெரும் கொடுமை நடந்த தினம் அல்லவா அது? அந்த கோர சம்பவம் நடந்த பொழுது லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மாற்றியமைக்கப்பட்ட கான்கார்ட் விமானம். நடந்த செய்தி கேட்டு மீண்டும் லண்டனை நோக்கி திருப்பி விடப்பட்டது.
அந்நிகழ்வின் பின் மீண்டும் 2001 நவம்பர் மாதம் இவ்விமான சேவை தொடங்கினாலும் முதலில் நிகழ்ந்த விபத்தின் காரணமாகவும், செப்டம்பர் 11 நிகழ்வின் பின் விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததினாலும், உலக வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவினாலும், தொடர்ந்து உயர்ந்து வரும் சீரமைப்பு செலவினங்களாலும் கான்கார்ட் சேவையினை நிறுத்துக் கொள்வதாக ஏப்ரல் 10, 2003 அன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தார் அறிவித்தனர். அவ்வருடம் அக்டோபர் மாதமே இச்சேவை இறுதியாக நிறுத்தப்பட்டது.
இதுதாங்க கான்கார்ட் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்ட கதை. கான்கார்ட் விமானங்களைப் பற்றி சில குறிப்புகள்.
- இவ்விமானங்கள் பறப்பது கிட்டத்தட்ட மணிக்கு 2200 கிலோமீட்டர்கள். அதாவது ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு!
- லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் அத்தூரத்தை சுமார் மூன்றரை மணி நேரத்தில் கடந்து விடும். மற்ற விமானங்கள் கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
- லண்டனுக்கும் நியூயார்க்கும் இடையேயான நேர வித்தியாசம் 5 மணிநேரம் ஆதலால்,லண்டனில் இருந்து கிளம்பிய நேரத்திற்கு முன்னமே நியூயார்க்கில் வந்து இறங்கி விடும். (அதாவது லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்குக் (அதாவது நியூயார்க் நேரம் காலை 7மணி) கிளம்பினால் நியூயார்க் நகரில் காலை 10:30 மணிக்கு வந்து சேர்ந்து விடும்.)
- வேகத்திற்கான பல உலக சாதனைகளைப் படைத்த விமான ரகம் கான்கார்ட்
- முதல் பயணிகள் விமானம் சென்றது நியூயார்க் நகருக்கு இல்லை. பஹ்ரைன் நகருக்கு லண்டனில் இருந்தும் பாரிஸில் இருந்து ரியோ டி ஜெனீரோவிற்கும் பறந்தது.
- இந்தியாவின் மீது இவ்விமானங்கள் பறக்க இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது
- இவ்விமானங்கள் பறக்கும் உயரம் 60,000 அடிகள். இவ்வளவு உயரத்தில் பறப்பதால் அவ்விமானங்களின் ஜன்னல் வழியாகப் பூமியைப் பார்க்கும் பொழுது அது தட்டையாக இல்லாமல் பந்து போல் வளைவாகத் தெரியும்.
- மிகுந்த வேகத்தில் பறப்பதால் இவ்விமானங்களின் கட்டுப்பாட்டு அறையில் ஒரு சிறிய விரிசல் வரும். சூடு தணியும் பொழுது அவ்விரிசல் மறைந்து விடும். கான்கார்ட் விமானங்களின் கடைசி பயணத்தின் பொழுது அவ்விரிசலில் அவ்விமானத்தின் பைலட்டின் தொப்பி சொருகப்படும். அவ்விரிசல் மறையும் பொழுது அத்தொப்பி அவ்விமானத்தில் நிரந்தரமாக இணைக்கப்பட்டு விடும்.
மேலும் விபரங்களுக்குச் சில சுட்டிகள்
- இவ்விமானங்களின் வரலாறு
- பிரிட்டிஷ் ஏர்வேஸின் கான்கார்ட் விமானங்கள் பற்றிய தளம்
- மற்றுமொரு கான்கார்ட் தளம்
Tuesday, August 14, 2007
ப்ளாஷில் கலக்கலாம் வாங்க - பாகம் 3
Thursday, August 02, 2007
ப்ளாஷில் கலக்கலாம் வாங்க - பாகம் 2
Wednesday, August 01, 2007
ப்ளாஷில் கலக்கலாம் வாங்க! - பாகம் 1
இயந்திரங்களின் இயக்கத்தையும், ஹைட்ராலிக் ஓட்டத்தையும் அசையாப்படம் மூலம் 2 மணிநேரங்கள் சொல்வதைவிட, ஒரு அசையும் படம் 5 நிமிடங்களில் தெளிவாக விளக்கிவிடுகிறது என்பதை அனுபவபூர்வமாகக் கண்டதால், இந்த மென்பொருளை நண்பரின் நண்பரின் நண்பர் மூலம் அடைந்தேன், தட்டித்தடவி உதவிப்பக்கங்கள் மூலமும், உதாரணங்கள் மூலமும் கற்றுக்கொண்டேன்.
இம்மென்பொருளை இங்கே (30 நாள் இலவசம்) அல்லது இணையத்தில் தேடி தரவிறக்கிக்கொள்ளலாம். இலவசமாக எங்கும் கிடைக்கவில்லை :-(.
Interaction என்பது சில பதிவுகளின் வீச்சையே மாற்றிவிடும். ஒரே சம்பவம் பற்றி அதிமுகவும் திமுகவும் வேறு வேறு கருத்துக்கள் வைத்திருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை, அக்கட்சிகளின் தலைவர்களும் அடிமட்டப்பேச்சாளர்களும் பேசும் தொனி வித்தியாசப்படும் என்பதை வைத்து காமடி செய்தது நான் தான் முதலில் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. ஆனால், எந்தக்கட்சி என்பதையும், பேச்சாளர் நிலையையும் பயனர் தேர்ந்தெடுப்பதுபோல் வைத்தால் பழைய கள் புது மொந்தையில் புதுமை காட்டுகிறது அல்லவா?
Wednesday, July 04, 2007
சர்வேஸனுக்கே டவுட்டா?
எது என்னவென்றாலும் ஒரு சர்வே போடும் சர்வேஸனுக்கு ஒரு சந்தேகம்!
சந்தேகம்னு சொல்றதைவிட ஒரு தாக்கம்னு சொல்லலாம்.
"ஒரு மருத்துவர் உயிருக்கே ஆபத்து!
'என்னைச் சாக விடாதீர்கள்;
என் ரத்தம் உருகி என்னையே அழிக்கிறது;
நான் யார்?
எனக்கு எப்படி இது நிகழ்ந்தது என எனக்குப் புரிகிறது.
நான் ஏன் தனியே இருக்க வேண்டும்?
ஒரு சின்ன அடி பட்டாலோ, அல்லது தும்மினாலோ, ஏன் இத்தனை பதட்டப் படுகிறார்கள்? '
இவர் செய்த பாவம் என்ன?
இதுக்கு எப்படி நாம உதவலாம்?"
இதுதான் அவரோட தாக்கம்.
லப்-டப் தொடரின் ஏழாவது பதிவில் சொல்லியிருக்கும் காரணங்களே இதற்கு விடையாகும்.
கீமோதெரபி[Chemotherapy] மூலம் இந்த லுகீமியா[Leukemia] குணமாக வழியுண்டு என்றாலும், அதிலும் சில குறைபாடுகள் இருக்கின்றன.
மருந்து குணமாக்கும் அதே வேளையில், நோயின் தீவிரமும், மறுபக்கத்தில் இதை அதிகமாக்கிக் கொண்டிருக்கும் அபாயம் நிகழ்கிறது.
அதாவது, ஒரு பக்கத்தில் கீமோதெரபி இதனைச் சமன் செய்தாலும், நோயின் கடுமை [Severity of the disease] மறுபக்கம் மேலும், மேலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இது எப்படி சாத்தியம்?
நோயைக் குணப்படுத்தவென அனுப்பப்படும் மருந்துகள், நோயுற்ற செல்களை மட்டுமல்லாது, பொதுவாக எல்லா செல்களையுமே தாக்குகிறது.
இதனால், ஏற்கெனவே இன்னமும் வலுவாக இருக்கும் அணுக்களும், புதிதாக உருவாகிய அணுக்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன.
இதற்கு என்ன வழி?
கொஞ்சம் கொஞ்சமாய் இந்தச் சிசு அழிய வேண்டியதுதானா?
ஆ! இருக்கும் அணுக்களை அழிப்பதுதான் இந்நோயின் குணமென்றால், அழிக்க முடியா வலுவுள்ள புது ரத்த அணுக்களை உருவாக்கும் வல்லமையுள்ள, ஒரு பொருளை எனக்குள் அனுப்புங்களேன் என அந்தக் குழந்தை அலறுவது ஒரு சிலருக்குக் கேட்டது.
அதன் விளைவுதான், இந்த போன் மார்ரோ பரிமாற்றம்[Bone Marrow Transplant].
இது என்னவெனப் பார்ப்போம்.
போன் மார்ரோ[Bone Marrow] என்பது ஒரு மிருதுவான, கொழுப்பு திசுக்களால் ஆன ஒரு பொருள்.
இது எலும்புக்குள் இருப்பது.
ரத்தத்தில் இருக்கும் சிவப்பு, வெள்ளை அணுக்கள், ப்ளேட்லெட்டுகள் [RBC's, WBC's, Platelets] முதலியன இங்கிருந்துதான் உருவாகின்றன.
ரத்த அணுக்களில் வரும் நோயால், இந்த எலும்பு மஜ்ஜையும் பாதிக்கப்படுகிறது.
இதற்கென, இதைச் சரி செய்யவென, வரும் மருந்துகளுக்கு, நல்லது எது, கெட்டது எனப் பிரித்துப் பார்க்கும் தன்மை இல்லாமல், கொஞ்ச நஞ்சமிருக்கும் நல்ல திசுக்களையும் அழிக்கும் அபாயம் நேர்வதால், இது போன்ற மருந்துகளுக்கும் ஒரு அளவில்தான் பயன் உண்டு.
இதற்கு மாற்றுதான் இந்த எலும்பு மஜ்ஜை பரிமாற்றம்[Bone Marrow Transplant]
இதை யார் கொடுக்க முடியும்?
நெருங்கிய உறவினர்[தாய், தந்தை, சகோதரன், சகோதரி,], அல்லது இந்த ரத்தத்திற்கு பொருந்தும் வேறு எவராயினும்!
பெறுபவருக்கு பலவகையிலும் ஆலோசனைகளும், அறிவுரைகளும் கிடைத்து விடும்.
தருபவர்க்குத்தான் குழப்பம்!
தரலாமா, கூடாதா?
தனக்கு இதனால் ஏதேனும் தொல்லை வருமோ?
பின்னால் இதனால் எதாவது கஷ்டம் இருக்குமோ?
இப்படி பல கேள்விகள்!
அவர்களுக்காக சில விளக்கங்கள்!
வலுவான, ஆரோக்கியமான உடல்நிலை இருக்கிறதா எனப் பரிசோதித்த பின்பே, ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இவரது ரத்தப்பிரிவு சோதனை செய்யப்பட்டு, இவர் தானம் அளிக்கத் தகுதியானவர்தானா எனப் பரிசோதனைகள் செய்தபின்னர், இவர் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
இடுப்பு எலும்புப் பகுதியில்[Hip bone] இருந்து இந்த எலும்பு மஜ்ஜை எடுக்கப் படுகிறது.
எல்லா எலும்புகளிலும் இந்த மஜ்ஜை இருந்தாலும், இடுப்பெலும்பில் அதிகமாக இருப்பதாலும், எடுப்பது எளிதென்பதாலும் இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சமீபகாலம் வரை, ஒரு அறுவைசிகிச்சை[surgery] மூலம்தான் இது எடுக்கப்பட்டு வந்தது.
தானமளிப்பவர்[Donor] மயக்கநிலைக்குச்[anaesthesia] சென்றாக வேண்டிய கட்டாயம்.
ஒரு சிலருக்கு சில மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டதாலும், மற்ற இடங்களில் இருக்கும் மார்ரோ எடுக்கப்படாமல் போவதாலும் மாற்றுவழிகள் முயற்சிக்கப்பட்டன.
இதன் விளைவாகக் கண்டறிந்தது என்னவென்றால், எலும்பு மஜ்ஜையில் இருக்கும் ஸ்டெம் ஸெல்கள்தான்[Stem cells] புதிய அணுக்கள் உருவாகத் தேவையானவை என்பதே.
இப்போது இந்த ஸ்டெம் ஸெல்களை இந்த மஜ்ஜையிலிருந்து பிரித்து, பொது ரத்த ஓட்டத்தில் கலக்கச் செய்தால், மற்ற சாதாரண ரத்தப் பரிசோதனைகள் போல எளிதாக ரத்தத்தை எடுத்து,இதனைப் பிரிக்கலாமே!
அது மட்டுமின்றி, இப்போது இதன் மூலம், இடுப்பு எலும்பு மட்டுமல்லாது, எல்லா எலும்புகளில் இருந்தும் ஸ்டெம் ஸெல்கள் பெறும் வாய்ப்பும் அதிகமாகிறது.
குறிப்பிட்ட அளவு ரத்தத்தில் இருந்து இவ்வளவு ஸெல்கள் எடுக்கலாம் என்ற கணக்கும் தெரிவதால், தேவைக்குத் தகுந்த அளவில் மட்டுமே பெறவும் முடியும்.
எப்படி செய்கிறார்கள் இதை?
நியூபோஜென்[Neupogen] என்னும் ஒரு மருந்தை தினம் ஒருவேளை என்ற கணக்கில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஊசி மூலம் தானமளிப்பவருக்கு செலுத்துகிறார்கள்.
இது எலும்புமஜ்ஜைக்குள் ஊடுருவி, ஸ்டெம் ஸெல்களைப் பிரித்து, பொது ரத்த ஓட்டத்தில் அனுப்புகிறது.
தினசரி ரத்தப் பரிசோதனை மூலம் தேவையான அளவு ஸெல்கள் சேர்ந்து விட்டதா எனத் தெரிந்து, ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன், ரத்த தானம் செய்பவருக்கு நிகழ்வது போல், கையில் இருக்கும் நாளம் மூலம் ரத்தம் ஒரு கருவிக்குள்[machine] அனுப்பப்பட்டு, இந்த ஸெல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
இதற்கு, ஏஃபெரேஸிஸ் [Apheresis] எனப் பெயர்.
மீதி ரத்தம், தானமளிப்பவருக்கே மற்றொரு கை நாளம் வழியே திரும்ப அனுப்பப் படுகிறது.
அவ்வளவுதான்!
ஒரு சிறு ஓய்வுக்குப் பின் வீடு திரும்பலாம்.
இவ்வளவு எளிதா இது?
இதில் பக்க விளைவுகள் [Side effects] ஒன்றுமே இல்லையா?
ரத்தம் பிரித்தெடுக்கும் போது வலியே இருக்காது........ ஊசிவலியைத் தவிர!
ஒரு சிலருக்கு, நியூபோஜென் மருந்து எலும்பிலிருந்து ஸெல்களைப் பிரித்தெடுக்கும் போது, சற்று எலும்பு வலி[Bone pain] இருக்கலாம்.
சிலருக்கு, அசதி, வாந்தி உணர்வு, லேசான ஜுரம், பசியின்மை, தூக்கமின்மை[fatigue, nausea, fever, Loss of appetite, insomnia] போன்றவை வரக்கூடும்.
பொதுவாக இது ஒரு பயத்தில் வருவதே.
உறவினரைத்தவிர, அந்நியருக்கும் இந்த தானம் அளிக்கலாம். தடையே இல்லை.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதற்கென உங்கள் ஊரில் இருக்கும் இது சம்பந்தப்பட்ட அமைப்பில் [Bone Marrow Donor Program] உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்வதுதான்.
உங்களது ரத்தவகை போன்ற சோதனைகளைச் செய்து, தேவைப்படும் போது அழைப்பார்கள்.
விருப்பமிருந்தால், உடல்நலம் அப்போது சரியாக இருந்தால், தாராளமாகக் கொடுக்கலாம்.
ஒரு உயிரைக் காப்பாற்ற உங்கள் பங்கும் சேரும்.
முடிந்தால், சர்வேஸன் கூறிப்பிட்டிருக்கும் குழந்தைக்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள்!
உன் பார்வையே சரி இல்லை!
எனக்கு தூரத்தில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரிவதில்லை என்பதால் நான் அதற்குக் கண்ணாடி அணிகிறேன். ஆனால் கிட்டத்தில் இருப்பவைகளைப் பார்ப்பதற்கு கண்ணாடி தேவை இல்லை. இப்படி இருக்கையில் அருகில் இருக்கும் கண்ணாடியில் தொலைவில் இருக்கும் பொருட்களைக் காண்பதற்கு எதற்காக கண்ணாடி அணிய வேண்டி இருக்கிறது. அந்த கண்ணாடி அருகில்தானே இருக்கிறது?
வழக்கம் போல் இணையத்தை மேய்ந்து விட்டு அவருக்கு நான் தந்த பதில் இது. நீங்கள் அந்த கண்ணாடியை மட்டும் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் கண்களில் கண்ணாடி அணியத் தேவை இல்லை. ஆனால் அந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் தொலைதூர பொருள் ஒன்றின் பிம்பத்தைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு கண்ணாடி அணியத்தான் வேண்டும்.
அதற்குக் காரணம், நீங்கள் பார்க்கும் பிம்பம் அந்த கண்ணாடியின் மேற்புறத்தில் இல்லை. அந்த பிம்பமானது கண்ணாடியின் உட்புறத்தில் இருந்து பிரதிபலிக்கிறது. அந்த பிம்பம் கண்ணாடியின் உட்புறத்தில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்றால், அந்த பொருளுக்கும் கண்ணாடிக்கும் இருக்கும் தூரத்தின் அளவு உள்ளே இருக்கிறது. அதாவது அந்த பிம்பம் பிரதிபலிக்கும் வெளிச்சம் உங்கள் கண்களுக்கு வர பயணம் செய்ய வேண்டிய தூரம் உங்கள் கண்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் மட்டுமன்று. அது பயணம் செய்யும் மொத்த தூரம் அப்பொருளுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் + உங்கள் கண்ணுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம். அதாவது உங்கள் கண்ணில் இருந்து 1 மீட்டர் தொலைவில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் வழியாக 5 மீட்டர் தொலைவில் உள்ளதைப் பார்க்கவேண்டுமானால், உங்கள் கண்பார்வை 6 மீட்டர் வரை சுத்தமாக இருக்கவேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் பொழுது நீங்கள் பார்க்கும் தூரம் உங்களுக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரத்தில் இரு மடங்கு. அதாவது உங்கள் முகத்துக்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பம் கண்ணாடியில் வர ஏதுவாக) + உங்கள் கண்ணிற்கும் கண்ணாடிக்கும் உள்ள தூரம் (பிம்பத்தைப் பார்க்க).
அதனால்தான் தொலைவில் இருக்கும் பொருட்களின் பிம்பத்தை அருகில் இருக்கும் கண்ணாடியில் பார்க்கும் பொழுது கூட நீங்கள் கண்ணாடியை அணிந்து கொள்ளத் தேவைப் படுகிறது.
படம் இணையத்தில் சுட்டது.
Thursday, May 24, 2007
வாகன மாசுக்கட்டுப்பாடு - நாம் என்ன செய்ய முடியும்? (24 May 07)
சிமுலேஷன்
விக்கிக்கு வந்த கேள்வி இது எனினும், இந்தக்கேள்விக்கான நேரடி விடை மிக எளிமையானது என்பதால், இக்கேள்வியுடன் தொடர்புடைய வாகனப்புகையைப்பற்றியும் விரிவாகவே சொல்ல முனைகிறேன்.
எஞ்சின் புகைவிடுகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். முதலில் ஏன் அது புகைவிடுகிறது என்பதில் ஆரம்பிப்போம்.
எஞ்சின் என்பது எரிபொருளின் வேதீயல் சக்தியை வெப்பச்சக்தியாக்கி பிறகு இயங்குசக்தியாக்கும் சாதனம். (தமிழ்லே சொல்றதுன்னா, Engine is a Device which converts Fuels Chemical Energy to heat Energy and thence to Mechanical Energy:-)
எரிபொருள் என்பது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம், டீஸல், கேசோலின் என்று அமெரிக்காவில் அழைக்கப்படும் பெட்ரோல், இயற்கை எரிவாயு (Compressed Natural Gas - CNG), திரவப்பெட்ரோலிய வாயு (Liquified Petroleum Gas -LPG), அல்லது ப்ரோபேன் போன்ற எதாக இருந்தாலும், எரிபொருளில் பிரதானமாக இருப்பது ஹைட்ரோ கார்பன்கள்தாம் - வேறு வேறு மூலக்கூறுகளாக. (Molecules), என்ன, ஒவ்வொரு எரிபொருளுக்கும் வேண்டத்தகாத ஆனால் தவிர்க்கமுடியாத சில கசண்டுகளும் கூடவே இருக்கும். டீஸலுக்கு சல்பர் (கந்தகம்), பெட்ரோலுக்கு ஈயம் (lead), வாயுக்களில் ஹைட்ரஜன் சல்பைடு. இவற்றின் விளைவுகளையும் பார்ப்போம்.
எரிபொருள் தானாக எரிய முடியாது, எஞ்சின் நெருப்பாக இருந்தாலும் காதல் நெருப்பாக இருந்தாலும் எந்த நெருப்புக்கும் முக்கியமான தேவை - ஆக்ஸிஜன். காற்றுமண்டலத்தில் ஆக்ஸிஜன் தனியாக இல்லை - பல்வேறு தனிமங்களுடன் கலந்தே இருக்கிறது - அதில் முக்கியமானது நைட்ரஜன்.
எனவே, எஞ்சினுக்குள் எரியும் பொருள்கள் இரண்டு - எரிபொருள் மற்றும் காற்று.
எரிபொருளில் உள்ள தனிமங்கள் - ஹைட்ரஜன்(H), கார்பன்(C) மற்றும் 1 - 3 சதம் வரை கசண்டு (சல்பர்(S) / ஈயம்(Pb) / ஹைட்ரஜன் சல்பைட்(H2S)
காற்றில் உள்ள தனிமங்கள் - நைட்ரஜன்(N), ஆக்சிஜன்(O) (மற்ற தனிமங்களை இப்போது கணக்கில் சேர்க்கத் தேவையில்லை - மிகக்குறைந்த அளவில்தான் அவை உள்ளன)
எனவே, எரியும்போது, கீழ்க்கண்ட மூலக்கூறுகள் உண்டாகின்றன, இவை வெப்பத்தை உண்டுசெய்து எஞ்சினை இயங்கச் செய்தபிறகு புகைபோக்கி வழியாக வெளியேறுகின்றன. இங்கே டீஸல் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்ற எளிய ப்ளாஷ் இருக்கிறது.
1. கார்பன், ஆக்ஸிஜனுடன் முழுமையாக எரிந்தால் - கார்பன் டையாக்ஸைடு (CO2)
2. பாதியளவு மட்டுமே எரிந்தால் - கார்பன் மோனாக்ஸைடு (CO)
3. முழுக்கவே எரியாமல் இருந்தால் - ஹைட்ரோ கார்பன் (HC)
4. தண்ணீர் (ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் இணைந்து) (H2O)
5. கந்தக அமிலம் - டீஸல் மற்றும் வாயு எஞ்சின்களில் கந்தகக் கசண்டு இருப்பதால். (H2SO4)
6. நைட்ரிக் அமிலம் (HNO3)
7. நைட்ரஸ் ஆக்ஸைடுகள் (பல விதங்களில் இணைய வாய்ப்பிருக்கிறது) (NO, N2O, NO2, NO3)
8. சல்பர் ஆக்ஸைடுகள் (SO, SO2, SO3)
9. பாதி எரிந்த எரிபொருள் (கார்பன் மோனாக்ஸைடு) (இரண்டாவது முறை கணக்குக்காட்ட ஏற்றவில்லை, கீழே படியுங்கள்) (CO)
இன்னும் நிறைய இருக்கிறது - ஆனால் போரடித்துவிட வாய்ப்பிருப்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
இந்த மூலக்கூறுகளை மூன்றுவகையாகப் பிரித்திருக்கிறேன் என்பதையும் கவனிக்கலாம். முதல்வகை - (1,2 &3) - எரிபொருள் செலவுடன் தொடர்புடையது. அதாவது, இந்த வாயுக்களின் அளவு அதிகரிக்குமானால் எரிபொருள் செலவு அதிகரிக்கும்.
இரண்டாம் வகை - (4, 5 &6) - துருப்பிடித்தல், பாசி போன்ற படிமங்களை உருவாக்குதல் ஆகியவற்றைச் செய்து,எஞ்சினின் பாகங்களோடு வினை ஆற்றி, அவற்றின் வாழ்நாளைக் குறுக்கக்கூடிய அமில வகைகள் .
இந்த இரண்டு வகையும் அதிகரித்தால் செலவினங்கள் அதிகரிக்கும் - பணம் சார்ந்தவை.
ஆனால் பிரச்சினையே இந்த மூன்றாவது வகையோடுதான்.
கார்பன் மோனாக்ஸைடு ஒரு நிரந்தரமில்லாத வாயு (Unstable). அல்பாயுசில் மடிந்தவர்கள் ஆவியாவார்கள் என்பதுபோல, இது முழுக்க எரியாததால் எங்கே ஆக்சிஜன் என்று தேடிக்கொண்டு அலையும். காற்று மண்டலத்தில் இதற்கு ஜோடியாக இன்னொரு நிரந்தரமில்லாத ஆக்சிஜன் வகை இருக்கிறது - மூன்று மூலக்கூறுகளைக்கொண்ட O3 - ஓசோன்! இவருக்கு ஒரு ஆக்சிஜன் வந்தால் நிலைபெறுவார், அவருக்கு ஒரு ஆக்சிஜன் இழந்தால் நிலைபெறுவார். இருவரும் சந்திக்கும்போது - கண்கள் கலந்தன, கருத்தொருமித்தனர் - சரியான ஜோடி ஆகிவிடும்!
CO + O3 -> CO2 + O2
சரி, அதில் நமக்கென்ன பிரச்சினை? ஓசோன் வாயுவின் அளவு குறைவதும், அதனால் சூரியக்கதிர்கள் தங்குதடையின்றி பூமிக்குள் நுழைந்து நமக்குப் பிரச்சினைகள் ஏற்படுத்துவதுதான். மேலும், கார்பன் மோனாக்ஸைடை நேரடியாக சுவாசித்தால் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை மட்டுப்படுத்தி இதயத்தின் செயல்பாட்டையும் தொந்தரவு செய்யும்.
நைட்ரஸ் ஆக்ஸைடுகள் வேறு வகை தொந்தரவு. நைட்ரஜனே ஒரு பெரிய போதை மருந்து! மனிதனின் நரம்பு மண்டலத்துடன் உறவாடி மயக்கத்தையும் மூளைச்செயல்பாடு பாதிப்பையும் உண்டு செய்யக்கூடியது. அதனால்தான் நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) சுவாசித்தால் கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு வருகிறது, அது சிரிப்பூட்டும் வாயு (Laughing Gas) என்ற பெயரும் பெறுகிறது. சிரிப்பு வருவது உண்மைதான் சிமுலேஷன். வாய்விட்ட சிரிப்பேதான். இதை முன்னாளில் மயக்கமருந்தாகவும் பயன்படுத்திவந்தார்கள் என்பது உபரி தகவல்.(அப்பாடா அந்தக்கேள்விக்கு விடை வந்துவிட்டது)
இது தவிரவும், நைட்ரஸ் ஆக்ஸைடுகளால் அமிலமழை உண்டாகும் சாத்தியமும் உண்டு.
சல்பர் ஆக்ஸைடுகள் காற்றை மாசுபடுத்துவதிலும் அமில மழைக்கும் மேற்கண்ட இரண்டுக்கும் உறுதுணையாக இருக்கும்.
கார்பன் டையாக்ஸாடு (CO2) - ஒரு க்ரீன்ஹவுஸ் வாயு - உலக் வெப்பமயமாக்கலில் முக்கிய பங்கு இதற்கு.
ஆகக்கூடி, எந்த வாயுவுமே நல்லதில்லை! அதற்காக எல்லா எஞ்சின்களையும் அணைத்துவிடவா முடியும்?
எனவே, இவற்றைக்குறைக்க பலவழிகளில் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள், அரசாங்கங்களும் பல சட்டங்களைப்போட்டு மாசின் அளவைக் கட்டுக்குள் வைக்க முயன்று வருகிறது.
யூரோ -2, பாரத் - 2, ACERT போன்ற ஸ்டிக்கர்களை உங்கள் வண்டிகளில் பார்த்திருப்பீர்கள் - இவையெல்லாம் அரசாங்கங்களின் அளவு விதிமுறைகளே. அதாவது, எஞ்சின் வெளிப்படுத்தக்கூடிய உச்சபட்ச கார்பன் மோனாக்ஸடு அளவு இவ்வளவு, நைட்ரஸ் ஆக்ஸைடு இவ்வளவு, ஹைட்ரோ கார்பன்கள் இவ்வளவு என்னும் மதிப்பளவுகளுக்குள் குறிப்பிட்ட எஞ்சினின் அளவுகள் இருந்தால் இந்த சான்றிதழ் கொடுக்கப்படும். இந்த அளவுகள் வருடாவருடம் திருத்தப்படுகின்றன.
இந்த அளவுகளுக்குள் எஞ்சினை வடிவமைக்க பல முறைகள் கையாளப்படுகின்றன.
1. அதிக வெப்பத்தை உள்வாங்கக்கூடிய, எரிபொருளை முழுமையாக உள்ளேயே எரிக்கக்கூடிய பாக்ங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
2. சரியான நேரத்தில் சரியான அளவு எரிபொருளை எஞ்சினுக்குத் தர கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் உபயோகிக்கப்படுகின்றன (Analog Computing for controlling timing & quantity of Fuel Injection / Ignition)
3. புகைபோக்கியில் வரும் வாயுவின் நச்சுத்தன்மையைக் குறைக்க வேதிப்பொருள்கள் புகைபோக்கியின் ஒரு பாகத்திலேயே வைக்கப்படுகிறது (Catalytic Convertors)
எவ்வளவுதான் ஆராய்ச்சிகள் நடந்தாலும், இந்த நச்சுகளை குறைக்கத்தான் முடியுமே ஒழிய அழிக்க முடியாது! கருப்பாக புகைவிடும் வண்டி மட்டுமல்ல, புத்தம்புதிய, புகை கண்ணுக்கே தெரியாத வண்டியும் மாசு ஏற்படுத்தத்தான் செய்கிறது.மாசின் தாக்கத்தின் அளவு மாறுபடலாமே ஒழிய எஞ்சின் ஓடினாலே மாசு நிச்சயம்!
சரி, நாம் என்ன செய்யலாம்?
1. தரமான எரிபொருளை பயன்படுத்தலாம் - எரிபொருளில் உள்ள கலப்படங்கள் மாசின் அளவை 20% வரை அதிகரிக்கக்கூடியவை. (கம்பெனியின் நேரடி பங்க்குகளில் போடுங்கள், அப்படி ஒன்று அருகில் இல்லாத பட்சத்தில் ஆட்டோக்கள் அதிகம் உள்ள பங்கைத் தேர்ந்தெடுங்கள் - ஆட்டோக்காரர்கள் பலமுறை போட்டு அறிந்து ஆராய்ந்துதான் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கிறார்கள்)
2. சிக்னல், நிறுத்தங்களில் எக்காரணம் முன்னிட்டும் ஆக்ஸிலரேட் செய்யாதீர்கள் - வீண் விரயம் மட்டுமல்ல, மாசும் அதிகமாகும்.
3. க்ளட்சில் கால் (அல்லது கை)வைத்த வண்ணம் வண்டி ஓட்டாதீர்கள் - க்ளட்ச் மூலம் கொஞ்சம் எஞ்சின் சக்தி வீணாகிக்கொண்டே இருக்கும். எஞ்சின் அதிக எரிபொருள் குடித்து, அதை மாசாக ஆக்கி தொந்தரவும் செய்யும்.
4. டயரில் காற்றழுத்தத்தை மிகச்சரியாக வையுங்கள். அழுத்தம் குறைவாக இருந்தால், வண்டியை நகர்த்த எஞ்சினுக்கு அதிக சக்தியும் எரிபொருளும் தேவைப்படும். காற்றுக்குறைவான சைக்கிள் அழுத்தும்போது அதிக சக்தி தேவைப்படுகிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்கள்தானே?
5. ஆயில், பில்டர் போன்ற பராமரிப்பு பாகங்களை குறித்த நேரத்தில் மாற்றுங்கள் - தள்ளிப்போடுவதால் கொஞ்சம் பைசா மிச்சமாவது போல் தோன்றலாம் - ஆனால் எரிபொருள் செல்வும், எஞ்சின் ஓவர் ஹாலிங் செலவும், காற்றை மாசுபடுத்துவதும் நீங்கள் சேமிக்கும் காசைவிட மிகமிக அதிகம்.
6. இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் முக்கியமாக சைலன்ஸரை அடிக்கடி (வருடம் ஒருமுறையாவது) சுத்தம் செய்யுங்கள். சுத்தம் என்றால் காற்றை வைத்து ஊதி மட்டும் அல்ல - அதறகான வேதிப்பொருள்கலைக்கொண்டு தொழில்முறையான முழுமையான சுத்தம்!
7. அமெரிக்க கார்கள் பல கேடலிடிக் கன்வர்ட்டரோடு வருகின்றன. அவற்றுக்கும் பராமரிப்பு அவசியம்
அடிக்கடி உங்கள் வண்டியின் மாசளவை பரிசோதியுங்கள்! திடீரென அதிகரித்தால் மேலே சொன்ன ஏதோ ஒன்றைச் செய்யவில்லை என்று அர்த்தம்.
பொதுவாகவே இந்தியாவில் தற்போது வரும் கார்கள் புதிய டெக்னாலஜியோடு வருவதால் அவற்றால் ஆபத்து குறைவு. ஆனால் பெருமளவு சாலைகளில் இருக்கும் இருசக்கர வாகனங்களும், லாரி, ட்ரக் பஸ் போன்றவையும் பழைய டெக்னாலஜிக்களிலேயே இயங்குகின்றன. அவைதான் பெரிய ஆபத்து. இவற்றின் மாசு அளவு அடிக்கடி பரிசோதிக்கப்படுவதும் பழுதுபார்த்து அனுமதிக்கப்பட்ட அளவுகளிலும் வைப்பது நாட்டுக்கும், உங்கள் பணப்பைக்குமே கூட உதவி செய்யும்.
வேண்டாத வேளைகளில் வண்டியை எடுப்பதைத் தவிர்க்கலாம், தனிநபராகக் காரில் செல்லாமல் Car Pool அமைத்துச் செல்லலாம்! தேவையற்ற உபயோகத்தைத் தவிர்க்க அத்தனை முயற்சிகளும் செய்யலாம்!
நம்மால் மாசு அதிகரிப்பை நிறுத்த முடியாது - ஆனால் குறைக்க முயற்சி செய்யலாம்! இந்த வழிமுறைகளை உபயோகிப்பதன் முக்கியமான கூடுதல் பலன் - எரிபொருள் சிக்கனம்!
முயற்சி செய்யுங்கள்! வாழ்த்துக்கள்!
******************************
பி கு1: பல ஆராய்ச்சிக்கட்டுரைகள், புத்தகங்கள், தயாரிப்பாளர்களின் கேட்டலாகுகள், பத்திரிக்கைச் செய்திகள், விக்கிபீடியா குறிப்புகள் ஆகியவற்றின் விளைவே இப்பதிவு. எனவே, குறிப்பிட்டு ஒரு ஆதாரத்தைச் சொல்ல முடியாது. விக்கிபீடியாக்குறிப்புகள் மட்டும் தரமுடியும்.
பி கு 2: கட்டுரை நீளமாக இருப்பதாகக் கருதினால் குறைந்தபட்சம் கடைசியில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் மட்டுமாவது படித்துவிடுங்கள். போரடிக்கிறது என்றால் அந்தக்கருத்தையும் சொல்லிவிடுங்கள், திருத்திக்கொள்கிறேன்.
பி கு 3: சற்றுமுன் போட்டிக்கு அனுப்ப உத்தேசம்.
பி கு 4: தவறு ஏதேனும் இருந்தால் திருத்துங்கள்.
Wednesday, May 02, 2007
எள்ளா உளுந்தா? எதைப் போடலாம்?
***********************************
//கம்பராமாயணத்தில் ஒரு பாடல் -இராமரின் முடிசூட்டு விழாக்காண வந்த கூட்டம் நெரிச்சல் பற்றி ; கம்பர் வர்ணிக்கையில் "எள் போட்டால் எண்ணெய்" வருமென குறிப்பிட அபசகுனக் குறையென அஞ்சி...உழுந்து போட்டால் கீழே விழாது எனக் கூறியனாராம். தயவு செய்து அப்பாடலைத் தரவும்.//
யோகன் பாரிஸ் ஐயா, அந்தப் பாடல் இராமரின் முடி சூட்டு விழாவிற்கு வந்த கூட்டம் பற்றிய பாடல் அல்ல, திருமண விழாவிற்கு வந்த கூட்டம் பற்றியது.
(பால காண்டத்தில் எழுச்சிப் படலம் - 23ஆம் பாடல்)
இராம இலக்குவர்கள் விசுவாமித்திரருடன் மிதிலைக்குச் செல்கின்றனர். அங்கு இராமபிரான் சனகரின் மிகப்பெரிய சிவதனுசை 'எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்' என்று நாணேற்றி உடைத்து சீதையை மணக்கத் தகுதி பெறுகிறார். இந்த நற்செய்தியைத் தெரிவித்து, தசரத மன்னரை மணவிழாவிற்கு அழைக்க சனகர் அயோத்திக்கு ஓலை அனுப்புகிறார்.
ஓலை கிடைக்கப்பெற்ற தசரத மன்னர் பெருமகிழ்ச்சியடைந்து பரிவாரங்களுடன் மிதிலை செல்லத் தயாராகிறார். . தனது சிற்றரசர்களையும், சேனையையும், முதலில் செல்லப் பணிக்கிறார். சேனை திரண்டு, ஊழிக்காலத்தே ஒங்கரிக்கும் கடல்போல் ஆரவாரம் செய்து எழுந்தது. வாள்படையும், விற்படையும், யானைப்படையும், குதிரைப்படையும், பல்லக்குகளுமாகப் பெரும் கூட்டம் மிதிலையை நோக்கிச் சென்றது. தன் சேனை முழுவதும் புறப்படபின், தான் பின் செல்லக் காத்திருக்கிறார் மன்னர். இன்னும் சேனை முழுவதும் அயோத்தியைவிட்டு நீங்கியபாடில்லை.
தயரதனின் சேனைப் பெருக்கம் எத்தகையது ?
"உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்,
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே"
பொருள் :
துன்பத்திலும், துயரத்திலும் அழுந்திய மக்கள், அவற்றினின்று மீண்டு வர உதவும் ஊன்றுகோல் போன்ற தயரத மன்னன் இன்னும் புறப்படவில்லை (தன் சேனைக்குப் பின் செல்லக் காத்திருப்பதால்). மேலிருந்து உழுந்து போட்டால், உழுந்து மண்ணில் விழா வண்ணம் நெருக்கமாகத் திரண்டிருந்த சேனையின் கொழுந்து முதல் வரிசை) மிதிலையைச் சென்றடைந்துவிட்டது.
இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். மிதிலைக்கும் அயோத்திக்கும் இடைப்பட்ட பரப்பு முழுதும் தயரதன் சேனை மற்றும் மணவிழாக்காணச் சென்ற மக்கள் கூட்டத்தால் உழுந்து விழவும் இடமின்றி
நிறைந்திருக்கிறது. வானிலிருந்து பார்க்கும்போது ஒரு கொடி மிதிலை முதல் அயோத்தி வரை படர்ந்திருப்பது போன்ற தோற்றம் அளிக்கிறது. கொடியின் நுனி (சேனையின் கொழுந்து அல்லது கூட்டத்தின் முதல் வரிசை) மிதிலையில்
இருக்கிறது. கடைசி வரிசை அயோத்தியில் இருக்கிறது.
தசரத மன்னரின் படைப்பெருக்கம் சற்று மிகப்படுத்தி கூறப்பட்டுள்ளது.இது உயர்வு நவிற்சி அணி. ஒரு நிகழ்வையோ, பாத்திரத்தின் தன்மையையோ சிறப்பிக்கவேண்டியோ, அன்புமிகுதியாலோ மிகைப்படுத்திக்கூற புலவர்களுக்கு மட்டுமேயிள்ள சுதந்திரம். என் கண்மணி சக்கரவர்த்தித் திருமகன் கல்யாணத்துக்கு எவ்வளவு கூட்டம் வந்தது தெரியுமா என்று சொல்ல கம்பர் எடுத்துக்கொள்ளும் கூடுதல் உரிமை.
"உழுந்து இட இடம் இலை "
எப்போதும் நெருக்கமான கூட்டத்தைக் குறிக்க "எள் போட்டால் எள் விழாது" என்று சொல்வது வழக்கம். எள் அளவில் மிகச் சிறியது என்பதால் "எள்முனை அளவும் இல்லை" "எள்ளளவும் இல்லை" என்றெல்லாம் சொல்வது வழக்கு.
எள் பொதுவாக உயிர் நீத்தாருக்குச் செய்யும் சடங்குகளில் இடம் பெரும் பொருள். மங்கல காரியங்களில் இடம் பெறுவதில்லை. இது இராமனுடைய மணவிழா. "எள் விழ இடமில்லை" என்று பொதுவாக வழக்கில் உள்ள சொலவடையைச் சொல்வது கூட துர்நிமித்தம் (அபசகுனம்) ஆகிவிடுமோ என்பதால் "உழுந்து இட இடமில்லை" என்கிறார்.
அம்பால் சல்லடையாகத் துளைக்கப்பட்டு மாண்ட இராவணனைப் பார்த்து மண்டோதரி புலம்பும் பாடலைப் பார்ப்போம்.
"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறோ !
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி "
வெள்ளெருக்கை சடையிலணிந்த சிவபெருமான் உறையும் கயிலாயத்தையே அசைத்துத்தூக்கிய இந்த மேனியை எள் விழவும் இடமின்றி சல்லடையாய் இராமபாணங்கள் தைத்து, உயிரைக் குடித்தனவே! நீ சீதைமேல் கொண்ட தகாத காதல் எங்காவது ஒளிந்திருக்கிறதா என்று உன் உடலெல்லாம் துளைத்துத் துளைத்து தேடி வெளியேற்றியதோ அந்த இராமனின் அம்புகள் ?
இங்கே நிகழ்ந்ததோ மரணம் , எனவே "எள்ளிருக்கும் இடமின்றி".
----------------
விளக்கமளித்த ஜெயஸ்ரீக்கும் கேள்விகேட்ட யோகனுக்கும் விக்கிப்பசங்களின் நன்றி.
Monday, April 23, 2007
குட்டிப் பாப்பாக்களும் ப்ளாஷ் போட்டாக்களும்
நான் குழந்தை நல மருத்துவரோ, இல்லை கண் பார்வை மருத்துவரோ இல்லை. நான் தேடிப் பார்த்தவரை, நிறைய மருத்துவர்களை விசாரித்த வரையில், ஃப்ளாஷ் போட்டு படம் எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும். அதனால் தைரியமாக ஃப்ளாஷ் உபயோகிக்கலாம்.
ஆனால் ஏன் ஃப்ளாஷ் உபயோகிக்க வேண்டாம் என்பதற்கு சில காரணங்கள்
- நேரடியான ஃப்ளாஷில் எடுக்கப்படங்கள் அழகு ரீதியாக நன்றாக இருக்காது, இயற்கை வெளிச்சத்தில் எடுப்பதே நல்லது.
- குழந்தைக்கு ஃப்ளாஷ் வெளிச்சம் எரிச்சலை ஏற்படுத்தும். அப்புறம் போஸ் குடுக்காமல் அழ ஆரம்பித்து விடக்கூடும்.
- குழந்தைகள் பெரியவர்களைப் போல அடிக்கடி கண் சிமிட்டுவதில்லை. ஃப்ளாஷ் வெளிச்சம் வெறுப்பபேற்றக்கூடும்.
- சிகப்பு கண்.

குறைந்த வெளிச்சத்தில் ஃப்ளாஷ் உபயோகித்தால், கண்கள் சிகப்பாய் படத்தில் தோன்றும். ( இது ஏன் என்று வேற விக்கிப் பதிவு போட்டு விடலாம் ! ). இப்ப வரும் நிறைய புது கேமராக்களில் இதை தவிர்க்க ஃப்ளாஷ் குறைந்த நேர இடைவெளியில் இரண்டு முறை அடிக்கும். ஏற்கனவே சொன்ன மாதிரி பாப்பாக்களின் விழித்திரைகள் பெரியவர்களைப் போல அடிக்கடி மூடித் திறப்பதில்லை. அதனால் பாப்பாக்களை ஃப்ளாஷ் படம் எடுத்தால் சிகப்பு கண் வர வாய்ப்புக்கள் அதிகம்.
முடிந்தவரை ஃப்ளாஷ் போட்டு படம் எடுப்பதை தவிருங்கள். அப்படியும் முடியாமல் போனால், ஃப்ளஷின் மீது மெல்லிய துணி, டிஸ்யூ பேப்பர் போட்டு நேரடி வெளிச்சத்தை தவிருங்கள்.
இந்தப் பதிவு எழுதியது ஆனந்த் அவர்கள். புகைப்படக் கலை பற்றி பல பதிவுகளை தன் வலைப்பதிவில் எழுதியுள்ளார். இவர் எழுதும் புகைப்பட குறிப்புகள் மேலும் பல விக்கியில் வரும்.
Sunday, April 15, 2007
Global Warming - ஒரு பாமரனின் பார்வையில்

சூரியனைச் சுத்தி இவ்வளவு கோள்கள் இருக்கும் பொழுது நம்ம பூமியில் எப்படி உயிரினங்கள் தழைத்து செழிக்க முடிந்ததுன்னு யோசிச்சுப் பார்த்திருக்கீங்களா? அதுக்கு முக்கியமான காரணம் நம்ம உலகின் தட்பவெட்ப நிலைதான். இந்த மாதிரி தட்ப வெட்பநிலை இருப்பதால்தான் நம்ம பூமியில் இருக்கும் தண்ணீர் எல்லாம் ஆவியாகப் போகாமல் நம் வாழ்வுக்கு வசதியாய் இருக்கிறது. நீரின்றி அமையாது இவ்வுலகு அப்படின்னு எல்லாரும் படிச்சு இருக்கிறதுனால இதுக்கு மேலச் சொல்லத் தேவையில்லை. அதே சமயம் ரொம்ப குளிராப் போயி நம்மால இங்க இருக்கவே முடியாமப் போகாம ஒரு மிதமான தட்பவெட்பநிலை இருக்கு.
இப்படி இருக்கக் காரணம் என்னன்னு யோசிச்சா அதுக்கு முக்கியமான காரணம் நம்மை சுற்றி இருக்கும் இந்த காற்றுவெளிதான். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன் டையாக்ஸைட் எனப் பல வாயுக்குள் எல்லாம் கலந்து செய்த கலவை இந்த காற்றுவெளி.இதுல கரியமில வாயு மற்றும் சில வாயுக்கள் சேர்ந்து என்ன செய்யறாங்கன்னா, சூரியக் கதிர்களால் நம் பூமி சூடாகுது இல்லையா, அந்த சூடு மொத்தமும் அப்படியே போய்விடாமல் இருக்க உதவுகின்றன.
இயற்கையாக ஏற்படும் மாற்றங்களினால் காற்றுவெளியில் இந்த வாயுக்களின் சதவிகிதம் மாறுகிறது. அதனால் நம் புவியின் தட்பவெட்ப நிலையும் மாறுகின்றது. பல முறை நீண்ட உறைபனிக்காலமும் (Ice Age) அதன் பின் உண்டாகும் மாற்றங்கள் எல்லாம் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். இது போன்ற சுழற்சி இயற்கையாக ஏற்படுவதுதான். ஆனால் இப்பொழுது மனிதன் அதிக அளவில் எரிபொருட்களை எரிப்பதாலும், காடுவெளிகளை அழிப்பதாலும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷனர் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் நவீன இரசாயனங்களாலும் காற்றில் நாம் முன் சொன்ன வாயுக்களின் சதவிகிதம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் இன்று பூமியில் சராசரி வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத்தான் புவிவெட்பநிலை அதிகரிப்பு எனச் சொல்கின்றனர். இதனால் இன்று என்ன நடக்கிறது எனப் பார்க்கலாமா?
- கடந்த நூறு ஆண்டுகளில் நம்ம பூமியின் சராசரி வெப்பம் உயர்ந்திருக்கும் அளவு 0.74 ± 0.18 °C (1.3 ± 0.32 °F). கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமியில் 0.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்து வருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் வளி ஆய்வுக் குழு தலைவர் ஜேம்ஸ் ஹான்சென் தெரிவித்துள்ளார்.
- கேட்டகிரி 4 அல்லது 5 எனத் தரப்படுத்தப்பட்ட சூறாவளிகளின் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு மடங்காகி இருக்கிறது.
- கடந்த பத்தாண்டுகளில் க்ரீன்லாந்தில் உருகிய பனிப்பாறைகளின் அளவு இரு மடங்காகிவிட்டது.
- இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டம் 4 முதல் 8 இஞ்சு வரை உயர்ந்திருக்கிறது
- உலகின் பல பகுதிகளில் மழையளவு சராசரிக்கு அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்யத் தொடங்கி இருக்கிறது.
- மலைப்பகுதிகளில் வராத மலேரியா போன்ற நோய்கள் தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 7000 அடிக்கு மேல் பரவத் துவங்கி இருக்கிறது.
- கிட்டத்தட்ட 300 விதமான செடிவகைகளும் பறவை மிருகங்களும் வெட்பம் தாங்காமல் துருவப் பகுதி நோக்கி நகரத் தொடங்கி விட்டன. (20 ஆம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டிலும் 1700 தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி உயிரினங்கள் சராசரியாக 6.5 கிலோ மீட்டர் துருவ முனைகளை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாக நேச்சர் என்ற பத்திரிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.)
- 1990 முதல் 2100 வரை சராசரி வெப்பம் 1.1 முதல் 6.4 °C வரை (2.0 முதல் 11.5 °F வரை) உயரலாம். (இப்பவே 100 டிகிரி அடிக்கும் வெய்யிலோட இதையும் கூட்டிக்கிட்டு பாருங்க.)
- துருவப் பனிப் பாறைகள் தொடர்ந்து உருகுவதால், கடல் மட்டம் 20 அடி முதல் 35 அடி வரை உயரலாம். (மெரீனா பீச்சை நினைச்சுப் பாருங்க. அதைவிடுங்க, இப்பவே கடல்மட்டத்துக்குக் கீழ இருக்கும் ஹாலந்து நாட்டின் நிலை?)
- 2050ஆம் ஆண்டிற்குள் ஆர்டிக் கடலில் பனிப்பாறைகளே இல்லாமல் போகும்.
- உலகில் வெப்ப அலைகள் (Heat Waves) மிக அதிகமாகவும் வீரியத்தோடும் இருக்கும்.
- வறட்சியும் காட்டுத்தீக்களும் மிகவும் அதிகமாகும்.
- அடுத்த 25 ஆண்டுகளில் தட்பவெட்ப நிலை மாற்றங்களால் வருடத்துக்கு 3,00,000 பேர்கள் வரை மாண்டு போகலாம்.
- பத்து லட்சத்திற்கும் அதிகமான உயிரின வகைகள் இவ்வுலகில் இருந்து மறைந்தே போய்விடும்.
ஆனா எந்த விஷயத்துக்கும் மாற்றுக் கருத்து இருப்பது போல இதுக்கும் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்கும் ஆட்கள் இருக்காங்க. அவங்க என்ன சொல்லறாங்கன்னா
- புவி வெட்ப அதிகரிப்பு என்பது ஒரு இயற்கை நிகழ்வு. பூமியில் இது போன்ற நிகழ்வு முன்பு பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இதனை நம்மால் தடுக்க முடியாது என்று ஒரு வாதம்.
- கரியமில வாயு போன்றவை அதிகரிப்பது இயற்கை நிகழ்வு. எரிமலைகள், உயிரினங்கள், மரம் செடிகள் என அனைத்துமே கரிமல வாயுவை வெளியிடுகின்றன. எரிபொருட்களை எரிப்பதால் உண்டாகும் கரிமல வாயுவின் அளவு மிகவும் கம்மிதான் எனவும் சொல்கிறார்கள்.
- இந்த வாயுக்களை விட வெப்பத்தை அதிகமாக்குவது நீராவிதான். இதனை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது என்பது மற்றொரு வாதம்.
- கடந்த நூற்றாண்டில் வெப்பம் அதிகமானாலும் கடந்த 10 - 15 வருடங்களாக வெப்பநிலை ஏறவில்லை, குறைகிறது என வேறு ஒரு கருத்து.
இப்படி இரு புறமும் கருத்துகள் வெளியிடுவதும் அதற்கு மறுப்புகள் வருவதுமாக இருக்கிறது. இது சம்பந்தமாக உங்களுக்கு மேல் விபரங்கள் தேவை என இருந்தால் கீழ்க்கண்ட இந்த சுட்டிகளைப் பாருங்கள்.
- விக்கிப்பீடியாவில் Global Warming
- அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் துணையுடன் எடுக்கப்பட்ட An Inconvenient Truth என்ற படத்தின் வலைத்தளம்
- புவி வெட்பநிலை அதிகரிப்பு பற்றிய ஒரு அருமையான வலைத்தளம்
- புவி வெட்ப நிலை அதிகரிப்பு பற்றிய மாற்றுக்கருத்து தளம் 1
- புவி வெட்ப நிலை அதிகரிப்பு பற்றிய மாற்றுக்கருத்து தளம் 2
- மாற்றுக் கருத்து தவறென்று சொல்லும் ஒரு வலைத்தளம்
Thursday, April 12, 2007
குறுங்கோள்கள் என்றால் என்ன?
பள்ளிக்கூடத்தின் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள்(Planets) இயங்குகின்றன என்று படித்திருக்கிறோம். புதன், வெள்ளி, பூமி தொடங்கி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று ஒன்பதையும் வரிசைப்படுத்தி சரியாக எழுதினால் இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும். இவை எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு ஒரு நீள்வட்டப்பாதையில் (elliptical orbits) இயங்குகின்றன. இப்படிச் சூரியனைச் சுற்றும் கோள்களுக்கும் கோள்கள் உண்டு. துணைக்கோள் அல்லது உபக்கிரகம் என்று அழைக்கப்படும் இவை கோள்களைச் சுற்றி இயங்குகின்றன. உதாரணமாக நிலா பூமியின் துணைக்கோள் (Satellite).
மார்ஸ்க்கும் ஜுபிட்டரும் இடைப்பட்ட சுற்றுப்புறம் கொஞ்சம் கலங்கலானது. அங்கே கோள்கள் துணைக்கோள்களுடன் கூடவே இன்னும் பல குப்பைக் கூளங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு ஒரு தட்டையான மேகக்கூட்டம் போல பல குஞ்சு குளுவான் சமாச்சாரங்களும் சூரினைச் சுற்றி கொண்டிருக்கும் இந்தப் பகுதிக்கு அஸ்ட்ராய்ட் பெல்ட் (Asteroid Belt) என்று பெயர். இதேபோல நெப்ட்யூனைத்தாண்டி ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதற்குக் கூய்ப்பர் பெல்ட் (Kuiper Belt) என்று பெயர். அதற்கு அப்பாலும் எண்ணற்ற சிறு வஸ்துகள் சூரியனை மையமாகக் கொண்டு சுழல்கின்றன, இந்த இடத்திற்கு ஸ்கேட்டர்ட் பெல்ட் (Scattered Belt) என்று பெயர். இங்கே இருக்கும் சமாச்சாரங்களெல்லாம் மிகவும் குளிர்வானவை (சூரியனுக்கு வெகு தொலைவில் இருப்பதால்). கொஞ்சம் நாட்களுக்கு முன்னால் (ஜனவரி 2005) கால்டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக் ப்ரௌன் என்பவர் ஹப்பிள் தொலைநோக்கியைக் கொண்டு (Xena) என்ற ஒரு சமாச்சாரமும் இந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதன் விட்டம் 2400 கி.மீ. அன்றைக்குப் பிடித்தது சனியன் - புளூட்டோவுக்கு.
ப்ரௌனின் குழு ஜெனா (Xena) என்று செல்லப்பெயரிட்ட இதற்கு பன்னாட்டு வானியல் குழுமத்தால் UB313 என்று அடையாளமிடப்பட்டது. புளூட்டோவின் விட்டம் 2306 கி.மீ; UB313 ன் விட்டம் அதைவிடக் கிட்டத்தட்ட நூறு கி.மி அதிகம். இந்த நிலையில் இதைப் பத்தாவது கோளாக அறிவிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தார்கள். இதற்குச் சில வருடங்களுக்கு முன்னதாகவே 975 கி.மி விட்டம் கொண்ட இன்னொரு சமாச்சாரம் (இதற்கு செரஸ் என்று பெயரிடப்பட்டது) அஸ்ட்ராய்ட் பெல்ட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. செரஸ் புளூட்டோவைவிட சின்னதாக இருந்ததால் புளூட்டோவின் கோள் அந்தஸ்திற்கு எந்தக் குந்தகமும் விளைந்துவிடவில்லை. ஆனால் ஜெனா அதைவிடப் பெரியதாக இருந்ததால் வந்தது தொந்தரவு. ஜெனாவைப் பத்தாவது கிரகமாக அறிவிப்பதா அல்லது புளோட்டோவைக் கழித்து கோள்கள் எட்டு என்று இரண்டு மார்க் கேள்வியின் விடையை மாற்றி எழுதிவிடலாமா என்று ஆராயப் பன்னாட்டு வானியல் கழகம் ஒரு அறிஞர் குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு அறிவியல் கோட்பாடுகளையும் தரவுகளையும் ஆராய்ந்து குறுங்கோள் என்பதற்குப் பின்வரும் நான்கு வரி வரையறையை விதித்தது;
- சூரியனைச் சுற்றி வரவேண்டும் (Should be in orbit around sun)
- அதற்குப் போதுமான பொருண்மை இருக்க வேண்டும். அப்படியான பட்சத்தின் அதன் சமநிலை சக்திகள் (உள்ளிழுக்கும் மற்றும் வெளியேறு விசைகளின் சமநிலை) கோள வடிவத்தைத் தரும் (Should be in hydrostatic equillibrium; hence assume spherical shape)
- அதைச் சுற்றி இருக்கும் சமாச்சாரங்களுக்கு எந்தத் தொந்தரவும் தரமால் அவற்றையும் அண்மையிலே இருக்க அனுமதிக்க வேண்டும் (should not have cleared its orbit)
- வேறெந்தக் கோளுக்கும் துணைக்கோளாக இருக்கக் கூடாது. (Is not a satellite for any other planet)
விதி நான்கின்படி நம் புவியின் சந்திரன், சனிக்கிரகத்தின் டைட்டன் இன்னபிற குறுங்கோள் தகுதியை இழந்துவிடுகின்றன. இவை ஒவ்வொன்றும் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றாமல் ஒரு தனிக்கோளை மையமாகக் கொண்டு சுற்றுகின்றன. (கவனிக்கவும், கோளுடன் சேர்ந்து சுற்றுவதால் இவையும் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆனால் இவற்றின் பாதை மையம் சூரியன் கிடையாது). ஒருவகையில் இந்த விதி 4 விதி 1ன் விளக்கம்தான். எதுக்கும் நாளைக்கு கோர்ட்டில் கேஸ் போட்டு ஈரங்கிக்கு நம்மைக் கூப்பிடப்போகிறார்களே என்ற பயத்தில் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லிவிட்டார்கள்.
விதி 2 - ஒரு பொருளுக்கு பொருண்மை அதிகரிக்க அதிகரிக்க அதன் சமநிலை விசைகள் திறம்படச் செயற்பட்டு அவற்றுக்குக் கோளவடிவத்தைத் தருகின்றன. உள்ளிழுக்கும் விசை அதிகமாக இருந்தால் பரப்பில் குழி விழும்; புறவிசை அதிகமாக இருந்தால் கரடுமுரடாகக் கற்கால மனிதனின் ஆயுதங்களைப் போன்ற தோற்றம்தான் கிடைக்கும். கோளம் அற்புதமான சமநிலை வடிவம்' இவ்வடிவில்தான் குறைந்தபட்ச புறப்பரப்பிற்கு அதிகபட்ச பொருண்மை சாத்தியமாகும். பூமி, சந்திரன், வியாழன், நெப்ட்யூன் போன்ற எல்லா பெருசுகளும் லட்டு வடிவம்தான். நாம் ஏற்கனவே சொன்னதுபோல நெப்ட்யூன் ஏரியா கொஞ்சம் தூசு துகள்கள் நிறைந்தது; இங்கே பல கற்கள் சுற்றிக்கொண்டிருக்கின்ற. இவற்றுக்குப் பொதுவில் அஸ்ட்ராய்ட்ய் (தமிழ்ல என்ன சொல்வது?) என்று பெயர். இவையெல்லாம் கோளம் தவிர்த்த பல வடிவங்களில் இருக்கும், இவற்றுள் அம்மிக்குழவி வடிவம் மிக அதிகமாகக் காணப்படும். விதி 2ன்படி இவையெல்லாம் குறுங்கோள்கள் அல்லன.
அருகில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமால் நல்லபிள்ளையாக இருக்க வேண்டும் என்ற விதி 3 மிக முக்கியமானது; இதுதான் கோள்களையும் குறுங்கோள்களையும் மாறுபடுத்துகிறது.. ஓரளவுக்குக் கொழுத்துப் போய்விட்டால் தொந்தரவு யாரையும் கிட்டவிடாமல் விலக்குவிசை செயல்படத் தொடங்கும். 'எங்க ஏரியா உள்ளவரதே' என்று பாடத்தொடங்கும். அப்பொழுது ஒன்றுடன் ஒன்று விலக்கிக் கொண்டு தனித்தனியே பேட்டைகளை உருவாக்கிக் கொள்ளும். இங்கேதான் புளூட்டோ உதைவாங்குகிறது. அஸ்ட்ராய்ட் பெல்ட்டில் கிடக்கும் நிறைய விஷயங்கள் புளுட்டோவிடம் அடிக்கடி நெருங்கி வருகின்றன. (வந்தால் மோதிக் கொண்டு உதைவாங்கி உடைந்துபோகும் அபாயமும் உண்டு). ஜெனாவுக்கு இதே பிரச்சினைதான்; ஒரு பேட்டையை வளைத்துப்போடும் திறமை இவை இரண்டுக்கும் கிடையாது.
ஆக, ஜெனாவைக் கோள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள், அத்துடன் கூட ஜெனா என்று செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்ட UB313 க்கு ஈரிஸ் என்று பெயர் விண்ணாய்வுக் கழகப் பெரியவர்களால் ஞானஸ்நானம் ஆகியது. ஆனால் தனக்கு இரண்டு கண்களும் போனால் மருமகளுக்கு ஒருகண்ணாவது போக வேண்டும் என்ற மாமியாரைப் போல, ஈரிஸ் புளூட்டோவையும் கோள்கள் பட்டியலில் இருந்து வெளியே தள்ளிவிட்டது. இப்பொழுது புளூட்டோ ஒரு குறுங்கோள்தான்.
{இப்படித் திடீரென ஒன்பதை எட்டாகக் குறைத்தால் குழந்தைகள் ஏங்கிப்போவார்கள் என்று சிலர் கவலைப்பட்டனர். (இவர்களில் யாரும் அறிவியல் தெரிந்தவர்கள் கிடையாது. குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது, அவர்கள் எல்லாவற்றையும் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். உதாரணமாக நான்கு வயது இருந்தபொழுது என் மகன் இந்தியாவில் இருந்து கொண்டுவந்த டிடிகே அட்லாஸ், புதிதாக வாங்கிய (பழைய) நேஷனல் ஜியாகரபி அட்லாஸ் இரண்டையும் வைத்துக்கொண்டு ஏன் கஷ்மீர் பக்கத்தில் இந்தியாவின் வரைபடம் மாறுபட்டிருக்கிறது என்று கேட்டான். ஒரு நிமிடம் இதை எப்படி புரியவைப்பது என்று ஆடிப்போய்விட்டேன். ஆனால் கொஞ்சம் இந்தியா, பாக்கிஸ்தான், கஷ்மீர், விவரத்தைச் சொன்னவுடன் "ம், சரி" என்று விளையாடப் போய்விட்டான். இப்பொழுது அவன் இன்னும் சில வருஷங்களுக்கு இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வரைபடங்கள் வந்துகொண்டுதானிருக்கும் என்பதை அறிந்துகொண்டுவிட்டான். இதில் அவனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு அவனைப் பிடித்துவைத்து அதே கேள்வியைத் திரும்பக் கேட்டேன், அவன் கஷ்மீரில் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இருக்கும் உரிமைப் பிரச்சினையைத் திரும்பச் சொன்னான். அப்படி இருந்தா இருந்துட்டுப் போகட்டுமே, ஆனால் உலக அளவில் வரைபடம் என்று ஒன்றைத்தானே சொல்ல வேண்டும் என்றும் கேட்க, அப்பா, ப்ளே ஸ்டேஷனில் அண்ணா Vikram's PSP என்று எழுதுகிறான், கொஞ்ச நாளில் நான் அதை மாற்றி "Varun's PSP" என்று எழுதுகிறேன். நீயும் இதைப் பார்த்திருக்கிறாய், ஒரு பெயர்தான் போட வேண்டும் என்று எங்களை வற்புறுத்தவில்லை. அதே மாதிரிதான் இதுவும், சில விஷயங்கள் தீர்மானமாகத் தெரியாதபொழுது எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.}
குழந்தைகளை ஏங்கவிடுவதா இல்லை அறிவியல் கோட்பாடுகளுக்கு இணங்க கோள்களின் எண்ணிக்கையை மாற்றி எழுதுவதான் என்று வந்தால் அறிஞர்கள் பின்னதைத்தான் தெரிந்தெடுப்பார்கள் - தார்கள். ஜெனா என்று அழைக்கப்பட்ட ஈரிஸ்க்குக் கோள் அந்தஸ்து கிடைக்காமல் போனதில் அதைக் கண்டுபிடித்த மைக் ப்ரௌனுக்கு வருத்தம்தான். ஒரு கோளை அடையாளம் காட்டியவர் என்று வரலாற்றில் தனியிடம் பெறும் சாத்தியம் அவருக்கு இல்லாமல் போயிற்று, பத்தோடு பதினொன்றாக இன்னொரு குறுங்கோளை மாத்திரமே கண்டுபிடித்தார் என்றுதான் அறியப்படப் போகிறார். ஆனால் ப்ரௌனுக்கு இதில் எந்தவித வருத்தமும் இல்லை. "அறிவியல் எப்பொழுதுமே திறமாகத்தான் செயல்படுகிறது. தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மை நிலைக்கிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான்" என்று சொல்லிவிட்டு தன் தொலைநோக்கியை வேறுபக்கம் திருப்பப் போய்விட்டார்.
ஆக இன்றைய புரிதலின்படி சூரியனைச் சுற்றி
இது தொடர்பான என் தனிப்பட்ட கருத்துகளை என் பதிவில் பார்க்கவும்.
மேலதிக விபரங்களுக்கு:
Dwarf Planets in Wikipedia
Tuesday, April 03, 2007
Fits, Seizures and Epilepsy
1. Seizure is a convulsion or transient [temporary] abnormal event resulting from paroxysmal [non predictable, sudden] discharge of cortical neurones.
2. Epilepsy is the continuing tendency to have such seizures, even if a long interval separates these attacks.
சரியா? Now, Fits is the colloquial term for seizures.
தமிழ்ல காக்காவலிப்புன்னு பொதுவா சொல்வாங்க. எனக்கு அதத்தவிர தமிழ்ல வேற வார்த்தை தெரியாததால வலிப்புனு பொதுவா seizuresஐயும், வலிப்புநோய்னு Epilepsyஐயும், சில சமயங்கள்ல டெக்னிக்கலா ஆங்கிலத்துலயும் சொல்லிடறேன்.
ஸ்டாடிஸ்டிக்ஸ் படி உலகத்துல இருநூறு பேருல ஒருத்தருக்கு வாழ்க்கையில ஒருதடவையாவது இந்த வலிப்புநோய் வரலாம். இந்தியாவ பொருத்தவரைக்கும் epidemiological ஆய்வுகள் வேறுபடுகின்றன. ஆனால் ஆயிரத்தில் 6 ஆண்களுக்கும், 5 பெண்களுக்கும் இந்தியாவில் வலிப்பு வருகின்றது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. active வலிப்புநோய் இருப்பவர்கள் சதவிகிதம் 0.5%. அதாவது, இரண்டாயிரத்தில் ஒருவருக்கு. incidence: தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் ஐம்பத்திஐந்து லட்சம் பேருக்கு நோய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் சுமார் நாற்பதுலட்சம் நோயாளிகள் கிராமப்புறங்களில் இருப்பவர்கள். (கிராமம் நகரம் பிரச்சனைக்கு அப்புறம் வருவோம்) ஒவ்வொரு வருடமும் சுமார் ஐந்துலட்சம் புதிய வலிப்புநோயாளிகள் உண்டாகின்றனர். இதன்மூலம் பரவலான நோய்/உபாதை என்று தெளிவாகும்.
ஏன் வருது என்பது சிக்கலான நியுராலஜிக்கல் கேள்வி. எளிமையாச் சொல்லணும்னா நம் மூளையின் திசுக்களில் abnormal electric activity - Large groups of neurones fire uninhibitedly, hypersynchronously and repetitively: Resulting in 'characteristic' Spike Wave EEG.
ஏன் இந்த மாதிரி வழமைக்கு மாறான எலெக்ட்ரிக் மாற்றங்கள்னா காரணங்களா
1) மரபணுவின் மூலம் அதிக ரிஸ்க் இருக்கலாம். சுமார் 30% நோயாளிகளுக்கு ஏற்கனவே நோயுற்ற நெருங்கிய குடும்பத்தினர் இருப்பார்கள்.
2) Trauma, Hypoxia (தேவையான அளவைவிட ஆக்ஸிஜன் அளவு குறைவாய்கிடைக்கும் நிலை) மற்றும் சிலவகை நரம்பியல் அறுவை சிகிச்சைகள்.
3) ஜுரம்: ஐந்துவயதுக்குட்பட்ட குழந்தைகளில் கவனிக்கவேண்டிய விஷயம் இந்த ஜுரம். சாதாரண காய்ச்சல் என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது. இவை வலிப்புநோயாய் மாறாவிட்டாலும் இந்த febrile convulsionsக்கு வராமல் தடுப்பது அவசியம்.
4) மூளையில் ஏற்படும் கட்டிகள் (புற்றுநோய்/மற்றவை)
5) மூளையின் இரத்தஓட்டம் தடைபடும் போது வரலாம். மூளையில் வயதாவதால் ஏற்படும் ரசாயன/கூறு (structural) மாற்றங்கள், உதாரணம்: Alzheimer's Disease. இதனாலேயே வயதானவர்களுக்கு வலிப்புநோய் பெரும்பாலும் வருகிறது.
6) மது/மருந்துகள் மற்றும் சிலவகை போதை வஸ்துகள்
7) Encephalitis, Tuberculosis போன்றவற்றினாலும் வரலாம். இதைத்தவிர முட்டை மற்றும் இறைச்சி உணவு வகைகள் சரியாக சமைக்காமல் அதனால் பரவும் Tapeworm போன்றவற்றாலும் வரலாம்.
8) அதிக ரிஸ்க் குரூப்பில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான strobe lightகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் இன்னும் சிலநேரங்களில் தூக்கமின்மை கூட வலிப்பு உண்டாக காரணங்களாக இருக்கலாம்.
வலிப்பு (seizures) சில உட்பிரிவுகள்: ரொம்ப விரிவாக இவற்றை விரிவாகச் சொல்வது வாசகர்களுக்கு அவசியமற்றது என்று நினைக்கிறேன். (அவ்ளோதான் தெரியும்னு யார்பா சவுண்ட் கொடுக்குறது? :))
1. Generalized
மூளையின் இருபாகங்களிலும் மின் மாற்றங்கள் ஏற்படுவதால் உடலின் இலது மற்றும் வலது பாகங்களிலும் abnormal movements. நோயாளிக்கு நினைவு தப்பிவிடும். வயதில் சிறியவர்களையே இந்த வகை வலிப்பு தாக்கும் பெரும்பாலும்.
a) Tonic Clonic Seizures
வலிப்பு என்பதின் டெபனிஷன் பலருக்கு இதுதான். Tonic நிலையின் போது உடம்பு rigid ஆகி நோயாளிகள் கிழே விழுவர் (இதன்மூலம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்). Stiffening of Limbs (increased tonus of muscles => tonic part of the name). மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதில் incontinence ஏற்படலாம். நாக்கை கடித்துக்கொள்வார்கள். அதிகபட்சமாக ஒருநிமிடம் நீடிக்கலாம் இந்நிலை.
அடுத்த Clonic நிலையில் repeated rhythmic jerking movements of muscles மற்றும் வாயில் நுரை தள்ளுதல் நிகழும். இது சில நொடிகளிலிருந்து சில நிமிடங்கள் நீடிக்கலாம்.
பொதுவாகவே வலிப்பு என்பது self limiting. அதாவது தானாகவே அடங்கிவிடும். அடங்கியபின்னர் நோயாளி தூக்ககலக்கதிலேயோ, குழப்பநிலையிலோ கோமாவிலோ பலமணிநேரங்கள் நீடிக்கலாம். அதன்பின்னர் நோயாளி இயல்புநிலைக்கு திரும்பிவிடுவர். இதற்கு
b) "Absence[Petit mal] attacks or seizures" என்பது தசைகளின் திமிரில்[tone] அதிக பாதிப்பில்லாமல், ஒரு சில நொடிகள் மட்டுமே,[10-30 sec] கண்துடித்தல், கை, கால்கள் துடித்தல் போன்றவற்றுடன் நிகழ்ந்து, அந்த நொடிகளில் மட்டும் நினைவு தப்புவதும் நடக்கும் ஒரு வகை வலிப்பு நோய்.
தான் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே நிறுத்திவிட்டு, இது கழிந்ததும் மீண்டும் தொடங்க ஆரம்பிப்பார். (Thanks to Dr. VSK)
இதைத்தவிர இப்பிரிவினுள் myoclonic (வெறும் தசைகளில் jerk movements), tonic (jerking இல்லாமல் வெறும் rigid ஆவது மட்டும்) மற்றும் atonic வகைகளும் உண்டு.
2. Partial Seizures
இவை பெரும்பாலும் முதியவர்களுக்கு வருவது. அதனாலேயே இதன்பின்னால் வேறு ஏதும் underlying நோய் இருக்கிறதா என்று follow up செய்யவேண்டியது அவசியமாகிறது.
இவ்வகை வலிப்பின் hallmark ஒருமாதிரியான விநோதமான feeling. அது பொதுவாக வயிற்றுப்பிரட்டல், தலைசுற்றல் போன்றவாகவும் இருக்கலாம். இல்லை சிலசமயங்களில் hallucinations எனப்படும் imaginary auditory (கேட்பதில்), olfactory (விநோதமான மணங்கள்) and visual imaginations such as flashing lights அல்லது deja vu (புதிய இடம் பழகியதாக தோன்றுவது) ஆகவும் இருக்கலாம். இந்த பீலிங் வலிப்பு வருவதற்குமுன் அறிகுறியாக ஓரிரு நாட்கள் முன்னர்கூட வரலாம். திடீரென mood மாற்றங்களும் இதில் அடக்கம். ஆங்கிலத்தில் "Aura" என்பார்கள். ஒரு vague ஆன term இது. focal ஆக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் பாதிக்கபடுவதால் ஏற்படும் ரசாயன/கூறு மாற்றங்களால் வருவது இந்த அவ்ரா. இந்த அவ்ரா என்பது வலிப்பு அல்ல. ஆனால் வலிப்பு வருவதற்கான அறிகுறி.
இதில் Jacksonian மற்றும் Temporal Lobe seizures என சில உட்பிரிவுகள் உண்டு. நினைவில் வைத்துக்கொள்ளவேண்டியது இந்த அவுரா மற்றும் மூளையின் எந்தப்பகுதி பாதிக்கபடுகிறதோ அந்த பகுதியின் corresponding function அபரிமிதமாகவோ குறைந்தோ காணப்படலாம்.
இப்போது ஒருவருக்கு வலிப்பு தாக்கினால் வலிப்பை பார்த்தவுடன் ஒருமாதிரி கண்டுகொள்வீர்கள் அல்லவா?
சரி தெருவில் போகிறோம். ஒருவருக்கு வலிப்பு தாக்குகிறது. என்ன செய்யலாம்?
principle ஒன்றுமே செய்யாமலிருப்பது நலம். நினைவில் கொள்ளுங்கள் வலிப்புகள் பெரும்பாலும் தானாகவே சில நிமிடங்களில் அடங்கிவிடும். அதற்குள் செய்யவேண்டியது
1. முடிந்தால் நோயாளியின் airways ப்ளாக் ஆகாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். பல்செட் உள்ளவரென்றால் அதை கழட்டவேண்டும். அடுத்தது சுற்றி கூட்டம் போட்டு வேடிக்கை போடுவர்களை தள்ளி நிற்க சொல்லிவிட்டு காற்றோட்டமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும்.
2. சிலநிமிடங்களுக்குள் தானாகவே வலிப்பு அடங்கிவிடும். அதற்குள் முடிந்தால் நோயாளியை இடதுபக்கத்தில் படுக்குமாறு திருப்புங்கள். நோயாளி ஜெர்க் ஆகாமல் இருக்க சப்போர்ட் கொடுப்பது, கைகால்களை இழுத்துப்பிடிப்பது, கட்டிப்போடுவது போன்றவை மிக மிக ஆபத்தானது.
அப்புறம் முக்கியமாக சாவி கொடுப்பது, இரும்பு மற்றும் உலோகப்பொருட்களை கையில் திணிப்பது என்று வழக்கம்போல் தமிழ்சினிமா சொல்லிக்கொடுக்கும் மருத்துவத்தை சற்றே கஷ்டப்பட்டு மறந்துவிடுங்கள்.
இந்தியாவில் பல பொதுமக்கள் அதீத ஆர்வத்தால் உதவியென்ற பெயரால் உபத்திரவம் செய்வர். மந்திரம் சொல்வது : அதுவேனால் சொல்லிக்கொள்ளட்டும். மற்றபடி தாயத்துகட்டுவது, டாலர் கட்டுவது, அரனாக்கொடிகட்டுவது என பல தவறான எம்ர்ஜென்ஸி டெக்னிக்ஸ் வழக்கத்தில் உண்டு. இதனால் எல்லாம் ஒரு எள்ளளவு பயன்கூட இருப்பதாக நிருபிக்கபடவில்லை. சொல்லப்போனால் வலிப்பின் போது ஏற்படும் repeated jerking அசைவுகளால் நோயாளிக்கு நிரந்தரமான வேறு ஏதாவது படுகாயங்களை எவ்விதமான hard/sharp/blunt பொருட்களும் ஏற்படுத்த வாய்ப்பு நிறைய உண்டு.
வலிப்பு 95% தானாகவே சிலநிமிடங்களில் நின்றுவிடும். எனினும் உடனே மருத்துவ உதவியை நாடவேண்டியது அவசியம். இருபது நிமிடங்களுக்கு மேல் வலிப்பு தொடருமானால் நிரந்தரமான வேறு பாதிப்புகள் ஏற்படலாம். தொடர்ச்சியாக மூன்று நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடி மருத்துவ உதவி அத்தியாவசியமாகிறது. அதற்குண்டான first aidகள் emergency paramedicசோ, மருத்துவமனையோ மட்டுமே செய்யமுடியும்.
மேலும் ஒரு வலிப்பிற்கு பின் முழுமையான நினைவுக்கு திரும்பாமல் நோயாளிக்கு மீண்டும் ஒரு வலிப்பு அட்டாக் வருமானால் அதன் பெயர் Status Epilepticus. இது ஒரு Life threatening medical emergency. வீட்டில் எவருக்கேனும் ஏற்பட்டால் உடனடியாக Intravenous ஆக 10மில்லிகிராம் Diazepam கொடுக்கலாம். இரத்தத்தில் ஏற்றமுடியவில்லையெனில் ஆசனவாய் வழியே செலுத்தக்கூடிய விதத்தில் கிடைக்கும் அதே Diazepam மற்றும் Paraldehyde பயன்படுத்தலாம். சாதாரணர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. நோய் உள்ளவர்கள் வீட்டிலிருப்பவர்களுக்கு உங்கள் மருத்துவர்கள் கண்டிப்பாக சொல்லிக்கொடுத்திருப்பார்கள். அதனால் இதற்குள் அதிகம் நாம் போகத்தேவையில்லை. ஆனால் சிகிச்சை முறைகள் நீண்ட நாட்களுக்கு பின்பற்றபடவேண்டியவை. நம்மூரில் இருக்கும் பழக்கம், ஜுரம் குறைஞ்சால் மாத்திரையை நிறுத்து என்று எடுத்தேன் கவிழ்த்தேன் மனோபாவம் இந்நோயிலும், மற்ற பல நோய்களைப் போலவே மிகவும் ஆபத்தில் கொண்டுவிடலாம்.
தனியாக, வலிப்புநோயினால் பெண்களுக்கு தொல்லை அதிகம். குழந்தை பெறுவதில் மற்றும் அதன்சார்ந்தவை என கூடுதல் சிரமங்கள். சமூக காரணிகளால் திருமணமும் தடைபட வாய்ப்புண்டு. முற்சொன்னவற்றிற்கு குடும்ப மருத்துவர்களை அணுகுவதே சிறந்தது. இக்கால மருத்துவத்தில் வலிப்பு நோயாளிகள் தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். பிள்ளைச்செல்வங்களை பெற்றுக்கொள்ளலாம். சிகிச்சையை முறையாய் பின்பற்றினால் இயல்பு வாழ்க்கை வாழலாம்.
சமூக பிரச்சனைகள்: வலிப்புநோய் உள்ளவர்களுக்கு வண்டிவாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதில் தொடங்கி ஆயுள் காப்பீடு செய்ய, ஏன் வேலைவாய்ப்புகளில் கூட சிக்கல்கள் உண்டு. தற்போதைய மருத்துவத்தின்படி ஓட்டுநர் உரிமம் ஒருவருடமாக வலிப்பு இல்லாதவருக்கு வழங்கப்படலாம். ஆனாலும் குளியலறை தாளிட்டுக்கொள்வது, தனியாக நீச்சலடிப்பது மற்றும் இதர ஆபத்தான வேலைசூழல்களை தவிர்க்கவேண்டும் என்று நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவற்றிற்கு பெரும்பாலும் சமூகத்தில் நிலவும் தவறான இந்நோய் குறித்த பயமே காரணம். இது மனநோயல்ல. Epilepsy is not a mental disorder; Its a Neurological Disorder. அதாவது வயிற்றிலுள்ள அமிலசுரப்பிகள் அதிகம் வேலைசெய்தால் அல்சர் வருவதைப் போல மூளையின் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம். இந்நோயாளிகளை அணுகும்போது நாம் அதை நினைவில் கொள்ளவேண்டும். அதே நிலையிலே அணுகவேண்டியதன் அவசியத்தை நம் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரப்பவேண்டியது நம் கடமை.
ஒரே ஒரு அதிர்ச்சிதரும் புள்ளிவிவரத்துடன் முடிக்கவிரும்புகிறேன். நம் இந்தியாவில் நம்மில் மூன்றில் ஒருவர் இந்த வலிப்புநோய் என்பது ஒரு மனநோய் என்றோ/பேய் பிசாசுகளால் ஏற்படும் சூனியம் என்பது மாதிரியான தவறான கருத்துகளை கொண்டுள்ளோம். மேலும் முன்னாடி சொன்னா மாதிரி கிராமங்களில் இன்னும் அதிகமாக, இத்தகைய மூடப்பழக்கவழக்கங்களால், தவறான புரிந்துகொள்ளல்களால் சுமார் 75% வரை நோயாளிகள் மருத்துவ உதவியை முற்றிலுமாக நாடுவதில்லை. நாட்டுவைத்தியம், பில்லி சூனியம் என்று அவசியமான மருத்துவசிகிச்சையை தள்ளிப்போடுகின்றனர். இந்நிலை மாறவேண்டும். மாறப்போவது இந்நோய் குறித்த விழிப்புணர்ச்சியை நமக்கு தெரிந்தவர்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே முடியும்.
மேலதிக விவரங்களுக்கு:
Epidemiology in India
Epilepsy in India
National Institute of Neurological Disorders and Stroke
Friday, March 23, 2007
நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

இந்த ராகத்தினை பற்றி பேசும் பொழுது இதற்குப்பின்னே நடந்த சில சம்பங்கள் உடனடியாக மனைதில் விளையும்! அதாவது தியாகராஜய்யர், தஞ்சை அரசனின் புகழ்பாட மறுத்து கடவுள் துதியாக 'நிதி சால சுகம்மா ரமணி சந்நிதி சேவ சுகம்மா' என்ற கீர்த்தனையை இந்த கல்யாணி ராகத்திலே பாடிய சரித்திரமுண்டு! இந்த ராகத்திலே எழும் பாவம் உணர்ச்சி பூர்வமாக பாடப்படும் அத்தனை பாடல்களும், கீர்த்தனைகளும் ஒரு அழகான சப்த வடிவத்தை கொடுக்கும்! அதற்கும் மேலே இந்த ராகம் ஒரு பரிபூரண இல்லை சம்பூரண ராகம். ஆக ஏழு ஸ்வரங்களும் கைகோர்த்து ஜதியாடும்! இந்த ராகம் ஆர்ப்பாட்டமாகவும் இசைந்து கொடுக்கும், அதே சமயத்தில் அமைதியாகவும் ஸ்வரம் பாடும்.
இந்த கல்யாணி ராகத்தினால் தேவி துதிபாடிய சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனையான, 'ஹிமத்ரிஸ்தே பகிமம்' என்பது அனைத்து சக்தியைய்ம் அன்னையிடமிருந்து பெற வழிகோணியதாம். அதே போல் இந்த ராகத்திலே, முத்து சாமி தீட்சதர் அவர்கள் படைத்த சொர்க்க ராக கீர்த்தனையான 'கமலாம்பாள் நவவர்ணம்' என்ற கீர்த்தனையை கொண்டு, கிரங்களின் இடமாற்றத்தால் உண்டாகும் துர்பாக்கியத்தை அகற்றி நல்வழிபிறக்க உதவ வழிசெய்யும் என்ற நம்பிக்கையுண்டு!
இப்படி பல குண நலன்களை கொண்ட இந்த ராகத்தால் அமைந்த சினிமா பாடல்கள் அநேகம். அதில் முக்கியமாக, காலத்தால் அழியாத பாடல்களை சொல்ல வேண்டுமென்றால் அம்பிகாபதி என்ற படத்தில் டிஎம்ஸ் பாடிய, 'சிந்தனை செய் மனமே' என்ற பாடலும், கேவி மகாதேவன் இசை அமைத்த "மன்னவன் வந்தானடி" என்ற திருவருட்செல்வர் படத்திலே வந்த பாடலையும் குறிப்பிட வேண்டும். அது மட்டுமல்ல இளையராஜா இந்த ராகத்திலே ஏகப்பட்ட பாடல்களை அள்ளி வழங்கி இருக்கிறார். இதை ஹிந்துஸ்தானி ராகத்தில் 'யமன்' என்றழைப்பார்கள், அதிலே அமைக்கப்பட்ட சில பழைய ஹிந்திபாடல்கள் மற்றும் பல பாடல்களை இந்த பாட்காஸ்ட்டில் கேளுங்கள்!
இதன் முதல் பாகமாக இந்த பாட்காஸ்ட்டை கேளுங்கள்!
The Healing Raagaas! - Kalyani (Part-1)
தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!
தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:
நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!
நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!
நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!
Sunday, March 18, 2007
Mirror Mirror on the wall!!
One way mirror-ன் அறிவியல் என்ன?இதைக் கேட்டுட்டு மனுசனுக்குப் பொறுமையே இல்லை. நம்ம கிட்ட விட்டு இருந்தா நல்ல பதிவா போட்டு இருப்போமில்ல. அதுக்குள்ள அவரே தேடிக் கண்டுபிடிச்சு பதிலையும் எழுதி அனுப்பிட்டாரு. (இந்த மாதிரி எல்லாரும் செஞ்சா எங்க வேலை எவ்வளவு ஈசின்னு பாருங்க!) பொதுவா வாத்தியார் கேள்வி கேட்டா மாணவர்கள்தான் பதில் சொல்லணும். அவங்க குடுத்த நேரத்தில் பதில் சொல்லாததால் வாத்தியாரே பதில் சொல்லிட்டாரு!! அதுக்கு மேல நாம என்னத்தைச் சொல்ல. அவர் பதிலை நீங்களே படிச்சுக்குங்க. சந்தேகம் எல்லாம் பின்னூட்டமா போடுங்க. தலைவர் வந்து பதில் சொல்லுவாரு. ஐயாம் தி எஸ்கேப்!
கார் கண்ணாடியில் ஒட்டப் படும் film-ம் அதே வேலையைச் செய்கிறதே, எப்படி?
இனி தருமி.....
ஒளி ஊடுறுவதைத் தடுப்பதற்காகச் சாதாரண கண்ணாடியில் ரசம் பூசுறோம். ஒளி இப்போது ஊடுறுவ முடியாததால் கண்ணாடியில் விழும் ஒளி பிரதிபலிக்கும். அதனாலதான் அந்தக் கண்ணாடி முன்னால் இருக்கும் நம்ம அழகான மூஞ்சி திருப்பி நம்மையே பார்க்கிறது. இப்படி பூசப்படும் ரசம் கூட முழுமையாகப் பூசப்படுவதில்லை. அரைகுறையாகத்தான் பூசப்படுகிறது. அதற்குப் பதிலாக கண்ணாடியின் பின்புறம் ஒளி ஊடுறுவமுடியாத படி கறுப்பு அல்லது சிவப்பு பெயிண்ட் அடிச்சிடறாங்க. இப்படி பூசுற ரசத்தை இன்னும் கொஞ்சம் குறைவாகப் பூசி, அதோடு பின்னால் பூசும் பெயிண்டையும் அடிக்காமல் விட்டால் என்ன ஆகும்? ஒளி அரைகுறையா ஊடுறுவறது மாதிரி ஆயிடும்.
இந்த one way mirror அப்டிங்கிறது இதுதான். அதாவது ஒளி அரைகுறையாக ஊடுறுவமுடியும். ஒரு பக்கம் வெளிச்சம் அதிகமாவும் இன்னொரு பக்கம் வெளிச்சம் குறைவாகவும் இருக்கிறமாதிரி வைத்து நடுவில் இந்த மாதிரி கண்ணாடியை வைத்தால் வெளிச்சம் அதிகமா இருக்கிற சைடுல இருக்கிறவங்களுக்கு அவங்க மூஞ்சிதான் தெரியும். ஆனால் இருட்டா இருக்கிற அடுத்த பக்கம் இருக்கிறவங்களுக்கு வெளிச்சப் பகுதியில் இருக்கிறவங்களை நல்லா பார்க்க முடியும். நம்ம இங்கிலீசு சினிமாக்களில் அடிக்கடி இந்த சீன் வருமே அது மாதிரி.
அட! உங்களை இந்த மாதிரி ஒரு அறையில் போட்டு வச்சிட்டு அந்தப் பக்கம் இருந்து உங்களை யாரோ உளவு பார்க்கிறது மாதிரி ஒரு சந்தேகம் வந்திருச்சின்னு வச்சுக்கங்க, அது சரியான்னு எப்படி பார்க்கணும்னு தெரிஞ்சிக்கங்க. கையில் ஒரு flash light எடுத்துக்கங்க; டகார்னு உங்க ரூம் லைட்டை அணைச்சிட்டு, டக்குன்னு அந்தக் கண்ணாடியை ஒட்டி உங்க கையில் இருக்கிற லைட்டை கண்ணாடியை ஒட்டி அடிங்க. இப்ப உங்க பக்கம் இருட்டு; அந்தப் பக்கம் வெளிச்சம் ஆயிருமா.. அந்தப் பக்கம் இருக்கிறது உங்களுக்கு நல்லா தெரிஞ்சிரும்.
பி.கு.
உங்க கார்ல sun screen ஒட்டி கண்ணாடியையெல்லாம் கருப்பாக்கி வச்சிருந்தீங்கன்னா, பகல்ல உங்களுக்கு நல்லா வெளிய தெரியும். ராத்திரி ஆச்சுன்னா வெளிய ஒரு மண்ணும் தெரியாது. ஓட்டுனருக்காக முன் கதவில இருக்கிற ரெண்டு பக்கக் கண்ணாடியில் டிசைனா sun screen-யை வெட்டி விட்டுக்க வேண்டியதுதான்!
Sunday, March 11, 2007
தட்டு தட்டுன்னு தட்டணும் தட்டணும்!!!
இந்த விசைப்பலகையை கண்டுபிடித்தவர் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் (Christopher Sholes) என்ற பத்திரிகையாளர். கண்டுபிடிச்சது இன்னைக்கு நேத்து இல்லை, 1860களில். சரியாச் சொல்லணுமுன்னா 1868. முதலில் இவரு எழுத்துக்களை எல்லாம் வரிசையாகத்தான் வெச்சிருந்தாராம். அப்புறம் எங்க டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் சுப்பராமன் சார் அவர் கனவில் வந்து இந்த மாதிரி இருந்தா நான் எப்படி asdfgf அப்படின்னு பசங்க விரலை எல்லாம் உடைக்க எனக் கேட்டு பயமுறுத்த அதனாலேயே இவர் இப்படி எழுத்துக்களை கலைத்துப் போட்டுவிட்டாராம். :)) இப்படி எல்லாம் ஸ்க்ரீன் ப்ளே வைக்க சான்ஸ் இல்லாமப் போச்சே. அவரு கலைத்துப் போட்டதுக்கு காரணம் வேறயாச்சே. அது என்னான்னு பார்க்கலாமா.
- TYPEWRITER என்ற வார்த்தையை விசைப்பலகையின் முதல் வரியில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே தட்டச்சு செய்ய முடியும்.
- முதலில் தட்டெழுதுவது பெண்கள் செய்யும் வேலை என்றிருந்தாலும் முதலில் உபயோகப்படுத்தியவர்கள் ஆண் ரயில்வே கிளார்க்குகள்தான்
- தனது கண்டுபிடிப்பை கிறிஸ்டோபர் 1873ஆம் ஆண்டு ரெமிங்டன் நிறுவனத்தாருக்கு விற்றுவிட்டார்
- முதல் விசைப்பலகைகளில் Uppercase (Capital) எழுத்துக்கள் மட்டுமே இருந்தது.

- பின்னர் Lowercase எழுத்துக்கள் கொண்டு வருகையில் அதற்காக டைப்பாரை மாற்றும் பட்டனுக்கு Shift எனப் பெயர் வைத்தார்கள். இன்று அப்படி எதுவும் மாற்றப்படவில்லை என்றாலும் அந்த பெயரே நிலைத்து விட்டது. இதுவே இது வரை விசைப்பலகை டிசைனில் நடந்த ஒரே ஒரு பெரிய மாற்றம். கீழ படத்தில் இருப்பதுதான் ரெமிங்டன் 2 என்ற அந்த டைப்ரைட்டர்.

- முதலில் வந்த டைப்ரைட்டர்கள் பெரிய வெற்றி அடையவில்லை. இந்த மாற்றத்திற்குப் பின்னரே வெற்றிப் பெற்றது.
இப்போ இவ்வளவு பெருமை இருக்கிற விசைப்பலகையைத் தட்டி எல்லாரும் கருத்து சொல்லுங்க பார்க்கலாம்!
சுட்டி 1
சுட்டி 2